Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > 1. பம்பை வாவிப் படலம் > 2 அனுமப் படலம் > 3 நட்புக் கோட் படலம் > 4 மராமரப் படலம் > 5 துந்துபிப் படலம் > 6 கலன் காண் படலம் > 7 வாலி வதைப் படலம் > 8 அரசியற் படலம் > 9 கார்காலப் படலம்> 10 கிட்கிந்தைப் படலம் >11 தானைகாண் படலம் >12 நாடவிட்ட படலம் > 13 பிலன் புக்கு நீங்கு படலம் > 14 ஆறுசெல் படலம் > 15 சம்பாதிப் படலம் > 16 மயோந்திரப் படலம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
கிட்கிந்தா காண்டம் - 14. ஆறு செல் படலம்


பொய்கைக் கரையில் வானரர் துயில துமிரன் வருதல்

கண்டார், பொய்கைக் கண் அகல் நல் நீர்க் கரை தாம் உற்று,
உண்டார், தேனும் ஒண் கனி காயும்; ஒரு சூழல்,
கொண்டார் அன்றோ, இன் துயில்; கொண்ட குறி உன்னி,
தண்டா வென்றித் தானவன் வந்தான், தகவு இல்லான். 1

மலையே போல்வான்; மால் கடல் ஒப்பான்; மறம் முற்ற,
கொலையே செய்வான்; கூற்றை நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான்; நீர்மை இலாதான்; நிமிர் திங்கட்
கலையே போலும் கால எயிற்றான்; கனல் கண்ணான்; 2

கருவி மா மழை கைகள் தாவி மீது
உருவி, மேனி சென்று உலவி ஒற்றலால்,
பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்,
அருவி பாய்தரும் குன்றமே அனான்; 3

வானவர்க்கும், மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான்;
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட, வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ? 4

பிறங்கு பங்கியான்; பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான்; பிசையும் கையினான்;
அறம் கொள் சிந்தையார், நெறி செல் ஆய்வினால்
உறங்குவாரை வந்து, ஒல்லை எய்தினான். 5

அங்கதன் மார்பில் அசுரன் அறைதல்

'பொய்கை என்னது என்று உணர்ந்தும், புல்லியோர்
எய்தினார்கள் யார்? இது எனா?' எனா,
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில்,
கையின் மோதினான்;- காலனே ஆனான். 6

அங்கதன் எற்ற, அசுரன் அலறி இறந்து வீழ்தல்

மற்று அ(ம்) மைந்தனும் உறக்கம் மாறினான்;
'இற்று இவன் கொலாம் இலங்கை வேந்து' எனா,
எற்றினானை, நேர் எற்றினான்; அவன்
முற்றினான், உயிர் உலந்து மூர்ச்சியா. 7

இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து,
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும்,
தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார், -
பிடியுண்டார் எனத் துயிலும் பெற்றியார். 8

அசுரனைப் பற்றி அனுமன் வினாவ, அங்கதன் 'யான் அறியேன்' எனல்

'யார் கொலாம் இவன்? இழைத்தது என்?' எனா,
தாரை சேயினைத் தனி வினாவினான்,
மாருதேயன்; மற்று அவனும், 'வாய்மை சால்
ஆரியா! தெரிந்து அறிகிலேன்' என்றான். 9

சாம்பன் துமிரன் வரலாறு கூறல்

'யான் இவன் தனைத் தெரிய எண்ணினேன்;
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே-
ரான், இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
வானவன்' என்று சாம்பன் சாற்றினான். 10

மறுநாள் பெண்ணையாற்றை அடைந்து தேடுதல்

'வேறும் எய்துவார் உளர் கொலாம்' எனா,
தேறி, இன் துயில் செய்தல் தீர்ந்துளார்,
வீறு செஞ் சுடர்க் கடவுள் வேலைவாய்
நாற, நாள் மலர்ப் பெண்ணை நாடுவார். 11

புள் தை வெம் முலைப் புளினம், ஏய் தடத்து
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்,
வண்ண வெண் நகைத் தரள் வாள் முகப்
பெண்ணை நண்ணினார் - பெண்ணை நாடுவார். 12

