Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி 1 (1-133) > பகுதி 2 (செய்யுள் 134-256) > பகுதி 3 (செய்யுள் 722-834) > பகுதி 4 (செய்யுள் (276 -388) > பகுதி 5  (செய்யுள் 389 -497) > பகுதி 6  (செய்யுள் 498 -609) > பகுதி 7 (செய்யுள் 610 -721) > பகுதி 8 ( செய்யுள் 835-946) > பகுதி 9 (செய்யுள் 947 -1048) > பகுதி 10 (1049) > பகுதி 11 (1050-1151) > பகுதி 12 (1705 - 1706) > பகுதி 13 (1152 - 1705) >  பகுதி 14 (2027-2128) >  பகுதி 15 (1709 - 1810)

திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048)
வாட்போக்கிக்கலம்பகம்

tiricirapuram makAvitvAn2 mInATci cuntaram piLLaiyin2
pirapantat tiraTTu - part 9 (verses 947 -1048)
vAtpOkkik kalampakam


Acknowledgements:

Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the 1902 edition of the pirapantat tiraTTu, thus enabling the production of the etext. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-Reading approach (DPPM) and following persons helped in the preparation and proof-reading of the etext:  V. Bavaharan S. Karthikeyan, Kumar Mallikarjunan, M.K. Saravanan, Vijayalakshmi Periapoilan, Venkataraman Sriram, Vassan, S. Anbumani, Govindan, S.Karthikeyan and Kumar Mallikarjunan. DPPM server management and post-processing of etext: Drs. S. Anbumani and Kumar Mallikarjunan. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

� Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


* இத்தலம், ரத்நகிரியெனவும், சிவாயமெனவும் இக்காலத்து வழங்கும்.
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.

பாயிரம்
காப்பு.
விநாயகர்
947 கட்டளைக் கலித்துறை.
முக்க ணொருத்தன்மற் றென்னுள வாரி முயங்குதலான்
மிக்கவெண் கோடொன்று மேசிதை யாநிற்கும் வெள்ளறிவை
யுக்க கருமத மேகரு மாசை யொழிக்குமருள்
புக்கசெம் மேனி மனஞ்செம்மை யாகப் புணர்த்திடுமே.
(1)

சமயாசிரியர் துதி.
948 கட்டளைக் கலித்துறை.
சொல்லார் புவியி னெடுமறை யாதித் தொகையுணர்ந்த
வல்லார் மலமொன் றறுமே யடித்தொண்டு வாய்ந்தொளிரு
நல்லா ரிணக்கத்தி னென்பா ரதுநிற்க நால்வரையு
மெல்லா மலமு மறக்கூடு வேனின் பெளிதுறுமே.
(2)
நூல்.
949 ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா.
மாமேவு செங்கமல மலருறையுந் திருமகளும்
பூமேவு வெண்கமலப் பொகுட்டுறையுங் கலைமகளும்
பிரியாமே யெஞ்ஞான்றும் பெருநட்புக் கொண்டுறையச்
சரியாமே புகழோங்கத் தழைந்துவளர் சோணாட்டில்
வரைக்கருஞ்சந் தனக்குறடு மால்யானைக் கோடுகளுந்
திரைக்கரத்தி னெடுத்தெறியுஞ் செழும்பொன்னி நதித்தென்பாற்
றனியவிரும் வாட்போக்கித் தடங்கிரிமேற் பேரருளா
லினியகரும் பார்குழலோ டியைந்துறையு மருமருந்தே! (1)

சமயாசிரியர் துதி - கட்டளைக் கலித்துறை.
குப்பாயங் கொடுப்பவனோ கொழுங்கண்மல ரிடுபவனோ
செப்பாய முலையுமையாய்த் திகழ்ந்திடப்பா லுறைபவனோ
வெருவாழி கொள்பவனோ விரலாழி கொடுப்பவனோ
மருவாழி யென்றுரைக்கு மடைப்பள்ளி காப்பவனோ
கையம்பா யெழுபவனோ கருமுகிலாய்ச் சுமப்பவனோ
வையம்பாய் வெள்விடையாய் வண்கொடியா யுறுபவனோ
தேராவோர் மனையாளைச் சேர்ப்பவனோ நெடுமாலென்
றோராவோர் புலவரெலா முவந்தேத்தப் பொலிவோய்கேள்! (2)
      (இவை இரண்டும் எட்டடித்தரவு.)

1. அடித்தழும்பு புறத்திருக்க வாரியர்கோ மகன்கொடுத்த
முடித்தழும்புங் கொண்டனைவெம் முலைத்தழும்பிற் சீரியதோ!
2. அருகாக முப்புவன மடங்கவெரித் தருளுநினக்
கொருகாக மெரித்தனையென் றுரைப்பதுமோர் புகழாமோ!
3. சீரியர்கைப் புனல்கொல்லோ திருந்துமைகைப் புனன்முடிமே
லாரியர்கைப் புனல்கொள்வா யடங்கநனைத் திடுங்கொல்லோ!
4. தருநிதிக்கோ விருக்கவொரு சார்வணிக ரொடுகலந்தாய்
பெருநிதிக்கோ வெனிற்பெருமான் பேராசை பெரிதன்றே !
5. தொடிமுழங்க மணியொலித்துத் துணைவிபுரி பூசைகோலோ
விடிமுழங்கப் புரிபூசை யெஞ்ஞான்று மினிதுவப்பாய் !
6. உனையடைந்தார் பயமகன்றின் புறுவரெனற் கணியுரகங்
கனையடைந்த விடிநோக்கி களித்துறைதல் கரியன்றே!
      (இவை ஆறும் தாழிசை.)

1. அவனவ ளதுவென வறைதரு வகைமையு
ளிவனிவ ளிதுவென வியைதர லருமையை;
2. அருவமு முருவமு மருவமொ டுருவமு
மொருவற வுளையெனி னிலையென வொளிருவை;
3. இதுவலை யதுவலை யுதுவலை யெதுவென
முதுமறை கதறவு மதன்முடி மருவுவை;
4. இருளென நிலவென வெழுதரு கதிரென
வருளுயி ருறுதர மணிதர நிலவுவை.
      (இவை நான்கும் அராகம்.)

