Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > 1 கடல் தாவு படலம்  > 2 ஊர் தேடு படலம் > 3 காட்சிப் படலம் > 4 உருக் காட்டு படலம் >5 சூடாமணிப் படலம்  > 6 பொழில் இறுத்த படலம் > 7 கிங்கார் வதைப் படலம் > 8 சம்புமாலி வதைப் படலம் > 9 பஞ்ச சேனாதிபதிகள் வதைப் படலம் > 10 அக்ககுமாரன் வதைப் படலம் > 11 பாசப் படலம் > 12 பிணி வீட்டு படலம் > 13 இலங்கை எரியூட்டு படலம் > 14 திருவடி தொழுத படலம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் - 4. உருக் காட்டு படலம்


அனுமன் விஞ்சையால் அரக்கியர் உறங்குதல்

'காண்டற்கு ஒத்த காலமும் ஈதே; தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார்;
வேண்டத் துஞ்சார்' என்று, ஒரு விஞ்ஞை வினை செய்தான்;
மாண்டு அற்றாராம் என்றிட, எல்லாம் மயர்வு உற்றார். 1

தூங்காத காவலர் தூங்குதல் கண்ட சீதையின் புலம்பல்

துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள்; துயர் ஆற்றாள்;
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள், நெகுகின்றாள்;
அஞ்சா நின்றாள், பல் நெடு நாளும் அழிவுற்றாள்,
எஞ்சா அன்பால், இன்ன பகர்ந்து, ஆங்கு, இடர் உற்றாள். 2

'கரு மேகம், நெடுங் கடல், கா அனையான்
தருமே, தமியேன் எனது ஆர் உயிர் தான்?
உரும்ஏறு உமிழ் வெஞ் சிலை நாண் ஒலிதான்
வருமே? உரையாய், வலியாய் வலியே! 3

'கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர்; நினையா
வில்லாளனை, யாதும் விளித்திலிரோ? 4

'தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர்; எனது ஆவி அறிந்திலிரோ?
நிழல் வீரை அனானுடனே நெடுநாள்
உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ? 5

'வாராது ஒழியான் எனும் வண்மையினால்,
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன்;
தீராய் ஒரு நாள் வலி -சேவகனே!
நாராயணனே! தனி நாயகனே! 6

'தரு ஒன்றிய கான் அடைவாய்; "தவிர் நீ;
வருவென் சில நாளினில்; மா நகர்வாய்
இரு" என்றனை; இன் அருள்தான் இதுவோ?
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ? 7

'பேணும் உணர்வே! உயிரே! பெரு நாள்
நாண் இன்று உழல்வீர்; தனி நாயகனைக்
காணும் துணையும் கழிவீர்அலிர்; நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ? 8

'முடியா முடி மன்னன் முடிந்திடவும்,
படி ஏழும் நெடுந் துயர் பாவிடவும்,
மடியா நெறி வந்து வளம் புகுதும்
கொடியார் வரும் என்று, குலாவுவதோ?' 9

சீதை உயிர் விடத் துணிதல்

என்று என்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்;
'ஒன்று என் உயிர் உண்டுஎனின், உண்டு இடர்; யான்
பொன்றும் பொழுதே, புகழ் பூணும்' எனா, 10

'பொறை இருந்து ஆற்றி, என் உயிரும் போற்றினேன்,
அறை இருங் கழலவற் காணும் ஆசையால்;
நிறை இரும் பல் பகல், நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனை, அப் புனிதன் தீண்டுமோ? 11

'உன்னினர் பிறர் என உணர்ந்தும், உய்ந்து, அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்,
மன் உயிர் காத்து, இருங் காலம் வைகினேன்;
என்னின், வேறு அரக்கியர், யாண்டையார்கொலோ? 12

'சொல் பிரியாப் பழி சுமந்து தூங்குவேன்;
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்றுஅரோ!
கற்புடை மடந்தையர், கதையில் தான் உளோர்,
இல் பிரிந்து உய்ந்தவர், யாவர் யான் அலால்? 13

'"பிறர் மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது" என்று, உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்;
புறன் அலர், அவன் உற, போது போக்கி, யான்,
அறன் அலது இயற்றி, வேறு என் கொண்டு ஆற்றுகேன்? 14

'எப் பொழுது, இப் பெரும் பழியின் எய்தினேன்,
அப் பொழுதே, உயிர் துறக்கும் ஆணையேன்;
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத, யான்,
துப்பு அழிந்து உய்வது, துறக்கம் துன்னவோ? 15

'அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர்,
வன் பழி சுமக்கினும் சுமக்க் வான் உயர்,
துன்பு அழி, பெரும் புகழ்க் குலத்துள் தோன்றினேன்;
என் பழி துடைப்பவர், என்னின் யாவரே? 16

'வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி, என்
மஞ்சனை வைது, "பின் வழிக் கொள்வாய்" எனா,
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென் இருத்தலும், உலகம் கொள்ளுமோ? 17

'வல் இயல் மறவர், தம் வடுவின் தீர்பவர்,
வெல்லினும் வெல்க, போர்; விளிந்து வீடுக்
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்,
சொல்லிய என் பழி அவரைச் சுற்றுமோ? 18

'வருந்தல் இல் மானம், மா அனைய மாட்சியர்
பெருந் தவம் மடந்தையர் முன்பு, பேதையேன்,
'கருந் தனி முகிலினைப் பிரிந்து, கள்வர் ஊர்
இருந்தவள், இவள்' என, ஏச நிற்பெனோ? 19

'அற்புதன், அரக்கர்தம் வருக்கம் ஆசு அற,
வில் பணி கொண்டு, அருஞ் சிறையின் மீட்ட நாள்,
"இல் புகத் தக்கலை" என்னில், யானுடைக்
கற்பினை, எப் பரிசு இழைத்துக் காட்டுகேன்? 20

மாதவிப் பொதும்பர் புக்க சீதையின் முன், அனுமன் தோன்றுதல்

'ஆதலான், இறத்தலே அறத்தின் ஆறு' எனா,
'சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்;
ஈது அலாது இடமும் வேறு இல்லை' என்று, ஒரு
போது உலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள். 21

கண்டனன் அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன் துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
'அண்டர் நாயகன் அருள் தூதன் யான்' எனா,
தொண்டை வாய் மயிலினைத் தொழுது, தோன்றினான். 22

'இராமன் தூதன் யான்' என அனுமன் மொழிதல்

'அடைந்தனென் அடியனேன், இராமன் ஆணையால்;
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பு இலர்; தவத்தை மேவலால்,
மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன். 23

'ஈண்டு நீ இருந்ததை, இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன்; அதற்குக் காரணம்
வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு
மாண்டில் ஈது அலால், மாறு வேறு உண்டோ ? 24

'ஐயுறல்; உளது அடையாளம்; ஆரியன்
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள்
கைஉறு நெல்லியங் கனியின் காண்டியால்;
நெய் உறு விளக்கு அனாய்! நினையல் வேறு' என்றான். 25

அனுமனைக் கண்டு தெளிந்த சீதை அவனைப் பற்றி வினவல்

என்று அவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி,
'நின்றவன் நிருதன் அல்லன்; நெறி நின்று; பொறிகள் ஐந்தும்
வென்றவன்; அல்லனாகில், விண்ணவன் ஆக வேண்டும்;
நன்று உணர்வு உரையன்; தூயன்; நவை இலன் போலும்!' என்னா, 26

'அரக்கனே ஆக் வேறு ஓர் அமரனே ஆக் அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக் கொடுமை ஆக்
இரக்கமே ஆக் வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ ?' 27

என நினைத்து, எய்த நோக்கி, 'இரங்கும் என் உள்ளம்; கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்;
நினைவுடைச் சொற்கள் கண்ணீர் நிலம் புக, புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன்' என்னா, 'வீர! நீ யாவன்?' என்றாள். 28

அனுமன் தன் வரலாறு கூறல்

ஆய சொல் தலைமேல் கொண்ட அங்கையன், 'அன்னை! நின்னைத்
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன், தொல்லைக்
காய் கதிர்ச் செல்வன் மைந்தன், கவிக்குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன், சுக்கிரீவன் என்றுஉளன், நவையின் தீர்ந்தான். 29

'மற்று, அவன் முன்னோன் வாலி; இராவணன் வலி தன் வாலின்
இற்று உகக் கட்டி, எட்டுத் திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன்; தேவர் வேண்ட, வேலையை, விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய, அமுது எழ கடைந்த தோளான். 30

'அன்னவன்தன்னை, உம் கோன், அம்பு ஒன்றால் ஆவி வாங்கி,
பின்னவற்கு அரசு நல்கி, துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன்தனக்கு, நாயேன், மந்திரத்து உள்ளேன்; வானின்
நல் நெடுங் காலின் மைந்தன்; நாமமும் அனுமன் என்பேன். 31

'எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன் உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப் வேலை தனித் தனி கடக்கும் தாள்
குழுவின, உம்கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி,
வழு இல, செய்தற்கு ஒத்த - வானரம் வானின் நீண்ட. 32

'துப்பு உறு பரவை ஏழும், சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும், உம்பர்நின்று இம்பர்காறும்,
இப் புறம் தேடி நின்னை எதிர்ந்திலஎன்னின், அண்டத்து
அப் புறம் போயும் தேட, அவதியின் அமைந்து போன. 33

'புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள், பொதிந்துதூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகலக் குறியினாலே,
வென்றியான் அடியேன்தன்னை வேறு கொண்டு இருந்து கூறி,
"தென் திசைச் சேறி" என்றான்; அவன் அருள் சிதைவது ஆமோ? 34

'கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது, அடுத்த தன்மை,
பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர் நிலை பிறிதும் உண்டோ?
இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழிந்து நீத்த
மற்றை நல் அணிகள்காண், உன் மங்கலம் காத்த மன்னோ! 35

'ஆயவன் தன்மை நிற்க் அங்கதன், வாலி மைந்தன்,
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயின படர்ந்து தீர, அனையவன் விடுத்தான் என்னை,
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு' என்றனன், பழியை வென்றான். 36

அனுமன் இராமனின் வடிவழகை விவரித்தல்

எய்து அவன் உரைத்தலோடும், எழுந்து, பேர் உவகை ஏற,
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க,
'உய்தல் வந்து உற்றதோ?' என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்,
'ஐய! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி?' என்றாள். 37

'படி உரைத்து, எடுத்துக் காட்டும் படித்து அன்று, படிவம்; பண்பில்
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும், முன்னர்;
துடிஇடை! அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி' என்னா,
அடிமுதல் முடியின் காறும், அறிவுற அனுமன் சொல்வான். 38

'"சேயிதழ்த் தாமரை" என்று, சேண் உளோர்
ஏயினர்; அதன் துணை எளியது இல்லையால்,
நாயகன் திருஅடி குறித்து நாட்டுறின்;
பாய் திரைப் பவளமும் குவளைப் பண்பிற்றால்! 39

'தளம் கெழு கற்பக முகிழும், தண் துறை
இளங் கொடிப் பவளமும் கிடக்க் என் அவை?
துளங்கு ஒளி விரற்கு எதிர், உதிக்கும் சூரியன்
இளங் கதிர் ஒக்கினும் ஒக்கும்-ஏந்திழாய்! 40

'சிறியவும் பெரியவும் ஆகி, திங்களோ,
மறு இல பத்து உளஅல்ல் மற்று இனி;
எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில்
அறிகிலென், உகிர்க்கு, யான், உவமம் ஆவன. 41

'பொருந்தில நிலனொடு, போந்து கானிடை
வருந்தினஎனின், அது நூலை மாறு கொண்டு
இருந்தது; நின்றது, புவனம் யாவையும்
ஒருங்கு உடன் புணர் அஃது உரைக்கற்பாலதோ? 42

'தாங்கு அணைப் பணிலமும் வளையும் தாங்கு நீர்
வீங்கு அணைப் பணிமிசை மேகம் அன்னவன்
பூங் கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு,
ஆம் கணைக்கு ஆவமோ, ஆவது? அன்னையே! 43

'அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அணைவன பெயரும், பொற்புடை,
மறம் கிளர் மத கரிக் கரமும் நாணின,
குறங்கினுக்கு உவமை, இவ் உலகில் கூடுமோ? 44

'வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலஞ் சுழி என்றலும் புன்மை; பூவொடு
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர், இனி,
இலஞ்சியும் போலும்? வேறு உவமை யாண்டுஅரோ? 45

'பொரு அரு மரகதப் பொலன் கொள் மால் வரை
வெருவுற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவு அற நோற்றனள் என்னின், பின்னை, அத்
திருவினின் திரு உளார் யாவர்? தெய்வமே! 46

'நீடுறு கீழ்த் திசை நின்ற யானையின்
கோடு உறு கரம் என, சிறிது கூறலாம்,
தோடு உறு மலர் எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள் தொடு தடக் கை; வேறு உவமை சாலுமே? 47

