Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் -
19. படைத் தலைவர் வதைப் படலம்
படைத்தலைவர் போரிட இராவணனிடம்
இசைவு வேண்டல்
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும், முரசம் ஆர்ப்ப,
போர்த் தொழில் வேட்கை பூண்டு, பொங்கினர், புகுந்து மொய்த்தார்;
தார்த் தட மார்பன் தன்னை, 'தா, விடை' என்னச் சார்ந்தார்;
பார்த்தனன், அரக்கர் கோனும்; 'போம்' எனப் பகரும்காலை. 1
மாபெரும்பக்கனும் புகைக்கண்ணனும் விடை பெற்றபோது, தூதுவர் அவர்களது
செய்கையை இராவணனுக்கு எடுத்துரைத்தல்
மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து, 'இங்கு
ஏவுதி எம்மை' என்றான்; அவர் முகம் இனிதின் நோக்கி,
'போவது புரிதிர்' என்னப் புகறலும், பொறாத தூதர்,
'தேவ! மற்று இவர்கள் செய்கை கேள்!' எனத் தெரியச் சொன்னார்: 2
'ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித்
தானைகள் வீய, நின்ற தலைமகன் தனிமை ஓரார்,
"மானவன் வாளி, வாளி!" என்கின்ற மழலை வாயார்,
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும்!' என்றார். 3
தூதுவர் உரை கேட்ட இராவணன் இருவரையும் பற்றுமாறு கூற, கிங்கரர் அவர்களைப்
பிடித்தல்
அற்று அவர் கூறலும், ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான், -
'இற்றிதுவோ இவர் சேவகம்?' என்னா,
'பற்றுமின்!' என்றனன் - வெம்மை பயின்றான். 4
என்றலும், எய்தினர், கிங்கரர் என்பார்,
பின்றலினோரை வலிந்து பிடித்தார்,
நின்றனர்; ஆயிடை, நீல நிறத்தான்,
'கொன்றிடுவீர் அலிர்; கொண்மின், இது' என்றான். 5
அவ் இருவரையும் மூக்கறுக்க இராவணன் கட்டளையிட, மாலி அதனைத் தடுத்துக்
கூறுதல்
'ஏற்றம் இனிச் செயல் வேறு இலை; ஈர்மின்,
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக்
கோல் தரு திண் பணை கொட்டினிர், கொண்டு, ஊர்
சாற்றுமின், "அஞ்சினர்" என்று உரைதந்தே.' 6
அக் கணனே, அயில் வாளினர் நேரா,
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார்,
புக்கனர்; அப் பொழுதில், 'புகழ் தக்கோய்!
தக்கிலது' என்றனன், மாலி, தடுத்தான். 7
'அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர்,
வெஞ் சமம் வேறலும், வென்றியது இன்றாய்த்
துஞ்சலும், என்று இவை தொல்லைய அன்றே?
தஞ்சு என ஆர் உளர், ஆண்மை தகைந்தார்? 8
'அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;
வந்தது நம்வயின் எத்தனை, மன்னா!
தந்திரம், வானவர் தானவர்; என்றும்
இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே! 9
'வருணன் நடுங்கினன், வந்து வணங்கிக்
கருணை பெறும் துணையும், உயிர் கால்வான்;
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? எந்தாய்!
பருணிதர் தண்டம் இது அன்று, பகர்ந்தால். 10
'பத்து-ஒரு நாலு பகுத்த பரப்பின்
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்;
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர், உய்ந்தார்;
வித்தக! யார் இனி வீரம் விளைப்பார்? 11
'பாசமும் இற்றது; பாதியின் மேலும்
நாசமும் உற்றது; நம்பி! நடந்தாய்;
பூசல் முகத்து ஒரு கான் முளை போதா,
நீசரை ஈருதியோ, நெடு நாசி? 12
'"வாழி இலக்குவன்" என்ன, மறுக்குற்று
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்;
ஏழு கடல் துணையோ? இனி, நாசி
ஊழி அறுத்திடினும், உலவாதால். 13
'தூது நடந்தவனைத் தொழுது, அந் நாள்,
ஓது நெடுஞ் செரு அஞ்சி உடைந்தார்,
தீது இலர் நின்றவர், சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர், நாசி படைத்தார்! 14
'விட்டிலை சீதையை ஆம் எனின், வீரர்
ஒட்டிய போரினில் ஆர் உளர், ஓடார்?
