Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
ஆரணிய காண்டம்
-
1. விராதன் வதைப் படலம்
கடவுள் வாழ்த்து
பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவுஅரோ.
இராமன் இலக்குவன் சீதையொடு அத்திரி முனிவர் ஆசிரமம் அடைதல்
முத்து இருத்தி, அவ் இருந்தனைய மொய்ந் நகையொடும்,
சித்திரக் குனி சிலைக் குமரர், சென்று அணுகினார்-
அத்திரிப் பெயர் அருந் தவன் இருந்த அமைதி,
பத்திரப் பழுமரப் பொழில் துவன்று, பழுவம். 1
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற, திரள் பொன்
கைக் குறுங் கண் மலைபோல், குமரர் காமம் முதல் ஆம்
முக் குறும்பு அற எறிந்த வினை, வால், முனிவனைப்
புக்கு இறைஞ்சினர், அருந் தவன் உவந்து புகலும்: 2
'குமரர்! நீர் இவண், அடைந்து உதவு கொள்கை எளிதோ?
அமரர் யாவரொடும், எவ் உலகும் வந்த அளவே!
எமரின் யார் தவம் முயன்றவர்கள்?' என்று உருகினன் -
தமர் எலாம் வர, உவந்தனைய தன்மை முனிவன். 3
முவரும் தண்டக வனம் புகல்
அன்ன மா முனியொடு அன்று, அவண் உறைந்து, அவன் அரும்
பன்னி, கற்பின் அனசூயை பணியால், அணிகலன்,
துன்னு தூசினொடு சந்து, இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி, உயர் தண்டக வனம் புகுதலும். 4
விராதன் எதிர்ப்படல்
எட்டொடு எட்டு மத மா கரி, இரட்டி அரிமா,
வட்ட வெங் கண் வரை ஆளி பதினாறு, வகையின்
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கைத்
தொட்ட முத் தலை அயில் தொகை, மிடல் கழுவொடே, 5
செஞ் சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன்,
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்ததென, மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில்
பஞ்சு பட்டது பட, படியின்மேல் முடுகியே. 6
புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க, மழை சூழ்
விண் துளங்கிட, விலங்கல்கள் குலுங்க, வெயிலும்
கண்டு, உளம் கதிர் குறைந்திட, நெடுங்கடல் சுலாம்
மண் துளங்க, வய அந்தகன் மனம் தளரவே. 7
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற,
பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட,
செக்கர் வான் மழை நிகர்க்க, எதிர் உற்ற செருவத்து
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே, 8
படையொடு ஆடவர்கள், பாய் புரவி, மால் கயிறு, தேர்,
நடைய வாள் அரிகள், கோள் உழுவை, நண்ணிய எலாம்
அடைய வாரி, அரவால் முடி, அனேக வித, வன்
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே. 9
குன்று துன்றின எனக் குமுறு கோப மதமா
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தடக் கை உதவ,
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு பால்
மென்று, தின்று, விளியாது விரியும் பசியொடே, 10
பன்னகாதிபர் பணா மணி பறித்து, அவை பகுத்
தென்ன, வானவர் விமானம் இடையிட்டு அரவிடைத்
துன்னு கோளினொடு தாரகை, தொடுத்த துழனிச்
சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே. 11
பம்பு செக்கர், எரி, ஒக்கும் மயிர் பக்கம் எரிய,
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து, ஒளி குலாம்
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை, எயிறு ஒண்
கிம்புரிப் பெரிய தோள்வளையொடும் கிளரவே. 12
தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ,
பொங்கு வெங் கொடுமை என்பது புழுங்கி எழ, மா
மங்கு பாதகம், விடம், கனல், வயங்கு திமிரக்
கங்குல், பூசி வருகின்ற கலி காலம் எனவே, 13
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச்
சுற்றி, வாரண உரித் தொகுதி நீவி தொடர,
கொற்றம் மேவு திசை யானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாசுணம் விரித்து வரி, கச்சு ஒளிரவே. 14
செங் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய்,
வெங் கண் அங்கவலயங்களும், இலங்க விரவிச்
