Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் > 28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 25. மாயா சீதைப் படலம்


இராவணன் நேர்ந்துள்ள நிலைமையை உரைத்தல்

மைந்தனும், மற்றுளோரும், மகோதரப் பெயரினானும்,
தந்திரத் தலைமையோரும், முதியரும், தழுவத் தக்க
மந்திரர் எவரும், வந்து, மருங்கு உறப் படர்ந்தார்; பட்ட
அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறியச் சொன்னான். 1

மாலியவான் அறிவுரை

'நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட, நணுகும் அன்றே,
வெங் கொடுந் தீமைதன்னால் வேலையில் இட்டிலேமேல்?
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை,
பங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால். 2

'இலங்கையின்நின்று, மேரு பிற்பட, இமைப்பில் பாய்ந்து,
வலம் கிளர் மருந்து, நின்ற மலையொடும், கொணர வல்லான்
அலங்கல் அம் தடந் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் -
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால். 3

'நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையாய் நின்ற குன்றைப்
பாரினில் கிழிய வீசின், ஆர் உளர், பிழைக்கற்பாலார்?
போர் இனிப் பொருவது எங்கே? போயின அனுமன், பொன் மா
மேருவைக் கொணர்ந்து, இவ் ஊர்மேல் விடும் எனின், விலக்கல் ஆமோ? 4

'முறை கெட வென்று, வேண்டின் நினைந்ததே முடிப்பன்; முன்னின்,
குறை இலை குணங்கட்கு; என்னோ, கோள் இலா வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது? எண் இலார் எண்ணமே தான்;-
அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா. 5

'இறந்தனர் இறந்து தீர் இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம் ஆகின், உள்ளேம், உய்ந்தனம், பிழைக்கும் பெற்றி
மறந்தனம்; எனினும், இன்னம் சனகியை மரபின் ஈந்து, அவ்
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும், ஐய! 6

'வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து, வாரி
வேலையை வென்று, கும்பகருணனை வீட்டினானை,
ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ, அமரின் வெல்வார்?-
சூலியைப் பொருப்பினோடும் தூக்கிய விசயத் தோளாய்! 7

'மறி கடல் குடித்து, வானம் மண்ணோடும் பறிக்க வல்ல
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர்; இலங்கை ஊரும்,
சிறுவனும் நீயும் அல்லால், யார் உளர், ஒருவர் தீர்ந்தார்?
வெறிது, நம் வென்றி' என்றான், மாலி, மேல் விளைவது ஓர்வான். 8

இராவணன் வீரம் பேசுதல்

கட்டுரை அதனைக் கேளா, கண் எரி கதுவ நோக்கி,
'பட்டனர் அரக்கர் என்னின், படைக்கலம் படைத்த எல்லாம்
கெட்டன எனினும், வாழ்க்கை கெடாது; நல் கிளி அனாளை
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது, வேட்கை வீய? 9

'மைந்தன் என்? மற்றையோர் என்? அஞ்சினிர்; வாழ்க்கை வேட்டீர்!
உய்ந்து நீர் போவீர்; நாளை, ஊழி வெந் தீயின் ஓங்கி,
சிந்தினென் மனித்தரோடு, அக் குரங்கினைத் தீர்ப்பென்' என்றான்.
வெந் திறல் அரக்கர் வேந்தன், மகன் இவை விளம்பலுற்றான்: 10

நிகும்பலை வேள்வி குறித்து இந்திரசித்து இராவணனுக்குக் கூறுதல்

'உளது நான் உணர்த்தற்பாலது, உணர்ந்தனை கோடல் உண்டேல்;
தள மலர்க் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி
அளவு இலது அமைய விட்டது, இராமனை நீக்கி அன்றால்;
விளைவு இலது, ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா! 11

'மானிடன் அல்லன்; தொல்லை வானவன் அல்லன்; மற்றும்,
மேல் நிமிர் முனிவன் அல்லன்; வீடணன் மெய்யின் சொன்ன,
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே,-
தேன் நகு தெரியல் மன்னா!-சேகு அறத் தெரிந்தது அன்றே. 12

'அனையது வேறு நிற்க் அன்னது பகர்தல் ஆண்மை
வினையன அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க! வீர!
இனையல் நீ; மூண்டு யான் போய், நிகும்பலை விரைவின் எய்தி,
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால், முடியும், துன்பம். 13

