Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > திராவிடக் கட்சிகளின் தமிழ்த் தேசியம்

Selected Writings by Sanmugam Sabesan

திராவிடக் கட்சிகளின் தமிழ்த் தேசியம்
ஆக்கம்-சபேசன் மெல்பேர்ண்-அவுஸ்திரேலியா
 

5 March 2005

�திராவிடன் என்ற மரபு இனத்தை தி.மு.க முன் வைத்தது, தமிழ்த் தேசியக் கோட்பாட்டிற்குப் புறம்பான நிலைப்பாடு. தமிழன் என்ற தேசிய இனத்தை மட்டும் முன் வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பிற்காலத்தில் இக்கழகம் நாட்டால் இந்தியன்,  இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் என்று கூறிக் கொள்ளத் தொடங்கியது. இது தேசிய இனவரையறைக்குப் புறம்பான உளறல் மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தை ஊனப்படுத்தும் போக்கும் ஆகும்.� 

[note by tamilnation.org - Sanmugam Sabesan raises important questions concerning the underlying ideology of the Dravidian Movement - questions which are of direct relevance to the continued  growth of the Tamil Nation. see also

1.`De-ideologisation of politics is the tragedy of Tamil Nadu' Professor K.Sivathamby, November 2002,
2.What Caused Veerappan? - Guna, October 2000
3.Bharathy, Periyar E.V. Ramasamy & Tamil nationalism in Tamil Heriatge - the Tamils are an Ancient People and
4.Brahmins, Non Brahmins, Dalits & Tamil Nation
5. K.Nambi Arooran in Tamil Renaissance and Dravidian Nationalism]


தமிழ் நாட்டில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் விரைவில் வரக்கூடும் என்ற ஊகம் இப்போது பலமாக எழுந்துள்ளது.

தமிழ்நாட்டு அரசியலில் பலம் வாய்ந்த கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகத்தோடோ, அல்லது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடோ தேர்தல் கூட்டு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு மற்றைய அரசியல் கட்சிகள் முனைந்துள்ள வேளை இது!

இம்முயற்சிகள் பிசகும் பட்சத்தில் மூன்றாவது அணி ஒன்று தோன்றுவதற்கும் வாய்ப்புண்டு.

தேசியக் கட்சிகள் என்று தம்மை வர்ணித்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக்கட்சியும், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஒன்றோடு கூட்டுச் சேர்வதன் மூலம், தங்கள் இருப்பை அல்லது இருக்கைகளைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் காட்சிகளையும் இனி நாம் காணக் கூடியதாக இருக்கும்.

தமிழ் நாட்டுக் கட்சிகளின் அரசியல் பலம் குறித்தோ அல்லது அவர்களது வாக்கு வங்கிச் செல்வாக்கு வங்கிச் செல்வாக்குக் குறித்தோ இன்றைய தினம் நாம் தர்க்கிக்க முன் வரவில்லை.

மாறாக தற்போது தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குள்ள திராவிடக் கட்சிகளின் வரலாற்றையும், அவர்கள் கொண்ட கொள்கைகளில் இருந்து பிறழ்ந்ததால் தமிழ்த் தேசியத்திற்கு ஏற்பட்ட பின்னடைவையும் நாம் சிந்தித்துத் தர்க்கிப்பதே எமது நோக்கமாகும்.

இந்த வகையில் பெரியாரின் திராவிடக் கழகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், அறிஞர் அண்ணாத்துரையின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் சற்று ஆழமாகப் பார்ப்பதுடன் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எவ்வாறு கூர்மையிழந்தன என்பது குறித்துத் தர்க்கிப்பதும் பொருத்தமானதையாக இருக்கக் கூடும்.

இத் தர்க்கத்தின் சிந்தனையூடே நாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற மற்றைய அரசியல் கட்சிகளின் கொள்கைப் பிறழ்வுகளையும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.