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்
கங்கணங்களும், இலங்கிய கரம் பிறழவே, 15
முந்து வெள்ளிமலை பொன்னின் மலையொடு முரண,
பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன்,
வந்து மண்ணினிடையோன் எனினும், வானினிடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன். 16
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு, புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன்; உரும் ஒத்த குரலன்;
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணிதப்
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான். 17
சார வந்து, அயல் விலங்கினன் - மரங்கள் தறையில்
பேர, வன் கிரி பிளந்து உக, வளர்ந்து இகல் பெறா
வீர வெஞ் சிலையினோர் எதிர், விராதன் எனும் அக்
கோர வெங் கண் உரும் ஏறு அன கொடுந் தொழிலினான். 18
சீதையை விராதன் கவர்தல்
'நில்லும், நில்லும்' என வந்து, நிணம் உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு வாய் முழை திறந்து,
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை, ஒரு கை,
சொல்லும் எல்லையில், முகந்து உயர் விசும்பு தொடர, 19
காளை மைந்தர் அது கண்டு, கதம் வந்து கதுவ,
தோளில் வெஞ் சிலை இடங் கொடு தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங் கையவர், 'வஞ்சனை; அடா!
மீள்தி; எங்கு அகல்தி' என்பது விளம்ப, அவனும், 20
'ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்;
ஏதி யாவதுவும் இன்றி, உலகு யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர் தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது' என்று புகல, 21
இராமன் போர் தொடுத்தல்
வீரனும் சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக,
'போர் அறிந்திலன் இவன்; தனது பொற்பும் முரணும்
தீரும், எஞ்சி' என, நெஞ்சின் உறு சிந்தை தெரிய,
பார வெஞ் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே. 22
இலை கொள் வேல் அடல் இராமன், எழு மேக உருவன்,
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு, திரை நீர்,
மலைகள், நீடு தலம், நாகர் பிலம், வானம் முதல் ஆம்
உலகம் ஏழும், உரும் ஏறு என ஒலித்து உரறவே, 23
விராதன் இராம இலக்குவனரை எதிர்த்தல்
வஞ்சகக் கொடிய பூசை நெடு வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன், என, சிறிது நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான் எதிர் அரக்கன் அழலா, 24
பேய்முகப் பிணி அற, பகைஞர் பெட்பின் உதிரம்
தோய் முகத்தது, கனத்தது, சுடர்க் குதிரையின்
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும்
தீ முகத் திரி சிகைப் படை திரித்து எறியவே. 25
திசையும், வானவரும், நின்ற திசை மாவும், உலகும்,
அசையும், ஆலம் என, அன்ன அயில் மின்னி வரலும்,
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே. 26
'இற்றது இன்றொடு இவ் அரக்கர் குலம்' என்று, பகலே,
வெற்ற விண்ணிடை நின்று நெடு மீன் விழுவபோல்,
சுற்று அமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே. 27
சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு, சிறிதும்
போர் ஒடுங்கலன், மறம்கொடு புழுங்கி, நிருதன்
பார் ஒடுங்குறு கரம்கொடு பருப்பதம் எலாம்
வேரொடும் கடிது எடுத்து, எதிர் விசைத்து, விடலும், 28
வட்டம் இட்ட கிரி அற்று உக, வயங்கு வயிரக்
கட்டு அமைந்த கதிர் வாளி, எதிரே கடவலால்,
விட்ட விட்ட மலை மீள, அவன் மெய்யில், விசையால்
பட்ட பட்ட இடம் எங்கும், உடல் ஊறுபடலும், 29
ஓம் அ ராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை, நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா-அணை துறந்து தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து, அது கொடு எற்ற வரலும், 30
ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால்