இராவணன் நிகும்பலை வேள்வி பற்றி கேட்டல்

'அன்னது நல்லதேயால்; அமைதி' என்று அரக்கன் சொன்னான்;
நல் மகன், 'உம்பி கூற, நண்ணலார் ஆண்டு நண்ணி,
முன்னிய வேள்வி முற்றாவகை செரு முயல்வர்' என்னா,
'என், அவர் எய்தாவண்ணம் இயற்றலாம் உறுதி?' என்றான். 14

இந்திரசித்து உரைத்த உபாயம்

'சானகி உருவமாகச் சமைத்து, அவள் தன்மை கண்ட
வான் உயர் அனுமன் முன்னே, வாளினால் கொன்று மாற்றி,
யான் நெடுஞ் சேனையோடும் அயோத்திமேல் எழுந்தேன் என்னப்
போனபின், புரிவது ஒன்றும் தெரிகிலர், துன்பம் பூண்பார். 15

'"இத் தலைச் சீதை மாண்டாள்; பயன் இவண் இல்லை" என்பார்,
அத் தலை, தம்பிமாரும், தாயரும், அடுத்துளோரும்,
உத்தம நகரும், மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற,
பொத்திய துன்பம் மூள, சேனையும் தாமும் போவார். 16

'போகலர் என்ற போதும், அனுமனை ஆண்டுப் போக்கி,
ஆகியது அறிந்தால் அன்றி, அருந் துயர் ஆற்றல் ஆற்றார்;
ஏகிய கருமம் முற்றி, யான் அவண் விரைவின் எய்தி,
வேக வெம் படையின் கொன்று, தருகுவென் வென்றி' என்றான். 17

இராவணனது இசைவுடன் இந்திரசித்து மாயா சீதையைச் சமைக்கச் செல்லுதலும், இராமன் அனுமதி பெற்று, இலங்கையைச் சுடுதற்குச் சுக்கிரீவன் வானரங்களுடன் ஏகுதலும்

'அன்னது புரிதல் நன்று' என்று அரக்கனும் அமைய, அம் சொல்
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான்;
இன்னது இத் தலையது ஆக, இராமனுக்கு, இரவி செம்மல்,
'தொல் நகர் அதனை வல்லைக் கடி கெடச் சுடுதும்' என்றான். 18

'அத் தொழில் புரிதல் நன்று' என்று அண்ணலும் அமைய, எண்ணி,
தத்தினன், இலங்கை மூதூர்க் கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான்;
பத்துடை ஏழு சான்ற வானரப் பரவை பற்றிக்
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது, எவ் உலகும் காண. 19

இலங்கையின் மதில் வாயிலில் சென்று, வானரங்கள் எரி கொள்ளியை வீசுதல்

எண் இல கோடிப் பல் படை யாவும்,
மண்ணுறு காவல் திண் மதில் வாயில்,
வெண் நிற மேகம் மின் இனம் வீசி
நண்ணின போல்வ, தொல் நகர் நாண. 20

ஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி,
மாசு அறு தானை மர்க்கட வெள்ளம்,
'நாசம் இவ் ஊருக்கு உண்டு' என, நாளின்
வீசின, வானின் மீன் விழும் என்ன. 21

வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை,
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி,
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும்
செஞ் சரம் என்னச் சென்றன மேன்மேல். 22

இலங்கையில் தீ பரவுதல்

கை அகல் இஞ்சிக் காவல் கலங்க,
செய்ய கொழுந் தீ சென்று நெருங்க,
ஐயன் நெடுங் கார் ஆழியை அம்பால்
எய்ய எரிந்தால் ஒத்தது, இலங்கை. 23

பரல் துறு தொல் பழுவத்து எரி பற்ற,
நிரல் துறு பல் பறவைக் குலம், நீளம்
உரற்றின, விண்ணின் ஒலித்து எழும் வண்ணம்
அரற்றி எழுந்தது, அடங்க இலங்கை, 24

இராமன் அம்பினால் கோபுரம் இற்று விழுதல்

மூஉலகத்தவரும், முதலோரும்
மேவின வில் தொழில் வீரன் இராமன்,
தீவம் எனச் சில வாளி செலுத்த,
கோபுரம் இற்று விழுந்தது, குன்றின். 25

மருத்துமலையை உரிய இடத்தில் சேர்த்து மீண்ட அனுமனின் ஆர்ப்பொலியால் இலங்கை நடுங்குதல்

இத் தலை, இன்ன நிகழ்ந்திடும் எல்லை,
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான்,
உய்த்த பெருங் கிரி மேருவின் உப் பால்
வைத்து, நெடுந் தகை மாருதி வந்தான். 26

அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான்;
உறை அரவம் செவி உற்றுளது, அவ் ஊர்;
சிறை அரவக் கலுழன் கொடு சீறும்
இறை அரவக் குலம் ஒத்தது, இலங்கை. 27

அனுமன் முன்னிலையில், இந்திரசித்து மாயாசீதையைப் பற்றிச் சென்று, 'இவளைக் கொன்றுவிடுவேன்' எனல்

மேல் திசை வாயிலை மேவிய வெங் கண்
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் -
மாற்றல் இல் மாயை வகுக்கும் வலத்தான்,
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான். 28

சானகி ஆம்வகை கொண்டு சமைத்த
மான் அனையாளை வடிக் குழல் பற்றா,
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்,
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான்: 29

'வந்து, இவள் காரணம் ஆக மலைந்தீர்;
எந்தை இகழ்ந்தனன்; யான் இவள் ஆவி
சிந்துவென்' என்று செறுத்து, உரை செய்தான்;
அந்தம் இல் மாருதி அஞ்சி அயர்ந்தான். 30

அனுமன் துயர்கொண்டவனாய், இந்திரசித்திடம் 'சீதையைக் கொல்ல வேண்டாம்' என வேண்டுதல்

'கண்டவளே இவள்' என்பது கண்டான்,
'விண்டதுபோலும், நம் வாழ்வு' என வெந்தான்;
கொண்டு, இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்,
'உண்டு உயிரோ!' என, நாவும் உலர்ந்தான். 31

'யாதும் இனிச் செயல் இல்' என எண்ணா,
'நீதி உரைப்பது நேர்' என, ஓரா,
'கோது இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய்!
மாதை ஒறுத்தல் வசைத் திறம் அன்றோ? 32

'நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்;
நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்;
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ,
மால் முகம் உற்று, ஒரு மாதை வதைத்தல்? 33

'மண் குலைகின்றது; வானும் நடுங்கிக்
கண் குலைகின்றது; காணுதி, கண்ணால்;
எண் குலைநெஞ்சில் இரங்கல் துறந்தாய்!
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ? 34

'என்வயின் நல்கினை ஏகுதி என்றால்,
நின் வயம் ஆம், உலகு யாவையும்; நீ நின்
அன்வயம் ஏதும் அறிந்திலை; ஐயா!
பன்மை தொடங்கல்; புகழ்க்கு அழிவு அன்றோ?' 35

'சீதையை வெட்டி, அயோத்தி சென்று, யாவற்றையும் எரிப்பேன்' என இந்திரசித்து கூறுதல்

'எந்தை உவந்த இலங்கிழைதன்னை,
"தந்தனென்" என்று, தரும் புகழ் உண்டோ?
சிந்துவென் வாளினில்' என்று செறுத்தான்,
இந்திரசித்தவன் இன்ன இசைத்தான்: 36

'போமின், அடா! வினை போயது போலாம்;
ஆம் எனில், இன்னும் அயோத்தியை அண்மி,
காமின்; அது இன்று கனல் கரி ஆக
வேம்; அது செய்து, இனி மீள்குவென்' என்றான். 37

'தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர்,
உம்பர் விலக்கிடினும், இனி உய்யார்;
வெம்பு கடுங் கனல் வீசிடும் என் கை
அம்புகளோடும் அவிந்தனர் அம்மா! 38

'இப்பொழுதே கடிது ஏகுவென், யான்; இப்
புட்பக மானம் அதில் புக நின்றேன்;
தப்புவரே அவர், சங்கை இலா என்
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால்? 39

மாயாசீதையை வெட்டி இந்திரசித்து, சேனைகளுடன் புட்பக விமானத்தில் வடக்கு நோக்கி எழுதல்

'ஆளுடையாய்! அருளாய், அருளாய்!' என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான்,
வாளின் எறிந்தனன்; மா கடல் போலும்
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான். 40

தென் திசை நின்று வடாது திசைக்கண்
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான்;
ஒன்றும் உணர்ந்திலன், மாருதி, உக்கான்,
வென்றி நெடுங் கிரி போல விழுந்தான். 41

அனுமனுக்குப் போக்குக் காட்டி இந்திரசித்து நிகும்பலை புகுதல்

போய், அவன் மாறி நிகும்பலை புக்கான்;
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான்;
ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான்;
ஏயன பன்னினன், இன்னன சொன்னான்: 42