'பச்சிலைத் தாமரை பகல் கண்டால் எனக்
கைச் செறி முகிழ் உகிர், கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில்
நிச்சயம்; அன்று எனின், ஐயம் நீக்குமே? 48

'திரண்டில் ஒளி இல் திருவின் சேர்வு இல்
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண்
புரண்டில் புகழ் இல் பொருப்பு என்று ஒன்று போன்று
இரண்டு இல் புயங்களுக்கு உவமம் ஏற்குமோ? 49

'"கடற் படு பணிலமும், கன்னிப் பூகமும்,
மிடற்றினுக்கு உவமை" என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ-உரகப் பள்ளியான்
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க, எங்களால்? 50

'அண்ணல்தன் திரு முகம் கமலம் ஆம் எனின்,
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்?
தண் மதி ஆம் என உரைக்கத் தக்கதோ,
வெண் மதி பொலிந்து அது மெலிந்து தேயுமால்? 51

'"ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ் வாய்
நாரம் உண்டு அலர்ந்த, செங் கேழ் நளினம்" என்று உரைக்க நாணும்;
ஈரம் உண்டு, அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும்,
மூரல் வெண் முறுவல் பூவாப் பவளமோ, மொழியற்பாற்றே? 52

'முத்தம் கொல்லோ? முழு நிலவின் முறியின் திறனோ? முறை அமுதச்
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம்கொல்? வேறே சிலகொல்? மெய்ம் முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்? 53

'எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழு மா நிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ?
தள்ளா ஓதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா, வள்ளல் திரு மூக்கிற்கு; உவமை பின்னும் குணிப்பு ஆமோ? 54

'பனிக்க, சுரத்து, கரன் முதலோர் கவந்தப் படையும், பல் பேயும்,
தனிக் கைச் சிலையும், வானவரும், முனிவர் குழுவும், தனி அறனும்,
"இனிக் கட்டழிந்தது அரக்கர் குலம்" என்னும் சுருதி ஈர்-இரண்டும்,
குனிக்க, குனித்த புருவத்துக்கு உவமம், நீயே, கோடியால். 55

'வரு நாள் தோன்றும் தனி மறுவும், வளர்வும், தேய்வும், வாள் அரவம்
ஒரு நாள் கவ்வும் உறு கோளும், இறப்பும், பிறப்பும் ஒழிவுற்றால்,
இரு-நால் பகலின் இலங்கு மதி, அலங்கல் இருளின் எழில் நிழற் கீழ்ப்
பெரு நாள் நிற்பின், அவன் நெற்றிப் பெற்றித்து ஆகப் பெறும் மன்னோ! 56

'நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ? 57

'புல்லல் ஏற்ற திருமகளும், பூவும், பொருந்தப் புலி ஏழும்
எல்லை ஏற்ற நெடுஞ் செல்வம் எதிர்ந்த ஞான்றும், அஃது இன்றி
அல்லல் ஏற்ற கானகத்தும், அழியா நடையை, இழிவான
மல்லல் ஏற்றின் உளது என்றால், மத்த யானை வருந்தாதோ?' 58

இன்ன மொழிய, அம் மொழி கேட்டு, எரியின் இட்ட மெழுகு என்ன,
தன்னை அறியாது அயர்வாளை, தரையின் வணங்கி, 'நாயகனார்
சொன்ன குறி உண்டு; அடையாளச் சொல்லும் உளவால், அவை, தோகை
அன்ன நடையாய், கேட்க!' என, அறிவன் அறைவான் ஆயினான். 59

இராமன் உரைத்த அடையாள மொழிகளைச் சீதைக்கு அனுமன் கூறுதல்

'"நடத்தல் அரிது ஆகும் நெறி; நாள்கள் சில் தாயர்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தி" என, அச் சொற்கு,
உடுத்த துகிலோடும், உயிர் உக்க உடலோடும்,
எடுத்த முனிவோடும், அயல் நின்றதும் இசைப்பாய். 60

'"நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை செல்வம்
பூண்டு, அதனை நீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்?" என, இசைத்ததும் இசைப்பாய். 61

'"எள் அரிய தேர் தரு சுமந்திரன்! இசைப்பாய்,
வள்ளல் மொழி வாசகம்; மனத் துயர் மறந்தாள்;
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள" என்னும்,
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி, பெயர்த்தும். 62

