Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் >28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 7. சேது பந்தனப் படலம்


சுக்கிரீவன் சேது கட்டுதற்கு நளனை அழைத்தல்

அளவு அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு
இளவலும் இனிது உடன் இருக்க, எண்ணியே,
விளைவன விதி முறை முடிக்க வேண்டுவான்,
'நளன் வருக!' என்றனன் - கவிக்கு நாயகன். 1

சேது கட்ட நளன் உடன்படுதலும்

வந்தனன், வானரத் தச்சன்; 'மன்ன! நின்
சிந்தனை என்?' என, 'செறி திரைக் கடல்
பந்தனை செய்குதல் பணி நமக்கு' என,
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன். 2

சேது அமைத்தற்கு உரிய பொருள்களைக் கொணர நளன் வேண்டுதல்

'காரியம் கடலினை அடைத்துக் கட்டலே;
சூரியன் காதல! சொல்லி என் பல்
மேருவும் அணுவும் ஓர் வேறு உறாவகைச்
சேர்வுற இயற்றுவென்; கொணரச் செப்பு' என்றான். 3

கடலை அடைக்க வருமாறு, சாம்பன் சேனைக்குக் கூறுதல்

'இளவலும், இறைவனும், இலங்கை வேந்தனும்,
அளவு அறு நம் குலத்து அரசும், அல்லவர்
வளைதரும் கருங் கடல் அடைக்க வம்' எனத்
தளம் மலி சேனையைச் சாம்பன் சாற்றினான். 4

வானர சேனை மலைகளைக் கொண்டுவந்து, கடலை அடைத்தல்

கரு வரை காதங்கள் கணக்கு இலாதன
இரு கையில், தோள்களில், சென்னி, ஏந்தின,
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள்
வருவன ஆம் என, வந்த வானரம். 5

பேர்த்தன மலை சில் பேர்க்கப் பேர்க்க, நின்று
ஈர்த்தன சில் சில சென்னி ஏந்தின்
தூர்த்தன சில் சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன் சில சில ஆடிப் பாடின. 6

காலிடை ஒரு மலை உருட்டி, கைகளின்
மேலிடை மலையினை வாங்கி, விண் தொடும்
சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய,
வாலிடை, ஒரு மலை ஈர்த்து, வந்தவால். 7

நளன் மலைகளை அடுக்கிச் சேது கட்டுதல்

முடுக்கினன், 'தருக' என, மூன்று கோடியர்
எடுக்கினும், அம் மலை ஒரு கை ஏந்தியிட்டு,
அடுக்கினன்; தன் வலி காட்டி, ஆழியை
நடுக்கினன் - நளன் எனும் நவையின் நீங்கினான். 8

மஞ்சினில் திகழ்தரும் மலையை, மாக் குரங்கு,
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினன் - சடையன் வெண்ணெயில்,
'தஞ்சம்!' என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல். 9

சேது கட்டும்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகள்

சயக் கவிப் பெரும் படைத் தலைவர் தாள்களால்,
முயல் கறை மதி தவழ் முன்றில் குன்றுகள்
அயக்கலின், முகில் குலம் அலறி ஓடின்
இயக்கரும் மகளிரும் இரியல் போயினார். 10

வேருடை நெடுங் கிரி தலைவர் வீசின,
ஓர் இடத்து ஒன்றின்மேல் ஒன்று சென்றுற,
நீரிடை நிமிர் பொறி பிறக்க, 'நீண்ட ஈது
ஆருடை நெருப்பு?' என வருணன் அஞ்சினான். 11

ஆனிறக் கண்ணன் என்று ஒருவன், அங்கையால்,
கான் இற மலை கொணர்ந்து எறிய, கார்க் கடல்
தூ நிற முத்துஇனம் துவலையோடு போய்,
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே. 12

சிந்துரத் தட வரை எறிய, சேணிடை
முந்துறத் தெறித்து எழு முத்தம் தொத்தலால்,
அந்தரத்து எழு முகில் ஆடையா, அகன்
பந்தர் ஒத்தது, நெடும் பருதி வானமே. 13