"வெட்டுதி நாசியை, வெந் தொழில் வல்லோர்
பட்டிலர்" என்றிலை' என்று பகர்ந்தான். 15
இராவணன் சினம் தணிய, மாபெரும்பக்கனும் புகைக்கண்ணனும் பேசுதல்
ஆறினன் என்பது அறிந்தனர், அன்னார்
தேறினர், நின்றனர் சிந்தை தெளிந்தார்,
சீறிய நெஞ்சினர், செங் கணர், ஒன்றோ
கூறினர்? தம் நிலை செய்கை குறித்தார்: 16
'உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ?
மின் நகு வானிடை ஏகி, விரைந்தான்,
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்;
இந் நகர் எய்தினன், உய்ந்தனன் - எந்தாய்! 17
'இப் பகல், அன்று எனின் நாளையின், அல்லால்,
முப் பகல் தீர்கிலம்; ஆவி முடிப்போம்,
வெப்பு அகலா எரி வெந் தழல் வெந்த
செப்பு அகல் வெண்ணெயின் - நோன்மை தெரிந்தோய்! 18
'விட்டனை எம்மை, விடுத்து, இனி, வெம் போர்
பட்டனர் ஒன்று, படுத்தனர் ஒன்றோ,
கெட்டனர் என்பது கேளலை' என்னா,
ஒட்டினார், ஆவி முடிக்க உவந்தார். 19
இராவணன் அவ்விருவருடன் பெருஞ் சேனையை அனுப்புதல்
அன்னவர் தம்மொடும் ஐ-இரு வெள்ளம்
மின்னு படைக் கை அரக்கரை விட்டான்;
சொன்ன தொகைக்கு அமை யானை, சுடர்த் தேர்,
துன்னு வயப் பரியோடு தொகுத்தான். 20
துணையாக உடன் சென்ற பெரு வீரர்கள்
நெய் அழல் வேள்வி நெடும் பகை, நேர் விண்
தைவரு சூரியசத்துரு என்பான்,
பெய் கழல் மாலி, பிசாசன் எனும்பேர்
வெய்யவன், வச்சிரம் வென்ற எயிற்றான், 21
சேனைகள் திரண்டு சென்ற காட்சி
என்றவரோடும் எழுந்து, உலகு ஏழும்
வென்றவன் ஏவலின், முன்னம் விரைந்தார்;
சென்றன, மால் கரி, தேர், பரி; செல்வக்
குன்றுஇனம் என்ன நடந்தனர், கோட்பால். 22
விண்ணை விழுங்கிய தூளியின் விண்ணோர்
கண்ணை விழுங்குதலின், கரை காணார்;
எண்ணை விழுங்கிய சேனையை, யாரும்,
பண்ணை விழுங்க உணர்ந்திலர், பண்பால். 23
கால் கிளர் தேரொடும், கால் வரையோடும்,
மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச, -
மால் கடலானது, மாப் படை - வாள்கள்
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால். 24
பேரி கலித்தன, பேர் உலகைச் சூழ்
ஏரி கலித்தன ஆம் என் யானை
கார் இகலிக் கடலோடு கலித்த்
மாரி கலித்தென, வாசி கலித்த. 25
சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
நின்று பிணங்கிய, கல்வியின் நில்லா,
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன, ஓடைக்
குன்று நடந்தனபோல் - கொலை யானை. 26
மாக நெடுங் கரம் வானின் வழங்கா,
மேக நெடும் புனல் வாரின வீசி,
போக விலங்கின உண்டன போலாம்-
காக நெடுங் களி யானை களிப்பால். 27
எரிந்து எழு பல் படையின் ஒளி, யாணர்
அருங் கல மின் ஒளி, தேர் பரி யானை
பொருந்திய பண் ஒளி, தார் ஒளி, பொங்க,
இரிந்தது பேர் இருள், எண் திசைதோறும். 28
வீடணன் வருபவர் பற்றி இராமனுக்கு உரைத்தல்
எய்திய சேனையை, ஈசன் எதிர்ந்தான்,
'வெய்து இவண் வந்தவன், மாயையின் வெற்றி
செய்தவனேகொல்? தெரித்தி இது' என்றான்;
ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான்: 29
