Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம்  > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் > 28 இராவணன் சோகப் படலம்>29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 4. வீடணன் அடைக்கலப் படலம்


வீடணன் உரையை மதியாது, இராவணன் சினந்து, அவனைத் துரத்துதல்

கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக்
கோட்டிய சிந்தையான், உறுதி கொண்டிலன், -
மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் -
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான். 1

'"இரணியன் என்பவன் எம்மனோரினும்
முரணியன்; அவன் தனை முருக்கி முற்றினான்,
அரணியன்" என்று, அவற்கு அன்பு பூண்டனை -
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்! 2

'ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்,
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ? 3

'பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என,
சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின்,
ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின்
வாழவோ கருத்து? அது வர வற்று ஆகுமோ? 4

'முன்புற அனையர்பால் அன்பு முற்றினை;
வன் பகை மனிதரின், வைத்த வன்பினை;
என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;
உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ? 5

'நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை;
எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு
உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;
திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ? 6

'அஞ்சினை ஆதலின், அமர்க்கும் ஆள் அலை;
தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை;
வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாறினை;
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ? 7

'பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை;
ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல், விளிதி' என்றனன்-
அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான். 8

வீடணன் துணைவருடன் வானில் எழுந்து நின்று, நீதி பல கூறுதல்

என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச்
சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா -
நின்றனன்; பின்னரும், நீதி சான்றன,
ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்: 9

'வாழியாய்! கேட்டியால்: வாழ்வு கைம்மிக
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,
கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ?
வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ? 10

'புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர்,
மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர்,
இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம்
சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ? 11

வீடணன் இலங்கை விட்டு ஏகுதல்

'எத்துணை வகையினும் உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்தருள்வாய்' என,
உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான். 12

அமைச்சர் நால்வருடன், வீடணன் இராமன் இருக்கும் கடற்கரைக்கு வருதல்

அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும்,
வினையவர் நால்வரும், விரைவின் வந்தனர், -
கனை கழல் காலினர், கருமச் சூழ்ச்சியர், -
இனைவரும் வீடணனோடும் ஏயினார். 13

அரக்கனும், ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்,
'குரக்கு இனத்தவரொடும் மனிதர், கொள்ளை நீர்க்
கரைக்கண் வந்து இறுத்தனர்' என்ற காலையில்,
'பொருக்கென எழுதும்' என்று எண்ணிப் போயினார். 14

வீடணன் வானரத் தானையைக் கண்டு, வியந்து உரைத்தல்

அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும்,
விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல்
வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என,
களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான். 15

'ஊனுடை உடம்பின உயிர்கள் யாவையும்
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால்,
வானரம் பெரிது' என, மறு இல் சிந்தையான்,
தூ நிறச் சுடு படைத் துணைவர்ச் சொல்லினான்: 16

மேலே செய்வன குறித்துத் அமைச்சருடன் வீடணன் உசாவுதல்

'அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;
"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்
துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான். 17

இராமனைக் காணுமாறு மந்திரிமார் உரைக்க, வீடணன் மகிழ்ந்து கூறுதல்

'மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை;
தாழ்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன்' என்று, கல்வி சால்
சூழ்ச்சியின் கிழவரும், துணிந்து சொல்லினார். 18

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும். 19

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால். 20

'ஆதி அம் பரமனுக்கு அன்பும், நல் அறம்
நீதியின் வழாமையும், உயிர்க்கு நேயமும்,
வேதியர் அருளும், நான் விரும்பிப் பெற்றனென் -
போது உறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள். 21

'ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது;
தூயது, நினைந்தது; தொல்லை யாவர்க்கும்
நாயகன் மலர்க்கழல் நணுகி, நம் மனத்து
ஏயது முடித்தும்' என்று இனிது மேயினான். 22

இருளில் செல்வது முறை அன்று என எண்ணி, சோலையில் தங்குதல்

'இருளிடை எய்துவது இயல்பு அன்றாம்' என,
பொருள் உற உணர்ந்த அப் புலன் கொள் கேள்வியார்,
மருளுறு சோலையின் மறைந்து வைகினார்;
உருளுறு தேரவன் உதயம் எய்தினார். 23

இராமன் கடற்கரைப் பகுதிகளை நோக்குதல்

அப் புறத்து, இராமன், அவ் அலங்கு வேலையைக்
குப்புறக் கருதுவான், குவளை நோக்கிதன்
துப்பு உறச் சிவந்த வாய் நினைந்து சோர்குவான்,
இப் புறத்து இருங் கரை மருங்கின் எய்தினான். 24

கானலும் கழிகளும், மணலும், கண்டலும்,
பானலும் குவளையும், பரந்த புன்னையும்,
மேல் நிறை அன்னமும் பெடையும், வேட்கை கூர்
பூ நிறை சோலையும், புரிந்து நோக்கினான். 25

தரளமும், பவளமும், தரங்கம் ஈட்டிய
திரள் மணிக் குப்பையும், கனக தீரமும்,
மருளும் மென் பொதும்பரும், மணலின் குன்றமும்,
புரள் நெடுந் திரைகளும், புரிந்து நோக்கினான். 26

மின் நகு மணி விரல் தேய, வீழ் கணீர்
துன்ன அரும் பெருஞ் சுழி அழிப்ப, சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னை அம் பொதும்பரும் புக்கு, நோக்கினான். 27

