Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
பால காண்டம் - 5. திரு அவதாரப் படலம்
மகப் பேறு இல்லாமை
குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல்
ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது, 'தொல் குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
மேய வான் கடவுளும், பிறவும், வேறும், நீ; 1
'எம் குலத் தலைவர்கள், இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,
மங்குநர் இல் என, வரம்பு இல் வையகம்,
இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன். 2
அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ. 3
'அருந் தவ முனிவரும், அந்தணாளரும்,
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும், என் அகத்தை' என்றனன். 4
முன்னம் அமரர்க்குத் திருமால் அருளியதை வசிட்டன் சிந்தித்தல்
முரசு அறை செழுங் கடை, முத்த மா முடி,
அரசர் தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்- 5
அலை கடல் நடுவண், ஓர் அனந்தன் மீமிசை,
மலை என விழி துயில்வளரும் மா முகில்,
'கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்' என்று,
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையே. 6
பாக சாதனந்தனைப் பாசத்து ஆர்த்து, அடல்
மேகநாதன், புகுந்து இலங்கை மேய நாள்,-
போக மா மலர் உறை புனிதன்,- மீட்டமை,
தோகை பாகற்கு உறச் சொல்லினான் அரோ. 7
இருபது கரம், தலை ஈர்-ஐந்து, என்னும் அத்
திருஇலி வலிக்கு, ஒரு செயல் இன்று, எங்களால்;
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது, இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பினால். 8
திரை கெழு பயோததித் துயிலும், தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
கர கமலம் குவித்து இருந்த காலையில்,-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன், 9
கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான். 10
எழுந்தனர், கறைமிடற்று இறையும்; தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும் சென்று, எதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோரொடும்;
தொழும்தொறும், தொழும் தொறும், களி துளங்குவார். 11
ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
சூடினர், முறை முறை துளவத் தாள்-மலர். 12
பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்,
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து, அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான். 13
விதியடு முனிவரும், விண்ணுளோர்களும்,-
மதி வளர் சடைமுடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து, அயல் இருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர் தம் கொடுமை கூறுவார்: 14
மெய் வலி அரக்கரால், விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன் -திருவின் நாயக!-
உய் திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார். 15
'எங்கள் நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இது தீர்த்தி; இல்லையேல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியில்' என்றனர். 16
என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான், 'வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீர் கேண்ம்' என, உரைத்தல் மேயினான்: 17
'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்,
கானினும், வரையினும், கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என,
ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்: 18
'மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி. 19
'வளையடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன். 20
என்று அவன் உரைத்தபோது, எழுந்து துள்ளினார்;
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
'மன்றல் அம் செழுந் துளவு அணியும் மாயனார்,
இன்று எமை அளித்தனர்' என்னும் ஏம்பலால். 21
'போயது எம் பொருமல்' என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலர் உளோனும், சுடர்மதி சூடினோனும்,
சேய் உயர் விசும்பு உளோரும், 'தீர்ந்தது எம் சிறுமை' என்றார்;
மா இரு ஞாலம் உண்டோன், கலுழன்மேல் சரணம் வைத்தான். 22
என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
"முன்னரே எண்கின்வேந்தன் யான்"-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்' என்றான். 23
தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், 'எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன்
இரவி, 'மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்' என்று ஓத்
அரியும், 'மற்று எனது கூறு நீலன்' என்று அறைந்திட்டானால். 24
வாயு, 'மற்று எனது கூறு மாருதி' எனலும், மற்றோர்,
'காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
போயிடத் துணிந்தோம்' என்றார்; புராரி, 'மற்று யானும் காற்றின்
சேய்' எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ. 25
அருள் தரும் கமலக் கண்ணன் அருள்முறை, அலர் உளோனும்,
இருள் தரும் மிடற்றினோனும், அமரரும், இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில், மண்ணில், வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் இருவர் தம் தம் உறைவிடம் சென்று புக்கார். 26
புதல்வரை அளிக்கும் வேள்வி செய்ய வசிட்டன் கூறுதல்
ஈது, முன் நிகழ்ந்த வண்ணம் என, முனி, இதயத்து எண்ணி,
'மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ்-ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும்' என்றான். 27
வேள்வி செய்ய வேண்டுவது யாது என தயரதன் வினவுதல்
என்ன மா முனிவன் கூற, எழுந்த பேர் உவகை பொங்க,
மன்னவர்மன்னன், அந்த மா முனி சரணம் சூடி,
'உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ?
