வெளிநாடுகளில் சைவசமய வழிபாடும்,
சிட்னியில் சைவசமயக் கல்வியும்
Temple Worship of Saivites Abroad and Saiva Education in Sydney
[also
in PDF]
கலாநிதி இ. ஸ்ரீ. இரவீந்திரராஜா, சிட்னி,
அவுஸ்திரேலியா
Dr R Sri Ravindrarajah, Sydney, Australia
லண்டன் எட்டாவது வருடாந்த சைவ மகாநாட்டு மலர்,
2005
8th Saiva Conference Malar, London, 20th and 21st August 2005
Web Page:
http://services.eng.uts.edu.au/~ravir/index.html
Email -
[email protected]
1. சமயவாழ்வும், சமூகவாழ்வும்
மனித உடல்
வளர்ச்சிக்கு சத்துள்ள உணவு எவ்வளவு முக்கியமோ அது போலவே
மனிதனது ஆன்மீக அறிவு வளமுற, வாழ்வு வளம் பெற, வாழ்க்கையின்
தத்துவத்தை உணர சமயம் அவசியமாகின்றது. தெய்வ சிந்தனையுடன் நாம்
செய்யும் எக்காரியமும் தர்மக்காரியமாக அமைந்து அது எமக்கு
நன்மையை அளிக்கும் என்ற பூரண நம்பிக்கையுடனும்,
மனத்திருப்தியுடனும் வாழ்ந்து எமக்கு வழிகாட்டியவர்கள் நமது
மூதாதையர்.
எல்லாம் அவன்
செயல், அவனன்றி ஒரு அணுவும் அசையாது,
அன்பே சிவம்
என்ற வாழ்க்கைத் தத்துவங்களை நமது வாழ்வு பண்படைய வளங்கியது
எங்கள் சைவசமயம்.
கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே என்றார் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.
வீணாக அலையும்
மனத்தினை ஒருமைப்படுத்த சமய தத்துவங்கள் மிகவும் உறுதுணையாக
உள்ளன என்பதை அனுபவமூலம் பெற்றவர்கள் பலர்.
எல்லாம் எப்பவோ
முடிந்த காரியம் என்ற யோக சுவாமிகளினதும்,
உன்னைத் திருத்து உலகம் திருந்தும் என்ற
இராமகிருஷ்ணரினதும் அருள்வாக்குகள் எமது செயல்களைக்
கட்டுப்படுத்த உதவுகின்றன.
உலகெங்கும்
வளர்ந்து வரும் குழப்பமான காலகட்டத்தில் வாழும் நாம் தெய்வ
சிந்தனையுடன் செயற்பட்டு, சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து,
மனிதநேயத்தை வளர்த்து, எல்லோரும் இறைவன் குழந்தைகள், அன்பே
கடவுள் (சிவம்) என்ற பாங்குடன் செயற்பட வேண்டும்.
தெய்வசிந்தனை நம்
உள்ளத்திலே என்றென்றும் பசுமையாக நிலைநிற்கச் செய்வது தான்
சமயம். சமயம் ஒருவரது வாழ்க்கையை வளமாக்கும் என்று பூரணமாக
நம்பிக்கை கொண்டவர்களே சமய வாழ்வைக் கடைப்பிடிப்பார்கள்.
சமயவாழ்வு வேறு,
சமூகவாழ்வு வேறு என்று வாழ்கின்ற காரணத்தினால் தான் மனிதசமூகம்
பலவாறான இடர்ப்பாடுகளை அனுபவித்து துன்படைகின்றது. மனிதர்கள்
அன்றாட வாழ்வில் தத்தம் சமயக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கத்
தவறி வந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக உலகசம்பவங்கள் பல
நீதி, நேர்மையற்ற முறையில் நடைபெற்று வருகின்றன.
மனித உரிமை
மீறல், சமய வழிபாட்டுச் சுதந்திரம் புறக்கணிப்பு, உயிர்க்
கொலை, இயற்கை அழிப்பு உலகெங்கும் பரவலாக நடைபெறுகின்றதைக்
காணக் கூடியதாகவுள்ளது. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்
கோயில் என்ற பழமொழியையும் தோற்றுவித்தவர்கள் சைவத் தமிழர்களே.
தமிழர்களில்
சிலர் பண்டைய காலந்தொட்டு சமய கோட்பாடுகளை கடைப்பிடிக்கத் தவறி
வந்துள்ளார்கள் என்பதை இப்பழமொழி எடுத்துக் காட்டுகின்றது.
தற்கால சூழலில் சமயவாழ்வு வேறு, சமூகவாழ்வு வேறு என்று
வாழ்கின்ற சைவர்கள் தொகை உலகெங்கும் கூடிவருவதைக் காண
முடிகின்றது.
முதலாவதாக,
சைவர்கள் பலர் பேரளவில் சைவர்களாக வாழ்வதினாலேயே சைவசமய
வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகின்றது என்று கூறின்
மிகையாகாது. அத்துடன் பிறசமயத்தவர்கள் சிலர் தமது சமயத்தை தம்
பொருளாதார வலிமை கொண்டு ஏழைகள், இடர்ப்பட்டவர்கள், நோய்
வாய்ப்பட்டவர்கள், சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோரிடம்
திணிப்பதால் பல சைவசமயத்தவர்கள் மதம் மாறியுள்ள பரிதாப நிலையை
நாம் காண்கின்றோம். அத்துடன் சமயம் மாறிய சைவர்களே முன்னின்று
மேலும் பலரை மதமாற்றம் செய்யும் கொடுமையையும் நாம்
அவதானிக்கலாம். பல நாடுகளில் மதமாற்றத்தைத் தொழிலாகக் கொண்டோர்
தொகை கூடி வருகின்றது.
2.
வெளிநாட்டில் சைவக் கோயில்கள்
சிவபெருமானை
முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள். ஆனாலும்,
சைவத்தமிழர்கள் சக்தியும் சிவனின் அம்சமே என்று கருதி அம்மன்
வழிபாடு நடாத்துகின்றனர். அத்துடன், முருகனை தமிழ்க்கடவுளாகக்
கருதி முருகன் கோயில்களைக் அமைத்து சைவசமய வழிபாட்டை
உலகெங்கும் வளர்த்து வருபவர்களும் சைவத்தமிழர்களே. இப்படியான
காரணங்களினால் சைவசமய வாழ்வும் இவர்களிடையே ஓரளவு மேலோங்கி
நிற்கின்றது.
பாரத கண்டத்தில்
தோன்றிய சைவசமயம் இன்று உலகின் பல பாகங்களிலும் பரவியுள்ளது.
நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான
சைவத்தமிழர்கள் இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளிகளாக
மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, பிஜி, இலங்கை, பர்மா,
மொறீஸ்யஸ், றியூனியன், மலேசியா போன்ற பலநாடுகளில்
குடியேற்றப்பட்டனர். இவர்கள் சென்றடைந்த நாடுகளில்
தமிழரின்
சமயம்,
கலை,
கலாச்சாரம் ஆகியவற்றை எவ்வளவு இடர்கள் மத்தியிலும்
பேணியும், பாதுகாத்தும், வளர்த்தும் வந்துள்ளார்கள்.