இயற்கை நிகழ்ச்சிகள் சிலவற்றால் இராமன் கவலையோடு நிற்றல்

கூதிர் நுண் குறும் பனித் திவலைக் கோவை கால்,
மோதி வெண் திரை வர, முட வெண் தாழைமேல்,
பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து
ஓதிமம் துயில்வ கண்டு, உயிர்ப்பு வீங்கினான். 28

அருந்துதற்கு இனிய மீன் கொணர, அன்பினால்
பெருந் தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை,
வருந் திசை நோக்கி, ஓர் மழலை வெண் குருகு,
இருந்தது கண்டு நின்று, இரக்கம் எய்தினான். 29

ஒரு தனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால்,
பெரு வலி வயக் குருகு இரண்டும் பேர்கில,
திருகு வெஞ் சினத்தன, தெறு கண் தீ உகப்
பொருவன கண்டு, தன் புருவம் கோட்டினான். 30

உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்,
தண் நிறப் பவள வாய் இதழை, தற் பொதி
வெண் நிற முத்தினால், அதுக்கி, விம்மினான். 31

அங்கு வந்த சுக்கிரீவன் முதலியோரது சொற்களால் மெலிவு நீங்கி இராமன் தன் இருப்பிடம் திரும்புதல்

இத் திறம் நிகழ்வுறு காலை, எய்திய
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும், உணர்வு தோன்றிய
பித்தரின், ஒரு வகை பெயர்ந்து போயினான். 32

வீடணன் வருகை

உறைவிடம் எய்தினான், ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில்,
முறை படு தானையின் மருங்கு முற்றினான் -
அறை கழல் வீடணன், அயிர்ப்பு இல் சிந்தையான். 33

வீடணனைக் கண்ட வானர வீரர்கள் அவனைச் சூழந்து எதிர்த்தல்

முற்றிய குரிசிலை, 'முழங்கு தானையின்
உற்றனர், நிருதர் வந்து' என்ன ஒன்றினார்,
'எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்' என்று, இடை
சுற்றினர் - உரும் எனத் தெழிக்கும் சொல்லினார். 34

'தந்தது தருமமே கொணர்ந்துதான்; இவன்
வெந் தொழில் தீவினை பயந்த மேன்மையான்,
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம்
சிந்தனை முடிந்தன' என்னும் சிந்தையார். 35

'"இருபது கரம்; தலை ஈர்-ஐந்து" எனபர், அத்
திருவிலிக்கு; அன்னவை சிதைந்தவோ?' என்பார்,
'பொரு தொழில் எம்மொடும் பொருதி, போர்' என்பார்,
ஒருவரின் ஒருவர் சென்று, உறுக்கி ஊன்றுவார். 36

'பற்றினம் சிறையிடை வைத்து, பாருடைக்
கொற்றவர்க்கு உணர்த்துதும்' என்று கூறுவார்;
'எற்றுவது அன்றியே, இவனைக் கண்டு, இறை
நிற்றல் என், பிறிது?' என நெருக்கி நேர்குவார். 37

'இமைப்பதன்முன் விசும்பு எழுந்து போய பின்,
அமைப்பது என், பிறிது? இவர் அரக்கர் அல்லரோ?
சமைப்பது கொலை அலால், தக்கது யாவதோ?
குமைப்பது நலன்' என முடுகிக் கூறினார். 38

அனுமன் ஏவலால், மயிந்தனும் துமிந்தனும் வீடணனைச் சார்தல்

இயைந்தன இயைந்தன இனைய கூறலும்,
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்,
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்,
நயம் தெரி காவலர் இருவர், நண்ணினார். 39

விலக்கினர் படைஞiர் வேதம், நீதி நூல்,
இலக்கணம், நோக்கிய இயல்பர் எய்தினார், -
'சலக் குறி இலர்' என, அருகு சார்ந்தனர் -
புலக் குறி அற நெறி பொருந்த நோக்கினார். 40

மயிந்தன் வினாவ, வீடணனது துணைவனான அனலன் விடை பகர்தல்

'யார்? இவண் எய்திய கருமம் யாவது?
போர் அது புரிதிரோ? புறத்து ஒர் எண்ணமோ?
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்,
சோர்விலீர், மெய்ம் முறை, சொல்லுவீர்' என்றான். 41

'பகலவன் வழி முதல், பாரின் நாயகன்,
புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன் -
தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான். 42

'அற நிலை வழாமையும், ஆதி மூர்த்திபால்
நிறைவரு நேயமும், நின்ற வாய்மையும்,
மறையவர்க்கு அன்பும், என்று இனைய, மா மலர்
இறையவன் தர, நெடுந் தவத்தின் எய்தினான். 43

'"சுடு தியைத் துகிலிடைப் பொதிந்து, துன்மதி!
இடுதியே, சிறையிடை இறைவன் தேவியை;
விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்,
படுதி" என்று உறுதிகள் பலவும் பன்னினான். 44

'மறம் தரு சிந்தையன், மதியின் நீங்கினான்,
"பிறந்தனை பின்பு; அதின் பிழைத்தி; பேர்குதி;
இறந்தனை, நிற்றியேல்" என்ன, இன்னவன்
துறந்தனன்' என விரித்து, அனலன் சொல்லினான். 45

மயிந்தன் இராமனுக்குச் செய்தி தெரிவிக்கச் செல்லுதல்

மயிந்தனும் அவ் உரை மனத்து வைத்து, 'நீ
இயைந்தது நாயகற்கு இயம்புவேன்' எனா,
பெயர்ந்தனன் - 'தம்பியும், பெயர்வு இல் சேனையும்,
அயர்ந்திலிர் காமின்' என்று அமைவது ஆக்கியே. 46