தமிழகத்தில் வடவர் ஆட்சியும்,  பார்ப்பனிய மேலாதிக்கமும் கோலோச்சிய வேளையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியற் பிரவேசம் பல மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு தமிழ்மொழிக்கும் உயர்வு ஏற்பட்டது என்று பரவலாகப் பலர் பாராட்டுவதுண்டு.

அதேவேளை, அறிஞர் அண்ணாத்துரை மீதும் அவரது திராவிட முன்னேற்றக் கழகம் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை அறிஞர்கள், குணா, அ.மார்க்ஸ் போன்றவர்களும் வெளியிட்டுள்ளார்கள்.

நாமும் பலருடைய கருத்துக்களையும் சீர் தூக்கிப் பார்க்க முனைகின்றோம்.

பெரியார் ஈ.வே.ராவின் திராவிடக் கழகத்தை விட்டு வெளியேறி 17-9-1949ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணாத்துரையவர்கள் ஆரம்பித்த பின்பு கழகத்தின் வளர்ச்சிக்கு நாடகத்துறையும், சினிமாத்துறையும் உறுதுணையாக இருந்தன என்பதும் உண்மைதான்.

 �அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு� என்று முழங்கியவர்களின் கொள்கையும், கோட்பாடுகளும் பிற்காலத்தில் எந்தவிதமாக நீத்துப்போயின என்பதையும் அவற்றை இவர்களது திரைப்பட ஊடகத்துறைகள் எவ்வாறு வெளிப்படுத்தின என்பதையும் ஏககாலத்தில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் அவர்களது தேசிய வரையறை மற்றும் தனிநாட்டுக் கோரிக்கையின் வரலாற்றுப் போக்கை மூன்று காலப்பிரிவுகளாக அறிஞர் அ.மார்க்ஸ் குறிப்பிடுகின்றார்.

முதற்கட்டமாக 1856ம் ஆண்டுக்கும் 1915ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை மார்க்ஸ் விபரிக்கின்றார்.

கோல்ட்வெல் (Caldwell), போப் (Pope), பேர்சிவல், எல்லீஸ் (Percival, Ellis) முதலிய வெளிநாட்டு அறிஞர்கள் திராவிட மொழிகளின் பொதுமையையும், அதனடியாக வந்த திராவிடப் பண்பாட்டின் தனித்தன்மையையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து முன்வைக்கத் தொடங்கினார்கள்.

இதனை அடியொற்றியும் இதற்கு இணையாகவும் சி.வை.தாமோதரம்பிள்ளை ஆறுமுகநாவலர் சுந்தரம்பிள்ளை, சபாபதிநாவலர், கனகசபைப்பிள்ளை, ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை, ஆகியோர் சைவத்துடன் தமிழை அடையாளப்படுத்தி, திராவிடக் கருத்தையும் தமிழ்மீட்பு வாதத்தையும் உயர்த்திப் பிடித்தனர்.

�யாழ்ப்பாண சைவபரிபாலன சபை� �சித்தாந்த சமரசம்� போன்ற வடிவங்களில் சைவசித்தாந்தம் என்பது தமிழ்மீட்பு வாதத்தின் பிரிக்க முடியாத அங்கமாக்கப்பட்டது. ஆனால் இங்கே ஒரு முக்கிய விடயத்தை நேயர்கள் கவனிக்க வேண்டும்.

சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் வேதப்பிரமாணங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டுதான் வடமொழி எதிர்ப்பையும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும் தெரிவித்தார்கள்.

தமிழ் வேதங்கள் தமிழின் தெய்வீக மாட்சி என்றெல்லாம் இவர்கள் பேசியது என்பது வடமொழி வேதங்களையும், ஆகமங்களையும் மறுத்த நிலையில் அல்ல என்பது இங்கு சிந்திக்கத் தக்கது.

இந்த வேளையில் திராவிடம்,  திராவிடப் பண்பாடு,  திராவிட சமயம் என்றெல்லாம் பேசப்பட்ட போதிலும் தனித் திராவிட அரசு என்ற கருத்தாக்கம் இன்னும் உருவாகவில்லை.

