Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் -
37. மீட்சிப் படலம்
வீடணனுக்கு இராமன் தேறுதல்
கூறி, பின் வீடணனுக்கு முடி சூட்டுமாறு இலக்குவனை ஏவுதல்
'வருந்தல், நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்!' எனா,
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து,
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்: 1
'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.' 2
என்று கூறி, இளவலோடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில்,
நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்
சென்று, தம் தம செய்கை புரிந்தனர். 3
தேவர்கள் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தல்
சூழ் கடல் புனலும், பல் தோயமும்,
நீள் முடித் தொகையும், பிற நீர்மையும்,
பாழி துற்று அரி பற்றிய பீடமும்,
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். 4
வாச நாள் மலரோன் சொல, மான்முகன்
காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட,
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன். 5
இலக்குவன் வீடணனுக்கு முடி சூட்டுதல்
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட,
ஐயன் ஆணையினால், இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ. 6
வீடணன் அரியணையில் வீற்றிருத்தல்
கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே,
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. 7
தேவர் பூமழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரை மலர், வேறு இலா
மூவரோடு, முனிவர், மற்று யாவரும்,
நாவில் ஆசி நறை மலர், தூவினார். 8
முடி புனைந்த வீடணன் இலக்குவனை வணங்கி உபசரித்து, இராமபிரானை அடைந்து,
தொழுதல்
முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை, ஆண்டை அந்
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து,
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினா: 9
'விலங்கள் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ
கலங்கலா நெடுங் காவல் இயற்று' எனா,
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான். 10
வணங்கிய வீடணனை இராமன் தழுவி, அவனுக்கு நீதி கூறல்
குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,
பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்
திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்: 11
'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம்
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது,
இருமையே அரசாளுதி, ஈறு இலாத்
தரும சீல!' என்றான் - மறை தந்துளான். 12
பன்னும் நீதிகள் பல் பல கூறி, 'மற்று
உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்!
மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி,
தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான். 13
40. பிராட்டி திருவடி தொழுத படலம்
சீதைக்குச் செய்தி சொல்லி வர, இராமன் அனுமனை அனுப்புதல்
இப் புறத்து, இன எய்துறு காலையில்,
அப் புறத்ததை உன்னி, அனுமனை,
'துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால்
செப்புறு, இப்படிப் போய்' எனச் செப்பினான். 1
அனுமன் சீதையைத் தொழுது, அவளுக்குச் செய்தி கூறுதல்
வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்;
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என,
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான்: 2
'ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்!
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்!' 3
பாடினான் திரு நாமங்கள்; பல் முறை
கூடு சாரியில் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். 4
'தலை கிடந்தன, தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித் தோள் நிரை
அலை கிடந்தென ஆழி கிடந்தன்
நிலை கிடந்தது, உடல் நிலத்தே' என்றான். 5
'அண்ணல் ஆணையின், வீடணனும் மறக்
கண் இலாதவன் காதல் தொடர்தலால்,
பெண் அலாது, பிழைத்துளதாகும் என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால்' என்றான். 6
செய்தி கேட்டு மகிழ்ந்த சீதையின் நிலை
ஒரு கலைத் தனி ஒண் மதி நாளொடும்
வரு கலைக்குள் வளர்வது மானுறப்
பொரு கலைக் குலம் பூத்தது போன்றனள்-
பருகல் உற்ற அமுது பயந்த நாள். 7
ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட,
தேம்பும் நுண் இடை நோவ, திரள் முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள்-
பாம்பு கான்ற பனி மதிப் பான்மையாள். 8
புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ,
உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ,
சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ-
முந்தி ஓங்கின யாவை-முலைகொலோ? 9
குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மை வேர்
பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி
நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;-
கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ? 10
களிப்பு மிகுதியால் சீதை பேசாதிருக்க, அனுமன், ஒன்றும் பேசாத காரணத்தை
வினவல்
அனையள் ஆகி, அனுமனை நோக்கினாள்,
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள்-நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள். 11
'"யாது இதற்கு ஒன்று இயம்புவல்?" என்பது
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ?' எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்: 12
சீதையின் மறுமொழி
'மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கமுற்று, "ஒன்று இயம்புவது யாது?" என
நோக்கி நோக்கி, அரிது என நொந்துளேன்;
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? 13
'முன்னை, "நீக்குவென் மொய் சிறை" என்ற நீ
பின்னை நீக்கி, உவகையும், பேசினை;
"என்ன பேற்றினை ஈகுவது?" என்பதை
உன்னி நோக்கி, உரை மறந்து ஓவினேன். 14
'உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும்-தன்மையோய்! 15
'ஆதலான், ஒன்று உதவுதல் ஆற்றலேன்;
"யாது செய்வது?" என்று எண்ணி இருந்தனென்;
வேத நல் மணி வேகடம் செய்தன்ன
தூத! என் இனிச் செய் திறம்? சொல்' என்றாள். 16
அனுமன் தான் மேலே செய்யப் போவது குறித்துச் சீதையிடம் கூறி, அவளது அனுமதியை
வேண்டுதல்
'எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்
மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் -
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ?-
புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!' 17
என உரைத்து, 'திரிசடையாள், எம் மோய்!
மனவினில் சுடர் மா முக மாட்சியாள்-
தனை ஒழித்து, இல் அரக்கியர்தங்களை
வினையினில் சுட வேண்டுவென், யான்' என்றான். 18
'உரை அலா உரை உன்னை உரைத்து, உராய்
விரைய ஓடி, "விழுங்குவம்" என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து,
இரை செய்வேன், மறலிக்கு, இனி' என்னுமால். 19
காவல் அரக்கியர் சீதையைச் சரணம் அடைதல்
'குடல் குறைத்து, குருதி குடித்து, இவர்
உடல் முருக்கியிட்டு, உண்குவென்' என்றலும்,
அடல் அரக்கியர், 'அன்னை! நின் பாதமே
விடலம்; மெய்ச் சரண்' என்று விளம்பலும், 20
'அரக்கியர்க்குத் துன்பம் செய்வது முறையன்று' எனச் சீதை அனுமனுக்கு கூறல்
அன்னை, 'அஞ்சன்மின், அஞ்சன்மின்! நீர்' எனா,
மன்னும் மாருதி மா முகம் நோக்கி, 'வேறு
என்ன தீமை இவர் இழைத்தார், அவன்
சொன்ன சொல்லினது அல்லது? -தூய்மையோய்! 21
'யான் இழைத்த வினையினின் இவ் இடர்-
தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அலரே, இவர்!
போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்! 22
'எனக்கு நீ அருள், இவ் வரம்; தீவினை-
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல்!' என்றனள்-மா மதி-
தனக்கு மா மறுத் தந்த முகத்தினாள். 23
இராமன் வீடணனிடம் சீதையை அழைத்து வருமாறு கூறி அனுப்புதல்
என்ற போதின், இறைஞ்சினன், 'எம்பிரான்
தன் துணைப் பெருந் தேவி தயா' எனா
நின்ற காலை, நெடியவன், 'வீடண!
