Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > 1 ஆற்றுப் படலம் > 2 நாட்டுப் படலம் > 3 நகரப் படலம் > 4 அரசியற் படலம் > 5 திரு அவதாரப் படலம் > 6 கையடைப் படலம் > 7 தாடகை வதைப் படலம் >8 வேள்விப் படலம் > 9 அகலிகைப் படலம் > 10 மிதிலைக் காட்சிப் படலம் > 11 குலமுறை கிளத்து படலம் > 12 கார்முகப் படலம் >13 எழுச்சிப் படலம் > 14 சந்திர சயிலப் படலம் > 15 வரைப் காட்சிப் படலம் >16 பூக் கொய் படலம் > 17 நீர் விளையாட்டுப் படலம் > 18 உண்டாட்டுப் படலம் > 19 எதிர்கொள் படலம் > 20 உலாவியற் படலம் > 21 கோலம் காண் படலம் >22 கடிமணப் படலம் > 23 பரசுராமப் படலம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
பால காண்டம் - 16. பூக் கொய் படலம்



காலையில் தயரதன் சோணை ஆற்றை அடைதல்
மீனுடை எயிற்றுக் கங்குல்-கனகனை வெகுண்டு, வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி,
தானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள் நின்று,
மானுட மடங்கல் என்ன, தோன்றினன், - வயங்கு வெய்யோன். 1

முறை எலாம் முடித்த, மன்னர் மன்னனும், மூரித் தேர்மேல்
இறை எலாம் வணங்கப் போனான்; எழுந்து, உடன், சேனை வெள்ளம்,
குறை எலாம் சோலை ஆகி, குழி எலாம் கழுநீர் ஆகி,
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே. 2

உச்சி வேளையில் சோலையைச் சார்தல்
அடைந்து, அவண் இறுத்த பின்னர், அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான்;
மடந்தையர் குழாங்களோடு, மன்னரும், மைந்தர் தாமும்,
குடைந்து வண்டு உறையும் மென் பூக் கொய்து நீராட, மை தீர்
தடங்களும், மடுவும் சூழ்ந்த, தண் நறுஞ் சோலை சார்ந்தார். 3

மாதரைக் கண்ட மயில் முதலியவற்றின் செய்கை
திண் சிலை புருவம் ஆக, சேயரிக் கருங் கண் அம்பால்,
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற, மஞ்ஞை;
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப, நாணினால் பறந்த, கிள்ளை;
ஒண் சிலம்பு அரற்ற, மாதர் ஒதுங்குதோறு, ஒதுங்கும் அன்னம். 4

மாதர் தோழியரோடு ஆடக் கண்ட ஆடவர் மயங்கி நிற்றல்
செம் பொன் செய் சுருளும் தெய்வக் குழைகளும் சேர்ந்து மின்ன,
பம்பு தேன் அலம்ப ஒல்கி, பண்ணையின் ஆடல் நோக்கி,
கொம்பொடும், கொடி அனாரைக் குறித்து அறிந்து உணர்தல் தேற்றார்,
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும், மயங்கி நின்றார். 5

குயில்களின் நாணி ஒதுங்குதல்
பாசிழைப் பரவை அல்குல், பண் தரு கிளவி, தண் தேன்
மூசிய கூந்தல், மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு,
கூசின அல்ல் பேச நாணின, குயில்கள் எல்லாம்-
வாசகம் வல்லார் முன் நின்று, யாவர் வாய் திறக்க வல்லார்? 6

மாதர் பூங் கொம்பைத் தீண்டலும், மலர் சொரிந்து கொம்பு தாழ்தலும்
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி,
செஞ்செவே கமலக் கையால் தீண்டலும், நீண்ட கொம்பும்,
தம் சிலம்பு அடியில் மென் பூச் சொரிந்து உடன் தாழ்ந்த என்றால்,
வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார்? 7

அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர்க் கைகள் தீண்ட,
வம்பு இயல் அலங்கல் பங்கி, வாள் அரி மருளும் கோளார் -
தம் புய வரைகள் வந்து தாழ்வன் தளிர்த்த மென் பூங்
கொம்புகள் தாழும் என்றல், கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ! 8

மகளிரின் மேல் வண்டுகள் மொய்த்தல்
நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு
மதி நுதல் வல்லி பூப்ப, நோக்கிய மழலைத் தும்பி
அதிசயம் எய்தி, புக்கு வீழ்ந்தன் அலைக்கப் போகா -
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்? 9

