Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் >28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 17. அதிகாயன் வதைப் படலம்


இராவணன் அமைச்சரைக் கடிதல்

கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற,
எழுந்து எரி வெகுளியான், இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரைச் சுளித்து நோக்குறா,
மொழிந்தனன், இடியொடு முகிலும் சிந்தவே: 1

'ஏகுதிர், எம் முகத்து எவரும்-என்னுடை
யோக வெஞ் சேனையும், உடற்றும் உம்முடைச்
சாகரத் தானையும், தழுவச் சார்ந்து, அவர்
வேக வெஞ் சிலைத் தொழில் விலக்கி வீட்டிரால். 2

'"எடுத்தவர் இருந்துழி எய்தி, யாரையும்
படுத்து, இவண் மீடும்" என்று உரைத்த பண்பினீர்!
தடுத்தலீர் எம்பியை; தாங்ககிற்றிலீர்;
கொடுத்தலீர், உம் உயிர்; வீரக் கோட்டியீர். 3

'உம்மையின் நின்று, நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால்
இம்மையில் நெடுந் திரு எய்தினீர்; இனிச்
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால். 4

'"ஆற்றலம்" என்றிரேல் என்மின்; யான், அவர்
தோற்று, அலம்வந்து உகத் துரந்து, தொல் நெடுங்
கூற்று அலது உயிர் அது குடிக்கும், கூர்த்த என்
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால். 5

'அல்லதும் உண்டு, உமக்கு உரைப்பது: "ஆர் அமர்
வெல்லுதும்" என்றிரேல், மேல் செல்வீர்; இனி,
வல்லது மடிதலே என்னின், மாறுதிர்,
சொல்லும், நும் கருத்து' என முனிந்து சொல்லினான். 6

அதிகாயன் தன் வீரத்தை மிகுத்துக் கூறுதல்

நதி காய் நெடு மானமும் நாணும் உறா,
மதி காய் குடை மன்னனை வைது உரையா,
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான்: 7

'வான் அஞ்சுக் வையகம் அஞ்சுக் மா-
லான் அஞ்சு முகத்தவன், அஞ்சுக, "மேல்
நான் அஞ்சினேன்" என்று, உனை நாணுக் போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ? 8

வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-
தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ? 9

'காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத்
தேய்ப்புண்டவனும், சில சில் கணையால்
ஆய்ப்புண்டவனும், அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும், என எண்ணினையோ? 10

அதிகாயன் வஞ்சினம் கூறி போருக்குப் போதல்

'உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக்
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்,
நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்? 11

'கிட்டிப் பொருது, அக் கிளர் சேனை எலாம்
மட்டித்து, உயர் வானரர் வன் தலையை
வெட்டித் தரை இட்டு, இரு வில்லினரைக்
கட்டித் தருவென்; இது காணுதியால். 12

'"சேனைக் கடலோடு இடை செல்க" எனினும்,
யான் இப்பொழுதே, "தனி ஏகு" எனினும்
தான் ஒத்தது சொல்லுதி; தா விடை' என்-
றான்; இத் திறம் உன்னி அரக்கர் பிரான். 13

'சொன்னாய், இது நன்று துணிந்தனை; நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின், யான்,
பின் நாள், அவ் இராமன் எனும் பெயரான்-
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால். 14

'போவாய் இது போது-பொலங் கழலோய்!-
மூவாயிர கோடியரோடு, முரண்
கா ஆர் கரி, தேர், பரி காவலின்' என்று,
ஏவாதன யாவையும் ஏவினனால். 15

கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,-உன்
செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர். 16

'ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வயப் பரி ஆயிரம், வன்
போர் ஏறிட ஏறுவ, பூணுறு திண்
தேர் ஏறுதி; தந்தனென்-வெந் திறலோய்! 17

'ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர்
சேமத்தன பின் புடை செல்ல, அடும்
கோ மத்த நெடுங் கரி கொடியாடும்,
போம், அத்தனை வெம் புரவிக் கடலே.' 18

என்றே விடை நல்க, இறைஞ்சி எழா
வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு, வாள்
பொன் தாழ் கவசம் புகுதா, முகிலின்
நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால். 19

பல்வேறு படைக்கலம், வெம் பகலோன்
எல் வேறு தெரிப்ப, கொடு ஏகினனால்,
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற,-மா-
வில் வேறு தெரிப்புறும் மேனியினான். 20

அதிகாயனோடு சென்ற படைகள்

இழை, அஞ்சன, மால் களிறு, எண் இல் அரி
முழை அஞ்ச முழங்கின் மும் முறை நீர்
குழை அஞ்ச முழங்கின, நாண் ஒலி; கோள்
மழை அஞ்ச முழங்கின, மா முரசே. 21

