Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > 1 கடல் தாவு படலம்  > 2 ஊர் தேடு படலம் > 3 காட்சிப் படலம் > 4 உருக் காட்டு படலம் >5 சூடாமணிப் படலம்  > 6 பொழில் இறுத்த படலம் > 7 கிங்கார் வதைப் படலம் > 8 சம்புமாலி வதைப் படலம் > 9 பஞ்ச சேனாதிபதிகள் வதைப் படலம் > 10 அக்ககுமாரன் வதைப் படலம் > 11 பாசப் படலம் > 12 பிணி வீட்டு படலம் > 13 இலங்கை எரியூட்டு படலம் > 14 திருவடி தொழுத படலம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் - 13. இலங்கை எரியூட்டு படலம்


மாளிகைகளில் தீப் பற்ற, நகர மாந்தர் பூசலிட்டு ஓடுதல்

கொடியைப் பற்றி, விதானம் கொளுத்தியே,
நெடிய தூணைத் தழுவி, நெடுஞ் சுவர்
முடியச் சுற்றி, முழுதும் முருக்கிற்றால்-
கடிய மா மனைதோறும் கடுங் கனல். 1

வாசல் இட்ட எரி மணி மாளிகை
மூச முட்டி, முழுதும் முருக்கலால்,-
ஊசலிட்டென ஓடி, உலைந்து உளை
பூசலிட்ட - இயல் புரம் எலாம். 2

வனிதையர் வருந்திய வகை

மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை,
பிணியின் செஞ் சுடர்க் கற்றை பெருக்கலால்,
திணி கொள் தீ உற்றது, உற்றில, தேர்கிலார்
அணி வளைக் கை நல்லார், அமைந்துளார். 3

வானகத்தை நெடும் புகை மாய்த்தலால்,
போன திக்கு அறியாது புலம்பினார்-
தேன் அகத்த மலர் பல சிந்திய
கானகத்து மயில் அன்ன காட்சியார். 4

தலை முடியில் தீப் பற்றியதும் பற்றாததும் தெரியாமை

கூய், கொழும் புனல், குஞ்சியில், கூந்தலில்,
மீச் சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்த தன்மையினால், எரி இன்மையும்,
தீக் கொளுந்தினவும், தெரிகின்றிலார். 5

தீயும் புகையும் ஓங்கிப் பரவுதல்

இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்,
சொல்லின் தீர்ந்தன போல்வன, தொல் உருப்
புல்லிக் கொண்டன-மாயைப் புணர்ப்பு அறக்
கல்லி, தம் இயல்பு எய்தும் கருத்தர்போல். 6

ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய், அடி
தாய் அளந்து, உலகங்கள் தரக் கொள்வான்,
மீ எழுந்த கரியவன் மேனியின்,
போய் எழுந்து பரந்தது-வெம் புகை. 7

நீலம் நின்ற நிறத்தன, கீழ் நிலை
மாலின் வெஞ் சின யானையை மானுவ்
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால்
தோல் உரிந்து கழன்றன, தோல் எலாம். 8

மீது இமம் கலந்தாலன்ன வெம் புகை,
சோதி மங்கலத் தீயொடு சுற்றலால்,
மேதி மங்குலின் வீழ் புனல், வீழ் மட
ஓதிமங்களின், மாதர் ஒதுங்கினார். 9

பொடித்து எழுந்த பெரும் பொறி போவன
இடிக் குலங்களின் வீழ்தலும், எங்கணும்
வெடித்த் வேலை வெதும்பிட, மீன் குலம்
துடித்து, வெந்து, புலர்ந்து, உயிர் சோர்ந்தவால். 10

பருகு தீ மடுத்து, உள்ளுறப் பற்றலால்,
அருகு நீடிய ஆடகத் தாரைகள்
உருகி, வேலையின் ஊடு புக்கு உற்றன,
திருகு பொன் நெடுந் தண்டின் திரண்டவால். 11

உரையின் முந்து உலகு உண்ணும் எரிஅதால்,
வரை நிவந்தன பல் மணி மாளிகை
நிரையும் நீள் நெடுஞ் சோலையும் நிற்குமோ?
தரையும் வெந்தது, பொன் எனும் தன்மையால். 12

கல்லினும் வலிதாம் புகைக் கற்றையால்
எல்லி பெற்றது, இமையவர் நாடு; இயல்
வல்லி கோலி நிவந்தன் மா மணிச்
சில்லியோடும் திரண்டன, தேர் எலாம். 13