அன்னதற்கு, அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி' என்றான். 28
கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு வேள்வி செய்யுமாறு வசிட்டன்
உரைத்தல்
'மாசு அறு சுரர்களோடு மற்றுளோர் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன், விபாண்டகன், கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன், இருங் கலை பிறவும் எண்ணின்
தேசுடைத் தந்தை ஒப்பான், திருவருள் புனைந்த மைந்தன், 29
'வரு கலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும், வாய்மை
தரு கலை மறையும், எண்ணின், சதுமுகற்கு உவமை சான்றோன்,
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும். 30
'பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன், மா தவத்தன்,
எண்ணின்
பூந் தவிசு உகந்து உளோனும், புராரியும், புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின், தணையர்கள் உளர் ஆம்' என்றான். 31
கலைக்கோட்டு முனிவனை அழைத்து வரும் வழி பற்றி தயரதன் கேட்டல்
ஆங்கு, உரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன், செய்ய
பூங் கழல் தொழுது, வாழ்த்தி, பூதல மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க செழுந் தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி, இறைவ!' என்றான். 32
கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை வசிட்டன் உரைத்தல்
'புத்து ஆன கொடு வினையோடு அருந் துயரம் போய் ஒளிப்ப,-புவனம்
தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயையினொடும் தண் அளியின் சலை
போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான், மனுகுலத்தே வந்து உதித்தோன்,
இலங்கும் மோலி
உத்தானபாதன்,-அருள் உரோமபதன் என்று உளன், இவ் உலகை ஆள்வோன்; 33
'அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடுங் காலம்
அளவது ஆக,
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம் பெருகுதலும், வேத நல்
நூல்
மன்னு முனிவரை அழைத்து, மா தானம் கொடுத்தும், வான் வழங்காது
ஆக,
பின்னும், முனிவரர்க் கேட்ப, "கலைக்கோட்டு-முனி வரின், வான்
பிலிற்றும்" என்றார். 34
'"ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே
உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை யாவது?" எனக்
குணிக்கும் வேலை
சோதி நுதல், கரு நெடுங் கண், துவர் இதழ் வாய், தரள நகை, துணை
மென் கொங்கை,
மாதர் எழுந்து, "யாம் ஏகி, அருந் தவனைக் கொணர்தும்" என,
வணக்கம் செய்தார். 35
ஆங்கு, அவர் அம் மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து, அவர்க்கு, அணி,
தூசு, ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி, "பனிப் பிறையைப் பழித்த நுதல், பணைத்த
வேய்த் தோள்,
ஏங்கும் இடை, தடித்த முலை, இருண்ட குழல், மருண்ட விழி, இலவச்
செவ் வாய்ப்
பூங்கொடியீர்! ஏகும்" என, தொழுது இறைஞ்சி, இரதமிசைப் போயினாரே.