இரண்டாவது காலகட்டாக 1916ம் ஆண்டுக்கும் 1937ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைப் பார்ப்போம். இந்தக் காலகட்டத்தில்தான் திராவிட இனம் என்பதை ஓர் அரசியல் சமூகமாகக் கட்டமைக்கும் முயற்சிகள் உருவாகின. இந்த முயற்சிகளையும் நாம் இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம்.

1916ம் ஆண்டிலிருந்து 1925ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பார்ப்பனர்களின் மதசார்பற்ற மேலாண்மையை மட்டும் நீதிக்கட்சியினர் எதிர்க்கத் தொடங்குகின்றார்கள். அதாவது பார்ப்பனர்களின் அரசியல் அதிகாரங்கள், அரச பதவிகளை எதிர்க்கின்ற அதேவேளை,  அவர்களது சடங்கு மேலாண்மையை நீதிக்கட்சியினர்; எதிர்க்கத் தொடங்க வில்லை.

1925ம் ஆண்டு காங்கிரசை விட்டு விலகிய தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, தீவிர பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார். பார்ப்பனர்களின் சடங்கு மேலாண்மையையும், அதனை நியாயப்படுத்துகின்ற இந்து மதத்தையும் பெரியார் கடுமையாக எதிர்க்கத் தொடங்குகின்றார். 1935 தொடங்கி நீதிக்கட்சியோடு நெருக்கமாகின்றார். இந்தி எதிர்ப்பு அரசியலோடு, இந்திய அரசுக்குட்பட்ட தனிமாநில அரசு என்ற கோரிக்கையும் உருப்பெருகின்றது. 1937ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை பெரியார் முன் வைக்கின்றார்.

மூன்றாவது காலகட்டமாக 1938ம் ஆண்டுக்கும் 1962ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தை அ.மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். 1938ல் உச்சமடைந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியினூடே, தனிநாடு கோரிக்கை வலுப்பெறுகின்றது.

இதில் முக்கிய விடயம் ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பாகிஸ்தானின் பிரிவினையைக் கோரிநின்ற ஜின்னாவை பெரியார் 1939ல் சந்தித்து தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு கோருகின்றார்.

ஜின்னாவுடனான இந்தச் சந்திப்பின் பின்னர்தான் தமிழ்நாடு கோரிக்கையானது திராவிடநாடு கோரிக்கையாக மாறுகின்றது. 1937 முதல் 1940 வரை தமிழ்நாடு கோரிக்கையாக இருந்தது. 1940க்குப் பின்னர் திராவிடநாடுக் கோரிக்கையாக உருமாறுகின்றது. இதில் ஒரு தெளிவின்மையும் குழப்பநிலையும் இருப்பதாகவே நாமும் நினைக்கின்றோம்.

1947ல் இந்தியா சுதந்திரம் பெறுகின்றது. எனினும் பாகிஸ்தான் உருவானது போல திராவிடநாடு உருவாகாத காரணத்தினால் இந்திய சுதந்திரநாளை ஒரு துக்க நாளாக பெரியார் அறிவிக்கின்றார்.

ஆனால் கட்சிக்குள் பெரியாரின் வலதுகரமாகத் திகழ்ந்த அண்ணாத்துரையோ இத்துக்க பிரகடனத்தை எதிர்க்கின்றார். இந்திய சுதந்திரத்தை வரவேற்கின்றார். இது இந்திய தேசத்துவக் கட்டமைப்புக்குள் அண்ணா உள்வாங்கப்படுகின்றதைக் காட்டுகின்றது.

