Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம்  > 1. பம்பை வாவிப் படலம் > 2 அனுமப் படலம் > 3 நட்புக் கோட் படலம் > 4 மராமரப் படலம் > 5 துந்துபிப் படலம் > 6 கலன் காண் படலம் > 7 வாலி வதைப் படலம் > 8 அரசியற் படலம் > 9 கார்காலப் படலம்> 10 கிட்கிந்தைப் படலம் >11 தானைகாண் படலம் >12 நாடவிட்ட படலம் > 13 பிலன் புக்கு நீங்கு படலம் > 14 ஆறுசெல் படலம் > 15 சம்பாதிப் படலம் > 16 மயோந்திரப் படலம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
கிட்கிந்தா காண்டம் - 12. நாட விட்ட படலம்


சுக்கிரீவனிடம் வானர சேனையின் அளவு பற்றி இராமன் உசாவுதல்

'வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி, நிரைந்து, பரந்து எழும்
தகைவு இல் சேனைக்கு, அலகு சமைந்தது ஓர்
தொகையும் உண்டு கொலோ?' எனச் சொல்லினான். 1

சுக்கிரீவனது மறுமொழி

'"ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற" என்று
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர்
மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றது ஓர்
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? 2

'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
ஏறு கொற்றத் தலைவர், இவர்க்கு முன்
கூறு சேனைப் பதி, கொடுங் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன்' என்று ஓதினான். 3

இராமன் 'இனி செய்தற்குரியன குறித்துச் சிந்தனைசெய்க' எனல்

என்று உரைத்த எரிகதிர் மைந்தனை,
வென்றி விற் கை இராமன் விருப்பினால்,
'நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி
சென்று இழைப்பன சிந்தனை செய்க' என்றான். 4

சுக்கிரீவன் அனுமனை அங்கதன் முதலியவர்களுடன் தென் திசைக்கு அனுப்புதல்

அவனும்-அண்ணல் அனுமனை, 'ஐய! நீ,
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை ஓர்கிலை; தாழ்த்தனை;
கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ? 5

'ஏகி, ஏந்திழைதன்னை, இருந்துழி,
நாகம் நாடுக் நானிலம் நாடுக்
போக பூமி புகுந்திட வல்ல நின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். 6

'தென் திசைக்கண், இராவணன் சேண் நகர்
என்று இசைக்கின்றது, என் அறிவு, இன்னணம்;
வன் திசைக்கு, இனி, மாருதி நீ அலால்,
வென்று, இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ? 7

'வள்ளல் தேவியை வஞ்சித்து வெளவிய
கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது,
தௌ;ளியோய்! "அது தென் திசை என்பது ஓர்
உள்ளமும் எனக்கு உண்டு" என உன்னுவாய். 8

'தாரை மைந்தனும், சாம்பனும், தாம் முதல்
வீரர் யாவரும், மேம்படும் மேன்மையால்
சேர்க நின்னொடும்; திண் திறல் சேனையும்,
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால். 9

பிற திசைக்கு சுடேணன் முதலியோரைப் படைகளுடன் அனுப்புதல்

'குட திசைக்கண், சுடேணன்; குபேரன் வாழ்
வட திசைக்கண், சதவலி; வாசவன்
மிடல் திசைக்கண், வினதன்; விறல் தரு
படையொடு உற்றுப் படர்க' எனப் பன்னினான். 10

ஒரு மாதத்திற்குள் தேடித் திரும்புமாறு சுக்கிரீவன் ஆணையிடல்

'வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி, ஒரு மதி
முற்றுறாதமுன், முற்றுதிர், இவ் இடை;
கொற்ற வாகையினீர்!' எனக் கூறினான். 11

தென் திசைச் செல்லும் வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுதல்

'ஈண்டுநின்று இறந்து, ஈர்-ஐந்து நூறு எழில்
தூண்டு சோதிக் கொடு முடி தோன்றலால்,
நீண்ட நேமி கொலாம் என நேர் தொழ
வேண்டும் விந்தமலையினை மேவுவீர். 12

'தேடி, அவ் வரை தீர்ந்த பின், தேவரும்
ஆடுகின்றது, அறுபதம் ஐந்திணை
பாடுகின்றது, பல் மணியால் இருள்
ஓடுகின்ற நருமதை உன்னுவீர். 13

