Denmark - 25 November 2000
தமிழீழ விடுதலைப் புலிகள் டென்மார்க் பணியக கலை பண்பாட்டு
கழகத்தினரின் ஓழுங்கமைப்பில் 25.11.200 சனிக்கிழமை அன்று கேணிங் (Herning)
நகரில் மாவீரர் நாள் நிகழ்வுகள் 1800ற்கு மேற்பட்ட மக்களுடன் உணர்வுபூர்வமாக
நடந்தேறியது.
தொடக்க நிகழ்வாக மாலை 4.30 மணியளவில் தேசியக் கொடியேற்றும் வைபவம்
நிகழ்ந்தது. தேசியக் கொடியை ஓயாத அலைகள் மூன்றின் ஆனையிறவுச் சமர் ஆரம்பத்தின்போது
வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மருதங்கேணி தெற்கு தாளையடியைச் சேர்ந்த மேஜர் இன்ப நிலா
என்று அழைக்கப்படும் மயில்வாகனம் கன்னிதா அவர்களின் சகோதரி திருமதி கமலாதேவி
திருச்செல்வம் ஏற்றி வைத்தார். கோடியேற்றும் நிகழ்வைத் தொடர்ந்து அமைதி வணக்கம்
எமது தேச விடுதலையை வேண்டி களமாடி காவியமாகி விட்ட மாவீரர்களுக்கும் மரணித்துக்
கொண்ட மக்களுக்குமாக அமைந்து கொண்டது.
அடுத்து,
சந்ததி வாழ தங்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு
ஆரம்பித்தது. ஈகைச்சுடரை வத்திராயன் வடக்கு தாளையடியைச் சேர்ந்த ரஜீவ் என்று
அழைக்கப்படும் மேஜர் இளங்குமரன் தங்கவடிவேலு தங்கமயில் அவர்களின் சகோதரி திருமதி
இன்பம் பாலு அவர்கள் ஏற்றி வைத்தார்.
ஈகைச்சுடர் ஏற்றலின் போது மாவீரர்பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன. தொடர்ந்து
மாவீரர்களின் குடும்பத்தினர் ஈகைச்சுடரை ஏற்றினர்.
அடுத்ததாக மாலதி கலைக் கூட மாணவர்கள் ஈகைச் சுடரை ஏற்ற பின்னர் அனைத்து மக்களுமாக
தொடர்ந்தது ஈகைச்சுடர். அதெற்கென அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லத்தில்
ஏற்றப்பட்டதோடு ஈகைச் சுடர் ஏற்றத்தின் இடையே டென்மார்க் தமிழீழ இசைக் குழுவினரால்
மாவீரகானங்கள் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந் நிகழ்வு முடிவுக்கு வர, மாலதி
தமிழ்க்கலைக்கூட மாணவர்களின் 'அக்கினிக் குஞ்சுகள்" எனும் நாட்டிய நாடகம் மேடையில்
விரிந்தது.
தொடர்ந்து கவிஞர் அறிவுமதி அவர்களின் சிறப்புப் பேச்சு இடம் பெற்றது. 'தமிழர்களாகிய
எங்களின் பண்டைய வாழ்வுமுறை எப்படி இருந்தது என்பதை புறநானூற்று பாடல்கள்
சிலவற்றின் உதாரணங்களுடன் எடுத்தியம்பி இடையில் எமது இனம் ஏன் இப்படி ஆனது
என்பதையும் சுட்டிக்காட்டிய தோடு இந்த ஈழ விடுதலைப்போரும் அதன் வளர்ச்சிப் பாங்கும்
தமிழினம் மீண்டும் எங்கள் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்
வழி நிமிர்ந்து நிற்கின்றது என்றும் இந்த நிமிர்வுடன் நாம் எங்கள் ஈழ விடுதலையைப்
பெற்றுக் கொண்டு தமிழீழத்தின் தனித் தன்மை பேணப்பட்டு வாழும் சூழல் உருவாக வழி
சமைப்போம் " என தனது உரையில் குறிப்பிட்டார்.
தொடர் நிகழ்வில் கதம்பம் எனும் மாவீரர்கள் குறித்த இயல் இசை நாடகம் மாலதி கலைக் கூட
மாணவர்களால் வெளிக் கொணரப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நிஜங்கள் எனும் நாடகம் மேடையில் விரிந்தது. வெளிநாட்டு சூழலில்
தங்கள் விடுதலைப் போரைப் பற்றியோ அதன் செயற்பாடுகள் பற்றியோ ஈடுபாடுகள் காட்டாமல்
விலகி நிற்பவர்களுக்கு விடுதலைப் போரின் நியாயத்தை விளங்கப்படுத்தி கொள்வதோடு
தமிழீழம் சார் அவல நிலைகளையும் காட்சிப்படுத்திக் கொண்டு விடுதலைப்பாதையில் விலகி
நிற்பவர்களை இந்த உண்மைக்குள் கொண்டு வந்து இந்த மாவீPரர் நாளில் தமிழீழ விடுதலையை
விரைவுபடுத்தி உறுதி எடுப்போம் எனக்கூறும் வாசகத்துடன் நிஜங்கள் நாடகம் 'நம்புங்கள்
தமிழீழம் நாளைபிறக்கும்" என்ற பாடல் ஒலிக்க மக்கள் அனைவரும் எழுந்து நின்று
பாடலுடன் இணைந்து கரஒலி எழுப்பிட, நாடகம் முடிவுக்கு வந்ததை அடுத்து இறுதி நிகழ்வாக
தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு நடந்தேறியது.
-செ.ஆனந்தன்
|