பேய மன்றினில் நின்று, பிறங்கு எரி,
மாயர் உண்ட நறவு மடுத்ததால்;
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால்,
தீயர்; அன்றியும், தீமையும் செய்வரால். 14

தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல,
வழு இல் வேலை உலையின் மறுகின்
எழு கொழுஞ் சுடர்க் கற்றை சென்று எய்தலால்,
குழுவு தண் புனல் மேகம் கொதிக்கவே. 15

பூக் கரிந்து, முறிபொறி ஆய், அடை
நாக் கரிந்து, சினை நறுஞ் சாம்பர் ஆய்,
மீக் கரிந்து நெடும் பணை, வேர் உறக்
காக் கரிந்து, கருங் கரி ஆனவே. 16

தளை கொளுத்திய தாவு எரி, தாமணி
முளை கொளுத்தி, முகத்திடை மொய்த்த பேர்
உளை கொளுத்த, உலந்து உலைவு உற்றன-
வளை குளப்பின் மணி நிற வாசியே. 17

அரக்கரும் அரக்கியரும் உற்ற அவலம்

எழுந்து பொன் தலத்து ஏறலின், நீள் புகைக்
கொழுந்து சுற்ற, உயிர்ப்பு இலர், கோளும் உற
அழுந்து பட்டுளர் ஒத்து, அயர்ந்தார், அழல்
விழுந்து முற்றினர்-கூற்றை விழுங்குவார். 18

கோசிகத் துகில் உற்ற கொழுங் கனல்
தூசின் உத்தரிகத்தொடு சுற்றுறா,
வாச மைக் குழல் பற்ற மயங்கினார்-
பாசிழைப் பரவைப் படர் அல்குலார். 19

நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண, நிருதர்,
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார்,
புலவியின் கரை கண்டவர், அமுது உகப் புணரும்
கலவியின் சுரை கண்டிலர், மண்டினர் கடல்மேல். 20

பஞ்சரத்தொடு, பசு நிறக் கிளி வெந்து பதைப்ப,
அஞ்சனக் கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப,
குஞ்சரத்து அன கொழுநரைத் தழுவுறும் கொதிப்பால்,
மஞ்சிடைப் புகும் மின் என, புகையிடை மறைந்தார். 21

வரையினைப் புரை மாடங்கள் எரி புக, மகளிர்,
புரை இல் பொன் கலன் வில்லிட விசும்பிடைப் போவார்,
கரை இல் நுண் புகைப் படலையில் கரந்தனர்; கலிங்கத்
திரையினுள் பொலி சித்திரப் பாவையின் செயலார். 22

நந்தனவனங்கள் முதலியன வெந்தொழிந்த காட்சி

அகருவும் நறுஞ் சாந்தமும் முதலிய, அனேகம்
புகர் இல் நல் மரத்து உறு வெறி, உலகு எலாம் போர்ப்ப,
பகரும் ஊழியில் கால வெங் கடுங் கனல் பருகும்
மகர வேலையின், வெந்தன-நந்தனவனங்கள். 23

மினல் பரந்து எழு கொழுஞ் சுடர் உலகு எலாம் விழுங்கி,
நினைவு அரும் பெருந் திசை உற விரிகின்ற நிலையால்,
சினைப் பரந்து எரி சேர்ந்திலா நின்றவும், சில வெங்
கனல் பரந்தவும், தெரிகில -கற்பகக் கானம். 24

மூளும் வெம் புகை விழுங்கலின், சுற்றுற முழு நீர்
மாளும் வண்ணம், மா மலை நெடுந் தலைதொறும் மயங்கிப்
பூளை வீய்ந்தன்ன போவன, புணரியில் புனல் மீன்
மீள, யாவையும் தெரிந்தில, முகில் கணம் விசைப்ப. 25

மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளியங்கிரியும்,
ஒக்க வெற்பினோடு; அன்னமும் காக்கையின் உருவ்
பக்க வேலையின் படியது, பாற்கடல்; முடிவில்
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா. 26

கனலுக்குப் பயந்து கடலில் வீழ்தல்

கரிந்து சிந்திடக் கடுங் கனல் தொடர்ந்து உடல் கதுவ,
உரிந்த மெய்யினர், ஓடினர், நீரிடை ஒளிப்பார்,
விரிந்த கூந்தலும், குஞ்சியும் மிடைதலின், தானும்
எரிந்து வேகின்ற ஒத்தது, எறி திரைப் பரவை. 27

மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை
அருங் கையால் பற்றி, மற்றொரு மகவு பின் அரற்ற,
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறுக் கொள நீங்கிக்
கருங் கடல்தலை வீழ்ந்தனர், அரக்கியர், கதறி. 28

ஆயுதசாலையில் படைக்கலத் திரள்கள் அழிதல்

வில்லும், வேலும், வெங் குந்தமும் முதலிய விறகாய்
எல்லுடைச் சுடர் எனப் புகர் எஃகு எலாம் உருகி,
தொல்லை நல் நிலை தொடர்ந்த, பேர் உணர்வு அன்ன தொழிலால்
சில்லி உண்டையின் திரண்டன படைக்கலத் திரள்கள். 29

எரி பற்ற, யானைகள் ஓடுதல்

செய் தொடர்க் கன வல்லியும், புரசையும், சிந்தி,
நொய்தின், இட்ட வன் தறி பறித்து, உடல் எரி நுழைய,
மொய் தடச் செவி நிறுத்தி, வால் முதுகினில் முறுக்கி,
கை எடுத்து அழைத்து ஓடின - ஓடை வெங் களி மா. 30

பறவைகள் கடலில் விழுந்து மாய்தல்

வெருளும் வெம் புகைப் படலையின் மேற்செல வெருவி,
இருளும் வெங் கடல் விழுந்தன, எழுந்தில, பறவை;
மருளின் மீன் கணம் விழுங்கிட, உலந்தன-மனத்து ஓர்
அருள் இல் வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தவர் அனைய. 31

இராவணன் மனையில் தீப் பற்றுதல்

நீரை வற்றிடப் பருகி, மா நெடு நிலம் தடவி,
தாருவைச் சுட்டு, மலைகளைத் தழல்செய்து, தனி மா
மேருவைப் பற்றி எரிகின்ற கால வெங் கனல்போல்,
ஊரை முற்றுவித்து, இராவணன் மனை புக்கது - உயர் தீ. 32

வான மாதரும், மற்றுள மகளிரும், மறுகிப்
போன போன திக்கு அறிகிலர், அனைவரும் போனார்;
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர்; இலங்கைக்
கோன் அவ் வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைந்தார். 33

நாவியும், நறுங் கலவையும், கற்பகம் நக்க
பூவும், ஆரமும், அகிலும், என்று இனையன புகைய,
தேவு தேன் மழை செறி பெருங் குலம் எனத் திசையின்
பாவைமார் நறுங் குழல்களும், பரிமளம் கமழ்ந்த. 34

சூழும் வெஞ் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெஞ் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்-
ஊழி வெங் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்தென-எரிந்தன, நெடு நிலை ஏழும். 35

பொன் திருத்தியது ஆதலால், இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலைக் கோயில்,
நின்று சுற்று எரி பருகிட, நெகிழ்வுற உருகி,
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என, தெரிந்த. 36

இராவணன் முதலியோர் வெளியேற, இலங்கையை எரியுண்ணல்

அனைய காலையில் அரக்கனும், அரிவையர் குழுவும்,
புனை மணிப் பொலி புட்பக விமானத்துப் போனார்;
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர்; நினையும்
வினை இலாமையின், வெந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. 37

இலங்கை எரியுற்ற காரணத்தை இராவணன் வினவுதல்

ஆழித் தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி,
'ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழிக் காலம் வந்து உற்றதோ? பிறிது வேறு உண்டோ ?
பாழித் தீச் சுட வெந்தது என், நகர்?' எனப் பகர்ந்தான். 38

'குரங்கு சுட்டது' என்று அரக்கர் மொழிய, இராவணன் சினந்து சிரித்தல்

கரங்கள் கூப்பினர், தம் கிளை திருவொடும் காணார்,
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர்: 'இறையோய்!
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டது ஈது' என்றலும், இராவணன் கொதித்தான். 39

'இன்று புன் தொழில் குரங்குதன் வலியினால், இலங்கை
நின்று வெந்து, மா நீறு எழுகின்றது; நெருப்புத்
தின்று தேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்;
நன்று! நன்று! போர் வலி' என, இராவணன் நக்கான். 40

