Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > 1. பம்பை வாவிப் படலம் > 2 அனுமப் படலம் > 3 நட்புக் கோட் படலம் > 4 மராமரப் படலம் > 5 துந்துபிப் படலம் > 6 கலன் காண் படலம் > 7 வாலி வதைப் படலம் > 8 அரசியற் படலம் > 9 கார்காலப் படலம்> 10 கிட்கிந்தைப் படலம் >11 தானைகாண் படலம் >12 நாடவிட்ட படலம் > 13 பிலன் புக்கு நீங்கு படலம் > 14 ஆறுசெல் படலம் > 15 சம்பாதிப் படலம் > 16 மயோந்திரப் படலம்> சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
கிட்கிந்தா காண்டம் - 2. அனுமப் படலம்



இராம இலக்குவரைக் கண்ட சுக்கிரீவன் அஞ்சி ஓடி ஒளிதல்

எய்தினார், சவரி, நெடிது, ஏய மால் வரை எளிதின்;
நொய்தின் ஏறினர், அதனின்; நோன்மை சால் கவி அரசு,
செய்வது ஓர்கிலன்; அனையர் தெவ்வர் ஆம் என வெருவி,
'உய்தும் நாம்' என, விரைவின் ஓடினான், மலை முழையின். 1

'காலின் மா மதலை! இவர் காண்மினேர் கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம்; வரி சிலையர்;
நீல மால் வரை அனையர்; நீதியா நினைதி' என,
மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார், முழை அதனின். 2

அனுமன் மறைந்து நின்று சிந்தித்தல்

அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வௌ; விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்
தவ்விட, தனி அருளு தாழ் சடைக் கடவுள் என,
'இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல்' என்று இடை உதவி, 3

அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்' என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்: 4

'தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின்,
மூவர்; மற்று, இவர் இருவர்; மூரி வில் கரர்; இவரை
யாவர் ஒப்பவர், உலகில்? யாது, இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு? 5

'சிந்தையில் சிறிது துயர் சேர்வுற, தெருமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர்; நோ உறச் சிறியர் அலர்;
அந்தரத்து அமரர் அலர்; மானிடப் படிவர்; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர்; 6

'தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள். 7

'கதம் எனும் பொருண்மை இலர்; கருணையின் கடல் அனையர்;
இதம் எனும் பொருள் அலது, ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்;
சதமன் அஞ்சுறு நிலையர்; தருமன் அஞ்சுறு சரிதர்;
மதனன் அஞ்சுறு வடிவர்; மறலி அஞ்சுறு விறலர்.' 8

இராம இலக்குவர்பால் அன்பு மிக, 'இவர்களே தருமம்' என்று அனுமன் துணிதல்

என்பன பலவும் எண்ணி, இருவரை எய்த நோக்கி,
அன்பினன், உருகுகின்ற உள்ளத்தன், ஆர்வத்தோரை
முன் பிரிந்து, வினையர்தம்மை முன்னினான் என்ன நின்றான் -
தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான். 9

'தன் கன்று கண்ட அன்ன தன்மைய, தறுகண் பேழ் வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள் மா, வேங்கை, என்று இனையவேயும்,
பின் சென்று, காதல் கூரப் பேழ்கணித்து இரங்குகின்ற்
என் கன்றுகின்றது, எண்ணிப் பற்பல இவரை? அம்மா! 10

'மயில் முதல் பறவை எல்லாம், மணி நிறத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி, மீதா, விரி சிறைப் பந்தர் வீசி,
எயில் வகுத்து எய்துகின்ற் இன முகில் கணங்கள், எங்கும்
பயில்வுற, திவலை சிந்தி, பயப் பயத் தழுவும், பாங்கர். 11

'காய் எரி கனலும் கற்கள், கள்ளுடை மலர்களேபோல்,
தூய செங் கமல பாதம் தோய்தொறும், குழைந்து தோன்றும்;
போயின திசைகள்தோறும், மரனொடு புல்லும் எல்லாம்
சாய்வுறும், தொழுவபோல்; இங்கு, இவர்களோ தருமம் ஆவார்? 12

'துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினைதன்னை நீக்கி,
தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன். 13

