| 
 Kamba Ramayanam   
		கம்பர் இயற்றிய கம்பராமாயணம் 
		யுத்த காண்டம் - 
		30. மூலபல வதைப் படலம் 
		 
		சேனைத் தலைவர்களுக்கு இராவணன் 
		இட்ட கட்டளை 
		 
		'வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு வழி சென்று, 
		ஊன் அறக் குறைத்து, உயிர் உண்பென்; நீயிர் போய், ஒருங்கே 
		ஆன மற்றவர் இருவரைக் கோறீர்' என்று அறைந்தான் - 
		தானவப் பெருங் கரிகளை வாள் கொண்டு தடிந்தான். 1 
		 
		என உரைத்தலும், எழுந்து, தம் இரத மேல் ஏறி, 
		கனை திரைக் கடல் சேனையைக் கலந்தது காணா, 
		'வினையம் மற்று இலை; மூல மாத் தானையை விரைவோடு 
		இனையர் முன் செல, ஏவுக!' என்று இராவணன் இசைத்தான். 2 
		 
		இராவணனும் தேர்மீது ஏறி, இராமன் சேனையைத் தாக்குதல் 
		 
		ஏவி அப் பெருந் தானையை, தானும் வேட்டு எழுந்தான், 
		தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன், சில்லிஅம் தேர் மேல், 
		காவல் மூவகை உலகமும் முனிவரும் கலங்க, 
		பூவை வண்ணத்தன் சேனைமேல் ஒரு புறம் போனான். 3 
		 
		மூலபலச் சேனையின் இயல்பு 
		 
		'எழுக, சேனை!' என்று, யானை மேல் மணி முரசு எற்றி, 
		வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும், வல்லைக் 
		குழுவி ஈண்டியது என்பரால், குவலயம் முழுதும் 
		தழுவி, விண்ணையும் திசையையும் தடவும் அத் தானை. 4 
		 
		அடங்கும் வேலைகள், அண்டத்தின் அகத்து; அகல் மலையும் 
		அடங்கும், மன் உயிர் அனைத்தும்; அவ் வரைப்பிடை அவைபோல், 
		அடங்குமே, மற்று அப் பெரும் படை அரக்கர்தம் யாக்கை, 
		அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் அல்லால்? 5 
		 
		மூலபலப் படை வீரரின் தன்மை 
		 
		அறத்தைத் தின்று, அருங் கருணையைப் பருகி, வேறு அமைந்த 
		மறத்தைப் பூண்டு, வெம் பாவத்தை மணம் புணர் மணாளர், 
		நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர், நெருப்புக்கு நெருப்பாய், 
		புறத்தும் பொங்கிய பங்கியர், காலனும் புகழ்வார்; 6 
		 
		நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி, 
		வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி, 
		தூண்டு வான் உரும் ஏற்றினைச் செவிதொறும் தூக்கி, 
		மூண்ட வான் மழை உரித்து உடுத்து, உலாவரும் மூர்க்கர்; 7 
		 
		மால் வரைக் குலம் பரல் என, மழைக் குலம் சிலம்பா, 
		கால் வரைப் பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைங் கழலார்; 
		மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர்; 
		நால் வரைக் கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார்; 8 
		 
		உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின், உடனே 
		மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்; 
		தண்ணின் நீர் முறை தப்பிடின், தடக் கையால் தடவி, 
		விண்ணின் மேகத்தை வாரி, வாய்ப் பிழிந்திடும் விடாயர்; 9 
		 
		உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ 
		எறிந்து, வேல் நிலை காண்பவர்; இந்துவால் யாக்கை 
		சொறிந்து, தீர்வு உறு தினவினர்; மலைகளைச் சுற்றி 
		அறைந்து, கற்ற மாத் தண்டினர்; அசனியின் ஆர்ப்பர்; 10 
		 
		சூலம் வாங்கிடின், சுடர் மழு எறிந்திடின், சுடர் வாள் 
		கோல வெஞ் சிலை பிடித்திடின், கொற்ற வேல் கொள்ளின், 
		சால வான் தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், 
		காலன், மால், சிவன், குமரன், என்று, இவரையும் கடப்பார்; 11 
		 
		ஒருவரே வல்லர், ஓர் உலகத்தினை வெல்ல் 
		இருவர் வேண்டுவர், ஏழ் உலகத்தையும் இறுக்க் 
		திரிவரேல், உடன் திரிதரும், நெடு நிலம்; செவ்வே 
		வருவரேல், உடன், கடல்களும் தொடர்ந்து, பின் வருமால். 12 
		 
		நால் வகைச் சேனைகளின் அளவும் அணியும் 
		 
		மேகம் எத்தனை, அத்தனை மால் கரி; விரிந்த 
		நாகம் எத்தனை, அத்தனை நளிர் மணித் தேர்கள்; 
		போகம் எத்தனை, அத்தனை புரவியின் ஈட்டம்; 
		ஆகம் எத்தனை, அத்தனை அவன் படை அவதி. 13 
		 
		இன்ன தன்மைய யானை, தேர், இவுளி, என்று இவற்றின் 
		பன்னு பல்லணம், பருமம், மற்று உறுப்பொடு பலவும், 
		பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த 
		சின்னம் உள்ளன இல்லன, மெய்ம் முற்றும் தெரிந்தால். 14 
		 
		இப் பெரும் படை எழுந்து இரைந்து ஏக, மேல் எழுந்த 
		துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீத் தூர்ப்ப, 
		தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது; கரி மதம் தழுவ, 
		உப்பு நீங்கியது, ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி. 15 
		 
		மலையும், வேலையும், மற்று உள பொருள்களும், வானோர் 
		நிலையும், அப் புறத்து உலகங்கள் யாவையும், நிரம்ப 
		உலைவுறாவகை உண்டு, பண்டு உமிழ்ந்த பேர் ஒருமைத் 
		தலைவன் வாய் ஒத்த - இலங்கையின் வாயில்கள் தருவ. 16 
		 
		கடம் பொறா மதக் களிறு, தேர், பரி, இடை கடவ, 
		படம் பொறாமையின் நனந் தலை அனந்தனும் பதைத்தான்; 
		விடம் பொறாது இரி அமரர்போல குரங்குஇனம் மிதிக்கும் 
		இடம் பொறாமை உற்று, இரிந்து போய், வட வரை இறுத்த. 17 
		 
		ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த 
		எழு வேலையும், இடு வலை; அரக்கரே இன மர் 
		வாழி காலனும் விதியும் வௌ; வினையுமே, மள்ளர்; 
		தோழம் மா மதில் இலங்கை; மால் வேட்டம் மேல் தொடர்ந்தார். 18 
		 
		ஆர்த்த ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ? 
		கார்த் திண் மால் கரி முழக்கமோ? வாசியின் கலிப்போ? 
		போர்த்த பல் இயத்து அரவமோ? - நெருக்கினால் புழுங்கி 
		வேர்த்த அண்டத்தை வெடித்திடப் பொலிந்தது, மேன்மேல். 19 
		 
