Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் -
16. மாயா சனகப் படலம்
மகோதரனிடம் சீதையை அடையும்
வழி குறித்து இராவணன் வினவுதல்
அவ்வழி, கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்
செல்வழி உணர்வு தோன்றச் செப்பினம்; சிறுமை தீரா
வௌ; வழி மாயை ஒன்று, வேறு இருந்து எண்ணி, வேட்கை,
இவ்வழி இலங்கை, வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம்: 1
மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
'சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
யாது? எனக்கு உணர்த்தி, இன்று, என் இன் உயிர் ஈதி' என்றான். 2
மருத்தனைச் சனகனாக உருமாற்றிக் காட்டுமாறு மகோதரன் கூறுதல்
'உணர்த்துவென், இன்று நன்று; ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி;
கணத்து, வன் சனகன் தன்னைக் கட்டினென் கொணர்ந்து காட்டின்-
மணத் தொழில் புரியும் அன்றே-மருத்தனை உருவம் மாற்றி?' 3
என அவன் உரைத்தலோடும், எழுந்து மார்பு இறுகப் புல்லி,
'அனையவன் தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி, அன்ப!' என்னா,
புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன், எழுந்து போனான்,
வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான். 4
மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,
துன் இருள் இரிந்து தோற்ப, சுடர் மணித் தோளில் தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
நல் நெடுங் களி மால் யானை நாணுற, நடந்து வந்தான். 5
'விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணி அரவின் சுற்றி,
இளைப்புறும் மருங்குல் நோவ, முலை சுமந்து இயங்கும்' என்ன
முளைப்பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும் பின்னும்,
வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான். 6
இராவணன் சீதையை நோக்கிப் பேசுதல்
பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட,
எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான், அவனை ஓர் கலக்கம் காண்பான். 7
இட்டதோர் இரண பீடத்து, அமரரை இருக்கை நின்றும்,
கட்ட தோள்-கானம் சுற்ற, கழல் ஒன்று கவானின் தோன்ற,
வட்ட வெண் கவிகை ஓங்க, சாமரை மருங்கு வீச,
தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன், இனைய சொன்னான். 8
'என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான்,
என்றுதான், இரவியோடும் வேற்றுமை தெரிவது என்பால்?
என்றுதான், அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது?
என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான். 9
'வஞ்சனேன் எனக்கு நானே, மாதரார் வடிவு கொண்ட,
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன்; நாளும் தேய்ந்த
நெஞ்சு நேரானது; உம்மை நினைப்பு விட்டு, ஆவி நீக்க
அஞ்சினேன்; அடியனேன் நும் அடைக்கலம், அமுதின் வந்தீர்! 10
'தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா! 11
'பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர். 12
'ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசுணாதோ? 13
'நோயினை நுகரவேயும், நுணங்கி நின்று உணங்கும் ஆவி
நாய் உயிர் ஆகும் அன்றே, நாள் பல கழித்த காலை?
பாயிரம் உணர்ந்த நூலோர், "காமத்துப் பகுத்த பத்தி"-
ஆயிரம் அல்ல போன-"ஐ-இரண்டு" என்பர்' பொய்யே. 14
'அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர்! என்னைப்
பிறந்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் மானம் கொல்ல,
"மறந்தன பெரிய் போன வரும்" எனும் மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும் ஈட்டார்? 15
'அந்தரம் உணரின், மேல்நாள், அகலிகை என்பாள், காதல்
இந்திரன் உணர்ந்த, நல்கி எய்தினாள், இழுக்குற்றாளோ?
