Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம்  > 1. பம்பை வாவிப் படலம் > 2 அனுமப் படலம் > 3 நட்புக் கோட் படலம் > 4 மராமரப் படலம் > 5 துந்துபிப் படலம் > 6 கலன் காண் படலம் > 7 வாலி வதைப் படலம் > 8 அரசியற் படலம் > 9 கார்காலப் படலம்> 10 கிட்கிந்தைப் படலம் >11 தானைகாண் படலம் >12 நாடவிட்ட படலம் > 13 பிலன் புக்கு நீங்கு படலம் > 14 ஆறுசெல் படலம் > 15 சம்பாதிப் படலம் > 16 மயோந்திரப் படலம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
கிட்கிந்தா காண்டம் - 8. அரசியற் படலம்
 


இராமன் சுக்கிரீவனுக்கு முடி சூட்டுமாறு இளவலைப் பணித்தல்

புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்,
முதல்வன், பேர் உவகைக்கு முந்துவான்,
உதவும் பூமகள் சேர, ஒண் மலர்க்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான். 1

அது காலத்தில், அருட்கு நாயகன்,
மதி சால் தம்பியை வல்லை ஏவினான்-
'கதிரோன் மைந்தனை, ஐய! கைகளால்,
விதியால் மௌலி மிலைச்சுவாய்' எனா, 2

முடிசூட்டுதற்கு வேண்டுவன கொணர அனுமனை ஏவ, அவன் அவ்விதம் செய்தல்

அப்போதே, அருள் நின்ற அண்ணலும்,
மெய்ப் போர் மாருதிதன்னை, 'வீர! நீ,
இப்போதே கொணர்க, இன்ன செய் வினைக்கு
ஒப்பு ஆம் யாவையும்' என்று உணர்த்தலும், 3

மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்,
எண்ணும் பொன் முடி முதல யாவையும்,
நண்ணும் வேலையில், நம்பி தம்பியும்,
திண்ணம் செய்வன செய்து, செம்மலை, 4

சுக்கிரீவனுக்கு முடி சூட்டுதல்

மறையோர் ஆசி வழங்க, வானுளோர்
நறை தோய் நாள்மலர் தூவ, நல் நெறிக்கு
இறையோன் தன் இளையோன், அவ் ஏந்தலை,
துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான். 5

தன்னை வணங்கிய சுக்கிரீவனுக்கு இராமனின் அறிவுரை

பொன் மா மௌலி புனைந்து, பொய் இலான்,
தன் மானக் கழல் தாழும் வேலையில்,
நன் மார்பில் தழுவுற்று, நாயகன்,
சொன்னான், முற்றிய சொல்லின் எல்லையான்; 6

'ஈன்டுநின்று ஏகி, நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி,
வேண்டுவ மரபின் எண்ணி, விதி முறை இயற்றி, வீர!
பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து, போரில்
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி, நல் திருவின் வைகி. 7

வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்,
தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத் தொழில் மறவரோடும்,
தூய்மை சால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலை ஆகி,
சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்றி. 8

'"புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு" என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே;
பகையுடைச் சிந்தையார்க்கும், பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி, இன் உரை நல்கு, நாவால். 9

'தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர் அறு செல்வம் அஃது உன்
காவலுக்கு உரியது என்றால், அன்னது கருதிக் காண்டி;
ஏ வரும் இனிய நண்பர், அயலவர், விரவார், என்று இம்
மூவகை இயலோர் ஆவர், முனைவர்க்கும் உலக முன்னே. 10

'செய்வன செய்தல், யாண்டும் தீயன சிந்தியாமை,
வைவன வந்தபோதும் வசை இல இனிய கூறல்,
மெய்யன வழங்கல், யாவும் மேவின வெஃகல் இன்மை,
உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன் உவந்து செய்வாய். 11

'சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன். 12

'"மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ ? 13

'"நாயகன் அல்லன்; நம்மை நனி பயந்து எடுத்து நல்கும்
தாய்" என, இனிது பேணி, தாங்குதி தாங்குவாiர்
ஆயது தன்மையேனும், அறவரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை. 14

'இறத்தலும் பிறத்தல்தானும் என்பன இரண்டும், யாண்டும்,
திறத்துளி நோக்கின், செய்த வினை தரத் தெரிந்த அன்றே?
புறத்து இனி உரைப்பது என்னே? பூவின்மேல் புனிதற்கேனும்,
அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி; அஃது உறுதி, அன்ப! 15

'ஆக்கமும், கேடும், தாம் செய் அறத்தொடு பாவம் ஆய
போக்கி, வேறு உண்மை தேறார், பொரு அரும் புலமை நூலோர்;
தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில், தக்கோய்!
பாக்கியம் அன்றி, என்றும், பாவத்தைப் பற்றலாமோ? 16

சுக்கிரீவனிடம் மாரிக் காலம் சென்ற பின், சேனையோடும் வருமாறு இராமன் கூறல்

'"இன்னது தகைமை" என்ப, இயல்புளி மரபின் எண்ணி,
மன் அரசு இயற்றி, என்கண் மருவுழி மாரிக் காலம்
பின்னுறு முறையின், உன் தன் பெருங் கடற் சேனையோடும்
துன்னுதி; போதி' என்றான், சுந்தரன். அவனும் சொல்வான்: 17

சுக்கிரீவன் இராமனைக் கிட்கிந்தையில் வந்து வசிக்க வேண்டுதலும், இராமன் மறுத்துரைத்தலும்

'"குரங்கு உறை இருக்கை" என்னும் குற்றமே குற்றம் அல்லால்,
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே,
மரம் கிளர் அருவிக் குன்றம்; வள்ளல்! நீ, மனத்தின் எம்மை
இரங்கிய பணி யாம் செய்ய, இருத்தியால், சில் நாள், எம்பால். 18

