Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > 1 ஆற்றுப் படலம் > 2 நாட்டுப் படலம் > 3 நகரப் படலம் > 4 அரசியற் படலம் > 5 திரு அவதாரப் படலம் > 6 கையடைப் படலம் > 7 தாடகை வதைப் படலம் >8 வேள்விப் படலம் > 9 அகலிகைப் படலம் > 10 மிதிலைக் காட்சிப் படலம் > 11 குலமுறை கிளத்து படலம் > 12 கார்முகப் படலம் >13 எழுச்சிப் படலம் > 14 சந்திர சயிலப் படலம் > 15 வரைப் காட்சிப் படலம் >16 பூக் கொய் படலம் > 17 நீர் விளையாட்டுப் படலம் > 18 உண்டாட்டுப் படலம் > 19 எதிர்கொள் படலம் > 20 உலாவியற் படலம் > 21 கோலம் காண் படலம் >22 கடிமணப் படலம் > 23 பரசுராமப் படலம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
பால காண்டம் - 10. மிதிலைக் காட்சிப் படலம்


மிதிலையில் அசைந்தாடிய கொடிகள்
'மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா! 1

நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
'தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்' என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார். 2

பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின் சூழ்ந்த
அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார். 3

மூவரும் மிதிலையினுள் புகுதல்
ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார். 4

விழுமிய வீதிகளைக் கடந்து செல்லுதல்
சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார். 5

தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப,
ஆறும் ஆய், கலின மா விலாழியால் அழிந்து, ஓர் ஆறு ஆய்,
சேறும் ஆய், தேர்கள் ஓடத் துகளும் ஆய், ஒன்றோடு ஒன்று
மாறு மாறு ஆகி, வாளா கிடக்கிலா மறுகில், சென்றார். 6

தண்டுதல் இன்றி ஒன்றி, தலைத்தலைச் சிறந்த காதல்
உண்டபின், கலவிப் போரின் ஒசிந்த மென் மகளிரேபோல்,
பண் தரு கிளவியார்தம் புலவியில் பரிந்த கோதை,
வண்டொடு கிடந்து, தேன் சோர், மணி நெடுந் தெருவில் சென்றார். 7

வீதிகளில் கண்ட காட்சிகள்
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்,
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க,
கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார். 8

பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி,
காசு அறு பவளச் செங் காய் மரகதக் கமுகு பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் சிந்தையொடு உலவக் கண்டார். 9

வரப்பு அறு மணியும், பொன்னும், ஆரமும், கவரி வாலும்,
சுரத்திடை அகிலும், மஞ்ஞைத் தோகையும், தும்பிக் கொம்பும்,
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்புற, கரைகள்தோறும்
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார். 10

வள் உகிர்த் தளிர்க் கை நோவ மாடகம் பற்றி, வார்ந்த
கள் என நரம்பு வீக்கி, கையொடு மனமும் கூட்டி,
வெள்ளிய முறுவல் தோன்ற, விருந்து என மகளிர் ஈந்த
தௌ; விளிப் பாணித் தீம் தேன் செவி மடுத்து, இனிது சென்றார். 11

கொட்பு உறு கலினப் பாய் மா, குலால் மகன் முடுக்கி விட்ட
மட் கலத் திகிரி போல, வாளியின் வருவ, மேலோர்
நட்பினின் இடையறாவாய், ஞானிகள் உணர்வின் ஒன்றாய்,
கட்புலத்து இனைய என்று தெரிவு இல, திரியக் கண்டார். 12

தயிர் உறு மத்தின் காம சரம் பட, தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின், ஒன்றை ஒன்று ஒருவகில்லா,
செயிர் உறு மனத்த ஆகி, தீத் திரள் செங் கண் சிந்த,
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார். 13

வாளரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்
கேளொடு கிடந்த நீலச் சுருளும், செங் கிடையும், கொண்டு,
நீள் இருங் களங்கம் நீக்கி, நிரை மணி மாட நெற்றிச்
சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார். 14

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும், ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல்,
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார். 15

மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்
பை அரவு அல்குலார் தம் உள்ளமும், பளிங்கும், போல,
மை அரி நெடுங் கண் நோக்கம் படுதலும் கருகி, வந்து
கை புகின் சிவந்து, காட்டும் கந்துகம் பலவும் கண்டார். 16

கடகமும், குழையும், பூணும், ஆரமும், கலிங்க நுண் நூல்
வடகமும், மகர யாழும் வட்டினி கொடுத்து, வாசத்
தொடையல் அம் கோதை சோர, பளிக்கு நாய் சிவப்பத் தொட்டு;
படை நெடுங் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார். 17

பங்கயம், குவளை, ஆம்பல், படர் கொடி வள்ளை, நீலம்,
செங் கிடை, தரங்கம், கெண்டை, சினை வரால், இனைய தேம்ப்
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி, சாலும்
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார். 18

இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி,
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன,
புயங்களில் கலவைச் சாந்தும், புணர் முலைச் சுவடும் நீங்கா,
பயம் கெழு குமரர் வட்டு-ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார். 19

வெஞ் சினம் உருவிற்று என்னும் மேனியர், வேண்டிற்று ஈயும்
நெஞ்சினர், ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார்,
செஞ் சிலைக் கரத்தர், மாதர் புலவிகள் திருத்திச் சேந்த
குஞ்சியர், சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார். 20

பாகு ஒக்கும் சொல் பைங் கிளியோடும் பல பேசி,
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும்
தோகைக் கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்றுப்
போகக் கண்டு, வண்டுஇனம் ஆர்க்கும் பொழில் கண்டார். 21

அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழியை அடைந்தனர்
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய,
இம்பர்த் தோன்றும் நாகர்தம் நாட்டின் எழில் காட்டி,
பம்பிப் பொங்கும் கங்கையின் ஆழ்ந்த, படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும், அகழ் கண்டார். 22

கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்
பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள். 23

செப்பும்காலை, செங் கமலத்தோன் முதல் யாரும்,
எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்,
அப் பெண் தானே ஆயின போது, இங்கு, அயல் வேறு ஓர்
ஒப்பு எங்கே கொண்டு, எவ் வகை நாடி, உரை செய்வேம்? 24

உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர், காட்சிக் கரை காணார்,
'இமையா நாட்டம் பெற்றிலம்' என்றார்; 'இரு கண்ணால்
அமையாது' என்றார்-அந்தர வானத்தவர் எல்லாம். 25

வென்று அம் மானை, தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற, மானப் பேர் கயல் அஞ்ச, பிறழ் கண்ணாள்,
குன்றம் ஆட, கோவின் அளிக்கும் கடல் அன்றி,
அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள். 26

'பெருந்தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணைத்
தரும், தான்' என்றால், நான்முகன் இன்னும் தரலாமே?-
அருந்தா அந்தத் தேவர் இரந்தால், அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது, என் இனி நல்கும் மணி ஆழி? 27

அனையாள் மேனி கண்டபின், அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேற் கண்
இனையோர், உள்ளத்து இன்னலினோர்; தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே? 28

மலர்மேல் நின்று இம் மங்கை இவ் வையத்திடை வைக,
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்
அலகு ஓவு இல்லா அந்தணரோ? நல் அறமேயோ?
உலகோ? வானோ? உம்பர்கொலோ? ஈது உணரேமால்! 29

தன் நேர் இல்லா மங்கையர், 'செங்கைத் தளிர் மானே!
அன்னே! தேனே! ஆர் அமிழ்தே!' என்று அடி போற்றி,
முன்னே, முன்னே, மொய்ம் மலர் தூவி, முறை சார,
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள். 30

பொன் சேர் மென் கால் கிண்கிணி, ஆரம், புனை ஆரம்,
கொன் சேர் அல்குல் மேகலை, தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில் காண, சத கோடி
மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள். 31

'கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும்' என்ன மதர்க்கும் விழி கொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும், திண்
கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள். 32

வெங் களி விழிக்கு ஒரு விழவும் ஆய், அவர்
கண்களின் காணவே களிப்பு நல்கலால்,
மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்,
எங்கள் நாயகற்கு, இனி, யாவது ஆம்கொலோ? 33

இழைகளும் குழைகளும் இன்ன, முன்னமே,
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும்
பழகிய எனினும், இப் பாவை தோன்றலால்,
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே! 34

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு, காதல் கொள்ளுதல்
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 35

நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன்
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே. 36

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார். 37

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் -
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? 38

இராமன் முனிவருடன் போக அவன் நினைவால் சீதை ஓவியப்பாவைபோல் நிற்றல்
அந்தம் இல் நோக்கு இமை அணைகிலாமையால்,
பைந்தொடி, ஓவியப் பாவை போன்றனள்;
சிந்தையும், நிறையும், மெய்ந் நலனும், பின் செல,
மைந்தனும், முனியொடு மறையப் போயினான். 39

சீதையின் காதல் நோய்
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும்?-
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலம், மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே! 40

மால் உற வருதலும், மனமும் மெய்யும், தன்
நூல் உறு மருங்குல்போல், நுடங்குவாள்; நெடுங்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்,
பால் உறு பிரை என, பரந்தது எங்குமே. 41

நோம்; உரும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
ஊமரின், மனத்திடை உன்னி, விம்முவாள்;
காமனும், ஒரு சரம் கருத்தின் எய்தனன் -
வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே. 42

நிழல் இடு குண்டலம் அதனின், நெய் இடா,
அழல் இடா, மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள்,
சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர,
தழல் இடு வல்லியே போல, சாம்பினான். 43

தழங்கிய கலைகளும், நிறையும், சங்கமும்,
மழுங்கிய உள்ளமும், அறிவும், மாமையும்,
இழந்தவள்-இமையவர் கடைய, யாவையும்,
வழங்கிய கடல் என-வறியள் ஆயினாள். 44

வருந்திச் சோர்ந்த சீதையைத் தோழியர் மலர்ப்படுக்கையில் சேர்த்தல்
கலம் குழைந்து உக, நெடு நானும் கண் அற,
நலம் குழைதர, நகில்முகத்தின் ஏவுண்டு,
மலங்கு உழை என, உயிர் வருந்திச் சோர்தர,
பொலங் குழை மயிலைக் கொண்டு, அரிதின் போயினார். 45

காதொடும் குழை பொரு கயற் கண் நங்கை தன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம்
தாதொடும் குழையொடும் அடுத்த, தண் பனிச்
சீத நுண் துளி, மலர் அமளிச் சேர்த்தினார். 46

காதல் நோயால் துயருற்ற சீதையின் நிலை
தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்-
பூளை வீ புரை பனிப் புயற்குப் தேம்பிய
தாள தாமரைமலர் ததைந்த பொய்கையும்,
வாள் அரா நுங்கிய மதியும், போலவே. 47

மலை முகட்டு இடத்து உகு மழைக்கண் ஆலிபோல்,
முலை முகட்டு உதிர்ந்தன, நெடுங் கண் முத்துஇனம்;
சிலை நுதற்கடை உறை செறிந்த வேர்வு, தன்
உலை முகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே. 48