தாய்நாடடுடன்
உள்ள தொடர்பு குன்றியதாலும், பிறமொழிகள் ஆதிக்கத்தாலும்
இந்நாடுகளில் தமிழ்மொழி வளர்ச்சி பெருமளவில் பாதிப்படைந்தது.
தற்பொழுது இவர்களில் பெரும்பான்மையினர் பெயரளவில் மட்டும்
தமிழராக வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனாலும், தமது
வாழ்வை பூரணமடைய சைவசமயம் தேவையென்று உணர்ந்து அவர்கள்
ஆங்காங்கே பல கோயில்களைக் கட்டிச் சைவசமயத்தை வளர்த்து
வந்துள்ளார்கள். அவர்கள் தமது தமிழ்மொழி அறிவு குன்றினும்
சைவசமயத்தை ஒருபோதும் கைவிட்டுவிடவில்லை. இக்கட்டுரை
வெளிநாடுகளிலுள்ள சில சைவக்கோயில்களில் நான் நேரிடையாகப் பெற்ற
அனுபவத்தைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
2.1
தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்காவில் நூறாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து
வந்து குடியேற்றப்பட்ட சைவர்கள் பரவலாக வாழ்கின்றனர். இவர்கள்
பல சிறிய, பெரிய சைவக்கோயில்களை அமைத்து சமய வழிபாடு செய்து
வருகின்றார்கள். இன்று தென்னாபிரிக்காவில் மட்டும்
இருநூற்றுக்கு மேற்பட்ட கோயில்கள் சிவன், முருகன், மாரியம்மன்
போன்ற தெய்வங்களின் பெயரால் அமைக்கப்பட்டுள்ளன. இன்றும் பல
புதிய கோயில்கள் ஆங்காங்கே பொருளாதார வளர்ச்சி பெற்ற இந்திய
சமூகத்தினரால் நிர்மாணிக்கப்படுகின்றன.
முன்னைய நிறவெறி
கொண்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் வெளிநாட்டுத் தொடர்பற்ற
நிலையில் பல சைவக்கோயில்கள் உள்ளுர் பூசாரிகளால்
பராமரிக்கப்பட்டு வந்திருந்தன. கடந்த சில வருடங்களாக குறிப்பாக
இலங்கைலிருந்து வந்துள்ள பிராமண அர்ச்சகர்கள் கோயிற் பூசை
முறைகளைச் சீர்படுத்தி, திருமுறைகளைப் பாராணம் செய்து, அவற்றை
பஜனை முறையில் பாடி, திருவிழாக்களை நடாத்தி, மக்களிடையே
விரதங்கள் அனுட்டிப்பதை ஊக்குவித்து சைவசமயத்தை
தென்னாபிக்காவில் வளர்த்து வருகின்றனர்.
பிராமணர்களின்
ஆதிக்கத்தை விரும்பாத சைவர்களில் சிலர் தாமாகவே முன்வந்து பல
சைவசமய நிறுவனங்களை நிறுவியுள்ளனர். அந்நிறுவனங்கள் சிவலிங்க
வழிபாட்டினை வாரம் ஒருமுறை தமிழிலே தேவார பாராயணத்துடன்
சிறப்பாக நடாத்தி வருகின்றன. பிராமணர் இல்லாமல் நடைபெறும்
வழிபாட்டில் பெரும் தொகையாக சைவர்கள் ஈடுபட்டு சிவலிங்க
அபிசேகம் செய்து, திருமுறைகள் ஓதி, சிவவழிபாடு நடாத்துவது என்
மனதினை உருக்கும் காட்சியாக அமைந்தது. இப்படியான வழிபாட்டினை
நடாத்தும் சைவப்பெரியார்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சமய
விளக்கம் செய்கின்றார்கள். இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளும்
பலர் தம் வசதிக்கேற்ப கோயில்களுக்கும் போகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
கோயில்
அர்ச்சகர்கள் சிலர் அடியார்களைக் கோயில் கிரியைகளில்
ஈடுபடுத்தி வருகின்றார்கள். மூர்த்தி அபிசேகம், ஆராதனை, ஓமம்
வளர்த்தல், ஆராத்தி காட்டுதல் ஆகியவற்றில் பக்தர்கள் சிலர்
அர்ச்சகருடன் சேர்ந்து செயற்படுவதை என்னால்
காணக்கூடியதாகவிருந்தது.
தென்னாபிரிக்காவிலுள்ள சைவர்களில் பலர் நெடுநேரம் கோயிலில்
நிற்க விரும்புவதில்லை என்று கோயில் அர்ச்சகர்கள் கூறினார்கள்.
அத்துடன் அவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும்
விரும்புவதில்லை. ஆகவே, கோயில்களிலும், வழிபாட்டு
நிலையங்களிலும் கதிரைகளில் இருந்தே வழிபாடு செய்ய
விரும்புகின்றனர். அத்துடன், கோயிலுக்கு கொண்டு வரும் பழங்களை
கோயிலில் விட்டுச் செல்லும் பழக்கமும் அவர்களிடம் உள்ளது.
கடவுள் பழங்களைச் சாப்பிடுவார் என்று நம்பிக்கையினால் அவர்கள்
இப்படி செய்வதாக விளக்கமளித்தார் ஒரு கோயில் அர்ச்சகர்.
தென்னாபிரிக்காவிலுள்ள சைவர்கள் புரட்டாசி மாதம் முழுவதும்
விரதம் அனுட்டித்து இறைசிந்தனையுடன் காவடி எடுத்தும், கோயில்
வழிபாடு செய்து வருவது ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.
இம்மாதத்தில் மட்டும் சைவர்கள் எல்லோரும் மாமிசம்,
களியாட்டங்கள் ஆகியவற்றினைத் தவிர்க்கின்ற காரணத்தால் டேபனில்
மாமிசம் விற்கும் கடைகளும், படமாளிகைகளும் இம்மாதத்தில்
மூடப்படுகின்றன என்பதனை அறிந்தேன். பொதுவாக
தென்னாபிரிக்காவிலுள்ள சைவர்களிடையே தெய்வநம்பிக்கை வேருன்றி
ஆழமாக இருப்பதை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அத்துடன்,
தமிழர்கள் ஒருவரை ஒருவர் கைகூப்பி வணக்கம் என்று தமிழில்
சொல்லி வரவேற்கின்றனர். அத்துடன் தென்னாபிரிக்கவில் வாழும்
சைவர்கள் கோயில் வழிபாட்டிலும் பார்க்க மற்றவர்களுக்குச் சேவை
செய்வதையே மிகவும் விரும்புகிறார்கள். யாராவது வீட்டில் மரணம்
சம்பவித்தால் அவர்கள் வீட்டிற்குச் சென்று பஜனை செய்து சேவைகள்
பல செய்து அவர்கள் துன்பத்தை துடைக்கும் செயல்களைச்
செய்கின்றனர். இன்னும் சிலர் காலையில் பாடசாலைகளுக்குச் சென்று
வசதி குறைந்த ஆபிரிக்க மாணவர்களுக்குக் காலை போசனம்
கொடுப்பதைத் தவறாமல் செய்கின்றனர்.
