Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > 1 கடல் தாவு படலம்  > 2 ஊர் தேடு படலம் > 3 காட்சிப் படலம் > 4 உருக் காட்டு படலம் >5 சூடாமணிப் படலம்  > 6 பொழில் இறுத்த படலம் > 7 கிங்கார் வதைப் படலம் > 8 சம்புமாலி வதைப் படலம் > 9 பஞ்ச சேனாதிபதிகள் வதைப் படலம் > 10 அக்ககுமாரன் வதைப் படலம் > 11 பாசப் படலம் > 12 பிணி வீட்டு படலம் > 13 இலங்கை எரியூட்டு படலம் > 14 திருவடி தொழுத படலம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் - 10. அக்ககுமாரன் வதைப் படலம்


இராவணனிடம் அக்ககுமாரன் தன்னை அனுப்பவேண்டுதல்

கேட்டலும், வெகுளி வெந் தீக் கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி,
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற,
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை,
தாள்-துணை தொழுது, மைந்தன் தடுத்து, 'இடை தருதி' என்றான். 1

'முக்கணான் ஊர்தி அன்றேல், மூன்று உலகு அடியின் தாயோன்
ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல்,
திக்கயம் அல்லதேல், புன் குரங்கின்மேல் சேறி போலாம்!
இக் கடன் அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின்; எந்தாய்! 2

'"அண்டர்கோன் தன்னைப் பற்றித் தருக" எனா, அடியேன் நிற்க,
கொண்டனை என்முன் தன்னைப் பணி என, நெஞ்சம் கோடல்
உண்டு; அது தீரும் அன்றே? உரன் இலாக் குரங்கு ஒன்றேனும்,
எண் திசை வென்ற நீயே, ஏவுதி என்னை' என்றான். 3

'கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு,
கைதவம் கண்ணி, ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான்,
எய்தினான், இமையா முக்கண் ஈசனே என்ற போதும்,
நொய்தினின் வென்று, பற்றித் தருகுவென், நொடியில் நுன்பால். 4

'தூண்டத் தூண் அகத்துத் தோன்றும் கோளரி, சுடர் வெண் கோட்டு
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும், மலைதல் ஆற்றர்
அண்டத்தைக் கடந்து போகி அப் புறத்து அகலின், என்பால்
தண்டத்தை இடுதி அன்றே, நின்வயின் தந்திலேனேல்!' 5

அக்ககுமாரன் விடை பெற்றுப் போருக்குப் போதல்

என, இவை இயம்பி, 'ஈதி விடை' என, இறைஞ்சி நின்ற
வனை கழல் வயிரத் திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி
'துனை பரித் தேர்மேல் ஏறிச் சேறி' என்று இனைய சொன்னான்;
புனை மலர்த் தாரினானும், போர் அணி அணிந்து போனான். 6

ஏறினன் என்ப மன்னோ, இந்திரன் இகலின் இட்ட,
நூறொடு நூறு பூண்ட நொறில் வயப் புரவி நோன் தேர்;
கூறினர் அரக்கர் ஆசி; குமுறின முரசக் கொண்மூ;
ஊறின உரவுத் தானை, ஊழி பேர் கடலை ஒப்ப. 7

பொரு கடல் மகரம் எண்ணில், எண்ணலாம் பூட்கை; பொங்கித்
திரிவன மீன்கள் எண்ணில், எண்ணலாம் செம் பொன் திண் தேர்;
உரு உறு மணலை எண்ணில், எண்ணலாம் உரவுத் தானை;
வரு திரை நிரையை எண்ணில், எண்ணலாம் வாவும் வாசி. 8

ஆறு-இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர், ஆவி
வேறு இலாத் தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர்,
ஏறிய தேரர், சூழ்ந்தார்-இறுதியின் யாவும் உண்பான்
சீறிய காலத் தீயின் செறி சுடர்ச் சிகைகள் அன்னார். 9