36
'ஓசனை பல கடந்து, இனி ஒர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி,
பாசிழை மடந்தையர், பன்னசாலை செய்து,
ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார். 37
'அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே,
கருந் தடங் கண்ணியர், கலை வலாளன் இல்
பொருந்தினர்; பொருந்துபு, "விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர்" என, இனைய செய்தனர். 38
'அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து,
"இருக்க" என, இருந்த பின், இனிய கூறலும்,
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா,
பொருக்கென எழுந்து போய், புரையுள் புக்கனர். 39
'திருந்து இழையவர், சில தினங்கள் தீர்ந்துழி,
மருந்தினும் இனியன வருக்கை, வாழை, மாத்
தருங் கனி பலவொடு, தாழை இன் கனி,
"அருந் தவ, அருந்து" என, அருந்தினான் அரோ. 40
'இன்னவன் பல் பகல் இறந்தபின், திரு
நல் நுதல் மடந்தையர், நவை இல் மாதவன் -
தன்னை, "எம் இடத்தினும், சார்தல் வேண்டும்" என்று,
அன்னவர் தொழுதலும், அவரொடு ஏகினான். 41
'விம்முறும் உவகையர், வியந்த நெஞ்சினர்,
"அம்ம! ஈது, இது" என, அகலும் நீள் நெறி,
செம்மை சேர் முனிவரன் தொடரச் சென்றனர்;-
தம் மனம் என மருள் தையலார்களே. 42
'வளநகர் முனிவரன் வருமுன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்,
சள சள என மழைத் தாரை கான்றனகுள
னொடு நதிகள் தம் குறைகள் தீரவே. 43
'பெரும் புனல், நதிகளும் குளனும், பெட்பு உற,
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட,
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்து போது, அரசு உணர்ந்தனன். 44
"காமமும், வெகுளியும், களிப்பும், கைத்த அக்
கோமுனி இவண் அடைந்தனன் கொல்-கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?" 45
'என்று எழுந்து, அரு மறை முனிவர் யாரொடும்
சென்று, இரண்டு ஓசனை சேனை சூழ்தர,
மன்றல் அம் குழலியர் நடுவண், மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான். 46
'வீழ்ந்தனன் அடிமிசை, விழிகள் நீர் தர்
"வாழ்ந்தனெம் இனி" என, மகிழும் சிந்தையான்,
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி, "நீர்
போழ்ந்தனிர் எனது இடர், புணர்ப்பினால்" என்றான். 47
'அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை,
வர முனி, "வஞ்சம்" என்று உணர்ந்த மாலைவாய்,
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்,
கரை எறியாது அலை கடலும் போன்றனன். 48
'வள் உறு வயிர வாள் மன்னன், பல் முறை,
எள்ள அரு முனிவனை இறைஞ்சி, யாரினும்
தள்ள அருந் துயரமும், சமைவும், சாற்றலும்,
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம் அரோ. 49
'அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,
உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி, நல்
பொருள தரும் முனிவரும் தொடரப் போயினன் -
மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன். 50
'அடைந்தனன், வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட, முனியடும் வேந்தன்; கோயில் புக்கு,
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி, ஓர்
மடங்கல்-ஆதனத்தின்மேல் முனியை வைத்தனன். 51
'அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி, வேறு
உரைக்குவது இலது என உவந்து, தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முக நலாள்தனை,
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன். 52
'வறுமை நோய் தணிதர வான் வழங்கவே,
உறு துயர் தவிர்ந்தது, அவ் உலகம்; வேந்து அருள்
செறிகுழல் போற்றிட, திருந்து மா தவத்து
அறிஞன், ஆண்டு இருக்குநன்; அரச!' என்றனன். 53
கலைக்கோட்டு முனிவனை அழைக்கத் தயரதன் உரோமபதன் நாட்டுக்குச்
செல்லுதல்
என்றலுமே, முனிவரன் தன் அடி இறைஞ்சி, 'ஈண்டு ஏகிக் கொணர்வென்'
என்னா,
துன்று கழல் முடிவேந்தர் அடி போற்ற, சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ, மா மணித் தேர் ஏறுதலும், வானோர்
வாழ்த்தி,
'இன்று எமது வினை முடிந்தது' எனச் சொரிந்தார் மலர் மாரி,
இடைவிடாமல். 54
காகளமும் பல் இயமும் கனை கடலின் மேல் முழங்க, கானம் பாட,
மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள், வாழ்த்து எடுப்ப, மதுரச்
செவ் வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்ப, கடல்-தானை புடை சூழ, சுடரோன் என்ன
ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே.