அனுமன் எதிர் சென்று வரவேற்க, 'நீ யார்?' என இராமன் வினாவுதல்

இவ் வகை எண்ணி, ஆண்டு, அவ் இருவரும் எய்தலோடும்,
செவ் வழி உள்ளத்தானும், தெரிவுற எதிர்சென்று எய்தி,
'கவ்வை இன்றாக, நுங்கள் வரவு!' என, கருணையோனும்,
'எவ் வழி நீங்கியோய்! நீ யார்?' என, விளம்பலுற்றான்: 14

அனுமனின் விடை

'மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்; 15

'இம் மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையான் ஏவ, வினவிய வந்தேன்' என்றான்-
எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான். 16

இராமன் அனுமனைப் பாராட்டி, இலக்குவனுக்கு உரைத்தல்

மாற்றம் அஃது உரைத்தலோடும், வரி சிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,
'ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும், என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்' என, விளம்பலுற்றான்: 17

'"இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே" என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார் கொல் இச் சொல்லின் செல்வன்?-
வில் ஆர் தோள் இளைய வீர! - விரிஞ்சனோ? விடைவலானோ? 18

'மாணி ஆம் படிவம் அன்று, மற்று இவன் வடிவம்; மைந்த!
ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமைதன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை' என்று, தம்பிக்குக் கழறி, கண்ணன், 19

சுக்கிரீவனைக் காட்டுமாறு இராமன் வேண்டுதல்

'எவ் வழி இருந்தான், சொன்ன கவிக் குலத்து அரசன்? யாங்கள்,
அவ் வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்;
இவ் வழி நின்னை உற்ற எமக்கு, நீ இன்று சொன்ன
செவ் வழி உள்ளத்தானைக் காட்டுதி, தெரிய' என்றான். 20

அனுமன் கூறிய முகமன் உரை

'மாதிரப் பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில், மற்றுப்
பூதரப் புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே?
ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின், அன்னான்,
தீது அவித்து அமையச் செய்த, செய் தவச் செல்வம் நன்றே! 21

'இரவிதன் புதல்வன் தன்னை, இந்திரன் புதல்வன் என்னும்
பரிவுஇலன் சீற, போந்து, பருவரற்கு ஒருவன் ஆகி,
அருவிஅம் குன்றில், என்னோடு இருந்தனன்; அவன்பால் செல்வம்
வருவது ஓர் அமைவின் வந்தீர்; வரையினும் வளர்ந்த தோளீர்! 22

'ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி
தொடங்கினர், மற்றும், முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே;
கொடுங் குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு, அபயம் நல்கும் அதனினும், நல்லது உண்டோ ? 23

'"எம்மையே காத்திர்" என்றற்கு எளிது அரோ? இமைப்பு இலாதோர் -
தம்மையே முதல் இட்டு, ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல்
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்; முருகற் செவ்வி
உம்மையே புகல் புக்கேமுக்கு, இதின் வரும் உறுதி உண்டோ ? 24

அனுமனுக்கு தங்கள் நிலைமையை இலக்குவன் எடுத்துரைத்தல்

'யார் என விளம்புகேன் நான், எம் குலத் தலைவற்கு, உம்மை?
வீர! நீர் பணித்திர்!' என்றான், மெய்ம்மையின் வேலி போல்வான்;
வார் கழல் இளைய வீரன், மரபுளி, வாய்மை யாதும்
சோர்வு இலன், நிலைமை எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்: 25

'சூரியன் மரபில் தோன்றி, சுடர் நெடு நேமி ஆண்ட
ஆரியன்; அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட
வீரியன்; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட,
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன்; 26

'புயல் தரு மதத் திண் கோட்டுப் புகர் மலைக்கு இறையை ஊர்ந்து,
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட,
இயல் தரும் புலமைச் செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வாத்
தயரதன்; கனக மாடத் தட மதில் அயோத்தி வேந்தன்; 27

'அன்னவன் சிறுவனால், இவ் ஆண்தகை; அன்னை ஏவ,
தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி,
நல் நெடுங் கானம் சேர்ந்தான்; நாமமும் இராமன் என்பான்;
இந் நெடுஞ் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே.' 28

இலக்குவன் உரை கேட்ட அனுமன் இராமனது திருவடிகளை வணங்குதல்

என்று, அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாயப்
புன் தொழில் இறுதி ஆக, புகுந்து உள பொருள்கள் எல்லாம்,
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல், உணர்த்தினன்; உணர்த்தக் கேட்டு,
நின்ற அக் காலின் மைந்தன், நெடிது உவந்து, அடியில் தாழ்ந்தான். 29

