Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > 1 ஆற்றுப் படலம் > 2 நாட்டுப் படலம் > 3 நகரப் படலம் > 4 அரசியற் படலம் > 5 திரு அவதாரப் படலம் > 6 கையடைப் படலம் > 7 தாடகை வதைப் படலம் >8 வேள்விப் படலம் > 9 அகலிகைப் படலம் > 10 மிதிலைக் காட்சிப் படலம் > 11 குலமுறை கிளத்து படலம் > 12 கார்முகப் படலம் >13 எழுச்சிப் படலம் > 14 சந்திர சயிலப் படலம் > 15 வரைப் காட்சிப் படலம் >16 பூக் கொய் படலம் > 17 நீர் விளையாட்டுப் படலம் > 18 உண்டாட்டுப் படலம் > 19 எதிர்கொள் படலம் > 20 உலாவியற் படலம் > 21 கோலம் காண் படலம் > 22 கடிமணப் படலம் > 23 பரசுராமப் படலம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
பால காண்டம் - 1. ஆற்றுப் படலம்


பாயிரம்
கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2

ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3

அவையடக்கம்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் - எனை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5

வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 7

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:-
'பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?' 8

அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறைவில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 9

நூல் வழி

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ. 10

இடம்

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே. 11

1. ஆற்றுப் படலம்

மழை பொழிதல்

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
தாசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்,
சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே. 2

பம்பி மேகம் பரந்தது, 'பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றுதும்' என்று, அகன் குன்றின்மேல்,
இம்பர் வாரி எழுந்தது போன்றதே. 3

புள்ளி மால் வரை பொன் என நோக்கி, வான்,
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின - மேகமே. 4

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுதல்
மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன, தழைத்தது-நீத்தமே. 5

தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,
விலையின் மாதரை ஒத்தது-அவ் வெள்ளமே. 6

மணியும், பொன்னும், மயில் தழைப் பீலியும்,
அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தண்
இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
வணிக மாக்களை ஒத்தது-அவ் வாரியே. 7

பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும்,
தேன் அளாவியும், செம் பொன் விராவியும்,
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்,
வான வில்லை நிகர்த்தது-அவ் வாரியே. 8

மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்-அந் நீத்தமே. 9

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப, வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றியே,
தேக்கு எறிந்து வருதலின்,-தீம் புனல்வ
�க்கு தேன் நுகர் மாக்களை மானுமே. 10

பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து, இரைத்து ஆர்த்தலின்,
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்,
புணரிமேல் பொரப் போவதும் போன்றதே. 11

சரயு நதியின் சிறப்பும், நால் வகை நிலத்திலும் அது ஓடியச் சிறப்பும்
இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம். 12

கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்குறு சந்தம், சிந்தூரத்தொடு நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை, கண்டில் வெண்ணெய்,
அடுக்கலின் அளிந்த செந் தேன், அகிலொடு நாறும் அன்றே. 13

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி,
வயின் வயின், எயிற்றி மாதர், வயிறு அலைத்து ஓட, ஓடி,
அயில் முகக் கணையும் வில்லும் வாரிக் கொண்டு, அலைக்கும் நீரால்,
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே. 14

செறி நறுந் தயிரும், பாலும், வெண்ணெயும், சேந்த நெய்யும்,
உறியடு வாரி உண்டு, குருந்தொடு மருதம் உந்தி,
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்,
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே. 15

கதவினை முட்டி, மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி,
நுதல் அணி ஓடை பொங்க, நுகர் வரி வண்டு கிண்ட,
ததை மணி சிந்த உந்தி, தறி இறத் தடக் கை சாய்த்து,
மத மழை யானை என்ன, மருதம் சென்று அடைந்தது அன்றே. 16

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்,
செல்லுறு கதியில் செல்லும் வினை என, சென்றது அன்றே. 17

காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை, பொன்னும் முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே. 18

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
'எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது' என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே. 19

நீர் பாய்ந்து யாவையும் எழிலுடன் விளங்குதல்
தாது, உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
போது அவிழ் பொய்கைதோறும், புதுமணல்-தடங்கள்தோறும்,
மாதவி வேலிப் பூக வனம் தொறும், வயல்கள் தோறும்,
ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே. 20

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home