துறையும், தோகை நின்று ஆடு சூழலும்,
குறையும், சோலையும், குளிர்ந்த சாரல் நீர்ச்
சிறையும், தௌ;ளு பூந் தடமும், தெண் பளிக்கு
அறையும், தேடினார்-அறிவின் கேள்வியார். 13

அணி கொழித்து வந்து, எவரும் ஆடுவார்
பிணி கொழித்து, வெம் பிறவி வேரின் வன்
துணி கொழித்து, அருஞ் சுழிகள் தோறும், நல்
மணி கொழித்திடும் துறையின் வைகினார். 14

பெண்ணையாற்றைக் கடந்து, தசநவ நாடு அடைதல்

ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்;
காடு நண்ணினார்; மலை கடந்துளார்;
வீடு நண்ணினார் என்ன, வீசும் நீர் -
நாடு நண்ணினார் - நாடு நண்ணினார். 15

தசநவப் பெயர்ச் சரள சண்பகத்து,
அசந அப் புலத்து அகணி நாடு ஒரீஇ,
உசநவப் பெயர்க் கவி உதித்த பேர்
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார். 16

தவத்தோர் வடிவில், விதர்ப்ப நாட்டில் தேடுதல்

வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு,
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்;
மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார்,
செய் தவத்துளார் வடிவின், தேடினார். 17

முண்டகத் துறையை அடைதல்

அன்ன தன்மையால், அறிஞர் நாடி, அச்
செந் நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ,
தன்னை எண்ணும் அத் தகை புகுந்துளார்
துன்னு தண்டகம், கடிது துன்னினார். 18

உண்டு, அகத்துளார், உறையும் ஐம் பொறிக்
கண்டகர்க்கு அருங் காலன் ஆயினார்,
தண்டகத்தையும் தடவி ஏகினார்;
முண்டகத்துறை கடிது முற்றினார். 19

அள்ளல் நீர் எலாம், அமரர் மாதரார்,
கொள்ளை மா முலைக் கலவை, கோதையின்
கள்ளு, நாறலின், கமல வேலி வாழ்
புள்ளும், மீன் உணா, புலவு தீர்தலால். 20

குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் -
விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார்,
நஞ்சு, வீணையின் நடத்து பாடலான்,
அஞ்சுவார், கணீர் அருவி ஆறுஅரோ! 21

கமுக வார் நெடுங் கனக ஊசலில்,
குமுத வாயினார், குயிலை ஏசுவார்;
சமுக வாளியும், தனுவும் வாழ் முகத்து
அமுத பாடலார், அருவி ஆடுவார். 22

இனைய ஆய ஒண் துறையை எய்தினார்;
நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்;
வினைய வார் குழல் திருவை மேவலார்;
புனையும் நோயினார், கடிது போயினார். 23

பாண்டு மலைச் சிகரத்தை வானரர் அடைதல்

நீண்ட மேனியான், நெடிய தாளின்நின்று
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம்,
பாண்டு அம் மலைப் படர் விசும்பினைத்
தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார். 24

இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா,
மருள் உறுத்து, வண் சுடர் வழங்கலால்,
அருள் உறுத்திலா அடல் அரக்கன்மேல்
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால். 25

விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி,
கண்ணுற நோக்கலுற்றார், களி உறக் கனிந்த காமர்
பண் உறு கிளவிச் செவ் வாய், படை உறும் நோக்கினாளை,
எண்ணுறு திறத்துக் காணார்; இடர் உறும் மனத்தர் எய்த்தார். 26

வானரர் கோதாவரியை அடைதல்

ஊதைபோல் விசையின், வெங் கண் உழுவை போல் வயவர், ஓங்கல்
ஆதியை அகன்று செல்வார்; அரக்கனால் வஞ்சிப் புண்ட
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து, புவனம் சேர்ந்த
கோதைபோல் கிடந்த கோதாவரியினைக் குறுகிச் சென்றார். 27

எழுகின்ற திரையிற்று ஆகி, இழிகின்ற மணி நீர் யாறு, -
தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய, சுருதிச் சொல்லால்
உழுகின்ற பொழுதின், ஈன்ற ஒரு மகட்கு இரங்கி, ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி ஆம் என - பொலிந்தது அன்றே. 28

ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி,
காசொடு கனகம் தூவி, கவின் உறக் கிடந்த கான் யாறு, -
கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து, எருவை வேந்தன்
வீசிய வடக மீக் கோள் ஈது என - விளங்கிற்று அன்றே. 29

வானரர் கவணகத் துறை புகுந்து, குலிந்த தேசத்தைக் கடத்தல்

அந் நதி முழுதும் நாடி, ஆய் வளை மயிலை, யாண்டும்
சந்நிதி உற்றிலாதார், நெடிது பின் தவிரச் சென்றார்;
'இன்ன தீதுஇலாத, தீது' என்று யாவையும் எண்ணும் கோளார்,
சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணகத் துறையில் புக்கார். 30

சுரும்பொடு தேனும், வண்டும், அன்னமும், துவன்றி; புள்ளும்,
கரும்பொடு செந் நெல் காடும், கமல வாவிகளும், மல்கி;
பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்கச் சென்றார்;
குரும்பை நீர் முரஞ்சும் சோலைக் குலிந்தமும், புறத்துக் கொண்டார். 31

அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து, வேங்கட மலை சேர்தல்

கொங்கணம் ஏழும் நீங்கி, குட கடல் தரளக் குப்பைச்
சங்கு அணி பானல் நெய்தல்-தண் புனல் தவிர ஏகி,
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டுத், தேவர்
அங்கைகள் கூப்ப, நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார். 32

அருந்ததிக்கு அருகு சென்று, ஆண்டு, அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார்; இடையர் மாதர்
பெருந் ததிக்கு அருந் தேன் மாறும் மரகதப் பெருங் குன்று எய்தி,
இருந்து, அதின் தீர்ந்து சென்றார், வேங்கடத்து இறுத்த எல்லை - 33

திருவேங்கட மலைச் சிறப்பு

முனைவரும், மறை வலோரும், முந்தைநாள் சிந்தை மூண்ட
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும், விண்ணோர்
எனைவரும், அமரர் மாதர் யாவரும், சித்தர் என்போர்
அனைவரும், அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார். 34

பெய்த ஐம் பொறியும், பெருங் காமமும்,
வைத வெஞ் சொலின், மங்கையர் வாட் கணின்,
எய்த ஐம் பெரு வாளியும், ஏன்று இற,
செய் தவம் பல செய்குநர் தேவரால். 35

வலம் கொள் நேமி மழை நிற வானவன்
அலங்கு தாள் இணை தாங்கிய அம் மலை
விலங்கும் வீடு உறுகின்றன் மெய்ந் நெறி
புலன் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ? 36

ஆய குன்றினை எய்தி, அருந் தவம்
மேய செல்வரை மேவினர், மெய்ந் நெறி
நாயகன் தனை நாளும் வணங்கிய
தூய நல் தவர் பாதங்கள் சூடினார். 37

வானரர் அந்தணர் வடிவுடன் தொண்டை நாட்டை அடைதல்

சூடி, ஆண்டு அச் சுரி குழல் தோகையைத்
தேடி, வார் புனல் தெண் திரைத் தொண்டை நல்
நாடு நண்ணுகின்றார், மறை நாவலர்
வேடம் மேயினார், வேண்டு உரு மேவுவார். 38

தொண்டை நாட்டு வளப்பம்

குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர்
முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய் புனல்
சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் - மருங்கு எலாம். 39

சூல் அடிப் பலவின் சுளை தூங்கு தேன்,
கோல் அடிப்ப வெரீஇ, குல மள்ளர் ஏர்ச்
சால் அடித் தரும் சாலியின் வெண் முளை,
தோல் அடிக் கிளை அன்னம், துவைப்பன. 40

செருகுறும் கணின் தேம் குவளைக் குலம்
அருகு உறங்கும் வயல் மருங்கு, ஆய்ச்சியர்
இரு குறங்கின் பிறங்கிய வாழையில்
குருகு உறங்கும்; குயிலும் துயிலுமால். 41