சென்று தா, நம் தேவியை, சீரொடும்.' 24
வீடணன் சீதையைத் தொழுது, கோலம் புனைந்து இராமனிடத்திற்கு எழுந்தருளுமாறு
வேண்டுதல்
என்னும் காலை, இருளும் வெயிலும் கால்
மின்னும் மோலி இயற்கைய வீடணன்,
'உன்னும் காலைக் கொணர்வென்' என்று ஓத, அப்
பொன்னின் கால் தளிர் சூடினன், போந்துளான். 25
'வேண்டிற்று முடிந்தது அன்றே; வேதியர் தேவன் நின்னைக்
காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண வந்தார்;
"பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை, வருத்தம் போக்கி,
ஈண்டக் கொண்டு அணைதி" என்றான்; எழுந்தருள், இறைவி!' என்றான். 26
கோலம் புனையாது, இங்கு இருந்த தன்மையில் வருதலே தக்கது என சீதை கூறல்
'யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், காண்டல், மாட்சி;
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று - வீர!' 27
இராமனது குறிப்பு கோலம் புனைந்து வருதலே என்று வீடணன் உரைக்க, சீதை
ஒருப்படுதல்
என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன், 'நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் குறிப்பு இது' என்றான்;
'நன்று' என நங்கை நேர்ந்தாள், நாயகக் கோலம் கொள்ள்
சென்றனர், வான நாட்டுத் திலோத்தமை முதலோர், சேர. 28
தேவமாதர்கள் சீதைக்குக் கோலம் புனைதல்
மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி, வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும், மஞ்சனத்துக்கு ஏற்ற
நான நெய் ஊட்டப் பட்ட நவை இல கலவை தாங்கி,
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார். 29
காணியைப் பெண்மைக்கு எல்லாம், கற்பினுக்கு அணியை, பொற்பின்
ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை, அறத்தின் தாயை,
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன,
வேணியை, அரம்பை, மெல்ல, விரல் முறை சுகிர்ந்து விட்டாள். 30
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம் தீட்டி, மண் சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல், மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாடி, ஆட்டினர், உம்பர் மாதர். 31
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டதென்ன
மரு விளை கலவை ஊட்டி, குங்குமம் முலையின் ஆட்டி,
கரு விளை மலரின் காட்சிக் காசு அறு தூசு, காமன்
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவச் செய்தார். 32
சந்திரன் தேவிமாரின் தகை உறு தரளப் பைம் பூண்,
இந்திரன் தேவிக்கு ஏற்ப, இயைவன பூட்டி, யாணர்ச்
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தேம் பசும் பாகு தீற்றி,
மந்திரத்து அயினி நீரால் வலஞ்செய்து, காப்பும் இட்டார். 33
சீதையை இராமனிடத்திற்கு வீடணன் அழைத்து வருதல்
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட,
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளின் சென்றான். 34
இப் புறத்து இமையவர், முனிவர் ஏழையர்,
துப்பு உறச் சிவந்த வாய் விஞ்சைத் தோகையர்,
முப் புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர்,
ஒப்புறக் குவிந்தனர், ஓகை கூறுவார். 35
அருங் குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்,
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்,
நெருங்கினர்; நெருங்குழி, நிருதர் ஓச்சலால்,
கருங் கடல் முழக்கு எனப் பிறந்த, கம்பலை. 36
இராமன், வீடணனைச் சினந்து நோக்கி, கடிந்து கூறுதல்
அவ் வழி, இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்வி வாள் முகம்கொடு செயிர்த்து நோக்குறா,
'இவ் ஒலி யாவது?' என்று இயம்ப, இற்று எனா,
கவ்வை இல் முனிவரர் கழறினார் அரோ. 37
முனிவரர் வாசகம் கேட்புறாதமுன்,
நனி இதழ் துடித்திட நகைத்து, வீடணன்-
தனை எழ நோக்கி, 'நீ, தகாத செய்தியோ,
புனித நூல் கற்று உணர் புந்தியோய்?' என்றான். 38
'கடுந் திறல் அமர்க் களம் காணும் ஆசையால்,
நெடுந் திசைத் தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அடைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்?-கருது நூல் வலாய்! 39
'பரசுடைக் கடவுள், நேமிப் பண்ணவன், பதுமத்து அண்ணல்,
அரசுடைத் தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ ?'
கரை செயற்கு அரிய தேவர், ஏனையோர், கலந்து காண்பான்
விரசுறின், விலக்குவாரோ? வேறு உளார்க்கு என்கொல்?-வீர! 40
இராமன் சொல்லைக் கேட்டு, வீடணன் அஞ்சி நடுங்கி நிற்றல்
'ஆதலான், அரக்கர் கோவே! அடுப்பது அன்று உனக்கும், இன்னே
சாதுகை மாந்தர் தம்மைத் தடுப்பது' என்று அருளி, செங் கண்
வேதநாயகன் தான் நிற்ப, வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன், குணங்கள்தூயோன். 41
சீதை இராமன் கோலத்தைக் காண்பாளாய், அனுமனது உதவியைப் பாராட்டி உரைத்தல்
அருந்ததி அனைய நங்கை அமர்க் களம் அணுகி, ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசிப் பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி,
கருந் தடங் கண்ணும் நெஞ்சும் களித்திட, இனைய சொன்னாள்: 42
'சீலமும் காட்டி, என் கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்
காலமும் காட்டும்கொல், என் தன் கற்பு?' என்றான். 43
சீதை இராமனது திருமேனியைக் காணுதல்
'எச்சில், என் உடல்; உயிர் ஏகிற்றே; இனி
நச்சு இலை' என்பது ஓர் நவை இலாள் எதிர்,
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்
கைச் சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள். 44
சீதை இராமனைத் தொழுது, ஏக்கம் நீங்குதல்
மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்,
போன பேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
ஆனனம் காட்டுற, அவனி எய்தினாள். 45
பிறப்பினும் துணைவனை, பிறவிப் பேர் இடர்
துறப்பினும் துணைவனை, தொழுது, 'நான் இனி
மறப்பினும் நன்று; இனி மாறு வேறு வீழ்ந்து
இறப்பினும் நன்று' என ஏக்கம் நீங்கினாள். 46
இராமன் சீதையை அமைய நோக்குதல்
கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். 47
இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல்
கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு பாய்தர,
வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை,
பணம் கிளர் அரவு என எழுந்து, பார்ப்புறா, 48
'ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? "எனை விரும்பும்" என்பதோ? 49
'உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற,
பின்னை மீட்டு, உறு பகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான்பொருட்டு, இலங்கை எய்தினேன். 50
'மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை-வெறுமை நீங்கினாய்! 51
'கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த் நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ. 52
'பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். 53
'அடைப்பர், ஐம் புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்
சடைப் பரம் புனைந்து, ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர்; வந்து இடை ஒரு பழி வந்தால், அது
துடைப்பர், தம் உயிரொடும்-குலத்தின் தோகைமார். 54
'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால்' என்றனன்-புலவர் புந்தியான். 55
இராமனது உரை கேட்டு, முனிவர் முதலியோர் அரற்றுதல்
முனைவரும், அமரரும், மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும், நிருதர் என்று உளார்
எனைவரும், வானரத்து எவரும், வேறு உளார்
அனைவரும், வாய் திறந்து, அரற்றினார் அரோ. 56
இராமனின் கடுமொழி கேட்ட சீதையின் துயர நிலை
கண் இணை உதிரமும், புனலும் கான்று உக,
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்,
புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால்
உள் நினைப்பு ஓவி நின்று, உயிர்ப்பு வீங்கினாள். 57
பருந்து அடர் சுரத்திடை, பருகு நீர் நசை
வருந்து அருந் துயரினால் மாளலுற்ற மான்,
இருந் தடம் கண்டு, அதின் எய்துறாவகைப்
பெருந் தடை உற்றெனப் பேதுற்றாள் அரோ. 58
உற்று நின்று, உலகினை நோக்கி, ஓடு அரி
முற்றுறு நெடுங் கண் நீர் ஆலி மொய்த்து உக,
'இற்றது போலும், யான் இருந்து பெற்ற பேறு;
உற்றதால் இன்று அவம்!' என்று என்று ஓதுவாள்; 59
'மாருதி வந்து, எனைக் கண்டு, "வள்ளல் நீ
சாருதி ஈண்டு" எனச் சமையச் சொல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ,
சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லனோ? 60
'எத் தவம், எந் நலம், என்ன கற்பு, நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய், அறம் பிழைத்ததாம் அன்றே,
உத்தம! நீ மனத்து உணர்ந்திலாமையால். 61
'பார்க்கு எலாம் பத்தினி; பதுமத்தானுக்கும்
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன், "அன்று" என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ? 62
'பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும்,
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மன நிலை உணர வல்லரோ? 63
'ஆதலின், புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே,
வேத! நின் பணி; அது விதியும்' என்றனள். 64
சீதை இலக்குவனை தீ அமைக்குமாறு வேண்டல்
இளையவன் தனை அழைத்து, 'இடுதி, தீ' என,
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான். 65
இலக்குவன் தீ அமைக்க, சீதை அதன் பக்கத்தில் செல்லுதல்
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்,
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்,
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள், பதுமப் போதினாள். 66
தீயிடை, அருகுறச் சென்று, தேவர்க்கும்
தாய் தனிக் குறுகலும், தரிக்கிலாமையால்,
வாய் திறந்து அரற்றின-மறைகள் நான்கொடும்,
ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும். 67
வலம் வரும் அளவையில் மறுகி, வான் முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன்
அலம் வரல் உற்றன் அலறி, 'ஐய! இச்
சலம் இது தக்கிலது' என்னச் சாற்றின. 68
இந்திரன் தேவியர் முதல ஏழையர்,
அந்தர வானின்நின்று அரற்றுகின்றவர்,
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார். 69
நடுங்கினர், நான்முகன் முதல நாயகர்;
படம் குறைந்தது, படி சுமந்த பாம்பு வாய்
விடம் பரந்துளது என, வெதும்பிற்றால் உலகு;
இடம் திரிந்தன சுடர்; கடல்கள் ஏங்கின. 70
சீதை தீயில் குதித்தல்
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,
'மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,
சினத்தினால் சுடுதியால், தீச் செல்வா!' என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். 71
சீதையின் கற்புத் தீயினால், அக்கினி வெந்து தீய்தல்
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாவின் பஞ்சு எனத்
தீந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால். 72
அக்கினி சீதையைக் கையில் ஏந்தி, இராமபிரானைக் குறித்துக் கதறிக் கொண்டு
எழுதலும், சீதை எரியால் வாட்டமுறாது விளங்குதலும்
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து
எழுந்தனன்-அங்கி, வெந்து எரியும் மேனியான்,
தொழும் கரத் துணையினன், சுருதி ஞானத்தின்
கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான். 73
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடிய இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?
