Norwegian Peace Initiative
ஜயந்த தனபாலவின் குற்றச்சாட்டுக்கள்
Thinakural Editorial
13 September 2005
பிரச்சினைகளை ஓரளவுக்கு
நடு நிலையுடன் அணுகக் கூடியவரென நம்பப்பட்ட அரச சமாதான செயலகப்
பணிப்பாளர் ஜயந்த தனபாலவும், இப்போது ஒரு சிங்கள
அரசியல்வாதியைப் போல பேச முற்பட்டிருப்பதையிட்டு தமிழ் மக்கள்
அதிருப்தியடைந்துள்ளார்கள். சர்வதேச சமூகத்தில் தனக்குள்ள
செல்வாக்கை காலஞ்சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன்
கதிர்காமர் பயன்படுத்திய பாணியில்தான் இவரும் செயற்படுகின்றாரா
என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது.
அமெரிக்காவில் தற்போது விஜயத்தை
மேற்கொண்டுள்ள ஜயந்த தனபால, அங்கு தெரிவித்து வரும்
கருத்துகள்தான் இந்த சந்தேகத்துக்குக் காரணமாகவுள்ளது.
வாஷிங்டனும் டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைமையும்
விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிடுவதற்கான அழுத்தத்தைக்
கொடுக்க வேண்டும் என அமெரிக்காவில் வைத்து அவர் கோரிக்கை
விடுத்திருக்கின்றார்.
தென்னாசிய விவகாரங்களைக் கையாள்வதற்கான
அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்களுக்கு
விடுதலைப்புலிகள் குறித்த அழுத்தங்களைக் கொடுப்பதற்காகவே
அமெரிக்காவுக்கான இந்த விஜயத்தை ஜயந்த தனபால மேற்கொண்டு
வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க
காங்கிரஸின் இலங்கைக் குழுவின் முன்னிலையில் உரையாற்றிய
அவர், விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிடுவதற்காகவும்
யுத்த நிறுத்த உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதற்காகவும்
பலனளிக்கக் கூடிய அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்கவில்லை என
குற்றஞ் சாட்டியிருந்தார்.
இதனைவிட, அமெரிக்காவின் தெற்காசிய
விவகாரங்களுக்கான பிரதி வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டினா
ரொக்காவையும் சந்தித்த ஜயந்த தனபால, சர்வதேச சமூகம் விடுதலைப்
புலிகளைப் பொறுப்பாளியாக்கக் கூடிய தருணம் வந்துவிட்டதாகவும்,
விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கண்டிப்பாகக்
கடைப்பிடிக்க வேண்டும், பேச்சுவார்த்தைக்குத் திரும்ப
வேண்டுமெனவும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமெனவும்
கேட்டிருக்கின்றார்.
சமாதான முயற்சிகளில் தற்போது காணப்படும்
முட்டுக் கட்டை நிலைமைக்கான காரணத்தை ஒரு பேரினவாதப்
பார்வையில் ஜயந்த தனபால விளக்கம் கொடுத்துள்ளார் என்பதைப்
புரிந்து கொள்ள முடிகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான
முனைப்பில் சிங்களக் கட்சிகள் அனைத்தும் தமது கவனத்தைக்
குவித்துள்ள நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு
ஆளுந்தரப்பு வரக்கூடிய நிலைமை இல்லை என்பது அனைவருக்கும்
தெரிந்த விடயம். அத்துடன், நாட்களை எண்ணிக் கொண்டுள்ள
அரசாங்கம் ஒன்று-சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதில்
அர்த்தம் இருக்கப் போவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலைமையிலும், அரசு சமாதானத்துக்கு
தயாராகவுள்ளது என்பது போலவும், புலிகள்தான் அதற்குத்
தடையாகவுள்ளார்கள் என்பது போலவும் சர்வதேச சமூகத்தின் முன்பாக
மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் நோக்கம்தான் என்ன?
அத்துடன், இந்தப் பிரசாரத்தை அரசாங்கம்தான்
மேற்கொள்ளாமல் சர்வதேச சமூகத்தில் பெரும் கீர்த்தியும்
செல்வாக்கும் பெற்ற இராஜதந்திரியான ஜயந்த தனபாலவின் மூலமாக
மேற்கொள்வதில் குறிப்பிட்ட சில உள்நோக்கங்கள் இருப்பதாகச்
சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்தப் பிரசாரத்தைத் தாம் மேற்கொள்வதை
விடவும் ஜயந்த தனபால போன்ற ஒரு கீர்த்திமிக்க இராஜதந்திரி
மேற்கொள்வது அதிகளவு நம்பகத் தன்மையைத் தருவதாக அமையும் என அரச
தரப்பு கருதியிருக்கலாம். அத்துடன், ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க தற்போது மேற்கொண்டுள்ள அமெரிக்க விஜயத்துக்கு
முன்னோடியாகவே ஜயந்த தனபாலவின் பிரசார நடவடிக்கைகள்
அமைந்திருந்தன.
