Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் > 28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 22. சீதை களம் காண் படலம்


செய்தியைப் பறை அறைந்து அறிவிக்க இராவனன் கட்டளையிடுதல்

பொய்யார் தூதர் என்பதனால், பொங்கி எழுந்த உவகையன் ஆய்,
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி, 'விளைந்தபடி
கை ஆர் வரைமேல் முரசு இயற்றி, "நகரம் எங்கும் களி கூர,
நெய் ஆர் ஆடல் கொள்க!" என்று, நிகழ்த்துக' என்றான்; - நெறி இல்லான். 1

மாய்ந்த அரக்கர் உடலைக் கடலில் எறிதல்

அந்த நெறியை அவர் செய்ய, அரக்கன் மருத்தன் தனைக் கூவி,
'முந்த நீ போய், அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின், சிரமும் வரமும் சிந்துவென்' என்று
உந்த, அவன் போய் அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான். 2

அரக்கியர் சீதையை விமானத்தில் ஏற்றி, களத்திற்குக் கொண்டு செல்லுதல்

'தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம்
தையல் காணக் காட்டுமின்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து
ஐயம் நீங்காள்' என்று உரைக்க, அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர்க் களத்தின்மிசை உய்த்தார். 3

சீதையின் துயரும், அது கண்ட மற்றவர் வருத்தமும்

கண்டாள் கண்ணால் கணவன் உரு; அன்றி, ஒன்றும் காணாதாள்;
உண்டாள் விடத்தை என, உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்;
தண் தாமரைப் பூ நெருப்புற்ற தன்மை உற்றாள்; தரியாதாள்;
பெண்தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ! 4

மங்கை அழலும் - வான் நாட்டு மயில்கள் அழுதார்; மழ விடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள்; பதுமத்து இருந்த மாது அழுதாள்;
கங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள்; கமலத் தடங் கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார். 5

பொன் தாழ் குழையாள்தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;
குன்றா மறையும், தருமமும், மெய் குலைந்து குலைந்து, தளர்ந்து அழுத்
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத் பின் என் பிறர் செய்கை?
நின்றார் நின்றபடி அழுதார்; நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார். 6

உணர்வு இழந்துப் பின் தெளிந்த சீதை ஏங்கி வருந்துதல்

நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து, நெடும் பொழுதின்
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார்; உயிர் வந்து ஏங்கினாள்;
கனத்தின் நிறத்தான் தனைப் பெயர்த்தும் கண்டாள்; கயலைக் கமலத்தால்
சினத்தின் அலைப்பாள் என, கண்ணைச் சிதையக் கையால் மோதினாள். 7

அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்; அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள், மின்போல்; உயிர் கரப்பச் சோர்ந்தாள்; சுழன்றால்; துள்ளினாள்;
குடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள், - குயில் அன்னாள். 8

விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
'கொழுந்தா!' என்றாள்; 'அயோத்தியர்தம் கோவே!' என்றாள்; 'எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ!' என்றாள்; சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்: 9

சீதை அரற்றுதல்

'உற மேவிய காதல் உனக்கு உடையார்,
புறம் ஏதும் இலாரொடு, பூணகிலாய்;
மறமே புரிவார் வசமாயினையோ-
அறமே!-கொடியாய்; இதுவோ, அருள்தான்? 10

'முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்,
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ?
மதியேன் மதியேன் உனை - வாய்மை இலா
விதியே! - கொடியாய், விளையாடுதியோ? 11

'கொடியேன் இவை காண்கிலேன்; என் உயிர் கோள்
முடியாய், நமனே! முறையோ! முறையோ!
விடியா இருள்வாய் எனை வீசினையே?-
அடியேன் உயிரே! அருள் நாயகனே! 12

'எண்ணா, மயலோடும் இருந்தது நின்
புண் ஆகிய மேனி பொருந்திடவோ? -
மண்ணோர் உயிரே! இமையோர் வலியே!
கண்ணே! அமுதே! கருணாகரனே! 13

'மேவிக் கனல் முன், மிதிலைப் பதி, என்
பாவிக் கை பிடித்தது, பண்ணவ! நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ?-அலர் வாழ்
தேவிக்கு அமுதே! மறையின் தெளிவே! 14

'உய்யாள், உயர் கோசலை தன் உயிரோடு;
ஐயா! இளையோர் அவர் வாழ்கிலரால்;
மெய்யே, வினை எண்ணி, விடுத்த கொடுங்
கைகேசி கருத்து இதுவோ? - களிறே! 15

'"தகை வான் நகர் நீ தவிர்வாய்" எனவும்,
வகையாது, தொடர்ந்து, ஒரு மான் முதலா,
புகை ஆடிய காடு புகுந்து, உடனே
பகை ஆடியவா! பரிவு ஏதும் இலேன்! 16