மந்திரம் இல்லை; வேறு ஓர் மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால்;-அமுதச் சொல்லீர்! 16
சீதையின் முன் இராவணன் விழுந்து வணங்குதல்
என்று உரைத்து, எழுந்து சென்று, அங்கு இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக் குவவுத் தோள் நிலத்தைக் கூட,
மின் திரைத்து, அருக்கன் தன்னை விரித்து, முன் தொகுத்த போலும்
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான். 17
சீதை இராவணனுக்குத் தன் கருத்தை உரைத்தல்
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று,
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள், விம்முகின்றாள்,
'கொல்லிய வரினும், உள்ளம் கூறுவென், தெரிய' என்னா,
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன், புகல்வதானாள்: 18
'"பழி இது; பாவம்" என்று பார்க்கிலை; "பகரத் தக்க
மொழி இவை அல்ல" என்பது உணர்கிலை; முறைமை நோக்காய்;
கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக் கிளையொடும் இன்று காறும்
அழிகிலை என்றபோது, என் கற்பு என் ஆம்? அறம்தான் என் ஆம்? 19
'வான் உள அறத்தின் தோன்றும் சொல்வழி வாழு மண்ணின்
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள் உணர்வும் உண்டால்;
தான் உள் பத்துப் பேழ் வாய், தகாதன உரைக்கத் தக்க,
யான் உளென் கேட்க என்றால், என் சொலாய்? யாது செய்யாய்? 20
'வாசவன், மலரின் மேலான், மழுவலான் மைந்தன், மற்று அக்
கேசவன் சிறுவர் என்ற இந்தத் தன்மையோர்தம்மைக் கேளாய்;
'பூசலின் எதிர்ந்தேன்' என்றாய்; போர்க்களம் புக்க போது, என்
ஆசையின் கனியைக் கண்ணின் கண்டிலை போலும், அஞ்சி, 21
'ஊண் இலா யாக்கை பேணி, உயர் புகழ் சூடாது, உன்முன்
நாண் இலாது இருந்தேன் அல்லேன்; நவை அறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனிப் புண்ணியமூர்த்தி தன்னைக்
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய். 22
'சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால்-செருவில், செம்பொன்
குன்று நின்றனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப
கொன்று, நின் தலைகள் சிந்தி, அரக்கர்தம் குலத்தை முற்றும்
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை. 23
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல்,-இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்றாகி, தாமரைக் கண்ணது ஆகி,
கனக் கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி, ஆர்க்கும்
மனக்கு இனிது ஆகி, நிற்கும் அஃது அன்றி-வரம்பு இலாதாய். 24
அயோத்திக்கும் மிதிலைக்கு வீரர்கள் சென்றுள்ளதாக இராவணன் கூறுதல்
என்றனள்; என்றலோடும், எரி உகு கண்ணன், தன்னைக்
கொன்றன மானம் தோன்ற, கூற்று எனச் சீற்றம் கொண்டான்,
'வென்று எனை, இராமன் உன்னை மீட்டபின், அவனோடு ஆவி,
ஒன்று என வாழ்திபோல்' என்று, இடி உரும் ஒக்க நக்கான். 25
'இனத்துளார் உலகத்து உள்ளார், இமையவர் முதலினார், என்
சினத்துளார் யாவர் தீர்ந்தார்? தயரதன் சிறுவன் தன்னை,
புனத் துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன்
மனத்துளான் எனினும், கொல்வென்; வாழுதி, பின்னை மன்னோ! 26
'"வளைத்தன மதிலை, வேலை வகுத்தன வரம்பு, வாயால்
உளைத்தன குரங்கு பல்கால்" என்று அகம் உவந்தது உண்டேல்
இளைத்த நுண் மருங்குல் நங்காய்! என் எதிர் எய்திற்று எல்லாம்,
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய் வியக்க வேண்டா. 27
'கொற்றவாள் அரக்கர்தம்மை, "அயோத்தியர் குலத்தை முற்றும்
பற்றி நீர் தருதிர்; அன்றேல், பசுந் தலை கொணர்திர்; பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர்" என்று உந்தினேன்; உந்தை மேலும்,
வெற்றியர் தம்மைச் செல்லச் சொல்லினென், விரைவின்' என்றான். 28
மகோதரன் மாயாசனகனை அங்குக் கொணர்தல்
என்று அவன் உரைத்தகாலை, 'என்னை இம் மாயம் செய்தாற்கு
ஒன்றும் இங்கு அரியது இல்லை' என்பது ஓர் துணுக்கம் உந்த,
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள், நெருப்பை மீளத்
தின்று தின்று உமிழ்கின்றாரின், துயருக்கே சேக்கை ஆனாள். 29
'இத் தலை இன்ன செய்த விதியினார், என்னை, இன்னும்
அத் தலை அன்ன செய்யச் சிறியரோ? வலியர் அம்மா!