1. அருநாம மெனச்சொலுநின் னாயிரநா மத்துளொரு
திருநாமங் கூற்றடுநின் றிருவடிதாக் குதன்மிகையே!
2. பிரமநீ யெனவழுதி பிரம்படியே யுணர்த்தியது
சிரமம்வே தாகமங்கள் செப்புதனின் றிருவாய்க்கே!
3. உள்வாரு ளொருவரே யொருகோடிக் கமைந்துறவுங்
கள்வாரே வுடைக்கோவைக் காயவிழி மலர்த்தியதென்!
4. கண்டவிட நித்தியத்தைக் காட்டவுங்கங் காளமுத
லண்டவிடந் தரவைத்தா யம்புயஞ்செய் குற்றாமெவன்!
5. ஒருங்கருவி வரை நிகர்சோ வொருங்கெரிக்கு நகையிருக்கப்
பெருங்கருவி பலகொண்டாய் பித்தனெனல் விளக்கினையோ!
6. ஓரெழுத்துக் குரியபொரு ளொருநெடுமா லயனென்பார்
நீரெழுத்து நிகர்மொழிநின் னிலவிதழி முன்னெவனாம்!
      (இவை ஆறும் பெயர்த்தும் வந்தாழிசை)

1. துருவொரு தயையினைந் தொழிலி யற்றியு
மருவொரு தொழிலுமில் லாத மாட்சியை;
2. பெண்ணொரு பாலுறு பெற்றி மேவியு
மெண்ணொரு விகாரமு மிலாத காட்சியை.
      (இவை இரண்டும் நாற்சீரடியம் போதரங்கம்.)

1. உள்ளொளி யாகிந்ன் றுணர்த்துந் தன்மையை;
2. வெள்ளொளி விடைமிசை விளங்கு நன்மையை;
3. அம்புல நடுப்புகுந் தாடுங் கூத்தினை;
4. நம்பல மெனப்பலர் நவிலுஞ் சோத்தினை.
      (இவை நான்கும் நாற்சீரடியம் போதரங்கம்.)

1. சடைநெடு முடியமர் செல்லினை;
2. தவமுயல் பவர்வினை கல்லினை;
3. கடையரு வடவரை வில்லினை;
4. கவினுற நெடுமறை சொல்லினை;
5. மிடைவலி யினர்தரு பல்லினை;
6. விசயனொ டெதிர்பொரு மல்லினை;
7. அடைதரு மிடையதள் புல்லினை;
8. அளவிட லரியதொ ரெல்லினை;
      (இவை எட்டும் ழச்சீரோரடியம் போதரங்கம்.)

1. அருள் கொடுத்தனை;
2. இருள் கொடுத்தனை;
3. ஆல மாந்தினை;
4. சூல மேந்தினை;
5. இசைவி ரித்தனை;
6. வசையி ரித்தனை;
7. எங்கு நீடினை;
8. சங்கு சூடினை;
9. மதிய ணிந்தனை;
10. கொதித ணிந்தனை;
11. மழுவ லத்தினை;
12. தொழுந லத்தினை;
13. பொருவி றந்தனை;
14. கருவ றந்தனை;
15. பொய்யி னீங்கினை;
16. மெய்யி னோங்கினை.
      (இவை பதினாறும் இருசீரோரடியம்போதரங்கம்.)

எனவாங்கு,
      (இது தனிச்சொல்.)

பசித்தழூஉ ஞானப் பாலுண் மழவு
மேற்றொடு சூல மேற்றதோ ளரசு
மவிர்தரு செம்பொ னாற்றிடை யிட்டுக்
குளத்தி லெடுத்துக் கொண்ட கோவுங்
கனவிலு மமரர் காணரு நின்னைப்       (5)
பரிமா மிசைவரப் பண்ணிய முதலுங்
கரைதரு தமிழ்க்குக் காணி கொடுத்த
நின்றிருச் செவிக்க ணெறிகுறித் தறியாப்
பொல்லாப் புலைத்தொழிற் கல்லாச் சிறியே
னெவ்வகைப் பற்று மிரித்தவர்க் கன்றி       (10)
மற்றையர்க் கொல்லா வயங்கருள் பெறுவான்
கொடுவிட மமுதாக் கொண்டதை யுணர்ந்து
குற்றமுங் குணமாக் கொள்வையென் றெண்ணிப்
புன்மொழித் துதிசில புகட்டின
னன்மொழி யெனினு மருளுதி விரைந்தே.       (15)
      (இதுபதினைந்தடி நேரிசையாசிரியச்சுரிதகம்.)
(1)
950 நேரிசை வெண்பா.
விரைகமழ்பூங் கொன்றைமுடி வேய்ந்துவாட் போக்கி
வரைகமழ வீற்றிருக்கும் வள்ள - லுரைகமழ்பொற்
பாத கமலம் படுமுடியார்க் கப்பொழுதே
பாத கமலம் படும்.
(2)
951 கட்டளைக்கலித்துறை.
படர்பா தலம்பொற் கனத்தக டாமப் பசுந்தகட்டு
ளடர்பாய் புவிமென் னிறத்தக டாமதன் மேலழுத்துந்
தொடர்பாய செம்மணி வாட்போக்கி வெற்பதிற் றோன்றுசுட
ரிடர்பா ரகம்விண் ணகமோவ வாங்குறை யெம்மிறையே.
(3)
952 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
இறைவர்திரு வாட்போக்கி யுறைபவர்தா மாடுபுன லிரும்பார் வீழ்ந்து,
துறைகொளமுன் கவிழ்த்தவொரு காகத்தை முனியாராய்த் தூய தீம்பா,
லறைபடரக் கவிழ்த்தவொரு காகத்தை முனிந்தனர்பா லவாவா லென்னி,
னுறைசெறிபா லாழியிற்றீ வாய்க்கணையைக் கிடத்தினர்க்க� துண்டா மன்றே.
(4)
953 அறுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்..
அன்று வருவிட மென்று கருதவ ழன்று மதியெழும்வே
யொன்று மொருவரை நின்று வளியுமு ழன்று வருமயிலே
மன்று மரதந குன்று முறைவரென் வன்று யரமறியா
ரென்று கரையல்கை கன்று பெறவரு ளின்று புரிகுவரே. (5)
(5)
954 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
புரித ருஞ்சடை தரித்தும்வின் மதனனைப் பொடித்துமென்
பூங்காவி, விரித ருந்துகி லுடுத்தியு நீர்பொலி வேடமோர்ந் திலடேவி,
யரிய வெம்முலைச் சுவடுமாத் திரமுணர்ந் தாசையுற் றனளந்தோ,
தெரிவின் மற்றிவள் பேதமைக் கென்செய்கோ திருமுடித் தழும்பீரே.
(6)
955 நேரிசைவெண்பா..
தழுவுமையான் முன்னுந் தமிழிறையாற் பின்னுந்
தொழுமிறையான் மேலுஞ் சுவடு - கெழுமுவகீ
ழின்றா லெனுங்குறைபோ மென்மனஞ்சேர் வாட்போக்கி
யன்றா லமர்ந்தா யடி.
(7)
956 கட்டளைக்கலித்துறை.
அடியுற்ற பாதலம் பொற்றேர் செறிக்குமஞ் சாலையொளிர்
கடியுற்ற செம்மணிப் பூண்வைத் திடுங்கரு வூலமுண்ணும்
படியுற் றதுவிளை நன்னில மென்பர் பசுந்தழும்பு
முடியுற் றவர்திரு வாட்போக்கி மேய முதல்வருக்கே.
(8)
957 புயவகுப்பு. - ஆசிரியச்சந்தவிருத்தம்
முதுமறையுணர்ந்து கவுணியர்முனன்பர்
மொழிதமிழலங்கன் முற்றப்புனைந்தன
முழுதுலகுமஞ்சி யதிர்தரவெழுந்த
முரணரமடங்கல் செற்றுப்பொலிந்தன
முகிழ்நகையணங்கு மலையரையன்மங்கை
முலையெதிருடன்று முட்டக்குழைந்தன
முடிமதிபொழிந்த நிலவெனவிளைந்து
முதிர்பொடி திமிர்ந்து பொற்புற்றிருந்தன

