Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்முதல் திருமுறை -  பாடல்கள் (1 - 721)முதல் திருமுறை - பாடல்கள் (722 - 1469) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (1 - 654 ) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (655 - 1331 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 713 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் ( 714- 1347 ) & பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)


 

campantar tEvAram
tirumuRai 2 part I (verses 1 - 654 )

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை - முதல் பகுதி பாடல்கள் (1 - 654 )



Acknowledgements: Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues, Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany. Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



 

2.01 திருப்பூந்தராய்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

1

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

2.1.1

2

எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.

2.1.2

3

சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.

2.1.3

4

சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.

2.1.4

5

பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.

2.1.5

6

மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.

2.1.6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

2.1.7

7

வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே.

2.1.8

8

வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே.

2.1.9

9

வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.

2.1.10

10

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.

2.1.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.2 திருவலஞ்சுழி
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

11

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.

2.2.1

12

பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.

2.2.2

13

கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.

2.2.3

14

கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே.

2.2.4

15

கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.

2.2.5

16

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.

2.2.6

17

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.

2.2.7

18

தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே.

2.2.8

19

தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.

2.2.9

20

உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.

2.2.10

21

வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.

2.2.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.3 திருத்தெளிச்சேரி
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

22

பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.

2.3.1

23

விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்
வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே.

2.3.2

24

வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே.

2.3.3

25

காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயுந்
தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.

2.3.4

26

பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே.

2.3.5

27

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற்
றிவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே.

2.3.6

28

கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ்
சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்
மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே.

2.3.7

29

கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரம்நெரித் திட்டதும் பாதமே.

2.3.8

30

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமல ரான்முடி தேடியே
ஓல மிட்டிட எங்ஙன மோருருக் கொண்டதே.

2.3.9

31

மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே.

2.3.10

32

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.

2.3.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பார்வதீசுவரர், தேவியார் - சத்தியம்மாளம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.4 திருவான்மியூர்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

33

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

2.4.1

34

சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.

2.4.2

35

கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.

2.4.3

36

மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

2.4.4

37

மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

2.4.5

38

போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்
தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.

2.4.6

39

வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.

2.4.7

40

தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

2.4.8

41

பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே.

2.4.9

42

மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

2.4.10

43

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.

2.4.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சுந்தரமாது அல்லது சொக்கநாயகி.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.5 திருவனேகதங்காபதம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

44

நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம்
பாடல் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

2.5.1

45

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.

2.5.2

46

செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங்
கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே.

2.5.3

47

தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.

2.5.4

48

பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய்
உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல்
அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம்
இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே.

2.5.5

49

தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே.

2.5.6

50

வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே.

2.5.7

51

ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே.

2.5.8

52

கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல்
அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.

2.5.9

53

மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங்
காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே.

2.5.10

54

தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை
நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன்
அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ்
சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே.

2.5.11

இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - அருள்மன்னர், தேவியார் - மனோன்மணியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.6 திருவையாறு
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

55

கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.

01

56

தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர்
அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே.

02

57

கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்
ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவே
ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.

03

58

பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணின் நல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே.

04

59

வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி
ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே.

05

60

எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.

06

61

ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே.

07

62

குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே.
பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே.

08

63

உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்
வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.

09

64

மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்
ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே.

10

65

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்
மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத் தெண்டோ ள்முக் கணான்கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ யாறுடை ஐயனே.

11

66

பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.

12


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.7 திருவாஞ்சியம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

67

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.

01

68

கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.

02

69

மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.

03

70

சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.

04

71

கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்
தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.

05

72

அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.

06

73

விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்
தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.

07

74

மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

08

75

செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

09

76

பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.

10

77

தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாஞ்சியநாதர், தேவியார் - வாழவந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.8 திருச்சிக்கல்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

78

வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே.

01

79

மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.

02

80

நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.

03

81

கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

04

82

மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே.

05

83

வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்
விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி
கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.

06

84

முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.

07

85

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே.

08

86

மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்
சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.

09

87

பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்
கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.

10

88

கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நவநீதநாதர், தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.9 திருமழபாடி
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

89

களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.

