Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் > 28 இராவணன் சோகப் படலம >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 28. இராவணன் சோகப் படலம்


தூதர் இராவணனுக்கு இந்திரசித்து இறந்த செய்தியைத் தெரிவித்தல்

ஓத ரோதன வேலை கடந்துளார்,
பூதரோதரம் புக்கென, போர்த்து இழி
சீதரோதக் குருதித் திரை ஒரீஇ,
தூதர் ஓடினர், தாதையின் சொல்லுவார். 1

அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என,
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ,
'இன்று இலங்கை அழிந்தது' என்று ஏங்குவார்,
சென்று, இலங்கு அயில் தாதையைச் சேர்ந்துளார். 2

பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்,-
'இல்லை ஆயினன், உன் மகன் இன்று' எனச்
சொல்லினார் - பயம் சுற்றத் துளங்குவார். 3

மாடு இருந்தவர், வானவர், மாதரார்,
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும்,
'வீடும், இன்று, இவ் உலகு' என விம்முவார்,
ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர். 4

செய்தி கொணர்ந்த தூதரை வாளால் வீசி, இராவணன் சோர்ந்து விழுதல்

சுடர்க் கொழும் புகை தீ விழி தூண்டிட,
தடற்று வாள் உருவி, தரு தூதரை
மிடற்று வீசல் உறா, விழுந்தான் அரோ-
கடல் பெருந் திரைபோல் கரம் சோரவே. 5

இராவணன் கண்ணீர் உகுத்தல்

'வாய்ப் பிறந்தும், உயிர்ப்பின் வளர்ந்தும், வான்
காய்ப்பு உறும்தொறும் கண்ணிடைக் காந்தியும்,
போய்ப் பிறந்து, இவ் உலகைப் பொதியும் வெந்
தீப் பிறந்துளது, இன்று' எனச் செய்ததால். 6

படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து,
இடம் பிறங்கி, வலம்பெயர்ந்து ஈடு உற,
உடம்பு இறங்கிக் கிடந்து உழைத்து, ஓங்கு தீ
விடம் பிறந்த கடல் என வெம்பினான். 7

திருகு வெஞ் சினத் தீ நிகர் சீற்றமும்,
பெருகு காதலும், துன்பும், பிறழ்ந்திட,
இருபது என்னும் எரி புரை கண்களும்,
உருகு செம்பு என, ஓடியது ஊற்று நீர். 8

கடித்த பற்குலம், கற் குலம் கண் அற
இடித்த காலத்து உரும் என எங்கணும்,
அடித்த கைத்தலத்து அம் மலை, ஆழி நீர்,
வெடித்த வாய்தொறும் பொங்கின, மீச் செல. 9

இராவணனின் புலம்பல்

'மைந்தவோ!' எனும்; 'மா மகனே!' எனும்;
'எந்தையோ!' எனும்; 'என் உயிரே!' எனும்;
'உந்தினேன் உனை; நான் உளெனே!' எனும்;-
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான். 10

'புரந்தரன் பகை போயிற்று அன்றோ!' எனும்;
'அரந்தை வானவர் ஆர்த்தனரோ!' எனும்;
'கரந்தை சூடியும், பாற்கடல் கள்வனும்,
நிரந்தரம் பகை நீங்கினரோ!' எனும். 11

'நீறு பூசியும் நேமியும் நீங்கினார்,
மாறு குன்றொடு வேலை மறைந்துளார்,
ஊறு நீங்கினராய், உவணத்தினோடு
ஏறும் ஏறி, உலாவுவர்' என்னுமால். 12

'வான மானமும், வானவர் ஈட்டமும்,
போன போன திசை இடம் புக்கன,
தானம் ஆனவை சார்கில் சார்குவது,
ஊன மானிடர் வென்றிகொண்டோ ?' எனும். 13

'கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு
கட்ட மானிடன் கொல்ல, என் காதலன்
பட்டு ஒழிந்தனனே!' எனும்; பல் முறை
விட்டு அழைக்கும்; உழைக்கும்; வெதும்புமால். 14

