Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் -
38. திருமுடி சூட்டு படலம்
இராமன் தம்பியரோடு நந்தியம்
பதியை அடைந்து, சடை நீக்கி, நீராடி கோலம்கொள்ளுதல்
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 1
தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல்
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான். 2
தேவரும் முனிவரும் மலர் மழை பொழிதல்
தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்,
பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே. 3
சேனைகள் முதலியவற்றின் மகிழ்ச்சி
கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முகப் பரும யானை,
காடு உறை அண்ணல் எய்த, கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததேபோல். 4
துருவத் தார்ப் புரவி எல்லாம், மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன, ஆலித்த் மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன் பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிறப் பசலை பூத்த. 5
தாய் மார் முதலியோரை வணங்கி, இராமன் அரண்மனையை அடைதல்
ஆயது ஓர் அளவில், செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் களி நடம் செய்யக் கண்டான். 6
நகர மாந்தரின் மகிழ்ச்சிப் பெருக்கு
'வாங்குதும் துகில்கள்' என்னும் மனம் இலர், கரத்தின் பல்கால்
தாங்கினர் என்ற போதும், மைந்தரும் தையலாரும்,
வீங்கிய உவகை மேனி சிறக்கவும், மேன் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்தும், உடை இலாதாரை ஒத்தார். 7
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற, வெற்றிப்
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்துச் சுற்ற,
வாசம், மென் கலவைச் சாந்து, என்று இனையன, மயக்கம்தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துளோரும். 8
இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ்-இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக் கொழுந்து அனைய நெற்றிப் பெய் வளை மகளிர், மெய்யை
மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற. 9
விண் உறைவோர்தம் தெய்வ வெறியோடும், வேறுளோர்தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்,
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே. 10
இராமன் திருமுடி சூடும் நாள் குறித்து எங்கும் செய்தி அனுப்புதல்
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்-
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி. 11
மூவுலகத்தாரும் அயோத்தியில் வந்து குழுமுதல்
அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து இறுத்தார் என்றால்,
தொடுக்குறு கவியால் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான் முகத்து ஒருவற்கு உண்டோ ? 12
பிரமன் ஏவலால், மயன் முடி சூட்டு மண்டபம் அமைத்தல்
நான்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று ஓதும்
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், வணங்கு நெஞ்சன்,
கோல் முகத்து அளந்து, குற்றம் செற்று, உலகு எல்லாம் கொள்ளும்
மான் முகத்து ஒருவன், நல் நாள் மண்டபம் வயங்கக் கண்டான். 13
அனுமன் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வருதல்
'சூழ் கடல் நான்கின் தோயம், எழு வகை ஆகச் சொன்ன
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று' என்ன, 'ஆம்' என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான், இடர் கெட மருந்து தந்தான். 14
இராமன் நீராடுதல்
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய,
ஐயம் இல் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்ட,
எய்தின இயன்ற பல் வேறு, இந்திரற்கு இயன்ற என்ன, 15
வசிட்டன் இராமனுக்குத் திருமுடி புனைதல்
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி. 16
வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின களிப்ப, மோலி சூடினான்-கடலின் வந்த
தௌ;ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான். 17
மூவுலகத்தாரும் மகிழ்தல்
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும், மேன்மை
ஒத்த மூஉலகத் தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்,
தம் தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது, அத் தாம மோலி. 18
பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப் பெற்று, இடைப் பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க் கை நீட்டி,
நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை ஆர. 19
பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதல்
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ. 20
உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான்-
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல். 21
மிகைப் பாடல்கள்
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி,
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ,
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் தேரின் ஆனான். 1-1
வீடணக் குரிசில், மற்றை வெங்க் கதிர்ச் சிறுவன், வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு செல்ல,
தோடு அணை மவுலிச் செங்கண் வாலிசேய் தூசி செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான். 2-1
அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 2-2
எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம் பொன் தேரர்,
வட்ட வெண்குடையர், வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ் சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார். 2-3
எழு வகை முனிவரோடும், எண் திசைத் திசைகாப்பாளர்
குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு களித்துக் கூடி,
தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில் துன்னி,
வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச் சார்ந்தார். 2-4
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து,
ஊனம் இல் பிடியும் ஒண் தார்ப் புரவியும் பிறவும் ஊர்ந்து,
மீன் இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற,
பூ நிற விமானம் தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள். 2-5
ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக் கண்டான். 3-1
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன் தானே
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்,
தம்பியர் தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும்,
அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான் அம்மா. 3-2
இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஏற்ற
திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர்
உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண் குடையர், பச்சை
மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 6-1
ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை அருளின் நோக்கி,
'தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும், பிறர்க்கும், நம் தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி' என்றான். 10-1
என்றலும், இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் தெய்வப்
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான். 10-2
வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம், முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ் சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட,
மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி நின்றார். 10-3
விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர் அவர்க்கு, 'காதல்
புண்டரீகத்துள் வைகும் புராதன, கன்னல் தோளான்,
கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து, முன் கொடுத்தது' என்றான். 10-4
'பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை
இங்கு இது மலராள் வைகும் மாடம்' என்று இசைத்த போதில்,
'எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ' என்று கூறி,
செங் கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார். 10-5
இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி,
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி, 'தூயோய்!