வேணுவின் நெடு வரை வீச, மீமிசைச்
சேண் உறு திவலையால் நனைந்த செந் துகில்,
பூண் உறும் அல்குலில் பொருந்திப் போதலால்,
நாணினர், வான நாட்டு உறையும் நங்கைமார். 14

தேன் இவர் தட வரை, திரைக் கருங் கடல் -
தான் நிமிர்தர, இடை குவியத் தள்ளும் நீர் -
மேல் நிமிர் திவலை மீச் சென்று மீடலால்,
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால். 15

மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த,
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப, - மேல்நாள்,
பொய்கையின் இடங்கர் கவ்வ, 'புராதனா! போற்றி' என்று
கை எடுத்து அழைத்த யானை போன்றன - களி நல் யானை. 16

அசும்பு பாய் தேனும், பூவும், ஆரமும், அகிலும், மற்றும்,
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம,
தசும்பினில் வாசம் ஊட்டிச் சார்த்திய தண்ணீர் என்ன,
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே. 17

தேம் முதல் கனியும் காயும், தேனினோடு ஊனும், தெய்வப்
பூ முதலாய எல்லாம், மீன் கொளப் பொலிந்த அன்றே,
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மானக் குன்றம் -
தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ, வண்மை தக்கோர்? 18

மண்ணுறச் சேற்றுள் புக்குச் சுரிகின்ற மாலைக் குன்றம் -
கள் நிறை பூவும், காயும், கனிகளும், பிறவும், கவ்வா
வெண் நிற மீன்கள் எல்லாம், வறியவர் என்ன, - மேன்மேல்
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த. 19

கறங்கு எனத் திரியும் வேகக் கவிக் குலம் கையின் வாங்கி,
பிறங்கு இருங் கடலில் பெய்த போழ்தத்தும், பெரிய பாந்தள்,
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக, வாய் சோர்ந்து,
உறங்கின - கேடு உற்றாலும், உணர்வரோ உணர்வு இலாதார்? 20

இழை எனத் தகைய மின்னின் எயிற்றின, முழக்கம் ஏய்ந்த,
புழையுடைத் தடக் கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்தச் சுற்றி,
கழையுடைக் குன்றின் முன்றில், உருமொடு கலந்த கால
மழை எனப் பொருத - வேலை மகரமும் மத்த மாவும். 21

பொன்றின, சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் போல, -
குன்றுகள் குரக்கு வீரர் குவித்தன நெருப்புக் கோப்ப,
ஒன்றின் மேல் ஒன்று வீழ, உகைத்து எழுந்து, உம்பர் நாட்டுச்
சென்று, மேல் நிலை பெறாது, திரிந்தன - சிகரச் சில்லி. 22

கூருடை எயிற்றுக் கோள் மாச் சுறவுஇனம் எறிந்து கொல்ல,
போருடை அரியும், வெய்ய புலிகளும், யாளிப் போத்தும்,
நீரிடைத் தோற்ற அன்றே? - தம் நிலை நீங்கிச் சென்றால்,
ஆரிடைத் தோலார் மேலோர், அறிவிடை நோக்கின் அம்மா? 23

ஒள்ளிய உணர்வு கூட, உதவலர் எனினும் ஒன்றோ,
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே? -
துள்ளின, குதித்த, வானத்து உயர் வரைக் குவட்டில் தூங்கும்
கள்ளினை நிறைய மாந்தி, கவி எனக் களித்த, மீன்கள். 24

மூசு எரி பிறக்க, மீக்கொண்டு, இறக்கிய முடுக்கம் தன்னால்,
கோய் சொரி நறவம் என்னத் தண் புனல் உகுக்கும் குன்றின்
வேய் சொரி முத்துக்கு, அம்மா விருந்து செய்திருந்த - ஈண்ட
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம். 25

விண்தலம் தொடு மால் வரை வேரொடும்
கொண்டு, அலம் கொள வீரர் குவித்தலால்,
திண் தலம், கடல், ஆனது; நீர் செல,
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே. 26

ஐயன் வேண்டின், அது இது ஆம் அன்றே -
வெய்ய சீயமும், யாளியும், வேங்கையும்,
மொய் கொள் குன்றின் முதலின, மொய்த்தலால்,
நெய்தல், வேலி குறிஞ்சி நிகர்த்ததால்! 27

