Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் -
2. ஊர் தேடு படலம்
இலங்கையின் மாட்சி
'பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு சமைத்த?
என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத-
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம். 1
நாகாலயங்களொடு நாகர் உலகும், தம்
பாகு ஆர் மருங்கு துயில்வென்ன உயர் பண்பு;
ஆகாயம் அஞ்ச, அகல் மேருவை அனுக்கும்
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற. 2
'மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி,
மீகாரம் எங்கணும் நறுந் துகள் விளக்கி,
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி,
பாகு ஆய செஞ் சொலவர் வீசுபடு காரம். 3
'பஞ்சி ஊட்டிய பரட்டு, இசைக் கிண்கிணிப் பதுமச்
செஞ் செவிச் செழும் பவளத்தின் கொழுஞ் சுடர் சிதறி,
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து, அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ. 4
'நான நாள் மலர்க் கற்பக நறு விரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த, தாள் ஆறுடைப் பறவை
தேன் அவாம் விரைச் செழுங் கழுநீர்த் துயில்செய்ய,
வான யாறு தம் அரமியத் தலம்தொறும் மடுப்ப. 5
'குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய,
மழலை மென் மொழி, கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்,
சுழலும் நல் நெடுந் தட மணிச் சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை தெரிவு அரு நிலைய, 6
'இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசுண்ணும்;
அனையது ஆம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவை
நினையலாம்? அன்றி, உவமையும் அன்னதாய் நிற்கும்! 7
'மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால்;
திணியும் நல் நெடுந் திருநகர், தெய்வ மாத் தச்சன்
துணிவின் வந்தனன், தொட்டு அழகு இழைத்த அத் தொழில்கள். 8
'மரம் அடங்கலும் கற்பகம்; மனை எலாம் கனகம்;
அரமடந்தையர் சிலதியர், அரக்கியர்க்கு; அமரர்
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர்; ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது; தவம் செய்த தவமால். 9
'தேவர் என்பவர் யாரும், இத் திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்; செய்கிலாதவர் எவர் என்னின்,
மூவர்தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்!
தா இல் மா தவம் அல்லது, பிறிது ஒன்று தகுமோ? 10
'"போர் இயன்றன தோற்ற" என்று இகழ்தலின், புறம் போய்
நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,
ஆரியம் தனி ஐங் கரக் களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேவருமே, இந் நகர் தொகாத. 11
'வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும்
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது, இவ் ஊர்;
ஆழி அண்டத்தின் அருக்கன்தன் அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன, ஈண்டு உள குதிரைகள் எல்லாம். 12
'தழங்கு பேரியின் அரவமும், தகை நெடுங் களிறு
முழங்கும் ஓதையும், மூரி நீர் முழக்கொடு முழங்கும்;
கொழுங் குழல் புதுக் குதலையர் நூபுரக் குரலும்,
வழங்கு பேர் அருஞ் சதிகளும், வயின்தொறும் மறையும். 13
'மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்த
குரகதத் தடந் தேர்இனம்அவை பயில் கொட்டில்
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்,
நரகம் ஒக்குமால் நல் நெடுந் துறக்கம், இந் நகர்க்கு, 14
'திருகு வெஞ் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்;
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; -அழகைப்
பருகும் இந் நகர்த் துன் ஒளி பாய்தலின், -பசும் பொன்
உருகுகின்றது போன்று உளது, உலகு சூழ் உவரி. 15
'தேனும், சாந்தமும், மான்மதச் செறி நறுஞ் சேறும்,
வான நாள்மலர்க் கற்பக மலர்களும், வய மாத்
தான வாரியும், நீரொடு மடுத்தலின், தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும், அவ் வேலை. 16
'தெய்வத் தச்சனைப் புகழ்துமோ? செங் கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாத
தொய்யல் சிந்தையேம், யாவரை எவ்வகை துதிப்பேம்? 17
'நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடுங் காலும்,
வாரி வானமும், வழங்கல ஆகும், தம் வளர்ச்சி;
ஊரின் இந் நெடுங் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,
மேரு எங்ஙனம் விளர்க்குமோ, முழுமுற்றும் வெள்கி? 18
'முன்னம் யாவரும், "இராவணன் முனியும் என்று எண்ணி,