ஆர்த்தார், நெடு வானம் நடுங்க் அடிப்
பேர்த்தார், நிலமாமகள் பேர்வள் என்
தூர்த்தார் நெடு வேலைகள், தூளியினால்;
வேர்த்தார், அது கண்டு விசும்பு உறைவோர். 22

அடியோடு மதக் களி யானைகளின்
பிடியோடு நிகர்த்தன, பின் புறம், முன்-
தடியோடு துடங்கிய தாரைய, வெண்
கொடியோடு துடங்கிய, கொண்மு எலாம். 23

தாறு ஆடின மால் கரியின்புடை தாழ்
மாறாடின மா மதம் மண்டுதலால்,
ஆறு ஆடின, பாய் பரி, யானைகளும்;
சேறு ஆடின, சேண் நெறி சென்ற எலாம், 24

தேர் சென்றன, செங் கதிரோனொடு சேர்
ஊர் சென்றனபோல்; ஒளி ஓடைகளின்
கார் சென்றன, கார் நிரை சென்றனபோல்;
பார் சென்றில, சென்றன பாய் பரியே. 25

கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் கொதித்தல்

மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து, நெடும்
பாரில் செலுமாறு படப் படரும்
தேர் சுற்றிடவே, கொடு சென்று முரண்
போர் முற்று களத்திடைப் புக்கனனால். 26

கண்டான், அவ் இராமன் எனும் களி மா
உண்டாடிய வெங் களன் ஊடுருவ்
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன், வந்த சினத் திறலோன். 27

மலை கண்டனபோல் வரு தோளோடு தாள்
கலை கண்ட கருங் கடல் கண்டு, உளவாம்,
நிலை கண்டன கண்டு, ஒரு தாதை நெடுந்
தலை கண்டிலன், நின்று சலித்தனனால். 28

'மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று; திசைக் களிறு அன்று; ஒரு திண்
கடல் அன்று; இது என் எந்தை கடக் கரியான்
உடல்' என்று, உயிரோடும் உருத்தனனால். 29

'எல்லே! இவை காணிய எய்தினனோ!
வல்லே உளராயின மானுடரைக்
கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில்
செல்லேன், எனின், இவ் இடர் தீர்குவெனோ?' 30

அதிகாயன், இலக்குவன் பால் தூது அனுப்புதல்

என்னா, முனியா, 'இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படிச் செய்து பெயர்த்து,
அன்னான் இடர் கண்டு, இடர் ஆறுவென்' என்று
உன்னா, ஒருவற்கு இது உணர்த்தினனால்: 31

'வா நீ, மயிடன்! ஒரு வல் விசையில்
போ! நீ அவ் இலக்குவனில் புகல்வாய்;
நான் ஈது துணிந்தனென், நண்ணினெனால்;
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய். 32

'"அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான்" என, முன் சொல் வழங்குதியால்; 33

'கோளுற்றவன், நெஞ்சு சுடக் குழைவான்,
நாள் உற்ற இருக்கையில், யான், ஒருதன்
தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான்,
குளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்; 34

'தீது என்று அது சிந்தனை செய்திலெனால்;
ஈது என்று அறம் மன் நெறி ஆம்' என, 'நீ
தூது என்று இகழாது, உன சொல் வலியால்,
"போது" என்று, உடனே கொடு, போதுதியால். 35

'செரு ஆசையினார், புகழ் தேடுறுவார்,
இருவோரையும், நீ வலி உற்று, "எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்;
வருவோரை எலாம் வருக!" என்னுதியால். 36

'சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்,
"வந்தான்" என என் எதிரே, மதியோய்!
தந்தாய் எனின், யான் அலது, யார் தருவார்,
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்? 37

'வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு
ஏறே வருமேல், இமையோர் எதிரே,
கூறே பல செய்து, உயிர் கொண்டு, உனையும்
மாறே, ஒரு மன் என வைக்குவெனால். 38

'விண் நாடியர், விஞ்சையர், அம் சொலினார்
பெண், ஆர் அமுது அன்னவர், பெய்து, எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
எண்ணாயிரம் ஆயினும், ஈகுவெனால். 39

'உறைதந்தன செங் கதிரோன் உருவின்
பொறை தந்தன, காசு ஒளிர் பூண், இமையோர்
திறை தந்தன, தெய்வ நிதிக் கிழவன்
முறை தந்தன, தந்து முடிக்குவெனால், 40