2.2
மலேசியா,
சிங்கப்பூர்
வியாபார, தொழில்
காரணங்களுக்காக வெளிநாடு சென்ற இலங்கை, இந்தியத் தமிழர்கள்
சைவக்கோயில்கள் பலவற்றை தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து,
மலேசியா, போர்னியோ, பர்மா, சிங்கப்பூர், வியட்னாம் முதலிய
நாடுகளில் கட்டியுள்ளார்கள். மலேசியாவில் புகழ்பெற்ற முருகன்
தலமான பத்துமலையில் மிகவும் உயரமான (80 அடிக்கு மேல்) முருகன்
திருச்சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. கோலாம்பூரில்
அமைந்துள்ள புதிய மூகாம்பிகை அம்மன் கோயில் சிற்ப, சித்திர
வேலைப்பாடுகள் கண்கவர் காட்சியாகும். இலங்கைச் சைவர்களின்
கந்தசாமி கோயில் புதுப்பொலிவுற்று விளங்குகின்றது. இங்கே
மூலஸ்தானத்தில் நல்லூர் கந்தசாமி கோவிலைப் போன்று வேல்
அமைந்துள்ளது. சைவர்களின் பொருளாதார வளர்ச்சியின்
பிரதிபலிப்பாக மலேசியா, சிங்கப்பூரில் ஆகிய நாடுகளில் பல புதிய
கோயில்கள் அமைக்கப்பட்டும், பழைய கோயில்கள்
புதுப்பிக்கப்பட்டும் வருகின்றன.
துர்க்கை அம்மன்,
மாரியம்மன், காளி அம்மன் வழிபாடு சிங்கப்பூர், மலேசியா,
வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள குறிப்பாக இந்திய
வம்சாவளி சைவத்தமிழரிடையே மேம்பட்டுள்ளது. தற்பொழுது சுவாமி
ஐயப்பன் வழிபாடு சிங்கப்பூரில் உள்ள சில கோயில்களில் சிறப்பாக
நடைபெற்று வருகின்றது. இங்கே சைவர்கள் பெருமளவில் கலந்து
கொண்டு தமிழில் தோத்திரப் பாடல்களை கூட்டுப்பிரார்த்தனை
முறையில் பாடி சிறப்பான முறையில் வழிபாடு நடாத்தி வருகின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டுச் சைவர்கள் தைப்பூசத்தை
சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர். பினாங்கிலும்,
குகந்தானிலும் உள்ள முருகன், மரத்தாண்டவர் கோயில்களும்
பிரசித்தி பெற்றவை. மலேசியாவில் 16 ஆயிரம் சைவக்கோயில்கள்
இருப்பதாக ஒரு கணிப்பு கூறுகின்றது.
பல சிறிய
கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 1977ஆம் ஆண்டு முதல்
மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் 12 வருடங்களாக வாழ்ந்து,
பின்னர் பல தடவைகள் இந்நாடுகளுக்கு சென்ற அனுபவத்தைக் கொண்டு
சைவர்களிடையே கோயில் வழிபாடு மேலோங்கி வருவதை என்னால் கணிக்க
முடிகின்றது. அத்துடன் சில சீனர்களும் கோயிலுக்கு வந்து
வழிபாடு செய்கின்றனர். தைப்பூசத் தினத்தில் சீனர்கள் சிலரும்
காவடி எடுக்கின்றனர்.
2.3 போர்னியோ
தீவு
கிழக்கு
மலேசியாவிலுள்ள போர்னியோ தீவின் சரவாக் நாட்டில் கூசிங்
பிள்ளையார் கோயிலும், சபா நாட்டில் பசுபதிநாத், சிவசுப்பிரமணிய
சுவாமி கோயில்களும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு
வருகின்றன. இந்த இடங்களில் சைவர்கள் தொகை அதிகமாக இல்லாமல்
இருப்பினும் இக்கோயில்கள் முறையாகவும், சிறப்பாகவும்
அர்ச்சகர்களை வைத்து நடாத்தப்படுகின்றன. தடாகத்தின் நடுவே
அழகாக அமைந்துள்ள பசுபதிநாத் ஆலயத்தில் இந்துசமயத்தின்
சன்மார்க்கத்தை கருத்திற் கொண்டு பிள்ளையார், சிவன், விஷ்ணு,
சக்தி, சூரியன், முருகன் ஆகியவற்றிருக்கு விக்கிரகங்கள்
அமைத்து வழிபாடு நடைபெறுகின்றது. மலேசிய ராணுவ முகாமில்
அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ராணுவ
சிப்பாய்களினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இங்கே நவக்கிரக
வழிபாட்டிற்காக புரட்டாசி மாதம் எல்லோரும் வருகின்றனர்.
2.4
தாய்லாந்து
தாய்லாந்தின்
பெரும்பான்மையினர் புத்தசமயத்தைச் சார்ந்தவர்கள். ஆனாலும்,
இந்துசமய வழிபாடு பரவலாக இங்கே காணப்படுகின்றது. வேறு ஒரு
நாட்டிலும் இல்லாதவாறு படைத்தல் கடவுளாகிய பிரம்மாவுக்கு
கோயில் அமைத்து நேரம் தவறாது வழிபாடு செய்வதை எங்கும்
அவதானிக்க முடிந்தது. பெரிய வணிகக் கட்டிடங்களிலும்,
ஹோட்டல்களிலும், வீதிச்சந்திப்புகளிலும் பிரம்மாவுக்கு
கோயில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. இதே போன்றே, விநாயகர்
வழிபாடும் பரவலாக தாய்லாந்தில் நடைபெற்று வருகின்றது.
வடதாய்லாந்து சியங்மாய் நகரில் நான் தங்கியிருந்த ஹோட்டல்
வெளித்தோட்டத்தில் பிரம்மாவுக்கு ஒரு பெரிய கோயிலும்,
விநாயகருக்கு ஒரு சிறிய கோயிலும் அமைக்கப்பட்டிருந்தன. இருகரம்
கூப்பி ஒருவரை ஒருவர் வரவேற்பதை பழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்
தாய்நாட்டவர்கள். தமிழர்களிடம் இருந்த இப்படியான வரவேற்கும்
பழக்கம் மாறி வருகின்ற இந்நாளில் தாய்நாட்டவர்கள் இப்படி
வரவேற்பதைக் கண்டு நான் பூரிப்படைந்தேன்.