பொன்னின் மா நகர் மீச் செலான் கதிர்" எனப் புகல்வார்-
கன்னி ஆரையின் ஒளியினில், கண் வழுக்குறுதல்
உன்னி, நாள்தொறும் விலங்கினன் போதலை உணரார். 19
'"தீய செய்குநர் தேவரால்; அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென்" என மதியா,
காயம் என்னும் அக் கணக்கு அறு பதத்தையும் கடக்க
ஏயும் நன் மதில் இட்டனன் - கயிலையை எடுத்தான். 20
"கறங்கு கால் புகர் கதிரவன் ஒளி புகர் மறலி
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கைநின்று அகத்தின்!" 21
'கொண்ட வான் திரைக் குரை கடல் இடையதாய், குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று, இமைக்கின்ற எழிலால்,
பண்டு அரா-அணைப் பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது, இவ் அணி நகர் அமைதி. 22
இலங்கை மாந்தரின் பெருமித செல்வ வாழ்வு
'பாடுவார் பலர் என்னின், மற்று அவரினும் பலரால்
ஆடுவார்கள்; மற்று அவரினும் பலர் உளர், அமைதி
கூடுவாரிடை இன்னியம் கொட்டுவார்; முட்டு இல்
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார். 23
'வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்;
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர்; அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார்; தொடர்ந்தால்,
ஏனை நாகியர் அரு நடக் கிரியை ஆய்ந்திருப்பார். 24
'இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி,
உழையர் என்ன நின்று, உதவுவ நிதியங்கள்; ஒருவர்
விழையும் போகமே, இங்கு இது? வாய்கொடு விளம்பின்,
குழையும்; நெஞ்சினால் நினையினும், மாசு என்று கொள்ளும். 25
'பொன்னின் மால் வரைமேல் மணி பொழிந்தன பொருவ,
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ் முறை உரைக்க,
பன்னி, நாள் பல பணி உழந்து, அரிதினின் படைத்தான் -
சொன்ன வானவர் தச்சன் ஆம், இந் நகர் துதிப்பான். 26
'மகர வீணையின், மந்தர கீதத்தின், மறைந்த,
சகர வேலையின் ஆர் கலி; திசைமுகம் தடவும்
சிகர மாளிகைத் தலம்தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின, முகிற் குலம் அனைத்தும். 27
'பளிக்கு மாளிகைத் தலம்தொறும், இடம்தொறும், பசுந் தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள்தோறும்,
அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன். 28
'தேறல் மாந்தினர்; தேன் இசை மாந்தினர்; செவ் வாய்
ஊறல் மாந்தினர்; இன உரை மாந்தினர்; ஊடல்
கூறல் மாந்தினர்; அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர்-அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர். 29
'எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன் ஊடலில் கனன்று
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சி
குறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி. 30
விளரிச் சொல்லியர் வாயினால், வேலையுள் மிடைந்த
பவளக் காடு எனப் பொலிந்தது; படை நெடுங் கண்ணால்,
குவளைக் கோட்டகம் கடுத்தது; குளிர் முகக் குழுவால்,
முளரிக் கானமும் ஒத்தது-முழங்கு நீர் இலங்கை. 31
'"எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய், இன்றுகாறும்
கிழிந்திலது அண்டம்" என்னும் இதனையே கிளப்பது அல்லால்,
அழிந்துநின்று ஆவது என்னே? அலர் உளோன் ஆதியாக
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம், அரக்கருக்கு உறையும் போதா. 32
'காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்
ஆயத்தார்; வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ? மற்றுஓர்
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல். 33
'கழல் உலாம் காலும், கால வேல் உலாம் கையும், காந்தும்
அழல் உலாம் கண்ணும், இல்லா ஆடவர் இல்லை; அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றா
மழலை யாழ்க் குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை மாதோ. 34
'கள் உறக் கனிந்த பங்கி அரக்கரைக் கடுத்த - காதல்
புன் உறத் தொடர்வ, மேனி புலால் உறக் கடிது போவ,
வெள் உறுப்பு எயிற்ற, செய்ய தலையன, கரிய மெய்ய,
உள் உறக் களித்த, குன்றின் உயர்ச்சிய,-ஓடை யானை. 35
'வள்ளி நுண் மருங்குல் என்ன, வானவர் மகளிர், உள்ளம்
தள்ளுற, பாணி தள்ளா நடம் புரி தடங் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர், தாம் வெள்குகின்றார்-
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார். 36
'ஒறுத்தலோ நிற்க் மற்று, ஓர் உயர் படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம்? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே?