அனுமன் துயருற்று அரற்றுதல்

'அன்னமே!' என்னும்; 'பெண்ணின் அருங் குலக் கலமே!' என்னும்;
'என் அமே!' என்னும்; 'தெய்வம் இல்லையோ, யாதும்?' என்னும்;
'சின்னமே செய்யக் கண்டும், தீவினை நெஞ்சம் ஆவி
பின்னமே ஆயதுஇல்லை' என்னும்-பேர் ஆற்றல் பேர்ந்தான். 43

எழுந்து, அவன்மேலே பாய எண்ணும்; பேர் இடரில் தள்ளி
விழுந்து, வெய்து உயிர்த்து, விம்மி, வீங்கும்; போய் மெலியும்; வெந் தீக்
கொழுந்து உக உயிர்க்கும்; யாக்கை குலைவுறும்; தலையே கொண்டுற்று
உழும் தரைதன்னை; பின்னும் இனையன உரைப்பதானான்: 44

'"முடிந்தது நம்தம் எண்ணம்; மூஉலகிற்கும் கங்குல்
விடிந்தது" என்று இருந்தேன்; மீள வெந் துயர் இருளின் வெள்ளம்
படிந்தது; வினையச் செய்கை பயந்தது; பாவி! வாளால்
தடிந்தனன் திருவை! அந்தோ, தவிர்ந்தது தருமம் அம்மா! 45

'பெருஞ் சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் கண்ணின் கொல்ல,
இருஞ் சிறகு அற்ற புள் போல், யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்;
இருஞ் சிறை அழுந்துகின்றேன்; எம்பிரான் தேவி பட்ட
அருஞ் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும், அம்மா! 46

'பாதக அரக்கன், தெய்வப் பத்தினி, தவத்துளாளை,
பேதையை, குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை, பெண்ணை,
சீதையை, திருவை, தீண்டிச் சிறை வைத்த தீயோன் சேயே
காதவும், கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா! 47

'கல்விக்கு நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதன் ஆகி,
சொல்விக்க வந்து போனேன், நோவுறு துயர் செய்தாரை
வெல்விக்க வந்து, நின்னை மீட்பிக்க அன்று; வெய்தின்
கொல்விக்க வந்தேன் உன்னை; கொடும் பழி கூட்டிக் கொண்டேன். 48

'வஞ்சியை எங்கும் காணாது, உயிரினை மறந்தான் என்ன,
செஞ் சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற,
"அம் சொலாள் இருந்தாள்; கண்டேன்" என்ற யான், "அரக்கன் கொல்லத்
துஞ்சினாள்" என்றும் சொல்லத் தோன்றினேன்; தோற்றம் ஈதால்! 49

'அருங் கடல் கடந்து, இவ் ஊரை அள் எரி மடுத்து, வெள்ளக்
கருங் கடல் கட்டி, மேருக் கடந்து ஒரு மருந்து காட்டி,
"குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல்" என, களிப்புக் கொண்டேன்;
பெருங் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது, என் அடிமைப் பெற்றி! 50

'விண்டு நின்று ஆக்கை சிந்தப் புல் உயிர் வீட்டிலாதேன்,
கொண்டு நின்றானைக் கொல்லக் கூசினேன்! எதிரே கொல்லக்
கண்டு நின்றேன்! மற்று இன்னும் கைகளால் கனிகள் வௌ;வேறு
உண்டு நின்று, உய்ய வல்லேன்; எளியனோ? ஒருவன் உள்ளேன்!' 51

என்ன நின்று இரங்கி, 'கள்வன், "அயோத்திமேல் எழுவென்" என்று
சொன்னதும் உண்டு; போன சுவடு உண்டு; தொடர்ந்து செல்லின்,
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன்; வருவது ஓரேன்;
பின் இனி முடிப்பது யாது?' என்று இரங்கினான், உணர்வு பெற்றான். 52

அனுமன் இராமன் எதிரே சென்று, துயரச் செய்தியை அறிவித்துப் பொருமுதல்

'உற்றதை உணர்த்தி, பின்னை உலகுடை ஒருவனோடும்,
இற்று உறின், இற்று மாள்வென்; அன்று எனின், என்னை ஏவின்,
சொற்றது செய்வென்; வேறு ஓர் பிறிது இலை, துணிவது' என்னா,
பொன் தடந் தோளான், வீரன் பொன் அடி மருங்கில், போனான். 53

சிங்கஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான்,
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான்,
பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புரத்தைப் போர்ப்ப,
வெங் கண் நீர் அருவி சோர, மால் வரை என்ன வீழ்ந்தான். 54