'முழைக் குலச் சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன,
புழைப் பிறை எயிற்றுப் பேழ் வாய், இடிக் குலம் பொடிப்ப, ஆர்த்து,
தழல் பொழி வாளிப் புட்டில் கட்டி, வில் தாங்கி, சார்வான்,
மழைக் குரல் தேரின் மேலான், மாபெரும்பக்கன் மன்னோ. 30
'சிகை நிறக் கனல் பொழி தெறு கண் செக்கரான்,
பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான்,
நகை நிறப் பெருங் கடைவாயை நக்குவான்,
புகைநிறக் கண்ணவன், பொலம் பொன் தேரினான். 31
'பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான்,
முச் சிரத்து அயிலினான், மூரித் தேரினான்,
"இச் சிரம் உம்மதே?" என வந்து எய்துவான்,
வச்சிரத்து எயிற்றவன், மலையின் மேனியான். 32
'காலையும் மனத்தையும், பிறகு காண்பது ஓர்
வால் உளைப் புரவியன், மடித்த வாயினான்,
வேலையின் ஆர்ப்பினன், விண்ணை மீக்கொளும்
சூலம் ஒன்று உடையவன், பிசாசன், தோன்றுவான். 33
'சூரியன் பகைஞன், அச் சுடர் பொன் தேரினன்,
நீரினும், முழக்கினன், நெருப்பின் வெம்மையான்;
ஆரிய! வேள்வியின் பகைஞன் ஆம் அரோ,
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான். 34
'சாலி வண் கதிர் நிகர் புரவித் தானையான்,
மூல வெங் கொடுமையின் தவத்தின் முற்றினான்,
சூலியும் வெருக்கொளத் தேரில் தோன்றுவான்,
மாலி' என்று, அடி முறை வணங்கிக் கூறினான். 35
வானரரும் அரக்கரும் கைகலந்து பொருதல்
ஆர்த்து எதிர் நடந்தது, அவ் அரியின் ஆர்கலி
தீர்த்தனை வாழ்த்தி; ஒத்து இரண்டு சேனையும்
போர்த் தொழில் புரிந்தன் புலவர் போக்கு இலார்,
வேர்த்து உயிர் பதைத்தனர், நடுங்கி விம்மியே. 36
கல் எறிந்தன, கடை உருமின்; கார் என
வில் எறிந்தன, கணை; விசும்பின் மேகத்துச்
செல் எறிந்தன எனச் சிதறி வீழ்ந்தன,
பல்; எறிந்தன தலை, மலையின் பண்பு என. 37
கடம் படு கரி பட, கலின மாப் பட,
இடம் படு சில்லியின் ஈர்த்த தேர் பட,
உடம்பு அடும் அரக்கரை, அனந்தன் உச்சியில்
படம் படும் என, படும் கவியின் கல் பல. 38
கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும்,
நிலை நெடுங் காலொடும், நிமிர்ந்த வாலொடும்,
மலையொடும், மரத்தொடும், கவியின் வல் நெடுந்
தலையொடும், போம் - விசைத்து எறிந்த சக்கரம். 39
ஆண் தகைக் கவிக் குல வீரர் ஆக்கையைக்
கீண்டன் புவியினைக் கிழித்த - மாதிரம்
தாண்டுவ, குலப் பரி, மனத்தின் தாவுவ,
தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம். 40
சில்லி அம் தேர்க் கொடி சிதைய, சாரதி
பல்லொடு நெடுந் தலை மடிய, பாதகர்
வில்லொடு கழுத்து இற, பகட்டை வீட்டுமால் -
கல்லெனக் கவிக்குலம் வீசும் கல் அரோ. 41
கரகம் உந்திய மலை முழையில், கட் செவி
உரகம் முந்தின என ஒளிக்கும், ஒள் இலை
அரகம் முந்தின, நெடுங் கவியின் ஆக்கையில் -
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே. 42
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை, மால் கரி;
கால் பிடித்து அடிக்கும், அக் கரியினைக் கவி;
தோல் பிடித்து அரக்கரை எறியும், சூர் முசு;