கருந்தடம் கண்ணினாற்குக் காப்பு நாண் அணியும் நல் நாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ?' என்றலும், அண்ணல் செப்பும்: 10-6
'ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து' என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் தோன்றல். 10-7
'கோமுனியோடு மற்றை மறையவர்க் கொணர்க!' என்னா
ஏவினன்; தேர் வலான் சென்று இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப் புனித மா தவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி, இணை அடி தொழுது நின்றார். 10-8
அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, 'பெரு நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உவந்து, இனிது ஊழிக் காலம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை' என்றான். 10-9
கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து மொய்த்தார்,
குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள் தன்னைக் கொள்ளும்
இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த. 12-1
வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக் குலங்கள் ஆதி
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண,
தேரு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து, ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே. 12-2
அவ் வயின் முனிவனோடும் பரதனும், அரியின் சேயும்,
செவ்வியின் நிருதர்கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று, ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார். 12-3
'நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக!' என்று,
வேளையே பொடியதாக விழிக்கும்நீள் நுதலின் வெண் பூம்
பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் போனான். 12-4
தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி
யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின் ஓசை
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார். 13-1
எரி மணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரி மதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரை மணிக் காளம் ஆர்ப்ப, பல்லியம் துவைப்ப, பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார், சங்கு இனம் முரல மன்னோ. 14-1
மாணிக்கப் பலகை தைத்து, வயிரத் திண் கால்கள் சேர்த்தி,
ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ. 14-2
அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி நாட்டுச்
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர்,
'உய்ந்தனம் அடியம்' என்னும் உவகையின் உவரி நாண
வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள். 14-3
மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச்
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய, விண்ணோர்,
எங்கள் நாயகனை வௌ;வேறு எதிர்ந்து, அபிடேகம் செய்தார். 14-4
மா தவர், மறைவலாளர், மந்திரக் கிழவர், மற்றும்
மூதறிவாளர், உள்ள சான்றவர் முதல் நீராட்ட,
சோதியான் மகனும், மற்றைத் துணைவரும், அனுமன் தானும்,
தீது இலா இலங்கை வேந்தும், பின் அபிடேகம் செய்தார். 14-5
'அம் கண் வான், உலகம், தாய அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் ஒருவன்; இந் நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர்
எங்கண் ஏற்று அன்னோன் வாழும்?' என்றனர், புலவர் எல்லாம். 14-6
மரகதச் சயிலம் செந் தாமரை மலர்க் காடு பூத்து,
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து, செய்ய
இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார். 14-7
'வான் உறு முகுர்த்தம் வந்தது' என்று மா மறைகள் நான்கும்
தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி,
தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ
வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து வாழ்த்த. 15-1
இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும்,
செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும் நாளில்,
கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன், காதல்
வைப்புடை வளாகம் தன்னில், மன்னுயிர் வாழ்த்த, வந்தான். 19-1
மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல்
முறை செயும் அரசர், திங்கள் மும் மழை, வாழி! மெய்ம்மை
இறையவன் இராமன் வாழி! இக் கதை கேட்போர் வாழி!
அறை புகழ்ச் சடையன் வாழி! அரும் புகழ் அனுமன் வாழி! 20-1
|