		வழங்கு பல் படை மீனது; மத கரி மகரம் முழங்குகின்றது; முரி திரைப் பரியது; 
		முரசம் 
		தழங்கு பேர் ஒலி கலிப்பது; தறுகண் மா நிருதப் 
		புழுங்கு வெஞ் சினச் சுறவது - நிறைபடைப் புணரி. 20 
		 
		தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்தம் தானை 
		பசும் புல் தண் தலம் மிதித்தலின், கரி படு மதத்தின் 
		அசும்பின் சேறு பட்டு, அளறு பட்டு, அமிழுமால், அடங்க் 
		விசும்பின் சேறலின் கிடந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. 21 
		 
		தேவர்கள் சிவபெருமானிடத்து முறையிடுதல் 
		 
		படியைப் பார்த்தனர்; பரவையைப் பார்த்தனர்; படர் வான் 
		முடியைப் பார்த்தனர்; பார்த்தனர், நெடுந் திசை முழுதும்; 
		வெடியைப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்; மிடைந்த 
		கொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர், வானவர் குலைந்தார். 22 
		 
		'உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா, 
		அலகு இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ? அன்றேல், 
		விலகு நீர்த் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் 
		அலகு இல் பல் உருப் படைத்தனவோ?' என அயிர்த்தார். 23 
		 
		நடுங்கி, நஞ்சு அடை கண்டனை, வானவர், 'நம்ப! 
		ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம்; உயிரைப் 
		பிடுங்கி உண்குவர்; யார், இவர் பெருமை பண்டு அறிந்தார்? 
		முடிந்தது, எம் வலி' என்றனர், ஓடுவான் முயல்வார். 24 
		 
		'ஒருவரைக் கொல்ல, ஆயிரம் இராமர் வந்து, ஒருங்கே 
		இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால், என் ஆம்? 
		நிருதரைக் கொல்வது, இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ? 
		பொருவது, இப் படை கண்டு, தம் உயிர் பொறுத்து அன்றோ?' 25 
		 
		தேவர்களின் அச்சத்தை சிவபெருமான் போக்குதல் 
		 
		என்று இறைஞ்சலும், மணி மிடற்று இறைவனும், 'இனி, நீர் 
		ஒன்றும் அஞ்சலிர்; வஞ்சனை அரக்கரை ஒருங்கே 
		கொன்று நீக்கும், அக் கொற்றவன்; இக் குலம் எல்லாம் 
		பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம்' எனப் புகன்றான். 26 
		 
		மூலபலப் படையைக் கண்டு, வானரங்கள் அஞ்சி ஓடுதல் 
		 
		புற்றின் நின்று வல் அரவு இனம் புறப்பட, பொருமி, 
		'இற்றது, எம் வலி' என விரைந்து இரிதரும் எலிபோல், 
		மற்றை வானரப் பெருங் கடல் பயம் கொண்டு மறுகி, 
		கொற்ற வீரரைப் பார்த்திலது; இரிந்தது, குலைவால். 27 
		 
		அணையின்மேல் சென்ற, சில சில் ஆழியை நீந்தப் 
		புணைகள் தேடின, சில் சில நீந்தின போன் 
		துணைகளோடு புக்கு, அழுந்தின சில் சில தோன்றாப் 
		பணைகள் ஏறின் மலை முழைப் புக்கன, பலவால். 28 
		 
		'அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர்; அடைய 
		உடைத்துப் போதுமால், அவர் தொடராமல்' என்று, உரைத்த் 
		'புடைத்துச் செல்குவர், விசும்பினும்' என்றன் 'போதோன் 
		படைத்த திக்கு எலாம் பரந்தனர்' என்றன, பயத்தால். 29 
		 
		அரியின் வேந்தனும், அனுமனும், அங்கதன் அவனும், 
		பிரியகிற்றிலர் இறைவனை, நின்றனர் பின்றார்; 
		இரியலுற்றனர் மற்றையோர் யாவரும்; எறி நீர் 
		விரியும் வேலையும் கடந்தனர்; நோக்கினன், வீரன். 30 
		 
		மூலபலச் சேனைப் பற்றி வீடணன் இராமனுக்கு எடுத்துரைத்தல் 
		 
		'இக் கொடும் படை எங்கு உளது? இயம்புதி' என்றான்; 
		மெய்க் கொடுந் திறல் வீடணன் விளம்புவான்: 'வீர! 
		திக்கு அனைத்தினும், ஏழு மாத் தீவினும், தீயோர் 
		புக்கு அழைத்திடப் புகுந்துளது, இராக்கதப் புணரி. 31 
		 
		'ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்நின்று ஏறி, 
		ஊழி முற்றிய கடல் எனப் புகுந்ததும் உளதால்; 
		வாழி மற்று அவன் மூல மாத் தானை முன் வருவ் 
		ஆழி வேறு இனி அப் புறத்து இல்லை, வாள் அரக்கர். 32 
		 
		'ஈண்டு, இவ் அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் 
		மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க் 
		மாண்டு வீழும் இன்று, என்கின்றது என் மதி; வலி ஊழ் 
		தூண்டுகின்றது' என்று, அடி மலர் தொழுது, அவன் சொன்னான். 33 
		 
		வானர வீரரை அழைத்து வருமாறு அங்கதனை இராமன் ஏவுதல் 
		 
		கேட்ட அண்ணலும், முறுவலும் சீற்றமும் கிளர, 
		'காட்டுகின்றனென்; காணுதி ஒரு கணத்து' என்னா, 
		'ஓட்டின் மேற்கொண்ட தானையைப் பயம் துடைத்து, உரவோய்! 
		மீட்டிகொல்?' என, அங்கதன் ஓடினன் விரைந்தான். 34 
		 
		அங்கதனுக்கு படைத்தலைவர்கள் தாம் ஓடியதற்கு உற்ற காரணத்தை உரைத்தல் 
		 
		சென்று சேனையை உற்றனன், 'சிறை சிறை கெடுவீர்! 
		நின்று கேட்டபின், நீங்குமின்' எனச் சொல்லி நேர்வான்; 
		'ஒன்றும் கேட்கிலம்' என்றது அக் குரக்கு இனம்; உரையால் 
		வென்றி வெந் திறல் படைப் பெருந் தலைவர்கள் மீண்டார். 35 
		 
		மீண்டு, வேலையின் வட கரை, ஆண்டு ஒரு வெற்பின் 
		ஈண்டினார்களை, 'என் குறித்து இரிவுற்றது?' என்றான்; 
		'ஆண்ட நாயக! கண்டிலை போலும், நீ அவரை? 
		மாண்டு செய்வது என்?' என்று உரை கூறினர், மறுப்பார். 36 
		 
		'ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள், 
		செருவின் உற்றவை, கொற்றவ! மறத்தியோ? தெரியின், 
		பொரு இல் மற்றவர் இற்றிலர், யாரொடும் பொருவார்; 
		இருவர் வில் பிடித்து, யாவரைத் தடுத்து நின்று எய்வார்? 37 
		 
