Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > 1 ஆற்றுப் படலம் > 2 நாட்டுப் படலம் > 3 நகரப் படலம் > 4 அரசியற் படலம் > 5 திரு அவதாரப் படலம் > 6 கையடைப் படலம் > 7 தாடகை வதைப் படலம் >8 வேள்விப் படலம் > 9 அகலிகைப் படலம் > 10 மிதிலைக் காட்சிப் படலம் > 11 குலமுறை கிளத்து படலம் > 12 கார்முகப் படலம் >13 எழுச்சிப் படலம் > 14 சந்திர சயிலப் படலம் > 15 வரைப் காட்சிப் படலம் >16 பூக் கொய் படலம் > 17 நீர் விளையாட்டுப் படலம் > 18 உண்டாட்டுப் படலம் > 19 எதிர்கொள் படலம் > 20 உலாவியற் படலம் > 21 கோலம் காண் படலம் >22 கடிமணப் படலம் > 23 பரசுராமப் படலம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
பால காண்டம் - 19. எதிர்கொள் படலம்


தயரதன் பரிவாரங்களுடன் கங்கையைக் கடந்து மிதிலையை சார்தல்
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செங்கோல் வெண்குடை வேந்தர்வேந்தன்,
படா முக மலையில் தோன்றிப் பருவம் ஒத்து அருவி பல்கும்
கடா நிறை ஆறு பாயும் கடலொடும், கங்கை சேர்ந்தான். 1

கப்புடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற,
துப்புடை மணலிற்று ஆகி, கங்கை நீர் சுருங்கிக் காட்ட,
அப்புடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த,
உப்புடைக் கடலும், தெண் நீர் உண் நசை உற்றது அன்றே. 2

ஆண்டு நின்று எழுந்து போகி, அகன் பணை மிதிலை என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நிலக் கிழவன் எய்த,
தாண்டு மா புரவித் தானைத் தண்ணளிச் சனகன் என்னும்
தூண் தரு வயிரத் தோளான் செய்தது சொல்லலுற்றாம்: 3

தயரதனை எதிர்கொள்ள சனகன் சேனை புடை சூழ வரல்
'வந்தனன் அரசன்' என்ன, மனத்து எழும் உவகை பொங்க,
கந்து அடு களிறும், தேரும், கலின மாக் கடலும், சூழ,
சந்திரன் இரவிதன்னைச் சார்வது ஓர் தன்மை தோன்ற,
இந்திரதிருவன் தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான். 4

கங்கை நீர் நாடன் சேனை, மற்று உள கடல்கள் எல்லாம்
சங்குஇனம் ஆர்ப்ப வந்து சார்வன போல, சார,
பங்கயத்து அணங்கைத் தந்த பாற்கடல் எதிர்வதேபோல்,
மங்கையைப் பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே. 5

தயரதனின் தானைச் சிறப்பு
இலை குலாவு அயிலினான் அனிகம், ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்,
அலகு இல் மா களிறு, தேர், புரவி, ஆள், என விராய்,
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே. 6

தொங்கல், வெண்குடை, தொகைப் பிச்சம், உட்பட விராய்,
எங்கும் விண் புதைதரப் பகல் மறைந்து, இருள் எழ,
பங்கயம், செய்யவும், வெளியவும், பல படத்
தங்கு தாமரையுடைத் தானமே போலுமே. 7

கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்
படி உளாளோ? கடற் படை உளாளோ? பகர்
மடி இலா அரசினான் மார்பு உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம் - முளரியாள். 8

வார்முகம் கெழுவு கொங்கையர் கருங் குழலின் வண்டு
ஏர் முழங்கு அரவம் - ஏழ் இசை முழங்கு அரவமே!
தேர் முழங்கு அரவம் - வெண் திரை முழங்கு அரவமே!
கார் முழங்கு அரவம் - வெங் கரி முழங்கு அரவமே! 9