'யான் உணாதன இங்கு இவை' என்னவே,
தீன் உணாதன் என் இது செய்யுமே?
மான் உணாத திரைக் கடல் வாழ்தரு
மீன் உணாதன இல்லை விலங்கு அரோ. 28

வவ் விலங்கு வளர்த்தவர் மாட்டு அருள்
செவ் விலங்கல் இல் சிந்தையின் தீர்வரோ -
'இவ் விலங்கல் விடேம்' இனி என்பபோல்,
எவ் விலங்கும் வந்து எய்தின வேலையே! 29

கனி தரும், நெடுங் காய் தரும், நாள்தொறும் -
இனிது அருந் தவம் நொய்தின் இயற்றலால்,-
பனி தருங் கிரி தம் மனம் பற்று அறு
முனிவரும் முனியார், முடிவு உன்னுவார். 30

புலையின் வாழ்க்கை அரக்கர், பொருப்பு உளார்,
தலையின் மேல் வைத்த கையினர், சாற்றுவார்,
'மலை இலேம்; மற்று, மாறு இனி வாழ்வது ஓர்
நிலை இலேம்' என்று, இலங்கை நெருங்கினார். 31

முழுக்கு நீரில் புகா, முழுகிச் செலா,
குழுக்களோடு அணை கோள் அரி, யாளிகள்,
இழுக்கு இல் பேர் அணையின் இரு பக்கமும்
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே. 32

பளிக்கு மால் வரை முந்திப் படுத்தன
ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார்,
'வெளிக்கு மால் வரை வேண்டும்' எனக் கொணர்ந்து,
அளிக்கும் வானர வீரர் அநேகரால். 33

பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட,
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை
வேரின் ஆம் என, வெம் முழையின்னுழை
சோரும் நாகம் நிலன் உறத் தூங்குமால். 34

அருணச் செம் மணிக் குன்று அயலே சில
இருள் நற் குன்றம் அடுக்கின, ஏய்ந்தன -
கருணைக் கொண்டல், 'வறியன் கழுத்து' என
வருணற்கு ஈந்த வருண சரத்தையே. 35

ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம்
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின், ஆழ் கடல்
பாய்ந்து பண்டு உறையும் மலைப் பாந்தள்கள்,
போந்த மா மலையின் முழை, புக்கவே. 36

சேதுவின் பெருமைக்கு இணை செப்ப, ஓர்
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்கொலோ -
தூதன் இட்ட மலையின் துவலையால்,
மீது விட்டு - உலகு உற்றது, மீன் குலம்? 37

நீலன் இட்ட நெடு வரை நீள் நில
மூலம் முட்டலின், மொய் புனல் கைம்மிக,
கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால்,
ஓலமிட்டு எழுந்து ஓடி, உலகு எலாம். 38

மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற
உயர்ந்து முட்டி விழ, எழுந்து ஓத நீர்
தியந்தம் முட்ட, திசை நிலை யானையும்,
பெயர்ந்து விட்டவை, யாவும் பிளிறுவ. 39

இலக்கு வன் சரம் ஆயினும், இன்று எதிர்
விலக்கினால், விலங்காத விலங்கலால்,
அலக்கண் எய்த, - அமுது எழ ஆழியைக்
கலக்கினான் மகன் - மீளக் கலக்கினான். 40

மருத்தின் மைந்தன் மணி நெடுந் தோள் எனப்
பெருத்த குன்றம், கரடிப் பெரும் படை
விருத்தன் இட்ட விசையினின், வீசிய
திருத்தம், வானவர் சென்னியில் சென்றதால். 41

குமுதன் இட்ட குல வரை கூத்தரின்
திமிதன் இட்டுத் திரியும் திரைக் கடல்
துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார் -
அமுதல் இன்னம் எழும் எனும் ஆசையால். 42

கன சினத்து உருமின் கடுங் கார் வரை
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன்,
மன சினத்த அனந்தனும், வாழ்வு இகந்து,
அனசனத் தொழில் மேற்கொள்வது ஆயினான். 43