பாடிய வண்டொடும், பனித்த தேனொடும்,
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால். 74
திரிந்தன உலகமும் செவ்வன நின்றன்
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன்
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர், நாணமும் பொறையும் நீங்கினார். 75
அக்கினிதேவனது முறையீடும், இராமன் வினாவும்
'கனிந்து உயர் கற்பு எனும் கடவுள்-தீயினால்,
நினைந்திலை, என் வலி நீக்கினாய்' என,
அநிந்தனை அங்கி, 'நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம்' என முறையிட்டான் அரோ. 76
இன்னது ஓர் காலையில், இராமன், 'யாரை நீ?
என்னை நீ இயம்பியது, எரியுள் தோன்றி? இப்
புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்;
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால்' என்றான். 77
அக்கினிதேவனின் மறுமொழி
'அங்கி யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
பொங்கு வெந் தீச் சுடப் பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; எனது இயற்கை நோக்கியும்,
சங்கியாநிற்றியோ, எவர்க்கும் சான்றுளாய்? 78
'வேட்பதும், மங்கையர் விலங்கினார் எனின்
கேட்பதும், பல் பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும், என்வயின் என்னும் மெய்ப்பொருள்-
வாள்-பெருந் தோளினாய்!-மறைகள் சொல்லுமால். 79
'ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇக்
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும், மீட்டியோ?-
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்! 80
'தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும்,
மூவகை உலகமும், கண்கள் மோதி நின்று,
"ஆ!" எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டியோ? 81
'பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வையுமேல், மலர்மிசை அயனும் மாயுமே.' 82
சீதையை இராமன் ஏற்றுக்கொள்ளல்
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று,
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனிய அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான்: 83
'அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, "யாதும் ஓர்
பழிப்பு இலள்" என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள்' என்றனன்-கருணை உள்ளத்தான். 84
தேவர்கள் வேண்டியபடி, பிரமன் இராமனது உண்மை நிலையை உணர்த்துதல்
'உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று, காலம் வந்துளதால்,
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று, அவை உணரா
இணர்த் துழாய்த் தொங்கல் இராமற்கு' என்று இமையவர் இசைப்ப,
தணப்பு இல் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைந்தான்: 85
'மன்னர் தொல் குலத்து அவதரித்தனை; ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ; இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய்த் துணிவு
நின் அலாது இல்லை; நின்னின் வேறு உளது இலை-நெடியோய்! 86
'பகுதி என்று உளது, யாதினும் பழையது, பயந்த
விகுதியால் வந்த விளைவு, மற்று அதற்குமேல் நின்ற
புகுதி, யாவர்க்கும் அரிய அப் புருடனும், நீ; இம்
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம். 87
'முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமைத்
தன் பெருந் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள்,
"மன் பெரும் பரமார்த்தம்" என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால், மற்று இங்கு யாரையும் அறையா. 88
'எனக்கும், எண் வகை ஒருவற்கும், இமையவர்க்கு இறைவன்-
தனக்கும், பல் பெரு முனிவர்க்கும், உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம் என்பதை அறிந்தார்
வினைத் துவக்குடை வீட்ட அருந் தளை நின்று மீள்வார். 89
'என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின், சலிப்ப் அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த. 90
'"ஐ-அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து, அவற்றின்
மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது" என்னும் ஈது அரு மறை புகலும்;
வையம் சான்று; இனி, சான்றுக்குச் சான்று இலை, வழக்கால். 91
'அளவையால் அளந்து, "ஆம்", "அன்று", என்று அறிவுறும் அமைதி
உளவை யாவையும் உனக்கு இல்லை; உபநிடத்து உனது
களவை ஆய்ந்து உறத் தெளிந்திலது ஆயினும், கண்ணால்,
துளவை ஆய் முடியாய்! "உளை நீ" எனத் துணியும். 92
'அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல்,
கரணம் அவ் அறிவைக் கடந்து அகல்வு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப் அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான். 93
'தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும்,
ஆற்றல் சால் முதல் பகுதி; மற்று அதனுள் ஆம், பண்பால்
காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால்,
வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய். 94
'மின்னைக் காட்டுதல்போல் வந்து விளியும் இவ் உலகம்
தன்னைக் காட்டவும், தருமத்தை நாட்டவும், தனியே
என்னைக் காட்டுதி; இறுதியும் காட்டுதி; எனக்கும்
உன்னைக் காட்டலை; ஒளிக்கின்றும் இலை, மறை உரையால். 95
'என் உருக் கொடு இல் உலகினை ஈனுதி; இடையே
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி; உமைகோன்-
தன் உருக்கொடு துடைத்தி; மற்று இது தனி அருக்கன்
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது-முதலாய்! 96
'ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து, இரு வினை உகுப்போர்;
"ஓங்காரப் பொருள் ஆம்", "அன்று" என்று, ஊழி சென்றாலும்,
ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர். 97
'இனையது ஆகலின், எம்மை மூன்று உலகையும் ஈன்று, இம்
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனையல் 'என்று அது முடித்தனன்-முந்து நீர் முளைத்த
சிலையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன். 98
சிவபெருமான் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்
என்னும் மாத்திரத்து, ஏறு அமர் கடவுளும் இசைத்தான்;
'உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால், உரவோய்!
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ; மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின் மார்பின் வந்து அமைந்தாள். 99
'துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இறைவ! நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது' என்றனன்-மழுவலான் வழுத்தி. 100
தயரதனுக்குச் சிவபெருமான் பணித்தல்
பின்னும் நோக்கினான், பெருந் தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவற் சென்று கண்டு, 'நின் மைந்தனைத் தெருட்டி,
முன்னை வன் துயர் நீக்குதி, மொய்ம்பினோய்!' என்றான். 101
ஐயரதன் பூதலத்து வருதலும், இராமன் அவனை வணங்குதலும்
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்,
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும், பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள் மிசை விழுந்தான். 102
தயரதன் இராமனை எடுத்துத் தழுவி, மகிழ்வுடன் பேசுதல்
வீழ்ந்த மைந்தனை எடுத்து, தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, கண் அருவி நீராட்டி,
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற, மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்று-இவை புகன்றான்: 103
'அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்று காறும் என் இதயத்தினிடை நின்றது, என்னைக்
கொன்று நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன் குலப் பூண்
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க. 104
'மைந்தரைப் பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்! என் துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன். 105
'பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்,
கண்டு கண்டு எனைக் கைத்தலம் குவிக்கின்ற காட்சி;
புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை, அழக!' 106
தயரதன் வணங்கிய சீதைக்குத் தேறுதல் மொழி கூறுல்
என்று, மைந்தனை எடுத்து எடுத்து, இறுகுறத் தழுவி,
குன்று போன்று உள தோளினான், சீதையைக் குறுக,
தன் துணைக் கழல் வணங்கலும், கருணையால் தழுவி
நின்று, மற்று இவை நிகழ்த்தினான், நிகழ்த்த அரும் புகழோன்: 107
'"நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட,
அங்கி புக்கிடு" என்று உணர்த்திய அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் தேறுவது உண்டு; அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். 108
'"பொன்னைத் தீயிடைப் பெய்வது அப் பொன்னுடைத் தூய்மை-
தன்னைக் காட்டுதற்கு" என்பது மனக் கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், "கற்பினுக்கு அரசி" என்று, "உலகில்,
பின்னைக் காட்டுவது அரியது" என்று எண்ணி, இப் பெரியோன். 109
'பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங் கலம் ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ வான் நின்றும் வந்தாய்;
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால்'. 110
தயரதன் இலக்குவனைத் தழுவிப் பாராட்டுதல்
என்னச் சொல்லி, அவ் ஏந்திழை திரு மனத்து யாதும்
உன்னச் செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்;
பின்னைச் செம்மல் அவ் இளவலை, உள் அன்பு பிணிப்ப,
தனனைத் தான் எனத் தழுவினன், கண்கள் நீர் ததும்ப. 111
கண்ணின் நீர்ப் பெருந் தாரை மற்று அவன் சடைக் கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர, தழீஇ நின்று, 'மைந்த!
