Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் -
6. வருணனை வழி வேண்டு படலம்
கடல் கடக்கும் உபாயம்
உரைக்குமாறு இராமன் வீடணனைக் கேட்டல்
'தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள் அன்றால்;
கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல் கற்றாய்!' 74
கடல் கடக்க வீடணன் வழி கூறுதல்
'கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக் கருதும்;
பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்; பரிவாய்
வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி வேறு
இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை' என்றான். 75
இராமன் துணைவருடன் கடற்கரையை அடைதல்
'நன்று, இலங்கையர் நாயகன் மொழி' என நயந்தான்,
ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, உரவோன்,
சென்று வேலையைச் சேர்தலும், விசும்பிடை, சிவந்த
குன்றின் மேல் நின்று குதித்தன, பகலவன் குதிரை. 76
இராமன் புல்லில் அமர்ந்து, வருண மந்திரத்தைத் தியானித்தல்
கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய கொள்கை,
செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள்
புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறி வரி அரவம்
விழுங்கி நீங்கியது ஒத்தது, வேலை சூழ் ஞாலம். 1
'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக!' என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி. 2
ஏழுநாள் இராமன் இருந்தும் வருணன் வாராமை
பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், பொறை தீர்
வாழி வெங் கதிர் மணி முகம் வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பன, ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன் வந்திலன், எறி கடற்கு இறைவன். 3
இராமன் சினந்து மொழிதல்
'ஊற்றம் மீக் கொண்ட வேலையான், "உண்டு", "இலை", என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம், யாம்' எனும் மனத்தால்,
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்தென்னச்
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன, தாமரைச் செங் கண். 4
'மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை வணங்கி,
வேண்ட, "இல்லை" என்று ஒளித்ததாம்' என, மனம் வெதும்பி,
நீண்ட வில்லுடை நெடுங் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண்
பூண்ட வில் எனக் குனிந்தன, கொழுங் கடைப் புருவம். 5
'ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர்பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல், அவர் சிறுமையின் தீரார்;
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான்;
நன்று, நன்று!' என, நகையொடும் புகை உக, நக்கான். 6
'"பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதன்" என்று இகழ்ச்சி மேல் விளைய,
ஈரம் நீங்கியது, எறி கடல் ஆம்' என இசைத்தான். 7
'புரந்து கோடலும், புகழொடு கோடலும், பொருது
துரந்து கோடலும், என்று இவை தொன்மையின் தொடர்ந்த்
இரந்து கோடலின், இயற்கையும் தருமமும் எஞ்சக்
கரந்து கோடலே நன்று; இனி நின்றது என், கழறி? 8
'"கானிடைப் புகுந்து, இருங் கனி காயொடு நுகர்ந்த
ஊனுடைப் பொறை உடம்பினன்" என்று கொண்டு உணர்ந்த
மீனுடைக் கடல் பெருமையும், வில்லொடு நின்ற
மானுடச் சிறு தன்மையும், காண்பரால், வானோர். 9
'ஏதம் அஞ்சி, நான் இரந்ததே, "எளிது" என இகழ்ந்த
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக,
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும,
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர். 10
'மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்,
வெறுமை கண்ட பின், யாவரும் யார் என விரும்பார்;
குறுமை கண்டவர் கொழுங் கனல் என்னினும் கூசார்;