 

கம்பம் இல் கொடு மனக் காம வேடன் கை
அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்,
வெம்புறு மனத்து அனல் வெதுப்ப, மென் மலர்க்
கொம்பு என, அமளியில் குழைந்து சாய்ந்தனள். 49
சொரிந்தன நறு மலர் சுருக் கொண்டு ஏறின்
பொரிந்தன கலவைகள், பொரியின் சிந்தின்
எரிந்த வெங் கனல் சுட, இழையில் கோத்த நூல்
பரிந்தன் கரிந்தன, பல்லவங்களே. 50

நோய் முதல் அறியாது, தாதியர் முதலியோர் தவித்தல்
தாதியர், செவிலியர், தாயர், தவ்வையர்,
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கின்ர்;
'யாதுகொல் இது?' என, எண்ணல் தேற்றலர்;
போதுடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர். 51

காதல் நோயால் துயருற்ற சீதையின் தோற்றம்
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்டக் கால்
எரியினை மிகுத்திட, இழையும், மாலையும்,
கரிகுவ, தீகுவ, கனல்வ, காட்டலால்,
உருகு பொற் பாவையும் ஒத்துத் தோன்றினாள். 52

'அல்லினை வகுத்தது ஓர் அலங்கற் காடு' எனும்;
'வல் எழு; அல்லவேல், மரகதப் பெருங்
கல்' எனும், 'இரு புயம்'; 'கமலம் கண்' எனும்;
'வில்லொடும் இழிந்தது ஓர் மேகம்' என்னுமால். 53

'நெருக்கி உள் புகுந்து, அரு நிறையும் பெண்மையும்
உருக்கி, என் உயிரொடு உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே! 54

'உரைசெயின், தேவர்தம் உலகு உளான் அலன்-
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன், மார்பின் நூலினன்,
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால். 55

'பெண் வழி நலனொடும், பிறந்த நாணொடும்,
எண்வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன் -
மண் வழி நடந்து, அடி வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்? 56

இராமனை நினைத்து சீதை உருகுதல்
'இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரை தோளுமே, அல்
முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே! 57

படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்,
தடந் தரு தாமரைத் தாளுமே, அல்
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்,
நடந்தது, கிடந்தது, என் உள்ளம் நண்ணியே. 58

'பிறந்துடை நலம் நிறை பிணித்த எந்திரம்,
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அக் குமரனை, இன்னும், கண்ணிற் கண்டு,
அறிந்து, உயிர் இழக்கவும் ஆகுமேகொலாம்?' 59

என்று இவை இனையன விளம்பும் ஏல்வையின்,
'நின்றனன், இவண்' எனும்; 'நீங்கினான்' எனும்;
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்,
ஒன்று அல, பல நினைந்து, உருகும் காலையே. 60

அந்திமாலையின் தோற்றமும்
அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ,
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என,
நல் நெடுங் கரங்களை நடுக்கி, ஓடிப் போய்,-
முன்னை வெங் கதிரவன் - கடலில் மூழ்கினான். 61

விரி மலர்த் தென்றல் ஆம் வீசு பாசமும்,
எரி நிறச் செக்கரும், இருளும், காட்டலால்,
அரியவட்கு அனல் தரும் அந்திமாலையாம்
கரு நிறச் செம் மயிர்க் காலன் தோன்றினான். 62

மீது அறை பறவை ஆம் பறையும், கீழ் விளி
ஓத மென் சிலம்பொடும், உதிரச் செக்கரும்,
பாதக இருள் செய் கஞ்சுகமும், பற்றலால்,
சாதகர் என்னவும் தகைத்து - அம் மாலையே. 63

மாலைப் பொழுதில் சீதையின் மன நிலையும் புலம்பலும்
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து, கடி நாள் மலரின் விடம் பூசி,
இயங்கு தென்றல் மன்மதவேள் எய்த புண்ணினிடை நுழைய,
உயங்கும் உணர்வும், நல் நலமும், உருகிச் சோர்வாள் உயிர் உண்ண
வயங்கு மாலை வான் நோக்கி, 'இதுவோ கூற்றின் வடிவு?' என்றாள். 64

'கடலோ? மழையோ? முழு நீலக் கல்லோ? காயா நறும் போதோ?
படர் பூங் குவளை நாள் மலரோ? நீலோற்பலமோ? பானலோ?-
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ?' என்று தளர்வாள்முன்,
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே! 65

'மை வான் நிறத்து, மீன் எயிற்று, வாடை உயிர்ப்பின், வளர் செக்கர்ப்
பை வாய் அந்திப் பட அரவே! என்னை வளைத்துப் பகைத்தியால்?
எய்வான் ஒருவன் கை ஓயான்; உயிரும் ஒன்றே; இனி இல்லை;
உய்வான் உற, இப் பழி பூண, உன்னோடு எனக்குப் பகை உண்டோ ? 66

ஆலம் உலகில் பரந்ததுவோ? ஆழி கிளர்ந்ததோ? அவர்தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க, அதுவாய் நிரம்பியதோ?
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து, காயத்தின்
மேலும், நிலத்தும், மெழுகியதோ?-விளைக்கும் இருலாய் விளைந்ததுவே! 67

வெளி நின்றவரோ போய் மறைந்தார்; விலக்க, ஒருவர்தமைக் காணேன்;
"எளியள், பெண்" என்று இரங்காதே, எல்லி யாமத்து இருளூடே,
ஒளி அம்பு எய்யும் மன்மதனார், உனக்கு இம் மாயம் உரைத்தாரோ?
அளியென் செய்த தீவினையே! அந்தி ஆகி வந்தாயோ? 68