சூழு மா கடல்களும் திடர் பட, துகள் தவழ்ந்து,
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது அரோ-
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அப்
பூழையூடே பொடித்து, அப்புறம் போயதே! 10

மன் நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறைதர,
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது அரோ-
பொன் இடும், புவி இடும், புனை மணிக் கலன் எலாம்
மின் இடும்; வில் இடும்; வெயில் இடும்; நிலவு இடும்! 11

சனக மன்னன் வருகின்ற வழிக் காட்சிகள்
தா இல் மன்னவர்பிரான் வர, முரண் சனகனும்
ஏ வரும் சிலையினான், எதிர் வரும் நெறி எலாம்,
தூவு தண் சுண்ணமும், கனக நுண் தூளியும்,
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடி எலாம். 12

நறு விரைத் தேனும், நானமும், நறுங் குங்குமச்
செறி அகில் தேய்வையும், மான் மதத்து எக்கரும்,
வெறியுடைக் கலவையும், விரவு செஞ் சாந்தமும்,
செறி மதக் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம். 13

மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும்,
சென்று வந்து உலவும் அச் சிதைவு இலா நிழலின் நேர்,
வென்ற திண் கொடியொடும், நெடு விதானமும் விராய்,
நின்ற வெண்குடைகளின் நிழலுமே - நிழல் எலாம். 14

இரு மன்னர் சேனையும் ஒன்றுடன் ஒன்று கலந்த காட்சி
மாறு இலா மதுகையான் வரு பெருந் தானைமேல்,
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்றபோது,
ஈறு இல் ஓதையினொடும், எறி திரைப் பரவைமேல்
ஆறு பாய்கின்றது ஓர் அமலைபோல் ஆனதே. 15

தயரதன் சனகனைத் தழுவுதல்
கந்தையே பொரு கரிச் சனகனும், காதலொடு
உந்த, ஓத அரியது ஓர் தன்மையோடு, உலகு உளோர்
தந்தையே அனைய அத் தகவினான் முன்பு, தன்
சிந்தையே பொரு, நெடுந் தேரின் வந்து எய்தினான். 16

எய்த, அத் திரு நெடுந் தேர் இழிந்து, இனிய தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க, முன் சேறலும்,
கையின் வந்து, 'ஏறு' என, கடிதின் வந்து ஏறினான்;
ஐயனும், முகம் மலர்ந்து, அகம் உறத் தழுவினான். 17

சனகனோடு தயரதன் மிதிலை நகர் சேர்தல்
தழுவி நின்று, அவன் இருங் கிளையையும், தமரையும்,
வழு இல் சிந்தனையினான், வரிசையின் அளவளாய்,
'எழுக முந்துற' எனா, இனிது வந்து எய்தினான், -
உழுவை முந்து அரி அனான், எவரினும் உயரினான். 18

இராமனின் வருகை
இன்னவாறு, இருவரும், இனியவாறு ஏக, அத்
துன்னு மா நகரின் நின்று எதிர்வரத் துன்னினான் -
தன்னையே அனையவன், தழலையே அனையவன்,
பொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து அருளினான். 19

தம்பியும், தானும், அத் தானை மன்னவன் நகர்ப்
பம்பு திண் புரவியும், படைஞரும், புடை வர,
செம் பொனின், பசு மணித் தேரின் வந்து எய்தினான் -
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான். 20

யானையோ, பிடிகளோ, இரதமோ, இவுளியோ,
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் -
தானை ஏர் சனகன் ஏவலின், நெடுந் தாதை முன்
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே? 21

இராம இலக்குவரைத் தயரதன் தழுவுதல்
காவியும், குவளையும், கடி கொள் காயாவும் ஒத்து,
ஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உருவொடே,
தேவரும் தொழு கழல் சிறுவன், முன் பிரிவது ஓர்
ஆவி வந்தென்ன வந்து, அரசன் மாடு அணுகினான். 22