 1949ல் பெரியாரைப் பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணாத்துரை ஆரம்பித்தபோது அவர் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தது உண்மைதான். �அடைந்தால் திராவிடநாடு. இல்லையேல் சுடுகாடு� என்று முழங்கிய அவர் 1962ல் இந்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது திராவிடநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு பெட்டிப்பாம்பாக அடங்கியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இங்கே அண்ணாத்துரையின் இரட்டை நிலைப்பாட்டை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

திராவிட நாட்டுப் பிரிவினையைக் கோரி ஒரு பிரிவினைவாதியாகத் தன்னை காட்டிக் கொண்டபோதும் அடிப்படையில் இந்திய தேசக் கட்டமைப்பையும் அதன் தேசியச் சின்னங்களையும் மதிப்பவராகவே இருந்தார்.

உதாரணத்திற்கு இந்தியத் தேசியக்கொடியைக் கொழுத்துகின்ற போராட்டத்தை தந்தை பெரியார் செய்தபோது அதிலிருந்து அண்ணாத்துரை விலகியே நின்றார். அது மட்டுமல்லாமல் கிளர்ச்சிப்போராட்டம் அதாவது மறப்போராட்டத்தையும் அண்ணா தவிர்த்து நின்றார்.

மகாத்மா காந்தியின் வழிநின்ற காங்கிரஸ்காரர்கள் கூட 1940களில் தண்டவாளப் பெயர்ப்பு, தபாற் காரியாலய எரிப்பு என்ற கிளர்ச்சிப் போராட்டத்தை நடாத்தியபோது அண்ணாத்துரை அதனை வரவேற்கவில்லை. அதுகுறித்த 1950களில் அண்ணாத்துரை பேசும்போது காங்கிரஸ்கார்களின் போராட்டத்தை இவ்வாறு கூறுகின்றார்.

�காங்கிரஸ்காரர்களின் இந்தப் போராட்டமுறைகள் சரியல்ல என்று நாம் மனதார நம்பினோம். வீணான கலவரம், கலகம், குழப்பம் பொருட்சேதம் இவைதான் மிச்சம் என்று எண்ணினோம். எனவேதான் ஒதுங்கி நின்றோம்.�

பின்னர், மெதுவாக நாஸ்திகப் பாதையிலிருந்து நழுவினார் அண்ணாத்துரை. �ஒன்றே குலம் ஒருவனே தேவன்� என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. தேர்தல் சாக்கடையில் இறங்காமல் மக்களைத் திரட்டி மக்கள் போராட்டத்தை நடாத்த வேண்டும் என்கின்ற பெரியாரின் கொள்கையிலிருந்தும் அண்ணாத்துரை விலகினார்.

இதன் பின்னர்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழ்பெற்ற சொல்லாடலான �கடமை, கண்ணியம், கட்டுப்பாடு� என்ற முழக்கம் உருவாகியது. வெளிப்படையாகப் பார்த்தால் அடுக்குமொழியிலமைந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொல்லாக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்துத் தொண்டர்களுக்குரிய கொள்கைக் கோட்பாடு போலத் தோன்றினாலும் அதற்கு வேறெரு நோக்கமும், குறிக்கோளும் இருந்தது என்பதை நேயர்கள் சற்று ஆழ்ந்து நோக்கினால் புரியும்.

இந்தியத் தேசியத்திற்குக் கட்டுப்பட்டு அதனுடைய தேசியச் சின்னங்களுக்குப் பணிகின்ற அந்தத் தேசத்திற்கு விசுவாசமான தமிழ் குடிமக்களை உருவாக்குகின்ற பணியை அறிஞர் அண்ணாத்துரை தன் சிரமேற்கொண்டதன் வெளிப்பாடுதான் இந்த �கடமை கண்ணியம் கட்டுப்பாடு� சொற்றொடர்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரிய பிரச்சாரங்களை முன்னர் மக்களுக்கு எடுத்துக்கொண்டு சென்ற மிகப் பலம் வாய்ந்த சாதனமாக சினிமா என்று அழைக்கப்படுகின்ற திரைப்படத்துறை இருந்தது. அண்ணாத்துரை-கருணாநிதி கூட்டமைப்பில் எடுத்தாளப்பட்ட கதையாடல்களையும்�� விளைவுகளையும் குறித்து சிறிது சிந்திப்போம்.