நெய் விளக்கு அகற்றி, மணி விளக்கு அமைத்துத் தோழியர் உபசரித்தல்
ஆண்டு, அங்கு, அனையாள், இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை, அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெருங் கோயில், சீத மணியின் வேதிகைவாய்,
'நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய' என்று, அங்கு, அவை நீக்கி,
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால், இரவைப் பகல் செய்தார். 69

திங்களின் தோற்றம்
பெருந் திண் நெடு மால் வரை நிறுவி, பிணித்த பாம்பின் மணித் தாம்பின்
விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க,
இருந்த அமரர் கலக்கிய நாள், அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது - ஆழி வெண் திங்கள். 70

வண்டு ஆய், அயன் நான்மறை பாட, மலர்ந்தது ஒரு தாமரைப் போது,
பண்டு ஆலிலையின்மிசைக் கிடந்து, பாரும் நீரும், பசித்தான்போல்,
உண்டான் உந்திக் கடல் பூத்தது; ஓதக் கடலும், தான் வேறு ஓர்
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது - ஆழி வெண் திங்கள். 71

புள்ளிக் குறி இட்டென ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில், சிறந்த இருட் பிழம்பை நக்கி நிமிரும் நிலாக் கற்றை, -
கிள்ளைக் கிளவிக்கு என்னாம்கொல்?-கீழ்பால் திசையின்மிசை வைத்த
வெள்ளிக் கும்பத்து இளங் கமுகின் பாளை போன்று விரிந்துளதால், 72

வண்ண மாலை கைபரப்பி, உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி, தண் மதியத்து உதயத்து எழுந்த நிலாக் கற்றை-
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கிக் கொண்ட, விரி நல் நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன் புகழ்போல்-எங்கும் பரந்துளதால், 73

நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடுவெண் திங்கள் எனும் தச்சன்,
மீ, தன் கரங்கள் அவை பரப்பி, மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்,
'காத்த கண்ணன் மணி உந்திக் கமல நாளத்திடைப் பண்டு
பூத்த அண்டம் பழையது' என்று, புதுக்குவானும் போன்றுளதால். 74

தாமரை மலர் குவிய, ஆம்பல் அலர்தல்
விரை செய் கமலப் பெரும் போது, விரும்பிப் புகுந்த திருவினொடும்
குரை செய் வண்டின் குழாம் இரிய, கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்;
உரை செய் திகிரிதனை உருட்டி, ஒரு கோல் ஓச்சி, உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க, தலை எடுத்த குறும்பு போன்றது, அரக்கு ஆம்பல். 75

சீதை நிலவை பழித்துரைத்தல்
'நீங்கா மாயையவர் தமக்கு நிறமே தோற்றுப் புறமே போய்,
ஏங்காக் கிடக்கும் எறி கடற்கும், எனக்கும், கொடியை ஆனாயே-
ஓங்கா நின்ற இருளாய் வந்து, உலகை விழுங்கி, மேன்மேலும்
வீங்கா நின்ற கர் நெருப்பினிடையே எழுந்த வெண் நெருப்பே! 76

'கொடியை அல்லை; நீ யாரையும் கொல்கிலாய்;
வடு இல் இன் அமுதத்தொடும், வந்தனை,
பிடியின் மென் நடைப் பெண்ணொடு; என்றால், எனைச்
சுடுதியோ?-கடல் தோன்றிய திங்களே! 77

காதல் நோயால் சீதை பட்ட பாடு
மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
மோது மத்திகை மென் முலைமேல் பட,
ஓதிமப் பெடை வெங் கனல் உற்றென,
போது மொய்த்த அமளிப் புரண்டாள் அரோ! 78

நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்
தாக்க, வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரைப்
பூக்கள் பட்டது அப் பூவையும் பட்டனள். 79

வாச மென் கலவைக் களி வாரி, மேல்
பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்;
வீச வீச வெதும்பினள், மென் முலை;-
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்கொலோ? 80

மலர்ப் படுக்கை கரிய, சேடியர் மேலும் மலர் கொண்டு வந்து குவித்தல்
தாயரின் பரி சேடியர், தாது உகு
வீ, அரித் தளிர், மெல் அணை, மேனியில்
காய் எரிக் கரியக் கரிய, கொணர்ந்து,
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார். 81

கன்னி நல் நகரில், கமழ் சேக்கையுள்,
அன்னம், இன்னணம் ஆயினள்; ஆயவள்,
மின்னின் மின்னிய, மேனி கண்டான் எனச்
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம். 82


சனகன் எதிர்கொள்ள மூவரும் சென்று, ஓர் மாளிகையில் தங்குதல்
ஏகி, மன்னனைக் கண்டு, எதிர் கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட,
போக பூமியில் பொன்னகர் அன்னது ஓர்
மாக மாடத்து, அனைவரும் வைகினார். 83

சதானந்த முனிவர் அவ்விடம் வந்து முகமன் உரைத்தல்
வைகும் அவ் வழி, மா தவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தென, தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான். 84

வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும், சென்று எதிர்,
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து, கோசிகன் தன் மருங்கு எய்தினான். 85

கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன் தனை மா முகம் நோக்கி, 'இப்
போது நீ இவண் போத, இப் பூதலம்
ஏது செய்த தவம்?' என்று இயம்பினான். 86