		'புரம் கடந்த அப் புனிதனே முதலிய புலவோர் 
		வரங்கள் தந்து, உலகு அளிப்பவர் யாவரும், மாட்டார், 
		கரந்து அடங்கினர்; இனி, மற்று அவ் அரக்கரைக் கடப்பார் 
		குரங்கு கொண்டு வந்து, அமர் செயும் மானுடர் கொல்லாம்? 38 
		 
		'ஊழி ஆயிர கோடி நின்று, உருத்திரனோடும் 
		ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன் அவனும், 
		சூழ ஓடினார்; ஒருவனைக் கொன்று, தம் தோளால் 
		வீழுமா செய்ய வல்லரேல், வென்றியின் நன்றே! 39 
		 
		'என் அப்பா! மற்று, இவ் எழுபது வெள்ளமும், ஒருவன் 
		தின்னப் போதுமோ? தேவரின் வலியமோ, சிறியேம்? 
		முன் இப் பார் எலாம் படைத்தவன், நாள் எலாம் முறை நின்று, 
		உன்னிப் பார்த்து நின்று, உறையிடப் போதுமோ, யூகம்? 40 
		 
		'"நாயகன் தலை பத்து உள் கையும் நால்-ஐந்து" என்று 
		ஓயும் உள்ளத்தேம்; ஒருவன் மற்று இவண் வந்து, இங்கு உற்றார் 
		ஆயிரம் தலை; அதற்கு இரட்டிக் கையர்; ஐயா! 
		பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால்! 41 
		 
		'கும்பகன்னன் என்று உளன், மற்று இங்கு ஒருவன், கைக் கொண்ட 
		அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்; அவன் செய்தது அறிதி; 
		உம்பர் அன்றியே, உணர்வு உடையார் பிறர் உளரோ? 
		நம்பி! நீயும் உன் தனிமையை அறிந்திலை; நடந்தாய். 42 
		 
		'அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர் 
		தனுவின் ஆற்றலும், தம் உயிர் தாங்கவும் சாலர் 
		கனியும் காய்களும் உணவு உள் முழை உள, கரக்க் 
		மனிதர் ஆளின் என், இராக்கதன் ஆளின் என், வையம்? 43 
		 
		'தாம் உளார் அலரே, புகழ் திருவொடும் தரிப்பார்? 
		யாம் உளோம் எனின், எம் கிளை உள்ளது; எம் பெரும! 
		"போமின் நீர்" என்று விடை தரத் தக்கனை, புரப்போய்! 
		"சாமின் நீர்" என்றல் தருமம் அன்று' என்றனர், தளர்ந்தார். 44 
		 
		அங்கதன் சாம்பனை நோக்கி, 'ஓடுவது தகாது' என உரைத்தல் 
		 
		'சாம்பனை வதனம் நோக்கி, வாலிசேய், "அறிவு சான்றோய்! 
		பாம்புஅணை அமலனே மற்று இராமன்" என்று, எமக்குப் பண்டே 
		ஏம்பல் வந்து எய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லையோ, நீ? 
		ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய்! 45 
		 
		'தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி, இத் தெருள் இலோரை 
		ஆற்றுவாய் அல்லை; நீயும் அஞ்சினை போலும்! ஆவி 
		போற்றுவாய் என்ற போது, புகழ் என் ஆம்? புலமை என் ஆம்? 
		கூற்றின்வாய் உற்றால், வீரம் குறைவரே இறைமை கொண்டார்? 46 
		 
		'அஞ்சினாம்; பழியும் பூண்டாம்; அம் புவி யாண்டும், ஆவி 
		துஞ்சுமாறு அன்றி, வாழ ஒண்ணுமோ, நாள்மேல் தோன்றின்? 
		நஞ்சு வாய் இட்டாலன்ன அமுது அன்றோ? நம்மை, அம்மா, 
		தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே! 47 
		 
		'தானவரோடும், மற்றைச் சக்கரத் தலைவனோடும், 
		வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி - 
		ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ? 
		மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும்? - மேலோய்! 48 
		 
		'எத்தனை அரக்கரேனும், தருமம் ஆண்டு இல்லை அன்றே; 
		அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ? 
		பித்தரைப் போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை 
		ஒத்திலது' என்னச் சொன்னான், அவன் இவை உரைப்பதானான்: 49 
		 
		சாம்பவான் மறுமொழி 
		 
		நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து, பின்னர், 
		'தூண் ஒத்த திரள் தோள் வீர! தோன்றிய அரக்கர் தோற்றம் 
		காணத்தான், நிற்கத்தான், அக் கறை மிடற்றவற்கும் ஆமே? 
		கோணற் பூ உண்ணும் வாழ்க்கைக் குரங்கின்மேல் குற்றம் உண்டோ? 50 
		 
		'தேவரும் அவுணர்தாமும் செருப் பண்டு செய்த காலம், 
		ஏவரே என்னால் காணப்பட்டிலர்? இருக்கை ஆன்ற 
		மூவகை உலகின் உள்ளார்; இவர் துணை ஆற்றல் முற்றும் 
		பாவகர் உளரோ? கூற்றை அஞ்சினால், பழியும் உண்டோ? 51 
		 
		'மாலியைக் கண்டேன்; பின்னை, மாலியவானைக் கண்டேன்; 
		கால நேமியையும் கண்டேன்; இரணியன் தனையும் கண்டேன்; 
		ஆல மா விடமும் கண்டேன்; மதுவினை அனுசனோடும் 
		வேலையைக் கலக்கக் கண்டேன்; இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ ? 52 
		 
		'வலி இதன் மேலே, பெற்ற வரத்தினர்; மாயம் வல்லோர்; 
		ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர்; உள்ளம் நோக்கின், 
		கலியினும் கொடியர்; கற்ற படைக்கலக் கரத்தர்; என்றால், 
		மெலிகுவது அன்றி உண்டோ , விண்ணவர் வெருவல் கண்டால்? 53 
		 
		'ஆகினும், ஐயம் வேண்டர் அழகிது அன்று; அமரின் அஞ்சிச் 
		சாகினும், பெயர்ந்த தன்மை பழி தரும்; நரகில் தள்ளும்; 
		ஏகுதும், மீள் இன்னும் இயம்புவது உளதால்; ஐய! 
		மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும்? 54 
		 
		சாம்பனுக்கு அங்கதன் தேறுதல் மொழிகள் உரைத்தல் 
		 
		'எடுத்தலும், சாய்தல்தானும், எதிர்த்தலும், எதிர்ந்தோர் தம்மைப் 
		படுத்தலும், வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற, மேல் நாள்; 
		அடுத்ததே அஃது; நிற்க் அன்றியும் ஒன்று கூறக் 
		கடுத்தது; கேட்டும் ஈண்டு, இங்கு இருந்துவீர், ஏது நோக்கின். 55 
		 
		'ஒன்றும் நீர் அஞ்சல், ஐய! யாம் எலாம் ஒருங்கே சென்று, 
		நின்றும், ஒன்று இயற்றல் ஆற்றேம்; நேமியான் தானே நேர்ந்து, 
		கொன்று போர் கடக்கும் ஆயின்; கொள்ளுதும் வென்றி; அன்றேல், 
		பொன்றுதும், அவனோடு' என்றான்; 'போதலே அழகிற்று' என்றான். 56 
		 
