Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் > 28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 20. மகரக்கண்ணன் வதைப் படலம்


சீதைக்கு நல் நிமித்தம் தோன்றுதலும், இராவணன் தூதுவர் நகருக்கு ஏகுதலும்

'இன்று ஊதியம் உண்டு' என இன்னகைபால்
சென்று ஊதின தும்பிகள்; தென் திசையான்
வன் தூதரும் ஏகினர், வஞ்சனையான் -
தன் தூதரும் ஏகினர், தம் நகர்வாய். 1

தூதர் தெரிவித்த செய்தி கேட்டு இராவணன் துயருறுதல்

ஏகி, தனி மன்னன் இருந்துழி புக்கு,
'ஓகைப் பொருள் இன்று' என, உள் அழியா,
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம்
சோகத்தொடு, இறைஞ்சினர், சொல்லினரால். 2

சொன்னார்; அவர் சொல் செவியில் தொடர்வோன்,
இன்னாத மனத்தின் இலங்கையர்கோன்,
வெந் நாகம் உயிர்த்தென, விம்மினனால்;
அன்னான் நிலை கண்டு, அயல் நின்று அறைவான்: 3

கரன் மகன் மகரக்கண்ணன் தன்னை போருக்கு அனுப்ப இராவணனை வேண்டுதல்

'முந்தே, என தாதையை மொய் அமர்வாய்,
அந்தோ! உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல்
உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ?
எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ? 4

'யானே செல எண்ணுவென், ஏவுதியேல்;
தான் நேர்வது தீது எனவே தணிவேன்;
வானே, நிலனே, முதல் மற்றும் எலாம்,
கோனே! எனை வெல்வது ஓர் கொள்கையதோ? 5

'அருந் துயர்க் கடலுள் ஆழும் அம்மனை, அழுத கண்ணள்,
பெருந் திருக் கழித்திலாதாள், "கணவனைக் கொன்று பேர்ந்தோன்
கருந் தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன்" என்றாள்;
பருந்தினுக்கு இனிய வேலாய்! இன் அருள் பணித்தி' என்றான். 6

மகரக்கண்ணன் தேர் ஏறிப் போர்க்களம் செல்லுதல்

அவ் உரை மகரக்கண்ணன் அறைதலும், அரக்கன், 'ஐய!
செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீர்த்தி!' என்றான்.
வௌ; வழியவனும், பெற்ற விடையினன், தேர் மேற்கொண்டான்,
வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த தோளான். 7

தன்னுடைச் சேனை கோடி ஐந்து உடன் தழுவ, தானை
மன்னுடைச் சேனை வெள்ளம் நால்-ஐந்து மழையின் பொங்கிப்
பின்னுடைத்தாக, பேரி கடல் பட, பெயர்ந்த தூளி
பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் பகைய, போனான். 8

இராவணன் ஏவ சோணிதக்கண்ணன் முதலியோர் உடன் செல்லுதல்

'சோணிதக் கண்ணனோடு, சிங்கனும், துரகத் திண் தேர்த்
தாள்முதல் காவல் பூண்டு செல்க' என, 'தக்கது' என்னா,
ஆள் முதல் தானையோடும், அனைவரும் தொடரப் போனான்,
நாள் முதல் திங்கள்தன்னைத் தழுவிய அனைய நண்பான். 9

பல் பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர்
எல்லவன், சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய,
தொல் வன யானை அம் கை விலாழி நீர்த் துவலை தூற்ற,
செல்வன் கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம் தீர்ந்த. 10

'முழங்கின யானை; வாசி ஒலித்தன் முரசின் பண்ணை,
தழங்கின் வயவர் ஆர்த்தார்' என்பதோர் முறைமை தள்ள,
வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்புகாறும்;
புழுங்கின உயிர்கள் யாவும், கால் புகப் புரை இன்றாக. 11

அரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல்

வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர்
செய்தன் செருக்கிச் சென்று நெருக்கினர், தலைவர், செற்றி;
கையொடு கைகள் உற்றுக் கலந்தன் கல்லும் வில்லும்
எய்தன எறிந்த் யானை ஈர்த்தன, கோத்த சோரி. 12

வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,
கானகம் இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும் - கவ்வி,
போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறப் புடைப்பொடு ஆர்ப்ப. 13

மைந் நிற அரக்க்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி,
மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர்
கைந் நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி,
மொய்ந் நிறத்து எறிவர்; எற்றி முருக்குவர், அரக்கர் முன்பர். 14

மகரக்கண்ணன் இராமனிடம் வஞ்சினம் பேசுதல்

வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண், மழை ஏறு என்ன,
திண் திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித் தேரை,
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக்
கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப் படையைக் கொன்றான். 15

'இந்திரன் பகைஞனே கொல்?' என்பது ஓர் அச்சம் எய்தித்
தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி
எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி,
சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான்: 16

'"என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய்" என்னும்
முன் உடைத்தாய தீய முழுப் பகை மூவர்க்கு அன்றி,
நின்னுடைத்து ஆயது ஆமே; இன்று அது நிமிர்வது' என்றான் -
பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான் 17

மகரக்கண்ணன் வார்த்தையைத் 'தக்கது' என இராமனும் கூறுதல்

தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான், -
'நீ கரன் புதல்வன்கொல்லோ? நெடும் பகை நிமிர வந்தாய்;
ஆயது கடனே அன்றோ, ஆண் பிறந்து அமைந்தார்க்கு? ஐய!
ஏயது சொன்னாய்' என்றான், -இசையினுக்கு இசைந்த தோளான். 18

மகரக்கண்ணன் - இராமன் போர்

உரும் இடித்தென்ன வில் நாண் ஒலி படுத்து, 'உன்னோடு ஏய்ந்த
செரு முடித்து, என்கண் நின்ற சினம் முடித்து அமைவென்' என்னா,
கரு முடித்து அமைந்த மேகம், கால் பிடித்து எழுந்த காலம்,
பெரு முடிக் கிரியில் பெய்யும் தாரைபோல், பகழி பெய்தான். 19

சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,
அரிந்தனன் அகற்றி, மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து,
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ,
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே. 20

ஏவுண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற
பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான்
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான். 21

அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்; ஆழி
மன்னனும், முறுவல் செய்து, வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி,
பொன் நெடுந் தடந் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி,
வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான். 22

வில் முதலியன இழந்த மகரக்கண்ணன் வானில் சென்று, தவவலியால் இடியும் காற்றும் உண்டாக்குதல்

மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும்
சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பிடைத் தோன்றாநின்றான்,
கார் உரும் ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான். 23

உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன் ஊழி நாளின்,
இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விரிந்தது, எங்கும்
கரு முறை நிறைந்த மேகம்; கான்றன, கல்லின மாரி;
பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன. 24

காற்று முதலியன எழுந்தது குறித்து இராமன் வினவ, வீடணன் அவை தெய்வ வரத்தினால் வந்தது எனல்

போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப,
தீஇனம் அமையச் செல்லும் மாய மா மாரி சிந்த,
ஆயிர கோடி மேலும் அவிந்தன, கவிகள்; ஐயன்,
'மாயமோ? வரமோ?' என்றான்; வீடணன் வணங்கிச் சொல்வான்: 25

'நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர், கருணை நோக்கி,
காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள்தானும்,
மாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது' என்றான்;
நூற்று இதழ்க் கமலக் கண்ணன், 'அகற்றுவென், நொடியில்' என்றான். 26

இராமன் வாயு, வருணன், படைகளை ஏவ, மழையும் காற்றும் மறைதல்

காவலன் படையும், தெய்வக் கடலவன் படையும், கால் கொள்
கோல வன் சிலையில் கோத்த கொடுங் கணையோடும் கூட்டி,
மேலவன் துரத்தலோடும், விசும்பின் நின்று இரிந்து, வெய்தின்
மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன, மழையும் காற்றும். 27