பதுமமலர்தங்கு மறையவர்முகுந்தர்
படுதலையெலும்பு கட்டிச்சுமந்தன.
பயின்மகமடைந்த கதிரவரொழுங்கு
படுமெயிறுசிந்த மொத்தித்திகழ்ந்தன
படவரவினங்கள் பலபலவளைந்து
பணியெனவிளங்க வொப்பிப்புனைந்தன
பனியிமயமங்குல் பொதிவதெனவும்பல்
படுமுரிவையொன்ற விட்டுச்சிறந்தன

மதுமடையுடைந்து வழியமுகைவிண்ட
மணமருவுகொன்றை பெற்றுக்கமழ்ந்தன
மகிதலநடுங்க வடவரைபிடுங்கி
வரையினும்வணங்கி நிற்கப்புரிந்தன
மழலையமுதின்சொ லிளமகவுநின்று
மலரடிநடஞ்செய் பெட்புக்கிசைந்தன
மணிவலயம்விண்டு சிதறவிசயன்செய்
மலியமரெதிர்ந்து மற்கட்டிநின்றன

வதுவிதெனநெஞ்ச மலைதலறவொன்றி
யடைபவர்மலங்க ளட்டுக்களைந்தன
வகிலபகிரண்ட நிலைகெடவெழுந்த
வவிர்சிகரவிந்த மொப்பற்றெழுந்தன
வழகுகுடிகொண்டு புழுகுமலிசந்த
மணிபுதிசையஞ்சி யெட்டப்பரந்தன
வரதநவிலங்கன் முடியமர்தழும்ப
ரரசமையிலிங்கர் வெற்றிப்புயங்களே.
(9)
958 நேரிசைவெண்பா.
புயறவழ நின்றவாட் போக்கியர னார்மேன்
மயறவழ நின்ற மகளே - யயறவழ
நாணோ கலையோ நகுவளையோ மற்றுள்ள
பூணோ கொடுத்தல் புகல்.
(10)
959 கட்டளைக்கலித்துறை.
புகலரும் வள்ள றிருமுடி காணப் புகுந்திளைத்தா
யகலரு மாரியர் கோன்வந் ததுகண் டறிகுறிவைத்
திகலருந் தாளுங்கண் டின்பமுற் றானி� தெண்ணுமிடத்
துகலருஞ் சீர்நும் மிருவருள் யார துரைவிதியே.
(11)
960 தவம்.
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

உரைதருகா லுண்டுகாலில்லையென நடையொழிவீ ரோங்கு கான
வரைதருவெங் குகையிருளிற் புக்கிருள்போக் கிடமுயல்வீர் வையத் தீரே
விரைதருகற் பகநாறு மிளிர்சிகர வாட்போக்கி வெற்பு மேவி
யிரைதருவான் புனற்கங்கை முடியவரைப் போற்றினுமக் கெம்மாசுண்டே.
(12)
961 அம்மானை.
இடைமடக்காய் ஈற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை.