தன் அடி பணிந்த மயிந்தனை, செய்தி சொல்லுமாறு இராமன் பணித்தல்

தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்,
மருவ அரும் பெருமையும் பொறையும் வாயிலாய்,
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை,
அருள் நெறி எய்திச் சென்று, அடி வணங்கினான். 47

'உண்டு, உரை உணர்த்துவது, ஊழியாய்!' எனப்
புண்டரீகத் தடம் புரையும் பூட்சியான்,
மண்டிலச் சடை முடி துளக்கி, 'வாய்மையாய்!
கண்டதும் கேட்டதும் கழறுவாய்' என்றான். 48

மயிந்தன் தான் கண்டதும் கேட்டதும் கூறுதல்

'விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன், நால்வரோடு உடன்,
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல், நம் சேனையின் நடுவண் எய்தினான். 49

'"கொல்லுமின், பற்றுமின்" என்னும் கொள்கையான்,
பல் பெருந் தானை சென்று அடர்க்கப் பார்த்து, யான்,
"நில்லுமின்" என்று, "நீர் யாவிர்? நும் நிலை
சொல்லுமின்" என்ன, ஓர் துணைவன் சொல்லினான்: 50

'"முரண் புகு தீவினை முடித்த முன்னவன்
கரண் புகு சூழலே சூழ, காண்பது ஓர்
அரண் பிறிது இல் என, அருளின் வேலையைச்
சரண் புகுந்தனன்" என முன்னம் சாற்றினான். 51

'"ஆயவன், தருமமும், ஆதி மூர்த்திபால்
மேயது ஓர் சிந்தையும், மெய்யும், வேதியர்
நாயகன் தர, நெடுந் தவத்தின், நண்ணினன்;
தூயவன்" என்பது ஓர் பொருளும் சொல்லினான். 52

'"கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்,
எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின்
பொற்புடை முடித் தலை புரளும் - என்று ஒரு
நற் பொருள் உணர்த்தினன்" என்றும் நாட்டினான். 53

'ஏந்து எழில் இராவணன், "இனைய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை, என் சார்பு நிற்றியேல்;
ஆம் தினைப் பொழுதினில் அகறியால் - எனப்
போந்தனன்" என்றனன்; புகுந்தது ஈது' என்றான். 54

இராமன் நண்பர்களிடம் வீடணன் அடைக்கலம் குறித்து ஆராய்தல்

அப் பொழுது, இராமனும், அருகில் நண்பரை,
'இப் பொருள் கேட்ட நீர் இயம்புவீர் - இவன்
கைப்புகற்பாலனோ? கழியற்பாலனோ?-
ஒப்புற நோக்கி, நும் உணர்வினால்' என்றான். 55

சுக்கிரீவனின் உரை

தட மலர்க் கண்ணனைத் தடக் கை கூப்பி நின்று,
'இடன் இது; காலம் ஈது' என்ன எண்ணுவான்,
கடன் அறி காவலன் கழறினான் அரோ-
சுடர் நெடு மணி முடிச் சுக்கிரீவனே: 56

'நனி முதல் வேதங்கள் நான்கும், நாம நூல்
மனு முதல் யாவையும், வரம்பு கண்ட நீ,
இனையன கேட்கவோ, எம்மனோர்களை
வினவிய காரணம்? - விதிக்கும் மேல் உளாய்! 57

'ஆயினும், விளம்புவென், அருளின் ஆழியாய்!
ஏயினது ஆதலின், அறிவிற்கு ஏற்றன்
"தூய அன்று" என்னினும், "துணிவு அன்று" எண்ணினும்,
மேயது கேட்டியால்; விளைவு நோக்குவாய். 58

'வெம் முனை விளைதலின் அன்று; வேறு ஒரு
சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று;
தம்முனைத் துறந்தது, தரும நீதியோ?
செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்? 59

'தகை உறு தம்முனை, தாயை, தந்தையை,
மிகை உறு குரவரை, உலகின் வேந்தனை,
பகை உற வருதலும், துறந்த பண்பு இது
நகையுறல் அன்றியும், நயக்கற்பாலதோ? 60

'வேண்டுழி இனியன விளம்பி, வெம் முனை
பூண்டுழி, அஞ்சி, வெஞ் செருவில் புக்கு உடன்
மாண்டு ஒழிவு இன்றி, நம் மருங்கு வந்தவன்
ஆண்தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே? 61

'மிகைப் புலம் தருமமே வேட்ட போது, அவர்
தொகைக் குலம் துறந்து போய்த் துறத்தல் இன்றியே,
நகைப் புலம் பொதுவுற நடந்து, நாயக!
பகைப் புலம் சார்தலோ? பழியின் நீங்குமோ? 62

'வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள்,
சீர்க்கு உறவு ஆய், இடைச் செறுநர் சீறிய
போர்க்கு உறவு அன்றியே போந்த போது, இவன்
ஆர்க்கு உறவு ஆகுவன்? - அருளின் ஆழியாய்! 63

'ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய
சிட்டனும், மருமகன் இழைத்த தீவினை
கிட்டிய போதினில், தவமும் கேள்வியும்
விட்டது கண்டும், நாம் விடாது வேட்டுமோ? 64

'கூற்றுவன் தன்னொடு எவ் உலகும் கூடி வந்து
ஏற்றன என்னினும், வெல்ல ஏற்றுளேம்;
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து, இவண்
தோற்றுமோ? அன்னவன் துணைவன் ஆகுமோ? 65