01

90

காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.

02

91

உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப்
பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை
முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.

03

92

பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன்
வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே.

04

93

தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.

05

94

தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.

06

95

சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.

07

96

இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை
உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற
விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.

08

97

ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம்
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.

09

98

கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்
நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே.

10

99

மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்
ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்.......உலகத்திலே.

11

இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர், தேவியார் - அழகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.10 திருமங்கலக்குடி
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

100

சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே.

01

101

பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே
மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி
இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.

02

102

கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.

03

103

பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக்
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.

04

104

ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே
ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.

05

105

தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்
கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறும் உய்யும் வகையதே.

06

106

வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி
ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே
கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.

07

107

பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப்
புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.

08

108

ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன்
மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி
ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு
கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.

09

109

மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடை
ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.

10

110

மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புராணவரதேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.11 சீகாழி
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

111

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.

01

112

நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே.

02

113

அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே.

03

114

புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

04

115

நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே.

05

116

செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.

06

117

துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.

07

118

குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே.

08

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

09

119

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னாணடி கூறுமே.

10

120

கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.12 திருவேகம்பம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

121

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.

01

122

நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.

02

123

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
சேராதார் இன்பமா யந்நெறி சேராரே.

03

124

குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.

04

125

சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

05

126

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.

06

127

விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின் றவலங் காரமே.

07

128

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.

08

129

நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே.

09

130

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.

10

131

அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.13 திருக்கோழம்பம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

132

நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே.

01

133

மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.

02

134

ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே.

03

135

சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்
உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே.

04

136

காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலோர்பால்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே.

05

137

பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக்
கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்
கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

06

138

சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவிய
நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே.

07

139

விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்
குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்
செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.

08

140

நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக்
கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

09

141

புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.

10

142

தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை
விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோகுலேசுவரர், தேவியார் - சவுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.14 திருவெண்ணியூர்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

143

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

01

144

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.

02

145

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.

03

146

மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே.

04

147

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலோர் பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை
ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே.

05

148

முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே.

06

149

காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.

07

150

மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.

08

151

மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்
கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

09

152

குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.

10

153

மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை
உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.15 திருக்காறாயில்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

154

நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.

01

155

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமி லாதாரே.

02

156

விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.

03

157

தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.

04

158

கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.

05

159

ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.

06

160

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

07

161

கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

08

162

பிறையானே பேணிய பாடலோ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.

09

163

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.

10

164

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.16 திருமணஞ்சேரி
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

165

அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

01

166

விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.

02

167

எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.

03

168

விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

04

169

எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.

05

170

மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.

06

171

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.

07

172

எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே.

08

173

சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.

09

174

சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.

10

175

கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மணவாளநாயகர், தேவியார் - யாழ்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.17 திருவேணுபுரம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

176

நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.

01

177

அரவார் கரவன் அமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.

02

178

ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேகந் தவழும் வேணு புரமே.

03

179

காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுஇன் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே.

04

180

அரையார் கலைசேர் அனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே.

05

181

ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.

06

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

07

182

ஏவும் படைவேந் தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே.

08

183

கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் இருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணிற் றிகழும் வேணு புரமே.

09

184

போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் மறியா அடியார் இறையூர்
மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் மறிவார் வேணு புரமே.

10

185

கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196)
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

186

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

01

187

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

02

188

அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.

03

189

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

04

190

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.

05

191

பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.

06

192

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே.

07

193

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே.

08

194

எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.

09

195

அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.

10

196

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.19 திருநெல்லிக்கா (197-207)
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

197

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

01

198

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

02

199

நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக்
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

03

200

தலைதா னதுஏந் தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

04

201

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

05

202

வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்
குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

06

203

பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்
இறைதான் இறவாக் கயிலை மலையான்
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

07

204

மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

08

205

தழல்தா மரையான் வையந்தா யவனுங்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

09

206

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

10

207

புகரே துமிலா தபுத்தே ளுலகின்
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன
பகர்வா ரவர்பா வமிலா தவரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.20 திருஅழுந்தூர் (208-218)
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

208

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.

01

209

கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடம்மே வினையே.

