"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Maaveerar Naal - மாவீரர் நாள் 1997 |
|
அணையாத தீபங்கள்
|
தீட்சண்யன் கவிதை
8 December 1997மாவீரர்களே!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும்
உங்களிற்கான உணர்வின் அலைகளும்
உத்வேகமான நினைவின் தணல்களும்
மேலும் மேலும் வீச்சுறுகின்றன.
97 இன் மாவீரர் வாரத்தில்
பண்ணேற்றும் ஓர் செய்தி பறந்து வந்தது
முன்னேற்பாடாக
விமானப் பறப்புகள் யாவும் நிறுத்தமாம்!
சிறீ லங்காவில்
வடக்கிற்கும் கிழக்கிற்கும் பறப்புகள் ரத்தாம்!
மாவீரர் வாரத்தில் புலிகள் தாக்கலாம்-என
பைலட் கள் பயமாம்.
மாவீரரே!
பார்த்தீரா இப்போ பாதையின் போக்கினை!
எமக்கு முன்னரே எதிரிகளன்றோ
முண்டியடித்து உங்களுக்கெல்லாம்
மண்டியிட்டு நினைவு கூர்கிறார்...!
களத்தில் இறங்க மறுத்து மறைந்து
உங்கள் நினைவுக்
குளத்திலன்றோ மூழ்கி நிற்கிறார்!?
உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம்
உருவாக்கம் பெறுவது உறுதியாய்த் தெரியுது
உங்கள் நினைவுகள் எங்கள் மனங்களில்
உள வைரத்தை ஊட்டி வளர்க்குது
எங்கு மில்லாத புதுமையன்றோ
இங்கே ஈழ மண்ணில் நடக்குது!
விடுதலை பெற்ற தேசங்கள் மட்டுமே
தேசிய வீரர்க்கு விழாவெடுக்கையிலே...
இங்கே எங்கள் தேசம் மட்டும்---;
போரின் வீச்சு வீறுடன் தொனிக்க
எறிகணை மழையாய் மக்களில் வீழ
அச்சுறுத்தல்கள் ஆரோகணிக்க
தலையில் மூட்டை முடிச்சுகளோடு
தாழ்வாரங்கள் தேடி மக்கள்
தறி கெட்டுழன்று ஓடித்திரிய---
மனத்தில் உறங்கும் மாவீரர்க்கு
மாட்சிமையான விழாவினையெடுத்து
தேசியத்தின் தலைவர் அவர்கள்
தேசத்திற்கோர் பேருரையாற்றி
தீபங்களாலே அர்ச்சனை செய்யும்
தேசப் புயல்நாள் அனுஸ்டிக்கிறது.
நெருக்கடி நிலைகள் தொண்டையை நெரிக்கவும்
பகுத்தறிவற்ற துரோகம் வதைக்கவும்
வருத்தமுடன் நாம் வதங்கிடவில்லை---
கருத்தொருமித்த உமை நெஞ்சினில் வைக்கிறோம்;
குருத்தினிலே குழிசென்ற குஞ்சுகளே உமை எண்ணி
சிட்டிகளில் நெய்வார்த்து சிறுவிழிகள் நீர் கோர்த்து
தேசம் எங்கணும் தீபம் ஏற்றுகிறோம்,
உங்கள் உரமுணர்ந்து உருகினோம்-அவ்வழி
இறுக்கமாயுள்ளோம், இனித்தளரோம்
பொருத்தமாய் எமக்கொரு தீர்வுதர வேண்டுமென
அடக்கமாய் பேசிய காலமெலாம் போச்சு-இனி
எகத்தாளமாகவே எதிரியை மோதிநின்று
சுகந்தானா நீயென சூடாக வினவி நின்று
பகுத்தாளும் ஆட்சிமுறை படு குழியில் போகும் வரை
நிகர்த்தவன் எமக்கில்லைஎன்ற நிலையினையே ஸ்தாபித்து
கருத்தாழம் மிக்கதொரு கட்டத்தை எட்டாமல்
பொறுத்தாள மாட்டோம்-இது
புண்ணியர்கள் நீர் வரித்த வழிப்பாதையினாலே
வென்றதொரு நற்பாதை---இனி நின்றுகதை பேசோம்.
மாவீரரே!