'மாறா மத வாரிய, வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன, பல் பகலும்
தேறாதன, செங் கண வெங் களி மா
நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால், 41

'செம் பொன்னின் அமைந்து சமைந்தன தேர்
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழாப்
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா,
இம்பர் நடவாதன, ஈகுவெனால். 42

'நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்,
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்,
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்,
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால். 43

'மற்றும், ஒரு தீது இல் மணிப் பணி தந்து,
உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால்;
பொன் திண் கழலாய்! நனி போ' எனலோடு,
எற்றும் திரள் தோளவன் ஏகினனால். 44

மயிடனை வானரர் பற்றுதல்

ஏகி, தனி சென்று, எதிர் எய்தலுறும்
காகுத்தனை எய்திய காலையின்வாய்,
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்,
'ஓகைப் பொருள் உண்டு' என, ஓதினனால். 45

இராமன் மயிடனை வினவல்

போதம் முதல், 'வாய்மொழியே புகல்வான்;
ஏதும் அறியான்; வறிது ஏகினனால்;
தூதன்; இவனைச் சுளியன்மின்' எனா,
வேதம் முதல் நாதன் விலக்கினனால். 46

'என், வந்த குறிப்பு? அது இயம்பு' எனலும்,
மின் வந்த எயிற்றவன், 'வில் வல! உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால்,
மன் வந்த கருத்து' என, 'மன்னர்பிரான்!' 47

இலக்குவன் வினவ, தூதன் செய்தி உரைத்தல்

'சொல்லாய்; அது சொல்லிடு, சொல்லிடு' எனா,
வில்லாளன் இளங்கிளையோன் வினவ,
'பல் ஆயிர கோடி படைக் கடல் முன்
நில்லாய்' என, நின்று நிகழ்த்தினனால்: 48

'உன்மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன்; நாடி அவன்-
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல்,
பொன் மேனிய! என்னொடு போதுதியால். 49

'சையப் படிவத்து ஒரு தந்தையை முன்
மெய் எப்படிச் செய்தனன் நும் முன், விரைந்து,
ஐயப்படல், அப்படி இப் படியில்
செய்யப்படுகிற்றி; தெரித்தனெனால். 50

'"கொன்றான் ஒழிய, கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என், நேடி?" எனின்,
தன் தாதை படும் துயர், தந்தையை முன்
வென்றானை இயற்றுறும் வேட்கையினால். 51

வானோர்களும், மண்ணினுளோர்களும், மற்று
ஏனோர்களும், இவ் உரை கேண்மின்; இவன்-
தானே பொருவான்; அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான், அமைவான். 52

இராமன் இலக்குவனை அனுப்பல்

'எழுவாய், இனி என்னுடன்' என்று, எரியும்
மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும்,
தழுவா, 'உடன் ஏகுதி; தாழல்!' எனத்
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும், 53

வீடணன் அதிகாயனது திறம் குறித்தல்

'எல்லாம் உடன் எய்திய பின், இவனே
வில்லானொடு போர் செய வேண்டும்' எனா,
நல்லாறுடை வீடணன், நாரணன் முன்
சொல்லாடினன்; அன்னவை சொல்லுதுமால்; 54

'வார் ஏறு கழற் சின வாள் அரி எம்
போர் ஏறொடு போர் புரிவான் அமையா,
தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண்
கார் ஏறு என வந்த கதத் தொழிலோன். 55

'ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்,
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்,
சாவான் இறையும், சலியா வலியான்,
மூவா முதல் நான்முகனார் மொழியால்; 56

'கடம் ஏய் கயிலைக் கிரி, கண்ணுதலோடு
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை,
திடமே உலகில் பல தேவரொடும்,
வட மேரு எடுக்க, வளர்த்தனனால்; 57

'மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா,
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய,
காலால் நெடு வேலை கலக்கிடுமால்; 58

'ஊழிக்கும் உயர்ந்து, ஒரு நாள் ஒருவாப்
பாழித் திசை நின்று சுமந்த, பணைச்
சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ?
ஆழிக் கிரி தள்ளும், ஓர் அங்கையினால்; 59

'காலங்கள் கணக்கு இற, கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன், ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய, கொடு, 'விட்டது நீள்
சூலம் கொல்?' எனப் பகர் சொல் உடையான்; 60

பகை ஆடிய வானவர் பல் வகை ஊர்
புகை ஆடிய நாள், புனை வாகையினான்,
"மிகை ஆர் உயிர் உண்" என வீசிய வெந்
தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்; 61

'உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம்,
செயிர் ஒப்புறும் இந்திரர், சிந்திய நாள்,
அயிர் ஒப்பன நுண் துகள்செய்து, அவர்தம்
வயிரப் படை தள்ளிய வாளியினான்; 62

'கற்றான், மறை நூலொடு கண்ணுதல்பால்;
முற்றாதன தேவர் முரண் படைதாம்,
மற்று ஆரும் வழங்க வலார் இலவும்,
பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்; 63

'அறன் அல்லது நல்லது மாறு அறியான்;
மறன் அல்லது பல் பணி மாறுஅணியான்;
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்;
"உறல் நல்லது, பேர் இசை" என்று உணர்வான்; 64

காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்,
மாயத் தொழில் செய்ய மதித்திலனால். 65

அதிகாயன் வரலாறு

'மது கைடவர் என்பவர், வானவர்தம்
பதி கைகொடு கட்டவர், பண்டு ஒரு நாள்
அதி கைதவர், ஆழி அனந்தனையும்,
விதி கைம்மிக, முட்டிய வெம்மையினார். 66

'நீர் ஆழி இழிந்து, நெடுந்தகையை,
"தாராய் அமர்" என்றனர், தாம் ஒரு நாள்;
ஆர் அழிய அண்ணலும், அஃது இசையா,
"வாரா, அமர் செய்க!" என வந்தனனால், 67

'வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்,
நல்லார் முறை வீசி, நகும் திறலார்
மல்லால் இளகாது, மலைந்தனன் மால்;
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால். 68

'தன் போல்பவர் தானும் இலாத தனிப்
பொன்போல் ஒளிர் மேனியனை, "புகழோய்!
என் போல்பவர் சொல்லுவது, எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர்?" என்று உரையா, 69

'"ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்;
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய்; புகழோய்!
தருவோம் நின் மனத்தது தந்தனமால்; 70

'"ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச்
சொல்லும்படி" என்று, அவர் சொல்லுதலும்,
"வெல்லும்படி நும்மை விளம்பும்" எனக்
கொல்லும்படியால் அரி கூறுதலும். 71

'"இடையில் படுகிற்கிலம் யாம்; ஒரு நின்
தொடையில் படுகிற்றும்" எனத் துணியா,
"அடையச் செயகிற்றி; அது ஆணை" எனா,
நடையில் படு நீதியா நல்குதலும், 72

'விட்டான், உலகு யாவையும், மேலொடு கீழ்,
எட்டா ஒருவன் தன் இடத் தொடையை;
ஒட்டாதவர் ஒன்றினர், ஊழ்வலியால்
பட்டார்; இது பட்டது பண்டு ஒருநாள். 73

'தனி நாயகன், வன் கதை தன் கை கொளா,
நனி சாட, விழுந்தனர், நாள் உலவர்
பனியா மது மேதை படப் படர் மே-
தினி ஆனது, பூவுலகு எங்கணுமே. 74

'விதியால், இவ் உகம்தனில், மெய் வலியால்
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்;
கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல்
அதிகாயன்; இது ஆக அறைந்தனெனால்.' 75

இராமன் இலக்குவன் வலிமை கூறல்

என்றான், அவ் இராவணனுக்கு இளையான்;
'நன்று ஆகுக!' என்று, ஒரு நாயகனும்,
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா-
நின்றான், இது கூறி நிகழ்த்தினனால்: 76

'எண்ணாயிர கோடி இராவணரும்
விண் நாடரும், வேறு உலகத்து எவரும்
நண்ணா ஒரு மூவரும், நண்ணிடினும்,
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்: 77

'வான் என்பது என்? வையகம் என்பது என்? மால்-
தான் என்பது என்? வேறு தனிச் சிலையோர்,
யான் என்பது என்? ஈசன் என் இமையோர்
கோன் என்பது என்?-எம்பி கொதித்திடுமேல்! 78

'தெய்வப் படையும், சினமும், திறலும்
மய் அற்று ஒழி மா தவம், மற்றும் எலாம்,
எய்தற்கு உளவோ-இவன் இச் சிலையில்
கய் வைப்பு அளவே? இறல் காணுதியால். 79

'என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
அன்றே முடிவான்; இவன், "அன்னவள் சொல்
குன்றேன்" என ஏகிய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி;-நெடுந் தகையாய்! 80

உடன் சென்று போரைக் காணுமாறு வீடணனை இராமன் ஏவல்

'ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம்
மாகாயன் நெடுந் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்தனைக்
காகாதிகள் நுங்குதல் காணுதியால். 81

'நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே?
தீரக் கொடியாரொடு தேவர் பொரும்
போரைக் கொடு வந்து புகுந்தது நாம்
ஆரைக் கொடு வந்தது? அயர்த்தனையோ? 82

'சிவன்; அல்லன் எனில், திருவின் பெருமான்;
அவன் அல்லன் எனில், புவி தந்தருளும்
தவன்; அல்லன் எனில், தனியே வலியோன்
இவன்; அல்லன் எனில், பிறர் யார் உளரோ? 83

'ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
வன் தானையர் வந்து வளைந்த எலாம்
கொன்றான் இவன் அல்லது, கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ? 84

'கொல்வானும் இவன்; கொடியோரை எலாம்
வெல்வானும் இவன்; அடல் விண்டு என
ஒல்வானும் இவன்; உடனே ஒரு நீ
செல்வாய்' என ஏவுதல் செய்தனனால். 85

இலக்குவன் வீடணன் தொடரப் போர்க்களம் புகுதல்

அக் காலை இலக்குவன் ஆரியனை
முக் காலும் வலம் கொடு, மூதுணர்வின்
மிக்கான், அடல் வீடணன் மெய் தொடரப்
புக்கான், அவன் வந்து புகுந்த களம். 86

சேனைகள் நெருங்கிப் பொருதல்

சேனைக் கடல் சென்றது, தென் கடல்மேல்
ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனர்
ஆனைக் கடல், தேர், பரி, ஆள், மிடையும்
தானைக் கடலோடு தலைப்படலும். 87

பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு,
அசும்பு உற உருகிய, உலகம் ஆர்த்து எழ,
குசும்பையின் நறு மலர்ச் சுண்ணக் குப்பையின்
விசும்பையும் கடந்தது, விரிந்த தூளியே. 88

தாம் இடித்து எழும் பணை முழக்கும், சங்கு இனம்
ஆம் இடிக் குமுறலும், ஆர்ப்பின் ஓதையும்,
ஏமுடைக் கொடுஞ் சிலை இடிப்பும், அஞ்சி, தம்
வாய் மடித்து ஒடுங்கின-மகர வேலையே. 89

உலைதொறும் குருதி நீர் அருவி ஒத்து உக,
இலை துறு மரம் எனக் கொடிகள் இற்று உக,
மலைதொறும் பாய்ந்தென, மான யானையின்
தலைதொறும் பாய்ந்தன, குரங்கு தாவியே. 90

கிட்டின கிளை நெடுங் கோட்ட, கீழ் உகு
மட்டின அருவியின் மதத்த, வானரம்
விட்டன நெடு வரை, வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன, முகத்தின் வீழ்வன. 91

இடித்தன் உறுக்கின் இறுக்கி ஏய்ந்தன்
தடித்தன் எயிற்றினால் தலைகள் சந்து அறக்
கடித்தன்-கவிக் குலம், கால்கள் மேற்படத்
துடித்தன குருதியில், துரக ராசியே. 92

அடைந்தன கவிக் குலம் எற்ற, அற்றன,
குடைந்து எறி கால் பொர, பூட்கைக் குப்பைகள்;
இடைந்தன முகிற் குலம் இரிந்து சாய்ந்தென
உடைந்தன் குல மருப்பு உகுத்த, முத்தமே. 93

தோல் படத் துதைந்து எழு வயிரத் தூண் நிகர்
கால் பட, கை பட, கால பாசம் போல்
வால் பட, புரண்டனர் நிருதர்; மற்று அவர்
வேல் படப் புரண்டனர், கவியின் வீரரே. 94

மரவமும், சிலையொடு மலையும், வாள் எயிற்று
அரவமும், கரிகளும், பரியும், அல்லவும்,
விரவின கவிக் குலம் வீச, விம்மலால்,
உர வரும் கான் எனப் பொலிந்தது, உம்பரே. 95

தட வரை, கவிக் குலத் தலைவர், தாங்கின,
அடல் வலி நிருதர்தம் அனிக ராசிமேல்
விடவிட, விசும்பிடை மிடைந்து விழ்வன
படர் கடல் இன மழை படிவ போன்றவே. 96

இழுக்கினர் அடிகளின், இங்கும் அங்குமா,
மழுக்களும், அயில்களும், வாளும், தோள்களும்
முழுக்கினர், உழக்கினர் மூரி யாக்கையை
ஒழுக்கினர் நிருதரை, உதிர ஆற்றினே. 97

மிடலுடைக் கவிக் குலம், குருதி வெள்ள நீர்
இடை இடை நீந்தின, இயைந்த யானையின்
திடரிடைச் சென்று, அவை ஒழுக்கச் சேர்ந்தன,
கடலிடைப் புக்கன, கரையும் காண்கில. 98