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை, தமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய். 112
'புரந்தான் பெரும் பகைஞனைப் போர் வென்ற உன் தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது; நீ இந்த உலகின்
அரந்தை வெம் பகை துடைத்து, அறம் நிறுத்தினை-ஐய!' 113
தயரதன் இராமனிடம் வரம் கேட்கக் கூற, இராமன் வரம் வேண்டுதல்
என்று, பின்னரும், இராமனை, 'யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி, உயர் குணத்தோய்!' என, 'உனை யான்
சென்று வானிடைக் கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்;
இன்று காணப் பெற்றேன்; இனிப் பெறுவது என்?' என்றான். 114
'ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை' என, அழகன்,
'தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக!' எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர் எலாம், வழுத்தி. 115
தயரதன் மறுமொழி
'வரத கேள்!' எனத் தயரதன் உரை செய்வான்; 'மறு இல்
பரதன் அன்னது பெறுக! தான் முடியினைப் பறித்து, இவ்
விரத வேடம் மற்று உதவிய பாவிமேல் விளிவு
சரதம் நீங்கலதாம்' என்றான், தழீஇய கை தளர. 116
கைகேயின் மேல் தணியாத தயரதன் சினமும் இராமன் உரையால் நீங்குதல்
'ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை
வான் பிழைக்கு இது முதல் எனாது, ஆள்வுற மதித்து,
யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம் பிராட்டி-
தான் பிழைத்தது உண்டோ ?' என்றான்; அவன் சலம் தவிர்ந்தான். 117
எவ் வரங்களும் கடந்தவன் அப் பொருள் இசைப்ப,
'தெவ் வரம்பு அறு கானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு' என்றார், தேவரும் இரங்கி. 118
இராமன் விரும்பிய இரு வரத்தையும் அளித்து, தயரதன் விண் ஏகுதல்
வரம் இரண்டு அளித்து, அழகனை, இளவலை, மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை நிறுத்தி, விண்ணிடையே
உரவு மானம் மீது ஏகினன்-உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து, உறு புகழ் படைத்தோன். 119
தேவர்கள் 'வேண்டும் வரம் கேள்' என, இராமன் வரம் வேண்டுதல்
கோட்டு வார் சிலைக் குரிசிலை அமரர் தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, 'வீர! நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால்' என, 'அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக!' என விளம்பி, 120
பின்னும் ஓர் வரம், 'வானரப் பெருங் கடல் பெயர்ந்து,
மன்னு பல் வனம், மால் வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என இயம்பிடுக' என்றான். 121
தேவர்கள் வரம் அருள, மாண்ட குரங்குகள் உயிர் பெற்றெழுந்து இராமனை வணங்குதல்
வரம் தரும் முதல் மழுவலான், முனிவரர், வானோர்,
புரந்தராதி, மற்று ஏனையோர், தனித் தனிப் புகழ்ந்து ஆங்கு,
'அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக! நினது அருளால்
குரங்குஇனம் பெறுக!' என்றனர், உள்ளமும் குளிர்ப்பார். 122
முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண் களிப்புற, செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின, மகிழ்ந்து. 123
கும்பகன்னனோடு இந்திரசித்து, வெங் குலப் போர்
வெம்பு வெஞ் சினத்து இராவணன், முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார்; 124
பதினான்கு ஆண்டுகள் முடிந்ததை தேவர்கள் இராமனுக்கு உணர்த்தி, நீங்குதல்
'இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர் தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு. 125
'"வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின்" எனும் படி மடித்த
கஞ்ச நாள் மலர்க் கையினாய்! அன்னை சொல் கடவா,
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த்
பஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த. 126
'இன்று சென்று, நீ பரதனை எய்திலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றி வீர! போதியால்' என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். 127
வீடணன் புட்பக விமானம் கொணர்தல்
'ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் அயின்,
மாண்டதாம் இனி என் குலம், பரதனே மாயின்;
ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ ?' என, 'இன்றே
தூண்டு மானம் உண்டு' என்று, அடல் வீடணன் தொழுதான். 1
'இயக்கர் வேந்தனுக்கு அரு மறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனம் எனத் தூயது, சுரர்கள்,
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு' என்றே
மயக்கு இலான் சொல, 'கொணருதி வல்லையின்' என்றான். 2
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் மழை எனக் கலிப்ப,
கொண்டு அணைந்தனன் நொடியினின், அரக்கர் தம் கோமான், 3
இராமன் புட்பக விமானத்தில் ஏற, தேவர்கள் மலர்மாரி பொழிந்து வாழ்த்துதல்
'அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, 'இனி நம்
வினையம் முற்றியது' என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. 4
சீதையும் இலக்குவனும் விமானத்தில் ஏறுதல்
வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, 'ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி' என்று, ஐயன்மாட்டு அணைந்தாள்;
மணம் கொள் வேல் இளங் கோளரி மானம் மீப் படர்ந்தான். 5
விமானத்தில் நின்ற இராமன் வீடணன் முதலிய துணைவர்க்கு விடை தரல்
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனும் தகைத்தாய்,
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குனித்தான்: 6
வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
'தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது; உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால். 7
'நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள், இனி நீ
போதியால்' எனப் புகன்றனன்-நான் மறை புகன்றான். 8
'சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம் தொகு
அக்கிரீவனைத் தடிந்து, வெம் படையினால் அசைந்த
மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு, ஊர்
புக்கு, வாழ்க!' எனப் புகன்றனன்-ஈறு இலாப் புகழோன். 9
வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று அம் மொழி புகன்றான். 10
ஐயன் அம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாள் இணை முடி உறச் சேர்த்தி,
'உய்கிலேம், நினை நீங்கின்' என்று இனையன உரைத்தார். 11
அயோத்தியில் ஐயன் திருமுடிசூடுதலைக் காண விரும்பி உரைத்தல்
'பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம் பொன்
ஆர மா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள்' என்றனர்-உள் அன்பு பிணிப்பார். 12
இராமன் உடன்பட்டுக் கூற, யாவரும் மகிழ்தல்
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும், நோக்கி, 'நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்திருந்தது அப் பரிசு; நும் முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது' என்று உரைத்தனன்-பெரியோன். 13
ஐயன் வாசகம் கேட்டலும், அரி குலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும், முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச் சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 14
யாவரும் புட்பகத்தின்மேல் ஏறுதல்
அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, 'வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம்' என்று, இராகவன் இசைத்தான். 15
சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பகமிசை ஒரு சூழல். 16
பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும், வெற்றிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே! 17
புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி
எழுபது வெள்ளத்தாரும், இரவி கான்முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும், சூழ
தழுவு சீர் இளைய கோவும், சனகன் மா மயிலும், போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர். 18
அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ. 19
இராமன் சீதைக்கு வழியிலுள்ள காட்சிகளைக் காட்டிச் செல்லுதல்
குட திசை மறைந்து, பின்னர்க் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப, மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி, தாவி வான் படரும் வேலை,
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான்: 20
சேதுவைக் காட்டி, அதன் தூய்மையைப் புகழ்தல்
'இந்திரற்கு அஞ்சி, மேல் நாள், இருங் கடல் புக்கு, நீங்கால்
சுந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி, இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது' என்றான். 21
'கங்கையோடு, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி,
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகர்
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே. 22
'நெற்றியின் அழலும் செங் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும், "சேது ஆகப்
பெற்றிலம்" என்று கொண்டே, பெருந்தவம் புரிகின்றாளால்;
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது?-மலர்க்கண் வந்தாய்!' 23
வருணன் சரணம் அடைந்த இடத்தைக் காட்டுதல்
தெவ் அடும் சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்,
வௌ; விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ் வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்றுழி, 'வருணன் நோனாது
இவ் இடை வந்து கண்டாய், "சரண்" என இயம்பிற்று' என்றான். 24
பொதிய மலை முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்
'இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம்; முன் தோன்று
அது வளர் மணிமால் ஓங்கல்; உப் புறத்து, உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு' என்று அருள் தர, 'அனுமன் தோன்றிற்று
எது?' என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான்: 25
அனுமனைச் சந்தித்த இடம், கிட்கிந்தை ஆகியவற்றைக் காட்டுதல்
'வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகர நீர் சூழ்
வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்-
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது' என்றான். 26
வானர மகளிரையும் உடன் அழைத்துச் செல்ல, சீதை விரும்பி மொழிதல்
'கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால்: எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ, ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து' என்றாள். 27
இராமன் ஆணைப்படி சுக்கிரீவன் அனுமனை அனுப்பி, மகளிர்களை அழைத்து வரச்
செய்தல்
அம் மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர அனுமன் தன்னை நோக்கி, 'நீ விரைவின், வீர!