'நெருப்பையும், குரங்கையும் பற்றுமின்' என்று இராவணன் ஆணையிடல்

'உண்ட நெருப்பைக்
கண்டனர் பற்றிக்
கொண்டு அணைக' என்றான் -
அண்டரை வென்றான். 41

'உற்று அகலா முன்,
செற்ற குரங்கைப்
பற்றுமின்' என்றான் -
முற்றும் முனிந்தான். 42

அனுமனைப் பிடிக்க வீரர்கள் விரைதல்

சார் அயல் நின்றார்,
வீரர் விரைந்தார்;
'நேருதும்' என்றார்;
தேரினர் சென்றார். 43

எல்லை இகந்தார்
வில்லர்; வெகுண்டார்
பல் அதிகாரத்
தொல்லர், தொடர்ந்தார். 44

நீர் கெழு வேலை நிமிர்ந்தார்;
தார்கெழு தானை சமைந்தார்;-
போர் கெழு மாலை புனைந்தார்
ஓர் எழு வீரர் - உயர்ந்தார். 45

விண்ணினை, வேலை விளிம்பு ஆர்
மண்ணினை, ஓடி வளைந்தார்;
அண்ணலை நாடி அணைந்தார்;
கண்ணினின் வேறு அயல் கண்டார். 46

அரக்கர்கள் தன்னைச் சூழ்தல் கண்டு, அனுமனும் அவர்களுடன் போரிடல்

'பற்றுதிர்! பற்றுதிர்!' என்பார்;
'எற்றுதிர்! எற்றுதிர்!' என்பார்;
முற்றினர், முற்றும் முனிந்தார்;
கற்று உணர் மாருதி கண்டான். 47

ஏல்கொடு வஞ்சர் எதிர்ந்தார்;
கால்கொடு கைகொடு, கார்போல்,
வேல்கொடு கோலினர்; வெந் தீ
வால்கொடு தானும் வளைந்தான். 48

அனுமனுடன் போரிட்டு அரக்கர் பலர் மடிதல்

பாதவம் ஒன்று பகுத்தான்;
மாதிரம் வாலின் வளைத்தான்;
மோதினன்; மோத, முனிந்தார்
ஏதியும் நாளும் இழந்தார். 49

நூறிட மாருதி, நொந்தார்
ஊறிட, ஊன் இடு புண்ணீர்,
சேறு இட, ஊர் அடு செந் தீ
ஆறிட, ஓடினது ஆறாய். 50

தோற்றினர் துஞ்சினர் அல்லார்
ஏற்று இகல் வீரர், எதிர்ந்தார்;
காற்றின் மகன், கலை கற்றான்,
கூற்றினும் மும்மடி கொன்றான். 51

மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
மொய்ம்பினர் வீரர் முடிந்தார்
ஐம்பதினாயிரர்; அல்லார்,
பைம் புனல் வேலை படிந்தார். 52

தோய்த்தனன் வால்; அது தோயக்
காய்ச்சின வேலைகலந்தார்,
போய்ச் சிலர் பொன்றினர் போனார்
'ஏச்சு' என, மைந்தர் எதிர்ந்தார். 53

சுற்றினன் தேரினர் தோலா
வில் தொழில் வீரம் விளைத்தார்;
எற்றினன் மாருதி; எற்ற,
உற்று எழுவோரும் உலந்தார். 54

அனுமன் சீதையின் பாதங்களை வணங்கி, இலங்கைவிட்டு மீளுதல்

விட்டு உயர் விஞ்சையர், 'வெந் தீ
வட்ட முலைத் திரு வைகும்
புள் திரள் சோலை புறத்தும்
சுட்டிலது' என்பது சொன்னார். 55

வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்;
வெந் திறல் வீரன் வியந்தான்;
'உய்ந்தனென்' என்ன, உயர்ந்தான்,
பைந்தொடி தாள்கள் பணிந்தான். 56

பார்த்தனள், சானகி, பாரா
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள்
'வார்த்தை என்?' 'வந்தனை' என்னா,
போர்த் தொழில் மாருதி போனான். 57

'தௌ;ளிய மாருதி சென்றான்;
கள்ள அரக்கர்கள் கண்டால்,
எள்ளுவர், பற்றுவர்' என்னா,
ஒள் எரியோனும் ஒளித்தான். 58

மிகைப் பாடல்கள்

தெய்வ நாயகி கற்பு எனும் செந் தழல்
பெய்து மாருதி வாலிடைப் பேணியே,
பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம்
வெய்தின் உண்ட தகைமை விளம்புவாம்.