கால் பிடித்து ஈர்த்து இழி குருதிக் கண்ண, கண்
சேல் பிடித்து எழு திரை ஆற்றில், திண் நெடுங்
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்போல்,
வால் பிடித்து ஒழுகின-கவியின் மாலையே. 99

பாய்ந்தது நிருதர் தம் பரவை; பல் முறை
காய்ந்தது, கடும் படை கலக்கி; கைதொறும்
தேய்ந்தது, சிதைந்தது, சிந்திச் சேண் உறச்
சாய்ந்தது-தகைப் பெருங் கவியின் தானையே. 100

இலக்குவன் வானரரைத் தேற்றிப் போரிடல்

அத் துணை, இலக்குவன், 'அஞ்சல் அஞ்சல்!' என்று,
எத் துணை மொழிகளும் இயம்பி, ஏற்றினன்,
கைத்துணை வில்லினை, காலன் வாழ்வினை,
மொய்த்து எழு நாண் ஒலி முழங்கத் தாக்கினான். 101

நூல் மறைந்து ஒளிப்பினும், நுவன்ற பூதங்கள்
மேல் மறைந்து ஒளிப்பினும், விரிஞ்சன் வீயினும்,
கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின், கண் அகல்
நான் மறை ஆர்ப்பென நடந்தது, அவ் ஒலி. 102

துரந்தன சுடு சரம்; துரந்த, தோன்றல
கரந்தன, நிருதர் தம் கரை இல் யாக்கையின்;
நிரந்தன நெடும் பிணம், விசும்பின் நெஞ்சு உற்
பரந்தன குருதி, அப் பள்ள வெள்ளத்தின். 103

யானையின் கரம் துரந்த, இரத வீரர்தம்
வான் உயர் முடித் தலை தடிந்து வாசியின்
கால் நிரை அறுத்து, வெங் கறைக்கண் மொய்ம்பரை
ஊனுடை உடல் பிளந்து, ஓடும்-அம்புகள்; 104

வில் இடை அறுத்து, வேல் துணித்து, வீரர்தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து, எறி
கல் இடை அறுத்து, மாக் கடிந்து, தேர் அழீஇ,
கொல் இயல் யானையைக் கொல்லும், கூற்றினே. 105

இலக்குவன் அம்பினால் அழிந்துபட்ட படுகளத்தின் நிலை

வெற்றி வெங் கரிகளின் வளைந்த வெண் மருப்பு,
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின,
முற்று அரு முப் பகல் திங்கள் வெண் முளை
உற்றன விசும்பிடைப் பலவும் ஒத்தன. 106

கண்டகர் நெடுந் தலை, கனலும் கண்ணன,-
துண்ட வெண் பிறைத் துணை கவ்வி, தூக்கிய
குண்டல மீன் குலம் தழுவி, கோள் மதி
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே. 107

கூர் மருப்பு இணையன, குறைந்த கையன,
கார் மதக் கன வரை கவிழ்ந்து வீழ்வன-
போர்முகக் குருதியின் புணரி புக்கன,
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன. 108

புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற,
கண் அகன் தேர்க் குலம், மறிந்த காட்சிய-
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட
மண் உற, விண்ணின் வீழ் மானம் போன்றன. 109

அட, கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன-
விடற்கு அரும் வினை அறச் சிந்தி, மெய் உயிர்
கடக்க அருந் துறக்கமே கலந்தவாம் என,
உடற் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன. 110

'ஆடுவ கவந்தம் ஒன்று, ஆறு எண்ணாயிரம்
வீடிய பொழுது' எனும் பனுவல் மெய்யதேல்,
கோடியின் மேல் உள, குனித்த் கொற்றவன்
பாடு இனி ஒருவரால் பகரற்பாலதோ? 111

ஆனையின் குருதியும், அரக்கர் சோரியும்,
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும்,
கானினும் மலையினும் பரந்த கால் புனல்
வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே. 112

தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
ஆக்கைய, புரசையோடு அணைந்த தாளன,
மேக்கு உயர் அங்குசக் கைய, வெங் கரி,
நூக்குவ, கணிப்பு இல-அரக்கர் நோன் பிணம். 113

கோளுடைக் கணை பட, புரவி கூத்தன,
தோளுடை நெடுந் தலை துமிந்தனும், தீர்கில
ஆளுடைக் குறைத்தலை அதிர ஆடுவ-
வாளுடைத் தடக் கைய, வாசி மேலன. 114