02

210

கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.

03

211

வானே மலையே யெனமன் னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை யவரெம்
மானே யெனமா மடம்மன் னினையே.

04

212

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே.

05

213

நறவார் தலையின் நயவா வுலகிற்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடம்மன் னினையே.

06

214

தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை தொழநின் றனையே.

07

215

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே.

08

216

மணீநீள் முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடலந் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
மணிமா மடம்மன் னியிருந் தனையே.

09

217

முடியார் சடையாய் முனநா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியாற் றொழமா மடம்பற் றினையே.

10

218

அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.21 திருக்கழிப்பாலை
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

219

புனலா டியபுன் சடையாய் அரணம்
அனலா கவிழித் தவனே அழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.

01

220

துணையா கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுகந் தவனே இறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலேத் தவிடர் கெடுமே.

02

221

நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் மவையே.

03

222

எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.

04

223

நடநண் ணியொர்நா கமசைத் தவனே
விடநண் ணியதூ மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
உடன்நண் ணிவணங் குவனுன் னடியே.

05

224

பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தவிடர் கெடுமே.

06

225

முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா யினஆ சறுமே.

07

226

எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே.

08

227

நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.

09

228

தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.

10

229

கழியார் பதிகா வலனைப் புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
கெழியார் இமையோ ரொடுகே டிலரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.22 திருக்குடவாயில்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

230

திகழுந் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.

01

231

ஓடுந் நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.

02

232

கலையான் மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.

03

233

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடங்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.

04

234

என்றன் உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.

05

235

அலைசேர் புனலன் னனலன் னமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.

06

236

அறையார் கழலன் னமலன் னியலிற்
பறையாழ் முழவும் மறைபா டநடங்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.

07

237

வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

08

238

பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

09

239

வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
குயிலன் குழகன் குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.

10

240

கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோணேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.23 திருவானைக்கா
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

241

மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே.

01

242

கொலையார் கரியின் னுரிமூ டியனே
மலையார் சிலையா வளைவித் தவனே
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
நிலையா அருளாய் எனும்நே ரிழையே.

02

243

காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்
பாலோ டுநெய்யா டியபால் வணனே
வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே.

03

244

சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே
விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே
அறமிக் கதுவென் னுமெனா யிழையே.

04

245

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.

05

246

குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
நின்றா யருளாய் எனும்நே ரிழையே.

06

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

07

247

மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன் றியதூ மழுவா
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.

08

248

திருவார் தருநா ரணன்நான் முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே.

09

249

புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய் எனும்ஆ யிழையே.

10

250

வெண்நா வலமர்ந் துறைவே தியனை
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.24 திருநாகேச்சரம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

251

பொன்னேர் தருமே னியனே புரியும்
மின்னேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.

01

252

சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே.

02

253

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.

03

254

நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே.

04

255

கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சர நகருள்
தலைவா எனவல் வினைதான் அறுமே.

05

256

குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சரத்தெம்
அரைசே எனநீங் கும்அருந் துயரே.

06

257

முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சர நகருள்
சடையா எனவல் வினைதான் அறுமே.

07

258

ஓயா தஅரக் கன்ஒடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் தவர்நா கேச்சரத்
தாயே எனவல் வினைதான் அறுமே.

08

259

நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சர நகரே
இடமா வுறைவா யெனஇன் புறுமே.

09

260

மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பாவியநா கேச்சர நகருள்
சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே.

10

261

கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந் தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சரத் தரனைச்
சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர், தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.25 திருப்புகலி
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

262

உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.

01

263

பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே.

02

264

வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே.

03

265

கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிகளை யடைந் தன்பு செய்யுமே.

04

266

பாதத் தாரொலி பல்சி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.

05

267

மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறையி னானுறை யும்பு கலியை
நிறையி னாற்றொழ நேச மாகுமே.

06

268

கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே.

07

269

அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.

08

270

மாலும் நான்முகன் றானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலு மேனியன் பூம்பு கலியுள்
பால தாடிய பண்ப னல்லனே.

09

271

நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
நின்ற வன்னிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே.

10

272

புல்ல மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை இருநி லத்துளே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.26 திருநெல்வாயில்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

273

புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ ணந்நயந்
துடையி னாரெம துச்சி யாரே.