		சேனைத் தலைவர் மீண்டு வருதல் 
		 
		'ஈண்டிய தானை நீங்க, நிற்பது என்? யாமே சென்று, 
		பூண்ட வெம் பழியினோடும் போந்தனம்; போதும்' என்னா, 
		மீண்டனர் தலைவர் எல்லாம், அங்கதனோடும்; வீரன் 
		மூண்ட வெம் படையை நோக்கி, தம்பிக்கு மொழிவதானான்: 57 
		 
		'அத்த! நீ உணர்தி அன்றே, அரக்கர்தான், அவுணரேதான், 
		எத்தனை உளர் என்றாலும், யான் சிலை எடுத்தபோது, 
		தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு எனத் தொலையும் தன்மை? 
		ஒத்தது; ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால். 58 
		 
		மாருதியுடனும் சுக்கிரீவனுடன் சென்று, வானரத் தானையைக் காக்குமாறு 
		இலக்குவனுக்கு இராமன் உரைத்தல் 
		 
		'காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால், கவியின் சேனை 
		போக்கு அறப் போகித் தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்; 
		தாக்கி, இப் படையை முற்றும் தலை துமிப்பளவும், தாங்கி, 
		நீக்குதி, நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம். 59 
		 
		'இப் புறத்து இனைய சேனை ஏவி, ஆண்டு இருந்த தீயோன், 
		அப் புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன், அயலே வந்து, 
		தப்பு அறக் கொன்று நீக்கில், அவனை யார் தடுக்க வல்லார், - 
		வெப்புறுகின்றது உள்ளம், - வீர! நீ அன்றி, வில்லோர்? 60 
		 
		'மாருதியோடு நீயும், வானரக் கோனும், வல்லே, 
		பேருதிர் சேனை காக்க் என்னுடைத் தனிமை பேணிச் 
		சோருதிர் என்னின், வெம் போர் தோற்றும், நாம்' என்னச் சொன்னான், 
		வீரன்; மற்று அதனைக் கேட்ட இளையவன் விளம்பலுற்றான்: 61 
		 
		இலக்குவன் இசைந்து செல்ல, அனுமன் இராமனுக்கு அடிமை செய்ய விரும்பி 
		வேண்டுதல் 
		 
		'அன்னதே கருமம்; ஐய! அன்றியும், அருகே நின்றால், 
		என் உனக்கு உதவி செய்வது - இது படை என்ற போது, 
		சென்னியில் சுமந்த கையர், தேவரே போல, யாமும் 
		பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி?' 62 
		 
		என்று அவன் ஏகலுற்ற காலையின், அனுமன், 'எந்தாய்! 
		"புன் தொழில் குரங்கு" எனாது, என் தோளின்மேல் ஏறிப் புக்கால், 
		நன்று எனக் கருதாநின்றேன்; அல்லது, நாயினேன் உன் 
		பின் தனி நின்றபோதும், அடிமையில் பிழைப்பு இல்' என்றான். 63 
		 
		இலக்குவனுக்கு ஏற்ற துணை நீயே என இராமன் உரைக்க அனுமன் இசைந்து இலக்குவனை 
		தொடர்தல் 
		 
		'ஐய! நிற்கு இயலாது உண்டோ ? இராவணன் அயலே வந்துற்று, 
		எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால், 
		மொய் அமர்க் களத்தின் உன்னைத் துணை பெறான் என்னின், முன்ப! 
		செய்யும் மா வெற்றி உண்டோ ? சேனையும் சிதையும் அன்றே? 64 
		 
		'ஏரைக் கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான் தன் 
		போரைக் கொண்டு இருந்த முன் நாள், இளையவன் தன்னைப் போக்கிற்று 
		ஆரைக் கொண்டு? உன்னால் அன்றே, வென்றது அங்கு அவனை? இன்னம் 
		வீரர்க்கும் வீர! நின்னைப் பிரிகலன், வெல்லும் என்பேன். 65 
		 
		'சேனையைக் காத்து, என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த 
		யானையைக் காத்து, மற்றை இறைவனைக் காத்து, எண் தீர்ந்த 
		வானை இத் தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி' என்றான்; 
		ஏனை மற்று உரைக்கிலாதான், இளவல்பின் எழுந்து சென்றான். 66 
		 
		இலக்குவனுக்குத் துணையாக வீடணனையும் இராமன் அனுப்புதல் 
		 
		'வீடண! நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி, வெம்மை 
		கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி, கொற்றம் 
		நீடுறு தானைதன்னைத் தாங்கினை, நில்லாய் என்னின், 
		கேடு உளது ஆகும்' என்றான்; அவன் அது கேட்பதானான். 67 
		 
		சுக்கிரீவன் முதலியோரும் இலக்குவனுடன் சென்று, வானரத் தானையைக் காத்தல் 
		 
		சூரியன் சேயும், செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன், 
		ஆரியன் பின்பு போனான்; அனைவரும், 'அதுவே நல்ல 
		காரியம்' என்னக் கொண்டார்; கடற்படை காத்து நின்றார்; 
		வீரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம்; 68 
		 
		இராமன் வில் ஏந்தி, முன்னணியில் வந்து பொருதல் 
		 
		வில்லினைத் தொழுது, வாங்கி, ஏற்றினான்; வில் நாண் மேருக் 
		கல் எனச் சிறந்ததேயும், கருணை அம் கடலே அன்ன 
		எல் ஒளி மார்பில் வீரக் கவசம் இட்டு, இழையா வேதச் 
		சொல் எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி, 69 
		 
		ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனைத் 
		தூசி வந்து அண்ணல்தன்னைப் போக்கு அறவளைந்து சுற்றி, 
		வீசின படையும் அம்பும் மிடைதலும், விண்ணோர் ஆக்கை 
		கூசின, பொடியால்; எங்கும் குமிழ்த்தன, வியோம கூடம். 70 
		 
		தேவர், முனிவர், முதலாயினார் இராமனை ஏத்தி, ஆசி மொழிதல் 
		 
		'கண்ணனே! எளியேம் இட்ட கவசமே! கடலே அன்ன 
		வண்ணனே! அறத்தின் வாழ்வே! மறையவர் வலியே! மாறாது 
		ஒண்ணுமே, நீ அலாது, ஓர் ஒருவர்க்கு இப் படைமேல் ஊன்ற? 
		எண்ணமே முடித்தி!' என்னா, ஏத்தினர், இமையோர் எல்லாம். 71 
		 
		முனிவரே முதல்வர் ஆய அறத் துறை முற்றினோர்கள், 
		தனிமையும், அரக்கர் தானைப் பெருமையும், தரிக்கலாதார், 
		பனி வரு கண்ணர், விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர், 'பாவத்து, 
		அனைவரும் தோற்க! அண்ணல் வெல்க!' என்று ஆசி சொன்னார். 72 
		 
