Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > 1 கடல் தாவு படலம்  > 2 ஊர் தேடு படலம் > 3 காட்சிப் படலம் > 4 உருக் காட்டு படலம் >5 சூடாமணிப் படலம்  > 6 பொழில் இறுத்த படலம் > 7 கிங்கார் வதைப் படலம் > 8 சம்புமாலி வதைப் படலம் > 9 பஞ்ச சேனாதிபதிகள் வதைப் படலம் > 10 அக்ககுமாரன் வதைப் படலம் > 11 பாசப் படலம் > 12 பிணி வீட்டு படலம் > 13 இலங்கை எரியூட்டு படலம் > 14 திருவடி தொழுத படலம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் - 14. திருவடி தொழுத படலம்


வான் வழி மீளும் அனுமன், மயேந்திரத்தில் குதித்தல்

'நீங்குவென் விரைவின்' என்னும் நினைவினன், மருங்கு நின்றது
ஆங்கு ஒரு குடுமிக் குன்றை அருக்கனின் அணைந்த ஐயன்,
வீங்கினன், உலகை எல்லாம் விழுங்கினன் என்ன் வீரன்
பூங் கழல் தொழுது வாழ்த்தி, விசும்பிடைக் கடிது போனான். 1

மைந்நாகம் என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி,
கைந் நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன், கணத்தின் காலை,
பைந் நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும்,
கொய்ந் நாகம் நறுந் தேன் சிந்தும், குன்றிடைக் குதியும் கொண்டான். 2

வானர வீரர் அனுமனைக் கண்டு மகிழ்தல்

போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க,
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர் மன்னோ,
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
தாய் வரக் கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா! 3

அழுதனர் சிலவர்; முன் நின்று ஆர்த்தனர் சிலவர்; அண்மித்
தொழுதனர் சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்; அள்ளி
முழுதுற விழுங்குவார்போல் மொய்த்தனர் சிலவர்; முற்றும்
தழுவினர் சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர், தாங்கி. 4

'தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி,
மேல் முறை வைத்தேம்; அண்ணல்! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி;
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம்' என்று,
தாம் நுகர் சாகம் எல்லாம் முறை முறை சிலவர் தந்தார். 5

அனுமன் உடலில் புண்கள் கண்டு, வானரர் வருந்துதல்

தாள்களில், மார்பில், தோளில், தலையினில், தடக் கைதம்மில்,
வாள்களின், வேலின், வாளி மழையினின் வகிர்ந்த புண்கள்,
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என, நம்பி கண்ண
ஊழ் கொள நோக்கி நோக்கி, உயிர் உக, உளைந்து உயிர்த்தார். 6

அனுமன் அங்கதன் முதலியோரை வணங்கி, சீதை கூறிய ஆசியைத் தெரிவித்தல்

வாலி காதலனை முந்தை வணங்கினன்; எண்கின் வேந்தைக்
காலுறப் பணிந்து, பின்னை, கடன்முறை, கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி, ஆங்கண் இருந்து, 'இவண் இருந்தோர்க்கு எல்லாம்,
ஞால நாயகன் தன் தேவி சொல்லினள், நன்மை' என்றான். 7

அனுமன் நடந்த செய்திகளைக் கூறுதல்

என்றலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சித் தாழா-
நின்றனர், உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்,
'சென்றது முதலா, வந்தது இறுதியாச் செப்பற்பாலை,
வன் திறல் உரவோய்!' என்ன, சொல்லுவான் மருத்தின் மைந்தன்: 8

ஆண் தகை தேவி உள்ளத்து அருந் தவம் அமையச் சொல்லி,
பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று, போரில்
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி
மீண்டதும், விளம்பான் - தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி. 9

கூறாதவற்றையும் குறிப்பால் உணர்ந்த வானரர், அடுத்து செய்வது குறித்து அனுமனை வினவுதல்

'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை
உரைசெய, ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத,
கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட,
தெரிதர உணர்ந்தேம்; பின்னர், என் இனிச் செய்தும்?' என்றார். 10