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி' என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன், சென்று மன்னோ. 28
வானர மகளிர் மங்கலப் பொருள்களுடன் வந்து முறைப்படி வணங்குதல்
வரிசையின் வழாமை நோக்கி, மாருதி மாதர் வெள்ளம்
கரைசெயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரைசெறி குழலினார் தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது, நின்றார். 29
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து, பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ,
நங்கையும் உவந்து, 'வேறு ஓர் நவை இலை, இனி மற்று' என்றாள்;
பொங்கிய விமானம் தானும், மனம் என, எழுந்து போன. 30
கோதாவரி, தண்டகாரணியம், முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத் தோகையை நோக்கி, 'முன் தோன்று சூழல்
கோதாவரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை,
பேதாய்! பிரிவுத் துயர் பீழை பிணித்தது' என்றான். 31
'சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள்: இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர், தண்டகம்; அதுதான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம்;
பரத்துவாசவன் உறைவிடம் இது' எனப் பகர்ந்தான். 32
மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை,
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
'என்னை ஆளுடை நாயகன் எய்தினன்' என்னா,
துன்னு மா தவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான். 33
பரத்துவாசன் ஆச்சிரமத்தில் இறங்குதல்
ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப் பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். 34
எண் பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்,
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். 35
இராமன் முதலியோர் முனிவனைத் தொழ, முனிவனும் இராமனை உபசரித்தல்
உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தெனப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மா மறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். 36
அடியின் வீழ்தலும் எடுத்து, நல் ஆசியோடு அணைத்து,
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன். 37
கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே,
அருகு சார்தர, அருந் தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். 38
வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன் மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே. 39
பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்த பின், சூரியன் மருமான்-
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஒர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன்: 40
'முனிவர் வானவர் மூவுலகத்துளோர் யாரும்
துனி உழந்திடத் துயர் தரு கொடு மனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்? 41
'விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவ அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய்-ஐய!' 42
இராமன் அனுமனைப் பரதனிடம் அனுப்பல்
'இன்று நாம் பதி போகலம்; மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்' என்று ஏயினன், நெடியோன்;
'நன்று' எனா, அவன், மோதிரம் கைக் கொடு நடந்தான். 43
தந்தை வேகமும், தனது நாயகன் தனிச் சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம், கூறி, மேல் வான் வழிப் போனான். 44
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசைக் கருமச் செயல் செப்பினாம்,
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்: 45
நந்தியம் பதியில் பரதன் இருந்த நிலை
நந்தியம்பதியின் தலை, நாள்தொறும்
சந்தி இன்றி நிரந்தரம், தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா,
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. 46
துன்பு உருக்கவும், சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்,
முன்பு உருக் கொண்டு ஒரு வழி முற்றுறா
அன்பு உருக் கொண்டது ஆம் எனல் ஆகுவான்; 47
நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும், அக்
கனைந்த மூலமும் காயும் கனியும், அவ்
வனைந்த அல்ல அருந்தல் இல் வாழ்க்கையான்; 48
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று, ஏக்குற்று, 'இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும்' என்று, உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்; 49
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திரு முடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி,
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான். 50
இராமன் வரவேண்டிய நாள் குறித்து சோதிடரை அழைத்துப் பரதன் வினவுதல்
அனையன் ஆய பரதன், அலங்கலின்
புனையும், தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை, நினைத்தனனாம் அரோ,
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள். 51
'யாண்டு வந்து இங்கு இறுக்கும்?' என்று எண்ணினான்,
'மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த் தருக' என்ன, வந்து எய்தினார்,
'ஆண் தகைக்கு இன்று அவதி' என்றார் அரோ. 52
இராமன் வாராமையால் பரதன் அவலமுற்றுப் பலவாறு சிந்தித்தல்
என்ற போதத்து, இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை, செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்,
கொன்ற போதத்த உயிர்ப்புக் குறைந்துளான். 53
மீட்டு எழுந்து, விரிந்த செந் தாமரைக்
காட்டை வென்று எழு கண் கலுழிப் புனல்
ஓட்ட, உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும், அவலத்து அழிந்தான் அரோ. 54
'எனக்கு இயம்பிய நாளும், என் இன்னலும்,
தனைப் பயந்தவள் துன்பமும், தாங்கி, அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும் பகை உண்டு' என விம்மினான். 55
'மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்,
பூவகத்தில், விசும்பில், புறத்தினில்,
ஏவர் கிற்பர் எதிர் நிற்க, என்னுடைச்
சேவகற்கு?' என ஐயமும் தேறினான். 56
'என்னை, "இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின், அவன் அது கொள்க" என்று
உன்னினான்கொல், உறுவது நோக்கினான்?
இன்னதே நலன்' என்று இருந்தான் அரோ. 57
உயிர் துறக்கக் கருதிய பரதன், தூதரை அனுப்பி, சத்துருக்கனை அழைத்தல்
'அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக்
வனத்து இருக்க் இவ் வையம் புகுதுக்
நினைத்து இருந்து நெடுந் துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன். 58
என்னப் பன்னி, 'இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர்' என்னலும், தூதர் போய்,
'உன்னைக் கூயினன், உம்முன்' எனா முனம்,
முன்னர்ச் சென்றனன், மூவர்க்கும் பின் உளான். 59
தொழுது நின்ற தம்பியிடம் பரதன் வரம் வேண்டல்
தொழுது நின்ற தன் தம்பியை, தோய் கணீர்
எழுது மார்பத்து இறுகத் தழுவினான்,
அழுது, 'வேண்டுவது உண்டு, ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று' என்றான். 60
'"என்னது ஆகும்கொல், அவ் வரம்?" என்றியேல்,
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது' என்றான். 61
சத்துருக்கன் வருந்தி உரைத்தல்
கேட்ட தோன்றல், கிளர் தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி, துணுக்குறா,
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான். 62
விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, 'நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்!' என்று அரற்றினான்-
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். 63
'கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; "போனவன் தான் வரும் அவதி போயிற்று" என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா! 64
'"மன்னின் பின், வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல் நிற்கும்" என்று அஞ்சி, புறத்து இருந்தும், அருந் தவமே தொடங்கினாயே!
"என்னின் பின் இவன் உளனாம்" என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்,
உன்னின் பின் இருந்ததுவும், ஒரு குடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும்'
என்றான். 65
சத்துருக்கனுக்குப் பரதன் சமாதானம் கூறி, எரி அமைக்குமாறு பணித்தல்
முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச்
செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, 'அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன்பின், இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு; எரி போய் அமைக்க'
என்றான். 66
செய்தி அறிந்து கோசலை விரைந்து ஓடி வருதல்
அப்பொழுதின், அவ் உரை சென்று, அயோத்தியினின் இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து, அலமந்து ஏங்கி,
'இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து ஒழிந்தால், மகனே!' என்னா,
வெப்பு எழுதினாலனைய மெலிவுடையாள் கடிது ஓடி, விலக்க வந்தாள். 67
மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர், மற்றும் சுற்ற,
சுந்தரியர் எனப் பலரும் கை தலையில் பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை வந்து அடைந்தாள் அன்றே. 68
கோசலை பரதனைத் தீயில் விழாதபடி பற்றிக் கொண்டு, தடுத்துக் கூறுதல்
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஓசிய, மேனி தள்ள,
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான், அவள் புகுந்து,
பற்றிக்கொண்டாள்.69
'மன் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்,
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும், எண்ணில், அப் பெற்றியால்;
என் இழைத்தனை, என் மகனே?' என்றாள். 70
'நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி
பாயும்; மன்னரும் சேனையும் பாய்வரால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் வீழும்; உலகும் திரியுமால். 71
'தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம், கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை, ஊழி திரியினும், பேருமோ? 72
'எண் இல் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? 73
'இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய்' என்றாள். 74
'ஒருவன் மாண்டனன் என்று கொண்டு, ஊழி வாழ்
பெரு நிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ?-கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! 75
'"இறக்கையும், சிலர் ஏகலும், மோகத்தால்
பிறக்கையும், கடன்" என்று, பின் பாசத்தை
மறக்கைகாண், மகனே! வலி ஆவது; என்,
துறக்கைதானும்?' என்றாள்-மனம் தூய்மையாள். 76
கோசலையின் உரையைப் பரதன் மறுத்து உரைத்தல்
'"மைந்தன் என்னை மறுத்து உரைத்தான்" எனல்;
எந்தை மெய்ம்மையும், இக் குலச் செய்கையும்,
நைந்து போக, உயிர் நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பெனால். 77
'யானும், மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்,
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ? 78
'தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன், இது காட்டுவென், மாண்டு' என்றான். 79
அனுமன் தோன்றுதல்
என்று தீயினை எய்தி, இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு,
குன்று போல் நெடு மாருதி கூடினான். 80
இராமனது வருகையை உரைத்து, அனுமன் எரியை அவித்தல்
'ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்?' என்று உரைத்து, உள் புகா,
கையினால் எரியைக் கரி ஆக்கினான். 81
ஆக்கி, மற்று அவன் ஆய் மலர்த் தாள்களைத்
தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கி, கை
வாக்கின் கூடப் புதைத்து, 'ஒரு மாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும்' எனச் சொல்லினான். 82
'இன்னம் நாழிகை எண்-ஐந்து உள, ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லைஎனின், அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து, இவ் எரியில் முடிவெனால். 83
'ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்,
நின்று தாழ்த்தருள், நேமிச் சுடர் நெடுங்
குன்று தாழ்வளவும்; இது குன்றுமேல்,
பொன்றும், நீயும், உலகமும்-பொய் இலாய்! 84
'எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்,
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்,
அங்கு வைகினன் அல்லது, தாழ்க்குமோ?