'"அரக்கரை ஆசு அறக் கொன்று, நல் அறம்
புரக்க வந்தனம்" எனும் பெருமை பூண்ட நாம்,
இரக்கம் இல் அவரையே துணைக் கொண்டு ஏற்றும் ஏல்,
"சுருக்கம் உண்டு அவர் வலிக்கு" என்று தோன்றுமால். 66

'விண்டுழி, ஒரு நிலை நிற்பர்; மெய்ம் முகம்
கண்டுழி, ஒரு நிலை நிற்பர்; கைப் பொருள்
கொண்டுழி, ஒரு நிலை நிற்பர்; கூழுடன்
உண்டுழி, ஒரு நிலை நிற்பர் - உற்றவர். 67

'வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்,
"தஞ்சு" என நம்வயின் சார்ந்துளான் அலன்;
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ?-
அஞ்சன வண்ண!' என்று, அறியக் கூறினான். 68

சாம்பனின் கருத்து

அன்னவன் பின்னுற, அலகு இல் கேள்வியின்
தன் நிகர் பிறர் இலாத் தகைய சாம்பனை,
'என்னை உன் கருத்து?' என இறை வினாயினான்;
தொன் முறை நெறி தெரிந்து, அவனும் சொல்லுவான்: 69

'அறிஞரே ஆயினும், அரிய தெவ்வரைச்
செறிஞரே ஆவரேல், கெடுதல் திண்ணமால்;
நெறிதனை நோக்கினும், நிருதர் நிற்பது ஓர்
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ? 70

'வெற்றியும் தருகுவர், வினையம் வேண்டுவர்,
முற்றுவர், உறு குறை முடிப்பர், முன்பினால் -
உற்றுறு நெடும் பகை உடையர், அல்லதூஉம்,
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ? 71

'வேதமும் வேள்வியும் மயக்கி, வேதியர்க்கு
ஏதமும், இமையவர்க்கு இடரும், ஈட்டிய
பாதகர் நம்வயின் படர்வராம் எனின்,
தீது இலராய், நமக்கு அன்பு செய்வரோ? 72

'கைப் புகுந்து, உறு சரண் அருளிக் காத்துமேல்,
பொய்க் கொடு வஞ்சனை புணர்த்த போதினும்,
மெய்க் கொள விளியினும், "விடுதும்" என்னினும்,
திக்கு உறும், நெடும் பழி; அறமும் சீறுமால். 73

'மேல் நனி விளைவது விளம்ப வேண்டுமோ?
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில்,
மான் என வந்தவன் வரவை மானும், இவ்
ஏனையன் வரவும்' என்று இனைய கூறினான். 74

நீலன் தன் கருத்தைத் தெரிவித்தல்

பால்வரு பனுவலின் துணிவு பற்றிய
சால் பெருங் கேள்வியன், தானை நாயகன்,
நீலனை, 'நின் கருத்து இயம்பு, நீ' என
மேலவன் விளம்பலும், விளம்பல் மேயினான்: 75

'பகைவரைத் துணை எனப் பற்றற்பால ஆம்
வகை உள் அன்னவை - வரம்பு இல் கேள்வியாய்! -
தொகையுறக் கூறுவென்; "குரங்கின் சொல்" என
நகையுறல் இன்றியே, நயந்து கேட்டியால்! 76

'தம் குலக் கிளைஞரைத் தருக்கும் போரிடைப்
பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர்,
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர்,
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர், 77

'பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர்,
போரிடைப் புறங்கொடுத்து அஞ்சிப் போந்தவர்,
நேர் வரு தாயத்து நிரப்பினோர், பிறர்
சீரிய கிளைஞரை மடியச் செற்றுளோர், 78

'அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால்
படுத்தவர் நட்டவர், - பகைஞரோடு ஒரு
மடக்கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும்,
உடன் கொளத் தகையர், நம்முழை வந்து ஒன்றினால். 79

'தாம் உற எளிவரும் தகைமையார் அலர்,
நாம் உற வல்லவர், நம்மை நண்ணினால்,
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின்,
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம். 80

'காலமே நோக்கினும், கற்ற நூல்களின்
மூலமே நோக்கினும், முனிந்து போந்தவன்
சீலமே நோக்கி, யாம் தெரிந்து தேறுதற்கு
ஏலுமே?' என்று எடுத்து இனைய கூறினான். 81

ஏனைய மந்திரக் கிழவரும் ஏற்றுக்கொள்ளுதல் குற்றமாகும் எனக் கூறுதல்

மற்றுள மந்திரக் கிழவர், வாய்மையால்,
குற்றம் இல் கேள்வியர், அன்பு கூர்ந்தவர்,
'பற்றுதல் பழுது' என, பழுது உறா ஒரு
பெற்றியின் உணர்வினார், முடியப் பேசினார். 82

அனுமனின் கருத்தை உரைக்குமாறு இராமன் குறிப்பினால் வினவுதல்

'உறு பொருள் யாவரும் ஒன்றக் கூறினார்
செறி பெருங் கேள்வியாய்! கருத்து என்? செப்பு' என,
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா
அறிவனை நோக்கினான், அறிவின் மேல் உளான். 83

மாருதியின் பேருரை

'இணங்கினர் அறிவிலர் எனினும், எண்ணுங்கால்,
கணம் கொள்கை நும்மனோர் கடன்மைகாண்' என
வணங்கிய சென்னியன், மறைத்த வாயினன்,
நுணங்கிய கேள்வியன், நுவல்வதாயினான்: 84

'எத்தனை உளர், தெரிந்து எண்ண ஏய்ந்தவர்,
அத்தனைவரும், ஒரு பொருளை, "அன்று" என,
உத்தமர், அது தெரிந்து உணர, ஓதினார்;
வித்தக! இனி, சில விளம்ப வேண்டுமோ? 85

