Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > 1 கடல் தாவு படலம்  > 2 ஊர் தேடு படலம் > 3 காட்சிப் படலம் > 4 உருக் காட்டு படலம் >5 சூடாமணிப் படலம்  > 6 பொழில் இறுத்த படலம் > 7 கிங்கார் வதைப் படலம் > 8 சம்புமாலி வதைப் படலம் > 9 பஞ்ச சேனாதிபதிகள் வதைப் படலம் > 10 அக்ககுமாரன் வதைப் படலம் > 11 பாசப் படலம் > 12 பிணி வீட்டு படலம் > 13 இலங்கை எரியூட்டு படலம் > 14 திருவடி தொழுத படலம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் - 9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்


படைத் தலைவர் ஐவரும் தம்மை ஏவுமாறு வேண்ட, இராவணன் இசைதல்

'சிலந்தி உண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல், திறலோய்!
கலந்த போரில் நின் கண்புலக் கடுங் கனல் கதுவ,
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்கப்
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே, திசைப் பூட்கை? 1

'இலங்கு வெஞ் சினத்து அம் சிறை எறுழ் வலிக் கலுழன்
உலங்கின்மேல் உருத்தென்ன, நீ குரங்கின்மேல் உருக்கின்,
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து, அல்லும் தன் பகலும்
குலுங்கும் வன் துயர் நீங்குமால், வெள்ளியங் குன்றம். 2

'உறுவது என்கொலோ? உரன் அழிவு என்பது ஒன்று உடையார்
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர், கேட்கிலர், பெயர்ந்தார்;
சிறுமை ஈது ஒப்பது யாது? நீ குரங்கின்மேல் செல்லின்,
முறுவல் பூக்கும் அன்றே, நின்ற மூவர்க்கும் முகங்கள்? 3

'அன்றியும், உனக்கு ஆள் இன்மை தோன்றுமால், அரச!
வென்றி இல்லவர் மெல்லியோர்தமைச் செல விட்டாய்;
நன்றி இன்று ஒன்று காண்டியேல், எமைச் செல நயத்தி'
என்று, கைதொழுது இறைஞ்சினர்; அரக்கனும் இசைந்தான். 4

படைத் தலைவர்கள் ஆணைப்படி படைகள் திரளுதல்

உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார்,
திலகம் மண் உற வணங்கினர்; கோயிலின் தீர்ந்தார்;
'அலகு இல் தேர், பரி, யானையோடு, அடைந்த போர் அரக்கர்,
தொலைவு இல் தானையைக் கதுமென வருக' எனச் சொன்னார். 5

'ஆனைமேல் முரசு அறைக' என, வள்ளுவர் அறைந்தார்;
பேன வேலையின் புடை பரந்தது, பெருஞ்சேனை;
சோனை மா மழை முகில் எனப் போர்ப் பணை துவைத்த்
மீன வான் இடு வில் எனப் படைக்கலம் மிடைந்த. 6

தானை மாக் கொடி, மழை பொதுத்து உயர் நெடுந் தாள,
மானம் மாற்ற அரு மாருதி முனிய, நாள் உலந்து
போன மாற்றலர் புகழ் எனக் கால் பொரப் புரண்ட்
வானயாற்று வெண் திரை என வரம்பு இல பரந்த. 7

விரவு பொற் கழல் விசித்தனர், வெரிந் உற்று விளங்கச்
சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர், சமையக்
கருவி புக்கனர், அரக்கர்; மாப் பல்லணம் கலினப்
புரவி இட்ட் தேர் பூட்டின் பருமித்த பூட்கை. 8

ஆறு செய்தன ஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச்
சேறு செய்தன தேர்களின் சில்லி; அச் சேற்றை
நீறு செய்தன புரவியின் குரம்; மற்று அ(ந்) நீற்றை
வீறு செய்தன, அப் பரிக் கலின மா விலாழி. 9

வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்,
முழங்கு வெங் களிற்று அதிர்ச்சியும், மொய் கழல் ஒலியும்,
தழங்கு பல்லியத்து அமலையும், கடையுகத்து, ஆழி
முழங்கும் ஓதையின், மும் மடங்கு எழுந்தது முடுகி. 10

ஆழித் தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே
சூழிப் பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின் தொகைய,
ஊழிக் காற்று அன்ன புரவி; மற்று அவற்றினுக்கு இரட்டி,
பாழித் தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி. 11