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும்' என்னாக்
கைத்தனள் உள்ளம், வெள்ளக் கண்ணின் நீர்க் கரை இலாதாள். 30
ஆயது ஓர் காலத்து, ஆங்கண், மருத்தனைச் சனகன் ஆக்கி,
வாய் திறந்து அரற்றப் பற்றி, மகோதரன் கடிதின் வந்து,
காய் எரி அனையான் முன்னர்க் காட்டினன்; வணங்கக் கண்டாள்,
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிலாதாள். 31
மாயாசனகனைக் கண்ட சீதை வாய்விட்டு அரற்றுதல்
கைகளை நெரித்தாள்; கண்ணில் மோதினாள்; கமலக் கால்கள்
நெய் எரி மிதித்தாலென்ன, நிலத்திடைப் பதைத்தாள்; நெஞ்சம்
மெய் என எரிந்தாள்; ஏங்கி விம்மினாள்; நடுங்கி வீழ்ந்தாள்;
பொய் என உணராள், அன்பால் புரண்டனள், பூசலிட்டாள். 32
'தெய்வமோ?' என்னும்; 'மெய்ம்மை சிதைந்ததோ?' என்னும்; 'தீய
வைவலோ, உவகை?' என்னும்; 'வஞ்சமோ, வலியது?' என்னும்;
'உய்வலோ, இன்னம்?' என்னும்; ஒன்று அல துயரம் உற்றாள்;
தையலோ? தருமமேயோ? யார், அவள் தன்மை தேர்வார்? 33
'எந்தையே! எந்தையே! இன்று என் பொருட்டு உனக்கும் இக் கோள்
வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ! மண்ணோர்
தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே!' என்னும்;
வெந்துயர் வீங்கி, தீ வீழ் விறகு என வெந்து, வீழ்ந்தாள். 34
'இட்டு, உண்டாய்; அறங்கள் செய்தாய்; எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம்
கட்டுண்டாய்; உயர்ந்த வேள்வித் துறை எலாம் கரையும் கண்டாய்;
மட்டு உண்டார், மனிசர்த் தின்ற வஞ்சரால் வயிரத் திண் தோள்
கட்டுண்டாய்; என்னே, யானும் காண்கின்றேன் போலும் கண்ணால்'. 35
என்று, இன பலவும் பன்னி, எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்,
'பொன்றினள் போலும்' என்னா, பொறை அழிந்து, உயிர்ப்புப் போவாள்,
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள்,
அன்றில் அம் பேடை போல, வாய் திறந்து அரற்றலுற்றாள்: 36
'பிறையுடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இற் கடன்கள் செய்ய,
இறையுடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர்;
சிறையுடைக் காண, நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே-
மறையுடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே? 37
'"வன் சிறைப் பறவை ஊரும் வானவன், வரம்பு இல் மாயப்
புன் சிறைப் பிறவி தீர்ப்பான் உளன்" எனப் புலவர் நின்றார்
என் சிறை தீர்க்குவாரைக் காண்கிலேன்: என்னின் வந்த
உன் சிறை விடுக்கற்பாலார் யார் உளர், உலகத்து உள்ளார்? 38
'பண் பெற்றாரோடு கூடாப் பகை பெற்றாய்; பகழி பாய
விண் பெற்றாய் எனினும், நன்றால், வேந்தராய் உயர்ந்த மேலோர்
எண் பெற்றாய்; பழியும் பெற்றாய்; இது நின்னால் பெற்றது அன்றால்;
பெண் பெற்றாய்; அதனால், பெற்றாய்; யார் இன்ன பேறு பெற்றார்? 39
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு, ஆற்ற
எற்றுண்டும், அளற்று நீங்கா, விழு சிறு குண்டை என்ன,
பற்றுண்ட நாளே மாளாப் பாவியேன், உம்மை எல்லாம்
விற்று உண்டேன்; எனக்கு மீளும் விதி உண்டோ , நரகில் வீழ்ந்தால்? 40
'இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு, அளவு இல் இன்பம்
பொருந்தினேன் அல்லேன்; எம்கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்;
வருந்தினேன், நெடு நாள்; உம்மை வழியொடு முடித்தேன்; வாயால்
அருந்தினேன், அயோத்தி வந்த அரசர்தம் புகழை அம்மா! 41
'"கொல்" எனக் கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன்; எந்தை
கல் எனத் திரண்ட தோளைப் பாசத்தால் கட்டக் கண்டேன்;
இல் எனச் சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன்-
அல்லெனோ? எளியெனோ, யான்? அளியத்தேன், இறக்கலாதேன்! 42
'இணை அறு வேள்வி மேல்நாள் இயற்றி, ஈன்று எடுத்த எந்தை
புணை உறு திரள் தோள் ஆர்த்து, பூழியில் புரளக் கண்டேன்;
மணவினை முடித்து, என் கையை மந்திர மரபின் தொட்ட
கணவனை இனைய கண்டால் அல்லது, கழிகின்றேனோ? 43
'அன்னைமீர்! ஐயன்மீர்! என் ஆர் உயிர்த் தங்கைமீரே!