'வாம மேகலை வானவர் மங்கையர்,
காம ஊசல் கனி இசைக் கள்ளினால்,
தூம மேனி அசுணம் துயில்வுறும்
ஏமகூடம் எனும் மலை எய்துவீர் 14

'நொய்தின், அம் மலை நீங்கி, நுமரொடும்,
பொய்கையின் கரை பிற்படப் போதிரால்;
செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில
வைகல் தேடி, கடிது வழிக் கொள்வீர். 15

'தாங்கும் ஆர் அகில், தண் நறுஞ் சந்தனம்,
வீங்கு வேலி விதர்ப்பமும், மெல்லென
நீங்கி, நாடு நெடியன பிற்பட,
தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால். 16

'பண்டு அகத்தியன் வைகியதாப் பகர்
தண்டகத்தது, தாபதர் தம்மை உள்
கண்டு, அகத் துயர் தீர்வது காண்டிரால்,
முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில். 17

'ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள்
போல நின்று பொலிவது, பூம் பொழில்;
சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால். 18

'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி;
அயனம் இல்லை அருக்கனுக்கு அவ் வழி;
சயன மாதர் கலவித்தலைத் தரும்
பயனும், இன்பமும், நீரும், பயக்குமால். 19

ஆண்டு இறந்தபின், அந்தரத்து இந்துவைத்
தீண்டுகின்றது, செங் கதிர்ச் செல்வனும்
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது -
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம். 20

'முத்து ஈர்த்து, பொன் திரட்டி, மணி உருட்டி, முது நீத்தம் முன்றில் ஆயர்
மத்து ஈர்த்து, மரன் ஈர்த்து, மலை ஈர்த்து, மான் ஈர்த்து, வருவது; யார்க்கும்
புத்து ஈர்த்திட்டு அலையாமல், புலவர் நாடு உதவுவது; புனிதம் ஆன
அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர்; அம் மலையின் அருகிற்று அம்மா!21

'அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே எனத் தெளிந்த அருளின் ஆறும்,
வௌ; ஆறு அம் எனக் குளிர்ந்து, வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூஞ் சோலை,
எவ் ஆறும் உறத் துவன்றி, இருள் ஓட மணி இமைப்பது, இமையோர் வேண்ட,
தெவ் ஆறு முகத்து ஒருவன், தனிக் கிடந்த சுவணத்தைச் சேர்திர் மாதோ! 22

'சுவணநதி கடந்து, அப்பால், சூரிய காந்தகம் என்னத் தோன்றி, மாதர்
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும், சந்திரகாந்தமும், காண்பீர்;
அவண் அவை நீத்து ஏகிய பின், அகல் நாடு பல கடந்தால், அனந்தன் என்பான்
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும், குலிந்தமும், சென்று உறுதிர் மாதோ.23

'"அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்" என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல், புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச் சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய,அருந்ததி ஆம் நெடுமலையை வணங்கி,அப்பால்.24

'அஞ்சு வரும் வெஞ் சுரனும், ஆறும், அகன் பெருஞ் சுனையும், அகில் ஓங்கு ஆரம்
மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வள நாடும், பிற்படப் போய் வழிமேல் சென்றால்,
நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு, அமிர்து நனி கொடுத்து, ஆயைக் கலுழன் நல்கும்
எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி, அதன் புறம் சார ஏகி மாதோ, 25

'வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி, நான் மறையும், மற்றை நூலும்,
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய், நல் அறிவுக்கு ஈறு ஆய், வேறு
புடை சுற்றும் துணை இன்றி, புகழ் பொதிந்த மெய்யேபோல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதேர் 26

'இருவினையும், இடைவிடா எவ் வினையும், இயற்றாதே, இமையோர் ஏத்தும்
திருவினையும், இடு பதம் தேர் சிறுமையையும், முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,
"கரு வினையது இப் பிறவிக்கு" என்று உணர்ந்து, அங்கு அது களையும், கடை இல் ஞானத்து,
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்; ஈண்டு இருந்தும் அடி வணங்கற்பாலார்.27

'சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும், சுருதித் தொல் நூல்
மாதவத்தோர் உறை இடமும், மழை உறங்கும் மணித் தடமும், வான மாதர்
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடுதொறும் கிளக்கும் ஓதை
போதகத்தின் மழக்கன்றும் புலிப்பறழும் உறங்கு இடனும்,பொருந்திற்று அம்மா!28

'கோடு உறு மால் வரை அதனைக் குறுகுதிரேல், உம் நெடிய கொடுமை நீங்கி,
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்; அப் புறத்து, நீர் மேவு தொண்டை -
நாடு உறுதிர்; உற்று, அதனை நாடுறுதிர்; அதன்பின்னை, நளி நீர்ப் பொன்னிச்
சேடு உறு நண் புனல் தெய்வத் திரு நதியின் இரு கரையும் தெரிதிர் மாதோ. 29

'துறக்கம் உற்றார் மனம் என்ன,துறைகெழு நீர்ச்சோணாடு கடந்தால்,தொல்லை
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர்; அவ் வழி நீர் வல்லை ஏகி,
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி, மணியால் ஓங்கல்
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி, அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ. 30

'தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர். 31

'ஆண்டு கடந்து, அப் புறத்தும், இப் புறத்தும், ஒரு திங்கள் அவதி ஆக,
தேண்டி, இவண் வந்து அடைதிர்; விடை கோடிர், கடிது' என்னச் செப்பும் வேலை,
நீண்டவனும், மாருதியை நிறை அருளால் உற நோக்கி, 'நீதி வல்லோய்!
காண்டி எனின், குறி கேட்டி!' என, வேறு கொண்டு இருந்து, கழறலுற்றான்: 32

இராமன் அனுமனிடம் தனியே சீதையின் அங்க அடையாளங்களைக் கூறுதல்

'பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை, பஞ்சி ஊட்டி,
மேற்பட மதியம் சூட்டி, விளங்குற நிரைத்த நொய்ய
கால் தகை விரல்கள் - ஐய! - கமலமும் பிறவும் கண்டால்
எற்பில என்பது அன்றி, இணை அடிக்கு உவமை என்னோ? 33

'நீர்மையால் உணர்தி - ஐய! - நிரை வளை மகளிர்க்கு எல்லாம்
வாய்மையால் உவமை ஆக, மதி அறி புலவர் வைத்த
ஆமை ஆம் என்ற போது, அல்லன சொல்லினாலும்,
யாம யாழ் மழலையாள்தன் புறவடிக்கு இழுக்கம் மன்னோ. 34

'வினைவரால் அரிய கோதைப் பேதை மென் கணைக் கால் மெய்யே
நினைவரால் அரிய நன்னீர் நேர்பட, புலவர் போற்றும்
சினை வரால், பகழி ஆவம், நெற் சினை, என்னும் செப்பம்
எனைவரால் பகரும் ஈட்டம்; யான் உரைத்து இன்பம் என்னோ? 35

'அரம்பை என்று, அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
வரம்பையும் கடந்தபோது, மற்று உரை வகுக்கல் ஆமோ?
நரம்பையும், அமிழ்த நாறும் நறவையும், நல் நீர்ப் பண்ணைக்
கரும்பையும் கடந்த சொல்லாள், கவாற்கு இது கருது கண்டாய். 36

'வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள்தன்
தார் ஆழிக் கலை சார் அல்குல் தடங் கடற்கு உவமை-தக்கோய்!-
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும், பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வார், உனக்கு நான் உரைப்பது என்னோ? 37

'சட்டகம் தன்னை நோக்கி, யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்திஎன்னின்,
கட்டுரைத்து உவமை காட்ட, கண்பொறி கதுவர் கையில்
தொட்ட எற்கு உணரலாம்; மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை. 38

'ஆல் இலை, படிவம் தீட்டும் ஐய நுண் பலகை, நொய்ய
பால் நிறத் தட்டம், வட்டக் கண்ணடி, பலவும் இன்ன,
போலும் என்று உரைத்த போதும், புனைந்துiர் பொதுமை பார்க்கின்,
ஏலும் என்று இசைக்கின், ஏலர் இது, வயிற்று இயற்கை; இன்னும், 39