01

274

வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை யாய தன்மையர்
நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே.

2

275

நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் மீசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே.

03

276

மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே.

04

277

விருத்த னாகிவெண் ணீறு பூசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயில் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே.

05

278

காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயிலார் தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே.

06

279

ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே.

07

280

பற்றி னான்அரக் கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே.

08

281

நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்
நீடி னாரநெல் வாயி லார்தலை
ஓடி னாரெம துச்சி யாரே.

09

282

குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல்
பண்ட மாகவை யாத பண்பினர்
விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம் உச்சி யாரே.

10

283

நெண்ப யங்குநெல் வாயி லீசனைச்
சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
பண்ப யன்கொளப் பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

284

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்
துலவி னான்அடி யுள்க நல்குமே.

01

285

குறைவி லார்மதி சூடி யாடவண்
டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத்
துறைவி னான்றனை யோதி உய்ம்மினே.

02

286

என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்
நம்பன் நான்மறை பாடு நாவினான்
இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே.

03

287

நாச மாம்வினை நன்மை தான்வருந்
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே.

04

288

மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவன் இந்திர நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடும் அடிகள் வண்ணமே.

05

289

வெண்ணி லாமதி சூடும் வேணியன்
எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
அண்ணல் இந்திர நீலப் பர்ப்பதத்
துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே.

06

290

கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
உடைய வாண ருகந்த கொள்கையே.

07

291

எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
அடர்த்த தோர்விர லான வனையாட்
படுத்தன் இந்திர நீலப் பர்ப்பதம்
முடித்த லம்முற முயலும் இன்பமே.

08

292

பூவி னானொடு மாலும் போற்றுறுந்
தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்
பாவி யாதெழு வாரைத் தம்வினை
கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே.

09

293

கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்
விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம்
எட்ட னைநினை யாத தென்கொலோ
சிட்ட தாயுறை யாதி சீர்களே.

10

294

கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்தொழு நீலப் பர்பதத்
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே.

11

இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - நீலாசலநாதர், தேவியார் - நீலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.28 திருக்கருவூரானிலை
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

295

தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயும் அன்பரே.

01

296

நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்தம் அன்பரே.

02

297

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

03

298

முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியு ளார்கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே.

04

299

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யர்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே.

05

300

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.

06

301

பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளும் நாதரே.

07

302

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.

08

303

உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.

09

304

புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.

10

305

கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.

11

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - கிருபாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.29 திருப்புகலி - திருவிராகம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

306

முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.

01

307

வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.

02

308

பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.

03

309

மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.

04

310

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.

05

311

வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.

06

312

நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.

07

313

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.

08

314

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.

09

315

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.

10

316

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.30 திருப்புறம்பயம் - திருவிராகம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

317

மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்
கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய்.

01

318

விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந்
தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய்.

02

319

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய்.

03

320

வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய்.

04

321

பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே.

05

322

அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய்.

06

323

மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய்.

07

324

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய்.

08

325

வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக்
கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய்.

09

326

விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்
அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே.

10

327

கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந்
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார்
பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர், தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.31 திருக்கருப்பறியலூர் - திருவிராகம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

328

சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

01

329

வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.

02

330

வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்
காதவ னிருப்பது கருப்பறிய லூரே.

03

331

மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

04

332

ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

05

333

விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.

06

334

ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதின னிருப்பது கருப்பறிய லூரே.

07

335

வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

08

336

பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

09

337

அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறிய லூரே.

10

338

நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர், தேவியார் - கோல்வளையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.32 திருவையாறு - திருவிராகம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

339

திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.

01

340

கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.

02

341

கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.

03

342

நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.

04

343

வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.

05

344

பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.

06

345

துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.

07

346

இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.

08

347

பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.

09

348

பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.

10

349

வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.33 திருநள்ளாறு - திருவிராகம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

350

ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.

01

351

விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.

02

352

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.

03

353

கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.

04

354

நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.

05

355

பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.

06

356

நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.

07

357

கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.

08

358

உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.

09

359

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.

10

360

ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.34 திருப்பழுவூர் - திருவிராகம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

361

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.

