Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம்  > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் >28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 12. அணி வகுப்புப் படலம்


இராவணன் மானத்தால் வருந்தி படுக்கையில் சயனித்திருத்தல்

மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான், வதனம் எல்லாம்
கூனல் தாமரையின் தோன்ற, வான் தொடும் கோயில் புக்கான்,
பானத்தான் அல்லன்; தெய்வப் பாடலான் அல்லன்; ஆடல்
தானத்தான் அல்லன்; மெல்லென் சயனத்தான்; உரையும் தாரான். 1

வை எயிற்றாலும், நேரா மணி இழந்து இரங்கலாலும்,
பையுயிர்த்து அயரும் பேழ் வாய்ப் பல் தலைப் பரப்பினாலும்,
மெய்யனை, திரையின் வேலை மென் மலர்ப் பள்ளி ஆன
ஐயனை, பிரிந்து வைகும் அனந்தனே - அரக்கர் வேந்தன். 2

சார்த்தூலன் என்ற ஒற்றனின் வரவை வாயில் காவலர் இராவணனுக்கு உரைத்தல்

தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன் வருதலும், வாயில் காப்பான்,
'சேயவர் சேனை நண்ணி, செய் திறம் தெரித்தி நீ" என்று
ஏயவன் எய்தினான்' என்று அரசனை இறைஞ்சிச் சொன்னான். 3

இராவணனது வினாவும், சார்த்தூலன் மறுமொழியும்

'அழை' என, எய்தி, பாதம் வணங்கிய அறிஞன் தன்னை,
'பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி' என்று அரக்கன் பேச,
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி,
குழையுறு மெய்யன், பைய, வரன்முறை கூறலுற்றான்: 4

'வீரிய! விரைவின் எய்தி, பதினெழு வெள்ளத்தோடும்,
மாருதி, மேலை வாயில் உழிஞைமேல் வருவதானான்;
ஆரியன், அமைந்த வெள்ளம் அத்தனையோடும், வெற்றிச்
சூரியன் மகனைத் தன்னைப் பிரியலன் நிற்கச் சொன்னான். 5

'அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன் மைந்தன்,
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்;
ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும்
நின்றனன், நீலன் என்பான், குண திசை வாயில் நெற்றி. 6

'இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு, இரண்டு வெள்ளம்
வெம்பு வெஞ் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான்;
உம்பியை, வாயில்தோறும் நிலை தெரிந்து உணர்த்தச் சொன்னான்:
தம்பியும் தானும் நிற்பதாயினான்; சமைவு ஈது' என்றான். 7

இராவணன் மந்திரிமாருடன் ஆலோசனை செய்தல்

சார்த்தூலன் இதனைச் சொல்ல, தழல் சொரி தறுகணானும்,
பார்த்து, ஊழி வடவை பொங்க, 'படுவது படுமா பார்த்தி;
போர்த் தூளி துடைப்பென் நாளை, அவர் உடற் பொறையின் நின்றும்
தேர்த்து ஊறும் குருதிதன்னால்' என்றனன், எயிறு தின்னா. 8

மா அணை நீலக் குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன,
தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த தோளான்,
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற
பூ அணை மாற்றி, வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான். 9

செய்வன முறையின் எண்ணி, திறத்திறம் உணர்வினை தேர,
மை அறு மரபின் வந்த அமைச்சரை, 'வருக!' என்றான் -
பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தைச் சுற்றி,
ஐ - இரண்டு ஆய கோடிப் பேய்க் கணம் காப்பது ஆக்கி. 10

இராவணனது வினா

அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி,
'வளைந்தது குரங்கின் சேனை, வாயில்கள் தோறும் வந்து;
விளைந்தது பெரும் போர் என்று விட்டது; விடாது, நம்மை;
உளைந்தனம்; என்ன எண்ணி, என் செயற்கு உரிய?' என்றான். 11

நிகும்பன் எதிரியை இகழ்ந்து கூறுதல்

'எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்;
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே?
உழிஞையைத் துடைக்க, நொச்சி உச்சியில் கொண்டது, உன் ஊர். 12

'எழு, மழு, தண்டு, வேல், வாள், இலை நெடுஞ் சூலம், என்று இம்
முழு முதற் படைகள் ஏந்தி, இராக்கதர் முனைந்த போது,
தொழுது தம் படைகள் கைவிட்டு, ஓடுவார் சுரர்கள் என்றால்,
விழுமிது, குரங்கு வந்து வெறுங் கையால் கொள்ளும் வென்றி! 13

மாதுலத் தலைவனான மாலி கூறுதல்

'ஈது இவண் நிகழ்ச்சி' என்னா, எரி விழித்து, இடியின் நக்கு,
பூதலத்து அடித்த கையன், நிகும்பன், என்று ஒருவன் பொங்க,
'வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது' என்னா,
மாதுலத் தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான்: 14

'புக்கு எரி மடுத்து, இவ் ஊரைப் பொடி செய்து போயினாற்குச்
சக்கரம் உண்டோ? கையில் தனு உண்டோ? வாளி உண்டோ?
இக் கிரி பத்தின் மௌலி இன மணி அடங்கக் கொண்ட
சுக்கிரீவற்கும் உண்டோ , சூலமும் வேலும் வாளும்? 15

'தொடைக் கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர், தோன்றா
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள் தன்னை ஈந்து,
படைக்கலம் உடைய நாம், அப் படை இலாப் படையை, ஈண்ட
அடைக்கலம் புகுவது அல்லால், இனிப் புகும் அரணும் உண்டோ?' 16