'தூயவர் துணி திறன் நன்று தூயதே;
ஆயினும், ஒரு பொருள் உரைப்பென், ஆழியாய்!
"தீயன்" என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்;
மேயின சில பொருள் விளம்பக் கேட்டியால்: 86

'வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள் முகம்,
கண்டது ஓர் பொழுதினில், தெரியும்; கைதவம்
உண்டுஎனின், அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ?
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ? 87

'உள்ளத்தின் உள்ளதை, உரையின் முந்துற,
மௌ;ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால்,
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ? 88

'வாலி விண் பெற, அரசு இளையவன் பெற,
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும்,
சீலமும் உணர்ந்து, நிற் சேர்ந்து, தௌ;ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான். 89

'செறி கழல் அரக்கர்தம் அரசு சீரியோர்
நெறி அலது; ஆதலின், நிலைக்கலாமையும்,
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர்
பிறிவு அருங் கருணையும், மெய்யும், பேணினான். 90

'"காலம் அன்று, இவன் வரு காலம்" என்பரேல்,
"வாலிதன் உறு பகை வலி தொலைத்தலால்,
ஏலும், இங்கு இவற்கு இனி இறுதி" என்று, உனை
மூலம் என்று உணர்தலால், பிரிவு முற்றினான். 91

'தீத் தொழில் அரக்கர்தம் மாயச் செய் வினை
வாய்த்துளர், அன்னவை உணரும் மாண்பினால்
காய்த்தவர், அவர்களே கையுற்றார் நமக்கு;
ஏத்த அரும் உறுதியும் எளிதின் எய்துமால். 92

'"தெளிவுறல் அரிது, இவர் மனத்தின் தீமை; நாம்
விளிவது செய்குவர்" என்ன வேண்டுதல்,
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப, எண்ணலார்;
எளியவர்திறத்து இவை எண்ணல் ஏயுமோ? 93

'"கொல்லுமின், இவனை" என்று அரக்கன் கூறிய
எல்லையில், "தூதரை எறிதல் என்பது
புல்லிது; பழியொடும் புணரும்; போர்த் தொழில்
வெல்லலாம், பின்னர்" என்று இடை விலக்கினான். 94

'"மாதரைக் கோறலும், மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும், அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும், தூய்து அன்றாம்" என,
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான். 95

'எல்லியில் நான் இவன் இரத மாளிகை
செல்லிய போதினும், திரிந்த போதினும்,
நல்லன நிமித்தங்கள் நனி நயந்துள்
அல்லதும் உண்டு, நான் அறிந்தது - ஆழியாய்! 96

'நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும்,
தந்தன கண்டிலேன்; தரும தானமும்,
வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து,
அந்தணர் இல் எனப் பொலிந்ததாம் அரோ. 97

'அன்னவன் தனி மகள், "அலரின்மேல் அயன்
சொன்னது ஓர் சாபம் உண்டு; உன்னைத் துன்மதி,
நன்னுதல்! தீண்டுமேல், நணுகும் கூற்று" என,
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள். 98

'"பெற்றுடைய பெரு வரமும், பிறந்துடைய வஞ்சனையும், பிறவும், உன் கை
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும்" எனக் கருதி, விரைவின் வந்தான்;
உற்றுடைய பெரு வரமும், உகந்து உடைய தண்ணளியும், உணர்வும் நோக்கின்,
மற்று உடையர்தாம் உளரோ, வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார்? 99

'தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவ தேவர்
மூவர்க்கும், முடிப்ப அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்;
ஆவத்தின் வந்து, "அபயம்!" என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்,
கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? - கொற்ற வேந்தே! 100

'"பகைப் புலத்தோர் துணை அல்லர்" என்று இவனைப் பற்றோமேல், அறிஞர் பார்க்கின்,
நகைப் புலத்ததாம் அன்றே; நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க
தகைப் புலத்தோர் தந்தை தாய், தம்பியர்கள், தனயர், இவர்தாமே அன்றோ,
மிகைப் புலத்து விளைகின்றது ஒரு பொருளைக் காதலிக்கின், விளிஞர் ஆவர்? 101

'ஆதலால், "இவன் வரவு நல் வரவே" என உணர்ந்தேன், அடியேன்; உன் தன்
வேத நூல் எனத் தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்' என்று விட்டான் -
காதல் நான்முகனாலும் கணிப்ப அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று
ஓதினான், ஓத நீர் கடந்து, பகை கடிந்து, உலகை உய்யச் செய்தான். 102

அனுமன் கூறியன கேட்டு உவந்து, இராமன் வீடணனை ஏற்றுக்கொள்வது பற்றி எடுத்துரைத்தல்

மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து, இனிது மாந்தி,
'பேர் அறிவாள! நன்று நன்று' எனப் பிறரை நோக்கி,
'சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின்' என்னா,
ஆரியன் உரைப்பதானான்; அனைவரும் அதனைக் கேட்டார். 103

'கருத்து உற நோக்கிப் போந்த காலமும் நன்று; காதல்
அருத்தியும் அரசின் மேற்றே; அறிவினுக்கு அவதி இல்லை;
"பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன்" என்னும் பெற்றி
திருத்தியது ஆகும் அன்றே, நம்வயின் சேர்ந்த செய்கை? 104

'மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும்,
வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க,
பற்றுதல் அன்றி உண்டோ , அடைக்கலம் பகர்கின்றானை? 105