திராவிட இயக்கத்தவர்களான அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதா, தங்கராசு, சிற்றரசு, பாரதிதாசன் முதலானோரின் திரைப்படப்பிரவேசம் என்பது கிட்டத்தட்ட தி.மு.க வின் உதயத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

1949ல் வேலைக்காரி,1951ல் பராசக்தி என்று தொடங்கி 1967ல் ஆட்சியைப் பிடிக்கும்வரை தி.மு.கவின் அரசியல் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது.

அது மட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்திலிருந்த இந்திய அரசியல் அமைப்பின்மீது தி.மு.க நம்பிக்கையும் கொண்டிருந்ததால் இந்திய அரசியல் யாப்பையோ அன்றி அரசியலையோ விமர்சிக்கும் செயற்பாடுகளையும் அது மேற்கொள்ளவில்லை.

அதனால் அன்று தொடங்கி பின்னாளில் தேசியச்சின்னங்களை அவமதிக்கும் வடிவில் பெரியார் மேற்கொண்ட பேராட்டங்களான தேசியக்கொடி எரிப்பு, தேசப்பட எரிப்பு, அரசியற் சட்டப்பிரதி எதிர்ப்பு, நீதிமன்றக் கண்டனம் போன்றவற்றிலிருந்து அண்ணாத்துரை விலகி நின்றதோடு மட்டுமல்லாமல் இப்போராட்டங்களையும் அண்ணாதுரை கண்டித்தே வந்தார்.

எனினும் திராவிட இயக்கத்தவரின் திரைப்படங்கள், அன்றைய மேட்டிமைச் சக்திகளாலும் அரசியல் சக்திகளாலும் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டன. �பராசக்தி� திரைப்படத்தைத் தடைசெய்வதற்குப் பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இளைஞர்களையும், மாணவர்களையும் கெடுக்ககூடியனவென்றும், சமூக ஒழுங்கைக் குலைப்பன என்றும் இத்திரைப்படங்களை அதிகார சக்தியினர் கண்டித்தார்கள். இம் முயற்சி வெற்றிபெறாத காரணத்தினால் பின்னாளில் வேறு பாணியில் இத்திரைப்படங்களை அவர்கள் கண்டிக்க தொடங்கினார்கள். யதார்த்தத்திற்குப் பொருந்தாத அடுக்குமொழி வசனங்கள் நிரம்பிய திரைப்படங்கள் என்றும் அவர்கள் கண்டித்தார்கள்.

இந்த மேட்டிமைச் சக்திகளின் தாக்குதல்கள் கடுமையாக இருந்தபோதும் இத் திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. பல திரைப்படங்கள் நூறுநாட்களைத் தாண்டி ஓடின. இனி இப்படியான திரைப்படங்களுக்குத்தான் சந்தை�� பெரும் பணம் ஈட்டலாம் என்பதை உணர்ந்த பெரும் தயாரிப்பாளர்கள் திராவிட இயக்கத்தவர்களது கதைவசனங்களுக்காகக் காத்து நின்றார்கள்.

அடித்தட்டு மக்களின் பேராதரவோடு தமிழ்த் திரைப்பட உலகில் கால் நூற்றாண்டு காலத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முக்கிய சக்திகளாக விளங்கினர்.