இராமபிரானது திரு ஆழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சி

'"மீட்டும் உரை வேண்டுவன இல்லை" என, மெய்ப் பேர்
தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது" என, நேர்ந்தனன்' எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். 63

இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ?
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ?
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்ததுகொல் என்கோ?
திறம் தெரிவது என்னைகொல், இ(ந்)நல் நுதலி செய்கை? 64

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்;
பழந் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்;
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்;
உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். 65

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? 66

மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர்
நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்
நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். 67

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது, ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே!
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில், வேதிகை செய் தெய்வ மணிகொல்லோ? 68

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! 69

சீதை அனுமனை வாழ்த்துதல்

இத் தகையள் ஆகி, உயிர் ஏமுற விளங்கும்,
முத்த நகையாள், விழியில் ஆலி முலை முன்றில்
தத்தி உக, மென் குதலை தள்ள, 'உயிர் தந்தாய்!
உத்தம!' எனா, இனைய வாசகம் உரைத்தாள்: 70

'மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்,
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமைதானும் நல்கினை, இசையோடு' என்றாள். 71

'பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி' என்றாள். 72

இராம இலக்குவரைப் பற்றிச் சீதை வினாவ, அனுமன் விடை கூறல்

மீண்டு உரை விளம்பலுற்றாள், 'விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான், இளவலோடும்? எவ் வழி எய்திற்று உன்னை?
ஆண்தகை, அடியேன் தன்மை யார் சொல, அறிந்தது?' என்றாள்;
தூண் திரள் தடந் தோளானும், உற்றது சொல்லலுற்றான்: 73

'உழைக் குலத் தீய மாய உருவு கொண்டு, உறுதல் செய்தான்,
மழைக் கரு நிறத்து மாய அரக்கன், மாரீசன் என்பான்;
இழைத் தட மார்பத்து அண்ணல் எய்ய, போய், வையம் சேர்வான்
அழைத்தது அவ் ஓசை; உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால். 74

'"இக் குரல் இளவல் கேளாது ஒழிக" என, இறைவன் இட்டான்
மெய்க் குரல் சாபம்; பின்னை, விளைந்தது விதியின் வெம்மை;
"பொய்க் குரல் இன்று, பொல்லாப் பொருள் பின்பு பயக்கும்" என்பான்,
கைக் குரல் வரி வில்லானும், இளையவன் வரவு கண்டான். 75

'கண்ட பின், இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக் கணானும், உற்றது புகலக் கேட்டான்;
வண்டு உறை சாலை வந்தான், நின் திரு வடிவு காணான்,
உண்டு உயிர், இருந்தான்; இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ? 76

'தேண்டி நேர் கண்டேன்; வாழி! தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே போக, அப் பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை; அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய்; ஆண்டு, அங்கு, எவ் உயிர் விடும் இராமன்? 77

'அந் நிலை ஆய அண்ணல், ஆண்டு நின்று, அன்னை! நின்னைத்
துன் இருங் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி,
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்,
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான். 78

'வந்து, அவன் மேனி நோக்கி, வான் உயர் துயரின் வைகி,
"எந்தை! நீ உற்ற தன்மை இயம்பு" என, இலங்கை வேந்தன்,
சுந்தரி! நின்னைச் செய்த வஞ்சனை சொல்லச் சொல்ல,
வெந்தன உலகம் என்ன, நிமிர்ந்தது சீற்ற வெந் தீ. 79

'சீறி, "இவ் உலகம் மூன்றும் தீந்து உக, சின வாய் அம்பால்
நூறுவென்" என்று, கை வில் நோக்கியகாலை, நோக்கி,
"ஊறு ஒரு சிறியோன் செய்ய, முனிதியோ உலகை? உள்ளம்
ஆறுதி" என்று, தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி, 80

'"எவ் வழி ஏகியுற்றான்? யாண்டையான்? உறையுள் யாது?
செவ்வியோய், கூறுக!" என்ன, செப்புவான் உற்ற செவ்வி,
வௌ;விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின் வேந்தன்,
எவ்விய வரி விற் செங் கை இருவரும், இடரின் வீழ்ந்தார். 81

'அயர்த்தவர், அரிதின் தேறி, ஆண் தொழில் தாதைக்கு, ஆண்டு,
செயத் தகு கடன்மை யாவும், தேவரும் மருளச் செய்தார்;
"கயத் தொழில் அரக்கன் தன்னை நாடி, நாம் காண்டும்" என்னா,
புயல் தொடு குடுமிக் குன்றும், கானமும், கடிது போனார். 82