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்.' 11
இராமன் வேண்டுகோள்படி இலக்குவன் வில்லைக் கொடுத்தல்
திருதி என்பது ஒன்று அழிதர, ஊழியில் சினவும்
பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன், பல் கால்,
'தருதி, வில்' எனும் அளவையில், தம்பியும் வெம்பிக்
குருதி வெங் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான். 12
இராமன் கடலின்மேல் அம்பு விடுதல்
வாங்கி வெஞ் சிலை, வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு, தோள்வலம் வீக்கினன்; கோதையை விரலால்
தாங்கி, நாணினைத் தாக்கினன்; தாக்கிய தமரம்,
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல். 13
மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல, வடித்த,
சீரிது என்றவை எவற்றினும் சீரிய, தெரிந்து,
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான். 14
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கி,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும் மடி கொடியன சுடு சரம் எய்தான். 15
கடல் அடைந்த நிலையும், அம்புகளின் செயலும்
மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த,
பேன நீர் நெடு நெய் என, பெய் கணை நெருப்பால்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம். 16
பாழி வல் நெடுங் கொடுஞ் சிலை வழங்கிய பகழி,
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி,
ஊழி வெங் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி,
ஆழி மால் வரைக்கு அப் புறத்து இருளையும் அவித்த. 17
மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கிச்
செரும, வானிடைக் கற்பக மரங்களும் தீய,
நிருமியா விட்ட நெடுங் கணை பாய்தலின், நெருப்போடு
உருமு வீழ்ந்தெனச் சென்றன, கடல்-துளி உம்பர். 18
கூடும் வெம் பொறிக் கொடுங் கனல் தொடர்ந்தெனக் கொளுந்த,
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன் உம்பர்
ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன - அளக்கர்க்
கோடு தீந்து எழ, கொழும் புகைப் பிழம்பு மீக் கொள்ள. 19
நிமிர்ந்த செஞ் சரம் நிறம்தொறும் படுதலும், நெய்த்தோர்
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல் உருவத்
துமிந்த துண்டமும் பல படத் துரந்தன, தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி. 20
நீறு மீச்செல, நெருப்பு எழ, பொருப்பு எலாம் எரிய,
நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,
ஆறு கீழ்ப் பட, அளறு பட்டு அழுந்திய அளக்கர்
சேறு தீய்ந்து எழ, காந்தின சேடன் தன் சிரங்கள். 21
மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின, மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என, பொரு கணை எரிய்
உய்த்த கூம்பொடு நெடுங் கலம் ஓடுவ கடுப்ப,
தைத்த அம்பொடும் திரிந்தன, தாலமீன் சாலம். 22
சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய,
அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்ப அரும் அளக்கர்;
பந்தி பந்திகளாய் நெடுங் கடுங் கணை படர,
வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன, சில மீன். 23
வைய நாயகன் வடிக் கணை குடித்திட, வற்றி,
ஐய நீர் உடைத்தாய், மருங்கு அருங் கனல் மண்ட,
கை கலந்து எரி கருங் கடல் கார் அகல் கடுப்ப,
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன, சில மீன். 24
குணிப்ப அருங் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப,
கணிப்ப அரும் புனல் கடையுறக் குடித்தலின், காந்தும்
மணிப் பருந் தடங் குப்பைகள் மறி கடல் வெந்து,
தணிப்ப அருந் தழல் சொரிந்தன போன்றன, தயங்கி. 25
எங்கும் வெள்ளிடை மடுத்தலின், இழுதுடை இன மீன்
சங்கமும், கறி கிழங்கு என, இடை இடை தழுவி,
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த்
பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரித்தன போன்ற. 26
அதிரும் வெங் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப,
வெதிரின் வல் நெடுங் கான் என வெந்தன, மீனம்;
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒரு பால். 27
அண்ணல் வெங் கணை அறுத்திட, தெறித்து எழுந்து அளக்கர்ப்
பண்ணை வெம் புனல் படப் பட, நெருப்பொடும் பற்றி,
மண்ணில் வேர் உறப் பற்றிய நெடு மரம், மற்றும்,
எண்ணெய் தோய்ந்தென எரிந்தன, கிரிக் குலம் எல்லாம். 28
தெய்வ நாயகன் தெரி கணை, 'திசை முகத்து ஒருவன்
வைவு இது ஆம்' என, பிழைப்பு இல மனத்தினும் கடுக,
வெய்ய வல் நெருப்பு இடை இடை பொறித்து எழ, வெறி நீர்ப்
பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது, புணரி. 29
செப்பின், மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே? அது கண்டனம், உவரியில்; 'தணியா
உப்பு வேலை' என்று உலகு உறு பெரும் பழி நீங்கி,
அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ, அளக்கர்? 30
தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்களும் தானே
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ? -
பாரை உண்பது படர் புனல்; அப் பெரும் பரவை
நீரை உண்பது நெருப்பு எனும் அப் பொருள் நிறுத்தான்! 31
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர்,
கங்குலும் பகலும் அக் கடலுள் வைகுவார்,
அங்கம் வெந்திலர், அவன் அடிகள் எண்ணலால்;
பொங்கு வெங் கனல் எனும் புனலில் போயினார். 32
தென் திசை, குட திசை, முதல திக்கு எலாம்
துன்றிய பெரும் புகைப் படலம் சுற்றலால்,
கன்றிய நிறத்தன கதிரவன் பரி
நின்றன் சென்றில் நெறியின் நீங்கின. 33
'பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர்
அறிந்திருந்து, அறிந்திலர் அனையர் ஆம்' என,
செறிந்த தம் பெடைகளைத் தேடி, தீக் கொள,
மறிந்தன, கரிந்தன - வானப் புள் எலாம். 34
கமை அறு கருங் கடல், கனலி கைபரந்து,
அமை வனம் ஒத்த போது, அறைய வேண்டுமோ?
சுமையுறு பெரும் புகைப் படலம் சுற்றலால்,
இமையவர் இமைத்தனர்; வியர்ப்பும் எய்தினார். 35
பூச் செலாதவள் நடை போல்கிலாமையால்,
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்,
தீச் செலா நெறி பிறிது இன்மையால், திசை
மீச் செலர் புனலவன் புகழின் வீந்தவால். 36
பம்புறு நெடுங் கடல் பறவை யாவையும்,
உம்பரின் செல்லலுற்று, உருகி வீழ்ந்தன்
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல,
இம்பரின் உதிர்ந்தன, எரியும் மெய்யன. 37
பட்டன படப் பட, படாத புட் குலம்,
சுட்டு வந்து எரிக் குலப் படலம் சுற்றலால்,
இட்டுழி அறிகில, இரியல் போவன,
முட்டை என்று எடுத்தன, வெளுத்த முத்து எலாம். 38
'வள்ளலை, பாவிகாள், "மனிதன்" என்று கொண்டு
எள்ளலுற்று அறைந்தனம்; எண் இலாம்' என
வெள்ளி வெண் பற்களைக் கிழித்து, விண் உறத்
துள்ளலுற்று இரிந்தன - குரங்கின் சூழ்ந்தில. 39
தா நெடுந் தீமைகள் உடைய தன்மையார்,
மா நெடுங் கடலிடை மறைந்து வைகுவார்,
தூ நெடுங் குருதி வேல் அவுணர், துஞ்சினார்;
மீன் நெடுங் குலம் என மிதந்து, வீங்கினார். 40
தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய
பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன்
அசும்பு அற வறந்தன, வான ஆறு எலாம்;
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே. 41
செறிவுறு செம்மைய, தீயை ஓம்புவ,
நெறியுறு செலவின, தவத்தின் நீண்டன,
உறு சினம் உறப் பல உருவு கொண்டன,
குறுமுனி எனக் கடல் குடித்த - கூர்ங் கணை. 42
மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால்,
பூதலம் காவொடும், எரிந்த் பொன் மதில்
வேதலும், இலங்கையும், 'மீளப் போயின
தூதன் வந்தான்' எனத் துணுக்கம் கொண்டதால். 43
அருக்கனில் ஒளி விடும் ஆடகக் கிரி,
உருக்கு என உருகின, உதிரம் தோய்ந்தன,
முருக்கு எனச் சிவந்தன் முரிய வெந்தன,