அதிகாரத்தில் அரசியல் அமைப்பிலுள்ள குறைகளை அவர்கள் விமர்சிக்கவில்லை. மாறாக குறைகளுள்ள அந்த அதிகாரங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்றே தி.மு.க விரும்பியது. அதாவது அதிகாரப்பதவிகளில் டெல்லி ஏகாதிபத்தியம்�� மற்றும்; அவர்களது முகவர்களுக்குப் பதிலாகத் தாமே உட்கார வேண்டும் என்பதே தி.மு.கவின் அபிலாசையாக�� வேட்கையாக இருந்தது. ஆகவே பெரிய அளவில் திரைப்படத்தை ஒரு கலக ஆயுதமாக அத்துமீறல் சாதனமாகப் பயன்படுத்துவதற்கு தி.மு.க. தயாராக இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகவே அவர்கள் எந்த ஒழுங்கையும் பெரிய அளவில் கேள்விக்குள்ளாக்கவில்லை. கேள்விக்குள்ளாக்கும் முயற்சிகளையும் அவர்களே அவ்வப்போது கவிழ்த்தும் கொண்டார்கள்.

எங்கள் எதிர்ப்புக்கள் என்பன,கோவில்களே கூடாது என்பதற்காக அல்ல கோவில்கள் கொடியவர்களின் கூடாராங்களாக ஆக்கூடாது என்பதற்காகத்தான் என்பதனை தி.மு.கவினர் வலியுறுத்தினார்கள். தாங்கள் நாத்திகரல்ல என்பதும் �ஒன்றே குலம் ஒருவனே தேவன்� என்பதும் போன்ற கோஷங்களும் முன் வைக்கப்பட்டன.

பார்ப்பனியத்தின் மீதான விமர்சனமும் மிகவும் நெளிவுசுளிவாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்துமதத்தின் அடிப்படையான வர்ணாசிரமத்தை அண்ணாத்துரையின் தி.மு.க கேள்விக்கு உள்ளாக்க வில்லை. திராவிட இயக்கத்தவர்களின் திரைப்படங்களில் தீண்டாமை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்.எஸ் கிருஷ்ணனின் �நல்லதம்பி� என்ற திரைப்படம் மட்டும் ஒரு விதிவிலக்காகும். முக்கிய பாத்திரங்களாகத் தாழ்த்தப்பட்டவர்கள் இவர்களது திரைப்படத்தில் தோன்றவில்லை.

சாதிப்பிரச்சனையைப் பற்றி பேசியதற்காகவும் கலப்புத் திருமணத்தில் முடிவதாகவும் மிகவும் புகழப்பட்ட அண்ணாத்துரையின் வேலைக்காரி திரைப்படத்தில் உயர்சாதிக் கதாநாயகனைக் காதலித்து மணக்கின்ற வேலைக்காரப் பெண்ணும் ஒரு தொடக்ககூடிய சாதியைச் சேர்ந்தவள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. அதுமட்டுமல்லாது அவள் தொடக்கூடிய சாதியை சேர்ந்தவள் என்ற விடயமும் இத்திரைப்படத்தில் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டப் படுகின்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரைப்படங்களில் பார்ப்பனரல்லாத மக்களின் பண்பாட்டு அடையாளங்கள் சிறப்பிக்கப் பட்டுக் காண்பிக்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற அதேவேளை, தமிழின் பண்பாட்டுப் பன்மைத்துவம், தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாடுகள் அவர்களது பிரச்சனைகள் குறித்து தி.மு.கவினரின் திரைப்படங்கள் முன்னிலைப் படுத்தவில்லை என்பதை வருத்தத்துடன் அவதானிக்கின்றோம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் அப்போதிருந்த நிலைமைகளில் சீரமைப்பு எதையும் மேற்கொள்ளும் நோக்கம் அரசியலில் இல்லாதது போன்றே திரைப்படத்துறையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கவில்லை, என்று காட்டமாகக் கருத்து ஒன்றை அ.மார்க்ஸ் முன் வைக்கின்றார்.

பெண்ணிய நோக்கிலும் தி.மு.க பிரமாதமாக ஒன்றும் செய்து விடவில்லை. அத்தோடு தி.மு.க தந்தைவழிச் சமூகம் கற்பிக்கும் இறுக்கமான ஒழுங்குகளும் பார்ப்பனியத்துடன் ஒருவழியில் பிணைந்தே நின்றன. தாசிகள், தொழுநோயாளிகள் முதலான விளிம்பு நிலையினரை மற்றைய திரைப்படங்களைப் போலவே தி.மு.கவினரின் திரைப்படங்களும் ஆணாதிக்க நோக்குடன் அணுகின.