கறுத்த வாள் அரக்கிமாரும், அரக்கரும், கழித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும், இவ் வீதி எல்லாம். 37
'வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்
கடங்களும், கலின மா விலாழியும், கணக்கு இலாத
இடங்களின் இடங்கள்தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம்
அடங்கியது என்னில், என்னே! ஆழியின் ஆழ்ந்தது உண்டோ ? 38
'விற் படை பெரிது என்கேனோ? வேற் படை மிகும் என்கேனோ?
மற் படை உடைத்து என்கேனோ? வாட் படை வலிது என்கேனோ?
கற்பணம், தண்டு, பிண்டிபாலம் என்று இனைய காந்தும்
நன் படை பெரிது என்கேனோ? - நாயகற்கு உரைக்கும் நாளில்.' 39
குறுகிய வடிவுடன் அனுமன் பவளக் குன்றில் தங்குதல்
என்றனன், இலங்கை நோக்கி, இனையன பலவும் எண்ணி-
நின்றனன்; 'அரக்கர் வந்து நேரினும் நேர்வர்' என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, அச் சரளச் சாரல்
குன்றிடை இருந்தான்; வெய்யோன் குட கடல் குளிப்பதுஆனான். 40
செறிந்த பேரிருள்
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான்,
ஆய்வினை மனத்து இலான், அறிஞர் சொல் கொளான்,
வீவினை நினைக்கிலான், ஒருவன், மெய் இலான்,
தீவினை என, இருள் செறிந்தது எங்குமே. 41
கரித்த மூன்று எயிலுடைக் கணிச்சி வானவன்,
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை,
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனனாம் என, பொலியும் பொற்பதே. 42
அணங்கு அரா அரசர் கோன், அளவு இல் ஆண்டு எலாம்,
பணம் கிளர் தலைதொறும் உயிர்த்த பாய் விடம்
உணங்கல் இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து,
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே, 43
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை,
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும்,
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே, 44
இருளிலும் அரக்கர் இயங்குதல்
அவ் வழி, அவ் இருள் பரந்த ஆயிடை,
எவ் வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்;
செவ் வழி மந்திரத் திசையர் ஆகையால்,
வௌ; வழி இருள் தர, மிதித்து, மீச்செல்வார். 45
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார்; எழில்
சந்திரன் உலகினைச் சார்குவார்; சலத்து
அந்தகன் உறையுளை அணுகுவார்; அயில்
வெந் தொழில் அரக்கனது ஏவல் மேயினார். 46
பொன்னகர் மடந்தையர், விஞ்சைப் பூவையர்,
பன்னக வனிதையர், இயக்கர் பாவையர்,
முன்னின பணி முறை மாறி முந்துவார்,
மின் இனம் மிடைந்தென, விசும்பின் மீச்செல்வார். 47
தேவரும், அவுணரும், செங் கண் நாகரும்,
மேவரும் இயக்கரும், விஞ்சை வேந்தரும்,
யாவரும், விசும்பு இருள் இரிய ஈண்டினார்,
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார். 48
சித்திரப் பத்தியின் தேவர் சென்றனர்,
'இத்துணைத் தாழ்த்தனம்; முனியும்' என்று, தம்
முத்தின் ஆரங்களும், முடியும், மாலையும்,
உத்தரீயங்களும், சரிய ஓடுவார். 49
நிலவின் பொலிவு
தீண்ட அருந் தீவினை தீக்கத் தீந்து போய்,
மாண்டு, அற உலர்ந்தது, மாருதிப் பெயர்
ஆண்தகை மாரி வந்து அளிக்க, ஆயிடை,
ஈண்டு அறம் முளைத்தென, முளைத்தது இந்துவே. 50
'வந்தனன் இராகவன் தூதன்; வாழ்ந்தனன்
எந்தையே இந்திரன் ஆம்' என்று ஏமுறா,
அந்தம் இல் கீழ்த் திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே. 51
கற்றை வெண் கவரிபோல், கடலின் வெண் திரை
சுற்றும் நின்று அலமர, பொலிந்து தோன்றிற்றால்-
'இற்றது என் பகை' என, எழுந்த இந்திரன்
கொற்ற வெண் குடை எனக் குளிர் வெண் திங்களே. 52
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால், திரை
முரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான்
சொரிந்ததே ஆம் என, துள்ளும் மீனொடும்
விரிந்தது, வெண் நிலா, மேலும் கீழுமே. 53
அருந் தவன் சுரபியே ஆதி வான்மிசை