கரிக் குவை நிகர்த்தன, பவளக் காடு எலாம். 44
பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்,
ஓர் இடத்து, உயிர் தரித்து, ஒதுங்ககிற்றில,
நீரிடைப் புகும்; அதின் நெருப்பு நன்று எனாப்
பாரிடைக் குதித்தன, பதைக்கும் மெய்யன. 45
சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு, அனல்
பருகிடப் புனல் இல பகழி, பாரிடம்
மருள் கொளப் படர்வன, நாகர் வைப்பையும்
இருள் கெடச் சென்றன, இரவி போல்வன. 46
கரும் புறக் கடல்களோடு உலகம் காய்ச்சிய
இரும்பு உறச் செல்வன, இழிவ, கீழுற
அரும் புறத்து அண்டமும் உருவி, அப் புறம்,
பெரும் புறக் கடலையும் தொடர்ந்து பின் செல்வ. 47
திடல் திறந்து உகு மணித் திரள்கள், சேண் நிலம்
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன்
கடல் திறந்து எங்கணும் வற்ற, அக் கடல்
குடல் திறந்தன எனக் கிடந்த, கோள் அரா. 48
ஆழியின் புனல் அற, மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன, பரவை; பேர்வு அறப்
பூழையின் பொரு கணை உருவப் புக்கன,
மூழையின் பொலிந்தன, முரலும் வெள் வளை. 49
நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்,
குன்று நூறாயிரம் கோடி ஆயின் -
சென்று தேய்வு உறுவரோ, புலவர் சீறினால்? -
ஒன்று நூறு ஆயின, உவரி முத்து எல்லாம். 50
சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்
வீடு பெற்றன் இடை மிடைந்த வேணுவின்
காடு பற்றிய பெருங் கனலின் கை பரந்து
ஓடி உற்றது நெருப்பு, உவரி நீர் எலாம். 51
கால வான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்,
நீல வான் துகிலினை நீக்கி, பூ நிறக்
கோல வான் களி நெடுங் கூறை சுற்றினாள்
போல, மா நிலமகள் பொலிந்து தோன்றினாள். 52
கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக்
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு,
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்,
மற்றொரு கடல் புக, வட வைத் தீ அரோ. 53
வாழியர் உலகினை வளைத்து, வான் உறச்
சூழ் இரும் பெருஞ் சுடர்ப் பிழம்பு தோன்றலால்,
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய
ஆழியின் பொலிந்தது, அவ் ஆழி, அன்ன நாள். 54
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் -
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ -
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப, மீதுபோய்,
வானவர் மலர் அயன் உலகின் வைகினார்? 55
இராமன் வருணன் மேல் சதுமுகன் படையை ஏவுதல்
'இடுக்கு இனி எண்ணுவது இல்லை; ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை' என்ன, மூண்டு எதிர்
தடுக்க அரும் வெகுளியான், சதுமுகன் படை
தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார். 56
பல இடத்தும் நிகழ்ந்த மாறுபாடுகள்
மழைக் குலம் கதறின் வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன்; உலகினில் அடைத்த, ஆறு எலாம்;
இழைத்தன நெடுந் திசை, யாதும் யாவரும்
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால். 57
அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது; ஏழு
தெண் திரைக் கடலின் செய்கை செப்பி என்? தேவன் சென்னிப்
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே. 58
'இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து, உலகு எலாம் ஈன்று, மீளக்
கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்திலன்; சீற்றம் கண்டும்,
வரக் கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார்
அரக்கரே? அல்லர்' என்னா, அறிஞரும் அலக்கண் உற்றார். 59
பூதங்கள் வருணனை வைதல்
'உற்று ஒரு தனியே, தானே, தன்கணே, உலகம் எல்லாம்
பெற்றவன் முனியப் புக்கான்; நடு இனிப் பிழைப்பது எங்ஙன்?
குற்றம் ஒன்று இலாதோர்மேலும் கோள் வரக் குறுகும்' என்னா,
மற்றைய பூதம் எல்லாம், வருணனை வைத மாதோ. 60
|