இராவணன் மாலியைக் கடிந்து கூற, அவன் பேசாதிருத்தல்

என்புழி மாலிதன்னை எரி எழ நோக்கி, 'என்பால்
வன் பழி தருதி போலாம்; வரன்முறை அறியா வார்த்தை,
அன்பு அழி சிந்தைதன்னால், அடாதன அறையல்' என்றான்,
பின் பழி எய்த நின்றான்; அவன் பின்னைப் பேச்சு விட்டான். 17

சேனையை அணிவகுக்குமாறு இராவணன் ஆணையிடல்

'காட்டிய காலகேயர் கொழு நிணக் கற்றை காலத்
தீட்டிய படைக் கை வீரச் சேனையின் தலைவ! தௌ;ளி
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு,
கீட்டிசை வாயில் நிற்றி, நின் பெருங் கிளைகளோடும். 18

'காலன்தன் களிப்புத் தீர்த்த மகோதர! காலையே போய்,
மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும்
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி - வெள்ளம் ஆன
நால் - ஐம்பதோடும் சென்று, நமன் திசை வாயில் நண்ணி. 19

'ஏற்றம் என், சொல்லின் என்பால்? இந்திரன்பகைஞ! - அந் நாள்
காற்றினுக்கு அரசன் மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ?
நூற்று - இரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற,
மேல் திசை வாயில் சேர்தி, விடிவதின் முன்னம் - வீர! 20

'இந் நெடுங் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய்;
புன் நெடுங் குரங்கின் சேரல் புல்லிது; புகழும் அன்றால்;
அந் நெடு மூலத்தானை அதனொடும், அமைச்சரோடும்,
தொல் நெடு நகரி காக்க - விரூபாக்க!' என்னச் சொன்னான். 21

'கட கரி புரவி ஆள் தேர், கமலத்தோன் உலகுக்கு இப்பால்
புடை உள பொருது, கொண்டு, போர் பெறாப் பொங்குகின்ற
இடை இடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு,
வட திசை வாயில் காப்பேன் யான்' என வகுத்து விட்டான். 22

சூரியன் தோன்றுதல்

கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் - காணும்
நலம் கிளர் தேவர்க்கேயோ, நான் மறை முனிவர்க்கேயோ,
பொலம் கெழு சீதைக்கேயோ, பொரு வலி இராமற்கேயோ,
இலங்கையர் வேந்தற்கேயோ, - எல்லார்க்கும் செய்தது இன்பம். 23

அளித் தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி,
வெளிப்படல் அரிது என்று உன்னி, வேதனை உழக்கும் வேலை,
களித்தவற் களிப்பு நீக்கி, காப்பவர் தம்மைக் கண்ணுற்று,
ஒளித்தவர் வெளிப்பட்டென்ன, - கதிரவன் உதயம் செய்தான். 24

வானர சேனை இலங்கை மதிலை முற்றும் வளைத்தல்

உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்கத் தூர்ப்ப,
அளப்ப அருந் தூளிச் சுண்ணம் ஆசைகள் அலைக்க, பூசல்
இளைப்ப அருந் தலைவர், முன்னம் ஏவலின், எயிலை முற்றும்
வளைத்தனர், விடிய, தத்தம் வாயில்கள்தோறும் வந்து. 25

தந்திரம் இலங்கை மூதூர் மதிலினைத் தழுவித் தாவி,
அந்தரக் குல மீன் சிந்த, அண்டமும் கிழிய ஆர்ப்ப,
செந் தனிச் சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல,
இந்திரன் தொழுது வாழ்த்த, இராமனும் எழுந்து சென்றான். 26

அரக்கர் சேனையை வளைத்தல்

நூற் கடல் புலவராலும் நுனிப்ப அரும் வலத்தது ஆய
வேற் கடல் - தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும்,
கார்க் கடல் புறத்தது ஆக, கவிக் கடல் வளைந்த காட்சி,
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது, அப் பதகன் மூதூர். 27

அலகு இலா அரக்கன் சேனை அகப்பட, அரியின் தானை,
வலைகொலாம் என்ன, சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின்,
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து
உலகு எலாம் ஒருங்கு கூடி, ஒதுங்கினவேயும் ஒக்கும். 28

மிகைப் பாடல்கள்

இறைவன் மற்று இதனைக் கூற, எறுழ் வலி அமைச்சர் பொங்கி,
'பிறை முடிப் பரமனோடும் பெரு வரை எடுத்த மேலோய்!
உறு சமர்க்கு எம்மைக் கூவி, ஏவிடாதொழிந்தாய்; யாமும்
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும் தாழ்த்தது' என்றார். 11-1

அமைச்சர் மற்று இதனைக் கூறி, 'அரச! நீ விடைதந்தீமோ?
இமைப்பிடைச் சென்று, வந்த குரங்குஇனப் படையை எல்லாம்
கமைப்பு அறக் கடிது கொன்றே களைகுவம்' என்ற போதில்,
சுமைத் தட வரைத் தோள் கும்பகருணன் சேய் நிகும்பன் சொல்வான்: 12-1

எரி நெருப்பு என்னப் பொங்கி, இராவணன் என்னும் மேலோன்
உரை செறி அமைச்சரோடும், உறு படைத் தலைவரோடும்,
கரி, பரி, இரதம், காலாள், கணக்கு அறும் வெள்ளச் சேனை
மருவுற, திசை நான்கு உம்பர் வகுத்து, அமர் புரியச் சொன்னான். 17-1

இம் முறை அரக்கர் கோமான் அணி வகுத்து, இலங்கை மூதூர்,
மும் மதில் நின்ற தானை நிற்க, மூதமைச்சரோடும்
விம்முறு சேனை வெள்ளத் தலைவர்க்கு விடையும் நல்கி,
கம்மெனக் கமழும் வாச மலர் அணை கருகச் சேர்ந்தான். 22-1



 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home