பாங்கொங் நகரில்
உள்ள மகாமாரியம்மன் கோயிலில் இந்தியர்களும், தாய்நாட்டவர்களும்
சிறப்பாக நம்பிக்கையுடன் வழிபாடு செய்கின்றனர். இங்கே,
மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், பிரம்மா, நவக்கிரகங்கள்
ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைத்துள்ளனர். மகாகோபுரத்தைக்
கொண்ட இக்கோயில் இன்னும் கும்பாபிஷேகத்தைக் காணவில்லை.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் இளநீர், பூக்கள், ஊதுபத்திகள்,
மெழுகுவர்த்தி, பால் ஆகிய கொண்டு வருகிறார்கள். கோயிலில்
மெழுகுவர்த்தி, ஊதுபத்தி கொழுத்தி, முழங்காலில் நின்று
அமைதியாக பல நிமிடங்கள் இருந்து வழிபாடு செய்கின்றனர்.
இங்கே நிரந்தரமாக
தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள ஐந்து அர்சச் கர்கள் இருகக்
pன்றார்கள். தாய்நாட்டவர்கள் தமிழ்த் தோத்திர, பஜனைப் பாடல்களை
தமது தாய் மொழியிலே எழுதி பிரதி சனிக்கிழமை தோறும்
கூட்டுவழிபாடு நடாத்துகின்ற காட்சி என்மனதைச் சிலிர்க்க
வைத்தது. காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை பக்தர்கள்
குறைவின்றி இக்கோயிலில் வழிபாடு நடாத்துகின்றனர்.
தினமும் நான்கு
முறை கோயிலுக்கு வரும் தாய் பக்தர்களும் உண்டு. நவராத்திரி
காலங்களில் பத்து நாட்கள் சிறப்பாக நாதஸ்வரம், நாட்டிய
நிகழ்ச்சியுடன் இக்கோயிலில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
அத்துடன், விஜயதசமி நாளில் மாரியம்மன் பாங்கொக் நகரில் 25 கிலோ
மீட்டர் தூரம் ஊர்வலம் வருகின்றாள். அத்தருணம், தமது வீட்டுப்
பூசை அறையிலிருந்து சுவாமிப் படங்களையும், விக்கிரகங்களையும்
வீதிக்குக் கொண்டு வந்து அம்மன் அருள் பெற்றுச் செல்வார்கள்.
2.5 தென்
வியட்னாம்
நாட்டுக்கோட்டைச்
செட்டியார் சமூகத்தவர்கள் பலர் வியாபார நோக்கம் கொண்டு
தென்கிழக்காசிய நாடுகளுக்கு வியட்னாம் வரை சென்றுள்ளனர்.
அவர்கள் தென் வியட்னாமில் ஹோ சீ மின் நகரில் மூன்று சைவக்
கோயில்களை அமைத்து இறைவழிபாடு செய்தனர். இக்கோயில்கள் அறுபது
வருடங்களுக்கு மேலாக இந்நகரின் வணிக வட்டாரத்தில் அமைந்துள்ளன.
மாரியம்மன்
கோயில், ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில், சிவசுப்பிரமணிய சுவாமிகள்
கோயில் ஆகியவைகளே இக்கோயில்களாகும். மாரியம்மன் கோயிலில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராமணர் அல்லாத ஒருவர் பூசை செய்து
வருகிறார். மற்றைய கோயில்களில் இந்திய வம்சாவழியில் வந்த
வியட்னாமியர் பூசை செய்கின்றனர். எல்லாக் கோயில்களிலும்
தமிழ்ப் பக்திப்பாடல்கள் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருப்பதைக்
கேட்டேன். மாரியம்மன் கோயில் ஒன்றே இராஜகோபுரத்தைக்
கொண்டுள்ளது. அம்மனின் பலவகையான தோற்றங்கள் சிலைவடிவாக
கோயிலில் அழகாக அமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது
இக்கோயிலில் அமைந்துள்ள சிறப்பாகும். வியட்னாமியர்
பெரும்பான்மையாகச் சென்று வழிபாடு செய்வதையும் காணக்
கூடியதாகவுள்ளது.
திருவிழாக்
காலத்தில் அம்மன் வீதி வலம் செய்கின்றாள். தமிழ் பேச, எழுதத்
தெரியாத தமிழர்கள் நாலாயிரம் வரை இங்கே இருப்பதாகக்
கணிக்கப்பட்டுள்ளது. அதிகமான தமிழர்கள் கலப்பு மணம் செய்தாலும்
தமிழ்ப் பெயர் கொண்டுள்ளனர். பக்தர்கள் மாரியம்மனிடம் மிகுந்த
நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் எண்ணிக்கையும்,
வழிபாட்டு முறையும் எடுத்துக் காட்டுகின்றது.
தென் வியட்னாமை
அமெரிக்காவிடமிருந்து கைப்பற்றிய கம்யூனிஸ்ட்வாதிகள்
இக்கோயில்களைப் பூட்டிவைத்து அவற்றை பின் வேலைத்தளங்களாக
மாற்றிச் செயற்பட்டனர். கோயில் நகைகள் எல்லாம் சூறையாடப்பட்டன
என்பதை அறிந்தேன். இருபது வருடங்களுக்குப் பின்னர், நட்பு
நாடாகிய இந்தியாவின் வேண்டுகோளுக்குச் செவிமடுத்தி இந்தக்
கோயில்கள் மீண்டும் இறை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கப்பட்டன.
மாரியம்மன் கோயில் வருமானம் பக்தர்கள் பலரிந் வருகையால்
குறைவின்றியுள்ளது. வருமானம் குறைந்த கோயிலான தண்டாயுதபாணி
கோயில் சாயிபாபா நிலைய அங்கத்தவர்கள் ஆதரவுடன் தற்பொழுது
புனரமைக்கப்பட்டுள்ளது. இந்நகரிலுள்ள இந்திய வணிகர்களும்,
இந்திய தூதராலயத்தினரும் கோயில் திருப்பணிக்கு உதவுகின்றனர்.
3. சைவசமய
வளர்ச்சியில் கோயில்களின் பங்கு
சைவர்கள்
கோயில்கள் பலவற்றைக் கட்டி, சமய வழிபாட்டுக்கு வழிவகுத்து,
அவற்றை சிறந்த முறையில் பராமரித்தும் வருகின்றார்கள். இப்பணி
பலவருடங்களாக பல நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. கோயில்களை
நேர்மையான முறையில் பராமரிப்பதும், கோயில்களின் வருமானத்தைக்
கொண்டு சமூகபணி ஆற்றுவதும், சைவர்களிடையே கடவுள்
வழிபாட்டினையும், சமய கோட்பாடுகளை வளர்க்க உதவும் என்பதில்
ஐயமில்லை. வெளிநாடுகளில் வாழும் சைவர்கள் பெருமளவில் தேவைக்கு
மேலாக பல கோயில்களைக் கட்டுவது சைவசமய வளர்ச்சிக்காகவா? என்ற
கேள்வி பலர் மனதில் எழுகின்றது. எது எப்படியாயினும் கோயில்கள்
சைவசமய வளர்ச்சிக்கு முக்கியமாக தேவையானவை என்பதை யாராலும்
மறுக்க முடியாது.