		இராமன் தனியே நின்று பொரும் ஆற்றல் கண்டு, அரக்கர் வியத்தல் 
		 
		'இரிந்து சேனை சிந்தி, யாரும் இன்றி ஏக, நின்று, நம் 
		விரிந்த சேனை கண்டு, யாதும் அஞ்சல் இன்றி, வெஞ் சரம் 
		தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையான் 
		புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று! மாலி பொய்க்குமோ? 73 
		 
		'புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார், 
		பரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள், 
		விரைந்து புள்ளின் மீது விண்ணுளோர்களோடு மேவினான்; 
		கரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான். 74 
		 
		'தேரும், மாவும், யானையோடு சீயம், யாளி, ஆதியா 
		மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால்; 
		"வாரும், வாரும்" என்று அழைக்கும் மானிடற்கு, இம் மண்ணிடைப் 
		பேருமாறும் நம்மிடைப் பிழைக்குமாறும் எங்ஙனே?' 75 
		 
		இராமன் நாண் எரிதலும், அரக்கரிடையே துன்னிமித்தம் தோன்றுதலும் 
		 
		என்று சென்று, இரைந்து எழுந்து, ஓர் சீய ஏறு அடர்த்ததைக் 
		குன்று வந்து சூழ் வளைந்த போல், தொடர்ந்து கூடலும், 
		'நன்று இது!' என்று, ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் 
		வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலைவாய். 76 
		 
		கதம் புலர்ந்த, சிந்தை வந்த, காவல் யானை; மாலொடு 
		மதம் புலர்ந்த் நின்ற வீரர் வாய் புலர்ந்த் மா எலாம் 
		பதம் புலர்ந்த் வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் 
		விதம் புலர்ந்தது என்னின், வென்ற வென்றி சொல்ல வேணுமோ? 77 
		 
		வெறித்து இரிந்த வாசியோடு, சீய மாவும் மீளியும், 
		செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் 
		முறித்து எழுந்து அழுந்த, யானை வீசும் மூசு பாகரைப் 
		பிறித்து இரிந்து சிந்த, வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால், 78 
		 
		'இந் நிமித்தம் இப் படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் 
		துன்னிமித்தம்' என்று கொண்டு, வானுளோர்கள் துள்ளினார்; 
		அந் நிமித்தம் உற்றபோது, அரக்கர் கண் அரங்க, மேல் 
		மின் நிமிர்த்தது அன்ன வாளி வேத நாதன் வீசினான். 79 
		 
		ஆளி மேலும், ஆளின் மேலும், ஆனை மேலும், ஆடல் மா 
		மீளி மேலும், வீரர் மேலும், வீரர் தேரின் மேலும், வௌ; 
		வாளி மேலும், வில்லின் மேலும், மண்ணின் மேல் வளர்ந்த மாத் 
		தூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான். 80 
		 
		மலை விழுந்தவா விழுந்த, மான யானை; மள்ளர் செத் 
		தலை விழுந்தவா விழுந்த, தாய வாசி; தாள் அறும் 
		சிலை விழுந்தவா விழுந்த, திண் பதாகை; திங்களின் 
		கலை விழுந்தவா விழுந்த, வெள் எயிற்ற காடு எலாம். 81 
		 
		வாடை நாலு பாலும் வீச, மாசு மேக மாலை வெங் 
		கோடை மாரி போல வாளி கூட, ஓடை யானையும், 
		ஆடல் மாவும், வீரர் தேரும், ஆளும், மாள்வது ஆனவால்; 
		பாடு பேருமாறு கண்டு, கண் செல் பண்பும் இல்லையால். 82 
		 
		விழித்த கண்கள், கைகள், மெய்கள், வாள்கள், விண்ணினுள் 
		தெழித்த வாய்கள், செல்லலுற்ற தாள்கள், தோள்கள், செல்லினைப் 
		பழித்த வாளி சிந்த, நின்று பட்ட அன்றி, விட்ட கோல் 
		கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே. 83 
		 
		தொடுத்த வாளியோடு வில் துணிந்து விழும், முன்; துணிந்து 
		எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும்; மற்று உடன் 
		கடுத்த தாள்கள் கண்டம் ஆகும்; எங்ஙனே, கலந்து நேர் 
		தடுத்து வீரர்தாமும் ஒன்று செய்யுமா, சலத்தினால்? 84 
		 
		குரம் துணிந்து, கண் சிதைந்து, பல்லணம் குலைந்து, பேர் 
		உரம் துணிந்து, வீழ்வது அன்றி, ஆவி ஓட ஒண்ணுமோ - 
		சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால், 
		வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே? 85 
		 
		ஊர உன்னின், முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால், 
		பேர ஒல்வது அன்று; பேரின், ஆயிரம் பெருஞ் சரம் 
		தூர, ஒன்று நூறு கூறுபட்டு உகும்; துயக்கு அலால், 
		தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே? 86 
		 
		எட்டு வன் திசைக்கண் நின்ற யாவும், வல்ல யாவரும், 
		கிட்டின், உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற, கேள்வியால்; 
		முட்டும் வெங் கண் மான யானை, அம்பு உராய, முன்னமே 
		பட்டு வந்தபோல் விழுந்த் என்ன தன்மை பண்ணுமே? 87 
		 
		வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று 
		ஏவின், உண்டை நூறு கோடி கொல்லும் என்ன, எண்ணுவான் 
		பூவின் அண்டர் கோனும், எண் மயங்கும்; அன்ன போரின் வந்து 
		ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே? 88 
		 
		கொடிக் குலங்கள், தேரின் மேல, யானை மேல, கோடை நாள் 
		இடிக் குலங்கள் வீழ் வெந்த காடுபோல் எரிந்தவால் - 
		முடிக் குலங்கள் கோடி கோடி சிந்த, வேகம் முற்றுறா 
		வடிக் குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால்! 89 
		 
		அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து, 
		உற்ற வேகம் உந்த ஓடி, ஓத வேலை ஊடுற, 
		துற்ற வெம்மை கைம்மிக, சுறுக்கொளச் சுவைத்தால், 
		வற்ற நீர் வறந்து, மீன் மறிந்து, மண் செறிந்தவால். 90 
		 
		போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி, பொங்கினார் 
		ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால், 
		நீர் எரிந்த வண்ணமே, நெருப்பு எரிந்த, நீள் நெடுந் 
		தேர் எரிந்த, வீரர்தம் சிரம் பொடிந்து சிந்தவே. 91 
		 
		பிடித்த வாள்கள் வேல்களோடு, தோள்கள் பேர் அரா எனத் 
		துடித்த் யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்தம் 
		மடித்த வாய்ச் செழுந் தலைக் குலம் புரண்ட, வானின் மின் 
		இடித்த வாயின் இற்ற மா மலைக் குலங்கள் என்னவே. 92 
		 
		கோர ஆளி, சீயம், மீளி, கூளியோடு ஞாளியும், 
		போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் - 
		நார ஆளி, ஞால ஆளி, ஞான ஆளி, நாந்தகப் 
		பார ஆளி, வீர ஆளி, வேக வாளி பாயவே. 93 
		 