எம்மா தவரு மிறைஞ்சுஞ் சடாடவியார்
செம்மா மணிவான் சிலம்பர்கா ணம்மானை
செம்மா மணிவான் சிலம்பரெனி னாய்கர்பொரு
ளம்மா விரும்புவர்நா ணற்றவரோ வம்மானை
யாசை யுடையார்நா ணரியரே யம்மானை.
(13)
962 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
மான்கொண்ட கரதலத்தீர் மதுரைபுகுந் தென்செய்தீர் வளையல் விற்றீ
ரூன்கொண்ட வுயிர்வசைமே வுறிற்போற்றா வணிகர்குழாத் தொருவ ரென்பீர்.
தேன்கொண்ட தெனப்பொருட்பா கமுங்கொள்வீ ரின்னுமவர் தெரியா ரோர்ந்து
கூன்கொண்ட மதிமுடியீ ரென்னெனின்முன் னெனினதுவுங் குறைவு தானே.
(14)
963 எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
குறையின்மா ணிக்கமலை வெள்ளிமலை நாளுங்
      குலவுசோற் றுத்துறைபாற் றுறைநெய்த்தா னமுநீ
ருறையில்கரச் சிலையம்பொன் வரைநெடுமான் முதலோர்க்
      குறுபோகங் கொடுப்பதுநுந் திரிவருள்பா லுறைவாள்
கறையிலறம் பலவளர்ப்பா ளொருதோழ னிதிக்கோன்
      கரையில்பொருட் பங்களிப்பார் கனவணிக ருளர்நீர்
முறையிலெலும் பாதியணிந் தையமேற் றுழல்வீர்
      முடித்தழும்பீ ரிதுதகுமோ மொழிமினடி யேற்கே.
(15)
964 கட்டளைக்கலித்துறை.
அடிபடு மால்விழி வாட்போக்கி நாத ரவிர்தழும்பு
முடிபடு நீர்கொள் குடந்தோறு மேவ முயன்றுதவம்
படிபடு மாறெவன் செய்தீர்முன் னொன்று பகைத்துடம்பு
பொடிபடு மாறுவிட் டீர்நன்று காண்கரும் புட்சங்கமே.
(16)
965 மடக்கு.- கட்டளைக்கலிப்பா.
சங்க வாய்முன மாய்ந்தது கூற்றமே
      தாளெ டாமுன மாய்ந்தது கூற்றமே
யங்க மாலிகை செய்யவங் கொன்றையே
      யளித்தல் பேரன்பு செய்யவங் கொன்றையே
செங்கண் மால்விழி யாரர விந்தமே
      திருமு டிக்கணி யாரர விந்தமே
பொங்கு போர்வை தருமணி நாகமே
      புக்கி லும்பைந் தருமணி நாகமே.
(17)
966 எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
நாகமே யணிகலமாக் கொண்டவாட் போக்கி
      நாதருக்கென் னுளதுமணி மலையொன்றுண் டென்று
மோகமே கொண்டனையம் மலையுமவர்க் கெங்ஙன்
      முழுதுமா முள்ளதுபன் னிருபாகத் தினிலோர்
பாகமே யதுபோது மெனிற்றிருமே னியிலோர்
      பாதியா ளுமைமற்றைப் பாதியுள தென்னின்
மேகமே நிகர்மேனி மாலுளன்மற் றதறகும்
      வெறுவெளியே யிவர்க்குளது மெய்ம்மையிது மகளே.
(18)
967 நேரிசைவெண்பா.
மகளேமால் கொண்டதெவன் வாட்போக்கி யார்க்குத்
துகளேயா நீறுவிரை தோற்றென் - புகளேறு
நாகம்பூ ணஞ்சா நகுபுலித்தோ லாடைமுடி
யேகம்பூ ணஞ்சா மெனின்.
(19)
968 மதங்கு. - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
எனக்கரிய வண்டரெனாக் கனக்கரிய கண்டருறை யெழில்
வாட்போக்கி, மனக்கரிய வளம்பாடி மணிமறுகி னின்றாடு மதங்கி
யாரே, சினக்கரிய நுங்கள்விழி வாளிரண்டு மேயுயிருஞ் சேரப் போழுங்,
கனக்கரிய வாளிரண்டு கைக்கொடுவீ சுவீரிலக்குக் கருதின் யாதே.
(20)

969 கட்டளைக்கலித்துறை.
கருப்பங் கழனி வளைமா மணிவரைக் கண்ணுதறாள்
விருப்பங் கழனி தமாலயற் போற்றென்று வேண்டினுமெம்
முருப்பங் கழனி கழப்புரிந் தானு முறுத்தமனந்
திருப்பங் கழனி கருந்தளிர் பூவையுஞ் சிந்திப்பமே.
(21)

970 மடக்கு.- எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
மேதக வுரியாரும் போதக வுரியாரும்
      விண்ணம் பணிவாருந் தண்ணம் பணிவாரு
மாதர மொழிவாருங் காதர மொழிவாரு
      மமலையம் பதியாருங் கமலையம் பதியாரும்
பூதர வளைவாருங் காதர வளைவாரும்
      பூதம் படையாரு மேதம் படையாரு
மாதல மிசையாருங் கோதல மிசையாரும்
      வரதன வெற்பாரு மாதன வெற்பாரே.
(22)

971 வ ண் டு வி டு தூ து. - கொச்சகக்கலிப்பா.
பாராய்வாட் போக்கிப் பரமனா ரெண்காற்புள்
வாரா யறுகாற்புள் வண்டேநீ யாதலினா
லோராய் பயந்தபமுன் னுற்றவிரு காற்புளலை
சேரா யவர்பாலென் சிந்தைமய லோதுதற்கே.
(23)

972 மடக்கு.- எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஓதுமறை யாருமருள் யாதுமறை யாரு
      முரிவையுடை யாருமழு வெரிவையுடை யாருந்*
தீதுபதி யாருமுல கோதுபதி யாருஞ்
      செல்வமுடி யாருநறு வில்வமுடி யாருங்
கோதுபுரி யாரும்வெளி மீதுபுரி யாருங்
      கோலமறி யாருமுயர் சீலமறி யாருங்
காதரவு ளாருமிய லாதாவு ளாருங்
      கனவமலை யாருமா தனவமலை யாரே.
(24)

973 மேகவிடு தூது. -- கட்டளைக்கலித்துறை.
மலையா னிலத்து வருவேள் சினக்குமுன் மாமுகில்கா
டலையா னிலத்து வணங்குவல் சென்னித் தழும்பாங்க
மலையா னிலத்து விதயோகர் முன்வரு வார??ணிம
தலையா னிலத்து மகிழ்ந்திருந் தேற்கத் தருதிரின்றே. )
(25)

974 வண்டுவிடு தூது. -- தாழிசை.
இன்று பைங்கிளியை யேவி னம்வைகை??? யிருக்கு மோர்கிளியொ டுரைசெயு
      மெகின நேடியறி யாத தேமுடிமு னெங்ங னின்றுசெவி யருகுறு
மொன்று மங்குலரு குறின்வ ளைத்திவையொ டுறுதி யென்றுசடை சிறைசெயு
      முறுக ருங்குயிலொர் செவிலி பட்டதை யுணர்ந்த தேசெலவு ளஞ்சிடுந்
துன்று தென்றலெதிர் சென்றி டிற்கடிது தோள்கொள் பூணிரையெ னக்கொளுந்
      துச்சி லல்லவென வண்டு வாழ்செவி துனைந்து சேரும்வலி யார்க்குள
தன்று தொட்டெனது கொண்டை வாழும்வரி வண்டிர் காண்மய லடங்கவு
      மரத னாசல ரிடத்து ரைத்தவ ரணிந்த மாலைகொணர் மின்களே.
(26)

975 காலம். மடக்கு. - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
மின்னுமற லுறவருந்திக் குயினடுக்குங் காலம்
      விடாதுமற லுறவருந்திக் குயினடுக்குங் காலம
மன்னுபசுந் தோகைபரி விற்குனிக்குங் கால
      மதவேணந் தோகைபரி விற்குனிக்குங் காலந்
துன்னுகொடித் தளவமரும் பப்படருங் காலந்
      தோயார்பித் தளவமரும் பப்படருங் கால
முன்னுவெயில் வெம்மையுறப் புணராத கால
      முடித்தழும்பர் வெம்மையுறப் புணராத காலம். (27)
(27)