மந்திரக் கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர் மக்கள்,
தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள், பிறகும், தாதைக்கு
அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர்,
எந்திரத் தேரர், சூழ்ந்தார்-ஈர்-இரண்டு இலக்கம் வீரர். 10

தோமரம், உலக்கை, சூலம், சுடர் மழு, குலிசம், தோட்டி,
ஏ மரு வரி வில், வேல், கோல், ஈட்டி, வாள், எழு, விட்டேறு,
மா மரம், வீசு பாசம், எழு முளை, வயிரத் தண்டு,
காமரு கணையம், குந்தம், கப்பணம், கால நேமி. 11

என்று, இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி,
மின் திரண்டனைய ஆகி, வெயிலொடு நிலவு வீச,
துன்று இருந் தூளி பொங்கித் துறுதலால், இறுதிசெல்லாப்
பொன் திணி உலகம் எல்லாம், பூதலம் ஆய மாதோ! 12

காகமும், கழுகும், பேயும், காலனும், கணக்கு இல் காலம்
சேகு உற வினையின் செய்த தீமையும், தொடர்ந்து செல்ல்
பாகு இயல் கிளவிச் செவ் வாய்ப் படை விழிப் பணைத்த வேய்த் தோள்
தோகையர் மனமும், தொக்க தும்பியும், தொடர்ந்து சுற்ற் 13

உழைக் குல நோக்கினார்கள், உலந்தவர்க்கு உரிய மாதர்,
அழைத்து அழு குரலின், வேலை அமலையின், அரவச் சேனை
தழைத்து எழும் ஒலியின், நானாப் பல் இயம் துவைக்கும் தா இல்
மழைக் குரல் இடியின், சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ! 14

வெயில், கரமணிகள் வீசும் விரி கதிர் விளங்க, வெய்ய
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக, அஃதும்,
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க, யாணர்,
உயிர்க்கு உலவு இரவும் அன்று, பகல் அன்று என்று உணர்வு தோன்ற் 15

ஓங்குஇருந் தடந் தேர் பூண்ட உளை வயப் புரவி ஒல்கித்
தூங்கின வீழ, தோளும் கண்களும் இடத்துத் துள்ள,
வீங்கின மேகம் எங்கும் குருதி நீர்த் துள்ளி வீழ்ப்ப,
ஏங்கின காகம் ஆர்ப்ப, இருளில் விண் இடிப்ப மாதேர் 16

வெள்ள வெஞ் சேனை சூழ, விண் உளோர் வெருவி விம்ம,
உள்ளம் நொந்து அனுங்கி, வெய்ய கூற்றமும் உறுவது உன்ன,
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப, தோன்றும்
கள் அவிழ் அலங்கலானைக் காற்றின் சேய் வரவு கண்டான். 17

அக்ககுமாரனைக் கண்டு அனுமன் ஐயுற்று நோக்குதல்

'இந்திரசித்தோ? மற்று அவ் இராவணனேயோ?' என்னா,
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்குச் சீயம்,
'வந்தனன்; முடிந்தது அன்றோ மனக் கருத்து?' என்ன வாழ்த்தி,
சுந்தரத் தோளை நோக்கி, இராமனைத் தொழுது சொன்னான்: 18

'எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல், யான் முன் நோற்ற
புண்ணியம் உளதாம்; எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே;
நண்ணிய நானும் நின்றேன்; காலனும், நணுகி நின்றான்;
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென், கடிதின்' என்றான். 19

'பழி இலது உரு என்றாலும், பல் தலை அரக்கன் அல்லன்;
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்;
மொழியின், மற்று அவர்க்கு மேலான்; முரண் தொழில் முருகன் அல்லன்;
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ, அஞ்சனக் குன்றம் அன்னான்?' 20

அனுமனை அக்ககுமாரன் எள்ளி நகைக்க, தேர்ப்பாகன், 'அது தகாது' எனல்

என்றவன், உவந்து, விண் நோய் இந்திர சாபம் என்ன
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை,
வன் தொழில் அரக்கன் நோக்கி, வாள் எயிறு இலங்க நக்கான்;
'கொன்றது இக் குரங்கு போலாம், அரக்கர்தம் குழாத்தை!' என்றான். 21

அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி, 'ஐய! கேண்மோ!
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்? இகழல் அம்மர்
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால், மற்றும் உண்டோ ?
சொன்னது துணிவில் கொண்டு சேறி' என்று, உணரச் சொன்னான். 22

அக்ககுமாரனின் வஞ்சினம்

விடம் திரண்டனைய மெய்யான், அவ் உரை விளம்பக் கேளா,
'இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன்;
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென், ஒழிவுறாமல்
கடந்து, பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென்' என்றான். 23

அரக்கர் படையை எதிர்ந்து அனுமன் பொருதல்

ஆர்த்து எழுந்து, அரக்கர் சேனை, அஞ்சனைக்கு உரிய குன்றைப்
போர்த்தது; பொழிந்தது, அம்மா! பொரு படைப் பருவ மாரி;
வேர்த்தனர் திசை காப்பாளர்; சலித்தன விண்ணும் மண்ணும்;
தார்த் தனி வீரன், தானும் தனிமையும், அவர்மேல் சார்ந்தான். 24

எறிந்தன நிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும்
முறிந்தன் வீரன் மேனி முட்டின மூரி யானை
மறிந்தன் மடிந்த, தேரும், வாவும் மாக் குழுவும்; ஆவி
நெறிந்தன வரம்பு இல் யாக்கை, இலங்கை தன் நிலையின் பேர. 25

காய் எரி, முளி புல் கானில் கலந்தென, காற்றின் செம்மல்,
'ஏ' எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை;
போயவர் உயிரும் போகித் தென் புலம் படர்தல் பொய்யாது;
ஆயிர கோடி தூதர் உளர்கொலோ நமனுக்கு அம்மா? 26

வர உற்றார், வாராநின்றார், வந்தவர், வரம்பு இல் வெம் போர்
பொர உற்ற பொழுது, வீரன் மும் மடங்கு ஆற்றல் பொங்க
விரவிப் போய், கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான்;
உரவுத் தோள் அரக்கர் எல்லாம், என்பு இலா உயிர்கள் ஒத்தார். 27

பிள்ளப்பட்டன நுதல் ஓடைக் கரி, பிறழ் பொன் தேர், பரி, பிழையாமல்,
அள்ளப்பட்டு அழி குருதிப் பொரு புனல் ஆறாக, படி சேறு ஆக,
'வள்ளப்பட்டன மகரக் கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர்
கொள்ளப்பட்டன உயிர்' என்னும்படி கொன்றான்-ஐம் புலன் வென்றானே! 28

'தேரே பட்டன' என்றார் சிலர்; சிலர், 'தெறு கண் செம் முக வயிரத் தோள்
பேரே பட்டன' என்றார்; சிலர் சிலர், 'பரியே பட்டன பெரிது' என்றார்;
'காரே பட்டன நுதல் ஓடைக் கட கரியே பட்டன கடிது' என்றார்;
நேரே பட்டவர் பட, மாடே, தனி, நில்லா உயிரொடு நின்றாரே. 29

ஆழிப் பொரு படை நிருதப் பெரு வலி அடலோர், ஆய்மகள் அடு பேழ் வாய்த்
தாழிப் படு தயிர் ஒத்தார்; மாருதி, தனி மத்து என்பது ஓர் தகை ஆனான்;
ஏழ் இப் புவனமும் மிடை வாழ் உயிர்களும், எறி வேல் இளையவர் இனம் ஆக,
ஊழிப் பெயர்வது ஓர் புனல் ஒத்தார்; அனல் ஒத்தான்; மாருதம் ஒத்தானே. 30