55
உரோமபதன் தயரதனை எதிர்கொண்டழைத்து உபசரித்தல்
கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன் அடைந்தமை சென்று
ஒற்றர் கூற,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல்-தானை புடை சூழ, கழற் கால்
வேந்தன்,
செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச, மாகதர்கள் திரண்டு
வாழ்த்த,
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் - அரசை எதிர்கோள்
எண்ணி. 56
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் - தனைக் கண்ணுற்று, எழிலி
நாண
அதிர்கின்ற பொலந் தேர் நின்று அரசர்பிரான் இழிந்துழி, சென்று
அடியில் வீழ,
முதிர்கின்ற பெருங் காதல் தழைத்து ஓங்க, எடுத்து இறுக
முயங்கலோடும்,
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி, இவை உரைத்தான் -
களிப்பின் மிக்கான்: 57
'யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்,
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?' என, மனம் மகிழா மணித்
தேர் ஏற்றி,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான்
- தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவுத் தோளான்
58
ஆடகப் பொன் சுடர், இமைக்கும் அணி மாடத் திடை, ஓர் மண்டபத்தை
அண்மி,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்லாண்டு இசைப்ப, பைம் பொன்
பீடத்து,
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி, கடன்முறைகள் யாவும்
நேர்ந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப, இனிது உவந்தான்,
சுரர் நாடு ஈந்தான். 59
கலைக்கோட்டு முனிவனை தயரதன் விருப்பப்படி அயோத்திக்கு
அழைத்துவருவதாக உரோமபதன் கூறல்
செவ்வி நறுஞ் சாந்து அளித்து, தேர் வேந்தன் தனைநோக்கி, 'இவண்
நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி' என, நிகழ்ந்த பரிசு அரசர்பிரான்
கழறலோடும்,
'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந் தவனைக் கொணர்ந்து
ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வி முடியோய்!' எனலும், தேர் ஏறிச் சேனையடும் அயோத்தி
சேர்ந்தான். 60
உரோமபதன் வேண்ட, கலைக்கோட்டு முனிவன் மனைவியுடன் அயோத்திக்குப்
புறப்படுதல்
மன்னர்பிரான் அகன்றதன் பின், வய வேந்தன், அரு மறை நூல் வடிவம்
கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்தனை அணுகி, அடி இணைத் தாமரைகள் அம் பொன்
மன்னு மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட, 'இவண் நீ வருதற்கு
ஒத்தது
என்னை?' என, 'அடியேற்கு ஓர் வரம் அருளும்; அடிகள்!' என,
'யாவது?' என்றான். 61
'புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெருந்தகைதன் புகழில்
பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான், அமரர்களுக்கு இடர் இழைக்கும்
அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான், "தசரதன்" என்று, உயர் கீர்த்திச்
செங்கோல் வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்திநகர் அடைந்து, இவண் நீ மீள்தல்!'
என்றான். 62
'அவ் வரம் தந்தனம்; இனித் தேர் கொணர்தி' என, அருந் தவத்தோன்
அறைதலோடும்,
வௌ; அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன், அடி இறைஞ்சி,
'வேந்தர்வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன்' என்று, அதிர் குரல் தேர் கொணர்ந்து,
'இதனில், கலை வலாள!
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக!' என, ஏறிச் சிறந்தான்
மன்னோ. 63
முனிவன் போவதைக் கண்டு, தேவர்கள் மகிழ்தல்
குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட,
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர,
வனிதையும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும், பொறிமிசை நெறியை முன்னினார். 64
அந்தர துந்துமி முழக்கி, ஆய் மலர்
சிந்தினர், களித்தனர் - அறமும் தேவரும் -
'வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
வந்து எழ அருள் தருவான்' என்று எண்ணியே. 65
தயரதன் மகிழ்வுடன் முனிவனை எதிர்கொள்ளல்
தூதுவர் அவ் வழி அயோத்தி துன்னினார்;
மாதிரம் பொருத தோள் மன்னர்மன்னன்முன்
ஓதினர், முனி வரவு; ஓத, வேந்தனும்,
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன். 66
எழுந்தனன் பொருக்கென, இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை; ஆசி பூத்தன்
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன்
விழுந்தன தீவினை, வேரினோடுமே. 67
தயரதன் அடிவணங்க, முனிவன் ஆசி கூறுதல்
'பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல்' என்று கொண்டு,
அதிர்ந்து எழு முரசுடை அரசர் கோமகன்
முதிர்ந்த மா தவமுடை முனியை, கண்களால்
எதிர்ந்தனன், ஓசனை இரண்டொடு ஒன்றினே. 68
நல் தவம் அனைத்தும், ஓர் நவை இலா உருப்
பெற்று, இவண் அடைந்தெனப் பிறங்குவான் தனை,
சுற்றிய சீரையும், உழையின் தோற்றமும்,
முற்று உறப் பொலிதரு மூர்த்தியான் தனை, 69
அண்டர்கள் துயரமும், அரக்கர் ஆற்றலும்,
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனை,
குண்டிகை, குடையடும், குலவு நூல் முறைத்
தண்டொடும், பொலிதரு தடக் கையான் தனை, 70
இழிந்து போய் இரதம், ஆண்டு, இணை கொள் தாள் மலர்
விழுந்தனன், வேந்தர்தம் வேந்தன், மெய்ம்மையால்,
மொழிந்தனன் ஆசிகள்-முதிய நான்மறைக்
கொழுந்து மேல் படர் தரக் கொழுகொம்பு ஆயினான். 71
தயரதன் முனிவனுடன் அயோத்தியை அடைதல்
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட,
புயல் பொழி தடக் கையால் தொழுது, பொங்கு நீர்க்
கயல் பொரு விழியடும் கலை வலாளனை,
இயல்பொடு கொணர்ந்தனன், இரதம் ஏற்றியே. 72
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர்
கடிகையின் அடைந்தனன், -கமல வாள் முக
வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே. 73
வசிட்டனுடன் கலைக்கோட்டு முனிவன் அரசவை அடைதல்
கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
வசிட்டனும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும், வேத்தவை பொலிய மேவினார். 74
தயரதன் கலைக்கோட்டு முனிவனை உபசரித்து மொழிதல்
மா மணி மண்டபம் மன்னி, மாசு அறு
தூ மணித் தவிசிடை, சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி, கொள் கடன்
ஏமுறத் திருத்தி, வேறு, இனைய செப்பினான்: 75
'சான்றவர் சான்றவ! தருமம், மா தவம்,
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும், இழப்பு இன்றாம் அரோ.' 76
முனிவன் தன்னை அழைத்த காரணம் வினாவுதல்
என்னலும், முனிவரன் இனிது நோக்குறா,
'மன்னவர்மன்ன! கேள்: வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடுந் தவன் துணை; நவை இல் செய்கையால்,
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ?' 77
என்று இவை பற்பல இனிமை கூறி, 'நல்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ,
இன்று எனை அழைத்தது இங்கு? இயம்புவாய்!' என்றான். 78
மைந்தர் இல்லாக் குறையை மன்னன் தெரிவித்தல்
'உலப்பு இல் பல் ஆண்டு எலாம், உறுகண் இன்றியே,
தலப் பொறை ஆற்றினென்; தனையர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை
நலப் புகழ் பெற, இனி நல்க வேண்டுமால்.' 79
மைந்தரை அளிக்கும் வேள்வி இயற்றவேண்டும் என முனிவன் கூறுதல்
என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் - ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான். 80
மன்னன் யாகசாலையில் புகுதல்
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்; நிருபர்க்கு ஏந்தலும்,
தூய நல் புனல் படீஇ, சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன். 81
முனிவன் பன்னிரு திங்கள் வேள்வி இயற்றி, மகவு அருள் ஆகுதி
வழங்குதல்
முழங்கு அழல் மும்மையும் முடுகி, ஆகுதி