01

362

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.

02

363

வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.

03

364

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே.

04

365

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே.

05

366

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.

06

367

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.

07

368

உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே.

08

369

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.

09

370

மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.

10

371

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வடவனநாதர், தேவியார் - அருந்தவநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.35 திருக்குரங்காடுதுறை
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

372

பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மேய அழகார்
குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே.

01

373

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி
வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்
கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே.

02

374

நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
குறைவில் லவனூர் குரங்காடு துறையே.

03

375

விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே.

04

376

நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்
ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி
ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்
கூறான்நகர் போல்குரங் காடு துறையே.

05

377

நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத்
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே.

06

378

பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே.

07

379

வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங்
கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.

08

380

நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண் டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியான் நகர்போல் குரங்காடு துறையே.

09

381

துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்காடு துறையே.

10

382

நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர், தேவியார் - அழகுசடைமுடியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.36 திருஇரும்பூளை - வினாவுரை
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

383

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.

01

384

தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.

02

385

அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.

03

386

நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.

04

387

சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.

05

388

தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காடார் கடுவே டுவனான கருத்தே.

06

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

07

389

ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.

08

390

துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.

09

391

துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.

10

392

எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர், தேவியார் - ஏலவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.37 திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

393

சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

01

394

சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித்த கருத்தே.

02

395

குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித்த லழகே.

03

396

படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.

04

397

வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
கானார் கடுவே டுவனான கருத்தே.

05

398

பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.

06

399

வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே.

07

400

கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.

08

401

கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்
தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே.

09

402

வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.

10

403

காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.38 திருச்சாய்க்காடு
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

404

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

01

405

பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.

02

406

நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை
தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.

03

407

வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.

04

408

ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே.

05

409

துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே.

06

410

வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே.

07

411

இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.

08

412

மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.

09

413

ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.

10

414

ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர், தேவியார் - குயிலுநன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.39 திருக்ஷேத்திரக்கோவை
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

415

ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம் வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும் பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே.

01

416

அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்
கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம் பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும்
பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான் பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக் கடல் நீந் தலாங் காரணமே.

02

417

அட்டா னமென் றோதியநா லிரண்டும் அழகன் னுறைகா வனைத்துந் துறைகள்
எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங் குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய் அரும்பா வங்களா யினதேய்ந் தறவே.

03

418

அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப்
பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான் விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்
உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே

04

419

ஆறை வடமா கறலம்பர் ஐயா றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறை துலைபுக லூரக லாதிவை காதலித் தானவன் சேர்பதியே.

05

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

420

மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும் மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
இனவஞ் சொலிலா இடைமா மருதும் இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங்
கனமஞ் சினமால் விடையான் விரும்புங் கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின் தவமாம் மலமா யினதா னருமே.

06

421

மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம் முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங் கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்
கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ** **

07

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

422

**** **** குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்றூ ரடியார் வழிபா டொழியாத் தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங்
காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள் நெரித்தா னுறைகோயில் **** **** ** லென் றென்றுநீ கருதே.

08

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

423

நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச்
சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங் குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே.

09

424

குத்தங் குடிவே திகுடி புனல்சூழ் குருந்தங் குடிதே வன்குடி மருவும்
அத்தங் குடிதண் டிருவண் குடியும் அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த
நித்தன் நிமலன் உமையோ டுங்கூட நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப்
புத்தர் புறங்கூ றியபுன் சமணர் நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே.

10

425

அம்மா னையருந் தவமாகி நின்ற அமரர் பெருமான் பதியான வுன்னிக்
கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக் கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே.

11

இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர்,
வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம்,
நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி,
மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்
தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.40 திருப்பிரமபுரம்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

426

எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.

01

427

தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.

02

428

நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.

03

429

சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.

04

430

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.

05

431

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.

06

432

சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.

07

433

எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே.

08

434

கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.

09

435

உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.

10

436

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.41 திருச்சாய்க்காடு
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

437

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.

01

438

போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.

02

439

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.

03

440

கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.

04

441

கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே.

05

442

சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.

06

443

மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.