விரிந்த பேர் உதயமா, மடி வெண் திங்களா,
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா,
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே. 54
எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில, மறித்தும் போகில,
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி, ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற, மீன் எலாம். 55
எல்லியின் நிமிர் இருட் குறையும், அவ் இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும், கவ்வின்
புல்லிய பகை எனப் பொருவ போன்றன-
மல்லிகை மலர்தொறும் வதிந்த வண்டு எலாம். 56
வீசுறு பசுங் கதிர்க் கற்றை வெண் நிலா
ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது,
காசு உறு கடி மதில் இலங்கைக் காவல் ஊர்த்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே. 57
இகழ்வு அரும் பெருங் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என, அனுமன் பற்றினால்,
அகழ் புகுந்து, அரண் புகுந்து, இலங்கை, அன்னவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே. 58
மதிலின் மாண்பு கண்டு அனுமன் வியத்தல்
அவ் வழி, அனுமனும், அணுகலாம் வகை
எவ் வழி என்பதை, உணர்வின் எண்ணினான்;
செவ் வழி ஒதுங்கினன், தேவர் ஏத்தப் போய்,
வௌ; வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான். 59
ஆழி அகழ் ஆக, அருகா அமரர் வாழும்
ஏழ் உலகின் மேலை வெளிகாறும் முகடு ஏறி,
கேழ் அரிய பொன் கொடு சமைத்த, கிளர் வெள்ளத்து
ஊழி திரி நாளும் உலையா, மதிலை உற்றான். 60
'"கலங்கல் இல் கடுங் கதிர்கள், மீது கடிது ஏகா,
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி" எனின், அன்றால்;
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே,
விலங்கி அகல்கின்றன, விரைந்து' என, வியந்தான். 61
'தெவ் அளவு இலாத் இறை தேறல் அரிது அம்மா!
அவ்வளவு அகன்றது அரண், அண்டம் இடை ஆக
எவ் அளவின் உண்டு வெளி! ஈறும் அது!' என்னா,
வௌ; வள அரக்கனை மனக் கொள வியந்தான். 62
மடங்கல் அரிஏறும் மத மால் களிறும் நாண
நடந்து, தனியே புகுதும் நம்பி, நனி மூதூர்-
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந் திசையின் வாய் அனைய - வாயில் எதிர் கண்டான். 63
'மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைந்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ?' என நினைந்தான். 64
'ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்,
ஊழின் முறை இன்றி, உடனே புகும்; இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்,
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை' என்றான். 65
வாயில் காவலை அனுமன் வியத்தல்
வெள்ளம் ஒரு நூறொடு இரு நூறும் மிடை வீரர்,
கள்ள வினை வௌ; வலி அரக்கர், இரு கையும்
'முள் எயிறும் வாளும் உற, முன்னம் முறை நின்றார்;
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான். 66
சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,
கால வரி வில், பகழி, கப்பணம், முசுண்டி,
கோல், கணையம், நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,
பாலம், முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார். 67
அங்குசம், நெடுங் கவண், அடுத்து உடல் வசிக்கும்
வெங் குசைய பாசம், முதல் வெய்ய பயில் கையர்;
செங் குருதி அன்ன செறி குஞ்சியர், சினத்தோர்,
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார். 68
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும்
விளக்குஇனம் இருட்டினை விழுங்கி ஒளி கால,
உளக் கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்,
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான். 69
'எவ் அமரர், எவ் அவுணர், ஏவர் உளர்,-என்னே!-
கவ்வை முது வாயிலின் நெடுங் கடை கடப்பார்?