தெருவின் ஆர்ப்புறும் பல் இயம் தேர் மயில்
கருவி மா மழை என்று களிப்புறர்
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலர் -
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்கொலோ? 42

தேரை வன் தலைத் தெங்கு இளம் பாளையை,
நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ்
தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று, புலம்புவ, தேரையே. 43

நள்ளி வாங்கு கடை இள நவ்வியர்,
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி,
'புள்ளி நாரைச் சினை பொரியாத' என்று
உள்ளி, ஆமை முதுகின் உடைப்பரால். 44

சேட்டு இளங் கடுவன் சிறு புன் கையில்
கோட்ட தேம் பலவின் கனிக் கூன் சுளை,
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன்
சட்டம் என்னச் சென்று, ஈஇனம் மொய்ப்பன. 45

வானரர் சோழ நாடு அடைதல்

அன்ன தொண்டை நல் நாடு கடந்து, அகன்
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார்;
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து,
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார். 46

கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரை வாழ்
தடறு தாங்கிய கூன் இளந் தாழையின்
மிடறு தாங்கும் விருப்புடைத் தீம் கனி
இடறுவார்; நறுந் தேனின் இழுக்குவார். 47

சோழ நாட்டு வளம்

குழுவும் மீன் வளர் குட்டம் எனக் கொளா,
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ் முறை
முழுகி, நீர்க் கருங் காக்கை முளைக்குமே. 48

பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின், தேர்வு இல,
மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ, பல
வானரங்கள் மரங்களின் வைகுமால். 49

மலை நாடு கடந்து பாண்டி நாடு அடைதல்

அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ,
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்;
இனிய தென் தமிழ் நாடு சென்று எய்தினார். 50

தென் தமிழ் நாட்டின் பெருமை

அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்கும் என்றால், உரை ஒக்குமோ -
எத் திறத்தினும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத் தமிழும் தந்து, முற்றலால்? 51

தென் தமிழ் நாடெங்கும் தேடிய வானர வீரர்கள் மயேந்திரமலையில் சென்று கூடுதல்

என்ற தென் தமிழ் நாட்டினை எங்கணும்
சென்று நாடித் திரிந்து, வருந்தினார்,
பொன்றுவாரின் பொருந்தினர் போயினார் -
துன்று அல் ஓதியைக் கண்டிலர், துன்பினார். 52

வன் திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார் -
தென் திசைக் கடற் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார். 53

மிகைப் பாடல்கள்

இருவரும் கதம் எய்தி அங்கையில்
செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
பரு மராமரம் பறித்து வீசினான். 7-1

வீசு மா மரம் சிந்த, வென்றி சேர்
ஆசு இல் அங்கதன் அங்கையால் மலைந்து,
ஓசை கொண்டு உறக் குத்தினான் உடல்;
கூசுறாத வன் குன்று ஒன்று ஏந்தினான். 7-2

குன்று கையிடைக் கொண்டு எழுந்த, முன்
நின்ற அங்கதன், நெடு மராமரம்
ஒன்று வாங்கி, மற்றவன் ஒடிந்திடச்
சென்று தாக்கினான், தேவர் வாழ்த்தவே. 7-3

ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும்
ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம்
சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி,
சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார். 45-1

இனைய தண்டக நாட்டினுள் எய்தினார்;
அனைய நாட்டின் அருந் தவர் யாவரும்
நனி விரும்பி நயந்தனர், நான்மறைப்
புனிதர் என்று கொண்டு உள்ளுறும் புந்தியார். 45-2

'செல்வர்' என்றும், 'வடகலை, தென் தமிழ்ச்
சொல், வரம்பினர்' என்றும், 'சுமடரைக்
கொல்வர்' என்றும், 'கொடுப்பவர்' என்றும், -அவ்
இல் வரம்பினர்க்கு ஈ தேனும் ஈட்டதே? 45-1

தாறு நாறுவ, வாழைகள்; தாழையின்
சோறு நாறுவ தூம்புகள்; மாங்கனி
நாறு நாறுவ் நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ, செங்கழுநீர் அரோ. 49-1



 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home