'இன்று வந்தான் என்று உண்டோ ? எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ ? அடைக்கலம் கூறுகின்றான்;
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே; பின்னைப்
பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ? 106

'பிறந்த நாள் தொடங்கி, யாரும், துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ ? என்னைச் சரண் என வாழ்கின்றானைத்
துறந்த நாள் இறந்த நாள் ஆம்; துன்னினான் சூழ்ச்சியாலே
இறந்த நாள் அன்றோ, என்றும் இருந்த நாள் ஆவது!' என்றான். 107

'இடைந்தவர்க்கு, "அபயம், யாம்!" என்று இரந்தவர்க்கு, எறி நீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்? 108

'பேடையைப் பிடித்து, தன்னைப் பிடிக்க வந்து அடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து, விறகிடை வெந் தீ மூட்டி,
பாடுறு பசியை நோக்கி, தன் உடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ? 109

'போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத போரின்,
"ஆதிஅம் பரமே! யான் உன் அபயம்!" என்று அழைத்த அந் நாள்,
வேதமும், முடிவு காணா மெய்ப் பொருள் வெளி வந்து எய்தி,
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, மறப்பிலாதார்? 110

'மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன்,
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே
என்னினும், அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி,
பின்னும் வீடு அளிக்கும் என்றால், பிறிது ஒரு சான்றும் உண்டோ ? 111

'நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன், "நாளும்
தஞ்சு" என, முன்னம், தானே தாதைபால் கொடுத்து, "சாதல்
அஞ்சினேன்; அபயம்!" என்ற அந்தணற்கு ஆகி, அந் நாள்,
வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ ? 112

'"சரண் எனக்கு யார்கொல்?" என்று சானகி அழுது சாம்ப,
"அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!" என்று அருளின் எய்தி,
முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய் அமர் முடித்து, தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என்வயின் வழக்கு அன்று ஆமோ? 113

'உய்ய, "நிற்கு அபயம்!" என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும்,
மை அற, நெறியின் நோக்கி, மா மறை நெறியில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகில் வீழ்வார். 114

'சீதையைக் குறித்ததேயோ, "தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வேன்" என்று பேணிய விரதப் பெற்றி?
வேதியர், "அபயம்!" என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ? 115

'காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின், இதனின் மேல் சிறந்தது உண்டோ?
பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் அம்மா! 116

'ஆதலான், "அபயம்!" என்ற பொழுதத்தே, அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர், என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி' என்றான். 117

இராமன் பணித்தபடி, சுக்கிரீவன் வீடணனை அழைத்துவரச் செல்லுதல்

ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே;
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி,
கைபுகற்கு அமைவது ஆனான், 'கடிதினின் கொணர்வல்' என்னா,
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்பால் விரைவின் சென்றான். 118


சுக்கிரீவனது வருகையை துமிந்தன் வீடணனுக்கு உரைக்க, அவன் சுக்கிரீவனது எதிரே செல்லுதல்

வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல்,
'"தருக!" என்றான்; அதனால், நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த,
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன்' என்னலோடும்,
திரிகின்ற உள்ளத்தானும், அகம் மலர்ந்து, அவன் முன் சென்றான். 119

சுக்கிரீவனும் வீடணனும் ஒருவரை ஒருவர் தழுவுதல்

தொல் பெருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்
புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒரு நாள் உற்ற
எல்லியும் பகலும் போல, தழுவினர், எழுவின் தோளார். 120

இராமன் வீடணனுக்கு அபயம் தந்ததைச் சுக்கிரீவன் தெரிவித்தல்

தழுவினர் நின்ற காலை, 'தாமரைக்கண்ணன் தங்கள்
முழு முதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள,
வழுவல் இல் அபயம் நின்பால் வழங்கினன்; அவன் பொற் பாதம்
தொழுதியால், விரைவின்' என்று கதிரவன் சிறுவன் சொன்னான். 121

அபயம் அளித்தது குறித்து வீடணன் மகிழ்தல்

சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகாமுன்,
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழைத் தாரை கான்ற்
அங்கமும் மனம் அது என்னக் குளிர்ந்தது; அவ் அகத்தை மிக்குப்
பொங்கிய உவகை என்னப் பொடித்தன, உரோமப் புள்ளி. 122

'"பஞ்சு" எனச் சிவக்கும் மென் கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை, "வருக!" என்று அருள் செய்தானோ?
தஞ்சு எனக் கருதினானோ? தாழ் சடைக் கடவுள் உண்ட
நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன்? 123

'மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான்; வானத்து
உருளுறு தேரினானும், இலங்கை மீது ஓடும் அன்றே? -
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின், செய்யும்
அருள் இது ஆயின், கெட்டேன்! பிழைப்பரோ அரக்கர் ஆனோர்? 124

'தீர்வு அரும் இன்னல் தம்மைச் செய்யினும், செய்ய சிந்தைப்
பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ? -
கார் வரை நிறுவி, தன்னைக் கனல் எழக் கலக்கக் கண்டும்,
ஆர்கலி, அமரர் உய்ய, அமுது பண்டு அளித்தது அன்றே! 125

'துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை
உற உவந்து அருளி, மீளா அடைக்கலம் உதவினானே!
அற வினை இறையும் இல்லா, அறிவு இலா, அரக்கன் என்னும்
பிறவியின் பெயர்ந்தேன்; பின்னும், நரகினின் பிழைப்பதானேன்.' 126