மலர் கொய்துநின்ற மகளிரின் செயல்கள்
உலம் தரு வயிரத் திண் தோள் ஒழுகி, வார் ஒளி கொள் மேனி
மலர்ந்த பூந் தொடையல் மாலை மைந்தர் பால், மயிலின் அன்னார்
கலந்தவர் போல, ஒல்கி ஒசிந்தன, சில் கை வாராப்
புலந்தவர் போல நின்று, வளைகில, பூத்த கொம்பர். 10

பூ எலாம் கொய்து கொள்ள, பொலிவு இல துவள நோக்கி,
'யாவை ஆம் கணவர் கண்ணுக்கு? அழகு இல இவை' என்று எண்ணி,
கோவையும், வடமும், நாணும், குழைகளும், குழையப் பூட்டி,
பாவையர், பனி மென் கொம்பை நோக்கினர், பரிந்து நிற்பார். 11

மகளிரின் வெறுங் கூந்தலை வண்டுகள் மொய்த்த காட்சி
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம்,
நறுங் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார்
வெறுங் கூந்தல் மொய்க்கின்றன் வேண்டல வேண்டு போதும்;-
உறும் போகம் எல்லாம், நலன் உள் வழி, உண்பர் அன்றே! 12

மங்கையர் கண் பனி சோர நின்ற காட்சி
மெய்ப் போதின் நங்கைக்கு அணி அன்னவள், வெண் பளிங்கில்
பொய்ப் போது தாங்கிப் பொலிகின்ற தன் மேனி நோக்கி
'இப் பாவை எம் கோற்கு உயிர் அன்னவள்' என்ன உன்னி,
கைப் போதினோடு நெடுங் கண் பனி சோர நின்றாள். 13

கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு, ஒர் மன்னன்,
தோள் உண்ட மாலை ஒரு தோகையைச் சூட்ட நோக்கி,
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண், ஆவி,
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என, வார நின்றாள். 14

கணவன் மறைந்து நிற்க மறுகும் மனைவி
மயில் போல் வருவாள் மனம் காணிய, காதல் மன்னன்,
செயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச் சூழல் சேர,
பயில்வாள், இறை பண்டு பிரிந்து அறியாள், பதைத்தாள்;
உயிர் நாடி ஒல்கும் உடல்போல் அலமந்து உழந்தாள். 15

புலந்து நின்ற ஒருத்தி குயிலை மலர் பறித்துத் தர வேண்டல்
மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற,
நெய் தாவும் வேலானொடு, நெஞ்சு புலந்து நின்றாள்,
எய்தாது நின்றம் மலர் நோக்கி, 'எனக்கு இது ஈண்டக்
கொய்து ஈதி' என்று, ஓர் குயிலை, கரம் கூப்புகின்றாள். 16

புலவிக் காட்சிகள்
செம்மாந்த தெங்கின் இளநீரை, ஓர் செம்மல் நோக்கி,
'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,
'எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?' என்று, ஒர் ஏழை,
விம்மா, வெதும்பா, வெயரா, முகம் வெய்துயிர்த்தாள். 17

'போர்' என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங் கொள் திண் தோள்
மாரன் அனையான், மலர் கொய்து இருந்தானை, வந்து ஒர்
கார் அன்ன கூந்தல், குயில் அன்னவள், கண் புதைப்ப,
'ஆர்?' என்னலோடும், அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள். 18

மன்னனின் செயல்
ஊற்று ஆர் நறை நாள்மலர், மாதர், ஒருங்கு வாசச்
சேற்றால் விளையாத செந்தாமரைக் கைகள் நீட்டி,
ஏற்றாரை நோக்கான், இடை ஏந்தினன், நின்று ஒழிந்தான் -
மாற்றான், உதவான், கடு வச்சையன்போல் - ஒர் மன்னன். 19

மாற்றவள் பேரைக் கணவன் கூறக் கேட்ட பெண்ணின் துயரம்
தைக்கின்ற வேல் நோக்கினாள், தன் உயிர் அன்ன மன்னன்,
மைக் கொண்ட கண்ணாள் எதிர், மாற்றவள் பேர் விளம்ப,
மெய்க் கொண்ட நாணம் தலைக்கொண்டிட விம்மி, மென் பூக்
கைக் கொண்டு மோந்தாள்; உயிர்ப்புண்டு கரிந்தது அன்றே! 20

தன் தேவிமாருடன் திரிந்த மன்னனின் தோற்றம்
திண் தேர் அரசன் ஒருவன், குலத் தேவிமார் தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிக்கத் திரிவான், மதம் கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்கத் திரி மா மத யானை ஒத்தான். 21