வய்வன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள்; குறைத்தலைக் குழாம்,
கய் வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா
எய்வன எனைப் பல, இரத மேலன. 115

தாதையை, தம்முனை, தம்பியை, தனிக்
காதலை, பேரனை, மருகனை, களத்து
ஊதையின் ஒரு கணை உருவ, மாண்டனர்-
சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார். 116

தூண்டு அருங் கணை படத் துமிந்து, துள்ளிய
தீண்ட அரு நெடுந் தலை தழுவிச் சேர்ந்தன,
பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன
ஆண்டலை நிகர்த்தன, எருவை ஆடுவ. 117

ஆயிர ஆயிர கோடியாய் வரும்
தீ உமிழ் நெடுங் கணை மனத்தின் செல்வன,
பாய்வன, புகுவன் நிருதர் பல் உயிர்
ஓய்வன, நமன் தமர் கால்கள் ஓயவே. 118

விளக்கு வான் கணைகளால் விளிந்து, மேருவைத்
துளக்குவார் உடற் பொறை துணிந்து, துள்ளுவார்;
இளக்குவார், அமரர் தம் சிரத்தை; ஏன்? முதுகு
உளுக்குவாள் நிலமகள், பிணத்தின் ஓங்கலால். 119

தாருகன் இலக்குவனுடன் பொருது இறத்தல்

தாருகன் என்று உளன் ஒருவன்-தான் நெடு
மேருவின் பெருமையான், எரியின் வெம்மையான்,
போர் உவந்து உழக்குவான், புகுந்து தாங்கினான்-
தேரினன், சிலையினன், உமிழும் தீயினன். 120

துரந்தனன் நெடுஞ் சரம், நெருப்பின் தோற்றத்த்
பரந்தன, விசும்பிடை ஒடுங்க் பண்டுடை
வரம்தனின் வளர்வன அவற்றை, வள்ளலும்,
கரந்தனன் கணைகளால், முனிவு காந்துவான். 121

அண்ணல் தன் வடிக் கணை துணிப்ப, அற்று அவன்
கண் அகல் நெடுந் தலை, விசையின் கார் என,
விண்ணிடை ஆர்த்தது, விரைவில் மெய் உயிர்
உண்ணிய வந்த வெங் கூற்றும் உட்கவே. 122

இலக்குவன் காலன் முதலிய ஐவரைக் கொல்லுதல்

காலனும், குலிசனும், காலசங்கனும்,
மாலியும், மருத்தனும் மருவும் ஐவரும்
சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார்;
பாலமும், பாசமும், அயிலும் பற்றுவார். 123

அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்
துன்ன அரும் படைக்கலம் துணித்து, தூவினன்,
நல் நெடுந் தலைகளைத் துணித்து; நால் வகைப்
பல் நெடுந் தானையைப் பாற நூறினான். 124

இலக்குவன்-அதிகாயன் படை போர்

ஆண்டு அதிகாயன் தன் சேனை ஆடவர்
ஈண்டின மதகிரி ஏழ்-எண்ணாயிரம்
தூண்டினர், மருங்கு உறச் சுற்றினார், தொகை
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார். 125

போக்கு இலா வகை புறம் வளைத்துப் பொங்கினார்,
தாக்கினார் திசைதொறும், தடக் கை மால் வiர்
நூக்கினார் படைகளால் நுறுக்கினார்; குழம்பு
ஆக்கினார், கவிகள் தம் குழுவை; ஆர்ப்பினார். 126

எறிந்தன, எய்தன, எய்தி, ஒன்றொடு ஒன்று
அறைந்தன, அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன, மழை என நெருக்கி நிற்றலால்,
மறைந்தன, உலகொடு திசையும் வானமும். 127

அப் படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து, அவர்
துப்புடைத் தடக் கைகள் துணித்து, சுற்றிய
முப் புடை மதமலைக் குலத்தை முட்டினான்-
எப் புடை மருங்கினும் எரியும் வாளியான். 128

குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற,
வன் தலை துமிதர, மஞ்சு என மறிவன
ஒன்று அல் ஒருபதும் ஒன்பதும்,-ஒரு கணை
சென்று அரிதர,-மழை சிந்துவ மதமலை. 129

ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட,
இரு தொடை புரசையொடு இறுபவர், எறி படை
விருதுடை நிருதர்கள், மலை என விழுவர்கள்;
பொருது உடைவன, மத மழையன புகர் மலை. 130

பருமமும், முதுகு இடு படிகையும், வலி படர்
மருமமும், அழிபட, நுழைவன வடி கணை,
உருமினும் வலியன, உருள்வன திசை திசை,
கரு மலை நிகர்வன்-கதமலை கனல்வன. 131