எண் இல் எண்குஇனம் இட்ட கிரிக் குலம்,
உண்ண உண்ண சென்று, ஒன்றினொடு ஒன்று உற,
சுண்ண நுண் பொடி ஆகித் தொலைந்தன,
புண்ணியம் பொருந்தார்தம் முயற்சிபோல் 44

ஆர ஆயிர யோசனை ஆழமும்
தீர நீண்டு பரந்த திமிங்கிலம்,
பார மால் வரை ஏறப் பதைத்து, உடல்
பேரவே, குன்றும் வேலையும் பேர்ந்தவால். 45

நளன் சேதுவை அமைத்த வகை

குலை கொளக் குறி நோக்கிய கொள்கையான்,
சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து, நேர்
மலைகள் ஒக்க அடுக்கி, மணற் படத்
தலைகள் ஒக்கத் தடவும், தடக் கையால். 46

தழுவி, ஆயிர கோடியர் தாங்கிய
குழுவின் வானரர் தந்த கிரிக் குலம்,
எழுவின் நீள் கரத்து ஏற்றிட, இற்று இடை
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான். 47

மலை சுமந்து வரும் வானரங்கள்

மலை சுமந்து வருவன வானரம்,
நிலையில் நின்றன, செல்ல நிலம் பெறா-
அலை நெடுங் கடல் அன்றியும், ஆண்டுத் தம்
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம். 48

பருத்த மால் வரை ஏந்திய பல் படை
நிரைத்தலின், சில செல்ல நிலம் பெறா,
கரத்தின் ஏந்திய கார் வரை, கண் அகன்
சிரத்தின் மேற்கொண்டு, நீந்தின சென்றவால். 49

ஆய்ந்து நீளம், அரிது சுமந்தன
ஓய்ந்த கால, பசியின் உலர்ந்தன,
ஏந்து மால் வரை வைத்து, அவற்று ஈண்டு தேன்
மாந்தி மாந்தி, மறந்து, துயின்றவால். 50

போதல் செய்குநரும், புகுவார்களும்,
மாதிரம்தொறும் வானர வீரர்கள்,
'சேது எத்துணை சென்றது?' என்பார் சிலர்;
'பாதி சென்றது' எனப் பகர்வார் சிலர். 51

மலைகளும் மரங்களும் கடலில் மூழ்கும் நிகழ்ச்சிகள்

குறைவு இல் குங்குமமும், குகைத் தேன்களும்,
நிறை மலர்க் குலமும், நிறைந்து எங்கணும்,
துறைதொறும் கிரி தூக்கின தோய்தலால்,
நறை நெடுங் கடல் ஒத்தது, நாம நீர். 52

நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும்,
துடும்பல் வேலை துளங்கியது இல்லையால் -
இடும்பை எத்தனையும் மடுத்து எய்தினும்,
குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரினே. 53

கொழுந்துடைப் பவளக் கொடியின் குலம்
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து, அயல்
விழுந்த பல் மணியின் ஒளி, மீமிசை
எழுந்த எங்கணும், இந்திர வில்லினே. 54

பழுமரம் பறிக்க, பறவைக் குலம்,
தழுவி நின்று ஒருவன் தனித் தாங்குவான்
விழுதலும், புகல் வேற்று இடம் இன்மையால்,
அழுது அரற்றும் கிளை என ஆனவால். 55

'தர வலோம், மலர்' என்று, உயிர் தாங்கிய
மரம் எலாம் கடல் வீழ்தலும், வண்டு எலாம்,
கரவு இலாளர் விழ, களைகண் இலா
இரவலாளரின், எங்கும் இரிந்தவால். 56

தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்
மிக்கு அடங்கலும் போவன - மீன் குலம்,
அக் கருங் கடல் தூர, அயற் கடல்
புக்கு அடங்கிடப் போவன போன்றவே. 57

மூசு வண்டுஇனம், மும் மத யானையின்
ஆசை கொண்டனபோல் தொடர்ந்து ஆடிய,
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக,
வேசை மங்கையர் அன்பு என, மீண்டவே. 58

நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து,
அலமரும் துயர் எய்திய ஆயினும்,
வல மரங்களை விட்டில, மாசு இலாக்
குல மடந்தையர் என்ன, கொடிகளே. 59