தலைவன்மேல் அவனது மனைவியர் இருவர் சினந்து புலத்தல்
சந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள் தனக்கும்,
வந்திக்கல் ஆகும் மடவாட்கும், வகுத்து நல்கி,
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப, மென் பூச்
சிந்தி, கலாப மயிலின், கண் சிவந்து, போனார். 22

மகளிர் ஆடவர் செயல்கள்
வந்து, எங்கும், தம் மன் உயிரேயோ, பிறிது ஒன்றோ? -
கந்தம் துன்றும் சோர் குழல் காணார்; கலை பேணார்;
அந்தம் தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார்; -
சிந்தும் சந்தத் தே மலர் நாடித் திரிவாரும்; 23

யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்,
தாழத் தாழாள்; தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்;
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்
சூழற்கே, தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்; 24

அம் தார் ஆகத்து ஐங் கணை நூறாயிரம் ஆகச்
சிந்தா நின்ற சிந்தையினான், செய்குவது ஓரான்,
'மந்தாரம் கொண்டு ஈகுதியோ, மாதவி?' என்று, ஓர்
சந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால் தளர்வானும்; 25

நாடிக் கொண்டாள், குற்றம் நயந்தாள்; முனிவு ஆற்றாள்;
ஊடிக் காணக் காட்டும் நலத்தாள் உடன் நில்லாள்;
தேடித் தேடிச் சேர்த்த நறும் பூஞ் செழு மாலை
சூடிச் சூடி, கண்ணடி நோக்கித் துவள்வாளும்; 26

'மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான், இடையே வந்து
உற, இக் கோலம் பெற்றிலென் என்றால், உடன் வாழ்வு இப்
பிறவிக்கு ஒல்லேன்; என் செய்வது, இப் பேர் அணி?' என்று, ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து, இழை எல்லாம் விடுவாளும்; 27

வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக்கின்ற நுண் இடை நோவ, கசிவாளும்;
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி, பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க, குழைவாளும்; 28

தன்னைக் கண்டாள்; மென் நடை கண்டாள்; தமரைப்போல்
துன்னக் கண்டாள்; தோழமை கொண்டாள்; துணை என்றாள்;
'உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது; உடு நீ' என்று,
அன்னக் கன்னிக்கு, ஆடை அளிப்பான் அமைவாளும்; 29

பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி, கொம்பின் ஒதுங்கி, துணர் ஈன்ற
சாகைத் தம் கை, கண்கள் புதைத்தே தளர்வாளும்; 30

'பொன்னே, தேனே, பூமகளே, காண், எனை' என்னா,
தன் நேர் இல்லாள், அங்கு, ஒரு கொய்யல் தழை மூழ்கி,
'இன்னே என்னைக் காணுதி நீ' என்று, இகலி, தன்
நல் நீலக் கண் கையின் மறைத்து, நகுவாளும்; 31

வில்லில் கோதை நாண் உற மிக்கோன், இகல் அங்கம்
புல்லிக் கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி,
அல்லின் கோதை மாதர் முகப் பேர் அரவிந்தச்
செல்வக் கானில், செங்கதிர் என்னத் திரிவாரும்; 32

செய்யில் கொள்ளும் தௌ; அமுதச் செஞ் சிலை ஒன்று
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார், தம்
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலைச் சொல்,
தெய்வப் பாடல் சொல் கலை என்ன, தெரிவாரும்; 33

சோலைத் தும்பி மென் குழல் ஆக, தொடை மேவும்
கோலைக் கொண்ட மன்மத ஆயன், குறி உய்ப்ப,
நீலத்து உண்கண் மங்கையர் சூழ, நிரை ஆவின்,
மாலைப் போதில் மால் விடை என்ன வருவாரும். 34

'ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது, காமன் கை வில்' எனும்
வாக்கு மாத்திரம்; அல்லது, வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே! 35

நாறு பூங் குழல் நன்னுதல், புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று, ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்,
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ! 36

சினையின்மேல் இருந்தான், உருத் தேவரால்
வனையவும் அரியாள் வனப்பின் தலை,
நினைவும், நோக்கமும், நீக்கலன்; கைகளால்,
நனையும் நாள் முறியும் கொய்து, நல்கினான். 37

வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி, -ஓர்
தண்டு போல் புயத்தான் தடுமாறினான்,
'உண்டு கோபம்' என்று உள்ளத்து உணர்ந்து; - அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே. 38

பூக் கொய்தலை வெறுத்து, யாவரும் புனலாடப் புகுதல்
ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்,
தூய தண் நிழல் சோலை, துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர்; வெண் திரை
பாயும் தீம் புனல் - பண்ணை சென்று எய்தினார். 39

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home