Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam >பால காண்டம் > 1 ஆற்றுப் படலம் > 2 நாட்டுப் படலம் > 3 நகரப் படலம் > 4 அரசியற் படலம் > 5 திரு அவதாரப் படலம் > 6 கையடைப் படலம் > 7 தாடகை வதைப் படலம் >8 வேள்விப் படலம் > 9 அகலிகைப் படலம் > 10 மிதிலைக் காட்சிப் படலம் > 11 குலமுறை கிளத்து படலம் > 12 கார்முகப் படலம் >13 எழுச்சிப் படலம் > 14 சந்திர சயிலப் படலம் > 15 வரைப் காட்சிப் படலம் >16 பூக் கொய் படலம் > 17 நீர் விளையாட்டுப் படலம் > 18 உண்டாட்டுப் படலம் > 19 எதிர்கொள் படலம் > 20 உலாவியற் படலம் > 21 கோலம் காண் படலம் >22 கடிமணப் படலம் > 23 பரசுராமப் படலம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
பால காண்டம் - 7. தாடகை வதைப் படலம்


விசுவாமித்திரன் கூறிய அங்க நாட்டு வரலாறும், காமன் ஆச்சிரமப் பெருமையும்

'திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு அனங்கனே ஆயினான். 1

'வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்,
ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும், அக்
காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே. 2

'பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்,
சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே?' 3

இரவு தங்கி, மறுநாள் மூவரும் ஒரு பாலைவனம் சேர்தல்
என்று, அ(வ்) அந்தணன் இயம்பலும், வியந்து, அவ் வயின்
சென்று, வந்து எதிர் தொழும் செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார். 4

 

பாலை நிலத்தின் தன்மை
பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின், வேம் உள்ளமும்; காணின், வேம் நயனமும். 5

படியின்மேல் வெம்மையைப் பகரினும், பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்;
விடியுமேல், வெயிலும் வேம்; மழையும் வேம்; மின்னினோடு
இடியும் வேம்; என்னில், வேறு யாவை வேவாதவே? 6

விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட,
செஞ்செவே செருமுகத்து அன்றியே, திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல், என்றும் ஆறாது அரோ. 7

பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும், தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும், விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே-வனம் எலாம். 8

பாரும் ஓடாது; நீடாது எனும் பாலதே:
சூரும் ஓடாது; கூடாதுஅரோ: சூரியன்
தேரும் ஓடாது, மா மாகம் மீ; தேரின், நேர்
காரும் ஓடாது; நீள் காலும் ஓடாது அரோ. 9

கண் கிழித்து உமிழ் விடக் கனல் அரா-அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி, வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள், மண்மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே. 10

புழுங்கு வெம் பசியடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்வாய்,
முழங்கு திண் கரி புகும் முடுகி-மீமிசை
வழங்கு வெங் கதிர் சுட, மறைவு தேடியே! 11

ஏக வெங் கனல் அரசிருந்த, காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின்-
மாக வெங் கனல் எனும் வடவைத் தீச் சுட,
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே. 12

கானகத்து இயங்கிய கழுதின் தேர்க் குலம்,
'தான் அகத்து எழுதலால் தலைக் கொண்டு ஓடிப்போய்,
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம்' எனா,
வானவர்க்கு இரங்கி, நீர் வளைந்தது ஒத்ததே! 13

ஏய்ந்த அக் கனலிடை எழுந்த கானல்-தேர்,
காய்ந்த அக் கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் காலுடைப் பளிக்குப் பீடமே! 14

தா வரும் இரு வினை செற்று, தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே! 15

பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின், பெரு வழி விளங்கித் தோன்றலால்,
அரி மணிப் பணத்து அரா-அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே! 16

வெம்மையை தாங்கும் ஆற்றல் பெற இராம இலக்குவருக்கு
இரண்டு மந்திரங்களை முனிவன் உபதேசித்தல்
எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
அருந் தவன், 'இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது' என மனத்தின் நோக்கினான். 17

நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார். 18

அந்த நிலம் அழிந்த காரணத்தை முனிவனிடம் இராமன் வினாவுதல்
'சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ?
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம், அறிஞ! கூறு' என்றான். 19

விசுவாமித்திரன் தாடகையின் வரலாறு கூறுதல்
என்றலும், இராமனை நோக்கி, 'இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள், கூற்றின் தோற்றத்தள்,
அன்றியும் ஐ-இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள், உறுதி கேள்' எனா, 20

'மண் உருத்து எடுப்பினும், கடலை வாரினும்,
விண் உருத்து இடிப்பினும், வேண்டின், செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்; 21

'பெரு வரை இரண்டொடும், பிறந்த நஞ்சொடும்,
உரும் உறழ் முழக்கொடும், ஊழித் தீயடும்,
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்,
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே; 22

'சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்;-கண்ணின் காண்பரேல்,
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
'தாடகை" என்பது அச் சழக்கி நாமமே; 23

'உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்,
கிளப்ப அருங் கொடுமைய அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்; 24

'இலங்கை அரசன் பணி அமைந்து, ஒர் இடையூறா,
விலங்கள் வலிகொண்டு, எனது வேள்வி நலிகின்றாள்;-
அலங்கல் முகிலே!-அவள் இ(வ்) அங்க நிலம் எங்கும்
குலங்களடு அடங்க நனி கொன்று திரிகின்றாள்; 25

'முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்;-மைந்த!-
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்' என்றான். 26

தாடகையின் உறைவிடத்தை இராமன் வினாவுதல்
அங்கு, உறுவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
'எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்?' என்றான் -
சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான். 27

தாடகை உறையும் மலையை முனிவன் காட்ட, தாடகை அங்குத் தோன்றுதல்
கைவரை எனத் தகைய காளை உரை கேளா,
ஐவரை அகத்திடை அடைத்த முனி, 'ஐய!
இவ் வரை இருப்பது அவள்' என்பதனின் முன்பு, ஓர்
மை வரை நெருப்பு எரிய வந்ததென, வந்தாள். 28

தாடகையின் தோற்றம்
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள் 29

இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள். 30

கடம் கலுழ் தடங் களிறு கையடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். 31

தாடகை ஆரவாரத்துடன் அவர்களை நோக்கி நகைத்து, வீர உரை பகர்தல்
ஆர்த்து, அவரை நோக்கி நகைசெய்து, எவரும் அஞ்ச,
கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து, எயிறு தின்று, பகு வாய்முழை திறந்து, ஓர்
வார்த்தை உரைசெய்தனள்-இடிக்கும் மழை அன்னாள் - 32

'கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட, கருவறுத்தனென்; இனி, "சுவை கிடக்கும்
விடக்கு அரிது" எனக் கருதியோ? விதிகொடு உந்த,
படக் கருதியோ?-பகர்மின், வந்த பரிசு!' என்றே. 33
'வேல் கொண்டு எறிவேன்?' எனத் தாடகை சினந்து வருதல்
மேகம் அவை இற்று உக விழிந்தனள், புழுங்கா,
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
'ஆகம் உற உய்த்து, எறிவென்' என்று, எதிர் அழன்றாள். 34

'பெண்" என்றெண்ணி இராமன் கணை தொடாதிருத்தல்
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், 'ஆவி
உண்'என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
'பெண்' என மனத்திடை பெருந்தகை நினைந்தான். 35

இராமன் கருத்தறிந்த முனிவன், 'இவள் பெண் அல்லள்; கொல்லுதி' எனல்
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள், தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும், பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து, நான்மறை அந்தணன் கூறுவான்: 36

'தீது என்றுள்ளவை யாவையும் செய்து, எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்,
மாது என்று எண்ணுவதோ?-மணிப் பூணினாய்! 37

'நாண்மையே உடையார்ப் பிழைத்தால், நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்,
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே? 38

'இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்,
தந்திரம் படத் தானவர், வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின், மைந்தரோடு,
அந்தரம் இனி யாதுகொல், ஆண்மையே? 39

'கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியோரொடும்
மறம்கொடு, இத் தரை மன்னுயிர் மாய்த்து, நின்று,
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ? 40

'சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்! 41

'மன்னும் பல் உயிர் வாரி, தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது? -ஐய!-
"பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை, எளிமையின் பாலதே! 42

'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான். 43

முனிவனின் ஏவலுக்கு இராமன் இசைந்து கூறுதல்
ஐயன் அங்கு அது கேட்டு, 'அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!" என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு' என்றான். 44

தாடகை சூலப் படையை ஏவ, இராமன் அம்பால் அதனைத் துணித்தல்
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
வெங் கண் தீயடு மேற்செல வீசினாள். 45

புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ, முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல், உவா
மதியின்மேல் வரும் கோள் என, வந்ததே. 46

மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர். 47

தாடகை கல் மழை பொழிய, இராமன் அம்பு மழையால் தடுத்தல்
அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லும் மாத்திரையின், கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின், வீரன் விலக்கினான். 48

இராம பாணம் தாடகையின் நெஞ்சில் ஊடுருவ, அவள் மாய்ந்து மண்ணில் வீழ்தல்
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! 49

பொன் நெடுங் குன்றம் அன்னான், புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், -இடித்து, வானில்
கல் நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்த மேகம்,
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 50

பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள். 51

கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழிகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம் பரந்ததால்-அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே! 52

வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே. 53

தேவர்கள் மகிழ்ந்து வாழ்த்துதல்
'யாமும் எம் இருக்கை பெற்றேம்; உனக்கு இடையூறும் இல்லை;
கோமகற்கு இனி நீ தெய்வப் படைக்கலம் கொடுத்தி' என்னா,
மா முனிக்கு உரைத்து, பின்னர், வில் கொண்ட மழை அனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி, விண்ணவர் போயினாரே. 54

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home