வீழ்ந்தவன் தன்னை, வீரன், 'விளைந்தது விளம்புக!' என்னா,
தாழ்ந்து, இரு தடக்கை பற்றி எடுக்கவும், தரிக்கிலாதான்,
'ஆழ்ந்து எழு துன்பத்தாளை, அரக்கன், இன்று, அயில் கொள் வாளால்
போழ்ந்தனன்' என்னக் கூறி, புரண்டனன், பொருமுகின்றான். 55

இராமனும் வானரர் முதலியோரும் உற்ற துயரம்

துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன்; இமைத்திலன்; துள்ளிக் கண்ணீர்
பொடித்திலன்; யாதும் ஒன்றும் புகன்றிலன்; பொருமி, உள்ளம்
வெடித்திலன்; விம்மிப் பாரின் வீழ்ந்திலன்; வியர்த்தான் அல்லன்;
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர், அமரரேயும். 56

சொற்றது கேட்டலோடும், துணுக்குற, உணர்வு சோர,
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா,
கற்பகம் அனைய வள்ளல் கருங் கழல் கமலக் கால்மேல்
வெற்புஇனம் என்ன வீழ்ந்தார், வானர வீரர் எல்லாம். 57

இராமன் உயிர்ப்பு இன்றித் தரையில் சாய, இலக்குவனும் துயர மிகுதியால் தரையில் விழுதல்

சித்திரத் தன்மை உற்ற சேவகன், உணர்வு தீர்ந்தான்,
மித்திரர் வதனம் நோக்கான், இளையவன் வினவப் பேசான்,
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க, உயிர் இலன் என்னச் சாய்ந்தான். 58

நாயகன் தன்மை கண்டும், தமக்கு உற்ற நாணம் பார்த்தும்,
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும்,
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும், மயர்ந்து சாம்பி,
தாயினை இழந்த கன்றின், தம்பியும் தலத்தன் ஆனான். 59

நடந்தது குறித்து ஐயம் கொண்ட வீடணன் மூர்ச்சை தெளிவிக்க, இராமன் உணர்வு பெறுதல்

தொல்லையது உணரத் தக்க வீடணன், துளக்கம் உற்றான்,
எல்லை இல் துன்பம் ஊன்ற, இடை ஒன்றும் தெரிக்கிலாதான்,
'"வெல்லவும் அரிது; நாசம் இவள்தனால் விளைந்தது" என்னா,
கொல்வதும் அடுக்கும்' என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான். 60

சீத நீர் முகத்தின் அப்பி, சேவகன் மேனி தீண்டி,
போதம் வந்து எய்தற்பால யாவையும் புரிந்து, பொன் பூம்
பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும்,
வேதமும் காணா வள்ளல் விழித்தனன், கண்ணை மெல்ல. 61

இலக்குவனின் தேறுதல் மொழி

'ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து, உற்றது எண்ணி,
ஆற்றுவான் அல்லன் ஆகி, அயர்கின்றான் எனினும், ஐயன்,
மாற்றுவான் அல்லன்; மானம் உயிர் உக வருந்தும்' என்னா,
தேற்றுவான் நினைந்து, தம்பி இவை இவை செப்பலுற்றான்; 62

'முடியும் நாள் தானே வந்து முற்றினால், துன்ப முந்நீர்
படியுமாம், சிறியோர் தன்மை; நினக்கு இது பழியிற்றாமால்;
குடியும் மாசு உண்டது என்னின், அறத்தொடும் உலகைக் கொன்று,
கடியுமாறு அன்றி, சோர்ந்து கழிதியோ, கருத்து இலார்போல்? 63

'தையலை, துணை இலாளை, தவத்தியை, தருமக் கற்பின்
தெய்வதம்தன்னை, மற்று உன் தேவியை, திருவை, தீண்டி,
வெய்யவன் கொன்றான் என்றால், வேதனை உழப்பது, இன்னம்
உய்யவோ? கருணையாலோ? தருமத்தோடு உறவும் உண்டோ ? 64

'அரக்கர் என், அமரர்தாம் என், அந்தணர் தாம் என், அந்தக்
குருக்கள் என், முனிவர்தாம் என், வேதத்தின் கொள்கைதான் என்;
செருக்கினர் வலியர் ஆகி, நெறி நின்றார் சிதைவர் என்றால்,
இருக்குமது என்னாம், இம் மூன்று உலகையும் எரி மடாதே? 65

'முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு,
எழுவதே! அமரர் இன்னம் இருப்பதே! அறம் உண்டு என்று
தொழுவதே! மேகம் மாரி சொரிவதே! சோர்ந்து நாம் வீழ்ந்து
அழுவதே! நன்று, நம் தம் வில் தொழில் ஆற்றல் அம்மா! 66