அனுமன் சொற்படி, யாவரும் இராமனைக் காண விரைதல்

'யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை;
சேவகன் தேவி தன்னைக் கண்டமை விரைவின் செப்பி,
ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர் ஆற்றலே ஆம்;
போவது புலமை' என்ன, பொருக்கென எழுந்து போனார். 11

வானர வீரரின் உரைப்படி, இராமனிடத்திற்கு அனுமன் முந்திச் செல்லுதல்

'ஏத நாள் இறந்த் சால வருந்தினது இருந்த சேனை;
ஆதலால் விரைவின் செல்லல் ஆவதுஅன்று; அளியம் எம்மைச்
சாதல் தீர்த்து அளித்த வீர! தலைமகன் மெலிவு தீரப்
போது நீ முன்னர்' என்றார்; 'நன்று' என அனுமன் போனான். 12

முத் தலை எஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம் முற்றி,
வித்தகத் தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை,
அத் தலை அறிந்த எல்லாம் அறைந்தனம்; ஆழியான்மாட்டு
இத் தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம். 13

சுக்கிரீவன் தேற்ற, இராமன் தேறுதல்

கார் வரை இருந்தனன் கதிரின் காதலன்,
சீரிய சொற்களால் தெருட்ட, செங் கணான்
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா,
சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான். 14

'தண்டல் இல் நெடுந் திசை மூன்றும் தாயினர்,
கண்டிலர் மடந்தையை' என்னும் கட்டுரை,
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும், உளன்,
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான். 15

ஆரியன், அருந் துயர்க் கடலுள் ஆழ்பவன்,
'சீரியது அன்று நம் செய்கை; தீர்வு அரும்
மூரி வெம் பழியொடும் முடிந்ததாம்' என,
சூரியன் புதல்வனை நோக்கிச் சொல்லுவான்: 16

சுக்கிரீவனை நோக்கி, இராமன் துயருடன் பேசுதல்

'குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை
வெறிக் கருங் குழலியை நாடல் மேயினார்
மறித்து இவண் வந்திலர்; மாண்டுளார்கொலோ?
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை?-பெற்றியோய்! 17

'மாண்டனள் அவள்; "இவள் மாண்ட வார்த்தையை
மீண்டு அவர்க்கு உரைத்தலின், விளிதல் நன்று" எனா,
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொலோ?
தேண்டினர், இன்னமும் திரிகின்றார் கொலோ? 18

'கண்டனர் அரக்கரை, கறுவு கைம்மிக,
மண்டு அமர் தொடங்கினார், வஞ்சர் மாயையால்
விண்தலம்அதனில் மேயினர்கொல்? வேறு இலாத்
தண்டல் இல் நெடுஞ் சிறைத் தளைப் பட்டார்கொலோ? 19

'"கூறின நாள், அவர் இருக்கை கூடலம்;
ஏறல் அஞ்சுதும்" என, இன்ப துன்பங்கள்
ஆறினர், அருந் தவம் அயர்கின்றார்கொலோ?
வேறு அவர்க்கு உற்றது என்? விளம்புவாய்!' என்றான். 20

அனுமன் இராமனை அடைந்து, சீதையின் நிலையைக் குறிப்பால் உணர்த்துதல்

என்புழி, அனுமனும், இரவி என்பவன்
தென் புறத்து உளன் எனத் தெரிவது ஆயினான்;
பொன் பொழி தடக் கை அப் பொரு இல் வீரனும்,
அன்புறு சிந்தையன், அமைய நோக்கினான். 21

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான். 22

அனுமனின் குறிப்பினால் செய்தி உணர்ந்த இராமனின் மகிழ்ச்சி

திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்;
'வண்டு உறை ஓதியும் வலியள்; மற்று இவன்
கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று' எனக்
கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான். 23

ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா,
ஓங்கிய உணர்வினால், விளைந்தது உன்னினான்;
வீங்கின தோள்; மலர்க் கண்கள் விம்மின்
நீங்கியது அருந் துயர்; காதல் நீண்டதே. 24

