மூவரும் சோணை நதியை அடைய, சூரியன் மறைதல்
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின
நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல்,
புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல்,
சிலம்பு சூழும் கால், சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார். 1
நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன்,
உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல், கடல் குளித்தான். 2
மூவரும் இரவு சோலையில் தங்குதல்
கறங்கு தண் புனல், கடி நெடுந் தாளுடைக் கமலத்து
அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்ப,
பிறங்கு தாமரைவனம் விட்டு, பெடையடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு, உறைந்தார். 3
மூவரும் கங்கை நதியைக் காணுதல்
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான்
நீல ஆர்கலி, தேரொடு நிறை கதிர்க் கடவுள்,
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான். 4
அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும் அனையார்,
செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார். 5
மூவரும் மிதிலை சேர்தல்
பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா,
அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார். 6
மிதிலை நாட்டு வளம்
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்,
கரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை. 7
பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும் தூதால்,
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. 8
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர,
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய்,
ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று ஊடி,
பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை. 9
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி தேம்
நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள். 10
இழைக்கும் நுண் இடை இடைதர, முகடு உயர் கொங்கை,
மழைக் கண், மங்கையர் அரங்கினில், வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன-ஓடை. 11
படை நெடுங் கண் வாள் உறை புக, படர் புனல் மூழ்கி,
கடைய முன் கடல் செழுந் திரு எழும்படி காட்டி,
மிடையும், வெள் வளை புள்ளடும் ஒலிப்ப, மெல்லியலார்
குடைய, வண்டினம் கடி மலர் குடைவன-குளங்கள். 12
அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டைக் காணுதல்
இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார். 13
கல்லின்மேல் இராமனது பாத தூளி பட, அகலிகை பழைய வடிவம் பெற்று எழல்
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 14
அகலிகையை வரலாறு
'மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்' என்றான். 15
பொன்னை ஏய் சடையான் கூறக் கேட்டலும், பூமி கேள்வன்,
'என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது உண்டோ?
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக!' என்றான். 16
அவ் உரை இராமன் கூற, அறிவனும், அவனை நோக்கி,
'செவ்வியோய்! கேட்டி: மேல்நாள், செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்விபோல் விழியினாள்தன் வன முலை நணுகலுற்றான்; 17
'தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும், பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான். 18
'புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்,
'தக்கது அன்று' என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான். 19
'சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா,
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான். 20
'தீ விழி சிந்த நோக்கி, செய்ததை உணர்ந்து, செய்ய
தூயவன், அவனை, நின் கைச் சுடு சரம் அனைய சொல்லால்,
"ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக" என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன், இமைப்பின் முன்னம். 21
'எல்லை இல் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
மெல்லியலாளை நோக்கி, "விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி" என்றான்; கருங்கல் ஆய், மருங்கு வீழ்வாள். 22
'"பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால்,
அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!" என்ன,
"தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி" என்றான். 23
'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.' 24
அகலிகை இராமன் பாதம் பணிந்து செல்லுதல்
தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு
'மா தவன் அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே,
போது நீ, அன்னை!' என்ன பொன் அடி வணங்கி போனாள். 25
அகலிகையை கௌதமரிடம் சேர்த்த பின் மூவரும் மிதிலையில் புறமதிலை
அடைதல்
அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி, 26
'அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!' என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான். 27
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். 28
|