இங்கண், நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்: 85
அனுமன் இராமனது மோதிரத்தை அடையாளம் காட்ட, அங்குள்ளார் அனைவரும் மகிழ்தல்
'அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஓர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோது அறு சிந்தையாய்!
கண்டு கொண்டருள்வாய்' எனக் காட்டினான். 86
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்,
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம் அரோ,
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும், 87
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன்
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின்
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன்
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. 88
மோதிரம் பெற்ற பரதனது பெரு மகிழ்ச்சி
மோதிரம் வாங்கி, தன் முகத்தின்மேல் அணைத்து,
'ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ?' எனா
ஓதினர் நாண் உற, ஓங்கினான்-தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். 89
ஆதி வெந் துயர் அலால், அருந்தல் இன்மையால்,
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்,
'ஏதிலன் ஒருவன்கொல்' என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன, வயிரத் தோள்களே. 90
அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும், வெங் களி துளக்கலால்;
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக் கை கொட்டுமால். 91
'ஆடுமின், ஆடுமின்!' என்னும்; 'ஐயன்பால்
ஓடுமின், ஓடுமின்!' என்னும்; 'ஓங்கு இசை
பாடுமின், பாடுமின்!' என்னும்; 'பாவிகாள்!
சூடுமின், சூடுமின், தூதன் தாள்!' எனும். 92
'வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர், இனி' எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற,
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும், பாடுமால். 93
வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;-
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! 94
பரதன் அனுமனைப் பாராட்டி, 'நீ யார்?' எனல்
அத் திறத்து ஆண்தகை, அனுமன் தன்னை, 'நீ
எத் திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன்; மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன்' என்றான். 95
'மறையவர் வடிவு கொண்டு, அணுக வந்தனை;
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்;
"துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்!" என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான்: 96
அனுமன் தன் வரலாற்றை உரைத்து, பெரு வடிவையும் காட்டுதல்
'காற்றினுக்கு அரசன் பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து, நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாளனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். 97
'அடித் தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித் தடந் தாமரைக் கண்ணின் நோக்கு' எனா,
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்,
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான். 98
வடிவு கண்டோர் அஞ்ச, பெரு வடிவைச் சுருக்குமாறு பரதன் வேண்டுதல்
வெஞ் சிலை இருவரும், விரிஞ்சன் மைந்தனும்,
'எஞ்சல் இல் அதிசயம் இது' என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும், சேனை துண்ணென
அஞ்சினது, அஞ்சனை சிறுவன் ஆக்கையால். 99
'ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின், உலப்பு இல் யாக்கையை
வாங்குதி, விரைந்து' என, மன்னன் வேண்டினான். 100
அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்
சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன்,
பொருக்கென நிதியமும், புனை பொன் பூண்களின்
வருக்கமும், வரம்பு இல நனி வழங்கினான். 101
கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,
மாவொடு கரித் திரள், வாவு தேர் இனம்,
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்,
எவரும் சிலை வலான், யாவும் நல்கினான். 102
அனுமன் விமானத்திலுள்ளாரைப் பரதனுக்குச் சுட்டிக் காட்டுதல்
அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். 103
'அண்ணலே! காண்டியால்-அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வாரைக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. 104
'ஏழ்-இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான்' என்று கொண்டு, உணர்த்தும் காலையே. 105
இராமனைக் கண்டவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல்
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். 106
இராமனைப் பரதன் காணுதல்
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். 107
ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். 108
இராமனும் தம்பியைக் கண்டு மகிழ்தல்
தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், 'இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு' எனா, 109
காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். 110
புட்பக விமானம் நிலத்தைச் சார்தல்
ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். 111
இராமனது வருகையால் தாயர் முதலியோர் உற்ற நிலை
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான். 112
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். 113
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார். 114
சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. 115
அடியில் வீழ்ந்து வணங்கிய பரதனை இராமன் அன்புறத் தழுவுதல்
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். 116
தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான். 117
இலக்குவன் பரதனது பாதங்களில் விழுந்து வணங்குதல்
அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன்-படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான். 118
சத்துருக்கனையும் இராமன் தழுவி, பரத சத்துருக்கனர்களைத் துணைவர்களுக்கு
அறிமுகப்படுத்தல்
பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். 119
மிகைப் பாடல்கள்
'வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது; அதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். 1-1
'வாங்கினான் இரு நிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் ஏழு பஃது ஏறினும், ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின், நீ இனிது
பூங் குலா நகர் புகுதி, இஞ் ஞான்று' எனப் புகன்றான். 1-2
'மங்கலா நிதி வட திசை வானவன் மானம்;
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்,
எங்கு உளார்?" எனும் இடம் உளது; இதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். 1-3
'வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்;
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்!
ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். 1-4
வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்;
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும்,
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். 1-5
என்று, தேரினை வீடணன் எய்தியது என்றான்;
'நன்றுதான்' என நாயகன் ஏறினன், அவரோடு
அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என இரு திசை இருந்தும் ஒக்கும். 1-6
ஏறினன் விமானம் தன்னில் இராமனும், இளைய கோவும்,
மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை வேந்தும்,
கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து ஏற்
மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில் உள்ளார். 1-7
ஜஇது முதல் 1-19 வரையில் 'இமயப் படலம்' என்றும், 'வசந்தன் உயிர்வரு படலம்'
என்றும், சில பிரதிகளில் உள்ளன.ஸ
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி,
'ஏறும் நீர் தேரில்' என்ன, 'கருணன் வந்து எதிர்த்தபோது,
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி,
நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில்' என்னச் சொன்னார். 1-8
என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி,
நின்ற போதினில் இராகவன் தேரின்நின்று இழிந்தான்;
'பொன்றுமா வரக் காரணம் என்?' எனப் புழுங்கா'
துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி' எனச் சொன்னான். 1-9
'வரிசிலை இராமன், ஓலை மறம் புரி மறலி, காண்க!
எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து போந்த
குரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க் அன்றேல்,
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென்' என்று எழுதிவிட்டான். 1-10
அக் கணத்து அருகு நின்ற அனுமன் கைத் திருமுகத்தைத்
தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி,
'இக்கணம் வருவென்; வாழி! இராம!' என்று, இரு தோள் கொட்டி,
மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப் பாய்ந்தான். 1-11
மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில்
தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர்தம்மைக்
கண்டு, மாருதி கண் புதைத்து, 'அரி! அரி' என்ன,
மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம். 1-12
துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா
வளம் கொள் மாருதி, 'வசந்தனைக் காட்டு' என, அவனும்
உளம் கலங்கி, 'உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள்;
விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து' என்றான். 1-13
சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத் துவக்கி,
பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப் புகலும்,
முன்னை வந்து கண்டு, இந்திரன், 'முனிவு எனோ?' என்ன,
'மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி' என்றான். 1-14
'வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!
இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி' என்று இசைப்ப,
சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத் துவக்கி,
பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப் பாய்ந்தான். 1-15
சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்,
'வந்த காரியம் எது?' என, 'வயந்தனைப் பார்த்துச்
சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன் தான்
உந்தன் நீள் பதத்துளான் எனின், காட்டு' என உணர்த்தும்: 1-16
'என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை-
தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்; விறலோய்!
அன்னவன் தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து' என்றான். 1-17
என்ற நான்முகன் தன்னையும், இந்திரன் யமனோடு
ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு குதிகொண்டான்;
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில்
சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன் பதியில். 1-18
மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,
குலவு வாசவன் யமனை விட்டு, இரு நிலம் குறுகி,
இலகு இல் வீரன் தன் அடி, இணை அவனொடும் வணங்கி,
சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன், தேர்மேல். 1-19
ஜவேறு சில பிரதிகளில் 1-6 பாடலுக்குப்பின் 1-20 முதல் 1-27 வரையில் உள்ள
பாடல்களுடன் வசந்தன் வரலாறு பற்றி, (1-7 முதல் 1-19) முன் வந்த பாடல்களின்
சிலவற்றையும் இடையில் கொண்டு, இவ் வரலாறு வேறு வகையில் அமைந்துள்ளது.ஸ
ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர் மாதினோடும்;
ஏறினான் இளைய கோவும், இராக்கதர் வேந்தனோடும்;
ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர் ஏற,
மாறினார் நிலத்து நின்றார், வசந்த கோத்திரத்திலுள்ளார். 1-20
ஏறினன், இளைய கோவும்; இரவி சேய், சாம்பன், நீலன்,
'ஏறினன், வாலி மைந்தன்' என்றனர்; பலரும் ஏற,
சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,
மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல். 1-21
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்,
கண்டு கைதொழ வானரக் கடலும், மற்று யாரும்
எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை
அண்டர் நாதனும், வானமும், அமரரும், ஆமால். 1-22
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை; அவர்தம்மை,
'வாரும் தேரின்மேல்' என, 'கும்பகர்ணன் வந்து ஏன்ற
போரில் எம் படைத் தலைவனோ பொன்றினன்; அவனை
நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில்' என்றார். 1-23
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை இராமன்
சூழ நோக்கினன்; சுக்கிரீவன் தனைப் பாரா,
'வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ?' என்றான். 1-24
இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை இறைஞ்சி,
'சுருதியாய்! ஒரு பேர் அரு சொல்லுவ் தொடர்ந்து
வருவதான இச் சேனையில் வசந்தன் என்று உரைக்கும்
ஒருவன் வந்திலன்; கண்டருளுதி' என உரைத்தான். 1-25
கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன் தனை எடுத்துத்
தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத் தெரியாமல்,
பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு அணிந்தே. 1-26
'இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல் தன்னில்
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது அம்மா!
வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ? வாராகினாகில்,
நமன் குலம் களைவென்' என்றான் -'நாளை வா' என்ற வீரன். 1-27
ஜஇதன் பின் 1-10, 11, 12, 13 என்ற பாடல்கள் உள்ளன.ஸ
'செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக் கையால்
அல் எனும் அரக்கர் தம்மை வம்மின்!' என்று அழைத்து, மௌ;ள
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக் கண்டால்,
'செல்லவே போமின்' என்று விடுக்குவென், செவியில், செப்பி. 1-32
ஜஇதன்பின் 1-14, 15, 16,17, 18, 19 என்ற பாடல்கள் உள்ளன.ஸ
'மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!
செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி'
கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,
பொய் இலா மனத் திரிசடை, 'விடை' எனப் போனாள். 5-1
என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;
சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,
வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார். 16-3
ஜசில பிரதிகளில், 'சொன்ன வாசகம் பிற்பட' (16) என்ற பாடலுக்குப் பின்
'வசந்தன் உயிர் வரு படலம்' தொடங்குகிறது. 16-3 என்னும் இந்த பாடலுக்கு முன்
இதன் முன்னர் தந்துள்ள 1-21, 1-23 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன.
இதன் பின் 1-24 என்ற பாடல் உள்ளது.ஸ
என்னும் காலை (யில்), இராமனும் யமபடர் யாரும்
மன்னும் தொல் புரம் நோக்கியே, 'மணி நகை முறுவல்
உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து' என்னா,
பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன், பொரவே. 16-5
எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற, அழியாப்
புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்
தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில் நாண் எறிந்தான். 16-6
பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,
வாகை கொண்ட வெஞ் சிலையின் வளைவுற வாங்கி,
மேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-7
வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க,
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக,
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த,
தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-8
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க,
மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத்
தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச் சரங்கள்
தென் புலன் தனை நிறைத்தது; செறிந்தன, சேணில். 16-9
தருமராசனும், காலனும், யமபடர் தாமும்,
உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து,
மரும தாரையில் பட்டது ஓர் வடிக் கணை வாங்கி
நிருமியா, 'இது இராகவன் சரம்' என நினைந்தார். 16-10
'கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து எய்தி,
பட்டனம்; இனிப் பிழைப்பு இலம்' என்பது ஓர் பயத்தால்,
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப,
சிட்டர் தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார். 16-11
'சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது இலார்மேல்
புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்! நின்னை
மறந்திருந்து உய்வது உண்டோ ? மலர்மிசை அயனைத் தந்த,
அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம்' என்றார். 16-12
'ஐயனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே!
மெய்யனே!' என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்;
'பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்!' என, போர் மூண்டு
எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன். 16-13
வந்து அடைந்து, 'உனக்கு அபயம்' என்று, அடியினில் வணங்கி,
"எம் தனிப் பிழை பொறுத்தி" என்று, இயம்பினிர்; இதனால்
உம்தம்மேல் சலம் தவிர்ந்தனென்; யூக நாயகன் தான்
தந்த சேனையில் வசந்தன் வந்திலன்; தருக' என்றான். 16-14
தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்:
'"என் தனிப் பிழை பொறுத்தி" என்று இயம்பினை; அதனால்
உன் தன் மேல் சலம் தவிர்ந்தனம்; யூகநாயகன் தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக' என்றான். 16-15
அண்ணல் ஆரியன், 'தருதி' என்று அருளலும், அவர் போய்,
விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில்
கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது இருந்தார்;
'திண்ணன் யாக்கை எங்கே?' என, சாம்புவன் செப்பும்: 16-16
ஜஇதன்பின் 1-25, 1-10, 1-11 என்னும் பாடல்கள் உள்ளன.ஸ
அன்னதே என, 'அவன் உயிர்க்கு அமரர்தம் பதிக்கே
முன்னது ஓர் உடல் கொண்டு, இவண் தருக!' என மொழிய,
சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப் பாரா,
'பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை' எனப் போனான். 16-20
ஜஇதன்பின் 1-12, 13, 27, 1-14, 15, 16, 17, 18, என்னும் பாடல்கள் வர
'வசந்தன் உயிர் வரு படலம்' முடிவு பெறுகிறதுஸ
அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை, ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்
சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,
பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும் போனான். 16-29
அன்ன காலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,
முன் இராகவன், சானகி, இலக்குவன் முதலா,
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற. 16-30
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;
'நன்றுதான்' என நாயகன் ஏறினன் திருவோடு;
அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும். 17-1
ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்; அனுமன் தன்பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க, நெடியவன் சரணம் சூடி,
மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்
போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம் அம்மா! 17-2
தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வென்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந் தலைவர்தாமும்,
மானுட வடிவம் கொண்டார்; வள்ளல் தன் வாய்மைதன்னால். 19-1
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்,
ஒன்றும் நல் சீதையோடும், உம்பரும் பிறரும் காண,
வென்று உயர் சேனையொடும், இராமனும் விரைவின் எய்தி,
தென் திசை இலங்கை ஆதி, தேவிக்குத் தெரியக் காட்டும். 20-1
வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து எழுந்து, விண்மேல்
சென்றது விமானம்; செல்ல, திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது தேறி,
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத் தெரிக்கலுற்றான்: 20-2
'மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின் ஆங்குத்
துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி, "வானோர்
பொன்னகர் ஒக்கும்" என்று புகழ்தலின், புலவராலும்
பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே! பாராய். 20-3
'வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக் கனி வாய் வல்லி!
எதிர் பொர வந்த விண்ணோர்-இறைவனைச் சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல,
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய். 20-4
'வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும் இகலி, வெய்ய
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய்;
கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்
கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய். 20-5
'மறத்திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன் தன்னைச்
செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை வாயில் நோக்காய்;
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி
வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய். 20-6
'கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்;
மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி!
இருங் கட முகத்த யானை இவுளி, தேர், காலாள், துஞ்சி,
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய். 20-7
'கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த் தோன்ற,
அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத் தாக்கி,
சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை வெம் போர்ப்
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப் பாராய். 20-8
'பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா நின்றேன்;
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து
நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும் நோக்காய். 20-9
'இலங்கையை வலஞ் செய்து ஏக' என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர, 'பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண்' என, நமன் தன் வாயில்
கலந்திட, 'ஈங்குக் கண்டாய், சுபாரிசற் சுட்டது' என்றான். 20-10
குட திசை வாயில் ஏக, 'குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது' என் முன்,
வட திசை வாயில் மேவ, 'இராவணன் மவுலி பத்தும்,
உடலமும் இழந்தது இங்கு' என்று உணர்த்தி, வேறு உரைக்கலுற்றான்: 20-11
'நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட
பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது, இச் சேது கண்டாய். 20-12
'மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன் தனக்கும் எட்டர்
பொன் தொடித் தெரிவை! யான் என் புகழுகேன்! கேட்டி, அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார். 20-13
ஆவினை, குரவரோடும் அருமறை முனிவர்தம்மை,
பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து தம் இல்
மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும் சுரர்கள் ஆவார். 22-1
மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே. 22-2
ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, 'கமலம் அன்ன
பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என் பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு' என, இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை பகரலுற்றான்: 23-1
'அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு இடுக்கண் செய்தோர்,
செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர், தம்பால்
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர், பெற்ற
தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச் செற்றோர், 23-2
'குருக்களை இகழ்வோர், கொண்ட குலமகள் ஒழியத் தங்கள்
செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர் கொல் தீம்பர்,
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள் தின்று
பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை செய்வோர். 23-3
'வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,
மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்,
கை உள முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்,
துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச் சுளித்துக் கொல்வோர், 23-4
'ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே சென்று
நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர், சான்றோர்
தாரமது அணைவோர், மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர். 23-5
'கண்டிலாது "ஒன்று கண்டோ ம்" என்று கைக்கூலி கொள்வோர்,
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்,
மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால் ஒருவன் சோற்றை
உண்டிருந்து, அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர், 23-6
'பின்னை வா, தருவென்' என்று பேசித் தட்டுவிக்கும் பேதை,
கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளுண் மாந்தர்,
துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து இகழ்வோர், சுற்றம்
இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல் செய்வோர். 23-7
'ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்,
நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை வஞ்சிப்போர், நன்மை
வேண்டிடாது, இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை நீப்போர்,
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர். 23-8
'கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர், தங்கள்
வயிற்றிடக் கருவைத் தாமே வதைப்பவர், மாற்றார்தம்மைச்
செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர்,
மயிர்க் குருள் ஒழியப் பெற்றம் வெளவு வோர், வாய்மை இல்லோர், 23-9
'கொண்டவன் தன்னைப் பேணாக் குலமகள், கோயிலுள்ளே
பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை,
உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள் உலோபர், ஊரைத்
தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர், 23-10
'தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள் வெளவும்
பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள், வந்து
'கா' எனா, 'அபயம்' என்று, கழல் அடைந்தோரை விட்டோர்,
பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று போவோர். 23-11
'முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத் தீயோர்,
மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்,
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில் வாழும்
பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும் பாவர். 23-12
மிகைப் பாடல்கள்
'மங்கை, சோபனம்! மா மயில், சோபனம்!