வசதி படைத்த சில
சைவசமய நிறுவனங்கள் தம்மாலான மனிதாபிமான காரியங்களை தனிப்பட்ட
முறையில் நிறைவேற்றுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனாலும்,
சைவசமய நிறுவனங்கள் ஒன்றுபட்டு, போட்டி மனப்பான்மையற்று சமூகத்
தொண்டை ஆற்றவேண்டும். வெளிநாட்டிலுள்ள சைவசமய நிறுவனங்கள்
கோயில்கள் அமைந்துள்ள தத்தம் நாட்டில் உள்ள சைவர்களின்
தேவைகளையும் குறிப்பாகக் கவனித்தல் அவசியமாகின்றது. சைவசமய
அறிவினை சைவர்களிடையே வளர்க்கும் சைவக்கோயில்கள் ஒரு சிலவே
என்று கூறலாம்.
இதற்குப் பல
காரணங்கள் உள்ளன. கோயில் அமைப்புகள் தமது சமூகப் பொறுப்பை
பூரணமாக உணரத்த தவறுகின்றன. அவைகள் பணத்தைச் சேர்ப்பதிலும்,
கோயில் வளர்ச்சியிலும், சமூகப் பணியிலும், கோயில்
திருவிழாக்கள் ஆகியவற்றில் தமது முயற்சியைச் செலுத்துகின்றன.
கோயில் வருமானத்தில் ஒரு வீதமான தொகையைக் கூட சைவர்களின் சமய
அறிவு மேம்பாட்டத்துக்கு செலவு செய்ய கோயில் நிர்வாகங்கள்
தயங்குகின்றன.
4. சைவசமய
அறிவும் பயனும்
சைவசமய அறிவு
வேறு சைவசமய வாழ்வு வேறு. சைவசமய அறிவு இருந்து சைவசமய வாழ்வு
வாழாதவர் கண்ணிருந்த குருடனுக்குச் சமமாவார். அவர்கள் பெருமை
நிரந்தரமன்று. அதே நேரத்தில் சைவசமய அறிவின்றி சைவசமயியாக
வாழும் சிவபக்தன் எல்லோருடைய மதிப்பையும், அன்பையும் பெறுவார்.
இதற்கு நாயன்மார்களின் சரித்திரங்களே சானறு பகர்கின்றன.
எவ்விதத்திலும் எம்வாழ்வுக்கு உபயோமாகின்ற அறிவே மெச்சப்பட
வேண்டியது. நல்வாழ்வுக்கு உபயோகமற்ற அறிவு நமக்குத் தேவைதானா
என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.
வெளிநாட்டில்
வாழும் சைவர்களாகிய நாம் சைவசமய அறிவினைப் பெறுவதால் ஏற்படும்
நன்மைகளை ஆராய்தல் வேண்டும். இதில் எமக்கு தெளிவு ஏற்பட்டால்
மட்டுமே நாம் சைவசமய அறிவினை நமது வருங்கால சந்ததியினருக்கு
அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்ட முற்படுவோம்.
பெரியோர்களாகிய நாம் சைவசமய அறிவில் நாட்டமின்றி நமது
பிள்ளைகளிடம் திணிப்பதால் ஏதும் நன்மை உண்டாகுமா என்பதை
யோசிக்க வேண்டும்.
4.1 சைவர்கள்
வாழ்க்கை முறை
சைவர்களில்
அதிகமானவர்கள் தனியாகவோ, குடும்பமாகவே கோயிலுக்கு
வெள்ளிக்கிழமை தோறும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருவிழா நாட்களிலும், விசேட நாட்களிலும் கோயிலில் பக்தர்கள்
எண்ணிக்கை கூடி வருவதை அவதானிக்க முடிகின்றது. சிலர் தமது
வாழ்க்கையில் முக்கியமாகக் கருதப்படும் நாட்களாகிய பிறந்த
நாள், கலியாண நாள், மறைந்த பெற்றோரின் திதி நாட்கள் ஆகிய
நாட்களில் கோயிலுக்குச் செல்வார்கள். இவர்கள் கோயிலுக்குப்
போவதன் காரணங்கள் பலவாறாயினும் பொதுவாக கோயில் வழிபாடு நன்மையை
மட்டுமே அளிக்கும் என்ற பூரண நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்
சைவர்கள்.
கடவுளின்
கடாச்சம் தொடர்ந்து கிடைக்க, கடவுளிடம் தமது குறைகளை
எடுத்தியம்ப, தமது குடும்ப நல்வாழ்வுக்கு கடவுளுக்கு நன்றி
சொல்ல அவர்கள் பிரார்த்தனைகள் அமைகின்றன. எப்படியாயினும் இறை
வணக்கம் தமது மனஅமைதியையும், மனத்திருப்தியையும்,
ஆனந்தத்தையும் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் செயற்பட்டு
வருகிறார்கள் சைவர்கள். பெற்றோர்கள் காட்டிய வழியில்
பிள்ளைகளும் தொடர்ந்து கோயில் வழிபாடு செய்கின்றனர். கோயில்
வழிபாடே பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பெற்ற முதல் சைவசமயக்
கல்வியாகும். நம்மில் பலருக்கு கோயிலுக்குக் குளித்துத்
தூய்மையான ஆடை அணிந்து இறை உணர்வுடன் செல்ல வேண்டும் என்ற
பாடம் இளம் வயதிலிருந்தே மனதினில் பதிந்துள்ளது.
4.2 சைவசமய
விளக்கம்
நாளடைவில் கோயில்
வழிபாட்டை கருத்துடன் கடைப்பிடிக்க விக்கிரகங்கள், கிரியைகள்
பற்றி விளக்கம் நமக்குத் துணைபுரிகின்றது. உருவமற்ற இறைவன்,
பிள்ளையார் என்ற உருவநிலை கொண்டு தடைகளை நீக்க உதவுவார் என்ற
நம்பிக்கையில் சைவர்கள் எக்காரியத்தையையும் பிள்ளையார்
வணக்கத்துடன் ஆரம்பிக்கிறார்கள். வள்ளி, தெய்வயானையுடன்
தோன்றும் முருகன், எக்காரியமும் வெற்றி பெற ஞானத்துடன் கூடிய
செயலை விருப்பமுடன் செய்தல் வேண்டும் என்ற தத்துவத்தை
அறிவுறுத்துகின்றது. இதே போன்று சிவமும் சக்தியும் சேர்வதினால்
ஆனந்தம் (முருகன்) உண்டாகும் என்ற தத்துவத்தை சிவனின்
சோமஸ்கந்த முகூர்த்தம் விளக்குகின்றது.
நமக்கு
அட்டசெல்வங்களையும் வாரி வளங்குபவள் மகாலட்சுமி என்பதால்
சைவர்கள் வீடுகளில் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை
வைத்துள்ளனர். ஒருவர் மரணித்தால் அவரது ஆன்மா சிவனடி சேர்வதால்
மறுபிறப்பற்று ஆனந்தநிலை பெறும் என்று நம்புகிறார்கள்
சைவர்கள். அதுவே சைவர்கள் மனிதப் பிறவியினை எடுத்ததின் நோக்கம்
என்று கருதுகிறார்கள்.