தெவ்வர் இவர்; சேமம் இது; சேவகனும் யாமும்
வௌ; அமர் தொடங்கிடின், எனாய் விளையும்?' என்றான். 70
கருங் கடல் கடப்பது அரிது அன்று; நகர் காவற்
பெருங் கடல் கடப்பது அரிது; எண்ணம் இறை பேரின்,
அருங் கடன் முடிப்பது அரிது ஆம்; அமர் கிடைக்கின்,
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள்' என நினைத்தான். 71
அனுமன் மதில்மேல் தாவிச் செல்ல முயல்தல்
'வாயில் வழி சேறல் அரிது; அன்றியும், வலத்தோர்;
ஆயில், அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால்;
காய் கதிர் இயக்கு இல் மதிலைக் கடிது தாவிப்
போய், இந் நகர் புக்கிடுவென்' என்று, ஓர் அயல் போனான். 72
இலங்கைமாதேவி அனுமனைத் தடுத்தல்
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள்-போவதின் மேலே வழி நின்றாள்,
தூண் ஆம் என்னும் தோள் உடையானை,-சுடரோனைக்
காணா வந்த கட்செவி என்னக் கனல் கண்ணாள். 73
எட்டுத் தோளாள்; நாலு முகத்தாள்; உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள்; சுழல் கண்ணாள்;
முட்டிப் போரில், மூஉலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் காலன் வலத்தாள்; சுமை இல்லாள்; 74
பாராநின்றாள், எண் திசைதோறும், 'பலர் அப்பால்
வாராநின்றாரோ?' என் மாரி மழையேபோல்
ஆராநின்றாள்; நூபுரம் அச்சம் தரு தாளாள்;
வேரா நின்றாள்; மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள்; 75
வேல், வாள், சூலம், வெங் கதை, பாசம், விளி சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட கரத்தாள்; வட குன்றம்
போல்வாள்; திங்கள்-போழின் எயிற்றாள்; புகை வாயில்
கால்வாள்; காணின், காலனும் உட்கும் கதம் மிக்காள். 76
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள்; அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள்; அருள் இல்லாள்;
அம் சுவணத்தின் உத்தரியத்தாள்; அலை ஆரும்
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்; 77
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள்; தெளி நூல் யாழ்
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள்; அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை பாடிக் களி கூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள்; 78
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
நல்லாள்; அவ் ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்;-
'நில்லாய்! நில்லாய்!' என்று உரை நேரா, நினையாமுன்
வல்லே சென்றாள்; மாருதி கண்டான், 'வருக' என்றான். 79
'ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவு இல்லாய்!
சாகா மூலம் தின்று உழல்வார்மேல் சலம் என் ஆம்?