'புக்கு, இவ் ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து, அரக்கன் போன
திக்கு எலாம் சுட்டு, வானோர் உலகு எலாம் தீய்த்து, தீர்க்கத்
தக்க நாம், கண்ணீர் ஆற்றி, தலை சுமந்து இரு கை நாற்றி,
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றும் அன்றே? 67

'அங்கும், இவ் அறமே நோக்கி, அரசு இழந்து, அடவி எய்தி,
மங்கையை வஞ்சன் பற்ற, வரம்பு அழியாது வாழ்ந்தோம்;
இங்கும், இத் துன்பம் எய்தி இருத்துமேல், எளிமை நோக்கி,
பொங்கு வன் தலையில் பூட்டி, ஆட்செயப் புகல்வர் அன்றே? 68

'மன்றல் அம் கோதையாளைத் தம் எதிர் கொணர்ந்து, வாளின்
கொன்றவர் தம்மைக் கொல்லும் கோள் இலர், நாணம் கூரப்
பொன்றினர்' என்பர், ஆவி போக்கினால்; பொதுமை பார்க்கின்,
அன்று, இது கருமம்; என், நீ அயர்கின்றது, அறிவு இலார்போல்?' 69

சுக்கிரீவன் 'இலங்கைமேல் குதித்து யாவரையும் அழிப்போம்' என்று கூறி, நகரின்மேல் தாவ முற்படுதல்

அனையன இளவல் கூற, அருக்கன் சேய், அயர்கின்றான், ஓர்
கனவு கண்டனனே என்னக் கதுமென எழுந்து, 'காணும்
வினை இனி உண்டே? வல்லை, விளக்கின் வீழ் விட்டில் என்ன,
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும், நாம்; வம்மின்' என்றான். 70

'இலங்கையை இடந்து, வெங் கண் இராக்கதர் என்கின்றாரைப்
பொலங் குழை மகளிரோடும், பால் நுகர் புதல்வரோடும்,
குலங்களோடு அடங்கக் கொன்று, கொடுந் தொழில் குறித்து, நம்மேல்
விலங்குவார் என்னின், தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும். 71

'அறம் கெடச் செய்தும் என்றே அமைந்தனம் ஆகின், ஐய!
புறம் கிடந்து உழைப்பது என்? இப்பொழுது இறை புவனம் மூன்றும்
கறங்கு எனத் திரிந்து, தேவர் குலங்களைக் கட்டும்' என்னா,
மறம் கிளர் வயிரத் தோளான் இலங்கைமேல் வாவலுற்றான். 72

அனுமன், இந்திரசித்து அயோத்தி சென்றமையைத் தெரிவித்தல்

மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி,
'எற்றுதும், அரக்கர்தம்மை இல்லொடும் எடுத்து' என்று, ஏகல்
உற்றனர்; உறுதலோடும், 'உணர்த்துவது உளது' என்று உன்னா,
சொற்றனன் அனுமன், வஞ்சன் அயோத்திமேல் போன சூழ்ச்சி. 73

தாயரையும் தம்பியரையும் குறித்த துயரால் இராமன் வருந்திப் புலம்புதல்

தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சாரப்
போயினன் என்ற மாற்றம் செவித் துளை புகுதலோடும்,
மேயின வடுவின் நின்ற வேதனை களைய, வெந்த
தீயிடைத் தணிந்தது என்ன, சீதைபால் துயரம் தீர்ந்தான். 74

அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழிநின்று, அனந்தர் நீங்கி
எழுந்தனன் என்ன, துன்பக் கடலின் நின்று ஏறி, ஆறாக்
கொழுந்து உறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட,
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான், மறுக்கம் உற்றான். 75

'தீரும் இச் சீதையோடும் என்கிலது அன்று, என் தீமை;
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது; வேறும் இன்னும்
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென்; அதனை, ஐய!
பேருறும் அவதி உண்டோ ? எம்பியர் பிழைக்கின்றாரோ? 76

'நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான்,
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான்; வினையேன் வந்த
மனை பொடி பட்டது, அங்கு; மாண்டது, தாரம் ஈண்டும்;
எனையன தொடரும் என்பது உணர்கிலேன்! இறப்பும் காணேன்! 77