வழங்கியே, ஈர்-அறு திங்கள் வாய்த்த பின்,
தழங்கின துந்துமி; தா இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர், வெளி இன்று என்னவே. 82
முகமலர் ஒளிதர மொய்த்து, வான் உளோர்,
அக விரை நறு மலர் தூவி, ஆர்த்து எழ,
தகவுடை முனியும், அத் தழலின் நாப்பணே,
மக அருள் ஆகுதி வழங்கினான் அரோ. 83
வேள்வித் தீயில் பூதம் எழுந்து, சுதை நிகர் பிண்டத்தைத்
தரையில் வைத்து மறைதல்
ஆயிடை, கனலின் நின்று, அம் பொன் தட்டினில்
தூய நல் சுதை, நிகர் பிண்டம் ஒன்று, - சூழ்
தீ எரிப் பங்கியும், சிவந்த கண்ணும் ஆய்,
ஏயென, பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. 84
வைத்தது தரைமிசை, மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும், வேந்தனை,
'உய்த்த நல் அமுதினை, உரிய மாதர்கட்கு,
அத் தகு மரபில்நின்று, அளித்தியால்' என்றான். 85
முனிவன் பணித்தபடி, தயரதன் தம் மனைவியர் மூவர்க்கும்
பிண்டத்தைப் பகிர்ந்து அளித்தல்
மா முனி பணித்திட, மன்னர் மன்னவன்,
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
தாம் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ. 86
கைகயன் தனையைதன் கரத்தும், அம் முறைச்
செய்கையின் அளித்தனன், தேவர் ஆர்த்து எழ-
பொய்கையும், நதிகளும், பொழிலும், ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னனே. 87
நமித்திரர் நடுக்குறு நலம் கொள் மொய்ம்புடை
நிமித் திரு மரபுளான், முன்னர், நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் - சுரர்க்கு வேந்து, 'இனிச்
சமித்தது என் பகை' என, தமரொடு ஆர்ப்பவே. 88
பிதிர்ந்து வீழ்ந்ததையும் தயரதன் சுமித்திரைக்கு அளித்தல்
பின்னும், அப் பெருந்தகை, பிதிர்ந்து வீழ்ந்தது-
தன்னையும், சுமித்திரைதனக்கு நல்கினான் -
ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும், துள்ளவே. 89
வேள்வி முடிந்தபின் தயரதன் அரசவைக்கு வருதல்
வாம் பரி வேள்வியும், மகாரை நல்குவது
ஆம் புரை ஆகுதி பிறவும், அந்தணன்
ஓம்பிட முடிந்தபின், உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் - யாரும் ஏத்தவே. 90
முருடொடு பல் இயம் முழங்கி ஆர்த்தன்
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின்
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி,
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான். 91
தேவர் முதலிய யாவர்க்கும் சிறப்புச் செய்து, சரயு நதியில்
தயரதன் நீராடுதல்
செய்ம் முறைக் கடன் அவை திறம்பல் இன்றியே
மெய்ம் முறைக் கடவுளோர்க்கு ஈந்து, விண்ணுளோர்க்கு
அம் முறை அளித்து, நீடு அந்தணாளர்க்கும்
கைம் முறை வழங்கினன், கனக மாரியே. 92
வேந்தர்கட்கு, அரசொடு, வெறுக்கை, தேர், பரி,
வாய்ந்த நல் துகிலொடு, வரிசைக்கு ஏற்பன
ஈந்தனன்; பல் இயம் துவைப்ப ஏகி, நீர்
தோய்ந்தனன் - சரயு நல் துறைக்கண் எய்தியே. 93
தயரதன் வசிட்டனை வணங்குதல்
முரசு இனம் கறங்கிட, முத்த வெண்குடை
விரசி மேல் நிழற்றிட, வேந்தர் சூழ்தர,
அரசவை அடைந்துழி, அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி, ஓங்கினான். 94
தம்மை வணங்கிய தயரதனுக்கு ஆசி கூறி, கலைக்கோட்டு முனிவன் தன்
இருப்பிடத்திற்கு மீள்தல்
அரிய நல் தவமுடை வசிட்டன் ஆணையால்,
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா,
உரிய பற்பல உரை பயிற்றி, 'உய்ந்தனென்;
பெரிய நல் தவம் இனிப் பெறுவது யாது?' என்றான். 95
'எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனென் அடியனேன்' என்ன, ஒண் தவன்,
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி, தேர்மிசை
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான். 96
ஏனைய முனிவரும் ஆசி வழங்கி நீங்குதல்
வாங்கிய துயருடை மன்னன், பின்னரும்,
பாங்குரு முனிவர் தாள் பழிச்சி ஏத்தல் கொண்டு,
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா,