வேல் பிடித்து எறிவர், அம் முசுவை வெங் கணார். 43
முற்படு கவிக் குலம் முடுக வீசிய
கல் பட, களம் படும், அரக்கர் கார்க் கடல்;
பல் படு தலை படப் படுவ, பாதகர்
வில் படு கணை பட, குரங்கின் வேலையே. 44
கிச்சு உறு கிரி பட, கிளர் பொன் தேர் நிரை
அச்சு இற, செல்கில, ஆடல் வாம் பரி -
எச்சு உறு துயரிடை எய்த, ஈத்து உணா
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என. 45
மீயவர் யாவரும் விளிய, வெங் கரி
சேயிருங் குருதியில் திரிவ, சோர்வு இல, -
நாயகர் ஆளொடும் அவிய, நவ்வி தம்
பாயொடும் வேலையில் திரியும் பண்பு என. 46
படையொடு மேலவர் மடிய, பல் பரி,
இடை இடைதர விழுந்து இழிந்த பண்ணன,
கடல் நெடுங் குருதிய, - கனலி காலுறு
வடவையை நிகர்த்தன - உதிர வாயன. 47
எயிற்றொடு நெடுந் தலை, இட்ட கல்லொடும்
வயிற்றிடைப் புக, பல பகலும் வைகிய
பயிற்றியர் ஆயினும், தெரிக்கும் பண்பு இலார்,
அயிர்ப்பர், தம் கணவரை அணுகி அந் நலார். 48
தூமக் கண்ணனும் அனுமனும் எதிர் எதிர் தொடர்ந்தார்;
தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனைத் தடுத்தான்;
சேமத் திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார்;
வாமப் போர் வயப் பிசாசனும் பனசனும் மலைந்தார். 49
சூரியன்பெரும்பகைஞனும் சூரியன் மகனும்
நேர் எதிர்ந்தனர்; நெருப்புடை வேள்வியின் பகையும்
ஆரியன் தனித் தம்பியும் எதிர் எதிர் அடர்ந்தார்;
வீர வச்சிரத்துஎயிற்றனும் இடபனும் மிடைந்தார். 50
வெங் கண் வெள் எயிற்று அரக்கரில், கவிக் குல வீரச்
சிங்கம் அன்ன போர் வீரரில், தலைவராய்த் தெரிந்தார்,
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார்;
பொங்கு வெஞ் செருத் தேவரும் நடுக்குறப் பொருதார். 51
அரக்கர் சேனையின் அழிவும், இரத்த வெள்ளம் பரத்தலும்
இன்ன காலையின், ஈர்-ஐந்து வெள்ளம், வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர் தம் சேனையில், வீரன்
அன்ன வெஞ் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான்;
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான். 52
உப்புடைக் கடல் மடுத்தன உதிர நீர் ஓதம்
அப்பொடு ஒத்தன கடுத்தில் ஆர்கலி முழுதும்
செப்பு உருக்கு எனத் தெரிந்தது; மீன் குலம் செருக்கித்
துப்பொடு ஒத்தன, முத்துஇனம் குன்றியின் தோன்ற. 53
தத்து நீர்க் கடல் முழுவதும் குருதியாய்த் தயங்க,
சித்திரக் குலப் பல் நிற மணிகளும் சேந்த்
ஒத்து வேற்று உருத் தெரியல, உயர் மதத்து ஓங்கல்
மத்தகத்து உகு தரளமும், வளை சொரி முத்தும். 54
சூரியன் உதித்தல்
அதிரும் வெஞ் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்,
கதிரவன், செழுஞ் சேயொளிக் கற்றை அம் கரத்தால்,
எதிரும் வல் இருட் கரி இறுத்து, எழு முறை மூழ்கி,
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என, உதித்தான். 55
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன்
துரக்க, வெஞ் சுடர்க் கதிரவன் புறத்து இருள் தொலைக்க,