976 கட்டளைக்கலித்துறை.
காலங் கழியு மவமே நமன்றமர் கைக்கொளுங்கான்
மாலங் கழியும் வகையுள தோமல மாயவெனைச்
சீலங் கழியும் பருந்தாழ்நி னன்பரிற் சேர்த்தலனு
கூலங் கழியுந்தி வைப்பேத் தரதன குன்றத்தனே.
(28)

977 சி லே டை. -- நே ரி சை வெ ண் பா.
குன்றாத வேங்கையுமொண் கொம்புபடு வேங்கையுமெய்
பொன்றா தெனப்பொலிவாட் போக்கியே - நன்றாவோர்
மின்னைப் புரப்பான் மிளிர்தரவைத் தானருள்வைத்
தென்னைப் புரப்பா னிடம்.
(29)

978 கட்டளைக்கலித்துறை.
இடம்படு மாணிக்க மாமலை மேவு மிறையவரே
திடம்படு கூற்றடு நீரேயெல் லாம்வல்ல சித்தரெனி
னடம்படு தாமரை யென்னுளப் பாறை நடுமலர்த்த
வுடம்படு வீர்மறுத் தாற்சில வல்லரென் றோதுவனே.
(30)

979 குறம். - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஓதுவனப் பன்றிமருப் பொசித்தமலைக் குறவற்
      குவந்தொருபெண் கொடுத்தகுடி யுதித்தகுற மகள்யான்
போதுறையு மோரிருவர் முத்தலைநாற் றலையார்ப்
      புணர்குறிசொற் றனன்முன்??நின் பொலிமலர்க்கைக் குறியம்
மாதர்கரக் குறிபலவுங் கடந்துமே லாய
      வாட்குறியாய் மருவுதலின் மறைமுத லாகமங்கூ
றாதரநற் குறிபலவுங் கடந்துவாட் குறிமே
      லலங்கவொளி ரைந்தலையாற் புணர்குவையின் றறியே.
(31)

980 த வ ம். - நே ரி சை வெ ண் பா.
அறியா தவமே யடைந்தடவி நோற்ற
னெறியா தவமே நினைமின் - முறியார
நண்ணமா ணிக்கமலை நாத ரளித்தமரும்
வண்ணமா ணிக்க மலை.
(32)

981 தழை - கட்டளைக்கலித்துறை.
மலையா வருட்சிவன் வாட்போக்கி யன்ன மயில்வனப்புக்
குலையா விளந்தளிர் கொண்டுதன் மேனி குளிரவொற்ற
நிலையாக வேற்றுத் தளிர்மேனி யாயொப்பு நீத்துவிற
லுலையா தவகடு வாலாய மேவ வுடன்பட்டதே.
(33)

982 அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
படவா ளரவ மரைக்கசைத்த பாமர் வாழும் வாட்போக்கித்,
தடவாள் வரையென் மனம்போன்ற தனித்தே மனையா ளியனண்ப,
விடவாள் விழிவேள் கழைக்கோடு வில்லே புருவ மெனைத்துயரங்,
கெடவாள் கொங்கை யிபக்கோடு கெட்டேன் மருங்குன் முயற்கோடே.
(ந.ச)
(34)

983 வேற்றொலி வெண்டுறை.
கோடுபொலி வாட்போக்கித் குளிர்வரைமே லஞ்சுரும்பார் குழற்கோ மாது,
மேடுபொலி கடிக்கொன்றை முடிக்கொன்ற வெடுத்தணியு மெங்கோ மானு,
மலிதளிர்ப் புன்னையும் வண்டளிர்ப்பிண்டியுங்
கலிகருங் கொண்டலுங் கவின்றசெங் கொண்டலு
மெலிவில்பைங் குவளையும் விரும்புசெங் கமலமு
மொலிகெழு மிவ்விரண் டோருழைக் கண்டெனப்
பொலிதருந் தன்மையைப் புவியுளீர் பாருமே.
(35)

984 ஒருபொருண்மேன் ழன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை
1. பார்வளர்மா ணிக்கப் பராரை வரைமுடிமே
லார்வளர்செவ் வேணி யமலர் பொலிதோற்றஞ்
சீர்வளர்பொன் மேருவின்மேற் செங்கதிரை யோக்குமே;

2. விண்பொலிமா ணிக்க விசால வரைமுடிமேற்
பண்பொலிநால் வேதப் பாமர் பொலிதோற்ற
மெண்பொலியண் ணாமலைமே லேற்றுசுட ரொக்குமே;

3. தூயமா ணிக்கச் சுடரார் வரைமுடிமே
லாய தழும்புமுடி யையர் பொலிதோற்றஞ்
சேயபவ ளக்கிரிமேற் செம்மணியை யொக்குமே.
(36)

985 நான்கடி வெளிவிருத்தம்.
ஒக்க வனைத்து மாக்கிடு வாரு மொருநீரே
தக்க சிறப்பிற் காத்திடு வாரு மொருநீரே
புக்கவை முற்றப் போக்கிடு வாரு மொருநீரே
மிக்க முடிக்கட் கீற்றுடை யாரு மொருநீரே.
(37)

986 கட்டளைக்கலித்துறை.
நீர்கொண்ட சென்னித் தழும்புடை யீரென்மு னீள்விடைமேல்
வார்கொண்ட கொங்கைச் சுரும்பார் குழலொடும் வந்தருள்வீர்
நார்கொண்ட சிந்தை யிலாதவ னாயினு நாடிநுமைக்
கூர்கொண்ட வாள்கொண்டு வெட்டிடு வானுட் குறித்திலனே
(38)

987 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
குறிபடுபன் மணிவிற்றீர் மாதுலனாய் வழக்குரைத்தீர் கூடன் மேவி
நெறிபடுமற் றவையோரா ராரியநீர்ச் சிறுகுறையு நிரப்பு கென்று
பறிபடுவே ணிப்புனல்வாட் போக்கியீர் பெருங்கணக்குப் பார்த்துநின்றீர்
செறிபடுபல் கிளைவணிகர் நுங்கூட்டுக் கிசைந்தனரச் சிறப்பொன்றோர்ந்தே.
(39)