07

444

தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்
படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.

08

445

வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.

09

446

குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.

10

447

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.42 திருஆக்கூர்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

448

அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்
தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

01

449

நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான்
காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற்
தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே.

02

450

வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத்
தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

03

451

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

04

452

வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத்
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

05

453

பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந்
தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

06

454

வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

07

455

கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்குந்
தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

08

456

நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

09

457

நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

10

458

ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர், தேவியார் - கட்கநேத்திரவம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.43 திருப்புள்ளிருக்குவேளூர்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

/table>
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.44 திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

459

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

01

460

தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

02

461

வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

03

462

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

04

463

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

05

464

திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

06

465

அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

07

466

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

08

467

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

09

468

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

10

469

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.

11

470

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.

01

471

கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.

02

472

பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.

03

473

கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.

04

474

பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.

05

475

சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்
காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத்
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.

06

476

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.

07

477

தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.

08

478

புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.

09

479

பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.

10

480

ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.

11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.45 திருக்கைச்சினம்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

481

தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

01

482

விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.

02

483

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்
சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக்
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.

03

484

பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக்
கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

04

485

தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்*நஞ் சுண்டனங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

05

* நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க.

486

மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

06

487

வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.

07

488

போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

08

489

மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற்
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

09

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

10

490

தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்
விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைச்சினநாதர், தேவியார் - வேள்வளையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.46 திருநாலூர்த்திருமயானம்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

491

பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.

01

492

சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக
ஆடும் பறைசங் கொலியோ டழகாக
நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்
பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.

02

493

கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.

03

494

கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்
சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.

04

495

கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே.

05

496

கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.

06

497

கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே.

07

498

பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்
அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே.

08

499

மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.

09

500

துன்பாய மாசார் துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.

10

501

ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
நாலு மறையோது நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்
கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பலாசவனேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.47 திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

502

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

01

503

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

02

504

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

03

505

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

04

506

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

05

507

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

06

508

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

07

509

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

08

510

நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

09

511

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

10

512

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

11

இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கபாலீசுவரர், தேவியார் - கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.48 திருவெண்காடு
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

513

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

01

514

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

02

515

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

03

516

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

04

517

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

05

518

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

06

519

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

07

520

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

08

521

கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

09

522

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

10

523

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.49 சீகாழி
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

524

பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறும்
கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்
பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.

01

525

மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.

02

526

நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி
தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே.

03

527

மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறுங்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.

04

528

மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே.

05

529

மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானைநி னைந்தி ருந்திசை பாடுவார் வினை
செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே.

06

530

தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே.

07

531

மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே.

08

532

பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி
திருவின் நாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.

09

533

பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடுங் கூடிய வேடனே சுட லைப்பொ டியணி
அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே.

10

534

பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும் உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.50 திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

535

குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.

01

536

பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகில் தந்து *பம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.

02

* பம்பை என்பது ஒரு நதி.

537

நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
பூண்ட கேழல்ம ருப்பரா விரி கொன்றை வாளரி யாமை பூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே.

03

538

சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
பாலின் நேர்மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி
ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.

04

539

தொண்டர் வந்துவ ணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே.

05

540

ஓதி யாரண மாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
சோதியே சுடரே சுரும் பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.

06

541

மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக்
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழ
வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.

07

542

நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
குன்றெ டுத்தநி சாசரன் திரள் தோளி ருபது தான் நெரிதர
அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.

08

543

செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி
வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
தைய லாளொடு பிச்சைக் கிச்சைத யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.

09

544

புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.

10

545

வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.

11

ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும்,
ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.51 திருக்களர்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

546

நீருளார் கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.

01

547

தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
வேளின் நேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.

02

548

பாட வல்லநல் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.

03

549

அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை வாஇ ணையடி போற்றி நின்றவர்க்
கன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே.

04

550

கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கிண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டொர் கைத்தலத்
தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே.

05

551

கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீல மேவிய கண்டனே நிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆலநீழ லுளாய் அடைந்தார்க் கருளாயே.

06

552

தம்ப லம்மறி யாதவர் மதில் தாங்கு மால்வரை யால ழலெழத்
திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்து கந்துபே
ரம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.