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல,
நிரக்கும் நல் ஒளி பரந்தன, உலகு எலாம் நிமிர. 56
படுகளக் காட்சி
நிலை கொள் பேர் இருள் நீங்கலும், நிலத்திடை நின்ற
மலையும் வேலையும் வரம்பு இல வயின் தொறும் பரந்து,
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன - சோரி
அலை கொள் வேலையும், அரும் பிணக் குன்றமும் அணவி. 57
நிலம் தவாத செந்நீரிடை, நிணக் கொழுஞ் சேற்றில்,
புலர்ந்த காலையில், பொறி வரி அம்பு எனும் தும்பி
கலந்த தாமரைப் பெரு வனம், கதிரவன் கரத்தால்,
மலர்ந்தது ஆம் எனப் பொலிந்தன, உலந்தவர் வதனம். 58
தேரும் யானையும் புரவியும் விரவின, - தேவர்
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும்
பேரும் மான வெங் காலத்துக் கால் பொர, பிணங்கிப்
பாரின் வீழ்ந்தன போன்றன - கிடந்தன பரந்து. 59
போர்க்களம் போந்த அரக்கியரின் நிலை
எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர், எரி வீழ்
அல்லி சுற்றிய கோதையர், களம் புகுந்து அடைந்தார்,
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார்,
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர். 60
வணங்கு நுண் இடை, வன முலை, செக்கர் வார் கூந்தல்,
அணங்கு வெள் எயிற்று, அரக்கியர் களத்து வந்து அடைந்தார்,
குணங்கள் தந்த தம் கணவர்தம் பசுந் தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களைப் பிளந்தனர், பிடித்தே. 61
சுடரும் வெள் வளைத் தோளி, தன் கொழுநனைத் தொடர்வாள்,
உடரும் அங்கமும் கண்டு, கொண்டு ஒரு வழி உய்ப்பாள்,
குடரும், ஈரலும், கண்ணும், ஓர் குறு நரி கொள்ள,
தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து, ஆர் உயிர் துறந்தாள். 62
பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந் தோள்
நரிகள் ஈர்த்தன, வணங்கவும் இணங்கவும் நல்கா
இரியல்போவன தொடர்ந்து, அயல் இனப் படை கிடைந்த
அரிய, நொந்திலர், அலத்தகச் சீறடி அயர்ந்தார். 63
நலம் கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,
விலங்கல் அன்ன வான் பெரும் பிணக் குப்பையின் மேலோர்,
அலங்கல் ஓதியர், - அருந் துணை பிரிந்து நின்று அயரும்,
பொலம் கொள், மா மயில் வரையின்மேல் திரிவன போன்றார். 64
சிலவர் - தம் பெருங் கணவர்தம் செருத் தொழில் சினத்தால்,
பலரும், வாய் மடித்து, உயிர் துறந்தார்களைப் பார்த்தார்,
'அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது, அயலாள்
கலவியின் குறி காண்டும் என்று ஆம்' எனக் கனன்றார். 65
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி,
அவசம் எய்திட, மடந்தையர் உருத் தெரிந்து அறியார்,
துவசம் அன்ன தம் கூர் உகிர்ப் பெருங் குறி, தோள்மேல்
கவசம் நீக்கினர், கண்டு கண்டு, ஆர் உயிர் கழிந்தார். 66
மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப்
போர் யாக்கைகள் நாடி, அப் பொரு களம் புகுந்தார்,
பேர் யாக்கையின் பிணப் பெருங் குன்றிடைப் பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர், இன் உயிர் துறந்தார். 67