'தாதைக்கும், சடாயுவான தாதைக்கும், தமியள் ஆய
சீதைக்கும், கூற்றம் காட்டித் தீர்ந்திலது, ஒருவன் தீமை;
பேதைப் பெண் பிறந்து, பெற்ற தாயர்க்கும், பிழைப்பு இலாத
காதல் தம்பியர்க்கும், ஊர்க்கும், நாட்டிற்கும், காட்டிற்று அன்றே. 78

'உற்றது ஒன்று உணரகில்லார்; உணர்ந்து வந்து, உருத்தாரேனும்,
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து, அவன் கொன்று வீழ்ந்தால்,
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன்; மருந்து நல்கக்
கொற்ற மாருதி அங்கு இல்லை; யார் உயிர் கொடுக்கற்பாலார்? 79

அயோத்திக்கு விரைய வழி உளதா என இராமன் வினாவுதல்

'மாக வான் நகரம் செல்ல, வல்லையின், வயிரத் தோளாய்!
ஏகுவான் உபாயம் உண்டேல், இயம்புதி; நின்ற எல்லாம்
சாக் மற்று, இலங்கைப் போரும் தவிர்க் அச் சழக்கன் கண்கள்
காகம் உண்டதற்பின், மீண்டும் முடிப்பென் என் கருத்தை' என்றான். 80

பரதனை இந்திரசித்தினால் வெல்ல இயலாது என இலக்குவன் கூறுதல்

அவ் இடத்து, இளவல், 'ஐய! பரதனை அமரின் ஆர்க்க,
எவ் விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று;
தெவ் இடத்து அமையின், மும்மை உலகமும் தீந்து அறாவோ?
வௌ; இடர்க் கடலின் வைகல்; கேள்' என, விளம்பலுற்றான்: 81

'தீக் கொண்ட வஞ்சன் வீச, திசைமுகன் பாசம் தீண்ட,
வீக் கொண்டு வீழ, யானோ பரதனும்? வெய்ய கூற்றைக்
கூய்க்கொண்டு, குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்,
போய்க் கண்டு கோடி அன்றே?' என்றனன், புழுங்குகின்றான். 82

அயோத்திக்குச் செல்லும் பொருட்டு, தன் தோள் மேல் ஏறுமாறு இராம இலக்குவரை அனுமன் வேண்டுதல்

அக் கணத்து அனுமன் நின்றான், 'ஐய! என் தோளின் ஆதல்,
கைத் துணைத் தலத்தே ஆதல், ஏறுதிர்; காற்றும் தாழ,
இக் கணத்து அயோத்தி மூதூர் எய்துவென்; இடம் உண்டு என்னின்,
திக்கு அனைத்தினிலும் செல்வென்; யானே போய்ப் பகையும் தீர்வென்; 83

'"எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து, என் தோள்மேல்
தழுவுற வைத்து, இன்று ஏகு" என்று உரைத்தியேல், சமைவென்; தக்கோய்!
பொழுது இறை தாழ்ப்பது என்னோ? புட்பகம் போதல் முன்னம்,
குழுவொடும் கொண்டு தோள்மேல், கணத்தினின், குதிப்பென், கூற்றின்; 84

'கொல்ல வந்தானை நீதி கூறினென், விலக்கிக் கொள்வான்,
சொல்லவும் சொல்லி நின்றேன்; கொன்றபின், துன்பம் என்னை
வெல்லவும், தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென்; விரைந்து போனான்;
இல்லை என்று உளனேல், தீயோன் பிழைக்குமோ? இழுக்கம் உற்றேன்! 85

'மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக,
நினைப்பின் முன் அயோத்தி எய்தி, வரு நெறி பார்த்து நிற்பென்;
இனி, சில தாழ்ப்பது என்னே? ஏறுதிர், இரண்டு தோளும்,
புனத் துழாய் மாலை மார்பீர்! புட்பகம் போதல் முன்னம்.' 86

வீடணன் தொழுது, 'இது மாயமே; உண்மை தெரியலாம்' எனல்

'ஏறுதும்' என்னா, வீரர் எழுதலும், இறைஞ்சி, 'ஈண்டுக்
கூறுவது உளது; துன்பம் கோளுறக் குலுங்கி, உள்ளம்
தேறுவது அரிது; செய்கை மயங்கினென்; திகைத்து நின்றேன்;
ஆறினென்; அதனை, ஐய! மாயம் என்று அயிர்க்கின்றேனால். 87

'பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது,
முத் திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே?
அத் திறம் ஆனதேனும், அயோத்திமேல் போன வார்த்தை
சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம், சிறிது போழ்தின். 88