நீங்கினர்; இருந்தனன், நேமி வேந்தனே. 97
தேவிமார் மூவரும் கருவுறுதல்
தெரிவையர் மூவரும், சிறிது நாள் செலீஇ,
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின்,
பொரு அரு திரு முகம் அன்றி, பொற்பு நீடு
உருவமும், மதியமோடு ஒப்பத் தோன்றினார். 98
கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்
ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே, 99
சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. 100
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை. 101
கைகேயி மைந்தனைப் பெறுதல்
ஆசையும், விசும்பும், நின்று அமரர் ஆர்த்து எழ,
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற,
பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள்,
மாசு அறு கேகயன் மாது மைந்தனை. 102
சுமித்திரை இரு மகவு ஈன்றாள்
தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்,
கிளையும், அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற,
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற,
இளையவற் பயந்தனள், இளைய மென் கொடி. 103
படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர, மறை நவில நாடகம்,
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட,
விடம் கிளர் விழியினாள், மீட்டும், ஈன்றனள். 104
வானவர் மகிழ்ச்சி
ஆடினர் அரம்பையர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
ஓடினர், உலாவினர், உம்பர் முற்றுமே. 105
புதல்வர் பிறந்ததைச் சேடிமார் தயரதனிடம் தெரிவித்தலும்,
சோதிடர் ஆய்ந்து, 'நாள் முதலியன நன்று' என்பதும்
ஓடினர் அரசன்மாட்டு, உவகை கூறி நின்று
ஆடினர், சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர்; நாளடு கோளும் நின்றமை
நாடினர்; 'உலகு இனி நவை இன்று' என்றனர். 106
தயரதன் புனல் படிந்து, தானம் செய்து பின் குழந்தைகளைப்
பார்த்தல்
மா முனிதன்னொடு, மன்னர் மன்னவன்,
ஏமுறப் புனல் படீஇ, வித்தொடு இன் பொருள்
தாம் உற வழங்கி, வெண் சங்கம் ஆர்ப்புற,
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான். 107
புதல்வர் பிறந்த மகிழ்ச்சியில் தயரதன் புரிந்த நற்பணிகள்
'"இறை தவிர்ந்திடுக பார், யாண்டு ஒர் ஏழ்; நிதி
நிறை தரு சாலை தாள் நீக்கி, யாவையும்,
முறை கெட, வறியவர் முகந்து கொள்க" எனா,
அறை பறை' என்றனன் - அரசர் கோமகன். 108
'படை ஒழிந்திடுக் தம்பதிகளே, இனி,
விடை பெறுகுக, முடி வேந்தர்; வேதியர்,
நடையுறு நியமமும் நவை இன்று ஆகுக்
புடை கெழு விழாவொடு பொலிக, எங்கணும். 109
'ஆலையம் புதுக்குக் அந்தணாளர்தம்
சாலையும், சதுக்கமும், சமைக்க, சந்தியும்;
காலையும் மாலையும், கடவுளர்க்கு, அணி
மாலையும் தீபமும், வழங்குக' என்றனன். 110
செய்தி கேட்ட நகர மாந்தரின் மகிழ்ச்சி
என்புழி, வள்ளுவர், யானை மீமிசை
நன் பறை அறைந்தனர்; நகர மாந்தரும்,
மின் பிறழ் நுசுப்பினார் தாமும், விம்மலால்,
இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார். 111
ஆர்த்தனர் முறை முறை அன்பினால்; உடல்
போர்த்தன புளகம்; வேர் பொடித்த் நீள் நிதி
தூர்த்தனர், எதிர் எதிர் சொல்லினார்க்கு எலாம்;-
'தீர்த்தன்' என்று அறிந்ததோ அவர்தம் சிந்தையே? 112
பண்ணையும் ஆயமும், திரளும் பாங்கரும்,
கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்து,
எண்ணெயும், களபமும், இழுதும், நானமும்,
சுண்ணமும், தூவினார் - வீதிதோறுமே. 113
பன்னிரண்டு நாள் கழித்து வசிட்டன் குழந்தைகளுக்குப் பெயரிடுதல்
இத்தகை மா நகர், ஈர்-அறு நாளும்,
சித்தம் உறும் களியோடு சிறந்தே,
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர்; தாவா
மெய்த் தவன் நாமம் விதிப்ப மதித்தான். 114
இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன், என நால்வருக்கும்
பெயர் வைத்தல்
சுரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே. 115