அனுமனுக்கும் புகைக்கண்ணனுக்கும் நிகழ்ந்த போர்
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும்,
புகைவெங்கணனும் பொருவார்; பொரவே,
மிகை சென்றிலர், பின்றிலர், வென்றிலரால்;
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார். 68
ஐ-அஞ்சு அழல் வாளி, அழற்கொடியோன்,
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல்,
வை அம் சிலை ஆறு வழங்கினனால்,
மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான். 69
பாழிப் புயம் அம்பு உருவப் படலும்,
வீழிக் கனிபோல் புனல் வீச, வெகுண்டு,
ஆழிப் பெருந் தேரை அழித்தனனால் -
ஊழிப் பெயர் கார் நிகர் ஒண் திறலான். 70
சில்லிப் பொரு தேர் சிதைய, சிலையோடு
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்,
வில் இற்றது, இலக்குவன் வெங் கணையால்;
புல்லித் தரை இட்டனன், நேர் பொருவான். 71
புகைக்கண்ணன் உயிர் இழத்தல்
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு,
உலையக் கடல் தாவிய கால் கொடு உதைத்து,
அலையத் திருகிப் பகு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து, தணிந்தனனால். 72
மாபக்கன் - அங்கதன் போர்
மாபக்கனும் அங்கதனும் மலைவார்,
தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்,
கோபத்தினர், கொல்ல நினைந்து அடர்வார்,
தூபத்தின் உயிர்ப்பர், தொடர்ந்தனரால். 73
ஐம்பத்தொரு வெங் கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன், மொய் தொழிலான் -
வெம்பி, களியோடு விளித்து எழு திண்
கம்பக் கரி, உண்டை கடாய் எனவே. 74
ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
கார் ஓடும் நிறக் கத நாகம் அனான்,
தேரோடும் எடுத்து, உயர் திண் கையினால்,
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே, 75
வில்லைச் செல வீசி, விழுந்து அழியும்,
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா,
சொல்லின் பிழையாதது ஓர் சூலம், அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால். 76
'சூலம் எனின், அன்று; இது தொல்லை வரும்
காலம்' என உன்னு கருத்தினனாய்,
ஞாலம் உடையான், அது நாம் அற, ஓர்
ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால். 77
மாபக்கனை அங்கதன் பிளந்து அழித்தல்
உளம்தான் நினையாதமுன், உய்த்து, உகவாக்
கிளர்ந்தானை, இரண்டு கிழித் துணையாய்ப்
பிளந்தான் - உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான், 'வலி நன்று' என, - அங்கதனே. 78
மாலி-நீலன் போர்
மா மாலியும் நீலனும், வானவர்தம்
கோமானொடு தானவர் கோன் இகலே
ஆமாறு, மலைந்தனர்; அன்று, இமையோர்
பூ மாரி பொழிந்து, புகழ்ந்தனரால். 79
கல் ஒன்று கடாவிய காலை, அவன்
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும்,
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய்,
'நில்!' என்று இடை சென்று, நெருக்கினனால். 80