மகரக்கண்ணன் மாயத்தால் வானில் மறைந்து போரிடல்

அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்
ஒத்த தன் உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்
பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனனப் பார்த்த
வித்தகன், 'ஒருவன் செய்யும் வினையம்!' என்று இனைய சொன்னான்: 28

மகரக்கண்ணன் மடிதலும் மாயை அகல்தலும்

'மாயத்தால் வகுத்தான், யாண்டும் வரம்பு இலா உருவம்; தான் எத்
தேயத்தான் என்னாவண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்;
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்;
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?' எனச் சிந்தை நொந்தான். 29

அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருள் இல் யாக்கை
உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான்,
செம்புனல் சுவடு நோக்கி, 'இது நெறி' என்று, தேவர்
தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான். 30

அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும், அரக்கன் யாக்கை,
புயல் படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்,
வெயில் படைத்து இருளை ஓட்டும் காலத்தின் விடிதலோடும்,
துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது - சூழ்ந்த மாயை. 31

குருதிக்கண்ணனோடு நளன் பொருது, அவன் தலையை வீழ்த்துதல்

குருதியின்கண்ணன், வண்ணக் கொடி நெடுந் தேரன், கோடைப்
பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ் சுடர் மேகப் பண்பன்,
எரி கணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் -
விரி கடல் தட்டான், கொல்லன், வெஞ் சினத் தச்சன், வெய்யோன். 32

அன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி,
ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன, உய்த்தான்;
நின்றவன்,-நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி,
சென்றனன்-கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான். 33

கரத்தினில் திரியாநின்ற மரத்தினைக் கண்டமாகச்
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி,
உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான், தன்னை ஒப்பான்
சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார். 34

எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திரவில் இட்டென்ன,
பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி
சொரிய, வன் கண்ணின் மூக்கின் செவிகளின், மூளை தூங்க,
நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மா நிலத்தில் இட்டான். 35

சிங்கனைப் பனசன் கொல்லுதல்

அங்கு அவன் உலத்தலோடும், அழற் கொழுந்து ஒழுகும் கண்ணான்,
சிங்கன், வெங் கணையன், வில்லன், தார் அணி தேரின் மேலான்,
'எங்கு, அடா! போதி?' என்னா, எய்தினன்; எதிர் இலாத,
பங்கம் இல் மேரு ஆற்றல், பனசன் வந்து, இடையில் பாய்ந்தான். 36

பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல பண்போடு
ஆய்ந்தன, அசனி போல, ஐ-இரண்டு அழுந்த எய்தான்;
காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;
ஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான். 37

தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங் கண்
மேருவின் தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச,
பாரிடை வீழ்தலோடும், அவன் சிரம் பறித்து, மாயாச்
சோரியும் உயிரும் சோர, துகைத்தனன், வயிரத் தோளான். 38

அரக்கர் சேனையில் அனைவரும் இறக்க, இராவணனது தூதர் இலங்கை செல்லுதல்

தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை
மராமரம், மலை, என்ற இன்ன வழங்கவும், வளைந்த தானை,
பராவ அருங் கோடி ஐந்தும் வெள்ளம் நால் - ஐந்தும் பட்ட்
இராவணன் தூதர் போனார், படைக்கலம் எடுத்திலாதார். 39

மிகைப் பாடல்கள்

இந்திரியத்தத இகழ்ந்தவன், அந்தோ!
மந்திர வெற்றி வழங்க வழங்கும்
இந்திரம் அற்றது எனக் கடிதிகொல்?
வந்தது என், வில் தொழிலைக் கொலை மான? 5-1

அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி,
வெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி,
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். 19-1

'இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்;
தந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்;
எந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்;
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்?' என அமலன் சொன்னான். 29-1

மற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக்
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப்
பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில் மாய்த்தான். 31-1

மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;
தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை எல்லாம்
கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில் மாய்த்தார்;
நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம். 38-1



 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home