		ஆழி பெற்ற தேர் அழுந்தும்; ஆள் அழுந்தும்; ஆளொடும் 
		சூழி பெற்ற மா அழுந்தும்; வாசியும் சுரிக்குமால்- 
		பூழி பெற்ற வெங் களம் குளம் பட, பொழிந்த பேர் 
		ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள் அரோ. 94 
		 
		அற்று மேல் எழுந்த வன் சிரங்கள் தம்மை அண்மி, மேல் 
		ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார்; 
		'சுற்றும் வீழ் தலைக் குலங்கள் சொல்லு கல்லு மாரிபோல் 
		எற்றும்' என்று, பார் உளோரும் ஏங்குவார், இரங்குவார். 95 
		 
		மழைத்த மேகம் வீழ்வ என்ன, வான மானம் வாடையின் 
		சுழித்து வந்து வீழ்வ என்ன, மண்ணின் மீது துன்னுமால் - 
		அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஒளியால், 
		விழித்து எழுந்து, வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம். 96 
		 
		அரக்கர் செய்த போர் 
		 
		தெய்வ நெடும் படைக் கலங்கள் விடுவர் சிலர்; சுடு கணைகள் சிலையில் கோலி, 
		எய்வர் சிலர்; எறிவர் சிலர்; எற்றுவர் சுற்றுவர், மலைகள் பலவும் ஏந்தி; 
		பெய்வர் சிலர்; 'பிடித்தும்' எனக் கடுத்து உறுவர்; படைக் கலங்கள் பெறாது, 
		வாயால், 
		வைவர் சிலர்; தெழிப்பர் சிலர்; வருவர் சிலர்; திரிவர் சிலர் - வயவர் மன்னோ. 
		97 
		 
		ஆர்ப்பர் பலர்; அடர்ப்பர் பலர்; அடுத்து அடுத்தே, படைக் கலங்கள் அள்ளி 
		அள்ளித் 
		தூர்ப்பர் பலர்; மூவிலைவேல் துரப்பர் பலர்; கரப்பர், பலர்; சுடு தீத் 
		தோன்றப் 
		பார்ப்பர் பலர்; நெடு வரையைப் பறிப்பர் பலர்-பகலோனைப் பற்றிச் சுற்றும் 
		கார்ப் பருவ மேகம் என, வேக நெடும் படை அரக்கர் கணிப்பு இலாதார். 98 
		 
		இராமனின் வெற்றி விளக்கம் 
		 
		எறிந்தனவும், எய்தனவும், எடுத்தனவும், பிடித்தனவும், படைகள் எல்லாம் 
		முறிந்தன, வெங் கணைகள் பட் முற்றின, சுற்றின தேரும், மூரி மாவும்; 
		நெறிந்தன குஞ்சிகளோடும் நெடுந் தலைகள் உருண்டன் பேர் இருளின் நீங்கி, 
		பிறிந்தனன் வெய்யவன் என்னப் பெயர்ந்தனன்-மீது உயர்ந்த தடம் பெரிய தோளான். 
		99 
		 
		சொல் அறுக்கும் வலி அரக்கர், தொடு கவசம் துகள் படுக்கும்; துணிக்கும் 
		யாக்கை; 
		வில் அறுக்கும்; சரம் அறுக்கும்; தலை அறுக்கும்; மிடல் அறுக்கும்; மேல் 
		மேல் வீசும் 
		கல் அறுக்கும்; மரம் அறுக்கும்; கை அறுக்கும்; செய்யில் மள்ளர் கமலத்தோடு 
		நெல் அறுக்கும் திரு நாடன் நெடுஞ் சரம் என்றால், எவர்க்கும் நிற்கலாமோ? 100 
		 
		'கால் இழந்தும், வால் இழந்தும், கை இழந்தும்,கழுத்து இழந்தும்,பருமக் 
		கட்டின் 
		மேல் இழந்தும்,மருப்பு இழந்தும், விழுந்தன' என்குநர் அல்லால், வேலை அன்ன 
		மால் இழந்து, மழை அனைய மதம் இழந்து, கதம் இழந்து, மலைபோல் வந்த 
		தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை-நெடுஞ் சுரர்கள் எல்லாம். 
		101 
		 
		வேல் செல்வன, சத கோடிகள்; விண்மேல் நிமிர் விசிகக் 
		கோல் செல்வன, சத கோடிகள்; கொலை செய்வன, மலைபோல் 
		தோல் செல்வன, சத கோடிகள்; துரகம் தொடர் இரதக் 
		கால் செல்வன, சத கோடிகள்; ஒருவன், அவை கடிவான்! 102 
		 
		ஒரு வில்லியை, ஒரு காலையின், உலகு ஏழையும் உடற்றும் 
		பெரு வில்லிகள், முடிவு இல்லவர், சர மா மழை பெய்வார்; 
		பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய, 
		திருவில்லிகள் தலை போய் நெடு மலைபோல் உடல் சிதைவார். 103 
		 
		'நூறாயிர மத யானையின் வலியோர்' என நுவல்வோர், 
		மாறு ஆயினர், ஒரு கோல் பட, மலைபோல் உடல் மறிவார்; 
		ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம் புனல் அவை புக்கு, 
		ஏறாது, எறி கடல் பாய்வன, சின மால் கரி இனமால். 104 
		 
		மழு அற்று உகும்; மலை அற்று உகும்; வளை அற்று உகும்; வயிரத்து 
		எழு அற்று உகும்; எயிறு அற்று உகும்; இலை அற்று உகும், எறி வேல்; 
		பழு அற்று உகும், மத வெங் கரி; பரி அற்று உகும்; இரதக் 
		குழு அற்று உகும்;-ஒரு வெங் கணை தொடை பெற்றது ஓர் குறியால். 105 
		 
		ஒரு காலையின், உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண 
		வரு காலனும், அவன் தூதரும், நமன் தானும், அவ் வரைப்பின் 
		இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார்; 
		அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர், அயர்த்தார். 106 
		 
		அடுக்குற்றன மத யானையும், அழி தேர்களும், பரியும் 
		தொடுக்குற்றன விசும்பூடு உறச் சுமந்து ஓங்கின எனினும், 
		மிடுக்குற்றன கவந்தக் குலம் எழுந்து ஆடலின், எல்லாம்- 
		நடுக்குற்றன, பிணக் குன்றுகள், உயிர்க்குற்றன என்ன. 107 
		 
		பட்டார் உடல் படு செம்புனல் திருமேனியில் படலால், 
		கட்டு ஆர் சிலைக் கரு ஞாயிறு புரைவான், கடையுகநாள், 
		சுட்டு, ஆசு அறுத்து உலகு உண்ணும் அச் சுடரோன் எனப் பொலிந்தான்; 
		ஒட்டார் உடல் குருதிக் குளித்து எழுந்தானையும் ஒத்தான். 108 
		 
		தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட, சிரம் போய் 
		மாய, தமர் மடிகின்றனர் எனவும், மறம் குறையா, 
		காயத்திடை உயிர் உண்டிட, உடன் மொய்த்து எழு களியால் 
		ஈ ஒத்தன நிருதக் குலம்; நறவு ஒத்தனன் இறைவன். 109 
		 
		மொய்த்தாரை ஒர் இமைப்பின்தலை, முடுகத் தொடு சிலையால் 
		தைத்தான்; அவர், கழல்-திண் பசுங் காய் ஒத்தனர், சரத்தால்; 
		கைத்தார் கடுங் களிறும், கனத் தேரும், களத்து அழுந்தக் 
		குத்தான், அழி குழம்பு ஆம்வகை, வழுவாச் சரக் குழுவால். 110 
		 
		பிரிந்தார் பலர்; இரிந்தார் பலர்; பிழைத்தார் பலர்; உழைத்தார்; 
		புரிந்தார் பலர்; நெரிந்தார் பலர்; புரண்டார் பலர்; உருண்டார்; 
		எரிந்தார் பலர்; கரிந்தார் பலர்; எழுந்தார் பலர்; விழுந்தார், 
		சொரிந்தார் குடல்; துமிந்தார் த்லை; கிடந்தார், எதிர் தொடர்ந்தார். 111 
		 
		மணி குண்டலம், வலயம், குழை, மகரம், சுடர் மகுடம், 
		அணி கண்டிகை, கவசம், கழல், திலகம், முதல் அகல, 
		துணியுண்டவர் உடல், சிந்தின் சுடர்கின்றன தொடரும் 
		திணி கொண்டலினிடை மின் குலம் மிளிர்கின்றன சிவண 112 
		 
		முன்னே உளன்; பின்னே உளன்; முகத்தே உளன்; அகத்தின் - 
		தன்னே உளன்; மருங்கே உளன்; தலைமேல் உளன்; மலைமேல் 
		கொன்னே உளன்; நிலத்தே உளன்; விசும்பே உளன்; கொடியோர், 
		'என்னே ஒரு கடுப்பு!' என்றிட, இருஞ் சாரிகை திரிந்தான். 113 
		 
		'என் நேரினர்; என் நேரினர்' என்று யாவரும் எண்ண, 
		பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான், 
		ஒன்னார் பெரும் படைப் போர்க் கடல் உடைக்கின்றனன்எனினும், 
		அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான். 114 
		 
		பள்ளம் படு கடல் ஏழினும், படி ஏழினும், பகையின் 
		வெள்ளம் பல உள என்னினும், வினையம் பல தெரியா, 
		கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான், உருப் பிறந்தார் 
		உள் அன்றியும், புறத்தேயும் உற்று, உளனாம் என உற்றான். 115 
		 
		நானாவிதப் பெருஞ் சாரிகை திரிகின்றது நவிலார், 
		போனான், இடை புகுந்தான், எனப் புலன் கொள்கிலர், மறந்தார், 
		'தானாவதும் உணர்ந்தான், உணர்ந்து, உலகு எங்கணும் தானே 
		ஆனான்; வினை துறந்தான்' என, இமையோர்களும் அயிர்த்தார். 116 
		 
		சண்டக் கடு நெடுங் காற்றிடை துணிந்து எற்றிட, தரைமேல் 
		கண்டப் படு மலைபோல், நெடு மரம்போல், கடுந் தொழிலோர் 
		துண்டப் பட, கடுஞ் சாரிகை திரிந்தான், சரம் சொரிந்தான் - 
		அண்டத்தினை அளந்தான் எனக் கிளர்ந்தான், நிமிர்ந்து அகன்றான். 117 
		 
		களி யானையும், நெடுந் தேர்களும், கடும் பாய் பரிக் கணனும், 
		தெளி யாளியும், முரட் சீயமும், சின வீரர்தம் திறமும், 
		வெளி வானகம் இலதாம்வகை விழுந்து ஓங்கிய பிணப் பேர் 
		நளிர் மா மலை பல தாவினன், நடந்தான் - கடல் கிடந்தான். 118 
		 
		அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும், 
		அம்பரங்களொடும் களி யானையும், 
		அம்பு அரங்க, அழுந்தின, சோரியின், 
		அம்பரம் கம் அருங் கலம் ஆழ்ந்தென. 119 
		 
		கேட கங்கண அம் கையொடும் கிளர் 
		கேடகங்கள் துணிந்து கிடந்தன் 
		கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு 
		ஏட கங்கள் மறிந்து கிடந்தவே. 120 
		 
		அங்கதம் களத்து அற்று அழி தாரொடும் 
		அம் கதம் களத்து அற்று அழிவுற்றவால்- 
		புங்கவன் கணைப் புட்டில் பொருந்திய 
		புங்க வன் கணைப் புற்று அரவம் பொர. 121 
		 
		தம் மனத்தில் சலத்தர் மலைத் தலை 
		வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ, 
		தெம் முனைச் செரு மங்கை தன் செங் கையால் 
		அம்மனைக் குலம் ஆடுவ போன்றவே. 122 
		 
		கயிறு சேர் கழல் கார் நிறக் கண்டகர் 
		எயிறு வாளி படத் துணிந்து, யானையின் 
		வயிறுதோறும் மறைவன, வானிடைப் 
		புயல்தொறும் புகு வெண் பிறை போன்றவே. 123 
		 
		வென்றி வீரர் எயிறும், விடா மதக் 
		குன்றின் வெள்ளை மருப்பும், குவிந்தன- 
		என்றும் என்றும் அமைந்த இளம் பிறை 
		ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால். 124 
		 
		ஓவிலார் உடல் உந்து உதிரப் புனல் 
		பாவி வேலை உலகு பரத்தலால், 
		தீவுதோறும் இனிது உறை செய்கையர், 
		ஈவு இலாத நெடு மலை ஏறினார். 125 
		 
		விண் நிறைந்தன, மெய் உயிர்; வேலையும், 
		புண் நிறைந்த புனலின் நிறைந்தன் 
		மண் நிறைந்தன, பேர் உடல்; வானவர் 
		கண் நிறைந்தன, வில் தொழில் கல்வியே. 126 
		 
		செறுத்த வீரர் பெரும் படை சிந்தின, 
		பொறுத்த சோரி புகக் கடல் புக்கன, 
		இறுத்த நீரின் செறிந்தன, எங்கணும் 
		அறுத்து, மீனம் உலந்த அனந்தமே. 127 
		 
		வன்னி ஏனைய தலைவர்களை நோக்கி வெகுண்டு கூறுதல் 
		 
		'ஒல்வதே! இவ் ஒருவன், இவ் ஊகத்தைக் 
		கொல்வதே, நின்று! குன்று அன யாம் எலாம் 
		வெல்வது ஏதும் இலாமையின், வெண் பலை 
		மெல்வதே!' என வன்னி விளம்பினான். 128 
		 
		'கோல் விழுந்து அழுந்தாமுனம், கூடி யாம் 
		மேல் விழுந்திடினும், இவன் வீயுமால்; 
		கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்! 
		மால் விழுந்துளிர் போலும், மயங்கி, நீர்! 129 
		 