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று
முன்னம் நீர் உணர்ந்திலீரோ? உமக்கு வேறு உற்றது உண்டோ?
துன்ன அரு நெறியின் வந்து, தொடர்ந்திலீர்; துஞ்சினீரோ? 44
'மேருவின் உம்பர்ச் சேர்ந்து, விண்ணினை மீக்கொண்டாலும்,
நீருடைக் காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால்;
போரிடைக் கொண்டாரேனும், வஞ்சனை புணர்ந்தாரேனும்,
ஆர் உமக்கு அறையற்பாலார்? அனுமனும் உளனோ, நும் பால்? 45
'சரதம்; மற்று இவனைத் தந்தார், தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த
பரதனைக் கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை; பல் நாள்
வரதனும் வாழ்வான் அல்லன்; தம்பியும் அனையன வாழான்;
விரதம் உற்று, அறத்தில் நின்றார்க்கு, இவைகொலாம் விளைவ மேன்மேல்? 46
'"அடைத்தது கடலை; மேல் வந்து அடைந்தது, மதிலை; ஆவி
துடைத்தது பகையை, சேனை" எனச் சிலர் சொல்லச் சொல்ல,
படைத்தது ஓர் உவகைதன்னை, வேறு ஒரு வினயம் பண்ணி,
உடைத்தது விதியே' என்று என்று, உளைந்தனள், உணர்வு தீர்வாள். 47
சீதையை இணங்குமாறு மீண்டும் இராவணன் வேண்டுதல்
ஏங்குவாள் இனைய பன்ன, இமையவர் ஏற்றம் எல்லாம்
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
'தாங்குவாள் அல்லள் துன்பம்; இவளையும் தாங்கி, தானும்
ஓங்குவான்' என்ன உன்னி, இனையன உரைக்கலுற்றான்; 48
'காரிகை! நின்னை எய்தும் காதலால், கருதலாகாப்
பேர் இடர் இயற்றலுற்றேன்; பிழை இது பொறுத்தி; இன்னும்,
வேர் அற மிதிலையோரை விளிகிலேன்; விளிந்த போதும்,
ஆர் உயிர் இவனை உண்ணேன்; அஞ்சலை, அன்னம் அன்னாய்! 49
'இமையவர் உலகமேதான், இவ் உலகு ஏழுமேதான்,
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான்,
சமைவுறத் தருவென், மற்று இத் தாரணி மன்னற்கு; இன்னல்
சுமையுடைக் காம வெந் நோய் துடைத்தியேல், தொழுது வாழ்வேன். 50
'இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து, வேறு இடத்து இருந்து வாழ்வேன்;
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென்; நாமத் தெய்வப்
பொலம் கிளர் மானம்தானே பொது அறக் கொடுப்பென்; புத்தேள்
வலம் கிளர் வாளும் வேண்டில், வழங்குவென்; யாதும் மாற்றேன். 51
'இந்திரன் கவித்த மௌலி, இமையவர் இறைஞ்சி ஏத்த,
மந்திர மரபின் சூட்டி, வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய, யான் இவன் பணியில் நிற்பேன்-
சுந்தரப் பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின். 52
'எந்தைதன் தந்தை தாதை, இவ் உலகு ஈன்ற முன்னோன்,
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும்; மற்றை
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால்; அமிழ்தின் வந்த
செந்திரு நீர் அல்லீரேல், அவளும் வந்து, ஏவல் செய்யும். 53
'தேவரே முதலா, மற்றைத் திண்திறல் நாகர், மண்ணோர்,
யாவரும் வந்து, நுந்தை அடி தொழுது, ஏவல் செய்வார்;
பாவை! நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால்;
மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்து, அது முடித்தி' என்றான். 54
சீதை சினந்து உரைத்தல்
'இத் திருப் பெறுகிற்பானும், இந்திரன்; இலங்கை நுங்கள்
பொய்த் திருப் பெறுகிற்பானும், வீடணன்; புலவர் கோமான்
கைத் திருச்சரங்கள் உன் தன் மார்பிடைக் கலக்கற்பால்
மைத் திரு நிறத்தான் தாள் என் தலைமிசை வைக்கற்பால. 55
'நகுவன நின்னோடு, ஐயன் நாயகன் நாம வாளி,