'சிங்கல் இல் சிறு கூதாளி, நந்தியின் திரட் பூ, சேர்ந்த
பொங்கு பொன்-துளை, என்றாலும் புல்லிது; பொறுமைத்து ஆமால்;
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி எனக் கணித்தது உண்டால்;
கங்கையை நோக்கிச் சேறி - கடலினும் நெடிது கற்றாய்! 40

'மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால், வல்லி சேர் வயிற்றில்; மற்று என்,
உயிர் ஒழுங்கு; அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்கவேண்டின்,
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர,
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு, என்று உணர்ந்து கோடி. 41

'"அல்லி ஊன்றிடும்" என்று அஞ்சி, அரவிந்தம் துறந்தாட்கு, அம் பொன்
வல்லி மூன்று உளவால், கோல வயிற்றில்; மற்று அவையும், மார-
வில்லி, மூன்று உலகின் வாழும் மாதரும், தோற்ற மெய்ம்மை
சொல்லி ஊன்றிய ஆம், வெற்றி வரை எனத் தோன்றும் அன்றே! 42

'செப்பு என்பென்; கலசம் என்பென்; செவ் இளநீரும் தேர்வென்;
துப்பு ஒன்று திரள் சூது என்பென்; சொல்லுவென் தும்பிக் கொம்பை;
தப்பு இன்றிப் பகலின் வந்த சக்கரவாகம் என்பென்;
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்; பல நினைந்து உலைவென், இன்னும். 43

'கரும்பு கண்டாலும், மாலைக் காம்பு கண்டாலும், ஆலி
அரும்பு கண், தாரை சோர அழுங்குவேன்; அறிவது உண்டோ?
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து, உவமை சொல்ல,
இரும்பு கண்டனைய நெஞ்சம், எனக்கு இல்லை; இசைப்பது என்னோ? 44

'"முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு, மூன்று உலகத்துள்ளும்"
என் கையே இழுக்கம் அன்றே? இயம்பினும், காந்தள் என்றல்,
வன் கை; யாழ் மணிக் கை என்றல், மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி,
நன் கையாள் தடக் கைக்கு ஆமோ? நலத்தின் மேல் நலம் உண்டாமோ? 45

'ஏலக் கோடு ஈன்ற பிண்டி இளந் தளிர் கிடக்க் யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங் கமல மென் பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும் என்றால், கைக்கு ஒப்பு வைக்கலாமோ? 46

'வெள்ளிய - முறுவல், செவ் வாய், விளங்கு இழை, இளம் பொற் கொம்பின்
வள் உகிர்க்கு, உவமை நம்மால் மயர்வு அற வகுக்கலாமோ?
"எள்ளுதிர் நீரே மூக்கை" என்று கொண்டு, இவறி, என்றும்,
கிள்ளைகள் முருக்கின் பூவைக் கிழிக்குமேல், உரைக்கலாமோ? 47

'அங்கையும் அடியும் கண்டால், அரவிந்தம் நினையுமாபோல்
செங் களி சிதறி, நீலம் செருக்கிய தெய்வ வாட் கண்
மங்கைதன் கழுத்தை நோக்கின், வளர் இளங் கழுகும், வாரிச்
சங்கமும், நினைதி ஆயின், அவை என்று துணிதி; தக்கோய்! 48

'பவளமும், கிடையும், கொவ்வைப் பழனும், பைங் குமுதப் போதும்,
துவள்வு இல் இலவம், கோபம், முருக்கு, என்று இத் தொடக்கம், "சாலத்
தவளம்" என்று உரைக்கும் வண்ணம் சிவந்து, தேன் ததும்பும் ஆயின்,
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது; குறியும் அஃதே. 49

'சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை; தேன் இல்லை; உள என்றாலும்,
கவர்ந்த போது அன்றி, உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கர்
பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து
உவந்தபோது, உவந்த வண்ணம் உரைத்தபோது, உரைத்தது ஆமோ? 50

'முல்லையும், முருந்தும், முத்தும், முறுவல் என்று உரைத்தபோது,
சொல்லையும், அமிழ்தும், பாலும், தேனும், என்று உரைக்கத் தோன்றும்;
அல்லது ஒன்று ஆவது இல்லை; அமிர்திற்கும் உவமை உண்டோ?
வல்லையேல், அறிந்து கோடி, மாறு இலா ஆறு-சான்றோய்! 51