ஊனில் ஓடும் எரியோடு உயங்குவார்,
'கானில் ஓடும் நெடும் புனல் காண்' எனா,
வானில் ஓடும் மகளிர் மயங்கினார்,
வேனில் ஓடு அருந் தேரிடை வீழ்ந்தனர். 15-1

தேன் அவாம் பொழில் தீப் பட, சிந்திய
சோனை மா மலர்த் தும்பி, 'தொடர்ந்து, அயல்
போன தீச் சுடர் புண்டரிகத் தடங்
கானம் ஆம்' என, வீழ்ந்து, கரிந்தவே. 15-2

'நல் கடன் இது; நம் உயிர் நாயகர்
மற்கடம் தெற மாண்டனர்; வாழ்வு இலம்;
இல் கடந்து இனி ஏகலம் யாம்' எனா,
வில் கடந்த நுதல் சிலர் வீடினார். 15-3

கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
ஊர் முழுக்க வெதுப்ப உருகின்
சோர் ஒழுக்கம் அறாமையின், துன்று பொன்
வேர் விடுப்பது போன்றன, விண் எலாம். 16-1

நெருக்கி மீ மிசை ஓங்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சென்று உற
உருக்க, மெய்யின் அமுதம் உகுத்தலால்,
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார்அரோ. 16-2

பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல்,
கருகி முற்றும் எரிந்து, எழு கார் மழை,
அருகு சுற்றும் இருந்தையதாய், அதின்
உருகு பொன் - திரள் ஒத்தனன், ஒண் கதிர். 16-3

தேர் எரிந்தன் எரிந்தன திரள் பரி எவையும்;
தார் எரிந்தன் எரிந்தன தருக்கு உறு மதமர்
நீர் எரிந்தன் எரிந்தன நிதிக் குவை; இலங்கை
ஊர் எரிந்தன் எரிந்தன அரக்கர்தம் உடலம். 31-1

எரிந்த மாளிகை; எரிந்தன இலங்கு ஒளிப் பூண்கள்;
எரிந்த பூந் துகில்; எரிந்தது முரசுஇனம் முதலாய்;
எரிந்த மா மணிப் பந்தர்கள்; எரிந்தது கடி கர்
எரிந்த சாமiர் எரிந்தது வெண் குடைத் தொகுதி. 31-2

ஆடு அரங்குகள் எரிந்தன் அரக்கியர் சிறுவ-
ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த்
தேடு அரும் மணிச் சிவிகையோடு அருந் திறல் அரக்கர்
வீடு எரிந்தன் எரிந்திடாது இருந்தது என், வினவில்? 31-3

இனைய காலையில் மயனும் முன் அமைத்ததற்கு இரட்டி
புனைய, மாருதி நோக்கினன், இன்னன புகல்வான்;
'வனையும் என் உருத் துவசம் நீ பெறுக' என, மகிழ்வோடு
அனையன் நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான். 31-4

'தா இல் மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின், தமக்கே
மேவும், அத் துயர்' எனும் பொருள் மெய்யுற, மேல்நாள்
தேவர்தம் பதிக்கு இராவணன் இட்ட செந் தழல் போல்,
ஓவிலாது எரித்து உண்டமை உரைப்பதற்கு எளிதோ? 37-1

மற்று ஒரு கோடியர் வந்தார்;
உற்று எதிர் ஓடி உடன்றார்;
கற்று உறு மாருதி காய்ந்தே,
சுற்றினன் வால்கொடு, தூங்க, 52-1

உற்றவர் யாரும் உலந்தார்;
மற்று அதுபோதினில் வானோர்
வெற்றி கொள் மாருதிமீதே
பொன் தரு மா மலர் போர்த்தார். 54-1

'வன் திறல் மாருதி கேண்மோ!
நின்றிடின், நீ பழுது; இன்றே
சென்றிடுவாய்!' என, தேவர்
ஒன்றிய வானில் உரைத்தார். 54-2

விண்ணவர் ஓதிய மெய்ம்மை
எண்ணி, 'இராமனை இன்றே
கண்ணுறலே கடன்' என்று, ஆங்கு
அண்ணலும் அவ் வயின் மீண்டான். 54-3

வாலிதின் ஞான வலத்தால்,
மாலுறும் ஐம் பகை மாய்த்தே,
மேல் கதி மேவுறும் மேலோர்
போல், வய மாருதி போனான். 57-1

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home