சீதையைக் கண்டு வந்த செய்தியை அனுமன் இராமனிடம் கூறுதல்

'கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்' என்று, அனுமன் பன்னுவான்: 25

'உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் -
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்-
என் பெருந் தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி' என்பான்: 26

'பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என, பொறையில் நின்றாள்,
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு என் தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என, நினக்கு நேர்ந்தாள்;
என் அலது இல்லை என்னை ஒப்பு என, எனக்கும் ஈந்தாள். 27

'உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான்
வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து,
என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது, எம் மோய்? 28

'விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன். 29

'கண்ணினும் உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின்
எண்ணினும் உளை நீ; கொங்கை இணைக் குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெங் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப்
பண்ணினும் உளை நீ; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ? 30

'வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார், விண் தோய்,
காலையும் மாலைதானும் இல்லது ஓர் கனகக் கற்பச்
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் - ஐய! - தவம் செய்த தவம் ஆம் தையல். 31

'மண்ணொடும் கொண்டு போனான் - வான் உயர் கற்பினாள்தன்
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான், உலகம் பூத்த
கண் அகன் கமலத்து அண்ணல், "கருத்திலாள்-தொடுத்தல் கண்ணின்,
எண் அருங் கூறாய் மாய்தி" என்றது ஓர் மொழி உண்டு என்பார். 32

'தீண்டிலன் என்னும் வாய்மை-திசைமுகன் செய்த முட்டை
கீண்டிலது; அனந்தன் உச்சி கிழிந்திலது; எழுந்து வேலை
மீண்டில் சுடர்கள் யாவும் விழுந்தில் வேதம் செய்கை
மாண்டிலது;-என்னும் தன்மை வாய்மையால், உணர்தி மன்னோ! 33

'சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த
மாகத்தார் தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப்
பாகத்தாள், இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத்தாளும்,
ஆகத்தாள் அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள். 34

'இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்தி,
பொலங் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கிப் போந்தேன்,
அலங்கு தண் சோலை புக்கேன்; அவ்வழி, அணங்கு அ(ன்)னாளை,
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில், கண்டேன். 35

'அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச
நெருக்கினர் காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க,
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி,
தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள், அத் தமியள் அம்மா! 36

'தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி,
ஐய! யான் இருந்த காலை, அலங்கல் வேல் இலங்கை வேந்தன்
எய்தினன்; இரந்து கூறி இறைஞ்சினன்; இருந்து நங்கை
வெய்து உரை சொல்ல, சீறி, கோறல் மேற்கொண்டுவிட்டான். 37

'ஆயிடை, அணங்கின் கற்பும், ஐய! நின் அருளும், செய்ய
தூய நல் அறனும், என்று, இங்கு இனையன தொடர்ந்து காப்ப,
போயினன், அரக்கிமாரை, "சொல்லுமின் பொதுவின்" என்று, ஆங்கு
ஏயினன்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார். 38

'அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக
உன்னினள்; கொடி ஒன்று ஏந்தி, கொம்பொடும் உறைப்பச் சுற்றி,
தன் மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து, நாயேன்,
பொன் அடி வணங்கி நின்று, நின் பெயர் புகன்ற போழ்தில், 39

'"வஞ்சனை அரக்கர் செய்கை இது" என மனக்கொண்டேயும்,
"அஞ்சன வண்ணத்தான்தன் பெயர் உரைத்து, அளியை, என்பால்
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம்" என்று உவந்து சொன்னாள் -
மஞ்சு என, வன் மென் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள். 40

'அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது-எந்தாய்! 41

'ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
திரு முலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ! நின்பால்
விரகம் என்பதனின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்து
உருகியது; உடனே ஆறி, வலித்தது, குளிர்ப்பு உள் ஊற. 42