எழும்; இருக்கும்; நடக்கும்; இரக்கம் உற்று
அழும்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும்; போய்
விழும்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால்,
உழும் நிலத்தை; உருளும்; புரளுமால். 15

'ஐயனே!' எனும், ஓர் தலை; 'யான் இனம்
செய்வெனே அரசு!' என்னும், அங்கு ஓர் தலை;
'கையனேன், உனைக் காட்டிக் கொடுத்த நான்,
உய்வெனே!' என்று உரைக்கும், அங்கு ஓர் தலை. 16

'எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவிக் கொள்கலையோ!' எனும், ஓர் தலை;
'உழுவைப் போந்தை உழை உயிர் உண்பதே!
செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை. 17

'நீலம் காட்டிய கண்டனும், நேமியும்,
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம்
தோலும் காட்டி, துரந்தனை; மீண்டும் நின்
ஓலம் காட்டிலையோ!' எனும், ஓர் தலை. 18

'துஞ்சும் போது துணை பிரிந்தேன்' எனும்;
'வஞ்சமோ!' எனும்; 'வாரலையோ!' எனும்;
'நெஞ்சு நோவ, நெடுந் தனியே கிடந்து,
அஞ்சினேன்!' என்று அரற்றும்;-அங்கு ஓர் தலை. 19

'காகம் ஆடு களத்திடைக் காண்பெனோ,
பாகசாதனன் மௌலியொடும் பறித்து
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின்
வாகை நாள் மலர்?' என்னும் - மற்று ஓர் தலை. 20

'சேல் இயல் கண் இயக்கர் தம் தேவிமார்,
மேல் இனித் தவிர்கிற்பர்கொல், வீர! நின்
கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித் தம்
தாலியைத் தொடல்' என்னும் - மற்று ஓர் தலை. 21

'கூற்றம் உன் எதிர் வந்து, உயிர் கொள்வது ஓர்
ஊற்றம் தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து
எற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய்!' என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை. 22

இராவணன் தன் மகனது உடலைத் தேடி களம் புகுதல்

இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து,
உன்னும் மாத்திரத்து ஓடினன், ஊழி நாள்
பொன்னின் வான் அன்ன போர்க் களம் புக்கனன்,
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான். 23

களத்தில் புக்க இராவணனைக் கண்ட தேவர் முதலியோர் செயல்

தேவரே முதலாகிய சேவகர்
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார்,
'மூவகைப் பேர் உலகின் முறைமையும்
ஏவது ஆகும்?' என்று எண்ணி இரங்குவார். 24

அழுதவால் சில் அன்பின போன்று, அடி
தொழுதவால் சில் தூங்கினவால் சில்
உழுத யானைப் பிணம் புக்கு ஒளித்தவால் -
கழுதும் புள்ளும், அரக்கனைக் காண்டலும். 25

ஒரு நாள் முழுவதும் தேடி, முதலில் இந்திரசித்தின் சிலையோடு கிடந்த கையை இராவணன் காணுதல்

கோடி கோடிக் குதிரையின் கூட்டமும்,
ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும்,
ஓடை யானையும், தேரும், உருட்டினான்,
நாடினான், தன் மகன் உடல், நாள் எலாம். 26

மெய் கிடந்த விழி வழி நீர் உக,
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான்,
மொய் கிடந்த சிலையொடு மூரி மாக்
கை கிடந்தது கண்டனன், கண்களால். 27

இந்திரசித்தின் கையைத் தலைமேல் சேர்த்த இராவணனின் நிலை

பொங்கு தோள் வளையும் கணைப் புட்டிலோடு
அங்கதங்களும் அம்பும் இலங்கிட,
வெங் கண் நாகம் எனப் பொலி மெய்க் கையைச்
செங் கையால் எடுத்தான், சிரம் சேர்த்தினான். 28

கல் திண் மார்பில் தழுவும்; கழுத்தினில்
சுற்றும்; சென்னியில் சூட்டும்; சுழல் கணோடு
ஒற்றும்; மோந்து உள் உருகும்; உழைக்குமால்;
முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான். 29