988 நேரிசைவெண்பா.
ஓராழி மேற்கிடக்கு மோராழிக் கேவிடுக்கும்
போராழி யேந்திப் பொலியுமே - நேராகா
வெம்மா னகத்திருக்கை வீத்தேந்து வாட்போக்கி
யெம்மா னகத்திருக்கை யே.
(40)

989 எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஏறெனவிப் புனத்திலடிக் கடிவருவார் நகர
      மெங்கென்பார் நெடுங்கணக்கு மோர்ந்திலரோ நீரே
பேறெனநும் மிடையுணர்ந்துற் றனமென்பா ரிடையின்
      பெற்றியிவ ருணர்வாரோ கைம்மானோ டியதிவ்
வாறெனநே டுவர்கைம்மா னுடையவாட் போக்கி
      யண்ணலோ முறிகொள்ளு மென்பார்கொள் வீரிக்
கூறெனவிப் புனவேங்கை கொடுக்கவிசைந் தனமோ
      குறித்தவிவர் கருத்துவிரித் துரைக்கரிதா யினதே.
(41)

990 ம ட க் கு.- விருத்தம்.
ஆயு மிதழ்வாய் பானலமே     யகலு மிதழ்வாய் பானலமே
யணவ மருங்கா மனப்புள்ளே     யடவ மருங்கா மனப்புள்ளே
பாயுங் கயலா யினவளையே    பாவிக் கயலா யினவளையே
பவளம் படர வருந்திடரே     பாராய் படர வருந்திடரே
மேயுங் குருகே யமர்கழியே     வினையேற் குருகே யமர்கழியே
விரைந்தம் பரவாய்ப் படர்படவே     வினையோ பரவாய்ப் படர்படவே
வாயு மலராக் கழுநீரே     மாறு மலராக் கழுநீரே
வளமா மலையா ரணையாரே     மணிமா மலையா ரணையாரே.
(42)

991 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஆர்கொண்ட செஞ்சடையீர் வணிகருணீ ரொருவரெனற் கையமில்லை,
கூர்கொண்ட சூலமழுக் கொண்டிருந்து மண்டுசினங் கொடுது ரத்திப்,
போர்கொண்ட வாரியர்கோன் வாள்கொண்டு வெட்டிடவும் பொறுத்துக் கொண்டீர்,
சீர்கொண்ட விதனான்மற்றவர்கொ டுக்கும் பொருட்பங்குஞ் சிதைத ராதே.
(43)

992 நேரிசைவெண்பா.
சிதைக்கலமே யாநின் றிருவடியைப் பற்றிச்
சிதைக்கலமே யாநின்ற தீமை - புதைக்குமெழு
தோற்றப் பரவை முடியாய்சொல் வாட்போக்கி
யாற்றப் பரவைமுடி யாய்.
(44)

993 சம்பிரதம்.
எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரிய விருத்தம்.

ஆயுமிவை மெய்ம்மையொவ் வொருவிரற் றலையொவ்வொ ராழிகோத் துறவெ டுப்ப
      னம்பொற் சிலம்புகால் வளைதரப் புனைகுவ னண்டங்கள் பலதகர்ப்பன்
பாயுமலை சூழ்புடவி வாயலரி மலர்தரப் பண்ணுவன் குவல யங்கைப்
      பற்றுவன் றிக்காம்ப லோடுவெள் ளாம்பலும் பற்றிக் கசக்கி யெறிவ
னேயுமத யானையை யெறும்பிதான் மந்தியை யிருந்தும்பி தானென்னவே
      யிப்பொழு தியற்றிடுவ னின்னமும் பலசெய்வ னித்தனையும் வித்தை யலவாற்
காயுமயின் மூவர்புரம் வேவநகை யாடுகங் காதர னுமாத ரன்சங்
      கரனதர னாசலக் கடவுளுக் கிணையாவொர் கடவுளையு மறிவிப்பனே.
(45)

994 ம ட க் கு.
எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம்.

அறிதரு மிருக்கை மாணிக்க மலையே யமையில்சொன் மாணிக்க மலையே
      யவிர்தரு வேணி யுருவமோ ராறே யத்துவா வுருவமோ ராறே
முறிதலின் முடியேற் றதுமொரு வெட்டே மூர்த்தமுந் தோமொரு வெட்டே
      மூடிய தெதிரி லாவுவா வுரித்தே மூலமீ றிலாவுவா வுரித்தே
தறிபக வெழுந்த தம்மவன் கணையே தாடரிப் பதுமவன் கணையே
      தாளெடுத் தாடிக் களிப்பதம் பலமே சாற்றுவார்க் களிப்பதம் பலமே
குறிகொடேர் விடுவா ரம்புயத் தாரே கொன்றைவா ரம்புயத் தாரே
      கோவதெவ் வளவா மனத்தனை யரையே கொள்ளுவா மனத்தனை யரையே.
(46)

995 சந்தத்தாழிசை.
அரைவிராவ வணியுமாடை யதளதாக வன்றிவே
      றறைவதாக வரவமாக வணியதாக வென்புதார்
புரைவதாக விரையுநீறு பிரியுமூணு நஞ்சமே
      புணர்வதாக வுணர்தராது புணருமாசை கொண்டுளாள்
கரையுறாத துயரினூடு கழியுமாறு கன்றியோர்
      கடியபாவி மதனனேவு கணைதுழாவு நன்றிதோ
வரையவாரும் விரையவாசம் வரையின்மாலை தந்துநீள்
      வரையிராசன் மகளொடாடி மகிழிராச லிங்கரே.
(47)

996 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
கருதுந் தருதும் விருதுமலி கதியென் றுரைப்பீர் கொதி சகடு,
மருதும் பொருது மெருதுடையீர் மணிமா மலையீர் யானீன்ற,
விருதுங் கவன முலையாளைச் சுரும்பார் குழலி யென்றறகுந்,
தருதுங்கருது மிடமென்னீர் தருவீர் தகாவப் பெயராட்கே.
(48)

997 கட்டளைக்கலித்துறை.
பெயராத மாற்குழி வீழ்மனத் தேரைப் பிறங்கருளாந்
துயராத வேக்கொண் டெடுத்தேறி னீமுத் துகளுமறு
முயராத தோவெனும் வாட்போக்கி யாய்பில முற்றபொற்றே
ரயராத வேக்கொண் டெடுத்தேறி முப்புர மட்டவனே.
(49)