இடர் முடித்தான் இவ் இளவல் என விசுவாமித்திரன் மொழிதல்
பூந் தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி, நூல்
தோய்ந்த சிந்தைக் கௌசிகன் சொல்லுவான்: 87

'வடித்த மாதவ! கேட்டி இவ் வள்ளல்தான்
இடித்த வெங் குரல் தாடகை யாக்கையும்,
அடுத்து என் வேள்வியும், நின் அன்னை சாபமும்,
முடித்து, என் நெஞ்சத்து இடர் முடித்தான்' என்றான். 88

'உன் அருள் இருக்கும் போது எய்த முடியாததும் உளதோ?'
எனத் சதானந்த முனிவர் வினவுதல்
என்று கோசிகன் கூறிட, ஈறு இலா
வன் தபோதனன், 'மா தவ! நின் அருள்
இன்றுதான் உளதேல், அரிது யாது, இந்த
வென்றி வீரர்க்கு?' எனவும் விளம்பி, மேல், 89

சதானந்தர் இராம இலக்குவருக்கு விசுவாமித்திரர் வரலாறு உரைத்தல்
எள் இல் பூவையும், இந்திர நீலமும்,
அள்ளல் வேலையும், அம்புத சாலமும்,
விள்ளும் வீயுடைப் பானலும், மேவும் மெய்
வள்ளல்தன்னை மதிமுகம் நோக்கியே, 90

'நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென், கேள்: இவ் அருந் தவன்
இறை எனப் புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினின் புரந்தே அருள் முற்றினான். 91

'அரசின் வைகி அறனின் அமைந்துழி,
விரசு கானிடைச் சென்றனன், வேட்டைமேல்;
உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனைப்
பரசுவான் அவன்பால் அணைந்தான் அரோ. 92

அருந்ததி கணவன் வேந்தற்கு அருங் கடன் முறையின் ஆற்றி,
"இருந்தருள் தருதி" என்ன, இருந்துழி, "இனிது நிற்கு
விருந்து இனிது அமைப்பென்" என்னா, சுரபியை விளித்து, "நீயே
சுரந்தருள் அமிர்தம்" என்ன, அருள்முறை சுரந்தது அன்றே. 93

'"அறு சுவைத்து ஆய உண்டி, அரச! நின் அனிகத்தோடும்
பெறுக!" என அளித்து, வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை,
நறு மலர்த் தாரும் வாசக் கலவையும் நல்கலோடும்,
உறு துயர் தணிந்து, மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான்: 94

'மாதவ! எழுந்திலாய், நீ; வயப்புடைப் படைகட்கு எல்லாம்
கோது அறும் அமுதம் இக்கோ உதவிய கொள்கைதன்னால்,
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர்,
'மே தகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு' என்கைதன்னால், 95

'"நிற்கு இது தருவது அன்றால், நீடு அருஞ் சுரபிதன்னை
எற்கு அருள்" என்றலோடும், இயம்பலன் யாதும், பின்னர்,
"வற்கலை உடையென் யானோ வழங்கலென்; வருவது ஆகின்,
கொற் கொள் வேல் உழவ! நீயே கொண்டு அகல்க!" என்று கூற, 96

'"பணித்தது புரிவென்" என்னா, பார்த்திபன் எழுந்து, பொங்கி,
பிணித்தனன் சுரபிதன்னை; பெயர்வுழி, பிணியை வீட்டி,
"மணித் தடந் தோளினாற்குக் கொடுத்தியோ, மறைகள் யாவும்
கணித்த எம் பெரும்?" என்ன, கலை மறை முனிவன் சொல்வான்: 97

'"கொடுத்திலென், யானே; மற்று இக் குடைகெழு வேந்தந்தானே
பிடித்து அகல்வுற்றது" என்ன, பெருஞ் சினம் கதுவும் நெஞ்சோடு,
"இடித்து எழு முரச வேந்தன் சேனையை யானே இன்று
முடிக்குவென், காண்டி" என்னா, மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே. 98

'பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும் கபிலைமாட்டு உதித்து, வேந்தன்
துப்புடைச் சேனை யாவும் தொலைவுறத் துணித்தலோடும்,
வெப்புடைக் கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார். 99

'"சுரபிதன் வலி இது அன்றால்; சுருதி நூல் உணர வல்ல
வர முனி வஞ்சம்" என்னா, "மற்று அவன் சிரத்தை இன்னே
அரிகுதும்" என்னப் பொங்கி, அடர்த்தனர்; அடர, அன்னான்
எரி எழ விழித்தலோடும், இறந்தனர் குமரர் எல்லாம். 100

'ஐ-இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா,
நெய் பொழி கனலின் பொங்கி, நெடுங் கொடித் தேர் கடாவி,
கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி,
எய்தனன்; முனியும், தன கைத் தண்டினை, "எதிர்க" என்றான். 101

'கடவுளர் படைகள் ஈறாக் கற்றன படைகள் யாவும்
விட விட, முனிவன் தண்டம் விழுங்கி மேல் விளங்கல் காணா,
வடவரைவில்லி தன்னை வணங்கினன் வழுத்தலோடும்,
அடல் உறு படை ஒன்று ஈயா, அன்னவன் அகன்றான் அன்றே. 102

'விட்டனன் படையை வேந்தன்; விண்ணுளோர், "உலகை எல்லாம்
சுட்டனன்" என்ன, அஞ்சித் துளங்கினர்; முனியும் தோன்றி,
கிட்டிய படையை உண்டு கிளர்ந்தனன், கிளரும் மேனி
முட்ட வெம் பொறிகள் சிந்த் பொரு படை முரணது இற்றே. 103