'வாங்கிய ஆழிதன்னை, "வஞ்சர் ஊர் வந்ததாம்" என்று,
ஆங்கு உயர் மழைக் கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி,
ஏங்கினள் இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனி
வீங்கினள்; வியந்தது அல்லால், இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள். 43

'அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்த பின் அடுத்த எல்லாம்
சொல் முறை அறியச் சொல்லி, "தோகை! நீ இருந்த சூழல்
இன்னது என்று அறிகிலாமே, இத்துணை தாழ்த்தது" என்றே,
மன்ன! நின் வருத்தப்பாடும் உணர்த்தினென்; உயிர்ப்பு வந்தாள். 44

'இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள்;
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள்;
"திங்கள் ஒன்று இருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த பின்னை,
மங்குவென் உயிரோடு" என்று, உன் மலரடி சென்னி வைத்தாள். 45

சீதை தந்த சூடாமணியை அனுமன் இராமனிடம் சேர்த்தல்

'வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி,
கைத்தலத்து இனிதின் ஈந்தாள்; தாமரைக் கண்கள் ஆர,
வித்தக! காண்டி!' என்று, கொடுத்தனன் - வேத நல் நூல்
உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான். 46

சூடாமணி பெற்ற இராமனது நிலை

பை பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,
மெய்யுற வெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான்;
ஐயனுக்கு, அங்கி முன்னர், அங்கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே - கை புக்க மணியின் காட்சி! 47

பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்
துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;
மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்
தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்? 48

மேலே செய்வன குறித்து இராமன் விரைதல்

ஆண்டையின், அருக்கன் மைந்தன், 'ஐய! கேள், அரிவை நம்பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள்' என்றலும், 'காலம் தாழ,
ஈண்டு, இனும் இருத்தி போலாம்' என்றனன்; என்றலோடும்,
தூண் திரண்டனைய தோளான், பொருக்கென எழுந்து சொன்னான். 49

சுக்கிரீவன் கட்டளைப்படி வானர சேனை புறப்படுதல்

'எழுக, வெம் படைகள்!' என்றான்; 'ஏ' எனும் அளவில், எங்கும்
முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவர் முடுக்க, முந்தி,
பொழி திரை அன்ன வேலை புடை பரந்தென்னப் பொங்கி,
வழுவல் இல் வெள்ளத் தானை, தென் திசை வளர்ந்தது அன்றே! 50

வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை, வெய்யோன்
பேர்வு இலாக் காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக்
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய, கணிப்பு இலாத,
வார் கழல் அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதின் போனார். 51

பன்னிரு நாளில் அனைவரும் தென் கடல் சேர்தல்

அந் நெறி நெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும்,
நல் நெறிக் குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த சேனை,
இந் நெடும் பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்,
பன்னிரு பகலில் சென்று, தென் திசைப் பரவை கண்டார். 52

மிகைப் பாடல்கள்

போயினர் களிப்பினோடும், புங்கவன் சிலையின்நின்றும்
ஏயின பகழி என்ன எழுந்து, விண் படர்ந்து, தாவி,
காய் கதிர்க் கடவுள், வானத்து உச்சியில் கலந்த காலை,
ஆயின வீரரும் போய், மதுவனம் அதில் இறுத்தார். 11-1

'"ஏத நாள் இறந்த சால" என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து
ஆதலான், உணர்வு தீர்ந்து வருந்தினம், அளியம்; எம்மைச்
சாதல் தீர்த்து அளித்த வீர! தந்தருள் உணவும்' என்ன,
'போதும் நாம், வாலி சேய்பால்' என்று, உடன் எழுந்து போனார். 11-2

அங்கதன் தன்னை அண்மி, அனுமனும் இரு கை கூப்பி,
'கொங்கு தங்கு அலங்கல் மார்ப! நின்னுடைக் குரக்குச் சேனை,
வெங் கதம் ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;
இங்கு, இதற்கு அளித்தல் வேண்டும், இறால் உமிழ் பிரசம்' என்றான். 11-3