இடையே வந்து குமுதன் எறிந்த குன்றால் மாலியின் தேர் பொடியாதல்
அற்று, அத் தொழில் எய்தலும், அக் கணனே,
மற்றப் புறம் நின்றவன், வந்து அணுகா,
கொற்றக் குமுதன், ஒரு குன்று கொளா,
எற்ற, பொரு தேர் பொடி எய்தியதால். 81
மாலியின் தோளை இலக்குவன் துணித்தல்
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை
வாளால் மடிவித்து, வலித்து அடர்வான்
தோள் ஆசு அற, வாளி துரந்தனனால் -
மீளா வினை நூறும் விடைக்கு இளையான். 82
கையற்ற மாலியுடன் பொருதல் தகாது என இலக்குவன் அப்பால் போதல்
மின்போல் மிளிர் வாளொடு தோள் விழவும்
தன் போர் தவிராதவனை, சலியா,
'என் போலியர் போர் எனின், நன்று; இது ஓர்
புன் போர்' என, நின்று அயல் போயினனால். 83
இராமனிடம் சென்ற இலக்குவனை வானர வீரர்கள் புகழ்தல்
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்,
பேர் வீரனை, வாசி பிடித்தவனை,
'யார், வீரதை இன்ன செய்தார்கள்?' எனா,
போர் வீரர் உவந்து, புகழ்ந்தனரால். 84
வேள்விப்பகைஞனை இலக்குவன் அழித்தல்
வேள்விப் பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன், அங்கு ஓர் சுடர்க் கணையால்,
'வாழ்வு இத்தனை' என்று, அவன் மார்பு அகலம்
போழ்வித்தனன்; ஆர் உயிர் போயினனால். 85
மல்லல் தட மார்பன் வடிக் கணையால்
எல்லுற்று உயர் வேள்வி இரும்பகைஞன்
வில் அற்றது, தேரொடு மேல் நிமிரும்
கல் அற்ற, கழுத்தொடு கால்களொடும். 86
சூரியன் பகைஞனைச் சுக்கிரீவன் கொல்லுதல்
தன் தாதையை முன்பு தடுத்து, ஒரு நாள்,
வென்றானை, விலங்கலின் மேனியனை,
பின்றாத வலத்து உயர் பெற்றியனை,
கொன்றான் - கவியின் குலம் ஆளுடையான். 87
இடபன் - வச்சிரத்துஎயிற்றன் போர்
இடபன்,-தனி வெஞ் சமம் உற்று எதிரும்
விட வெங் கண் எயிற்றவன், விண் அதிரக்
கடவும் கதழ் தேர், கடவ ஆளினொடும்
பட, - அங்கு ஒரு குன்று படர்த்தினனால். 88
திண் தேர் அழிய, சிலை விட்டு, ஒரு தன்
தண்டோ டும் இழிந்து, தலத்தினன் ஆய்,
'உண்டோ உயிர்?' என்ன உருத்து, உருமோடு
எண் தோளனும் உட்கிட, எற்றினனால். 89
இடபன் அடியுண்டு அயர, அனுமன் துணையாக வந்து பொருதல்
'அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா,
இடையுண்ட மலைக் குவடு இற்றது போல்
முடியும்' எனும் எல்லையில் முந்தினனால் -
'நெடியன், குறியன்' எனும் நீர்மையினான். 90
கிடைத்தான் இகல் மாருதியை, கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
படைத்தானை, நெடும் புகழ்ப் பைங் கழலான்
புடைத்தான், அகல் மார்பு பொடிச் சிதற. 91
வச்சிரத்துஎயிற்றனை அனுமன் கொல்லுதல்
எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
பற்றி, கிளர் தண்டு பறித்து எறியா,
வெற்றிக் கிளர் கைக்கொடு, மெய் வலி போய்
முற்ற, தனிக் குத்த, முடிந்தனனால். 92
பிசாசன் செய்த பெரும் போர்
காத்து ஓர் மரம் வீசுறு கைக் கதழ்வன்
போத்து ஓர் புலிபோல் பனசன் புரள,
கோத்து ஓட நெடுங் குருதிப் புனல், திண்
மாத் தோமரம் மார்பின் வழங்கினனால். 93
கார் மேலினனோ? கடல் மேலினனோ?
பார் மேலினனோ? பகல் மேலினனோ?