'கண்டனன் அரசன்; காணா, "கலை மறை முனிவர்க்கு அல்லால்,
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால்;
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று" என்னா,
ஒண் தவம் புரிய எண்ணி, உம்பர்கோன் திசையை உற்றான். 104

'மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி,
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்கோன் பொலியும் நீர்மை
காண்டலும், அமரர் வேந்தன் துணுக்குறு கருத்தினோடும்
தூண்டினன், அரம்பைமாருள் திலோத்தமை எனும் சொல் மானை. 105

'அன்னவள் மேனி காணா, அனங்க வேள் சரங்கள் பாய,
தன் உணர்வு அழிந்து காதற் சலதியின் அழுந்தி, வேந்தன்,
பன்ன அரும் பகல் தீர்வுற்று, பரிணிதர் தெரித்த நூலின்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி, நஞ்சு எனக் கனன்று, நக்கான். 106

'"விண் முழுது ஆளி செய்த வினை" என வெகுண்டு, "நீ போய்,
மண்மகள் ஆதி" என்று, மடவரல் தன்னை ஏவி,
கண் மலர் சிவப்ப, உள்ளம் கறுப்புறக் கடிதின் ஏகி,
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான். 107

'தென் திசை அதனை நண்ணிச் செய் தவம் செய்யும் செவ்வி,
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான்
தன் துணைக் குருவை நண்ணி, "தனுவொடும் துறக்கம் எய்த
இன்று எனக்கு அருளுக!" என்ன, "யான் அறிந்திலென் அது" என்றான். 108

'"நினக்கு ஒலாது ஆகின், ஐய! நீள் நிலத்து யாவரேனும்
மனக்கு இனியாரை நாடி, வகுப்பல் யான், வேள்வி" என்ன,
"சினக் கொடுந் திறலோய்! முன்னர்த் தேசிகற் பிழைத்து, வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றாய்; நீசன் ஆய் விடுதி" என்றான். 109

'மலர் உளோன் மைந்தன்-மைந்த!- வழங்கிய சாபம் தன்னால்
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து, அரசர் கோமான்,
புலரி அம் கமலம்போலும் பொலிவு ஒரீஇ, வதனம், பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே. 110

'காசொடு முடியும் பூணும் கரியதாம் கனகம் போன்றும்,
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம் போன்றும்,
மாசொடு கருகி, மேனி வனப்பு அழிந்திட, ஊர் வந்தான்;
"சீசி" என்று யாரும் எள்ள, திகைப்பொடு பழுவம் சேர்ந்தான். 111

'கானிடைச் சிறிது வைகல் கழித்து, ஒர் நாள், கௌசிகப் பேர்க்
கோன் இனிது உறையும் சோலை குறுகினன்; குறுக, அன்னான்,
"ஈனன் நீ யாவன்? என்னை நேர்ந்தது. இவ் இடையில்?" என்ன,
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன், வணங்கி, வேந்தன். 112

'"இற்றதோ?" என நக்கு, அன்னான், "யான் இரு வேள்வி முற்றி,
மற்று உலகு அளிப்பென்" என்னா, மா தவர்தம்மைக் கூவ,
சுற்றுறு முனிவர் யாரும் தொக்கனர்; வசிட்டன் மைந்தர்,
"சுற்றிலம், அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு ஈவான்." 113

'என்று உரைத்து, "யாங்கள் ஒல்லோம்" என்றனர்; என்னப் பொங்கி,
"புன் தொழில் கிராதர் ஆகிப் போக" எனப் புகறலோடும்,
அன்று அவர் எயினர் ஆகி, அடவிகள் தோறும் சென்றார்;
நின்று வேள்வியையும் முற்றி, 'நிராசனர் வருக!' என்றான். 114

'"அரைசன் இப் புலையற்கு என்னே அனல்துறை முற்றி, எம்மை
விரைசுக வல்லை என்பான்! விழுமிது!" என்று இகழ்ந்து நக்கார்,
புரைசை மா களிற்று வேந்தை, "போக நீ துறக்கம்; யானே
உரைசெய்தேன், தவத்தின்" என்ன, ஓங்கினன் விமானத்து உம்பர். 115

'ஆங்கு அவன் துறக்கம் எய்த, அமரர்கள் வெகுண்டு, "நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே? இரு நிலத்து இழிக!" என்ன,
தாங்கல் இல்லாது வீழ்வான், "தாபதா! சரணம்" என்ன,
ஓங்கினன், "நில் நில்!" என்ன உரைத்து, உரும் ஒக்க நக்கான். 116

'"பேணலாது இகழ்ந்த விண்ணோர் பெரும் பதம் முதலா மற்றைச்
சேண் முழுது அமைப்பல்" என்னா, "செழுங் கதிர், கோள், நாள், திங்கள்,
மாண் ஒளி கெடாது, தெற்கு வடக்கவாய் வருக!" என்று,
"தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென்" என்னும் வேலை. 117

'நறைத் தரு உடைய கோனும், நான்முகக் கடவுள் தானும்,
கறைத் தரு களனும், மற்றைக் கடவுளர் பிறரும், தொக்கு,
"பொறுத்தருள், முனிவ! நின்னைப் புகல் புகுந்தவனைப் போற்றும்
அறத் திறன் நன்று; தாரா கணத்தொடும் அமைக, அன்னான். 118

'"அரச மா தவன் நீ ஆதி; ஐந்து நாள் தென்பால் வந்து, உன்
புரை விளங்கிடுக!" என்னா, கடவுளர் போய பின்னர்,
நிரை தவன் விரைவின் ஏகி, நெடுங் கடற்கு இறைவன் வைகும்
உரவு இடம் அதனை நண்ணி, உறு தவம் உஞற்றும் காலை, 119