கூய்த் தரும்தொறும், தரும்தொறும், தானை வெங் குழுவின்
நீத்தம், வந்து வந்து, இயங்கிடும் இடன் இன்றி நெருங்க,
காய்த்து அமைந்த வெங் கதிர்ப் படை, ஒன்று ஒன்று கதுவி,
தேய்த்து எழுந்தன, பொறிக் குலம், மழைக் குலம் தீய. 12

அரக்க வீரரை அவர்தம் சுற்றத்தார் தடுத்து இரங்குதல்

தொக்கது ஆம் படை, சுரி குழல் மடந்தையர், தொடிக் கை
மக்கள், தாயர், மற்று யாவரும் தடுத்தனர், மறுகி;
'ஒக்க ஏகுதும், குரங்கினுக்கு உயிர் தர் ஒருவர்
புக்கு மீண்டிலர்' என்று, அழுது இரங்கினர், புலம்பி. 13

பஞ்ச சேனாபதிகள் சேனையோடு செல்லுதல்

கை பரந்து எழு சேனைஅம் கடலிடைக் கலந்தார்;
செய்கைதாம் வரும் தேரிடைக் கதிர் எனச் செல்வார்-
மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார்,
ஐவரும், பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார். 14

முந்து இயம் பல கறங்கிட, முறை முறை பொறிகள்
சிந்தி, அம்பு உறு கொடுஞ் சிலை உரும் எனத் தெறிப்பார்;
வந்து இயம்புறு முனிவர்க்கும், அமரர்க்கும், வலியார்;
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து, இயைந்தார். 15

வாசவன் வயக் குலிசமும், வருணன் வன் கயிறும்,
ஏசு இல் தென்திசைக்கிழவன் தன் எரி முனை எழுவும்,
ஈசன் வன் தனிச் சூலமும், என்று இவை ஒன்றும்
ஊசி போழ்வது ஓர் வடுச் செயா, நெடும் புயம் உடையார். 16

சூர் தடிந்தவன் மயிலிடைப் பறித்த வன் தொகை,
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடைப் பறித்த
மூரி வெஞ் சிறகு, இடை இட்டுத் தொடுத்தன முறுக்கி,
வீர சூடிகை நெற்றியின் அயல் இட்டு விசித்தார். 17

பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார்;
நின்ற வன் திசை நெடுங் களி யானையின் நெற்றி
மின் திணிந்தன ஓடையின் வீர பட்டத்தர். 18

நீதி நெடுங் கிழவனை நெருக்கி, நீள் நகர்ப்
பதியொடும் பெருந் திருப் பறித்த பண்டை நாள்,
'விதி' என, அன்னவன் வெந்நிட்டு ஓடவே,
பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார். 19

இந்திரன் இசை இழந்து ஏகுவான், இகல்
தந்தி முன் கடாவினன் முடுக, தாம் அதன்
மந்தர வால் அடி பிடித்து, 'வல்லையேல்
உந்துதி, இனி' என, வலிந்த ஊற்றத்தார். 20

'பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி, நின்
கோல் நினைத்திலன்' என, உலகம் கூறலும்,
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான்,
காலனை, காலினில், கையில், கட்டினார். 21

மலைகளை நகும் தட மார்பர்; மால் கடல்
அலைகளை நகும் நெடுந் தோளர்; அந்தகன்
கொலைகளை நகும் நெடுங் கொலையர்; கொல்லன் ஊது
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார். 22

தோல் கிளர் திசைதொறும் உலகைச் சுற்றிய
சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும்,
கால் கிளர்ந்து ஓங்கினும், காலம் கையுற
மால் கடல் கிளரினும், சரிக்கும் வன்மையார். 23

அரக்கர் படையை அனுமன் நோக்குதல்

இவ் வகை ஐவரும் எழுந்த தானையர்,
மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார்;
கையொடு கைஉற அணியும் கட்டினார்;
ஐயனும், அவர்நிலை, அமைய நோக்கினான். 24

அரக்கர்தம் ஆற்றலும், அளவு இல் சேனையின்
தருக்கும், அம் மாருதி தனிமைத் தன்மையும்,
போருக்கென நோக்கிய புரந்தராதியர்,
இரக்கமும், அவலமும், துளக்கும், எய்தினார். 25

'இற்றனர் அரக்கர் இப் பகலுளே' எனா,
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான்,
முற்றுறச் சுலாவிய முடிவு இல் தானையைச்
சுற்றுற நோக்கி, தன் தோளை நோக்கினான். 26