யார் மேலினனோ? இன என்று அறியாம் -
போர் மேலினன், வாசி எனும் பொறியான். 94
'நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்?' என்று
ஆறாயிர வானவரும், அறிவின்
தேறா வகை நின்று, திரிந்துளதால் -
பாறு ஆடு களத்து, ஒரு பாய் பரியே. 95
கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்;
உள் நிற்கும் எனின், புறன் நிற்கும்; உலாய்,
மண்ணில் திரியாத வயப் பரியே. 96
மாப் புண்டரவாசியின் வட்டணைமேல்
ஆப்புண்டவன் ஒத்தவன், ஆர் அயிலால்
பூப் புண் தர, -ஆவி புறத்து அகல,
கோப்புண்டன, வானர வெங் குழுவே. 97
'நூறும் இரு நூறும், நொடிப்பு அளவின்,
ஏறும்; நுதி வேலின், இறைப்பொழுதில்,
சீறும் கவி சேனை சிதைக்கும்?' எனா,
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால். 98
இலக்குவன் காற்றின் படையால் பிசாசனைக் கொல்லுதல்
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா,
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை,
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன், வெங்
காற்றின் படை கொண்டு கடந்தனனால். 99
குலையப் பொரு சூலன் நெடுங் கொலையும்
உலைவுற்றில, உய்த்தலும் ஓய்வு இலன், ஒண்
தலை அற்று உகவும், தரை உற்றிலனால் -
இலையப் பரி மேல் கொள் இருக்கையினான். 100
மிகைப் பாடல்கள்
'அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால்,
களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்;
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின் மிக்கீர்! 1-1
'இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி,
மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம் போர்ப்
பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர்' என்றான். 1-2
'மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ!
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு
அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார். 16-1
மத்த மதக் கரியோடு மணித் தேர்,
தத்துறு வாசி, தணப்பு இல காலாள்,
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்,
வித்தக மானிடன் வாளியின், வீந்த. 16-2
இப் படையோடும் எழுந்து இரவின்வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி,
துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார். 20-1
தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக்
கார் நிரை சென்றது; கால் வய வாசித்
தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே? 22-1
'ஐய! கேள்: சிவன் கை வாள் கொண்டு, அளப்ப அரும் புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவரின் விழுமம் பெற்றோர்,
கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர்,
மொய் படைத் தலைவர்' என்று, ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான். 29-1
'இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர்
உன்ன அருந் தொகை தெரிந்து உரைக்கின், ஊழி நாள்
பின்னரும் செல்லும்' என்று ஒழியப் பேசினான்;
அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார். 35-1
கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்கக்
கடிகை உற்றதில் களைந்தது கண்டு, விண்ணவர்கள்,
'விடியலுற்றது நம் பெருந் துயர்' என வியந்தார். 58-1
வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து
உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன்
கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு இலர் குறைந்தார்;
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார். 67-1
தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா,
போர் மாலி பொருந்து தரைப்பட, முன்
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறித்தனனால். 81-1
அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன்,
வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு,
'இப் போர் தருக!' என்ற இலக்குவன்மேல்
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால். 85-1
சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம்
பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம்
பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு
எரி வெங் கணை மாரி இறைத்தனனால். 85-2
முடிவுற்றனன், மாருதி மோதுதலால்,
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன்;
விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால். 92-1
பொர நின்ற பணைப் புய வன் பனசன்
நிருதன் களமீது நெருக்கி, அதில்
பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத்
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால். 92-2
பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய,
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங்
கனல் என்ன வெகுண்டு, கவிப் படையின்
இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால். 93-1
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய,
குசை தங்கிய கோள் என, அண்டமொடு எண்
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் -
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே. 96-1
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
உற்று அங்கு எதிரேறி உடன்று, அமர்வாய்
வில் தங்கும் இலக்குவன் வெங் கணையால்,
முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால். 100-1
|