'நன்று' என, அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்து,
சென்று, உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே,
ஒன்றின் முன் ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென் பிரசம் எல்லாம்
தின்று தின்று உவகை கூரும்-தேன் நுகர் அளியின் மொய்த்தே. 11-4

ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர்; உண்ண
ஒருவர் கைக் கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவர்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி
ஒருவர்மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார். 11-5

இன்னன நிகழும் காலை, எரி விழித்து, எழுந்து சீறி,
அந் நெடுஞ் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி,
'மன் நெடுங் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீயிர்,
என் நினைந்து என்ன செய்தீர்? நும் உயிர்க்கு இறுதி' என்ன. 11-6

'முனியுமால் எம்மை, எம் கோன்' என்று, அவர் மொழிந்து போந்து,
'கனியும் மா மதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,
நனி தரு கவியின் தானை, நண்ணலார் செய்கை நாண்
இனி எம்மால் செயல் இன்று' என்னா, ததிமுகற்கு இயம்பினாரே. 11-7

கேட்டவன், 'யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்?
காட்டிர்' என்று எழுந்தான்; அன்னார், 'வாலி சேய் முதல கற்றோர்
ஈட்டம் வந்து இறுத்தது ஆக, அங்கதன் ஏவல் தன்னால்,
மாட்டின, கவியின் தானை, மதுவளர் உலவை ஈட்டம்'. 11-8

'உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால், உறுதி கொண்டே,
குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம்; கொடுமை கூறி;
கரங்களால் எற்ற நொந்தேம்; காவலோய்!' என்னலோடும்,
'தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும்.' 11-9

என உரைத்து, அசனி என்ன எழுந்து, இரைத்து, இரண்டு கோடி
கனை குரல் கவியின் சேனை 'கல்' எனக் கலந்து புல்ல,
புனை மதுச் சோலை புக்கான்; மது நுகர் புனிதச் சேனை,
அனகனை வாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த. 11-10

'இந்திரன் வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம்;
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணைதன்னைச்
சிந்தினை; கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே?
மந்தரம் அனைய தோளாய்! இற்றது உன் வாழ்க்கை இன்றே. 11-11

'மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ' என்னா,
கதுமென வாலி சேய்மேல் எறிந்தனன், கருங் கற் பாறை;
அதுதனைப் புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,
ததிமுகன் தன்னைப் பற்றிக் குத்தினன், தடக்கைதன்னால். 11-12

குத்தினன் என்னலோடும், குலைந்திடும் மெய்யன் ஆகி,
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன், மதுவனத்தைச்
செற்றனன்மேலே ஏவிச் சிரித்தனன், ததிமுகன் தான்;
'இற்றனன், வாலி சேய்' என்று இமையவர் இயம்பும்காலை, 11-13

ஏற்று ஒரு கையால் குன்றை இருந்துகள் ஆக்கி, மைந்தன்
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும், மாண்டான் என்ன,
கூற்றின் வாய் உற்றான் என்ன, உம்பர் கால் குலையப் பானு
மேல் திசை உற்றான் என்ன, விளங்கினன், மேரு ஒப்பான். 11-14

வாய் வழிக் குருதி சோர, மணிக் கையால் மலங்க மோதி,
'போய் மொழி, கதிரோன் மைந்தற்கு' என்று, அவன் தன்னைப் போக்கி,
தீ எழும் வெகுளி பொங்க, 'மற்று அவன் சேனைதன்னை,
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர், கட்டி' என்றான். 11-15

பிடித்தனர்; கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும் முன்னும்
இடித்தனர், அசனி அஞ்ச, எறுழ் வலிக் கரங்கள் ஓச்சி;
துடித்தனர், உடலம் சோர்ந்தார்; 'சொல்லும் போய், நீரும்' என்னா,
விடுத்தனன், வாலி மைந்தன்; விரைவினால் போன வேலை, 11-16

அலை புனல் குடையுமா போல், மதுக் குடைந்து ஆடி, தம்தம்
தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே,
உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்; இப்பால்
சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே. 11-17