வீடணன் வண்டு உருக் கொண்டு சென்று, அசோக வனத்தில் சீதையைக் காணுதல்

'இமை இடையாக யான் போய், ஏந்திழை இருக்கை எய்தி,
அமைவுற நோக்கி, உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர்ச்
சமைவது செய்வது' என்று வீடணன் விளம்ப, 'தக்கது;
அமைக!' என்று இராமன் சொன்னான்; அந்தரத்து அவனும் சென்றான். 89

வண்டினது உருவம் கொண்டான், மானவன் மனத்தின் போனான்;
தண்டலை இருக்கைதன்னைப் பொருக்கெனச் சார்ந்து, தானே
கண்டனன் என்ப மன்னோ, கண்களால்-கருத்தில், 'ஆவி
உண்டு, இலை' என்ன நின்ற, ஓவியம் ஒக்கின்றாளை. 90

சீதையின் நிலைமையும், நிகும்பலை நோக்கி அரக்கர் சேனை செல்வதையும் கண்டு, வீடணன் இந்திரசித்தின் சூழ்ச்சியை உணர்தல்

'தீர்ப்பது துன்பம், யான் என் உயிரொடு' என்று உணர்ந்த சிந்தை
பேர்ப்பன செஞ் சொலாள், அத் திரிசடை பேசப் பேர்ந்தாள்,
கார்ப் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக, உயிர் ஆற்றினாளை, 91

வஞ்சனை என்பது உன்னி, வான் உயர் உவகை வைகும்
நெஞ்சினன் ஆகி, உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான்,
'வெஞ் சிலை மைந்தன் போனான், நிகும்பலை வேள்வியான்' என்று,
எஞ்சல் இல் அரக்கர் சேனை எழுந்து, எழுந்து, ஏகக் கண்டான். 92

'வேள்விக்கு வேண்டற்பால தருப்பையும், விறகும், நெய்யும்,
மாள்விக்கும் தாழ்வில்' என்னும் வானவர் மறுக்கம் கண்டான்,
'சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று!' எனத் துணிவு கொண்டான்,
தாழ்வித்த முடியன், வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான். 93

வீடணன் வந்து இராமனை வணங்கி, சீதையைக் கண்டதையும் இந்திரசித்தின் எண்ணத்தையும் கூறல்

'இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனன், கண்களால்; நம்
அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு உண்டோ ? அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து, நிகும்பலை மருங்கு புக்கான்;
முருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற முடிக்க மூண்டான்.' 94

என்றலும், 'உலகம் ஏழும், ஏழு மாத் தீவும், எல்லை
ஒன்றிய கடல்கள் ஏழும், ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை
அன்று' என, 'ஆகும்' என்ன, அமரரும் அயிர்க்க, ஆர்த்து,
குன்றுஇனம் இடியத் துள்ளி, ஆடின-குரக்கின் கூட்டம். 95

மிகைப் பாடல்கள்

அரக்கரில் சிறந்த வீரர், ஆயிர வெள்ளம் என்னும்
திரைக் கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர்; திண் தேர்; யானை,
சுருக்கம் இல் இவுளி, காலாள், எனும் தொகை அளப்பு இல் வெள்ளம்,
உரைக்கு அடங்காதது எல்லாம், உலந்தது, அங்கு இருவர் வில்லால். 5-1

என்று மாலியவான் கூற, பிறை எயிற்று எழிலி நாப்பண்
மின் தெரிந்தென்ன நக்கு, வெருவுற, உரப்பி, பேழ் வாய்
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து, 'நீ உரைத்த மாற்றம்
நன்று, நன்று!' என்று சீறி, உரைத்தனன், நலத்தை ஓரான். 8-1

என்றனன் மாருதி; இந்திரசித்தும்,
'ஒன்று உரை கேள்; எனது எந்தையும் ஊரும்
பொன்றுதல் தீரும்; இதின் புகழ் உண்டே?
நன்று உரை!' என்று, பின் நக்கு, உரைசெய்தான். 35-1

'எந்தை உவந்த இலங்கு இழையாளைத்
தந்திடில், இன்று தரும் புகழ் உண்டோ?
சிந்துவென்; எந்தை தியங்கிய காம
வெந் துயர் தீரும் விழுப்பமும் உண்டால்? 36-1

கண்டு, தன் கருத்தில் கொண்ட கவலையைக் கடந்து, அங்கு ஆவி
உண்டு எனத் தெளிந்து, தேறல் வீடணன், உற்றது எல்லாம்
கொண்டு தன் அகத்தில் உன்னி, குலவிய உவகை தூண்ட,
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான். 91-1


 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home