 திருவாரூர்த் தங்கராசா எழுதி எம்.ஆர். ராதா நடித்துப் புகழ் பெற்ற படமான ரத்தக்கண்ணீர் இந்தப் போக்கினையே சுட்டி நிற்கின்றது. அண்ணாத்துரையின் ரங்கூன் ராதா நாடகப்பிரதி திரைப்படத்திற்காகத் திருத்தம் செய்யப்பட்டது. நாடகத்தில் இயல்பாகச் சித்தரிக்கப்பட்ட கதாநாயகிப் பாத்திரம் திரைப்படத்தில் வரும்போது கற்புக்கு எந்தவிதக் களங்கமும் கற்பிக்க இயலாதபடி புனிதவதியாக அக்கதாபாத்திரம் திருத்தப்பட்டது.

எனவே தான் முன்னர் தொடக்க காலத்தில் அண்ணாத்துரையையும் அவரது கட்சியையும் அவரது கட்சியின் திரைப்படங்களையும் கடுமையாக எதிர்த்த ஆதிக்க சக்திகள், மிக விரைவில் இவற்றை உள்வாங்கின. திராவிட இயக்கத்தவரின் திரைப்படங்களையும், படைப்பாளிகளையும் ஏற்றுக் கொண்டன. திராவிட இயக்கத்தவரின் திரைப்பட முயற்சிகள் தவிர்க்க இயலாதவை என்ற போதும் அவை தமக்கும் தம்முடைய கோட்பாட்டிற்கும் ஆபத்தைக் கொண்டு வராது என்பதை உணர்ந்து கொண்ட இம் மேட்டிமைச் சக்திகள் இவற்றை வரவேற்று இவற்றைத் தம்முள் உள்வாங்கின.

இந்த அதிகார சக்திகள், இவற்றை தமக்கு ஆபத்தற்றவையாகக் கருதி ஏற்றுக் கொண்டதன் காரணம் என்ன என்பதையும் இதன் பின்னனி என்ன என்பதையும் குறித்து சமுதாய அக்கறை கொண்ட நேயர்கள் சிந்தித்தப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறாக பெரியாரிடமிருந்து பிரிந்த அண்ணாத்துரை அவர்களின் திராவிட முன்னேற்றக்கழகம் பல அம்சங்களில் பெரியாருக்கு முந்திய நிலைமைக்குச் சென்றது.

பார்ப்பனரின் சடங்கு மேலாண்மைக்கான எதிர்ப்பு நிறுத்தப்பட்டது. தமிழ் உணர்வும், தமிழ்;ப் பெருங்கதைப் பாடல்களும் இந்தியத் தேசிய உணர்வில் கலந்தன. தி.மு.கவின் தேசியவாதத்தை பார்ப்பன சக்திகள் சுகமாக உணரும் நிலை உருவாகியது. பெரியாரியலிற்கு முற்றிலும் எதிரான நிலையில் தி.மு.க நின்றது. இப்போதும் நிற்கின்றது.

1972ல் தி.மு.கவில் ஏற்பட்ட பிளவு கொள்கை அடிப்படையில் ஏற்பட்டதல்ல! கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட தனிநபர் முரண்பாடுகள் பின்னர் விகாரமான தனிநபர் பகையாக உருக் கொண்டது.

எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மிக்க ஆதரவாக இருந்தபோதிலும் அவர் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.கவின் தலைமையானது தமிழீழத் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் கொண்டுள்ள விடயம், இன்னொரு காலத்தில் தர்க்கிக்கப்பட வேண்டியதாகும்.