சிவாய நமவென்று
சிந்தித்திருப்போர்க்கு (பிறவிப் பெருங்கடலில் மூழ்கும்)
அபாயம் ஒருநாளும் இல்லை என்பதை பூரணமாக சைவர்கள் நம்புதல்
அவசியம். தினமும் காலையில் திருநீறு பூசும் போது சிவாய நம என்ற
சூக்கும மந்திரத்தைக் கூறியே வேண்டும் என்று ஆறுமுகநாவலர்
கூறியுள்ளார். இதன் உட்பொருள் என்னவென்றால் நான்
இத்தினத்தில் செய்யும் எக்காரியமும் எனது ஆத்மாவின்
ஈடேற்றத்துக்கு துணை புரிய வேண்டும் என்ற பிரார்த்தனையாக
அமைகின்றது. இறை சிந்தனை எப்பொழுதும் இருப்பதால் எம்வாழ்வு
எப்பொழுதும் அன்பும் அறமும் கூடியே அமையும்.
இறைவனை
வழிபடுவதற்கான முறைகள் பலவற்றில் தோத்திரப் பாடல்களை
மனமுருகிப் பாடுவதே இலகுவான முறையென்று கூறப்படுகின்றது. இதனை
நெறிப்படுத்த நாயன்மார்கள் அருளிய திருமுறைகளை மனனம் செய்து
பண்ணுடன் பாடுதல் வேண்டும் என்ற காரணத்தால் குழந்தைகளுக்கான
சைவப் பாடசாலைகளில் தேவாரங்களை கற்பிக்கின்றார்கள். இளம்
வயதிலிருந்தே இவற்றை மனனம் செய்தல் வேண்டும்.
4.3 சைவசமய
வளர்ச்சிக்கு இலகு வழி
சைவசமயத்தை
வளர்ப்பதற்கு இலகுவான ஒரு வழி என்னவாயின் சைவ சமயத்தவர்கள்
தமது சமயத்தின் தத்துவங்களை அறிந்து, சமய கோட்பாடுகளைக்
கடைப்பிடித்து இறை உணர்வுடன் செயற்பட்டு வருதலேயாகும்.
பேச்சளவில் சைவர்களாக வாழ்ந்து, செயலளவில் அசைவ வாழ்வைக்
கடைப்பிடித்தால் நம் வருங்கால சந்ததியினர் சைவசமயத்தில்
நம்பிக்கை வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமானதா என்று
நாம் சிந்திக்க வேண்டும். முயற்சி செய்தால் எம்மால் அடைய
முடியாதது யாதும் உண்டோ? அதுவும் இறை காரியமாயின் எதுவும்
கைகூடாமல் போக முடியாது.
5.
அவுஸ்திரேலியாவில்
இந்துக்கள்
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் இந்துக்கள் பருத்தி, கரும்புத் தோட்டங்களில் வேலை
செய்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்தனர். இவர்களில் பலர்
சிறுவர்த்தகர்கள் ஆனார்கள். 1900இல் அவுஸ்திரேலியாவிலிருந்த
4000 தென் இந்தியர்களில் 25 வீதமானவர்கள் இந்துக்கள். 1901ஆம்
ஆண்டு நடைமுறைக்கு வந்த வெள்ளை அவுஸ்திரேலியா கொள்கையினால்
1970க்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த இந்துக்கள் சிலரே.
சனத்தொகை
மதிப்பீட்டின்படி அவுஸ்திரேலியாவில் வாழும் இந்துக்கள் தொகை
படிப்படியாகக் கூடியுள்ளது. 1988இல் 20,000, 2001இல் இத்தொகை
95,000 ஆகக் கூடியள்ளதை கீழே தரப்பட்டுள்ள படத்தின் மூலம்
அறியலாம். அவுஸ்திரேலியாவின் குடியுரிமைக் கொள்கை
மாற்றத்தாலும், இங்கே உயர்கல்வி கற்கவரும் ஆயிரக்கணக்கான இந்து
மாணவர்களாலும் அவுஸ்திரேலியாவில் இந்துக்கள் தொகை பெருமளவில்
அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அவுஸ்திரேலியாவில் உள்ள
நகரங்களில் இந்துக்கள் வாழ்ந்தாலும் சிட்னி மாநகரத்தில்
அதிகப்படியான இந்துக்கள் குடிகொண்டுள்ளனர். வார இறுதி
நாட்களில் சிட்னியிலுள்ள இந்துக் கோயில்களுக்கு தமிழ் பேசத்
தெரியாத இந்துக்கள் பலர் தவறாது வருவதைக்
காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் மாதமொருமுறை சிட்னியில்
தென்ஆபிரிக்கா, பிஜி ஆகிய நாட்டிலிருந்து வந்த சைவர்கள் கூடி
இறைவழிபாடு செய்கின்றனர்.
5.1 சிட்னியில் சைவர்கள்
அவுஸ்திரேலியாவில் வாழும் இந்துக்களில் தமிழைத் தாய்மொழியாகக்
கொண்டுள்ள பெரும்பான்மையினர் சைவசமயத்தவர்கள் ஆவர்கள். இவர்கள்
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வந்து குடியேறியுள்ளனர்.
அத்துடன் தமிழை பேசும் மொழியாகக் கொள்ளாத சைவர்கள் பலர்
மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, பிஜி ஆகிய
நாடுகளிலிருந்து வந்துள்ளார்கள். அத்துடன் நமது இளம்
சந்ததியினரிடம் தமிழ் பேசும் வல்லமை குன்றி வருவதினால்
சிட்னியில் பேச்சளவிலே தமிழை எழுதப், பேச, வாசிக்கக் கூடிய
சைவர்களின் தொகை குறைந்து கொண்டு வருமென்று எதிர்பார்க்கலாம்.
தற்பொழுது சிட்னியில் சனிக்கிழமைகள் தோறும் நூற்றுக்கணக்கான
சிறுவர்கள் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழைக் கற்று வருவதால்
தமிழ்மொழி சிட்னியில் அழியாது ஓரளவு நிலைத்திருக்கும் என்பதில்
நம்பிக்கை கொள்ளலாம்.
தமிழ்ப்
பாடசாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பாத சைவத்தமிழ்ப்
பெற்றோர்கள் பலர் உள்ளனர் என்பது வருத்தத்துக்குரியது.
தமிழ்மொழி அறிவு சைவசமயக் கல்வியைப் பூரணமாகக் கற்க மிகவும்
துணைபுரியும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. சைவத் திருமுறைகளை
படித்தறிய தமிழறிவு மட்டுமல்ல, சமய உணர்வும், ஆர்வமும்
இன்றியமையாதவை. தமிழ் அறிவைப் பெற்ற ஒரு சிலரே திருமுறைகளைக்
கற்ற ஆயத்தமாக உள்ளனர்.