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன், உதித்திடு மற்றைய ஒளியை,
'பரதன்' எனப் பெயர் பன்னினன் அன்றே. 116
உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக் கொடியும் துயர் நீத்தனள்; இந்த,
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
'இலக்குவன்' என்ன, இசைத்தனன் அன்றே, 117
'முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்,
எத் திருக்கும் கெடும்' என்பதை எண்ணா,
'சத்துருக்கன்' எனச் சாற்றினன் நாமம். 118
பெயரிட்ட போது தயரதன் தானம் செய்து உவத்தல்
பொய் வழி இல் முனி, புகல்தரு மறையால்,
இவ் வழி, பெயர்கள் இசைத்துழி, இறைவன்
கை வழி, நிதி எனும் நதி கலைமறையோர்
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல். 119
தம் குமாரர்கள் மீது தயரதன் கொண்ட அன்பு
'காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது' என, அருளின்
மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன். 120
குமாரர்களின் வளர்ச்சி
அமிர்து உகு குதலையடு அணி நடை பயிலா,
திமிரம் அது அற வரு தினகரன் எனவும்,
தமரமதுடன் வளர் சதுமறை எனவும்,
குமரர்கள் நிலமகள் குறைவு அற வளர் நாள்- 121
வசிட்டன் கல்வி கற்பித்தல்
சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று,
'இ(வ்)அளவது' என ஒரு கரை பிறிது இலவா,
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்,
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே. 122
படைப் பயிற்சி
யானையும், இரதமும், இவுளியும், முதலா
ஏனைய பிறவும், அவ் இயல்பினில் அடையுற்று,
ஊன் உறு படை பல சிலையடு பயிலா,
வானவர் தனிமுதல், கிளையடு வளர, 123
முனிவர் முதலிய யாவரும் குமாரர்களை விரும்புதல்
அரு மறை முனிவரும், அமரரும், அவனித்
திருவும், அந் நகர் உறை செனமும், 'நம் இடரோடு
இரு வினை துணிதரும், இவர்களின்; இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம், உறை' என உறுவார். 124
இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும்,
இணைபிரியாதிருத்தல்
ஐயனும் இளவலும், அணி நிலமகள்தன்
செய்தவம் உடைமைகள் தெரிதர, நதியும்,
மை தவழ் பொழில்களும், வாவியும், மருவி,
'நெய் குழல் உறும் இழை' என நிலைதிரிவார். 125
பரதனும் இளவலும், ஒருநொடி பகிராது,
இரதமும் இவுளியும் இவரினும், மறைநூல்
உரைதரு பொழுதினும், ஒழிகிலர்; எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே. 126
நான்கு குமாரரும் முனிவரர் இருப்பிடம் சென்று மாலையில் மீள்தள்
வீரனும், இளைஞரும், வெறி பொழில்களின்வாய்,
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்,
சோர் பொழுது, அணிநகர் துறுகுவர்; எதிர்வார்,
கார் வர அலர் பயிர் பொருவுவர், களியால். 127
ஏழையர் அனைவரும், இவர் தட முலை, தோய்
கேழ் கிளர் மதுகையர், கிளைகளும், 'இளையார்
வாழிய!' என, அவர் மனன் உறு கடவுள்-
தாழ்குவர்-கவுசலை தயரதன் எனவே. 128
'கடல் தரு முகில், ஒளிர் கமலம் அது அலரா,
வட வரையுடன் வரு செயல் என, மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்,
புடை வரும் இளவலும்' என, நிகர் புகல்வார். 129
நகரத்தவரின் நலனை இராமன் உசாவுதலும், அவர்கள் உவந்து
விடையளித்தலும்
எதிர் வரும் அவர்களை, எமையுடை இறைவன்,
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா,
'எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?' எனவே, 130
அ·து, 'ஐய! நினை எமது அரசு என உடையேம்;
இ·து ஒரு பொருள் அல் எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை, மலரோன்
உகு பகல் அளவு' என, உரை நனி புகல்வார். 131
யாவரும் போற்ற, இராமன் இனிது இருத்தல்
இப் பரிசு, அணி நகர் உறையும் யாவரும்,
மெய்ப் புகழ் புனைதர, இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற,
முப் பரம் பொருளினும் முதல்வன் வைகுறும். 132