அனுமனைக் கண்ட அரக்க வீரரின் ஐயப்பாடு

'புன் தலைக் குரங்கு இது போலுமால் அமர்
வென்றது! விண்ணவர் புகழை வேரொடும்
தின்ற வல் அரக்கரைத் திருகித் தின்றதால்!'
என்றனர், அயிர்த்தனர், நிருதர் எண்ணிலார். 27

அனுமன் பெரிய உருக் கொள்ளுதல்

ஆயிடை, அனுமனும், அமரர்கோன் நகர்
வாயில்நின்று அவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச்
செயொளித் தோரணத்து உம்பர், சேண் நெடு
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான். 28

வீங்கிய வீரனை வியந்து நோக்கிய
தீங்கு இயல் அரக்கரும், திருகினார் சினம்,
வாங்கிய சிலையினர், வழங்கினார் படை;
ஏங்கிய சங்குஇனம்; இடித்த பேரியே! 29

எறிந்தனர், எய்தனர், எண் இறந்தன
பொறிந்து எழு படைக்கலம், அரக்கர் போக்கினார்;
செறிந்தன மயிர்ப்புறம்; தினவு தீர்வுறச்
சொறிந்தனர் என இருந்து, ஐயன் தூங்கினான். 30

எழுவை ஏந்தி அனுமன் பொருதல்

உற்று, உடன்று, அரக்கரும், உருத்து உடற்றினர்;
செற்றுற நெருக்கினர்; 'செருக்கும் சிந்தையர்
மற்றையர் வரும் பரிசு, இவரை, வல் விரைந்து
எற்றுவென்' என, எழு, அனுமன் ஏந்தினான். 31

ஊக்கிய படைகளும், உருத்த வீரரும்,
தாக்கிய பரிகளும், தடுத்த தேர்களும்,
மேக்கு உயர் கொடியுடை மேக மாலைபோல்
தூக்கிய கரிகளும், புரள நூக்கினான். 32

அனுமன் செய்த அதிசயப் போர்

வார் மதக் கரிகளின் கோடு வாங்கி, மாத்
தேர் படப் புடைக்கும்; அத் தேரின் சில்லியால்,
வீரரை உருட்டும்; அவ் வீரர் வாளினால்,
தாருடைப் புரவியைத் துணியத் தாக்குமால். 33

இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி, வேறு
இரண்டு மால் யானை பட்டு உருள, எற்றுமால்;
இரண்டு மால் யானை கக இரண்டின் ஏந்தி, வேறு
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால். 34

மா இரு நெடு வரை வாங்கி, மண்ணில் இட்டு,
ஆயிரம்-தேர் பட அரைக்குமால்; அழித்து,
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து,
'ஏ' எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால். 35

உதைக்கும் வெங் கரிகளை; உழக்கும் தேர்களை;
மிதிக்கும் வன் புரவியை; தேய்க்கும் வீரiர்
மதிக்கும் வல் எழுவினால்; அரைக்கும் மண்ணிடை;
குதிக்கும் வன் தலையிடை; கடிக்கும்; குத்துமால். 36

விசையின் மான் தேர்களும், களிறும் விட்டு, அகல்
திசையும் ஆகாயமும் செறிய, சிந்துமால்;
குசை கொள் பாய் பரியொடும், கொற்ற வேலொடும்,
பிசையுமால் அரக்கரை, பெருங் கரங்களால். 37

தீ உறு பொறியுடைச் செங் கண் வெங் கைமா,
மீ உற, தடக் கையால் வீரன் வீசுதோறு,
ஆய் பெருங் கொடியன, கடலின் ஆழ்வன,
பாயுடை நெடுங் கலம் படுவ போன்றவே. 38

தாரொடும், உருளொடும், தடக் கையால் தனி
வீரன் விட்டு எறிந்தன, கடலின் வீழ்வன,
வாரியின் எழும் சுடர்க் கடவுள் வானவன்
தேரினை நிகர்த்தன, புரவித் தேர்களே. 39

மீ உற விண்ணிடை முட்டி வீழ்வன,
ஆய் பெருந் திரைக் கடல் அழுவத்து ஆழ்வன,
ஓய்வில புரவி, வாய் உதிரம் கால்வன,
வாயிடை எரியுடை வடவை போன்றவை. 40

வரிந்து உற வல்லிதின் சுற்றி, வாலினால்
விரிந்து உற வீசலின், கடலின் வீழ்குநர்
திரிந்தனர்-செறி கயிற்று அரவினால் திரி
அருந் திறல் மந்தரம் அனையர் ஆயினார். 41