'குதை வரி சிலை வாள் தானைக் கோமகன் அம்பரீடன்,
சுதை தரு மொழியன், வையத்து உயிர்க்கு உயிர் ஆய தோன்றல்,
வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தற் கொள்வான்,
சிதைவு இலன், கனகம் தேர் கொண்டு, அடவிகள் துருவிச் சென்றான். 120

'நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி,
கொற்றவன் வினவலோடும், இசைந்தனர்; குமரர்தம்முள்
பெற்றவள், "இளவல் எற்கே" என்றனள்; பிதா, "முன்" என்றான்;
மற்றைய மைந்தன் நக்கு, மன்னவன் தன்னை நோக்கி, 121

'"கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று, ஒற்கம் ஆம் விழுமம் குன்ற,
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு" என்று அவன் - தொழுது வேந்தன்
தடுப்ப அருந் தேரின் ஏறி, தடை இலாப் படர் தலோடும்,
சுடர்க் கதிர்க் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான். 122

'அவ் வயின் இழிந்து வேந்தன் அருங் கடன் முறையின் ஆற்ற,
செவ்விய குரிசில்தானும் சென்றனன், நியமம் செய்வான்;
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டுக் காணா,
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான். 123

'விறப்பொடு வணக்கம் செய்த விடலையை இனிது நோக்கி,
சிறப்புடை முனிவன், "என்னே தெருமரல்? செப்புக!" என்ன,
"அறப் பொருள் உணர்ந்தோய்! என் தன் அன்னையும் அத்தன் தானும்,
உறப் பொருள் கொண்டு, வேந்தற்கு உதவினர்" என்றான், உற்றோன். 124

'மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா,
"தத்துறல் ஒழி நீ; யானே தடுப்பென், நின் உயிரை" என்னா,
புத்திரர் தம்மை நோக்கி, "போக வேந்தோடும்" என்ன,
அத் தகு முனிவன் கூற, அவர் மறுத்து அகறல் காணா, 125

'எழும் கதிரவனும் நாணச் சிவந்தனன் இரு கண்; நெஞ்சம்
புழுங்கினன்; வடவை தீய மயிர்ப்புறம் பொறியின் துள்ள,
அழுங்க இல் சிந்தையீர்! நீர் அடவிகள்தோறும் சென்றே,
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி, உறு துயர் உறுக!' என்றான். 126

'மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர்
தாம் உறு சவரர் ஆகச் சபித்து, எதிர், "சலித்த சிந்தை
ஏமுறல் ஒழிக! இன்னே பெறுக!" என இரண்டு விஞ்சை
கோ மருகனுக்கு நல்கி, பின்னரும் குணிக்கலுற்றான்: 127

'"அரசனோடு ஏகி யூபத்து அணைக்குபு இம் மறையை ஓதின்,
விரசுவர் விண்ணுளோரும் விரிஞ்சனும் விடைவலோனும்;
உரை செறி வேள்வி முற்றும்; உனது உயிர்க்கு ஈறு உண்டாகர்
பிரச மென் தாரோய்!" என்ன, பழிச்சொடும் பெயர்ந்து போனான். 128

'மறை முனி உரைத்த வண்ணம் மகத்து உறை மைந்தன் ஆய,
சிறை உறு கலுழன், அன்னம், சே, முதல் பிறவும் ஊரும்
இறைவர் தொக்கு அமரர் சூழ, இளவல் தன் உயிரும், வேந்தன்
முறை தரு மகமும், காத்தார்; வட திசை முனியும் சென்றான். 130

'வடா திசை முனியும் நண்ணி, மலர்க் கரம் நாசி வைத்து, ஆங்கு,
இடாவு பிங்கலையால் நைய, இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி,
விடாது பல் பருவம் நிற்ப, மூல மா முகடு விண்டு,
தடாது இருள் படலை மூட, சலித்தது எத் தலமும், தாவி. 131

'எயில் உரித்தவன் யானை உரித்த நாள்,
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என,
புயல் விரித்து எழுந்தாலென, பூதலம்
குயிலுறுத்தி, கொழும் புகை விம்மவே. 132

'தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற,
நிமிர்ந்த வெங் கதிர்க் கற்றையும் நீங்குற,
கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்,
சுமந்த நாகமும், கண் சும்புளித்தவே. 133

'திரிவ நிற்ப செக தலத்து யாவையும்,
வெருவலுற்றன் வெங் கதிர் மீண்டன்
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட, உம்பர் துளங்கினார். 134

'புண்டரீகனும், புள் திருப் பாகனும்,
குண்டை ஊர்தி, குலிசியும், மற்று உள
அண்டர் தாமும், வந்து, அவ் வயின் எய்தி, வேறு,
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர். 135

'பாதி மா மதி சூடியும், பைந் துழாய்ச்
சோதியோனும், அத் தூய் மலராளியும்,
"வேத பாரகர், வேறு இலர், நீ அலால்;
மா தபோதன!" என்ன வழங்கினர். 136

'அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,
சென்னி தாழ்ந்து, இரு செங் கை மலர் குவித்து,
"உன்னு நல் வினை உற்றது" என்று ஓங்கினான்;
துன்னு தேவர்தம் சூழலுள் போயினார். 137

சதானந்தர் இராம இலக்குவரை வாழ்த்தி தம் இடம் பெயர்தல்
'ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்;
யாது உமக்கு அரிது?' என்றனன், ஈறு இலான். 138