5.2
சைவக்கல்விக்கு சைவமன்றம் ஆற்றும் பணி
சிட்னி
மாநகரத்தில் முருகன் கோயில் ஒன்றை ஆரம்பித்து சைவசமயத்தை
பாதுகாத்து வளர்க்கும் முக்கிய நோக்கமாக 1986ஆம் ஆண்டு
சைவமன்றம் என்ற ஓர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. சிட்னி வாழ்
சைவர்களின் பூரண ஆதரவுடன் 1999ஆம் ஆண்டு கண்கவர் சிட்னி
முருகன் கோயில் கட்டப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.
சிட்னியில் வாழும் சைவர்கள் பலர் சிட்னி முருகன் கோயில் எங்கள்
கோயில் என்று உரிமை கொண்டாடி கோயில் திருப்பணி செய்து
வருகின்றனர் என்பது பாராட்டத்தக்கது. திருவிழாக் காலங்களில்
பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆயிரக்கணக்காக வந்து கோயில்
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கோயிலுக்குச் சிறப்பேற்றி
முருகனருள் பெற்று செல்கின்றார்கள். சிட்னி முருகன் கோயில்
சிட்னி வாழ் சைவர்கள் இடையேயுள்ள கூட்டுறவை மேம்படுத்தி சமூக
முன்னேற்றத்துக்கு வழி வகுக்கின்றது.
முருகனுக்கு
அழகிய கோயில் கட்டுவதுடன் நிற்காமல் சிட்னியில் சைவக்கல்வி
வளர்க்க, தமிழர்களின் கலாச்சாரத்தைப் பேண சைவமன்றம்
கல்விக்கும், கலாச்சாரத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்து
கடந்த பல வருடங்களாகப் பணியாற்றி வருகின்றது. சைவமன்றம்
ஆற்றும் சைவக்கல்விப் பணியைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்
கூறலாம்.
1.
சைவப்பாடசாலைகள் இரண்டினை ஞாயிறு தோறும் சிட்னியில்
நடாத்துவது. இங்கே நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகள் கல்வி
கற்கின்றார்கள். அனுபவம் மிக்க ஆசிரியர்கள் தொண்டாற்றி
சமூகப்பணி செய்வது பாராட்டப்பட வேண்டியது.
2.
நாயன்மார்களின்
தேவாரங்களை மாணவர்கள், பெரியோர்கள் பண்ணுடன் பாடத் தகுந்த
ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பது. பிரதி வெள்ளிக்கிழமை
தோறும் முருகன் கோயிலில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில்
இளம் மாணவர்களைப் பங்கேற்க ஊக்குவிப்பது.
3.
சைவப்பாடசாலைகளின் மாணவர்களை ஊக்குவிப்பதன் நோக்கமாக கொண்டு
வருடந்தோறும் தேர்வுகளை நடாத்திப் பரிசில்கள் வழங்குவது.
4. நாயன்மார்கள்
குருபூசைகளைத் தவறாது நடாத்தி அவர்களின் தொண்டினையும், செய்த
அற்புதங்களையும் பேச்சுக்கள், நாடகங்கள், பாடல்கள் மூலம்
மாணவர்களுக்கு அறியச் செய்வது.
5. அரசாங்க ஆரம்ப
பாடசாலைகளில் வாரந்தோறும் நடைபெறும் இந்துசமய வகுப்பை
நடாத்தும் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு உதவுவது. 6. சைவ
இளைஞர்களிடையே தியானம், உபநிடதங்கள் பற்றிய அறிவை வளர்ப்பது.
7. இளைஞர் வட்டம்
மூலம் சைவ இளைஞர்களை கோயில் திருப்பணி, திருவிழாக்கள்,
சமூகபணியில் ஈடுபடச் செய்வது.
8.
பெரியோர்களுக்கு சைவசித்தாந்த வகுப்புகளை நடாத்துவது.
9. கோயில்
சிவாச்சாரியார்களைக் கொண்டு பிரதி செவ்வாய்க்கிழமை,
வெள்ளிக்கிழமைகள் தோறும் கோயிலில் சமய விளக்கம் அளிப்பது.
10. உள்நாட்டு,
வெளிநாட்டுப் பேச்சாரளர்கள் மூலம் சைவசமய பேச்சுத் தொடர்களை
நடாத்துவது.
11. சைவசமய
சம்பந்தமான நூல்களைக் கொண்ட ஒரு நூல்நிலையத்தை அமைத்து அதை
இளைஞர் வட்டம் துணை கொண்டு நடாத்துவது.
12. பிறமதத்தைச்
சார்ந்த மாணவர்களிடையே சைவசமயம், கோயில் வழிபாடு ஆகியவற்றை
விளங்க வைப்பது.
13. சிட்னி
முருகன் என்ற செய்தி மடல் மூலம் சைவசமய விளக்கத்தை வளங்குவது.
சைவமன்றம்
நடாத்தும் கல்விப்பணி பூரணமாகத் தொண்டர்களினாலேயே
நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை
நடைமுறைப்படுத்த தன்னலம் கருதாது உதவுபவர்கள் சேவை
பாராட்டுக்குரியது. பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள்
எல்லோரினது ஒத்துழைப்பும் இருப்பதினால் சைவமன்றத்தின்
கல்விப்பணி பல வருடங்களாகத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று
வருகின்றது. கடந்த இரு வருடங்களாக சைவ மாணவர்கள் தொகை
அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. சைவப் பாடசாலை
மாணவர்கள் பலர் தமிழ்ப் பாடசாலைகளிலும் கல்வி கற்பதால் தமிழில்
எழுத, வாசிக்க ஓரளவு அறிவு பெற்றுள்ளமை சைவக்கல்வியைத் தமிழ்
மூலம் வழங்க ஆசிரியர்களுக்கு உதவியாகவுள்ளது.
5.3
சிட்னியில் சைவக்கல்வியின் எதிர்காலம்
பெற்றோர்கள் பலர்
சைவசமயத்தை தமது பிள்ளைகளும் அறிந்திருக்க வேண்டும் என்ற
ஆர்வம் கொண்டிருக்கின்றனர். ஆனாலும், சிலர் சைவசமயம் தமிழ்
மொழி மூலம் கற்பிப்பதை தடையாகவே கருதுகின்றனர். அத்துடன் நாம்
சைவர்கள் என்ற பூரண உணர்வு நமது பெற்றோர், பிள்ளைகளிடமிருந்து
குறைந்து வருவதைக் காண முடிகின்றதாகக் கருதுபவர்களும் உண்டு.
இதற்குக் காரணம் சைவர்கள் பலர் பாகுபாடின்றி பெருமாள்,
துர்க்கா, ஐயப்பன், குரு வழிபாடுகளில் தம்மை ஈடுபடுத்திக்
கொள்கின்றனர்.
அத்துடன் வேதாந்த
சிந்தனைகளை ஆங்கிலம் மூலம் அறிந்து சைவ சித்தாந்த விளக்கம்
அற்றுள்ளார்கள் என்ற குறைபாடும் சைவசமயிகள் சிலரிடம் உள்ளது.