'இவ்வாறு வணங்குவது முறையோ?' என்ற இராமனுக்கு அனுமனின் மறுமொழி

தாழ்தலும், 'தகாத செய்தது என்னை, நீ? தருமம் அன்றால்;
கேள்வி நூல் மறை வலாள!' என்றனன்; என்னக் கேட்ட
பாழிஅம் தடந் தோள் வென்றி மாருதி, 'பதுமச் செங் கண்
ஆழியாய்! அடியனேனும் அரிக் குலத்து ஒருவன்' என்றான். 30

அனுமன் தனது பெரிய வானர உருவத்துடன் நிற்றல்

மின் உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நல் நூல்
பின் உருக் கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ,
பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான். 31

கண்டிலன், உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன், பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால், கூறலாம் தகைமைத்து ஒன்றோ,
பண்டை நூல் கதிரோன் சொல்ல, படித்தவன் படிவம்? அம்மா! 32

இராமன் அனுமனைக் குறித்து இலக்குவனிடம் வியந்து பேசுதல்

தாள் படாக் கமலம் அன்ன தடங் கணான், தம்பிக்கு, 'அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர் படாது ஆகி, என்றும்
நாட் படா மறைகளாலும், நவை படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய! குரக்கு உருக்கொண்டது' என்றான். 33

'நல்லன நிமித்தம் பெற்றேம்; நம்பியைப் பெற்றேம்; நம்பால்
இல்லையே, துன்பம் ஆனது; இன்பமும் எய்திற்று; இன்னும்,
வில்லினாய்! இவனைப் போலாம் கவிக் குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான்; அவன் நிலை சொல்லற்பாற்றோ?' 34

சுக்கிரீவனை அழைத்துவர, அனுமன் செல்லுதல்

என்று, அகம் உவந்து, கோல முகம் மலர்ந்து, இனிதின் நின்ற
குன்று உறழ் தோளினாரை நோக்கி, அக் குரக்குச் சீயம்,
'சென்று, அவன் தன்னை, இன்னே கொணர்கின்றேன், சிறிது போழ்தில்;
வென்றியிர்! இருந்தீர்' என்று, விடைபெற்று, விரைவில் போனான். 35

மிகைப் பாடல்கள்

அன்ன ஆம் என வெருவி, அங்கண் நில்லாது, அருகு
துன்னு வானரர்களொடு தோம் இலா மேரு நிகர்
என்னும் மாமலை முழையில் எய்தினார்; எய்தியபின்,
நல் நலம் தெரி மனதின் நாடி மாருதி மொழியும். 2-1

தாரன், நீலனை, மருவு தாம மாருதியை, முதல்
வீரரோடு, இரவிசுதன், மேரு மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய,
ஆர மார்பரும், அதனின் ஆகுமாறு உறல் கருதி, 2-2

மானை நாடுதல் புரிஞர் - 'வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு' என மறுகி, ஆவி சோர் நிலையர், தொடர்
ஏனை வானரர் சிலரும் ஏக, மா முழையில், முழு
ஞான நாதரை, அறிவின் நாடி, மாருதி மொழியும்: 2-3

உலகு தங்கிய பல தொல் உயிர்கள் உயர்ந்திடு பரிசில்
இலகும் இங்கிதம் உடையர்; இசையின் இன்புறு சுருதி
அலகு இல் விஞ்சைகள் உடையர்; அகிலமும் தொழு கழலர்;
விலகு திண் கொடு வினைகள் வெகுளிகொண்டு அடு விறலர். 8-1

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல் என. 8-2

மற்றும், இவ் உலகத்து உள்ள முனிவர், வானவர்கள், ஆர், இச்
சொல் திறம் உடையார்? மற்று எச் சுருதியின் தொகுதி யாவும்
முற்று அறிதரும் இம் மாணி மொழிக்கு எதிர், முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும், பேர் ஆற்றல் அரிது மன்னோ'. 19-1

இருக்கன் மா மைந்தரான வாலியும், இளவல்தானும்,
செருக்குனோடு இருக்கும்காலை, செறுநரின் சீறி வாலி
நெருக்குற, வெருவி, இந்த நெடுங் குவட்டு இருத்தான் தண்பால் -
மருக் குலாம் தாரீர்! - வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ? 21-1



 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home