என்று கோதமன் காதலன் கூறிட,
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா,
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை, ஏத்திப் பெய்ர்ந்தனன், தன் இடம். 56

இராமன் சீதை நினைவாய் இருத்தல்
முனியும் தம்பியும் போய், முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தியபின், இருட்
கனியும் போல்பவன், கங்குலும், திங்களும்,
தனியும், தானும், அத் தையலும், ஆயினான். 139

சீதையின் உருவெளிப்பாடு
'விண்ணின் நீங்கிய மின் உரு, இம் முறை,
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?
எண்ணின், ஈது அலது என்று அறியேன்; இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால். 140

வள்ளல் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பாற்கடல்போல் மிளிர் கண்ணினாள்,
அள்ளல் பூமகள் ஆகும்கொலோ-எனது
உள்ளத் தாமரையுள் உறைகின்றதே? 141

அருள் இலாள் எனினும், மனத்து ஆசையால்,
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்கலால்,
தெருள் இலா உலகில், சென்று, நின்று, வாழ்
பொருள் எலாம், அவள் பொன் உரு ஆயவே! 142

'பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவது ஒர் காலம் உண்டாம்கொலோ? 143

'வண்ண மேகலைத் தேர் ஒன்று, வாள் நெடுங்
கண் இரண்டு, கதிர் முலைதாம் இரண்டு,
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ? 144

'கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்,
பொன்னை முன்னிய பூங் கணை மாரியால்,
என்னை எய்து தொலைக்கும் என்றால், இனி,
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே? 145

'கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா,
உள்ள உள்ள உயிரைத் துருவிட,
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ? 146

'ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!' 147

திங்களின் மறைவும், நிலா ஒளி மழுங்கலும்
கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும், மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதற் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும், ஆழ்ந்தது-திங்களே. 148

வீசுகின்ற நிலாச் சுடர் வீந்ததால்-
ஈசன் ஆம் மதி ஏகலும், சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே. 149

சூரிய உதயமும், ஒளி பரவுதலும்
ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து, தளரும் ஏல்வை,
சிதையும் மனத்து இடருடைய செங்கமல முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவைப் போர்வை போர்த்த
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியேபோல், உதயம் செய்தான். 150

விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி
பசை ஆக, மறையவர் கைந் நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய,
அசையாத நெடு வரையின் முகடுதொறும் இளங் கதிர் சென்று அளைந்து, வெய்யோன்,
திசை ஆளும் மத கரியைச் சிந்தூரம் அப்பியபோல் சிவந்த மாதோ! 151

பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையின், பொருள் வயினின், பிரிந்து போன
வண்டு தொடர் நறுந் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணித் தேரோடும்,
கண்டு மனம் களி சிறப்ப, ஒளி சிறந்து, மெலிவு அகலும் கற்பினார்போல்,
புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து பொலிந்தன-பூம் பொய்கை எல்லாம். 152

எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும், கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தாலென விரிந்த - கதிர்கள் எல்லாம். 152

இராமன் துயில் நீத்து எழுதல்
கொல் ஆழி நீத்து, அங்கு ஓர் குனி வயிரச் சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே. 153

மூவரும் சனகனது வேள்விச் சாலை சென்று சார்தல்
ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர, உறக்கம் நீத்த
குழி யானையின் எழுந்து, தொல் நியமத் துறை முடித்து, சுருதி அன்ன
வாழி மாதவற் பணிந்து, மனக்கு இனிய தம்பியொடும், வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித் தார்ச் சனகன் பெரு வேள்விச் சாலை சார்ந்தான். 154

மிகைப் பாடல்கள்
இன்ன பல் வளங்கள் எல்லாம் இனிதுற நோக்கி, யார்க்கும்
முன்னவன் ஆய தேவும், முனிவனும், இளைய கோவும்,
பொன்னகர் இறையும் மற்றைப் பூதலத்து அரசும் ஒவ்வா
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தைச் சேர்ந்தார். 20-1

நங்கையர் விழிக்கு நல் விழவும் ஆய், அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவும் ஆய்,
அங்கு அவர்க்கு அமுதும் ஆய், வந்த சானகி
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்கொலோ? 32-1

தீங்கு செய் அரக்கர் தம் வருக்கம் தீயவும்,
ஓங்கிய தவங்களும், உலகும், வேதமும்
தாங்கி மேல் வளரவும், தழைத்த சானகி
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள். 52-1

அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
வெப்புறு வெங் கதிர் பரப்ப, விண் எலாம்
கொப்புளங் கொண்டென, உடுக்கள் கூர்ந்தவே. 76-1

நின்றனன் அரசன் என்றான்; நீ எனைக் கொண்டு போகை
நன்று என மொழிந்து நின்றான், நல்கிய தாயை நோக்கி,
'இன்று எனகி கொடுத்தியோ?' என்று இறைஞ்சினன் கசிந்து நின்றான்;
தன் துணை மார்பில் சேர்த்துத் தழுவலும், அவனை நோக்கி. 39-1

'என்று கூறி, இமையவர் தங்கள் முன்
வன் தபோத வதிட்டன் வந்து, என்னையே,
"நின்ற அந்தணனே" என நேர்ந்தவன்,
வென்றி வெந் திறல் தேவர் வியப்புற. 53-1

காதலால் ஒருத்தியை நினைப்ப, கண் துயில்
மாதராள் அவன் திறம் மறுப்ப, கங்குல் மான்,
'ஏதிலான் தமியன்' என்று, 'ஏகலேன்' என,
ஆதலால் இருந்தனன்; அளியன் என் செய்வான்? 61-1

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home