வேறு வேறு துணிசெய்து, அது விழுத்து, விசையால்
மாறு மாறு, நிமிர் தோளிடையும் மார்பினிடையும்
ஆறும் ஆறும் அயில் வெங் கணை அழுத்த, அவனும், 31
மொய்த்த முள் தனது உடல்-தலை தொளைப்ப, முடுகி,
கைத்தவற்றின் நிமிரக் கடிது கன்றி, விசிறும்
எய்த்த மெய்ப் பெரிய கேழல் என, எங்கும் விசையின்
தைத்த அக் கணை தெறிப்ப, மெய் சிலிர்த்து, உதறவே, 32
எரியின் வார் கணை இராமன் விட, எங்கும் நிலையாது
உருவி ஓட, மறம் ஓடுதல் செயா உணர்வினான்,
அருவி பாயும் வரைபோல் குருதி ஆறு பெருகிச்
சொரிய, வேக வலி கெட்டு, உணர்வு சோர்வுறுதலும், 33
விராதன் தோள் துணித்தல்
மெய் வரத்தினன், 'மிடல்-படை விடப் படுகிலன்;
செய்யும் மற்றும் இகல்' என்று, சின வாள் உருவி, 'வன்
கை துணித்தும்' என, முந்து கடுகி, படர் புயத்து,
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற, நிருதன், 34
உண்டு எழுந்த உணர்வு அவ்வயின் உணர்ந்து, முடுகி,
தண்டு எழுந்தனைய தோள்கொடு சுமந்து, தழுவி,
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி,
கொண்டு எழுந்தனன் - விழுந்து இழி கொழுங் குருதியான். 35
முந்து வான் முகடு உற, கடிது முட்டி, முடுகி,
சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன் அரோ-
வந்து மேருவினை நாள்தொறும் வலம்செய்து உழல்வோர்,
இந்து சூரியரை ஒத்து, இருவரும் பொலியவே. 36
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய்
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன், அறம்
சிவண தன்ன சிறைமுன் அவரொடு, ஏகு செலவித்து
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன் அரோ. 37
மா தயா உடைய தன் கணவன், வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந்தனள்; புலர்ந்து, பொடியில்,
கோதையோடும் ஒசி கொம்பு என, விழுந்தனள்-குலச்
சீதை, சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள். 38
பின்னை, ஏதும் உதவும் துணை பெறாள்; உரை பெறாள்;
மின்னை ஏய் இடை நுடங்கிட, விரைந்து தொடர்வாள்;
'அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு,
என்னையே நுகர்தி' என்றனள் - எழுந்து விழுவாள். 39
அழுது, வாய் குழறி, ஆர் உயிர் அழுங்கி, அலையா,
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து, இளையவன்
தொழுது, 'தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ?
பழுது, வாழி' என, ஊழி முதல்வன் பகர்வுறும்: 40
'ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி, இனிதின்
போகல் நன்று என நினைந்தனென்; இவன், பொரு இலோய்!
சாகல் இன்று பொருள் அன்று' என, நகும் தகைமையோன்,
வேக வெங் கழலின் உந்தலும், விராதன் விழவே, 41
விராதன் சாபம் நீங்கி விண்ணில் எழல்
தோள் இரண்டும் வடி வாள்கொடு துணித்து,விசையால்
மீளி மொய்ம்பினர் குதித்தலும், வெகுண்டு,புருவத்
தேள் இரண்டும் நெரிய, சினவு செங் கண் அரவக்
கோள் இரண்டு சுடரும் தொடர்வதின், குறுகலும், 42
புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும்,
விண்ணிடைப் படர்தல் விட்டு, எழு விகற்பம் நினையா,
எண்ணுடைக் குரிசில் எண்ணி, 'இளையோய்! இவனை, இம்
மண்ணிடைக் கடிது பொத்துதல் வழக்கு' எனலுமே, 43
மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய்,
நதம் உலாவு நளி நிர்வயின் அழுந்த, நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று
உதவு சேவடியினால், அமலன், உந்துதலுமே, 44
பட்ட தன்மையும் உணர்ந்து, படர் சாபம் இட, முன்
கட்ட வன் பிறவி தந்த, கடை ஆன, உடல்தான்
விட்டு, விண்ணிடை விளங்கினன்-விரிஞ்சன் என ஓர்
முட்டை தந்ததனில் வந்த முதல் முன்னவனினே. 45
பொறியின் ஒன்றி, அயல் சென்று திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும்,
அறிவு வந்து உதவ, நம்பனை அறிந்து, பகர்வான்: 46
விராதன் துதி
'வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ?
ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள்தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ? 47
'கடுத்த கராம் கதுவ, நிமிர் கை எடுத்து, மெய் கலங்கி,
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள, உறு துயரால்,
"அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே! பரமே!" என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப, நீயோ அன்று "ஏன்?" என்றாய்? 48
'புறங் காண, அகம் காணப் பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமா அன்! இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய, நீயேயோ கடவாய்தான்? 49
'துறப்பதே தொழிலாகத் தோன்றினோர் தோன்றியக்கால்,
மறப்பரோ தம்மை அது அன்றாகில், மற்று அவர் போல்
பிறப்பரோ? எவர்க்கு தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ!
இறப்பதே, பிறப்பதே, எனும் விளையாட்டு இனிது உகந்தோய்! 50
'பனி நின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும் புணை பற்றி,
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும், "நன்றி" என்ன,
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின்,
இனி, நின்ற முதல் தேவர் என்கொண்டு, என் செய்வாரே? 51
'ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி,
மாயாத வானவர்க்கும், மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும்,
நீ ஆதி முதல் தாதை, நெறி முறையால் ஈன்ற எடுத்த
தாய் ஆவார் யாவரே?-தருமத்தின் தனி மூர்த்தி! 52
'நீ ஆதி பரம்பரமும்: நின்னவே உலகங்கள்;
ஆயாத சமயமும் நின் அடியவே; அயல் இல்லை;
தீயாரின் ஒளித்தியால்; வெளி நின்றால் தீங்கு உண்டோ ?
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ? 53
'தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை நிலை அறியர்
மாயை இது என்கொலோ?-வாராதே வர வல்லாய்! 54
'"பன்னல் ஆம்" என்று உலகம் பலபலவும் நினையுமால்;
உன் அலால் பெருந் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே;
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்மாட்டு அருந் தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ? 55
'பொரு அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்,
இரு வினையும் உடையார் போல், அருந் தவம் நின்று இயற்றுவார்;
திரு உறையும் மணி மார்ப! நினக்கு என்னை செயற்பால?
ஒரு வினையும் இல்லார்போல் உறங்குதியால் - உறங்காதாய்! 56
'அரவு ஆகிச் சுமத்தியால், அயில் எயிற்றின் ஏந்துதியால்,
ஒரு வாயில் விழுங்குதியால், ஓர் அடியால் ஒளித்தியால்-
திரு ஆன நிலமகளை; இஃது அறிந்தால் சீறாளோ,
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள்? 57
'மெய்யைத் தான் சிறிது உணர்ந்து, நீ விதித்த மன்னுயிர்கள்,
உய்யத்தான் ஆகாதோ? உனக்கு என்ன குறை உண்டோ ?