அக்ககுமாரனின் தேரையும் படைகளையும் அனுமன் அழித்தல்

கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர் குறைகின்றார், உடல் குலைகின்றார்;
பின்றா நின்றனர்; உதிரப் பெரு நதி பெருகாநின்றன் அருகு ஆரும்
நின்றார் நின்றிலர்; தனி நின்றான், ஒரு நேமித் தேரொடும், அவன் நேரே
சென்றான்; வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான்; விழி எரிகின்றான். 31

உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்; ஒரு நாளே பலர் உயிர் உண்ணக்
கற்றோனும் முகம் எதிர் வைத்தான்; அது கண்டார் விண்ணவர்; கசிவுற்றார்;
'எற்றாம் மாருதி நிலை?' என்பார்; இனி 'இமையா விழியினை இவை ஒன்றோ
பெற்றாம்; நல்லது பெற்றாம்' என்றனர்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார். 32

எய்தான், வாளிகள், எரி வாய் உமிழ்வன, ஈர்-ஏழ்; எதிர் அவை பார் சேரப்
பொய்தான், மணி எழு ஒன்றால்; அன்று, அது, பொடியாய் உதிர்வுற, வடி வாளி,
வெய்தாயின, பல விட்டான்; வீரனும், வேறு ஓர் படை இலன், மாறா வெங்
கைதானே பொரு படை ஆக, தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான். 33

தேரில் சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான்; அப் பொரு செறி திண் தேர்,
பாரில் சென்றது; பரி பட்டன் அவன் வரி வில் சிந்திய பகழிக் கோல்,
மார்பில் சென்றன சில் பொன் தோளிடை மறைவுற்றன சில் அறவோனும்,
நேரில் சென்று,அவன் வயிரக் குனிசிலைபற்றிக் கொண்டு,எதிர் உற நின்றான்.34

ஒரு கையால் அவன் வயிரத் திண் சிலை உற்றுப் பற்றலும், உரவோனும்,
இரு கையால் எதிர் வலியாமுன்னம், அது இற்று ஓடியது; இவர் பொன் தோளின்,
சுரிகையால் அவன் உருவிக் குத்தலும், அதனை, சொல் கொடு வரு தூதன்,
பொரு கையால் இடை பிதிர்வித்தான், முறி பொறி ஓடும்படி பறியாவே. 35

ஆயுதம் இழந்த அக்ககுமாரன் அனுமனுடன் மற்போர் செய்து மடிதல்

வாளாலே பொரல் உற்றான், இற்று அது மண் சேராமுனம், வயிரத் திண்
தோளாலே பொர முடுகிப் புக்கு, இடை தழுவிக் கோடலும், உடல் முற்றும்,
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட, மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று
மீளாவகை, புடை சுற்றிக்கொண்டது; பற்றிக் கொண்டனன் மேலானான். 36

பற்றிக் கொண்டவன், வடி வாள் என ஒளிர், பல் இற்று உக, நிமிர் படர் கையால்
எற்றி, கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன,
முற்றிக் குண்டலம் முதல் ஆம் மணி உக, முழை நால் அரவு இவர் குடர் நால,
கொற்றத் திண் சுவல், வயிரக் கைகொடு குத்தி, புடை ஒரு குதிகொண்டான். 37

நீத்து ஆய் ஓடின உதிரப் பெரு நதி நீராக, சிலை பாராக,
போய்த் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க, பொரும் உயிர் போகாமுன்,
மீத் தாம் நிமிர் சுடர் வயிரக் கைகொடு பிடியா, விண்ணொடு மண் காண,
தேய்த்தான்-ஊழியின் உலகு ஏழ்தேயினும்,ஒரு தன்புகழ் இறை தேயாதான்.38

எஞ்சிய படைகள் அஞ்சி ஓடுதல்

புண் தாழ் குருதியின் வெள்ளத்து, உயிர் கொடு புக்கார் சிலர்; சிலர் பொதி பேயின்
பண்டாரத்திடை இட்டார் தம் உடல்; பட்டார் சிலர்; சிலர் பயம் உந்த,
திண்டாடித் திசை அறியா மறுகினர்; செற்றார் சிலர்; சிலர் செலவு அற்றார்;
கண்டார் கண்டது ஓர்திசையே விசைகொடுகால்விட்டார்;படைகைவிட்டார்.39