வீரன் வன் தடக் கையால் எடுத்து வீசிய
வார் மதக் கரியினின், தேரின், வாசியின்,
மூரி வெங் கடல் புகக் கடிதின் முந்தின,
ஊரின் வெங் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின. 42

பிறைக் குடை எயிற்றின, பிலத்தின் வாயின,
கறைப் புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின,
உறைப் புறு படையின, உதிர்ந்த யாக்கைகள்,
மறைத்தன, மகர தோரணத்தை, வான் உற. 43

குன்று உள் மரம் உள் குலம் கொள் பேர் எழு
ஒன்று அல, பல உள் உயிர் உண்பான் உளன்;
அன்றினர் பலர் உளர்; ஐயன் கை உள்
பொன்றுவது அல்லது, புறத்துப் போவரோ? 44

முழு முதல், கண்ணுதல், முருகன் தாதை, கைம்
மழு எனப் பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினின், பொலங் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினை, களம் படக் கொன்று நீக்கினான். 45

தானையின் அழிவு கண்டு, ஐவரும் அனுமனைப் பொருதல்

உலந்தது தானை; உவந்தனர் உம்பர்;
அலந்தலை உற்றது, அவ் ஆழி இலங்கை;
கலந்தது, அழும் குரலின் கடல் ஓதை;
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார். 46

ஈர்த்து எழு செம்புனல் எக்கர் இழுக்க,
தேர்த் துணை ஆழி அழுந்தினர், சென்றார்;
ஆர்த்தனர்; ஆயிரம் ஆயிரம் அம்பால்
தூர்த்தனர்; அஞ்சனை தோன்றலும் நின்றான். 47

எய்த கடுங் கணை யாவையும், எய்தா
நொய்து அகலும்படி, கைகளின் நூறா,
பொய்து அகடு ஒன்று பொருந்தி, நெடுந் தேர்
செய்த கடும் பொறி ஒன்று, சிதைத்தான். 48

உற்று உறு தேர் சிதையாமுன் உயர்ந்தான்,
முற்றின வீரனை, வானில் முனிந்தான்;
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான்,
எற்றினன்; அஃது அவன் வில்லினில் ஏற்றான். 49

ஐவருள் ஒருவன் அமரில் இறத்தல்

முறிந்தது மூரி வில்; அம் முறியேகொடு,
எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான்;
அறிந்த மனத்தவன், அவ் எழுவே கொடு
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான். 50

சேனைத் தலைவர் நால்வருடன் மாருதி செய்த கடும் போர்

ஒழிந்தவர்-நால்வரும், ஊழி உருத்த
கொழுந்துறு தீ என, வெய்துறு கொட்பர்,
பொழிந்தனர், வாளி; புகைந்தன கண்கள்;
விழுந்தன சோரி, அவ் வீரன் மணித் தோள். 51

ஆயிடை வீரனும், உள்ளம் அழன்றான்;
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான்;
மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான்;
தீயவர் அச் சிலையைப் பொடிசெய்தார். 52

நால்வருள் ஒருவன் மிதிபட்டு மாய்ந்தான்

தொடுத்த, தொடுத்த, சரங்கள் துரந்த்
அடுத்து, அகன் மார்பின் அழுந்தி, அகன்ற்
மிடல் தொழிலான், விடு தேரொடு நொய்தின்
எடுத்து, ஒருவன்தனை, விண்ணில் எறிந்தான். 53

ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம்
நீந்தியது; ஓடி நிமிர்ந்தது; வேகம்
ஓய்ந்தது; வீழ்வதன்முன், உயர் பாரில்
பாய்ந்தவன்மேல், உடன் மாருதி பாய்ந்தான். 54

மதித்த களிற்றினில் வாள் அரிஏறு
கதித்தது பாய்வதுபோல், கதி கொண்டு
குதித்தனன்; மால் வரை மேனி குழம்ப
மிதித்தனன்-வெஞ் சின வீரருள் வீரன். 55

எஞ்சிய மூவரும் முனைந்து பொருதல்

மூண்ட சினத்தவர் மூவர் முனிந்தார்;
தூண்டிய தேரர், சரங்கள் துரந்தார்;
வேண்டிய வெஞ் சமம் வேறு விளைப்பார்,
'யாண்டு இனி ஏகுதி?' என்று, எதிர் சென்றார். 56

இருவரைத் தேருடன் எடுத்து, மாருதி விண்ணில் வீசுதல்

திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்,
அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச,
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில்
இரண்டை இரண்டு கையின்கொடு எழுந்தான். 57