புகுவன போழ்ந்து, உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம்
தகுவன இனிய சொல்லத் தக்கன் சாப நாணின்,
உகுவன மலைகள் எஞ்ச, பிறப்பன ஒலிகள் அம்மா! 56
'சொல்லுவ மதுர மாற்றம், துண்டத்தால் உண்டு, உன் கண்ணைக்
கல்லுவ, காகம்; வந்து கலப்பன, கமலக் கண்ணன்
வில் உமிழ் பகழி; பின்னர், விலங்கு எழில் அலங்கல் மார்பம்
புல்லுவ, களிப்புக் கூர்ந்து, புலவு நாறு அலகை எல்லாம். 57
'விரும்பி நான் கேட்பது உண்டால், நின்னுழை வார்த்தை; "வீரன்
இரும்பு இயல் வயிர வாளி இடறிட, எயிற்றுப் பேழ் வாய்ப்
பெரும் பியல் தலைகள் சிந்திப் பிழைப்பிலை முடிந்தாய்" என்ன,
அரும்பு இயல் துளவப் பைந்தார் அனுமன் வந்து அளித்த அந்நாள். 58
'புன் மகன்! கேட்டி, கேட்டற்கு உரியது; புகுந்த போரின்,
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க, நாய் அவன் உடலை நக்க,
'என் மகன் இறந்தான்' என்ன, நீ எடுத்து அரற்றல்' என்றாள். 59
இராவணன் சீதையைக் கொல்ல முயல மகோதரன் தடுத்து உரைத்தல்
வெய்யவன் அனைய கேளா, வெயில் உக விழித்து, வீரக்
கை பல பிசைந்து, பேழ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி,
தையல்மேல் ஓடலோடும், மகோதரன் தடுத்தான்; 'ஈன்ற
மொய் கழல் தாதை வேண்ட, இசையும்; நீ முனியல்' என்றான். 60
மாயாசனகன் இராவணன் கருத்துக்கு இணங்குமாறு சீதையைக் கூறுதல்
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க, 'ஆவி
பொன்றினன் ஆகும்' என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்,
'இன்று இது நேராய் என்னின், என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி' என்னா, இனையன கூறலுற்றான்: 61
'பூவின்மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள்
பாவி! யான் பயந்த நங்கை! நின் பொருட்டாகப் பட்டேன்;
ஆவி போய் அழிதல் நன்றோ? அமரர்க்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ? சிறையிடைத் தேம்புகின்றாய்! 62
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி, ஈண்டு
நல் நெடுஞ் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி, நாளும்
உன்னை வெஞ் சிறையின் நீக்கி, இன்பத்துள் உய்ப்பாய்' என்னா,
பொன் அடி மருங்கு வீழ்ந்தான், உயிர் உகப் பொருமுகின்றான். 63
சீதை மாயாசனகனைக் கடிந்துரைத்தல்
அவ் உரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி,
வௌ; உயிர்த்து, ஆவி தள்ளி, வீங்கினள், வெகுளி பொங்க,
'இவ் உரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி;
செவ்வுரை அன்று இது' என்னாச் சீறினள், உளையச் செப்பும்: 64
அறம் கெட, வழக்கு நீங்க, அரசர்தம் மரபிற்கு ஆன்ற
மறம் கெட, மெய்ம்மை தேய, வசை வர, மறைகள் ஓதும்
திறம் கெட, ஒழுக்கம் குன்ற, தேவரும் பேணத் தக்க
நிறம் கெட, இனைய சொன்னாய்; சனகன்கொல், நினையின்? ஐயா! 65
'வழி கெட வரினும், தம் தம் வாழ்க்கை தேய்ந்து இறினும், மார்பம்
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும், ஆன்றோர் கூறும்
மொழிகொடு வாழ்வது அல்லால், முறை கெடப் புறம் நின்று ஆர்க்கும்
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ? பாவம்! 66
'நீயும், நின் கிளையும், மற்று இந் நெடு நில வரைப்பும், நேரே
மாயினும், முறைமை குன்ற வாழ்வெனோ?-வயிரத் திண் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்-
நாயினை நோக்குவேனோ, நாண் துறந்து, ஆவி நச்சி? 67
'வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே! 68
'அல்லையே எந்தை; ஆனாய் ஆகதான்; அலங்கல் வீரன்
வில்லையே வாழ்த்தி, மீட்கின் மீளுதி; மீட்சி என்பது
இல்லையேல், இறந்து தீர்தி; இது அலால், இயம்பல் ஆகாச்
சொல்லையே உரைத்தாய்; என்றும் பழி கொண்டாய்' என்னச் சொன்னாள். 69
இராவணன் மாயாசனகனைக் கொல்ல வாள் உருவுதல்
வன் திறல் அரக்கன், அன்ன வாசகம் மனத்துக் கொள்ளா,
'நின்றது நிற்க் மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க் நின்முன்
நின்றவன் அல்லன் போலாம் சனகன்; இக் கணத்தினின் முன்
கொன்று உயிர்குடிப்பென்' என்னா, சுரிகைவாள் உருவிக் கொண்டான். 70
சீதையின் பதில் உரை
'என்னையும் கொல்லாய்; இன்னே இவனையும் கொல்லாய்; இன்னும்
உன்னையும் கொல்லாய்; மற்று, இவ் உலகையும் கொல்லாய்; யானோ
இன் உயிர் நீங்கி, என்றும் கெடாப் புகழ் எய்துகின்றேன்;
பின்னையும், எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய்' என்றாள். 71
மாயாசனகனைக் கொல்லச் சென்ற இராவணனை மகோதரன் தடுத்தல்
'இரந்தனன் வேண்டிற்று அல்லால், இவன் பிழை இழைத்தது உண்டோ?
புரந்தரன் செல்வத்து ஐய! கொல்கை ஓர் பொருளிற்றோதான்;
பரந்த வெம் பகையை வென்றால், நின்வழிப் படரும் நங்கை;
அரந்தையன் ஆகும் அன்றே, தந்தையை நலிவதாயின்?' 72
கும்பகருணன் இறந்தமையை இராவணன் அறிதல்
என்று அவன் விலக்க, மீண்டு, ஆண்டு இருந்தது ஓர் இறுதியின் கண்,
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல,
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை,
சென்றன செவியினூடு, தேவர்கள் ஆர்ப்பும் செல்ல, 73
'உகும் திறல் அமரர் நாடும், வானர யூகத்தோரும்,
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும், விஞ்ச,
தகும் திறன் நினைந்தேன்; எம்பிக்கு அமரிடைத் தனிமைப்பாடு
புகுந்துளது உண்டு' என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின். 74
புறந்தரு சேனை முந்நீர் அருஞ் சிறை போக்கி, போதப்
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி, பைய,
'திறம் திறம் ஆக நின்ற கவிப் பெருங் கடலைச் சிந்தி,
இறந்தனன், நும்பி; அம்பின் கொன்றனன், இராமன்' என்றார். 75
இராவணன் அழுது அரற்றுதல்
ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன, ஒண் பொன்
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த, தள்ளி,
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம், பணைகளோடும்
வேரொடும் பறிந்து, மண்மேல் வீழ்வதே போல, வீழ்ந்தான். 76
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி, ஆவி ஒன்றென நினைந்து நின்றான்,
எறி வரும் செருவில் தம்பி தன்பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து, அவசன் ஆகி, அரற்றினன், அண்டம் முற்ற. 77
தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ! நான்முகத்தோன் சேய்மதலை தோன்றாலோ!
நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த
எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ! 78
'மின் இலைய வேலோனே! யான் உன் விழி காணேன்,
நின் நிலை யாது என்னேன், உயிர் பேணி நிற்கின்றேன்;
உன் நிலைமை ஈது ஆயின், ஓடைக் களிறு உந்திப்
பொன்னுலகம் மீளப் புகாரோ, புரந்தரனார்? 79
'வல் நெஞ்சின் என்னை நீ நீத்துப் போய், வான் அடைந்தால்,
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்?