'சேற்று இள மரை மலர்த் திருவைத் தேர்க!' எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,
நாற்றிசை மருங்கினும் ஏவி, நாயகன் -
தேற்றினன் இருந்தனன் - கதிரின் செம்மலே. 12-1

'நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்,
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்,
'வாக்கில் தூய அனுமன் வரும்' எனா,
போக்கிப் போக்கி, உயிர்க்கும் பொருமலான். 14-1

என்று உரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின்,
வன் திறல் ததிமுகன் வானரேசன் முன்,
தன் தலை பொழிதரு குருதிதன்னொடும்,
குன்று எனப் பணிந்தனன், இரு கை கூப்பியே. 19-1

எழுந்து நின்று, 'ஐய! கேள், இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம் அடைய' என்றலும்,
வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே,
'மொழிந்திடு, அங்கு யார் அது முடித்துளோர்?' என, 19-2

'நீலனும், குமுதனும், நெடிய குன்றமே
போல் உயர் சாம்பனும், புணரி போர்த்தென
மேல் எழு சேனையும், விரைவின் வந்து உறா,
சால்புடை மதுவனம் தனை அழிப்பவே. 19-3

தகைந்த அச் சேனையைத் தள்ளி, நின்னையும்,
இகழ்ந்து உரைத்து, இயைந்தனன் வாலி செய்; மனக்கு
உகந்தன புகன்ற அவ் உரை பொறாமையே,
புகைந்து, ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே, 19-4

'இமைத்தல் முன், "வாலி சேய், எழில் கொள் யாக்கையைச்
சமைத்தி" என்று எறிதர, புறங்கையால் தகைந்து,
அமைத்தரு கனல் என அழன்று, எற் பற்றியே
குமைத்து, உயிர் பதைப்ப, "நீ கூறு போய்" என்றான். 19-5

'இன்று நான் இட்ட பாடு இயம்ப முற்றுமோ?'
என்று உடல் நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,
அன்று அவன் உரைத்தல் கேட்டு, அருக்கன் மைந்தனும்
ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான் அரோ. 19-6

ஏம்பலோடு எழுந்து நின்று, இரவி கான்முளை,
பாம்பு அணை அமலனை வணங்கி, '"பைந்தொடி
மேம்படு கற்பினள்" என்னும் மெய்ம்மையைத்
தாம் புகன்றிட்டது, இச் சலம்' என்று ஓதினான். 19-7

'பண் தரு கிளவியாள் தன்னைப் பாங்குறக்
கண்டனர்; அன்னது ஓர் களிப்பினால், அவர்
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது;
அண்டர் நாயக! இனி அவலம் தீர்க' என்றான். 19-8

'வந்தனர் தென் திசை வாவினார்' என,
புந்தி நொந்து, 'என்னைகொல் புகலற் பாலர்?' என்று,
எந்தையும் இருந்தனன்; இரவி கான்முளை,
நொந்த அத் ததிமுகன் தன்னை நோக்கியே, 19-9

'யார் அவண் இறுத்தவர், இயம்புவாய்?' என,
'மாருதி, வாலி சேய், மயிந்தன், சாம்பவன்,
சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார்,
ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார்.' 19-10

என்று, அவன் உரைத்த போது, இரவி காதலன்,
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே,
'ஒன்று உனக்கு உணர்த்துவது உளது; வாலி சேய்,
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.' 19-11

'கொற்றவன் பணி தலைக்கொண்டு, தெண் திரை
சுற்றிய திசை எலாம் துருவி, தோகையைப்
பற்றிய பகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து
உற்றனர்; அவரை யாம் உரைப்பது என்னையோ? 19-12

'அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின்,
பின்றுதல் தீதுஅரேர் பிணங்கும் சிந்தையாய்!
ஒன்றும் நீ உணரலை; உறுதி வேண்டு மேல்,
சென்று, அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு' என்றான். 19-13