'ஓதியும், எள்ளும், தொள்ளைக் குமிழும், மூக்கு ஒக்கும் என்றால்,
சோதி செம் பொன்னும், மின்னும், மணியும்போல், துளங்கித் தோன்றர்
ஏதுவும் இல்லை; வல்லார் எழுதுவார்க்கு எழுத ஒண்ணா
நீதியை நோக்கி, நீயே நினைதியால், - நெடிது காண்பாய்! 52

'வள்ளை, கத்தரிகை, வாம மயிர் வினைக் கருவி, என்ன,
பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்;
வெள்ளி வெண் தோடு செய்த விழுத் தவம் விளைந்தது என்றே
உள்ளுதி; உலகுக்கு எல்லாம் உவமைக்கும், உவமை உண்டோ ? 53

'பெரிய ஆய், பரவை ஒவ்வர் பிறிது ஒன்று நினைந்து பேச
உரிய ஆய், ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல் உண்மை
தெரிய, ஆயிரக் கால் நோக்கின், தேவர்க்கும் தேவன் என்னக்
கரிய ஆய், வெளிய ஆகும், வாள் தடங் கண்கள் அம்மா! 54

'கேள் ஒக்கும் அன்றி, ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே;
கோள் ஒக்கும் என்னின் அல்லால், குறி ஒக்கக் கூறலாமே?
வாள் ஒக்கும் வடிக் கணாள்தன் புருவத்துக்கு உவமை வைக்கின்,
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அனங்கன் சாபம். 55

'நல் நாளும் நளினம் நாணும் தளிரடி நுதலை நாணி,
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பதாகி,
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி,
எந் நாளும் வளராது என்னின், இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே. 56

'வனைபவர் இல்லை அன்றே, வனத்துள் நாம் வந்த பின்னர்?
அனையன எனினும், தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகர்
வினை செயக் குழன்ற அல்ல் விதி செய விளைந்த் நீலம்
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம்; உவமை பூணா. 57

'கொண்டலின் குழவி, ஆம்பல், குனி சிலை, வள்ளை, கொற்றக்
கெண்டை, ஒண் தரளம், என்று இக் கேண்மையின் கிடந்த திங்கள்-
மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ, அப்
புண்டரிகத்தை உற்ற பொழுது, அது பொருந்தித் தேர்வாய். 58

'காரினைக் கழித்துக் கட்டி, கள்ளினோடு ஆவி காட்டி,
பேர் இருட் பிழம்பு தோய்த்து, நெறி உறீஇ, பிறங்கு கற்றைச்
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா! -
நேர்மையைப் பருமை செய்த நிறை நறுங் கூந்தல் நீத்தம்! 59

'புல்லிதழ் கமலத் தெய்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின்
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம், களங்கம் என்று உரைக்கும் ஏதம்;
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில் அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு, எல்லாம் நலன் அன்றி, பிறிது உண்டாமோ? 60

'மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம், வண்ண வாசப்
பங்கயத்தவட்கும், - ஐயா! - நிரம்பல் பற்றி நோக்கின்,
செங் கயல் கருங் கண் செவ் வாய்த் தேவரும் வணங்கும் தெய்வக்
கொங்கை அக் குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை; குறியும் அஃதே. 61

'குழல் படைத்து, யாழைச் செய்து, குயிலொடு கிளியும் கூட்டி,
மழலையும் பிறவும் தந்து, வடித்ததை, மலரின் மேலான்,
இழைபொரும் இடையினாள்தன் இன் சொற்கள் இயையச் செய்தான்;
பிழை இலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறும்கொல் இன்னும்? 62

'வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும்,
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை;
மீன் நின்ற கண்ணினாள்தன் மென் மொழிக்கு உவமை வேண்டின்,
தேன் ஒன்றோ? அமிழ்தம் ஒன்றோ? அவை செவிக்கு இன்பம் செய்யா. 63

'பூ வரும் மழலை அன்னம், புனை மடப் பிடி, என்று இன்ன,
தேவரும் மருளத் தக்க செலவின எனினும் தேறேன்;
பா வரும் கிழமைத் தொன்மைப் பருணிதர் தொடுத்த, பத்தி
நா அருங் கிளவிச் செவ்வி நடை வரும் நடையள் - நல்லோய்! 64