மீன் ஆய், வேலையை உற்றார், சிலர்; சிலர் பசு ஆய் வழிதொறும் மேய்வுற்றார்;
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர்; சிலர் நான்மறையவர் உரு ஆனார்;
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே, தம் குழல் வகிர்வுற்றார்
ஆனால் சிலர்; சிலர், 'ஐயா! நின் சரண்' என்றார்; நின்றவர் 'அரி' என்றார். 40

தம் தாரமும், உறு கிளையும், தமை எதிர் தழுவும்தொறும், 'நும தமர் அல்லேம்;
வந்தேம், வானவர்' என்று, ஏகினர் சிலர்; சிலர், 'மானுயர்' என, வாய் விட்டார்;
மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள் ஆனார் சிலர்; சிலர் மருள்கொண்டார்;
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர்; எரிபோல் குஞ்சியை இருள்வித்தார். 41

அரக்கிமாரின் அவலநிலை

குண்டலக் குழை முகக் குங்குமக் கொங்கையார்,
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே,
விண்டு, அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால்,
அண்டம் உற்றுளது, அவ் ஊர் அழுத பேர் அமலையே! 42

கதிர் எழுந்தனைய செந் திரு முகக் கணவன்மார்
எதிர் எழுந்து, அடி விழுந்து, அழுது சோர் இள நலார்
அதி நலம் கோதை சேர் ஓதியோடு, அன்று, அவ் ஊர்
உதிரமும் தெரிகிலாது, இடை பரந்து ஒழுகியே! 43

தா இல் வெஞ் செரு நிலத்திடை, உலந்தவர்த(ம்)மேல்,
ஓவியம் புரை நலார் விழுதொறும், சிலர் உயிர்த்து,
ஏவு கண்களும் இமைத்திலர்களாம்; இது எலாம்
ஆவி ஒன்று, உடல் இரண்டு, ஆயதாலேகொலாம்? 44

ஓடினார், உயிர்கள் நாடு உடல்கள் போல்; உறுதியால்
வீடினார்; வீடினார் மிடை உடல் குவைகள்வாய்,
நாடினார், மட நலார்; நவை இலா நண்பரைக்
கூடினார்; ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார். 45

தீட்டு வாள் அனைய கண் தெரிவை, ஓர் திரு அனாள்,
ஆட்டில்நின்று அயர்வது ஓர் அறு தலைக் குறையினைக்
கூட்டி, 'நின் ஆர் உயிர்த் துணைவன், எம் கோனை, நீ,
காட்டுவாயாதி' என்று, அழுது கை கூப்பினாள். 46

ஏந்தினாள் தலையை, ஓர் எழுத அருங் கொம்பு அனாள்;
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை,
'வேந்த! நீ அலசினாய்; விடுதியால் நடம்' எனா,
பூந் தளிர்க் கைகளான், மெய் உறப் புல்லினாள். 47

இராவணன் காலடியில் விழுந்து, மண்டோ தரி முதலியோர் அழுது புலம்புதல்

கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக,
புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற,
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள்,
மயன் மகள்; வயிறு அலைத்து அலறி மாழ்கினாள். 48

தா அருந் திரு நகர்த் தையலார் முதல்
ஏவரும், இடை விழுந்து இரங்கி ஏங்கினார்;
காவலன் கால்மிசை விழுந்து, காவல் மாத்
தேவரும் அழுதனர், களிக்கும் சிந்தையார். 49

மிகைப் பாடல்கள்

தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனது எல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது என்ன்
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை
நெடு மணி முழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது அன்றே. 12-1

பத்தியில் தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள் சுற்ற,
முத்தினில் கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப,
மத்த வெங் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற,
தத்திய பரிகள் தன்னின் சாமரை தழைப்ப,-போனான். 15-1