'அவ் வழி, நின்னைக் காணாது, அயர்த்தவர் அரிதின் தேறி,
செவ்வழி நயனம், செல்லும் நெடு வழி சேறு செய்ய,
வௌ; அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்,
இவ் வழி இனைய பன்னி, அறிவு அழிந்து, இரங்கலுற்றான். 83

'கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்?
பொன் மொய்த்த தோளான், மயல் கொண்டு, புலன்கள் வேறாய்,
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனேபோல்,
உன்மத்தன் ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலாதான். 84

'"போது ஆயினபோது, உன் தண் புனல் ஆடல் பொய்யோ?
சீதா, பவளக் கொடி அன்னவள்-தேடி, என்கண்
நீ தர் தருகிற்றிலையேல், நெருப்பு ஆதி!" என்னா,
கோதாவரியைச் சினம் கொண்டனன், கொண்டல் ஒப்பான். 85

'"குன்றே! கடிது ஓடினை, கோமளக் கொம்பர் அன்ன
என் தேவியைக் காட்டுதி; காட்டலைஎன்னின், இவ் அம்பு
ஒன்றே அமையும், உனுடைக் குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா, எரியா, கரி ஆக்க" என்றான். 86

'"பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ,
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண்!" என்னா,
நன் மான்களை நோக்கி, "நும் நாமமும் மாய்ப்பென் இன்றே,
வில் மாண் கொலை வாளியின்" என்று, வெகுண்டு நின்றான். 87

'வேறுற்ற மனத்தவன், இன்ன விளம்பி நோவ,
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று, உயிர் பெற்று, இயல்பும் சில தேறலுற்றான். 88

'வந்தான் இளையானொடு, வான் உயர் தேரின் வைகும்
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடங் குன்றினில்; தன் உயிர்க் காதலோனும்,
செந் தாமரைக் கண்ணனும், நட்டனர் தேவர் உய்ய. 89

'உண்டாயதும், உற்றதும், முற்றும் உணர்த்தி, உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற, போழ்தின்,
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை, யாங்கள் காட்ட,
கண்டான், உயர் போதமும் வேதமும் காண்கிலாதான். 90

'தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை;
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன், தூய நின்கண்
அணி கண்டுழியே, அமுதம் தெளித்தாலும் ஆறாப்
பிணி கொண்டது; பண்டு அது உண்டு ஆயினும், பேர்ப்பது அன்றால். 91

'அயர்வு உற்று, அரிதின், தெளிந்து, அம் மலைக்கு அப் புறத்து ஓர்
உயர் பொன் கிரி உற்று உளன், வாலி என்று ஓங்கல் ஒப்பான்,
துயர்வு உற்று அவ் இராவணன் வாலிடைப் பண்டு தூங்க,
மயர்வு உற்ற பொருப்பொடு, மால் கடல் தாவி வந்தான். 92

'ஆயானை, ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின்
தூயான்வயின், அவ் அரசு ஈந்தவன், "சுற்று சேனை
மேயான் வருவான்" என விட்டனன்; மேவுகாறும்
ஏயான், இருந்தான், இடைத் திங்கள் இரண்டு இரண்டும். 93

'பின் கூடிய சேனை பெருந் திசை பின்ன ஆக,
வில் கூடு நுதல் திரு! நின்னிடை மேவ ஏவி,
தெற்கு ஊடுருவக் கடிது ஏவினன் என்னை' என்ன,
முன் கூடின கூறினன், காலம் ஓர் மூன்றும் வல்லான். 94

இராமனது நிலை எண்ணிய சீதையின் மன நிலை

அன்பினன் இவ் உரை உணர்த்த, ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்,
என்பு உற உருகினள்; இரங்கி ஏங்கினள்;
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள். 95

கடல் கடந்தது பற்றி சீதை வினவ அனுமன் விடையளித்தல்

நையுறு சிந்தையள், நயன் வாரியின்
தொய்யல் வெஞ் சுழியிடைச் சுழிக்கும் மேனியள்,
'ஐய! நீ அளப்ப அரும் அளக்கர் நீந்திலை
எய்தியது எப் பரிசு? இயம்புவாய்!' என்றாள். 96

'சுருங்குஇடை! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடை உணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல் கடந்தனென், காலினால்' என்றான். 97

'இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை;
தத்தினை கடல்; அது, தவத்தின் ஆயதோ?
சித்தியின் இயன்றதோ? செப்புவாய்' என்றாள்-
முத்தினும், நிலவினும், முறுவல் முற்றினாள். 98

அனுமன் கடல் கடந்த தன் பேர் உருவைக் காட்டுதல்

சுட்டினன், நின்றனன் - தொழுத கையினன்;
விட்டு உயர் தோளினன்; விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடு முகடு எய்தி, நீளுமேல்
முட்டும் என்று, உருவொடு வளைந்த மூர்த்தியான். 99

'செவ் வழிப் பெருமை என்று உரைக்கும் செம்மைதான்,
வௌ; வழிப் பூதம் ஓர் ஐந்தின் மேலதோ?
அவ் வழித்து அன்று, எனின், அனுமன் பாலதோ?
எவ் வழித்து ஆகும்?' என்று எண்ணும் ஈட்டதே. 100

ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய
மெய்த் துறு மரம்தொறும் மின்மினிக் குலம்
மொய்த்து உளவாம் என, முன்னும் பின்னரும்,
தொத்தின தாரகை, மயிரின் சுற்று எலாம். 101

கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய,
விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய,
குண்டலம் இரண்டும், அக் கோளின் மாச் சுடர்
மண்டலம் இரண்டொடும், மாறு கொண்டவே. 102

'ஏண் இலது ஒரு குரங்கு ஈது' என்று எண்ணலா
ஆணியை, அனுமனை, அமைய நோக்குவான்,
'சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று' எனா,
நாண் உறும் - உலகு எலாம் அளந்த நாயகன். 103

எண் திசை மருங்கினும், உலகம் யாவினும்,
தண்டல் இல் உயிர் எலாம் தன்னை நோக்கின்
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன், தானும், தன் கமலக் கண்களால். 104

எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின், இலங்கை ஆழ் கடல்
விழுந்தது; நிலமிசை விரிந்த வெண் திரை
தழைந்தன் புரண்டன மீனம்தாம் எலாம். 105

பேர் உருவை ஒடுக்குமாறு அனுமனைச் சீதை வேண்டுதல்

வஞ்சிஅம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்,
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
'துஞ்சினர் அரக்கர்' என்று உவக்கும் சூழ்ச்சியாள்,
'அஞ்சினேன் இவ் உரு; அடக்குவாய்' என்றாள். 106

'முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழு இலது உலகு; இனி, குறுகுவாய்' என்றாள்,-
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினளாம் என, தளிர்க்கும் சிந்தையாள். 107

எளிய உருவு காட்டிய அனுமனைச் சீதை பாராட்டுதல்

ஆண்தகை அனுமனும், 'அருளது ஆம்' எனா,
மீண்டனன், விசும்பு எனும் பதத்தை மீச் செல்வான்,
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டல் இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள். 108

'இடந்தாய் உலகை மலையோடும், எடுத்தாய் விசும்பை, இவை சுமக்கும்
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய், எனினும், பயன் இன்றால்;
நடந்தாய் இடையே என்றாலும், நாண் ஆம் நினக்கு; நளிர் கடலைக்
கடந்தாய் என்றல் என் ஆகும்?-காற்றே அனைய கடுமையாய்! 109

ஆழி நெடுங் கை ஆண்தகைதன் அருளும், புகழும், அழிவு இன்றி,
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு, ஒருவன் நீயே உளை ஆனாய்;-
பாழி நெடுந் தோள் வீரா!-நின் பெருமைக்கு ஏற்ப, பகை இலங்கை
ஏழு கடற்கும் அப் புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ? 110

'அறிவும் ஈதே, உரு ஈதே; ஆற்றல் ஈதே, ஐம் புலத்தின்
செறிவும் ஈதே, செயல் ஈதே, தேற்றம் ஈதே, தேற்றத்தின்
நெறியும் ஈதே, நினைவு ஈதே, நீதி ஈதே, நினக்கு என்றால்,
வெறியர் அன்றோ, குணங்களான் விரிஞ்சன் முதலாம் மேலானோர்? 111

'மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப்
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி,
உன்னாநின்றே உடைகின்றேன், ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்;
என்னே? நிருதர் என் ஆவர், நீயே எம் கோன் துணை என்றால்? 112