வையத்தார், வானத்தார், மழுவாளிக்கு அன்று அளித்த
ஐயத்தால், சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர்; ஐயா! 58
'அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னை
முன்னம் ஆர் ஒதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை?-ஏனம் ஆய் மண் இடந்தாய்! 59
'ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந் தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்,
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.' 60
விராதன் வரலாறு
இற்று எலாம் இயம்பினான்
நிற்றலோடும், 'நீ இவ்வாறு
உற்றவாறு உணர்த்து' எனா,
வெற்றியான் விளம்பினான். 61
'கள்ள மாய வாழ்வு எலாம்
விள்ள, ஞானம் வீசு தாள்
வள்ளல், வாழி! கேள்' எனா,
உள்ளவாறு உணர்த்தினான்: 62
'இம்பர் உற்று இது எய்தினேன்
வெம்பு விற் கை வீர! பேர்
தும்புரு; தனதன் சூழ்
அம்பரத்து உளேன் அரேர் 63
'கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்,
இரக்கம் இன்றி ஏவினான்;
அரக்கன் மைந்தன் ஆயினேன்; 64
'அன்ன சாபம் மேவி நான்,
"இன்னல் தீர்வது ஏது" எனா,
"நின்ன தாளின் நீங்கும்" என்று,
உன்னும் எற்கு, உணர்த்தினான்; 65
அன்று மூலம், ஆதியாய்!
இன்று காறும் ஏழையேன்
நன்று தீது நாடலேன்;
தின்று, தீய தேடினேன்; 66
'தூண்ட நின்ற தொன்மைதான்
வேண்ட நின்ற வேத நூல்
பூண்ட நின் பொலம் கொள் தாள்
தீண்ட, இன்று தேறினேன்; 67
'திறத்தின் வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை, ஊழியாய்!
பொறுத்தி' என்று போயினான். 68
மூவரும் முனிவர் வாழ் சோலை அடைதல்
'தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான்' எனா,
பூ உலாவு பூவையோடு
ஏ வலாரும் ஏகினார். 69
கை கொள் கால வேலினார்,
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை, முன்னினார்;
வைகலானும் வைகினான். 70
மிகைப் பாடல்கள்
ஆதியானிடம் அமர்ந்தவளை அன்பின் அணையா,
ஏதில் இன்னல் அனசூயையை இறைஞ்ச, "இறையோய்!
வேத கீதம் அவை வெண் கடல் வெறிப்பு அரு புவி
ஓது முன் பிறவி ஒண் மதி தண்டம் உமிழ்வோய். 3-1
'உன்ன அங்கி தர, யோகிபெலை யோக சயனன் -
தன்னது அன்ன சரிதத் தையல் சமைத்த வினை இன்று
உன்னி, உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி. 3-2
'பருதியைத் தரும் முன் அத்திரி பதத்து அனுசனைக்
கருதி உய்த்திடுதல் காணுதி, கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனைப் பொதி சுமந்து கொள்' எனா,
தருதல் அங்கு அணைச் சயத்து அரசி சாரும் எனலும். 3-3
பாற்கடல் பணிய பாம்பு அணை பரம் பரமனை
ஏற்கை ஏத்தி இவண் எய்துதலின், என்னை எதிர
வாற்கலன் பொதி அசைந்தென கரத்தின் அணையா,
ஊர்க்க முன், பணி உவந்து அருள் எனப் பெரிதுஅரோ. 3-4
அன்றது அக் கடல் அளித்து அகல நின்று அளிதுஅரேர்
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின் அரேர்
வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல் அரேர்
இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ. 3-5
யோசனைப் புகுத யோகி முனி யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று அற அகற்று பழையோர்
ஓசை உற்ற பொருள் உற்றன எனப் பெரிது உவந்து,
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண். 4-1
ஆதி நான்மறையினாளரை அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர துடர்ச்சி மடவார்
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே. 4-2
விண்ணை ஆளி செய்த மாயையினில் மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம்
என்ன உன்னி, அதை எய்தினர் இறைஞ்சி, அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன் அரோ. 4-3
ஆடு அரம்பை நீடு அரங்கு-
ஊடு நின்று பாடலால்,
ஊடு வந்து கூட, இக்
கூடு வந்து கூடினேன். 62-1
வலம்செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அக்
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன். 64-1
வெம்பு விற்கை வீர! நீ
அம்பரத்து நாதனால்,
தும்புருத்தன் வாய்மையால்,
இம்பர் உற்றது ஈதுஅரோ. 65-1
|