இந்திரசித்தின் உடலைக் கண்டு, அதன் மேல் விழுந்து, இராவணன் புலம்பித் துயருறுதல்

கை கண்டான், பின் கருங் கடல் கண்டென,
மெய் கண்டான், அதன்மேல் விழுந்தான் அரோ-
பெய் கண் தாரை அருவிப் பெருந் திரை,
மொய் கண்டார் திரை வேலையை மூடவே. 30

அப்பு மாரி அழுந்திய மார்பைத் தன்
அப்பு மாரி அழுது இழி யாக்கையின்
அப்பும்; மார்பில் அணைக்கும்; அரற்றுமால்;
அப் புமான் உற்றது யாவர் உற்றார் அரோ! 31

பறிக்கும், மார்பின் பகழியை; பல் முறை
முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்குமால்;
'எறிக்கும் வெங் கதிரோடு உலகு ஏழையும்
கறிக்கும், வாயில் இட்டு, இன்று' எனக் காந்துமால். 32

இராவணனது சினம் கண்டு, தேவர் முதலியோர் அஞ்சுதல்

தேவரோடு முனிவரும், சீரியோர்
ஏவரோடும், இடம் இன்றி நின்றவன்-
'மூவரோடும், உலகு ஒரு மூன்றொடும்
போவதேகொல், முனிவு' எனும் மொம்மலான். 33

இந்திரசித்தின் தலையைக் காணாது இராவணன் அரற்றுதல்

கண்டிலன் தலை; 'காந்தி, அ(ம்) மானிடன்
கொண்டு இறந்தனன்' என்பது கொண்டவன்,
புண் திறத்தன நெஞ்சன், பொருமலன்,
விண் திறந்திட, விம்மி, அரற்றினான்: 34

'நிலையின் மாதிரத்து நின்ற யானையும், நெற்றிக் கண்ணன்
மலையுமே, எளியவோ, நான் பறித்தற்கு? மறு இல் மைந்தன்,
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க,
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்! 35

'எரி உண அளகை மூதூர், இந்திரன் இருக்கை எல்லாம்
பொரி உண, உலகம் மூன்றும் பொது அறப் புரந்தேன் போலாம்!
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை
நரி உணக் கண்டேன்; ஊணின், நாய் உணும் உணவு நன்றால்! 36

'பூண்டு, ஒரு பகைமேல் புக்கு, என் புத்திரனோடும் போனார்
மீண்டிலர் விளித்து வீழ்ந்தார்; விரதியர் இருவரோடும்
ஆண்டு உள குரங்கும், ஒன்றும் அமர்க் களத்து, ஆரும் இன்னும்
மாண்டிலர்; இனி மற்று உண்டோ , இராவணன் வீர வாழ்க்கை? 37

'கந்தர்ப்பர், இயக்கர், சித்தர், அரக்கர்தம் கன்னிமார்கள்,
சிந்து ஒக்கும் சொல்லினார், உன் தேவியர், திருவின் நல்லார்,
வந்து உற்று, 'எம் கணவன் தன்னைக் காட்டு' என்று, மருங்கின் வீழ்ந்தால்,
அந்து ஒக்க அரற்றவோ, நான் கூற்றையும் ஆடல் கொண்டேன்! 38

'சினத்தொடும் கொற்றம் முற்ற, இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?' 39

இந்திரசித்தின் உடலோடு இராவணன் இலங்கை புக, மகளிர் முதலிய பலரும் அழுது புலம்புதல்

என்பன பலவும் பன்னி, எடுத்து அழைத்து, இரங்கி ஏங்கி,
அன்பினால் மகனைத் தாங்கி, அரக்கியர் அரற்றி வீழ,
பொன் புனை நகரம் புக்கான்; கண்டவர் புலம்பும் பூசல்,
ஒன்பது திக்கும், மற்றை ஒரு திக்கும், உற்றது அன்றே. 40

கண்களைச் சூல்கின்றாரும், கழுத்தினைத் தடிகின்றாரும்,
புண் கொளத் திறந்து, மார்பின் ஈருளைப் போக்குவாரும்,
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும், -
எண்களில் பெரிய ஆற்றார் - இருந் துயர் பொறுக்கல் ஆற்றார். 41

மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுடச் சென்னி
போதலைப் புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுதக் கண்டார்,
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ளக்
காதல் நீர் ஓடி, ஆடல் கருங் கடல் மடுத்தது அன்றே. 42

ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய
தேவியர் குழாங்கள் சுற்றி, சிரத்தின் மேல் தளிர்க் கை சேர்த்தி,
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப, ஒல்லைக்
கோ இயல் கோயில் புக்கான், குருதி நீர்க் குமிழிக் கண்ணான். 43

மண்டோ தரி வந்து, மைந்தன்மேல் வீழ்ந்து, புலம்புதல்

கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி,
அருங் கலச் சும்மை தாங்க, 'அகல் அல்குல் அன்றி, சற்றே
மருங்குலும் உண்டு உண்டு' என்ன, - மயன் மகள் - மறுகி வந்தாள். 44

தலையின்மேல் சுமந்த கையள், தழலின்மேல் மிதிக்கின்றாள்போல்
நிலையின்மேல் மிதிக்கும் தாளன், ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள்,
கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங் கணை உயிரைக் கொள்ள,
மலையின் மேல் மயில் வீழ்ந்தென்ன, மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள். 45

உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; 'உயிர் இலள்கொல்லோ!' என்னப்
பெயர்த்திலள், யாக்கை; ஒன்றும் பேசலள்; அல்லது யாதும்
வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல மெல்ல,
அயர்த்தனள் அரிதின் தேறி, வாய் திறந்து, அரற்றலுற்றாள்; 46

'கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன்,
சிலையினால் அரியை வெல்லக் காண்பது ஓர் தவம் முன் செய்தேன்;
தலை இலா ஆக்கை காண எத் தவம் செய்தேன்! அந்தோ!
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ, நினைவு இலாதேன்? 47

'ஐயனே! அழகனே! என் அரும் பெறல் அமிழ்தே! ஆழிக்
கையனே, மழுவனே, என்று இவர் வலி கடந்த கால
மொய்யனே!-முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன்,
உய்வெனோ?-உலகம் மூன்றுக்கு ஒருவனே! செரு வலோனே! 48

'தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற பருவம் தன்னில்,
கோள் அரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை; கொணர்ந்து, கோபம்
மூளுறப் பொருத்தி, மாட முன்றிலில் முறையினோடு
மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ, விதியிலாதேன்! 49

'அம்புலி! அம்ம வா!' என்று அழைத்தலும், அவிர் வெண் திங்கள்
நம்ப! உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண,
வம்புறும் மறுவைப் பற்றி, 'முயல்' என வாங்கும் வண்ணம்,
எம் பெருங் களிறே! காண, ஏசற்றேன்; எழுந்திராயோ! 50

'இயக்கியர், அரக்கிமார்கள், விஞ்சையர் ஏழைமாதர்,
முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர், முழுதும் நின்னை
மயக்கிய முயக்கம் தன்னால், மலர் அணை அமளிமீதே
அயர்த்தனை உறங்குவாயோ? அமர் பொருது அலசினாயோ? 51

'முக்கணான் முதலினோரை, உலகு ஒரு மூன்றினோடும்,
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம்,
மக்களில் ஒருவன் கொல்ல, மாள்பவன்? வான மேரு
உக்கிட, அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா! 52

'பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ் சின மனிதர் கொல்ல, விளிந்ததே; மீண்டது இல்லை;
அஞ்சினேன் அஞ்சினேன்; அச் சீதை என்று அமுதால் செய்த
நஞ்சினால், இலங்கை வேந்தன் நாளை இத் தகையன் அன்றோ?' 53

இராவணன் சீதையை வாளால் வெட்டச் செல்லுதல்

என்று அழைத்து இரங்கி ஏங்க, 'இத் துயர் நமர்கட்கு எல்லாம்
பொன் தழைத்தனைய அல்குல் சீதையால் புகுந்தது' என்ன,
'வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, வாளால்
கொன்று இழைத்திடுவென்' என்னா ஓடினன், அரக்கர் கோமான். 54