'எந் நிறம் உரைக்கேன்? - மாவின் இள நிறம் முதிரும்; மற்றைப்
பொன் நிறம் கருகும்; என்றால், மணி நிறம் உவமை போதர்
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும்; வேண்டின்,
தன் நிறம் தானே ஒக்கும்; மலர் நிறம் சமழ்க்கும் அன்றே! 65

'"மங்கையர் இவளை ஒப்பார், மற்று உளார் இல்லை" என்னும்
சங்கை இல் உள்ளம் தானே சான்று எனக் கொண்டு,-சான்றோய்!-
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து, அருகு சார்ந்து,
திங்கள் வாள் முகத்தினாட்கு, செப்பு' எனப் பின்னும் செப்பும்: 66

இராமன் உரைத்த அடையாளச் செய்திகள்

'முன்னை நாள், முனியொடு, முதிய நீர் மிதிலைவாய்,
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல,
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை, அக்
கன்னிமாடத்திடைக் கண்டதும், கழறுவாய், 67

'"வரை செய் தாள் வில் இறுத்தவன், அ(ம்) மா முனியொடும்
விரசினான் அல்லனேல், விடுவல் யான் உயிர்" எனா,
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரைசெய்வாய். 68

'சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக்
கேழ் இலா வன முலைக் கிரி சுமந்து இடைவது ஓர்
வாழி வான் மின் இளங் கொடியின் வந்தாளை, அன்று,
ஆழியான் அரசவைக் கண்டதும் அறைகுவாய். 69

'முன்பு நான் அறிகிலா முளி நெடுங் கானிலே,
"என் பினே போதுவான் நினைதியோ, ஏழை நீ?
இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு இனியை ஆயினை, இனித்
துன்பம் ஆய் முடிதியோ?" என்றதும், சொல்லுவாய். 70

'"ஆன பேர் அரசு இழந்து, அடவி சேர்வாய்; உனக்கு
யான் அலாதன எலாம் இனியவோ? இனி" எனா,
மீன் உலாம் நெடு மலர்க் கண்கள் நீர் விழ, விழுந்து,
ஊன் இலா உயிரின் வெந்து, அயர்வதும், உரைசெய்வாய். 71

'மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
கல்லின் மா மதிள் மணிக் கடை கடந்திடுதல்முன்,
"எல்லை தீர்வு அரிய வெங் கானம் யாதோ?" எனச்
சொல்லினாள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய்.' 72

இராமன் கணையாழி அளித்து, விடைகொடுக்க, அனுமன் முதலியோர் செல்லுதல்

'இனைய ஆறு உரைசெயா, 'இனிதின் ஏகுதி' எனா,
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து, 'அறிஞ! நின்
வினை எலாம் முடிக!' எனா, விடை கொடுத்து உதவலும்,
புனையும் வார் கழலினான் அருளொடும், போயினான். 73

அங்கதக் குரிசிலோடு, அடு சினத்து உழவர் ஆம்
வெங் கதத் தலைவரும், விரி கடற் படையொடும்,
பொங்கு வில்-தலைவரைத் தொழுது, முன் போயினார்-
செங்கதிர்ச் செல்வனைப் பணிவுறும் சென்னியார். 74

மிகைப் பாடல்கள்

சாரும் வீரர் சதவலிதம்மொடும்
கூரும் வீரர்கள் யாவரும் கூடியே
நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப்
பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால். 9-1

குட திசைப் படு பூமி, குபேரன் வாழ்
வட திசைப் படு மா நிலம் ஆறும் ஏற்று,
இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி
தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால். 10-1

குடதிசைக்கண் இடபன், குணதிசைக்
கடலின் மிக்க பனசன், சதவலி
வடதிசைக்கண் அன்று ஏவினன் - மான மாப்
படையின் வெள்ளத்துடன் செலப் பான்மையால். 10-2

என்று கூறி, ஆங்கு ஏவினன்; யாவரும்
நின்று வாழ்த்தி விடை கொடு நீங்கினார்
அன்று மாருதி ஆம் முதல் வீரர்க்குத்
துன்று செங்கதிரோன் மகன் சொல்லுவான்: 10-3



 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home