998 நேரிசை வெண்பா.
அடரும்வன மேவுமிரண் டாயிரங்கோ டேந்திப்
படரும்வன மேவலரோன் பண்வாய் - தொடருமே
நாட்போக்கி யானொருத்த னையா தருள்புரியும்
வாட்போக்கி யானொருத்தன் மா.
(50)

999 சித்து. - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
மாமேவு வாட்போக்கி மாதேவர் தமக்கிருப்பு வரையை முன்னாட்,
டூமேவு வெள்ளிவரை யாக்கியவண் சித்தர்யாஞ் சொல்லக் கேண்மோ,
பாமேவு மற்றவர்கை நாகமும்பொன் னாக்கினந்தாள் பணி வா னோர்க்குப்,
பூமேவு நாகலோ கத்தையும்பொன் னுலகாகப் புரிந்தோ மன்றே.
(51)

1000 இதுவுமது. - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
அன்றுமது ரையிலெல்லாம் வல்ல சித்த
      ராயினா ரடிபரவி யருண்மா ணிக்கக்
குன்றுரையுஞ் சித்தர்யாம் புற்கை யேனுங்
      கூழேனும் பசிதீரக் கொடுவா வப்பா
வின்றுவரு மிரும்புதனை யொன்றுஞ் செய்யா
      திருந்துதயத் துதித்ததுபொன் னென்னச் செய்வோ
நன்றுமறு நாள்வெள்ளி யெனவுஞ் செய்வோ
      நானிலத்து நம்மருமை யறிவார் யாரே.
(52)

1001 இதுவுமது. - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஆரப்பா நம்மருமை யறிய வல்லா
      ரகிலநிகி லம்புகழ்வாட் போக்கி கண்டக்
காரப்பார் சடையார்மே லாணை மெய்யே
      கரிகொணர்க விரும்புமா தங்கஞ் செய்வோம்
பாரப்பா வப்பரம ரெருத்துக் கொட்டில்
      பைம்பொன்னே யெனச்செய்தோ முனமிப் போது
மோரப்பா வெனக்கொடுவா தாகந் தீர
      முகந்தடிசி லளித்திடினு முகந்துண் போமே
(53)

1002 கலிவிருத்தம்.
உண்ணு நஞ்சமு தாகு முனக்கமு
தெண்ணு நஞ்சமு தாகு மெனக்கிதெ
னண்ணு மாணிக்க மாமலை யாய்நகப்
பண்ணும் விண்ணம் படர்மதி வெம்மையே.
(54)

1003 கைக்கிளை. - மருட்பா.
வெம்மையெ?டு தண்மை விரவத் தருமுலக
மும்மை யுடையான் முகநோக்க - மம்மா
தகரரு மற்றவை தனித்தனி யெழத்தரும்
புகரரு மெ?ருவாட் போக்கிப்
பகரரு மடந்தை பனிமுக நோக்கே.
(55)

1004 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
நோக்குறுமா ணிக்கமலை யெதிர்ப்படுமோர்
      பெ?ருளகத்து நுழைவ தன்றித்
தாக்குமது தன்னகத்து நுழையவிட.ங்
      கெ?டாதமருந் தகைத்து மீது
தேக்குமொளிப் பரம்பொருளு மத்தகைத்திலவ்
      வொப்புமையின் றிறமு ணர்ந்து
தூக்குநவில் பவரனைய பொருளைமலைக்
      கொழுந்தெனுமத் துதிமெய் தானே.
(56)

1005 ஊசல்.- ஈற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை.
துதிக்கும் பரமர் சுரும்பரர் குழலோ
டுதிக்கும்வாட் போக்கி யுறையுஞ்சீர் பாடிக்
கதிர்க்கு முலைகுலுங்கக் கைவளைக ளார்ப்ப
வதிர்க்குந் துடியிடையீ ராடுக பொன்னூசல்
ஆயும் பிடிநடையீ ராடுக பொன்னூசல்.
(57)

1006 அறுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
ஊச லாடு நெஞ்சமே யோவி மாய வஞ்சமே
வீச லாதி யங்கரே மேவிராச லிங்கரே
வாசம் வீசு தென்றலோ வாது பாய நின்றலோ
மூச வேள தங்கையே மூட வாடு மங்கையே.
(58)

1007 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
மங்கையொரு பங்குடையார் மாணிக்க
      மலையொளிமேன் மருவி மென்பூஞ்
செங்கையர மகளிருல கத்தமர்வெண்
      களிற்றுடலஞ் செம்மை செய்ய
வங்கையொரு சதகோடி யானெய்ததோர்
      மூழ்கவெப்போ ராற்றிற் றென்றா
சங்கையுறும் வானாறு சோணைமதி
      பருதியெனத் தயங்கு மாலோ.
(59)

1008 கொச்சகக்கலிப்பா.
மாலாய பச்சை மயிலையிடம் வைத்தனையென்
பாலா யவளும் பசப்புற்ற காரணத்தான்
மாலாய பச்சை மயிலே வலத்துவைவிண்
பாலாய வாட்போக்கிப் பைம்பொற் சிலையானே.
(60)

1009 ஈற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை.
ஆனவனா காதவெனென் றன்புடையார் பாலாயா
னானவனா காதவனே நானாக வுட்குறிக்குங்
கோனவன்மு னாகியல்லாக் கோமான்மா ணிக்கமலை
வானவன்சீர் பாடாதார் வாயென் வாயே
மலைக்கொழுந்தென் றுரையாதார் வாயென்ன வாயே.
(61)

1010 களி. -எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
வாயாது வருந்துமுயி ரும்பலவே பரமர்
      வாட்போக்கி யமருமெழு மாதரடிப் பூசை
வீயாது செயிற்பிறிதும் வேண்டுவதோ விண்ணோர்
      விரும்புசுரா பானத்தா லமரரே யானார்
தேயாது தாலத்தின் கட்குடியர் நரர்மா
      றெண்டிரைக்கட் குடியனய னலரின்கட் குடிய
னாயாது வீணாகத் திரிவதெவ னந்தோ
      வடைவரோ குருக்களொழித் தரியபர கதியே.
(62)

1011 இதுவமது. - கட்டளைக்கலித்துறை.
கதிகாண் வழியொன்று கூறுதுங் கேண்மின் கடற்புவியீர்
விதிகா ணரியதென் றேகஞ்ச மேவுவன் விண்டுவென்பா
னிதிகா ணெனக்குல்லை கொள்வானிப் பூரண நீத்தலென்ன
மதிகா ணிதுகொளின் வாட்போக்கி யார்சத்தி வாய்ப்புறுமே.
(63)