07

553

குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்
சென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.

08

554

பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே.

09

555

பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.

10

556

இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - களர்முளையீசுவரர், தேவியார் -அழகேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.52 திருக்கோட்டாறு
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

557

கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழில்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே.

01

558

நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழ லேத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.

02

559

விரவி நாளும் விழாவி டைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே.

03

560

அம்பின் நேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக்
கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
நம்பனே நடனே நலந் திகழ் நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே.

04

561

பழைய தம்மடி யார்துதி செயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில்
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த ஆடிய
அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே.

05

562

பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங்
கொஞ்சி இன்மொழியாற் றொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச னேமணி யேமணி மிடற் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே.

06

563

கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவ மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.

07

564

வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.

08

565

கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் தேட ஆனையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாதும் நீயும்வி யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்
ளெருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே.

09

566

உடையி லாதுலழ் கின்ற குண்டரும் ஊணருந் தவத் தாய சாக்கியர்
கொடையிலார் மனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
அடைகிலாத வண்ணம் அருளாயுன் அடியவர்க்கே.

10

567

கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூல னைமுடி வொன் றிலாதவெம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
மாலைபத்தும் வல்லார்க் கெளிதாகும் வானகமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.53 திருப்புறவார் - பனங்காட்டூர்
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

568

விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்வரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே.

01

569

நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.

02

570

வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.

03

571

மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே.

04

572

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.

05

573

நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.

06

574

கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையோர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே.

07

575

தூவி யஞ்சிறை மென்ன டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே.

08

576

அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்த மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.

09

577

நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.

10

578

மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - திருப்புருவமின்னாளம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.54 திருப்புகலி
பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

579

உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

01

580

நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

02

581

அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்
பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே.

03

582

கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே.

04

583

நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி
தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

05

584

மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

06

585

களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே.

07

586

பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

08

587

சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.

09

588

நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

10

589

ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.55 திருத்தலைச்சங்காடு
பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

590

நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ்
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.

01

591

துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
*பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

02

* பிணி - பிணித்தல்

592

சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.

03

593

வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

04

594

சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.

05

595

நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.

06

596

அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்
பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

07

597

திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.

08

598

பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

09

599

அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.

10

600

நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை
ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர், தேவியார் - சௌந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.56 திருவிடைமருதூர்
பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

601

பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

01

602

நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

02

603

அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச்
சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

03

604

பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்
வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

04

605

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.

05

606

சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்
இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

06

607

புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

07

608

சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
தலைபத்துந் திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.

08

609

மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

09

610

சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந்
துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

10

611

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்
சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.57 திருநல்லூர்
பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

612

பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

01

613

அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்
கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

02

614

குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

03

615

கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்
மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

04

616

நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்
திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

05

617

கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே.

06

618

ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண
மீன்தோயுந் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்
தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

07

619

காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

08

620

போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாது
நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்
மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.

09

621

பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதார் அறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

10

622

கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.58 திருக்குடவாயில்
பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

623

கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்
குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்
நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.

01

624

அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற்
படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.

02

625

கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்
றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்
குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

03

626

மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்
தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்
குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்
நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

04

627

இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப்
பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.

05

628

அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயிற்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

06

629

பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்
ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்
கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

07

630

கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்
தங்காதல் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.

08

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

09

631

தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொள்மாடக் குடவாயில்
ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

10

632

நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.59 சீகாழி
பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

633

நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.

01

634

ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.

02

635

வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்
கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.

03

636

மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்
பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

04

637

பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.

05

638

மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.

06

639

புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.

07

640

அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்
பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.

08

641

மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே.

09

642

அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.

10

643

ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.

11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.60 திருப்பாசூர்
பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

644

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

01

645

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்
றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.

02

646

கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.

03

647

பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.

04

648

ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

05

649

கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே.

06

650

கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
எண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.

07

651

தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

08

652

நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்
புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்
செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

09

653

தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

10

654

ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே.

11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர், தேவியார் - பசுபதிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை முதல் பகுதி முற்றும்.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home