பாகு ஆர் இஞ்சிப் பொன் மதில் தாவிப் பகையாதே;
போகாய்' என்றாள்-பொங்கு அழல் என்னப் புகை கண்ணாள். 80
அனுமனும் இலங்காதேவியும் உரையாடுதல்
களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள,
விளியா நின்றே, நீதி நலத்தின் வினை ஓர்வான்,
'அளியால் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்;
எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு?' என்றான். 81
என்னாமுன்னம், '"ஏகு" என, ஏகாது, எதிர் மாற்றம்
சொன்னாயே? நீ யாவன் அடா? தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர், எய்தற்கு; அளி உற்றால்,
உன்னால் எய்தும் ஊர்கொல் இவ் ஊர்?' என்று, உற நக்காள். 82
நக்காளைக் கண்டு, ஐயன், மனத்து ஓர் நகை கொண்டான்;
'நக்காய்! நீ யார்? ஆர் சொல வந்தாய்? உனது ஆவி
உக்கால் ஏது ஆம்? ஓடலை?' என்றாள்; 'இனி, இவ் ஊர்
புக்கால் அன்றிப் போகலென்' என்றான், புகழ் கொண்டான். 83
இலங்காதேவியின் சிந்தனை
'வஞ்சம் கொண்டான்; வானரம் அல்லன்; வரு காலன்
துஞ்சும், கண்டால் என்னை; இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்ட கண்ணுதலைப்போல் நகுகின்றான்'
நெஞ்சம் கண்டே, கல் என நின்றே, நினைகின்றாள்; 84
இருவரும் பொருதல்
'கொல்வாம்; அன்றேல், கோளுறும் இவ் ஊர்' எனல் கொண்டாள்,
'வெல்வாய் நீயேல், வேறி' என, தன் விழிதோறும்,
வல் வாய்தோறும், வெங் கனல் பொங்க, மதி வானில்
செல்வாய்' என்னா, மூவிலைவேலைச் செல விட்டாள். 85
தடித்து ஆம் என்னத் தன் எதிர் செல்லும் தழல் வேலைக்
கடித்தான், நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன்போல்,
ஒடித்தான் கையால்-உம்பர் உவப்ப, உயர் காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென,-எண்ணம் பிழையாதான். 86
இற்றுச் சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்,
மற்றும் தெய்வப் பல் படை கொண்டே மலைவாளை
உற்று, கையால், ஆயுதம் எல்லாம் ஒழியாமல்
பற்றிக் கொள்ளா, விண்ணில் எறிந்தான், பழி இல்லான். 87
வழங்கும் தெய்வப் பல் படை காணாள், மலைவான்மேல்,
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்-
கழங்கும் பந்தும் குன்றுகொடு ஆடும் கரம் ஒச்சித்
தழங்கும் செந் தீச் சிந்த அடித்தாள் - தகவு இல்லாள். 88
அனுமன் அறைய இலங்கைமாதேவி மண்ணில் வீழ்தல்
அடியாமுன்னம், அம் கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா, 'என்னே? பெண் இவள்; கொல்லின் பிழை' என்னா,
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான்; உயிரோடும்,
இடிஏறு உண்ட மால் வரைபோல், மண்ணிடை வீழ்ந்தாள். 89
விழுந்தாள் நொந்தாள்; வெங் குருதிச் செம்புனல் வெள்ளத்து
அழுந்தா நின்றாள்; நான்முகனார்தம் அருள் ஊன்றி
எழுந்தாள்; யாரும், யாரையும், எல்லா உலகத்தும்,
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று, இவை சொன்னாள்: 90
இலங்கைமாதேவி தன் வரலாறு கூறல்
'ஐய! கேள்; வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக
எய்தி, இம் மூதூர் காப்பன்; இலங்கைமாதேவி என் பேர்;
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து, இந்தச் சிறுமை செய்தேன்;
"உய்தி" என்று, அளித்திஆயின், உணர்த்துவல் உண்மை' என்றாள். 91
'எத்தனை காலம் காப்பன், யான் இந்த மூதூர்? என்று, அம்
முத்தனை வினவினேற்கு, "முரண் வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம்அதனால் தீண்டிக் காய்ந்த அன்று, என்னைக் காண்டி;
சித்திர நகரம், பின்னை, சிதைவது திண்ணம்" என்றான். 92
'அன்னதே முடிந்தது; ஐய, "அறம் வெல்லும்; பாவம் தோற்கும்"
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்; உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி என்னாப் புகழ்ந்து, அவள் இறைஞ்சிப் போனாள். 93
இலங்கையுள் அனுமன் புகுதல்
வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே; விளைவும் அஃது' என்று,
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன் மதில் தாவிப் புக்கான் -
சீரிய பாலின் வேலைச் சிறு பிரை தெறித்தது அன்னான். 94