ஆனால் தமிழகத்துத் தமிழ்த் தேசியம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தி.மு.க வை மிஞ்சிய சீரழிவுக் கட்சியாகவே, அ.தி.மு.க செயல்பட்டு வருகின்றது என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

தி.மு.க.விலிருந்து பிரிந்து உருவாகிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழீழத் தேசிய நலனையோ அல்லது தமிழகத்துத் தமிழ்த் தேசிய நலனையோ தமது மூலாதாரக் கொள்கையாக வைத்திருக்க வில்லை என்பதை அவர்களது முரண்பாடான செயல்களே சுட்டிக்காட்டும்.

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 77வது பிறந்தநாள் செய்தியாகச் சொன்னது என்ன?

�ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க 5-6-2000 அன்று சென்னையில் நடாத்த இருந்த பேரணியை �நடத்த வேண்டாம்� என்றுதான் கருணாநிதி, ம.தி.மு.க வைக் கேட்டுக் கொண்டார். ம.தி.மு.க வும் அதனை ஏற்றுக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்த இருந்த பேரணியைக் கைவிட்டது.

ஈழவிடுதலை ஆதரவாளர்களாகவும், தமிழ்த் தேசிய ஆதரவாளர்களாகவும் வை.கோவும், டாக்டர்.இராமதாசுவும் காட்சி அளிக்கின்றார்கள்.

இவர்களது கட்சிகள் காட்டுகின்ற ஈழவிடுதலை ஆதரவு என்பது தமிழ்த் தேசிய சக்திகளுக்கோ, தமிழினத்திற்கோ இவர்கள் காட்டுகின்ற சலுகை அல்ல.

இப்புதிய கட்சிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் இவை தேவைப்படுகின்றன. வை.கோவும் இராமதாசும், பா.ஜ.க.வோடும், ஜெயலலிதாவோடும் கூட்டுச் சேர்ந்து தமிழ் இனத்திற்கு இழைத்துள்ள துரோகத்தைத் துடைக்கும் அளவிற்கு தமிழினத்திற்கு ஆதரவாக அவர்கள் போர்ப்பரணி பாடிவிடவில்லை என்றும் திரு.பெ. மணியரசன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியம் பற்றிக் கூறும் போது தமிழ்த் தேசியவாதியான பெ. மணியரசன் கீழ்வருமாறு கூறுகின்றார்.

�திராவிடன் என்ற மரபு இனத்தை தி.மு.க முன் வைத்தது, தமிழ்த் தேசியக் கோட்பாட்டிற்குப் புறம்பான நிலைப்பாடு. தமிழன் என்ற தேசிய இனத்தை மட்டும் முன் வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பிற்காலத்தில் இக்கழகம் நாட்டால் இந்தியன்,  இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் என்று கூறிக் கொள்ளத் தொடங்கியது. இது தேசிய இனவரையறைக்குப் புறம்பான உளறல் மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தை ஊனப்படுத்தும் போக்கும் ஆகும்.�

�தமிழகத்தைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியத்திற்கு நேர்ந்த விபத்து நமக்கொரு வரலாற்றுச் சோகமாகும். ஓட்டுநரே வண்டியைக் குடை சாய்த்து விட்டது போன்ற அவலம்.�

இப்படிப்பட்ட நடிப்புச்சுதேசிகள் பற்றி, மகாகவி பாரதியார் பாடிய வரிகள் சிறந்த எடுத்துக்காட்டு:

நெஞ்சில் உரமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடி நின்று
கூவிப்; பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே
நாளில் மறப்பாரடி.

இக்கட்டுரைக்கு அ.மார்க்ஸ்,  குணா,  பெ.மணியரசன் போன்றவர்களின் ஆய்வுகள் மிகவும் உதவின. �தமிழ்த்தேசியம் இனி�, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு -தி.மு.க கட்டமைத்த தேசியமும் குடிமகனும். பெரியாரிடமிருந்து அண்ணா விலகும் இன்னொரு புள்ளி, �திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்கள்-போன்ற நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும், அதன் சொல்லாக்கங்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. அவர்களுக்கு எமது நன்றிகள்.

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home