		'ஆயிரம் பெரு வெள்ளம் அரைபடத் 
		தேய நிற்பது; பின், இனி என் செய? 
		பாயும், உற்று, உடனே' எனப் பன்னினான், 
		நாயகற்கு ஓர் உதவியை நல்குவான். 130 
		 
		அரக்கர் படை உருத்து எழ, இராமனும் சரமழை சிந்துதல் 
		 
		உற்று, உருத்து எழு வெள்ளம் உடன்று எழா, 
		சுற்றும் முற்றும் வளைந்தன, தூவின- 
		ஒற்றை மால் வரைமேல் உயர் தாரைகள் 
		பற்றி மேகம் பொழிந்தென, பல் படை. 131 
		 
		குறித்து எறிந்தன, எய்தன, கூற்றுறத் 
		தறித்த தேரும் களிறும் தரைப் பட, 
		மறித்த வாசி துணித்து, அவர் மாப் படை 
		தெறித்துச் சிந்த, சர மழை சிந்தினான். 132 
		 
		வாய் விளித்து எழு பல் தலை வாளியில் 
		போய் விளித்த குருதிகள் பொங்கு உடல், 
		பேய் விளிப்ப நடிப்பன, பெட்புறும் 
		தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால். 133 
		 
		நெய் கொள் சோரி நிறைந்த நெடுங் கடல் 
		செய்ய ஆடையள், அன்ன செஞ் சாந்தினள், 
		வைய மங்கை பொலிந்தனள், மங்கலச் 
		செய்ய கோலம் புனைந்தன செய்கையாள். 134 
		 
		உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு, 
		அப்புத்தான், என்று உரைத்தன ஆழிகள் 
		துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால், 
		தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால். 135 
		 
		ஒன்றுமே தொடை; கோல் ஒரு கோடிகள் 
		சென்று பாய்வன் திங்கள் இளம் பிறை 
		அன்று போல் எனல் ஆகியது அச் சிலை; 
		என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர்? 136 
		 
		அரக்கர் சேனை கடும்போர் புரிந்து, இராம பாணத்தால் மடிதல் 
		 
		எடுத்தவர், இரைத்தவர், எறிந்தவர், செறிந்தவர், மறங்கொடு எதிரே 
		தடுத்தவர், சலித்தவர், சரிந்தவர், பிரிந்தவர், தனிக் களிறுபோல் 
		கடுத்தவர், கலித்தவர், கறுத்தவர், செறுத்தவர், கலந்து, சரம் மேல் 
		தொடுத்தவர், துணிந்தவர், தொடர்ந்தனர், கிடந்தனர் - துரந்த கணையால். 137 
		 
		தொடுப்பது சுடர்ப் பகழி ஆயிரம் நிரைத்தவை துரந்த துறை போய்ப் 
		படுப்பது, வயப் பகைஞர் ஆயிரரை அன்று, பதினாயிரவiர் 
		கடுப்பு அது; கருத்தும் அது; கட்புலன் மனம் கருதல் கல்வி இல் வேல் 
		எடுப்பது படப் பொருவது அன்றி, இவர் செய்வது ஒரு நன்றி உளதோ? 138 
		 
		தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடைக் குழை தொகுத்து, 
		ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும்; அவை உண்ணும் உயிiர் 
		ஆசைகளை உற்று உருவும்; அப் புறமும் ஓடும்; அதன் இப் புறம் உளார், 
		ஈசன் எதிர் உற்று, உகுவது அல்லது, இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ? 139 
		 
		ஊன் நகு வடிக் கணைகள் ஊழி அனல் ஒத்தன் உலர்ந்த உலவைக் 
		கானகம் நிகர்த்தனர் அரக்கர்; மலை ஒத்தன, களித்த மத மர் 
		மானவன் வயப் பகழி வீசு வலை ஒத்தன் வலைக்குள் உளவாம் 
		மீன குலம் ஒத்தன, கடற் படை, இனத்தொடும் விளிந்துறுதலால். 140 
		 
		ஊழி இறுதிக் கடுகு மாருதமும் ஒத்தனன், இராமன்; உடனே 
		பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர், அரக்கர், பொருவார்; 
		ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி, இறுதிக்கணின் எழும் 
		ஆழியையும் ஒத்தனன்; அம் மன்னுயிரும் ஒத்தனர், அலைக்கும் நிருதர். 141 
		 
		மூல முதல் ஆய், இடையும் ஆய், இறுதி ஆய், எவையும் முற்றும் முயலும் 
		காலம் எனல் ஆயினன் இராமன்; அவ் அரக்கர், கடைநாளில் விளியும் 
		கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர்; குரை கடல் எழும் 
		ஆலம் எனலாயினன் இராமன்; அவர் மீனம் எனல் ஆயினர்களால். 142 
		 
		வஞ்ச வினை செய்து, நெடு மன்றில் வளம் உண்டு, கரி பொய்க்கும் மறம் ஆர் 
		நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர், அரக்கர்; அறம் ஒக்கும் நெடியோன்; 
		நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன்; அடுத்து அதனை நக்கிநரையும், 
		பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும், ஒத்தனர், அரக்கர், படுவார். 143 
		 
		வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின், அவ் வேலையும் இலங்கை நகரும், 
		பள்ளமொடு மேடு தெரியாதவகை சோர் குருதி பம்பி எழலும், 
		உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால், 
		கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார். 144 
		 
		நீங்கினர், நெருங்கினர் முருங்கினர்; உலைந்து உலகில் நீளும் மலைபோல் 
		வீங்கின, பெரும் பிணம் விசும்பு உற் அசும்பு படு சோரி விரிவுற்று, 
		ஓங்கின, நெடும் பரவை, ஒத்து உயர எத் திசையும் உற்று, எதிர் உற் 
		தாங்கினர், படைத் தலைவர், நூறு சத கோடியர், தடுத்தல் அரியார். 145 
		 
		தேரும், மதமாவும், வரை ஆளியொடு வாசி, மிகு சீயம், முதலா 
		ஊரும் அவை யாவையும் நடாயினர், கடாயினர்கள், உந்தினர்களால்; 
		காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் 
		தூரும்வகை தூவினர்; துரந்தனர்கள், எய்தனர், தொடர்ந்தனர்களால். 146 
		 
		'வம்மின், அட, வம்மின்! எதிர் வந்து, நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் 
		தம்மின்!' என இன்னன மொழிந்து, எதிர் பொழிந்தன, தடுப்ப அரியவாம், 
		வெம் மின் என, வெம் பகழி, வேலை என ஏயினன்; அவ் வெய்ய வினையோர், 
		தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர், தனித் தனிஅரோ. 147 
		 
		இமையோர் சிவனிடம் முறையிடுதல் 
		 
		அக் கணையை அக் கணம் அறுத்தனர் செறுத்து, இகல் அரக்கர் அடைய, 
		புக்கு அணையலுற்றனர், மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார், 
		திக்கு அணை வகுத்தனர் எனச் செல நெருக்கினர், செருக்கின் மிகையால்; 
		முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால்: 148 
		 
   |