'"இன்று ஈகிலையேல், இறவு இவ் இடை; மான்
அன்று, ஈ" எனவும் பிரிவோடு அடியேன்
நின்று ஈவது, நின்னை நெடுஞ் செருவில்,
கொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ? 17

'நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி, நெடுஞ்
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால்;
மெய் ஆகிய வாசகமும் விதியும்
பொய் ஆன, என் மேனி பொருந்துதலால். 18

'மேதா! இளையோய்! விதியார் விளைவால்,
போதா நெறி எம்மொடு போதுறுநாள்,
"மூது ஆனவன் முன்னம் முடிந்திடு" எனும்,
மாதா உரையின்வழி நின்றனையோ? 19

'பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல்
கோவும் துயில, துயிலாய்! கொடியார்
ஏவு, உன் தலை வந்த இருங் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ? 20

திரிசடை சீதையின் மயக்கத்தைத் தீர்த்தல்

'மழு வாள் உறினும் பிளவா மனனோடு
அழுவேன்; இனி, இன் இடர் ஆறிட, யான்
விழுவேன், அவன் மேனியின் மீதில்' எனா,
எழுவாளை விலக்கி இயம்பினளால்; 21

'மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப்
பாடு உற நீக்கி, நின்ற, பாவையைத் தழுவிக் கொண்டு,
கூடினாள் என்ன நின்று, செவியிடை, குறுகிச் சொன்னாள் -
தேடிய தெய்வம் அன்ன திரிசடை, மறுக்கம் தீர்ப்பாள். 22

'மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும்,
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்,
நீ அமா! நினையாய்; மாள நினைத்தியோ? நெறி இலாரால்
ஆய மா மாயம்; ஒன்றும் அஞ்சலை, அன்னம் அன்னாய்! 23

'கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,
தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்
அண்டர் நாயகன் தன் வீரத் தன்மையும், அயர்த்தாய்போலும்?
புண்டரீகற்கும் உண்டோ , இறுதி, இப் புலையர்க்கு அல்லால்? 24

ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை,
ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை - மண்ணில் வந்தாய்! 25

'ஓய்ந்துளன், இராமன், என்னின், உலகம் ஓர் ஏழும் ஏழும்
தீய்ந்துறும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம் என் ஆம்?
வீய்ந்துறும், விரிஞ்சன் முன்னா உயிர் எலாம்; வெருவல், அன்னை!
ஆய்ந்தவை உள்ள போதே, அவர் உளர்; அறமும் உண்டால். 26

'மாருதிக்கு இல்லை அன்றே, மங்கை நின் வரத்தினாலே
ஆர் உயிர் நீங்கல்! நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமே?
சீரியது அன்று, இது ஒன்றும்; திசைமுகன் படையின் செய்கை
பேரும், இப்பொழுதே; தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ ? 27

'தேவரைக் கண்டேன்; பைம் பொன் செங் கரம் சிரத்தில் ஏந்தி,
மூவரைக் கண்டாலென்ன, இருவரை முறையின் நோக்கி,
ஆவலிப்பு எய்துகின்றார்; அயர்த்திலர்; அஞ்சல்; அன்னை!
"கூவலில் புக்கு, வேலை கோட்படும்" என்று கொள்ளேல். 28

'மங்கலம் நீங்கினாரை, ஆர் உயிர் வாங்கினாரை,
நங்கை! இக் கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்;
இங்கு, இவை அளவை ஆக, இடர்க் கடல் கடத்தி' என்றாள்;
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள். 29

திரிசடையின் சொற்களால் தெளிவு பெற்ற சீதையின் உரை

'அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம் உய்ந்தேன்;
இன்னம், இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால்
முன்னமே முடிந்தது அன்றே?' என்றனள் - முளரி நீத்தாள். 30

'நாண் எலாம் துறந்தேன்; இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும்
பூண் எலாம் துறந்தேன்; என் தன் பொரு சிலை மேகம்தன்னைக்
காணலாம் என்னும் ஆசை தடுக்க, என் ஆவி காத்தேன்;
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது, எனக்கு' எனவும் சொன்னாள். 31

அரக்கியர் சீதையை மீண்டும் அசோக வனத்திற்கு கொண்டு செல்லுதல்

தையலை, இராமன் மேனி தைத்த வேல் தடங் கணாளை,
கைகளின் பற்றிக் கொண்டார், விமானத்தைக் கடாவுகின்றார்,-
மெய் உயிர் உலகத்து ஆக, விதியையும் வலித்து, விண்மேல்
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடைத் தூதர் போன்றார். 32


 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home