என்ற அந் ததிமுகன் தன்னை, 'ஏனைய
வன் திறல் அரசு இளங் குரிசில் மைந்தனைப்
பின்றுதல் அவனை என் பேசற் பாற்று நீ;
இன்று போய், அவன் அடி ஏத்துவாய்' என்றான். 19-14

வணங்கிய சென்னியன்; மறைத்த வாயினன்;
உணங்கிய சிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;
கணங்களோடு ஏகி, அக் கானம் நண்ணினான்-
மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்துஅரோ. 19-15

கண்டனன் வாலி சேய்; கறுவு கைம்மிக,
'விண்டவன், நம் எதிர் மீண்டுளான்எனின்,
உண்டிடுகுதும் உயிர்' என்ன, உன்னினான்;
'தொண்டு' என, ததிமுகன், தொழுது தோன்றினான். 19-16

'போழ்ந்தன யான் செய்த குறை பொறுக்க!' எனா,
வீழ்ந்தனன் அடிமிசை; வீழ, வாலி சேய்,
தாழ்ந்து, கைப் பற்றி, மெய் தழீஇக்கொண்டு, 'உம்மை யான்
சூழ்ந்ததும் பொறுக்க!' எனா, முகமன் சொல்லினான். 19-17

'யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற, துயர் துடைத்து, அளித்த ஏற்றம்போல்,
தாமரைக் கண்ணவன் துயரம் தள்ள, நீர்
போம்' என, தொழுது, முன் அனுமன் போயினான். 19-18

'வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்;
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான்'
என்றுகொண்டு, யாவரும், 'எழுந்து போதலே
நன்று' என, ஏகினார், நவைக்கண் நீங்கினார். 19-19

இப்புறத்து இராமனும், இரவி சேயினை
ஒப்புற நோக்கி, 'வந்துற்ற தானையர்;
தப்பு அறக் கண்டனம் என்பரோ? தகாது
அப்புறத்து என்பரோ? அறைதியால்!' என்றான். 19-20

வனை கருங் குழலியைப் பிரிந்த மாத் துயர்
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு,
அனுமனும் அண்ணலுக்கு அறியக் கூறுவான்: 23-1

'மாண் பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்
காண் பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள்,
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே? 35-1

'அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர் எனினும், ஐய!-
எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற
மயில் புரை இயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே
உயிர்ப்பொடும், உயிரினோடும், ஊசல் நின்று ஆடுவாரும்.' 35-2

ஆயிடை, கவிகளோடும், அங்கதன் முதலினாயோர்
மேயினர், வணங்கிப் புக்கார், வீரனை, கவியின் வேந்தை;
போயின கருமம் முற்றிப் புகுந்தது ஓர் மொம்மல்தன்னால்,
சேயிரு மதியம் என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார். 47-1

நீலனை நெடிது நோக்கி, நேமியான் பணிப்பான்: 'நம்தம்-
பால் வரும் சேனை தன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம்,
சால்புற முன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி,
மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ.' 49-1

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை கூப்பி,
'புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடைப் புகுதி' என்னா,
தன் தலை படியில் தாழ்ந்தான்; அண்ணலும், சரணம் வைத்தான்;
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கிச் சொன்னான்: 49-2

'நீ இனி என் தன் தோள்மேல் ஏறுதி, நிமல!' என்ன,
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி,
நாயகற்கு இளைய கோவும், 'நன்று' என அவன்தன் தோள்மேல்
பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது அன்றே. 49-3

கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப, காலின்
அருள் தரு குமரன் தோள்மேல், அங்கதன் அலங்கல் தோள்மேல்,
பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில் தங்கும்
தெருள் தரு புலவர் வாழ்த்திச் சிந்தினர், தெய்வப் பொற் பூ. 49-4

'வையகம் அதனில் மாக்கள் மயங்குவர், வய வெஞ் சேனை
எய்திடின்' என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,
பெய் கனி, கிழங்கு, தேன், என்று இனையன பெறுதற்கு ஒத்த
செய்ய மால் வரையே ஆறாச் சென்றது, தகைப்பு இல் சேனை. 49-5


 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home