துப்பு உறக் கடல் தூய துவலையால்,
அப் புறக் கடலும் சுவை அற்றன்
எப் புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன்
உப்பு உறைத்தன, மேகம் உகுத்த நீர். 60

முதிர் நெடுங் கிரி வீழ, முழங்கு நீர்
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால்,
மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன -
கதிரவன் கனல் வெங் கதிர்க் கற்றையே. 61

நன்கு ஒடித்து, நறுங் கிரி சிந்திய
பொன் கொடித் துவலைப் பொதிந்து ஓடுவ,
வன் கொடிப் பவளங்கள் வயங்கலால்,
மின் பொடித்தது போன்றன, விண் எலாம். 62

ஓடும் ஓட்டரின், ஒன்றின் முன் ஒன்று போய்,
காடும் நாடும், மரங்களும் கற்களும்,
நாடும் நாட்டும், நளிர் கடல் நாட்டில், ஓர்
பூடும் ஆடுதல் இலாய, இப் பூமியில். 63

வரைப் பரப்பும், வனப் பரப்பும், உவர்
தரைப் பரப்புவது என்ன, தனித் தனி
உரைப் பரப்பும் உறு கிரி ஒண் கவி;
கரைப் பரப்பும், கடற் பரப்பு ஆனதால். 64

அணை கட்டி முடிந்தமையால், வானரரின் மகிழ்ச்சி

உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை,
முற்ற மூன்று பகலிடை; முற்றவும்,
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்;
மற்று இ(வ்) வானம் பிறிது ஒரு வான் கொலோ? 65

சேதுவின் தோற்றம்

நாடுகின்றது என், வேறு ஒன்று? - நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்,
'ஓடும், என் முதுகிட்டு' என, ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது, சேதுவே! 66

மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள்,
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது,
ஐயன் ஈட்டிய சேனை கண்டு, அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால். 67

கான யாறு பரந்த கருங் கடல்,
ஞான நாயகன் சேனை நடத்தலால்,
'ஏனை யாறு, இனி, யான் அலது ஆர்?' என,
வான யாறு, இம்பர் வந்தது மானுமால். 68

கல் கிடந்து ஒளிர் காசுஇனம் காந்தலால்,
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை,
எல் கடந்த இருளிடை, இந்திர
வில் கிடந்தது என்ன விளங்குமால். 69

சேது அமைந்த பின், சுக்கிரீவன், வீடணன், முதலியோர் சென்று, இராமனுக்குத் தெரிவித்தல்

ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின்,
கான வாழ்க்கைக் கவிக் குல நாதனும்,
மான வேற் கை இலங்கையர் மன்னனும்,
ஏனையோரும், இராமனை எய்தினார். 70

எய்தி, 'யோசனை ஈண்டு ஒரு நூறுடன்
ஐ-இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை' என்பது செப்பினார் -
வைய நாதன் சரணம் வணங்கியே. 71

மிகைப் பாடல்கள்

சாற்று மா முரசு ஒலி கேட்டு, தானையின்
ஏற்றமோடு எழுந்தனர், 'எறி திரைக் கடல்
ஊற்றமீது ஒளித்து, ஒரு கணத்தில் உற்று, அணை
ஏற்றுதும்' எனப் படைத் தலைவர் யாருமே. 4-1

வல் விலங்கு வழாத் தவர் மாட்டு அருள்
செல் வலம் பெறுஞ் சிந்தையின் தீர்வரோ?
'இவ் விலங்கல் விடோ ம் இனி' என்பபோல்,
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான். 25-1

தம் இனத்து ஒருவற்கு ஒரு சார்வு உற,
விம்மல் உற்று, விடாது உறைவோர்கள்போல்,
செம்மை மிக்க குரக்கினம் சேர்க்கையால்,
எம் மலைக் குலமும் கடல் எய்துமே. 29-1

ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய
அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால்,
மருவு வான் கொடி மாட இலங்கையில்
தெரு எலாம் புக்கு உலாய, தெண்ணீர் அரோ. 38-1

இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும்,
அன்ன சேனைத் தலைவரும், ஆழியைத்
துன்னி நின்று, விடாது இடை தூர்த்தலால்,
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே. 64-1



 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home