பங்கயத்து உறை பாவையே, சோபனம்!
அங்கு அ(வ்) ஆவி அரக்கனை ஆரியச்
சிங்கம் இன்று சிதைத்தது, சோபனம். 3-1
'வல்லி, சோபனம்! மாதரே, சோபனம்!
சொல்லின் நல்ல நல் தோகையே, சோபனம்!
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய
வல்லியங்கள் வதைத்தது, சோபனம்! 3-2
'அன்னை, சோபனம்! ஆயிழை, சோபனம்!
மின்னின் நுண் இடை மெல்லியல், சோபனம்!
அன்ன ஆளி அரக்கனை ஆரிய
மன்னன் இன்று வதைத்தது, சோபனம்! 3-3
'நாறு பூங் குழல் நாயகி, சோபனம்!
நாறு பூங் குழல் நாரியே, சோபனம்!
ஆறு வாளி அரக்கனை ஆரிய
ஏறும் இன்றும் எரித்தது, சோபனம்!' 3-4
சொன்ன சோபனம் தோகை செவி புக,
அன்னம் உன்னி, அனுமனை நோக்கியே,
'அன்ன போரில் அறிந்துளது, ஐய! நீ
இன்னம் இன்னம் இயம்புதியால்' என்றாள். 3-5
சென்றவன் தன்னை நோக்கி, 'திருவினாள் எங்கே?' என்ன,
'மன்றல் அம் கோதையாளும் வந்தனள், மானம்தன்னில்'
என்றனன்; என்னலோடும், 'ஈண்டு நீ கொணர்க!' என்ன,
'நன்று!' என வணங்கிப் போந்து, நால்வரை, 'கொணர்க!' என்றான். 33-1
காத்திரம் மிகுத்தோர், நால்வர், கஞ்சுகிப் போர்வையாளர்,
வேத்திரக் கையோர், ஈண்டீ, விரைவுடன் வெள்ளம் தன்னைப்
பாத்திட, பரந்த சேனை பாறிட, பரமன் சீறி,
'ஆர்த்த பேர் ஒலி என்?' என்ன, 'அரிகள் ஆர்ப்பவாம்' என்றார். 33-2
என்ற போது இராமன், 'ஐய! வீடணா! என்ன கொள்கை!
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி,
துன்றிய குழலினார் தம் சுயம்வர வாஞ்சை, சூழும்
வென்றி சேர் களத்தும், வீர! விழுமியது அன்று, வேலோய்!' 33-3
அற்புதன் இனைய கூற, ஐய வீடணனும் எய்தி,
செப்பு இள முலையாள் தன்பால் செப்பவும், திருவனாளும்,
அம்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த அண்ணல்
ஒப்பினைக் கண்ணின் கண்டே, உளம் நினைந்து, இனைய சொன்னாள். 33-4
'அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்,
பழிபடும் என்பரால், பாருளோர் எலாம்;
விழுமியது அன்று, நீ மீண்டது; இவ் இடம்
கழிபடும்' என்றனன், கமலக்கண்ணனே. 54-1
கண்ணுடை நாயகன், 'கழிப்பென்' என்றபின்,
மண்ணிடைத் தோன்றிய மாது சொல்லுவாள்:
'எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான்
விண்ணிடை அடைவதே விழுமிது' என்றனள். 54-2
பொங்கிய சிந்தையல் பொருமி, விம்முவாள்,
'சங்கையென்' என்ற சொல் தரிக்கிலாமையால்,
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே,
அங்கியின் வீழலே அழகிதாம் அரோ. 54-3
'அஞ்சினென், அஞ்சினென், ஐய! அஞ்சினென்;
பஞ்சு இவர் மெல்லடிப் பதுமத்தாள்தன்மேல்
விஞ்சிய கோபத்தால் விளையும் ஈது எலாம்;
தஞ்சமோ, மறை முதல் தலைவ! ஈது?' என்றான். 73-1
கற்பு எனும் கனல் சுட, கலங்கி, பாவகன்
சொல் பொழி துதியினன், தொழுத கையினன்,
'வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா!
அற்புதனே! உனக்கு அபயம் யான்' என்றான். 75-1
'இன்னும், என் ஐய! கேள்: இசைப்பென் மெய், உனக்கு;
அன்னவை மனக் கொளக் கருதும் ஆகையால்,
முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள். 82-1
'யான் புரி மாயையின், சனகி என்று உணர்ந்-
தான் கவர் அரக்கன்; அம் மாயை என் சுடர்க்
கான் புகக் கரந்தது; இக் கமல நாயகி
தான் புரி தவத்து உனைத் தழுவ உற்றுளாள்.' 82-2
ஐயன் அம் மொழியினை அருளும் வேலையில்,
மை அறு மன்னுயிர்த் தொகைகள் வாய் திறந்து,
ஒய்யென ஒலித்ததால்; உவகை மீக்கொள,
துய்ய வானவர் துதித்து, இனைய சொல்லுவார்: 84-1
'மிகுத்த மூன்றரைக் கோடியில் மெய் அரைக் கோடி
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள எம்
அகத்தின் நோய் அறுத்து, அருந் துயர் களைந்து, எமக்கு அழியாச்
சுகத்தை நல்கிய சுருதி நாயக!' எனத் தொழுதார். 84-2
'திருக் குவால் மலி செல்வத்துச் செருக்குவேம் திறத்துத்
தருக்கு மாய்வுற, தானவர் அரக்கர் வெஞ் சமரில்
இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல் யாம் புக, இயையாக்
கருக்குளாய் வந்து தோற்றுதி! ஈங்கு இது கடனோ?' 96-1
என்ற வாசகம் எறுழ் வலித் தோளினான் இயம்ப,
மன்றல் தாங்கிய மலரவன், வாசவற் கூவி,
'துன்று தாரினோன் சுரருடன் துருவினை துடரச்
சென்று, மற்று அவன்-தருக' என வணங்கினன், சென்றான். 101-1
'எனக்கும், எண்வகை முனிவர்க்கும், இமையவர் உலகம்-
தனக்கும், மற்று இவள் தாய் என மனக் கொளத் தகுதி;
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் மலராள்;
புனந் துழாய் முடிப் புரவலன் நீ; நிறை புகழோய்!' 110-1
மிகைப் பாடல்கள்
மாருதிச் செல, மங்கலம் யாவையும்
மாருதிப் பெயர்கொண்டு உடன் வந்தனன்;
வீர விற் கை இளவல் அவ் வீடணன்
வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 4-1
செய்த மா மணி மண்டபத்தே செழுந்
துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து,
எய்து வானவ......................................கம்மி......
.................................................................... 5-1
மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி, ஓம விதிமுறை கொண்டிட,
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே, 5-2
பொய்யினுக்கு ஒரு வெ..........................
..............................................................
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலசப் புனல் ஆட்டினார். 5-3
வேத ஓசை விழா ஒலி மேலிட,
நாத துந்துமி எங்கும் நடித்திட,
வேத பாரகர் ஆசி விளம்பிட,
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட, 6-1
வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட,
ஆர மார்பொடு அழுந்திடப் புல்லினான்,
ஆரினானும் அறிவரும் ஆதியான். 10-1
'ஆதி நாளில், "அருள் முடி நின்னது" என்று
ஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!
வேத பாரகம் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய். 11-1
'"வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,
பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,
நெஞ்சினில் துயர் நீக்கியது" என்று, நீ
அஞ்சனைப் புதல்வா! அருள்வாய்' என்றான். 13-1
|