இலங்கையின் ஒளிச் சிறப்பை வியத்தல்
வான் தொடர், மணியின் செய்த, மை அறு, மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அழகை நோக்கி,
'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ?' என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான். 95
'மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற
மெய்ம்மையை உணர்ந்து, நாணா, "மிகை" என விலங்கிப் போனான்;
இம் மதில் இலங்கை நாப்பண் எய்துமேல், தன் முன் எய்தும்
மின்மினி அல்லனோ, அவ் வெயில் கதிர் வேந்தன்? அம்மா!' 96
'பொசிவுறு பசும் பொன் குன்றில், பொன் மதில் நடுவண் பூத்து,
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு இல் இவ் இலங்கை மூதூர், ஆர் இருள் இன்மையாலோ,
நிசிசரர் ஆயினார், இந் நெடு நகர் நிருதர் எல்லாம்? 97
நகரினுள் அனுமன் மறைந்து சென்ற வகை
என்றனன் இயம்பி, 'வீதி ஏகுதல் இழுக்கம்' என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சார,
சென்றனன் - என்ப மன்னோ - தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன் புகழ் என, குலவு தோளான். 98
ஆத் துறு சாலைதோறும், ஆனையின் கூடம்தோறும்,
மாத் துறு மாடம்தோறும், வாசியின் பந்திதோறும்,
காத்து உறு சோலைதோறும், கருங் கடல் கடந்த தாளான்,
பூந்தொறும் வாவிச் செல்லும் பொறி வரி வண்டின், போனான். 99
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால், காலின் தோன்றல்,
கரியன்ஆய், வெளியன் ஆகி, செய்யன் ஆய், காட்டும்-காண்டற்கு
அரியன்ஆய், எளியன் ஆய், தன் அகத்து உறை அழகனேபோல். 100
அனுமன் பற்பல நிலையிலுள்ள அரக்கர்களைக் காணுதல்
ஈட்டுவார், தவம் அலால் மற்று ஈட்டினால், இயைவது இன்மை
காட்டினார் விதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!-
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய, பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர்; ஆடுவார் அரக்கர் மாதர். 101
கானக மயில்கள் என்ன, களி மட அன்னம் என்ன,
ஆனைக் கமலப் போது பொலிதர, அரக்கர் மாதர்,
தேன் உகு சரளச் சோலை, தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்,
வானவர் மகளிர் ஆட்ட, மஞ்சனம் ஆடுவாரை- 102
'இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ்,
அலத்தகத் தளிர்க்கை நோவ, அளந்து எடுத்து அமைந்த பாடல்
கலக்குற முழங்கிற்று' என்று சேடியர் கன்னிமார்கள்,
மலர்க்கையால், மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை- 103
சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை,
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை- 104
திருத்திய பளிக்கு வேதி, தௌ;ளிய வேல்கள் என்ன,
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கருங் கயல், செம்மை காட்ட,
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம
அருத்திய பயிர்க்கு நீர்போல், அரு நறவு அருந்துவாரை- 105
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள,
தூதுளங் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர் தாமும், ஒருவர்பால் ஒருவர் வைத்த
காதல்அம் கள் உண்டார்போல், முறை முறை களிக்கின்றாரை- 106
வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப் புனை நறுங் கலவை பூசி,
அற்புத வடிக் கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொற்
கற்பகம் கொடுக்க வாங்கி, கலன் தெரிந்து அணிகின்றாரை- 107
புலி அடு மதுகை மைந்தர் புதுப் பிழை உயிரைப் புக்கு
நலிவிட, அமுத வாயால் நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,
மெலிவுடை மருங்குல் மின்னின் அலமர, சிலம்பு விம்மி
ஒலிபட, உதைக்கும்தோறும், மயிர்ப் புளகு உறுகின்றாரை- 108
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து, வாய் வெண்மை ஊறி,
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப, வேர் பொடிப்ப, தூய
வெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கி, கணவரைக் கனல்கின்றாரை- 109
ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110
நலன் உறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய, முள் இலா முளரிச் செங் கேழ்
மலர்மிசை மலர் பூத்தென்ன, மலர்க்கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை- 111
ஏதிஅம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை, உயிர் இலா உடலின் சாய்வார்,
மா துயர்க் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி, உயிர் வந்து துடிக்கின்றாரை- 112
சங்கொடு, சிலம்பும், நூலும், பாத சாலகமும் தாழ,
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப, இல் உறை தெய்வம் போற்றி,
கொங்கு அலர் கூந்தல், செவ் வாய், அரம்பையர் பாணி கொட்டி
மங்கல கீதம் பாட, மலர்ப் பலி வகுக்கின்றாரை- 113
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய, யாணர்க்
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழை தொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரி
மழை தொடர் மஞ்ஞை என்ன, விழாவொடு வருகின்றாரை- 114
பள்ளியில், மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி,
ஒள்ளிய கலவிப் பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,
மௌ;ளவே இமையை நீக்கி, அஞ்சன இழுது வேய்ந்த
கள்ள வாள் நெடுங் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை- 115
ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள, ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு, அருங் கதவு அடைக்கின்றாரை- 116
கின்னர மிதுனம் பாட, கிளர் மழை கிழித்துத் தோன்றும்
மில் என, தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர் சுற்றிப் பலாண்டு இசை பரவ, பண்ணைப்
பொன் நகர் வீதிதோறும், புது மனை புகுகின்றாரை- 117
கோவையும் குழையும் மின்ன, கொண்டலின் முரசம் ஆர்ப்ப,
தேவர் நின்று ஆசி கூற, முனிவர் சோபனங்கள் செப்ப,
பாவையர் குழாங்கள் சூழ, பாட்டொடு வான நாட்டுப்
பூவையர் பலாண்டு கூற, புது மணம் புணர்கின்றாரை- 118
அனுமன் கும்பகருணனைக் காணுதல்
இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சை
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-
மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,
கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். 119
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது; உம்பரின்
வாசவன் மணி முடி கவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது; இருளை எண் வகை
ஆசையின் நிலைகெட, அலைக்கல் ஆன்றது. 120
அன்னதன் நடுவண், ஓர் அமளி மீமிசை,
பன்னக அரசு என, பரவைதான் என,
துன் இருள் ஒருவழித் தொக்கது ஆம் என,
உன்ன அருந் தீவினை உருக் கொண்டென்னவே, 121
முன்னிய கனை கடல் முழுகி, மூவகைத்
தன் இயல் கதியொடு தழுவி, தாது உகு
மன் நெடுங் கற்பக வனத்து வைகிய
இன் இளந் தென்றல் வந்து இழுகி ஏகவே. 122
வானவர் மகளிர் கால் வருட, மா மதி
ஆனனம் கண்ட, மண்டபத்துள் ஆய் கதிர்க்
கால் நகு, காந்தம் மீக் கான்ற காமர் நீர்த்
தூ நிற நறுந் துளி முகத்தில் தூற்றமே. 123
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்,
வாசலின் புறத்திடை நிறுவி, வன்மையால்,
நாசியின் அளவையின் நடத்த, கண்டவன்
கூசினன்; குதித்தனன், விதிர்த்த கையினான். 124
பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
கேழ் இல் வெங் கொடியவன் உயிர்ப்பு-கேடு இலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே. 125
பகை என, மதியினைப் பகுத்து, பாடு உற
அகை இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என,
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்புப் பொங்கிய
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே, 126
தடை புகு மந்திரம் தகைந்த நாகம்போல்,
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் -
கடை யுக முடிவு எனும் காலம் பார்த்து, அயல்
புடை பெயரா நெடுங் கடலும் போலவே. 127
|