உங்கள் நினைவுத் திருநாள் தான்
ஈழவர் எமது
தீபாவளியென்று கொண்டாடுகின்றோம்,
தீபங்கள் ஏற்றி மன்றாடுகின்றோம்,
நரனுக்கெதிரான நரகாசுரப் போரென்றும்,
அவனே அவர்களது ஆற்றொணா விரோதியென்றும்,
ஆரியர்கள் நடத்தி விட்ட அட்டகாசமே
போரியற் துறையில் புதினமாய் வடிவெடுத்து
பார்- இயல் ரீதியில் பிரச்சாரமானது---
பதிவுகளும் பெற்றது---
புரிந்து கொண்டீரோ---!??
கதையின் வேர் அதுவல்ல!
எமக்கேயான எல்லையைக் காக்க
தமக்கேயான வலுவுடன் போரிட்டு
தரையில் புதைந்த நம்மவர் தினத்தை
தீபமேற்றி நற் திருநாளென
தூய நினைவுடன் மலர்கள் தூவி
தூபியின் முன்னால் மண்டியிட்டு
ஆண்டாண்டான தமிழர் தினமாய்
வரித்துக் கொண்டோம் வணங்கி நிற்போம்.
வரலாறு என்றால் என்னப்பா?- வெறுமனே
வந்தவையும் போனவையும் கூறும்
புரையேறிப்போன வாசக வடிவங்களா?
இல்லையப்பா!!
புதிதாக நாமமைக்கும் புனிதப் பாதையதன்
போக்கும் வீச்சும் நேர்த்தியும் உறுதியும்
வளைவும் நெளிவும் சுழிவும் மிதப்பும்
நீக்கமற நேர்மையாய்க் காட்டி விடும்
போற்றலுக்குரிய பெரும் பாதையல்லவோ!?
நாமமைக்கும் பாதையது- அதாவது,
நீர் சிதைந்து உருவான விடுதலைப் பாதையது---
மாவீரர் நீரெல்லாம் மண்ணுள் மண்ணாகி-எம்
கண்ணுள் ஊற்றுடைத்து கட்டிய பாதையது----.
இது வெறும் கல்லாலும் மண்ணாலும் கரியநிறத் தாராலும்
கனவேக வாகனங்கள் வந்து சறுக்கி நிற்கும்,
பொல்லாத பரல் மணலும் ஊரியும் சிறு கல்லும்
உருவாக்கி வைக்குமொரு சடத்துவப் பாதையா!?
அல்லவே அல்ல ஐயா!
விடலைப் பருவமதில் வீரமுடன் களமிறங்கி
சுடலைப் பயமோ சுகபோக நினைவோ
சொட்டும் மனதிருத்தா சுடர் ஒளித் திருவுருவாய்
கடலையும் காட்டையும் களமாடிக் கரைந்துறையும்
குடலைக் கொழுந்துகள் நீர் காட்டி நின்ற பாதையன்றோ!
மறப்போமா நாமும்மை மாவீர நாயகரே,
கிடப்போமா கண்தூங்கி நினைவலைகள் மீட்டாமல்;
இரப்பான்கள் சென்றாங்கே இரந்து கிடக்கட்டும்;
பறப்பான்கள் ஊர்பறந்து பிரச்சாரம் செய்யட்டும்;
கரப்பான்கள் அவர்களென கழித்தெறிந்து கடாசிவிட்டு
சுரப்பான்கள் எம்முளத்தில் சுதந்திர-நெய் ஊறலிட
வரப்பால் வழிநடந்தும் உரைப்பால் உளங்கவர்ந்தும்
நெருப்பாய் நிலையுணர்த்தி நித்திலத்தின் புரவலராய்
பரப்புரையும் செய்வோம் படைநடப்பும் செய்வோம்.
கரப்பால் மூடிய குஞ்சுகளாய் நாம் இருப்பதினி நடவாது-வான்
வரப்பிலும் பலவீரம் காட்டும் வகை வளர்ந்து விட்டோம்.
நினைப்பால்-----
உம் நினைப்பால் -----
நீர் வளர்த்த பெரு நெருப்பால்----
நாம் மூண்டு விட்டோம்- இனி
ஒருக்காலும் ஓயொம், உம் கனா
நிஜத்தால் உயிர்வுறும்-ஆம்
உருப்பெறும், இது உறுதி.
ஒலிபரப்பு - 29.12.97 புலிகளின்குரல்வானொலி.