தீய வல் அரக்கர் தம்மில் சிலர் சிலர் செம் பொற் சின்னம்
வாயின் வைத்து ஊத, வீரர் வழி இடம் பெறாது செல்ல,
காயும் வெங் களிறு, காலாள் கடும் பரி, கடுகிச் செல்ல,
நாயகன் தூதன் தானும் நோக்கினன்; நகையும் கொண்டான். 16-1

புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி, தேர், பொங்க,
கலித்தார்கள் உம்பர் ஓட, கடையுகத்து எறியும் காலின்
ஒலித்து, ஆழி உவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட-
வலித்தார் திண் சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி. 23-1

எடுத்தனன் எழு ஒன்று; அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்தப்
பொடித்தனன்; இரதம், வாசி, பொரு களிறு, இதனை எல்லாம்
முடித்தனன், நொடிப்பில்; பின்னும், மூசு போர் அரக்கர் வெள்ளம்
அடுத்து அமர் கோல, மேன்மேல் அடு படை தூவி ஆர்த்தார். 24-1

செறி நாண் உரும் ஒலி கொண்டான்; ஒருபது திசைவாய் கிழிபட அழல்கின்றான்;
'இறுவாய், இது பொழுது' என்றான்; எரி கணை எழு கார் மழை பொழிவது போல,
பொறிவாய் திசைதொறும் மின் தாரயின் நிலை பொலியச் சினமொடு பொழிகின்றான்;
உறுமாருதி உடல் உகவெங்குருதிகள் ஒழியாது, அவனொடு மலைவுற்றான்.32-1

மலைபோல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட, எந்திரமும் தேர்த்
தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி, தன்
வலி சேர் கரம்அதில் எழுவால் முழுதையும் மண்டித் துகள் பட மடிவித்தான்;
புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கிப் பொரு சிலை விளைவித்தான். 32-2

'மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும் உடையான் மகன்' என வானோர் கண்டு,
ஓய்ந்தார்இலர், குதி கொண்டார்; உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார்;
சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறித் திரை மிசை விழ ஓடித்
தேய்ந்தார் சிலர்; சிலர் பிடரில் குதியடி பட ஓடினர்; சிலர் செயல் அற்றார். 33-1

இன்னன நிகழ்வுழி, இராக்கதக் குழாம்
மன்னிய சோதியும், அரக்கன் மைந்தனும்,
தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை
முன்னினர் சொல, அவன் முன்பு கேட்டனன். 47-1

அவ் வகை கண்டவர் அமரர் யாவரும்,
'உய்வகை அரிது' என ஓடி, மன்னவன்
செல் அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்,
எவ் வகைப் பெரும் படை யாவும் மாய்ந்ததே. 47-2

ஈது மற்று இசைவுற, இது கண்டு ஏங்கியே,
மா துயரத்தொடு மறுகு நெஞ்சுடைத்
தூதர் உற்றுஓடினர்; தொழுது, மன்னனுக்கு
ஓதினர்; ஓதல் கேட்டு, உளம் துளங்கினான். 47-3

நாடினார்; நாடியே, நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர் தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ் வயின், வெருவி விண்ணவர்கள் தாம்
ஓடினார்; அரசன் மாட்டு அணுகி நின்று, உரை செய்வார்: 47-4

'"மைந்தனை மடித்தது குரங்கு" என்று ஓதவும்
வந்தது போலும், நம் வாழ்வு நன்று!' எனா,
சிந்தையின் அழன்று, எரி விழித்து, 'சென்று, நீர்
இந்திரன் பகைஞனைக் கொணருவீர்' என்றான். 49-1

என்றலும், ஏவலுக்கு உரியர் ஓடியே
சென்று, மற்று அவன் அடி பணிந்து, தீமை வந்து
ஒன்றிய திறங்களும் உரைத்து, 'நுத்தையும்
இன்று உனைக் கூவினன்' எனவும் சொல்லினார். 49-2



 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home