மகோதரன் இராவணனைத் தடுத்தல்

ஓடுகின்றானை நோக்கி, 'உயர் பெரும் பழியை உச்சிச்
சூடுகின்றான்' என்று அஞ்சி, மகோதரன், துணிந்த நெஞ்சன்,
மாடு சென்று, அடியின் வீழ்ந்து, வணங்கி, 'நின் புகழ்க்கு மன்னா!
கேடு வந்து அடுத்தது' என்னா, இனையன கிளத்தலுற்றான்: 55

'நீர் உளதனையும், சூழ்ந்த நெருப்பு உளதனையும், நீண்ட
பார் உளதனையும், வானப் பரப்பு உளதனையும், காலின்
பேர் உளதனையும், பேராப் பெரும் பழி பிடித்தி போலாம் -
போர் உளதனையும் வென்று, புகழ் உளதனையும் உள்ளாய்! 56

'தௌ;ள அருங் காலகேயர் சிரத்தொடும், திசைக்கண் யானை
வெள்ளிய மருப்புச் சிந்த வீசிய விசயத்து ஒள் வாள்,
வள்ளி அம் மருங்குல், செவ் வாய், மாதர்மேல் வைத்த போது,
கொள்ளுமே ஆவி தானே, நாணத்தால் குறைவது அல்லால்? 57

'மங்கையை, குலத்துளாளை, தவத்தியை, முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றால், "குலத்துக்கே தக்கான்" என்று,
கங்கை அம் சென்னியானும், கண்ணனும், கமலத்தோனும்,
செங் கையும் கொட்டி, உன்னைச் சிரிப்பரால், "சிறியன்" என்னா. 58

'நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி அன்று; நீதி அன்று;
தலத்து இயல்பு அன்று; மேலோர் தருமமேல், அதுவும் அன்று;
புலத்தியன் மரபின் வந்து, புண்ணிய மரபு பூண்டாய்!
வலத்து இயல்பு அன்று; மாயாப் பழி கொள மறுகுவாயோ? 59

'இன்று நீ இவளை வாளால் எறிந்தனை, இராமன் தன்னை
வென்று மீண்டு, இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ?
பொன்றினள் சீதை; இன்றே, புரவல! புதல்வன் தன்னைக்
கொன்றவர் தம்மைக் கொல்லக் கூசினை கொள்க!' என்றான். 60

இராவணன் சீதையை வெட்டுதல் தவிர்ந்து, இந்திரசித்தின் உடலைத் தைலத் தோணியில் இடுமாறு பணித்தல்

என்னலும், எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு, மீண்டு,
மன்னவன், 'மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட
சின்னமும், அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றிச் சேர்கேன்;
தொல் நெறித் தயிலத்தோணி வளர்த்துமின்' என்னச் சொன்னான். 61

மிகைப் பாடல்கள்

தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் போலத் தாமும்
பழங்கண் உற்று, உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி,
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர்; மைந்தன் ஆவி
இழந்தனன் என்னக் கேட்டு, ஆங்கு, இடி உறும் அரவை ஒத்தாள். 43-1

உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல ஆய
ஐம்பது கோடி தெய்வத் தாதியர் அழுது சூழ்ந்தார்;
தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும் குருளை மாய,
கம்பம் உற்று, அரியின் பேடு கலங்கியது என்னச் சோர்ந்தாள். 43-2

பத்து எனும் திசையும் வென்று, கயிலையில் பரனை எய்தி,
அத் தலை அமர் செய்து, ஆற்றான்; அவன் இடத்து உமை அன்பால் தன்
கைத்தலக் கிளி நிற்கு ஈய, கவர்ந்து எனக்கு அளித்து நின்ற
வித்தகக் களிறே! இன்னும் வேண்டினேன்; எழுந்திராயே! 50-1

'மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள், மன்னர் தோள் சேர்
நஞ்சு அன விழியால் அன்றி, நகை மணிப் புதல்வர், நல்லோர்,
செஞ் சிலை மலரால் கோலித் திரிந்தவா என்னில், செல்லும்,
வெஞ் சமர் இன்னும் காண வல்லனோ விதி இலாதேன்!' 52-1



 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home