இராமனிடம் விரைவில் செல்லுமாறு சுக்கிரீவன் கூறுதல்

திருத்திய உணர்வு மிக்க செங் கதிர்ச் செல்வன் செம்மல்,
'ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும், உயிரின் ஓம்பும்
கருத்தினன் அன்றே, தன் பொற் கழல் அடைந்தோiர் காணும்
அருத்தியன், அமலன்; தாழாது ஏகுதி, அறிஞ!' என்றான். 127

இருவரும் இராமன் இருப்பிடத்திற்குச் செல்லுதல்

மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல,
மை தவழ் கிரியும் மேருக் குன்றமும் வருவது என்ன,
செய் தவம் பயந்த வீரர், திரள் மரம் ஏழும் தீய
எய்தவன் இருந்த சூழல், இருவரும் எய்தச் சென்றார். 128

வீடணன் இராமனைக் கண்டு, அவன் திருவடிகளில் விழுந்து வணங்குதல்

மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப,
நாற் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன், நாமப்
பாற் கடல் சுற்ற, விற் கை வட வரை பாங்கு நிற்ப,
கார்க் கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக் கண்டான். 129

அள்ளி மீது உலகை வீசும் அரிக் குலச் சேனை நாப்பண்,
தௌ;ளு தண் திரையிற்று ஆகி, பிறிது ஒரு திறனும் சாரா
வெள்ளி வெண் கடலுள் மேல்நாள் விண்ணவர் தொழுது வேண்ட,
பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு பண்பினானை; 130

கோணுதற்கு அமைந்த கோலப் புருவம்போல் திரையும் கூட,
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில்,
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி,
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை; 131

படர் மழை சுமந்த காலைப் பருவ வான், அமரர் கோமான்
அடர் சிலை துறந்தது என்ன, ஆரம் தீர் மார்பினானை;
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்னக் காசின்
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தரத் தோளினானை; 132

கற்றை வெண் நிலவு நீங்க, கருணை ஆம் அமிழ்தம் காலும்
முற்றுறு கலையிற்று ஆய முழுமதி முகத்தினானை;
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற, தான் பெற்ற
சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை; 133

வீரனை - நோக்கி, அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப, கண்ணீர்
வார, நெஞ்சு உருகி, 'செங் கண் அஞ்சன மலை! அன்று ஆகின்,
கார் முகில் கமலம் பூத்தது! அன்று, இவன் கண்ணன் கொல்லாம்;
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ?' என்றான். 134

'மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க,
செம் மணி மகுடம் நீக்கி, திருவடி புனைந்த செல்வன்
தம்முனார், கமலத்து அண்ணல் தாதையார், சரணம் தாழ,
எம்முனார் எனக்குச் செய்த உதவி' என்று ஏம்பலுற்றான். 135

'பெருந் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி நோய்க்கு
மருந்து என நின்றான் தானே வடிக் கணை தொடுத்துக் கொல்வான்
இருந்தனன்; நின்றது, என்னோ இயம்புவது? எல்லை தீர்ந்த
அருந் தவம் உடையர் அம்மா, அரக்கர்!' என்று அகத்துள் கொண்டான். 136

கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும் தோறும், இரு நிலத்து இறைஞ்சுகின்றான்;
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான். 137

இராமன் வீடணனுக்கு இருக்கை கொடுத்து, இலங்கையின் அரசையும் அளித்தல்

'அழிந்தது, பிறவி' என்னும் அகத்து இயல் முகத்துக் காட்ட,
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை,
பொழிந்தது ஓர் கருணைதன்னால், புல்லினன் என்று தோன்ற,
'எழுந்து, இனிது இருத்தி' என்னா, மலர்க்கையால் இருக்கை ஈந்தான். 138

ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, உவகை கூர,
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந் நாள்
வாழும் நாள், அன்று காறும், வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே; தந்தேன்' என்றான். 139

தீர்த்தன் நல் அருளை நோக்கிச் செய்ததோ? சிறப்புப் பெற்றான்
கூர்த்த நல் அறத்தை நோக்கிக் குறித்ததோ? யாது கொல்லோ? -
வார்த்தை அஃது உரைத்தலோடும், 'தனித் தனி வாழ்ந்தேம்' என்ன
ஆர்த்தன, உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா! 140

வீடணனுக்கு மகுடம் சூட்டுமாறு இலக்குவனுக்கு இராமன் கூறுதல்

'உய்ஞ்சனென் அடியனேன்' என்று ஊழ்முறை வணங்கி நின்ற
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி,
'தஞ்ச நல் துணைவன் ஆன தவறு இலாப் புகழான் தன்னை,
துஞ்சல் இல் நயனத்து ஐய! சூட்டுதி மகுடம்' என்றான். 141

தனக்குத் திருவடி சூட்டுமாறு வீடணன் வேண்டுதல்

விளைவினை அறியும் மேன்மை வீடணன், 'என்றும் வீயா
அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி' என்றான். 142

இராமன் வீடணனைத் தம்பியாகக் கொண்டு கூறுதல்

'குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.' 143

வீடணன் இராமன் திருவடியைச் சூட்டிக்கொள்ளுதல்

'நடு இனிப் பகர்வது என்னே? நாயக! நாயினேனை,
"உடன் உதித்தவர்களோடும் ஒருவன்" என்று, உரையா நின்றாய்;
அடிமையின் சிறந்தேன்' என்னா, அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி,
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான். 144

திருவடி முடியின் சூடி, செங் கதிர் உச்சி சேர்ந்த
அரு வரை என்ன, நின்ற அரக்கர் தம் அரசை நோக்கி,
இருவரும் உவகை கூர்ந்தார்; யாவரும் இன்பம் உற்றார்;
பொரு அரும் அமரர் வாழ்த்தி, பூமழை பொழிவதானார். 145