'அரிந்தம! நின்னை அண்மி, அருளுக்கும் உரியேம் ஆகி,
பிரிந்து, வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால்;
கருந் தடங் கண்ணினாளை நாடல் ஆம் காலம்காறும்
இருந்து, அருள் தருதி, எம்மோடு' என்று, அடி இணையின் வீழ்ந்தான். 19

ஏந்தலும், இதனைக் கேளா, இன் இள முறுவல் நாற,
'வேந்து அமை இருக்கை, எம்போல் விரதியர் விழைதற்கு ஒவ்வர்
போந்து அவண் இருப்பின், எம்மைப் போற்றவே பொழுது போமால்;
தேர்ந்து, இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி. 20

'ஏழ் - இரண்டு ஆண்டு, யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடந் தோள் வீர! பார்த்திலைபோலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறும் இன்பம் என்னோ? 21

'"தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப, தான் தன்
ஆவிபோல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம்
மேவினான், இராமன்" என்றால், ஐய! இவ் வெய்ய மாற்றம்,
மூவகை உலகம் முற்றும் காலத்தும், முற்ற வற்றோ? 22

'இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும், போரின்
வில் அறம் துறந்தும், வாழ்வேற்கு, இன்னன, மேன்மை இல்லாச்
சில் அறம்; புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு,
நல் அறம் தொடர்ந்த நோன்பின், நவை அற நோற்பல் நாளும். 23

'நான்கு திங்கள் சென்றபின் சேனையுடன் வருக' என இராமன் கூறுதல்

'அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி, ஆன்ற
கரை செயற்கு அரிய சேனைக் கடலொடும், திங்கள் நான்கின்
விரசுக, என்பால்; நின்னை வேண்டினென், வீர!' என்றான் -
உரை செயற்கு எளிதும் ஆகி, அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான். 24

சுக்கிரீவன் இராமனை வணங்கிச் செல்லுதல்

மறித்து ஒரு மாற்றம் கூறான், 'வான் உயர் தோற்றத்து அன்னான்
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ, கோது இலர் ஆதல்' என்னர்
நெறிப் பட, கண்கள் பொங்கி நீர் வர, நெடிது தாழ்ந்து,
பொறிப்ப அருந் துன்பம் முன்னா, கவி குலத்து அரசன் போனான். 25

தன்னை வணங்கிய அங்கதனுக்கு இராமனின் அறிவுரை

வாலி காதலனும் ஆண்டு, மலர் அடி வணங்கினானை,
நீல மா மேகம் அன்ன நெடியவன், அருளின் நோக்கி,
'சீலம் நீ உடையை ஆதல், இவன் சிறு தாதை என்னா,
மூலமே தந்த நுந்தை ஆம் என, முறையின் நிற்றி.' 26

என்ன, மற்று இனைய கூறி, 'ஏகு அவன்-தொடர' என்றான்;
பொன் அடி வணங்கி, மற்று அப் புகழுடைக் குரிசில் போனான்;
பின்னர், மாருதியை நோக்கி, 'பேர் எழில் வீர! நீயும்,
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி, அறிவின்' என்றான். 27

'நான் இங்கிருந்து அடிமை செய்வேன்' என அனுமன் கூறல்

பொய்த்தல் இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும்,
'இத் தலை இருந்து, நாயேன், ஏயின எனக்குத் தக்க
கைத் தொழில் செய்வேன்' என்று, கழல் இணை வணங்கும் காலை,
மெய்த் தலை நின்ற வீரன், இவ் உரை விளம்பி விட்டான்: 28

அனுமனைக் கிட்கிந்தைக்குச் செல்லுமாறு, இராமன் உரைத்தல்

'நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்,
அரும்புவ, நலனும் தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா! 29

'ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி, அப்பால்,
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர், நின்னின் இல்லை; ஆதலால், தருமம்தானே
போன்ற நீ, யானே வேண்ட, அத் தலை போதி' என்றான். 30

அனுமன் கிட்கிந்தை செல்ல, இராம இலக்குவர் வேறு ஓர் மலைக்குச் செல்லுதல்

ஆழியான் அனைய கூற, 'ஆணை ஈது ஆயின், அஃதே,
வாழியாய்! புரிவென்' என்று வணங்கி, மாருதியும் போனான்;
சூழி மால் யானை அன்ன தம்பியும், தானும் தொல்லை
ஊழி நாயகனும், வேறு ஓர் உயர் தடங் குன்றம் உற்றார். 31

சுக்கிரீவன் அரசு செய்து, இனிது இருத்தல்

ஆரியன் அருளின் போய்த் தன் அகல் மலை அகத்தன் ஆன
சூரியன் மகனும், மானத் துணைவரும், கிளையும், சுற்ற,
தாரையை வணங்கி, அன்னாள் தாய் என, தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன, செவ்விதின் அரசு செய்தான். 32

வள அரசு எய்தி, மற்றை வானர வீரர் யாரும்
கிளைஞரின் உதவ, ஆணை கிளர் திசை அளப்ப, கேளோடு,
அளவு இலா ஆற்றல் ஆண்மை அங்கதன், அறம் கொள் செல்வத்து
இளவரசு இயற்ற, ஏவி, இனிதினின் இருந்தான், இப்பால். 33

மிகைப் பாடல்கள்

வள்ளலும், அவண் நின்று ஏகி, மதங்கனது இருக்கை ஆன
வெள்ள வான் குடுமிக் குன்றத்து ஒரு சிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி, அன்பினால் அமைக்கப்பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி, இனிதினின் இருந்த காலை, 33-1



 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home