அரசாங்க சமாதான செயலகப் பணிப்பாளர் என்ற
கோதாவிலேயே இந்தப் பிரசாரத்தை ஜயந்த தனபால மேற்கொண்டு
வருகின்றார். அரசாங்க சமாதான செயலகமானது சமாதான முயற்சிகளை
ஒருங்கிணைப்பதற்கான கடமைப்பாட்டையே தன்னிடத்தில் கொண்டுள்ளது.
அந்தக் கடமைப்பாட்டை முன்னெடுக்க வேண்டிய
சமாதான செயலகப் பணிப்பாளர், ஓர் அரசியல்வாதியைப் போல
புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை சர்வதேச அரங்கிலிருந்து
மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வியும்
எழுப்பப்படுகின்றது.
ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கான பதவியில்
`கண்' வைத்துச் செயற்பட்டு வரும் ஜயந்த தனபால, அதற்கான
முழுமையான ஆதரவை ஜனாதிபதியிடமிருந்து பெறுவதை நோக்கமாகக்
கொண்டு இந்தப் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், ஐ.தே.க. அரசினால்
முன்னெடுக்கப்பட்டு வந்த பேச்சுக்கள் தடைப்பட்டதற்கு ஜனாதிபதி
சந்திரிகா குமாரதுங்கவின் அதிரடி நடவடிக்கைகளே காரணமாக
இருந்துள்ளது என்பது ஜயந்த தனபாலவுக்குத் தெரியாததல்ல.
இடைக்கால நிர்வாக சபை யோசனையை விடுதலைப்புலிகள்
சமர்ப்பித்திருந்த நிலையில், மூன்று அமைச்சுகளை ஜனாதிபதி
கைப்பற்றியதாலேயே சமாதான முயற்சிகள் தடைப்பட்டன என்பது
அனைவரும் அறிந்த ஒன்று. அதனைத் தொடர்ந்து அரசைக் கலைத்த
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜே.வி.பி.யுடன் இணைந்து
ஆட்சியைக் கைப்பற்றினார். ஆக ஜனாதிபதியின் நடவடிக்கைகளே சமாதான
முயற்சியில் முற்றுப் புள்ளியை வைத்தது.
அதேபோல, போர் நிறுத்தம் இன்று
கேள்விக்குறியாகுவதற்கு கருணா குழுவின் நடவடிக்கைகளே
காரணமாகவிருந்தது. கருணா குழு தமது கட்டுப்பாட்டுப்
பகுதிகளிலிருந்து செயற்படவில்லை என அரசு கூறுகின்ற போதிலும்,
கண்காணிப்புக் குழு, கருணா குழுவின் செயற்பாட்டை
உறுதிப்படுத்தியிருக்கின்றது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள ஆயுதக்
குழுக்கள் அனைத்தும் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என்பது
புரிந்துணர்வு உடன்படிக்கையின் முக்கிய நிபந்தனை. இதனை அரசு
இதுவரையில் செய்யவில்லை என்பதை மட்டுமன்றி-செய்யப் போவதுமில்லை
என்பதைத்தான் கருணா குழுவினருடனான கண்காணிப்புக் குழுவின்
சந்திப்பு உறுதிப்படுத்துகின்றது.
அரசு,போர் நிறுத்தம் இன்று சந்திக்கும்
பிரதான சவால் இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள்தான் என்பது
வெளிப்படை. அவற்றின் அச்சுறுத்தலினால்தான் விடுதலைப்புலிகளின்
அரசியல் போராளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள தமது
அலுவலகங்களை மூடிவிட்டு, மூட்டை முடிச்சுகளுடன்
வெளியேறியிருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளின் இந்த வெளியேற்றம்
சமாதான நடைமுறைகளில் ஒரு பாரிய பின்னடைவு என்ற உண்மையை அரச
தரப்பினர் முதலில் ஏற்க வேண்டும்.
இந்த ஆயுதக் குழுக்களை செயலிழக்கச்
செய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதுதான் சர்வதேச
சமூகத்தின் முன்பாக இன்றுள்ள பிரதான பணியாகும். அதன் மூலமாகவே
வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர முடியும்!
ஐ.நா.செயலாளர் நாயகம் பதவியை இலக்காகக்
கொண்டு செயற்படும், அரச சமாதான செயலகப் பணிப்பாளர் நாயகம்
சிங்கள அரசியல்வாதிகளைப் போலப் பேச முற்பட்டு தன்னுடைய
நம்பகத்தன்மையையும் கீர்த்தியையும் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. |