ஆர்த்தன, பரவை ஏழும்; ஆர்த்தன, மேகம்; ஆர்த்த,
வார்த் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும்;
தூர்த்தன, கனக மாரி; சொரிந்தன, நறு மென் சுண்ணம்;
போர்த்தது வானத்து, அன்று, அங்கு, எழுந்தது துழனிப் பொம்மல். 146

'மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது' என்று ஏம்பலுற்றான்,
செழுந் தனி மலரோன்; பின்னை, 'இராவணன் தீமைச் செல்வம்
அழிந்தது' என்று, அறனும், தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே. 147

வீடணனோடு பாடி வீட்டை வலம் செய்யுமாறு இராமன் பணித்தல்

இன்னது ஓர் செவ்வித்து ஆக, இராமனும், 'இலங்கை வேந்தன் -
தன் நெடுஞ் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப,
பல் நெடுந் தானை சூழ, பகலவன் சேயும் நீயும்,
மன் நெடுங் குமர! பாடி வீட்டினை வலம் செய்க!' என்றான். 148

வானர வீரர் வலம் செய்வித்தல்

அந்தம் இல் குணத்தினானை அடியிணை - முடியினோடும்
சந்தன விமானம் ஏற்றி, வானரத் தலைவர் தாங்க,
'இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன்' என்று ஏத்தி,
மந்தரத் தடந் தோள் வீரர், வலம் செய்தார், பாடி வைப்பை. 149

பெரியோர்களின் மகிழ்ச்சி

தேடுவார் தேட நின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான், அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி, மேல் அமரர் ஆவார்;
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர்? சொல்லீர். 150

'இற்றை நாள் அளவும், யாரும் இருடிகள், இமையோர், ஞானம்
முற்றினார், அன்பு பூண்டார், வேள்விகள் முடித்து நின்றார்,
மற்று மா தவரும், எல்லாம், வாள் எயிற்று இலங்கை வேந்தன்
பெற்றது ஆர் பெற்றார்!' என்று வியந்தனர், பெரியோர் எல்லாம். 151

மிகைப் பாடல்கள்

சிரத்தொகை அனைத்தையும் துளக்கி, தீ எழக்
கரத்தொடு கரம் பல புடைத்து, 'காளை! நீ
உரைத்திடும் உறுதிகள் நன்று, நன்று!' எனாச்
சிரித்தனன், கதம் எழுந்து இனைய செப்புவான்: 1-1

'அன்று வானரம் வந்து, நம் சோலையை அழிக்க
"கொன்று தின்றிடுமின்" என, "தூதரைக் கோறல்
வென்றி அன்று" என விலக்கினை; மேல் விளைவு எண்ணித்
துன்று தாரவன் - துணை எனக் கோடலே துணிந்தாய். 6-1

'நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்;
சீரிது என்று உணர்கிலை; சீறிப் பொங்கினாய்;
ஓர் தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார்,
தேர்வுறின், அவர்களின் சிறந்த பேதையோர்.' 11-1

'மற்று ஒரு பொருள் உளது என்? நின் மாறு இலாக்
கொற்றவ! சரண்' எனக் கூயது ஓர் உரை
உற்றது, செவித்தலத்து; ஐயன் ஒல்லென
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா, 33-1

'"எந்தையே இராகவ! சரணம்" என்ற சொல்
தந்தவர் எனைவரோ? சாற்றுமின்!' என,
மந்தணம் உற்றுழீஇ, வய வெஞ் சேனையின்
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம் அரோ: 33-2

'மேலைநாள், அமுதமும் விடமும் வெண்கடல்
மூலமாய் உதித்தன் முறையின் முற்றுதல்
சாலுமோ, ஒன்று எனக் கருதல் தக்கதோ -
ஞால நாயக! - தெரிந்து எண்ணி நாடிலே? 86-1

'ஒருவயிறு உதித்தனர், அதிதி, ஒண் திதி,
இருவர்; மற்று அவரிடத்து எண்ணில், எம்பிரான்!
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்;
கருதின் மற்று ஒன்று எனக் கழறலாகுமோ? 86-2

'எப்பொருள்? ஏவரே? உலகின் ஓர் முறை
ஒப்பினும், குணத்து இயல் உணரின், பேதமாம்
அப் பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து, அகம்
மெய்ப் பொருள் கோடலே விழுமிது' என்பரால். 86-3

'ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து
ஓவலின் இவர்தமக்கு உணர ஒண்ணுமோ?
தேவர்கள் தேவன் நீ; தெளியின், அன்னவர்க்
கூவி, இங்கு அறிவது கொள்கை ஆகுமால். 91-1

மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து, வேடன்
மீது ஒரு மரத்தில் சேர, வேண்டு உரை அரிக்குச் சொல்லி,
பேதம் அற்று இருந்தும்? அன்னான் பிரிந்த வஞ்சத்தை ஓர்ந்தும்,
காதலின் கனி காய் நல்கிக் காத்ததும் கவியது அன்றோ? 116-1

என்ன முன் பருதிமைந்தன் எழுந்து அடி வணங்கி, 'எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால், மறுத்து ஒரு துணிவும் உண்டோ?
உன் உளத்து உணராது ஏது? உனக்கு அரிது யாதோ?' என்னாப்
பன்னி, மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான். 117-1

வானவர் இதனைக் கூற, வலங்கொடு தானை வைப்பை,
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும், 'தாழாது
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன்' என மனத்து உவந்து, ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான். 151-1



 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home