அனிகம் வந்து அடி தொழ, கடிது சென்று, அரசர்கோன்
இனிய பைங் கழல் பணிந்து எழுதலும், தழுவினான்;
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன, மலைத்
தனி நெடுஞ் சிலை இறத் தவழ் தடங் கிரிகளே. 23

இளைய பைங் குரிசில் வந்து, அடி பணிந்து எழுதலும்,
தளை வரும் தொடையல் மார்பு உற உறத் தழுவினான்,
களைவு அருந் துயர் அறக் ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான், எவரினும் மிகுதியான். 24

அன்னையர் அடி வணங்குதல்
கற்றை வார் சடையினான் கைக் கொளும் தனு இற,
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அக் குரிசில், பின்
பெற்ற தாயரையும், அப் பெற்றியின் தொழுது, எழுந்து
உற்றபோது, அவர் மனத்து உவகை யார் உரை செய்வார். 25

தன்னை வணங்கிய பரதனை இராமன் தழுவுதல்
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து, ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தர, தொழுது எழும் பரதனை,
பொன்னின் மார்பு உற அணைத்து, உயிர் உறப் புல்லினான் -
தன்னை அத் தாதை முன் தழுவினான் என்னவே. 26

இராமனை இலக்குவனும், பரதனைச் சத்துருக்கனும், வணங்கிப் போற்றுதல்
கரியவன் பின்பு சென்றவன், அருங் காதலின்
பெரியவன் தம்பி, என்று இனையது ஓர் பெருமை அப்
பொரு அருங் குமரர், தம் புனை நறுங் குஞ்சியால்,
இருவர் பைங் கழலும், வந்து, இருவரும் வருடினார். 27

குமரர்கள் நால்வரும் விளங்கிய காட்சி

'கோல் வரும் செம்மையும், குடை வரும் தன்மையும்,
சால் வரும் செல்வம்' என்று உணர் பெருந் தாதைபோல்,
மேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள், தாம் -
நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார். 28

சேனையுடன் முன் செல்ல இராமனுக்குத் தயரதன் பணித்தல்
சான்று எனத் தகைய செங்கோலினான், உயிர்கள்தாம்
ஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்,
'ஆன்ற இச் செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற'
தோன்றலை, 'கொண்டு முன் செல்க!' எனச் சொல்லினான். 29

சேனையின் மகிழ்ச்சி


காதலோ! அறிகிலம், கரிகளைப் பொருவினார்;
தீது இலா உவகையும், சிறிதுஅரோ? பெரிதுஅரோ?
கோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்,
தாதையோடு ஒத்தது, அத் தானையின் தன்மையே! 30

தம்பியருடன் இராமன் தேர் மீது சென்ற காட்சி
தொழுது இரண்டு அருகும், அன்புடைய தம்பியர் தொடர்ந்து,
அழிவு இல் சிந்தையின் உவந்து, ஆடல் மாமிசை வர,
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட, எழுந்து,
எழுத அருந் தகையது ஓர் தேரின்மேல் ஏகினான். 31

இராமன் மிதிலை நகர வீதி வந்து சேர்தல்
பஞ்சி சூழ் மெல் அடிப் பாவைமார் பண்ணைசூழ்,
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து, இடை விராய்,
நஞ்சு சூழ் விழிகள் பூ மழையின் மேல் விழ நடந்து,
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான். 32

சூடகம் துயல் வர, கோதை சோர்தர, மலர்ப்
பாடகம் - பரத நூல் பசுர, வெங் கட கரிக்
கோடு அரங்கிட எழும் குவி தடங் கொங்கையார்,
ஆடு அரங்கு அல்லவே - அணி அரங்கு அயல் எலாம். 33

பேதைமார் முதல் கடைப் பேரிளம்பெண்கள்தாம்,
ஏதி ஆர் மாரவேள் ஏவ, வந்து எய்தினார்,
ஆதி வானவர் பிரான் அணுகலால், அணி கொள் கார்
ஓதியார் வீதிவாய் உற்றவாறு உரைசெய்வாம்: 34


 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home