நாம் எல்லோரும் இந்துக்கள் என்ற அடிப்படை உணர்வு சைவர்கள்
பலரிடம் உள்ளது. இறை நம்பிக்கையே, மனித உணர்வினை வளர்க்கும்
அறிவு வாழ்வே முக்கியம். சிட்னி வாழ் சைவர்களில் பலர்
சித்தாந்ததோ, வேதாந்தமே சிறந்தது என்னும் ஆராய்ச்சிக்கு இறை
வாழ்வு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து செயற்பட்டு தத்தம்
வாழ்வை மேம்படுத்தி நல்ல மனிதனாக வாழவே ஆசைப்படுகின்றனர்.
மற்றும் சிலர் முடிந்தவரை சமய வாழ்வைக் கடைப்பிடிக்க
விரும்புகின்றனர். சமய வாழ்வு வயது போனவர்களுக்கே என்று
நினைப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர்.
சில சைவத்தமிழ்ப்
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சாயிபாபா நிறுவனங்கள்
நடாத்தும் பாலர் வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். அங்கே மனித
மேம்பாட்டுக் கல்வி ஆங்கிலத்தில் நடாத்தப்படுவதால் பிள்ளைகளும்
மிகுந்த விருப்பத்துடன் தவறாது கலந்து கொள்கிறார்கள்.
சாயிபாபாவை குருவாக ஏற்காத பெற்றோர்கள் பலர் கூட, வாழ்க்கை
வளம் பெற மனித மேம்பாட்டுக் கல்வி தமது பிள்ளைகளுக்கு உதவும்
என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
6. நிறைவு
சைவசமய
வளர்ச்சிக்கு கோயில் வழிபாடு வேண்டும் என்ற முக்கியத்தை
உணர்ந்த சைவர்கள் பெருவாரியாக எல்லா நாடுகளிலும், நகரங்களிலும்
சைவக் கோயில்களைக் கட்டிப் பராமரித்து வருகின்றார்கள். எல்லாக்
கோயில்களின் நிர்வாகக் குழுக்களும் சைவசமயக் கல்வியை
முக்கியமான பணியாகக் கருதுவதில்லை. இது மிகவும்
கவலைக்குரியதொன்றாகும்.
சிட்னியில்
சைவசமயத்தை காத்து, வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு
அமைக்கப்பட்டதே சைவமன்றமாகும். இந்தப் பெரிய பொறுப்பினை
சைவமன்றம் அழகுறு சிட்னி முருகன் கோயிலை அமைத்து சைவசமய
வழிபாட்டை சிட்னியில் நிரந்தரமாக நிலைநிறுத்தியுள்ளனர்.
இத்துடன் சைவசமய வளர்ச்சிக்காக சைவப் பாடசாலைகளை நடாத்தி
வருகின்றது. சைவசமய விளக்கம் கோயில்களில் சிவாச்சாரியர்களால்
வளங்கப்படுகின்றது. இளைஞர்களும் சமய அறிவு பெற்று வருகின்றனர்.
சைவமன்றம் சமய நூல்களைத் திரட்டி ஒரு நூல் நிலையத்தை
நடாத்துவாதல் பலரும் நன்மை பெறுகின்றனர். அப்படியான
நடவடிக்கைகளால் சிட்னியில் சைவக்கல்வி வளர்ந்து வருவதாகவே கருத
இடமுண்டு. 2006இல் பத்தாவது உலக சைவமகாநாட்டை சிட்னியில்
சைவமன்றம் நடாத்தவுள்ளது. அதனால் சிட்னி வாழ் சைவர்கள்
பயனடைவார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம்.
இப்படியான பல
நடவடிக்கைகளை சைவமன்றம் எடுத்தாலும் சைவசமய அறிவினைப் பெருக்க
முயலும் சிட்னிவாழ் சைவர்கள் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது.
சைவசமய அறிவினை சிட்னிவாழ் சைவர்களிடம் பரப்ப கீழ்க்கண்ட
வழிமுறைகளை நாம் செயற்படுத்தலாம். இவற்றை மற்றவர்களும்
கடைப்பிடிக்கலாம் என்று கருதுகிறேன்.
1. சைவக்கல்வி
நிலையம்
(Center for Saiva Education) ஒன்றினை
சைவமன்றத்தின் உறுதுணையுடன் நிறுவுதல் அவசியம். அதன் தலைவராக
தகுதி வாய்ந்த பொறுப்பாளரையும், உறுப்பினர்களையும் நியமித்தல்
வேண்டும். காப்பாளரான சைவமன்றம் கடமையாற்றி இந்நிலையத்துக்குத்
தேவையான பொருளாதார உதவிகளைச் செய்து, சைவக்கல்வியையும்,
கலாச்சாரத்தையும் அவுஸ்திரேலியா முழுவதும் மேம்படுத்தப்
பாடுபடவேண்டும். சைவமன்ற நிர்வாகத்துக்கு கல்வி, கலாச்சார
பொறுப்புகள் இதனால் குறைக்கப்படும். அவர்கள் கோயில் வழிபாடு,
சமூகப்பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்தலாம்.
2. சிறுவர்கள்,
பெரியோர்கள் நன்மை கருதி சைவசமய வகுப்புகளை ஆங்கிலத்திலும்
நடாத்துதல் வேண்டும். ஆங்கில மூலம் சைவசமயக் கல்வி தமிழ்
தெரியாத சைவப்பிள்ளைகளுக்கும், மற்றைய சமயத்தாருக்கும்
பயனளிக்க வாய்ப்புண்டு எனலாம்.
3. கோயில்
வழிபாட்டின் விளக்கங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வளங்க
நிரந்தரமாக உத்தியோகத்தரை நியமித்தல் வேண்டும்.
சிவாச்சாரியார்கள் உதவியுடன் அவர் செயற்பட வேண்டும்.
4. கோயில்
நிகழ்ச்சிகள், தேவார பாராயணம், கூட்டுப்பிரார்த்தனை, சைவசமயப்
பேச்சுக்கள், சைவசமய விளக்கம் ஆகியவற்றை ஒலிபரப்ப கோயில்
நிர்வாகம் ஒரு வானெலி நிலையத்தை நடாத்துதல் வேண்டும். அத்துடன்
எல்லா நிகழ்ச்சிகளையும் சிட்னியிலுள்ள தமிழ் வானொலிகளும்
ஒலிபரப்ப வழி செய்தல் வேண்டும்.
5.
தென்னாபிரிக்கா, பிஜி, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய
நாடுகளிலிருந்து சிட்னியில் குடியேறிய தமிழ் பேச, எழுதத்
தெரியாத சைவர்களின் வழிபாட்டு முறைகளை மதித்து அவர்கள்
தேவைகளையும் கருத்திற் கொண்டு சிட்னியிலுள்ள சைவக்கோயில்கள்
நடைபெற வேண்டும். |