மின் அஞ்சும் வேலோய்! விழி அஞ்ச வாழ்கின்றார்,
தம் நெஞ்சம் தாமே தடவாரோ, தானவர்கள்? 80
'கல் அன்றோ, நீராடும் காலத்து, உன் கால் தேய்க்கும்-
மல் ஒன்று தோளாய்!-வட மேரு? மானுடவன்
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது, தோன்றால்! 81
'மாண்டனவாம், சூலமும், சக்கரமும், வச்சிரமும்;
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம்; தெறித்து,
மீண்டனவாம்; மானிடவன் மெல் அம்பு மெய் உருவ,
நீண்டனவாம்; தாம் இன்னம் நின்றாராம், தோள் நோக்கி! 82
'நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும், இந் நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும், என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும், வாழ்ந்தேன் - ஒருத்தி முலைக் கிடந்த
ஏக்கறவால்; இன்னம் இரேனோ, உனை இழந்தும்? 83
'தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான்,
மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்தான்,
பின்னைக் கரடிக்கு இறையைத்தான், பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே! 84
'ஏழை மகளிர் அடி வருட, ஈர்ந் தென்றல்
வாழும் மணி அரங்கில், பூம் பள்ளி வைகுவாய்!
சூழும் அலகை துணங்கைப் பறை துவைப்ப,
பூழி அணைமேல் துயின்றனையோ, போர்க்களத்தே? 85
'செந் தேன் பருகித் திசை திசையும் நீ வாழ,
உய்ந்தேன்; இனி, இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன், பிரியேன், தனி போகத் தாழ்க்கிலேன்,
வந்தேன் தொடர் மதக் களிறே! வந்தேனால்'. 86
இராவணன் கதறச் சீதை மகிழ்தல்
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து,
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்;
தொண்டைக் கனிவாய் துடிப்ப, மயிர் பொடிப்ப,
கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள். 87
வீங்கினாள் கொங்கை; மெலிந்த மெலிவு அகல
ஓங்கினாள்; உள்ளம் உவந்தாள்; உயிர் புகுந்தாள்;
தீங்கு இலாக் கற்பின் திருமடந்தை சேடி ஆம்
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்? 88
கண்டாள், கருணனை, தன் கண் கடந்த தோளானை;
கொண்டாள், ஒரு துணுக்கம்; அன்னவனைக் கொற்றவனார்
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
உண்டாள் உடல் தடித்தாள்; வேறு ஒருத்தி ஒக்கின்றாள். 89
இராவணன் சீறி அகல்தல்
'தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும்
யாவரையும் கொன்று அருக்கி, என்றும் இறவாத
மூவரையும், மேலை நாள் மூவா மருந்து உண்ட
தேவரையும், வைப்பேன் சிறை' என்னச் சீறினான். 90
அக் கணத்து, மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி,
'இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால்
முக் கைப் புனல் உகுப்பென், எம்பிக்கு' என முனியா,
திக்கு அனைத்தும் போர் கடந்தான், போயினான், தீ விழியான். 91
மகோதரன் போதல்
'கூறோம், இனி நாம்; அக் கும்பகருணனார்
பாறு ஆடு வெங் களத்துப் பட்டார்' எனப் பதையா,
'வேறு ஓர் சிறை இவனை வைம்மின் விரைந்து' என்ன,
மாறு ஓர் திசை நோக்கிப் போனார், மகோதரனார். 92
சீதையைத் திரிசடை தேற்றுதல்
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலாத்
துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள்,
திரிசடை தெருட்டுவாள், இனைய செப்புவாள்: 93
'உந்தை என்று, உனக்கு எதிர் உருவம் மாற்றியே,
வந்தவன், மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்;
அந்தம் இல் கொடுந் தொழில் அரக்கன் ஆம்' எனா,
சிந்தையன் உணர்த்தினள், அமுதின் செம்மையாள். 94
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள்,
சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்;
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன்
அங்கு நின்று இயற்றியது அறைகுவாம் அரோ. 95
மிகைப் பாடல்கள்
இம் மொழி அரக்கன் கூற, ஏந்திழை இரு காதூடும்
வெம்மை சேர் அழலின் வந்த வே........................
.........ல் வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள்; மீட்டும்
விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு, இவை விளம்ப லுற்றான்: 54-1
மங்கையை, குலத்துளாளை, தவத்தியை முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றான், குலத்துக்கே தக்கான் என்று
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும்
செங்கைகள் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறுமை என்னா. 72-1
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற,
நொந்து, ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினன் ஆய்,
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின்
உந்தா, உளம் கொதித்து, ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான். 89-1
|