இறுவன கொடியவை, எரிவன இடை இடை
துறுவன சுடு கணை, துணிவன மதகரி;
அறுவன, அவை அவை கடவினர் தடி தலை;
வெறுமைகள் கெடுவன, விழி குழி கழுதுகள். 132

மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள
படலொடும், உரும் எறி பரு வரை நிலையன,
உடலொடும் உருள் கரி உதிரமது, உரு கெழு
கடலொடு பொருதது, கரியொடு கரி என. 133

மேலவர் படுதலின், விடும் முறை இல, மிடல்
ஆலமும் அசனியும் அனையன, அடு கரி
மால் உறு களியன, மறுகின, மதம் மழை
போல்வன, தம தம எதிர் எதிர் பொருவன. 134

கால் சில துணிவன் கரம் அறுவன் கதழ்
வால் சில துணிவன் வயிறுகள் வெளி பட,
நால் சில குடர் அன் நகழ்வன சில-வரு
தோல் சில, கணை பல சொரிவன மழை என. 135

முட்டின முட்டு அற, முரண் உறு திசை நிலை
எட்டினும் எட்ட அரு நிலையன எவை? அவன்
விட்டன விட்டன விடு கணை படுதொறும்
பட்டன பட்டன, படர் பணை குவிவன. 136

அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம்
இறுதிய மத கரி இறுதலும், எரி உமிழ்
தறுகணர், தகை அறு நிலையினர், சலம் உறு
கறுவினர், அவன் எதிர் கடவினர், கடல் என. 137

எல்லை இல் மத கரி, இரவினது இனம் நிகர்
செல்வன, முடிவு இல, தெறு தொழில் மறவனை,
வில்லியை, இனிது உற விடு கணை மழையினர்,
'கொல்லுதி' என, எதிர் கடவினர்-கொடியவர். 138

வந்தன மத கரி வளைதலின், மழை பொதி
செந் தனி ஒரு சுடர் என மறை திறலவன்,
இந்திரதனு என, எழு சிலை குனிவுழி,
தந்தியின் நெடு மழை சிதறின, தரையின. 139

மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன, மலையின்
மெய் பெற்றன, கடல் ஒப்பன, வெயில் உக்கன விழியின்,-
மொய் பெற்று உயர் முதுகு இற்றன, முகம் உக்கன, முரண் வெங்
கை அற்றன் மதம் முற்றிய கணிதத்து இயல்,-கத மா. 140

உள் நின்று அலை கடல் நீர் உக, இறுதிக் கடை உறு கால்
எண்ணிந்தலை நிமிர்கின்றன, இகல் வெங் கணை, இரணம்
பண்ணின் படர் தலையில் பட, மடிகின்றன பல ஆம்,
மண்ணின் தலை உருள்கின்றன-மழை ஒத்தன மதமா. 141

பிறை பற்றிய எனும் நெற்றிய, பிழை அற்றன பிறழ,
பறை அற்றம் இல் விசை பெற்றன, பரியக் கிரி, அமரர்க்கு,
இறை, அற்றைய முனிவில் படை எறியப் புடை எழு பொன்
சிறை அற்றன என, இற்றன-சினம் முற்றிய மதமா. 142

கதிர் ஒப்பன கணை பட்டுள, கதம் அற்றில, கதழ் கார்
அதிரத் தனி அதிர்கைக் கரி அளவு அற்றன உளவா,
எதிர்பட்டு அனல் பொழிய, கிரி இடறி, திசை எழு கார்
உதிரத்தொடும் ஒழுகி, கடல் நடு உற்றவும் உளவால். 143

கண்ணின் தலை அயில் வெங் கணை பட நின்றன, காணா,
எண்ணின் தலை நிமிர் வெங் கதம் முதிர்கின்றன, இனமா
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன, மலைபோல்
உள் நின்று அலை நிருதக் கடல் உலறிட்டன உளவால். 144

ஓர் ஆயிரம் அயில் வெங் கணை, ஒரு கால் விடு தொடையின்,
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன, கதுவுற்று,
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன் இனி மேல்
ஆராய்வது என்? அவன் வில் தொழில் அமரேசரும் அறியார்! 145

தேரும், தெறு கரியும், பொரு சின மள்ளரும், வய வெம்
போரின் தலை உகள்கின்றன புரவிக் குலம் எவையும்,
பேரும் திசை பெறுகின்றில-பணையின் பிணை மத வெங்
காரின் தரு குருதிப் பொரு கடல் நின்றன கடவா. 146

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home