'மாண்டேன் எனினும் பழுது அன்றே; இன்றே, மாயச் சிறைநின்றும்
மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக் குலங்களோடும் வேர் அறுத்தேன்,
பூண்டேன் எம் கோன் பொலங் கழலும்; புகழே அன்றி, புன் பழியும்
தீண்டேன்' என்று, மனம் மகிழ்ந்தாள், திருவின் முகத்துத் திரு ஆனாள். 113

அனுமனின் பணிமொழி

அண்ணற் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான், 'அருந்ததியே!
வண்ணக் கடலினிடைக் கிடந்த மணலின் பலரால்; வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத் தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவல் கூவல் பணி செய்வேன். 114

வானரப் படையின் சிறப்பை அனுமன் எடுத்துரைத்தல்

'வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை? இவ் வேலைப்
பள்ளம், ஒரு கை நீர் அள்ளிக் குடிக்க, சாலும் பான்மையதோ?
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ,
உள்ள துணையும் உளது ஆவது? அறிந்த பின்னும் உளது ஆமோ? 115

'வாலி இளவல், அவன் மைந்தன், மயிந்தன், துமிந்தன், வயக் குமுதன்,
நீலன், இடபன், குமுதாக்கன், பனசன், சரபன், நெடுஞ் சாம்பன்,
காலன் அனைய துன்மருடன், காம்பன், கயவன், கவயாக்கன்,
ஞாலம் அறியும் நளன், சங்கன், விந்தன், துவிந்தன், மதன் என்பான்; 116

'தம்பன், தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று
இம்பர் உலகொடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன் கை
அம்பின் உதவும் படைத் தலைவர்; அவரை நோக்கின், இவ் அரக்கர்,
வம்பின் முலையாய்! உறை இடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ ?' 117

மிகைப் பாடல்கள்

சுற்றிய கொடி ஒன்றைத் துணித்து, தூயள், ஓர்
பொன் தடங் கொம்பினில் பூட்டி, 'பூமியே!
நல் தவம் உடையள் யான்ஆகின், நாயகன்
வெற்றி சேர் திருவடி மேவுவேன்' என்றாள். 21-1

என்று அருந்ததி, மனத்து, எம்மை ஆளுடைத்
துன்ற அருங் கற்பினாள், சுருதி நாயகன்
பொன் தரு மலர்ப் பதம் வழுத்தி, பூங் கொடி
தன் தனிக் கழுத்திடைத் தரிக்கும் ஏல்வையின். 21-2

எய்தினள், பின்னும் எண்ணாத எண்ணி, 'ஈங்கு
உய் திறம் இல்லை!' என்று ஒருப்பட்டு, ஆங்கு ஒரு
கொய் தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல்வையில், தவத்தின் பெற்றியால், 21-3

தோன்றினன், தனது உருக் காண் தூயவன்,
மூன்று உலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர்
தேன் திகழ் திருவடி சென்னியால் தொழுது,
ஆன்ற பேர் அன்பு கொண்டு, அறைதல்மேயினான்: 22-1

'நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர்,
நீக்கினர் துயிலினை; நின்னைக் காணுதற்கு
ஆக்கிய காலம் பார்த்து, அயல் மறைந்து, பின்
தாக்கு அணங்கு அவர் துயில் கண்டு, சார்ந்துளேன். 23-1

'நிலை பெற, அயன் இருந்து, இயற்று நீலத்தின்
சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல்
"அலவன், அது" என்பரால், அறிவு இலோர்; அவர்
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ ? 43-1

'எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில் இணை உரு ஆய்,
தள்ளப்படாத தகை ஆகி, சார் கத்திரிகை வகை ஒழுகா,
அள்ளற் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற
வள்ளைத் தண்டின் வனப்பு அழித்த, மகரம் செறியாக் குழை' என்றான். 49-1

தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர்த் தம்பியோடும்,
நவம் தந்த குன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி,
கவந்தன் தனது ஆவி கவர்ந்து, ஒருக்காலும் நீங்காச்
சிவம் தந்து, மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான். 88-1

'சென்றேன் அடியேன், உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும்
அன்றே, அரக்கர் வருக்கம் உடன் அடைவது; அல்லாது, அரியின் கை
மன்றே கமழும் தொடை அன்றே, நிருதர் குழுவும் மாநகரும்?'
என்றேஇறைஞ்சி,பின்னரும்,ஒன்றுஇசைப்பான்உணர்ந்தான்,ஈறுஇல்லான்.117-1

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home