தூக்கின பாய் பரி; சூதர் உலைந்தார்;
வீங்கின தோளவர் விண்ணின் விசைத்தார்;
ஆங்கு, அது கண்டு, அவர் போய் அகலாமுன்,
ஓங்கினன் மாருதி, ஒல்லையின் உற்றான். 58

விண்னில் உற்ற இருவரும், அனுமனுடன் மற்போர் செய்து மடிதல்

கால் நிமிர் வெஞ் சிலை கையின் இறுத்தான்;
ஆனவர் தூணியும், வாளும், அறுத்தான்;
ஏனைய வெம் படை இல்லவர், எஞ்சார்,
வானிடை நின்று, உயர் மல்லின் மலைந்தார். 59

வெள்ளை எயிற்றர், கறுத்து உயர் மெய்யர்,
பிள்ள விரித்த பெரும் பில வாயர்,
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார்;
ஒள்ளிய வீரன், அருக்கனை ஒத்தான். 60

தாம்பு என வாலின் வரிந்து, உயர் தாளோடு
ஏம்பல் இலார்இரு தோள்கள் இறுத்தான்;
பாம்பு என நீங்கினர், பட்டனர் வீழ்ந்தார்-
ஆம்பல் நெடும் பகைபோல் அவன் நின்றான். 61

எஞ்சிய ஒருவனையும் அனுமன் ஒழித்தல்

நின்றனன் ஏனையன்; நின்றது கண்டான்;
குன்றிடை வாவுறு கோள் அரி போல,
மின் திரி வன் தலைமீது குதித்தான்;
பொன்றி, அவன், புவி, தேரொடு புக்கான். 62

வஞ்சமும் களவும் வெஃகி, வழி அலா வழிமேல் ஓடி,
நஞ்சினும் கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய நீரார்,
வெஞ் சின அரக்கர் ஐவர்; ஒருவனே!-வெல்லப்பட்டார்
அஞ்சு எலும் புலன்கள் ஒத்தார்; அவனும், நல் அறிவை ஒத்தான். 63

நெய் தலை உற்ற வேற் கை நிருதர், அச் செருவில் நேர்ந்தார்,
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை; உள்ளார்,
கை தலைப் பூசல் பொங்கக் கடுகினர்; காலன் உட்கும்
ஐவரும் உலந்த தன்மை, அனைவரும் அமையக் கண்டார். 64

படைத் தலைவர் இறந்ததை காவலர் இராவணனுக்கு அறிவித்தல்

'இறுக்குறும், இன்னே நம்மை, குரங்கு' என இரங்கி ஏங்கி,
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி,
உறுக்குறும் சொல்லான், ஊழித் தீ என உலகம் ஏழும்
சுறுக் கொள நோக்குவான்தன் செவித் தொளை தீய, சொன்னார். 65

'தானையும் உலந்தது; ஐவர் தலைவரும் சமைந்தார்; தாக்கப்
போனவர் தம்மில் மீண்டோ ம் யாம், அமர் புரிகிலாமை;
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி,
ஏனையர் இன்மை, சோம்பி இருந்தது, அக் குரங்கும்' என்றார். 66

மிகைப் பாடல்கள்

பண் மணிக் குல யானையின் புடைதொறும் பரந்த
ஒண் மணிக் குலம் மழையிடை உரும் என ஒலிப்ப,
கண் மணிக் குலம் கனல் எனக் காந்துவ் கதுப்பின்
தண் மணிக் குலம் மழை எழும் கதிர் எனத் தழைப்ப. 12-1

என்று அவர் ஏவு சரங்கள் இறுத்தே,
'பொன்றுவிர் நீர், இது போது' என, அங்கு ஓர்
குன்று இரு கைக் கொடு எறிந்து, அவர் கொற்றம்
இன்று முடிந்தது எனத் தனி ஆர்த்தான். 56-1

அப்பொழுது அங்கு அவர் ஆயிர கோடி
வெப்பு அடை வெஞ் சரம் வீசினர்; வீசி,
துப்புறு வெற்பு அதனைத் துகள் செய்தே,
மெய்ப்படு மாருதிமேல் சரம் விட்டார். 56-2

விட்ட சரத்தை விலக்கி, அ(வ்) வீரன்,
வட்ட விசும்புறு மா மரம் வாங்கித்
தொட்டு எறிதற்கு மு(ன்)னே, துகளாகப்
பட்டிட, வெய்யவர் பாணம் விடுத்தார். 56-3



 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home