1012 இதுவமது. - எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம்.
உற்றவொளி மாணிக்க மலையிறைவர் பனையடி யுவந்திருப் பதும்
      மங்கையொரு பங்குடையார் மாணிக்க
      வேடர்கோ மங்கையொரு பங்குடையார் மாணிக்க
      னுதவெச்சி லூன்மிசைந் ததுமறை மகஞ்செய வுரைத்தவிதி யுந்தெளிகலார்
கொற்றமுறு மமரரொரு தக்கன்வேள் விக்களங் குறுகியஞ
      ருற்ற துணரார் மங்கையொரு பங்குடையார் மாணிக்க
      கொல்லா னெனுங்குறட் டொழுமெனலை விதியெனக்
      கொள்வர்மறை வினையே யெனார்
பொற்றகலை மான்விருப் பன்பிரமன் மாயவன் போகுமான்
      பின்றொடர் பவன் மங்கையொரு பங்குடையார் மாணிக்க
      பொருகேழன் மீனுரு வவாவினன் குக்குடப் புட்பற்று வோன் முருகவேள்
சொற்றவிவை யாவுநன் குறவுணர்ந் துட்கொடு தொடங்குமின்
      சத்திபூசை மங்கையொரு பங்குடையார் மாணிக்க
      தூயதே றலுமினிய தசையுமொரு
      வீர்பெருஞ் சுத்திமுத் தியுமடைவிரே.
(64)

1013 மடக்கு. - கட்டளைக்கலிப்பா.
அடையு மாலை யொருவண் டாங்கமே
      யப்புக் கூடு மொருவண் டாங்கமே
யிடையி லாவுமை யேயிடப் பாகமே யிபவ
      னத்தலை யேயிடப் பாகமே
யுடையெ னாவரை கூடுவ தாசையே
      யுன்னு மன்பரங் கூடுவ தாசையே
சடைவி ராய விருப்புச் சிவாயமே
      சங்கரற்க விருப்புச் சிவாயமே.
(65)

1014 இதுவமது.
மேவ லார்புரத் துந்தழன் மூட்டுவார்
      மேவு வார்புரத் துந்தழன் மூட்டுவார்
காவன் மேவிய மாற்கும் வெளிப்படார்
      காவ லோவிய மாற்கும் வெளிப்படார்
ஓவ லோவினர்க் கும்பசப் பூட்டுவா
      ரோவன் மேவினர்க் கும்பசப் பூட்டுவார்
நாவ லார்புகழ் மாணிக்க மாமலை
      நாய னாரு நடுநிலை யாளரே.
(66)

1015 நேரிசை வெண்பா.
ஆளாக வந்த வடியேற் கடர்கரும்பு
வேளாக வந்த விரவிழித்த - காளாய்
சிவாய வரையாய் தெளியவரை யாய்திக்
கவாய வரையா யருள்.
(67)

1016 மறம் - எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அருள்செறிமா ணிக்கமலை யிறைவன் செம்பொ
      னணைத்தொருவா ரிதிநாப்பண் மிதக்குந் தோணிப்
பொருள்வணிகன் முளைபல்கா னடந்த தோர்ந்து
      போராட்டத் தொருவளர்ப்புப் பெண்ணை யீந்தோந்
தெருள்கிலனா யவற்கதிக னென்று வேந்துந்
      தேறியொரு பெண்கேட்டான் செப்பி வற்குங்
கருளகல்யா னதிகனென வினிப்பார்ப் பானுங்
      கண்ணறக்கேட் பான்மறவர் குலச்சீர் நன்றே.
(68)

1017 இதுவுமது. - கலிவிருத்தம்.
நன்றக மகிழ்ந்துமற நங்கைவிழை வுள்ளத்
தொன்றரசு பொய்த்திரு முகங்கொடிவ ணுற்றாய்
கொன்றனையன் மெய்த்திரு முகங்கொணர்தும் யாமே
யின்றறிக தூதமணி வெற்பரரு ளேற்றே.
(69)

1018 அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
ஏதமில்வாட் போக்கியிறை பல்வளைபார்ப்       பனமடவா ரிடங்க வர்ந்த்து,
மேதகுகூ டலில்விற்றான் முனமிந்நாட்       கவர்வதெங்கு விற்பான் கொல்லோ,
வோதல்செயு முலகுள்ளங் கவர்கள்வ னுயிர்க       டொறு மொளிக்குங் கள்வன்,
மேதகைய விவனெனும்யான் வளைக வருங்       கள்வனென விள்ளுவேனே.
(70)

1019 கட்டளைக்கலித்துறை.
விள்ளும் படிவரை வாட்போக்கி னீர்நும் விரைமலர்த்தார்
நள்ளும் படிகொடுப் பீர்மறுப் பீரெனி னாடுநுதற்
கொள்ளுங் கணுங்கட் செவிப்பூணுந் தாளுங் கொடுத்தருள்வீர்
உள்ளுங் கணைமதன் றென்றல்வெண் டிங்க ளுரனறவே.
(71)

1020 மறம். - நேரிசைவெண்பா.
அறவர்புகழ் வாட்போக்கி யண்ணல்வரைப் பால்வாழ்
மறவர்குலப் பெண்வேட்ட மன்னர் - திறலி
னுறுவார்பின் றேமென் றுடன்றமர்த்து மாய்ந்து
பெறுவார்பின் றேவர்குலப் பெண்.
(72)

1021 கட்டளைக்கலித்துறை.
பெண்பா லுகந்தருள் வாட்போக்கி மேய பெருந்தகைக்கு
வண்பால் கவிழ்த்தபுள் ளோகுயில் வாரிமந் தாகினியோ
விண்பா லுயர்தென்றல் வெற்பெழு மாதர் விழைந்தவெற்போ
கண்பா லிருளன்ப ருள்ளிரு ளோபுறங் காண்பதற்கே.
(73)

1022 பாண். - எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
காணரிய மாணிக்க மலைவளரோங் கொளியிற்
      கலப்புறுமின் பிதுவெனக்கொண் டுலப்பறுசீர்த் தலைவர்
நாணரிய பரத்தையவா வினரினிமற் றெனையு
      நச்சுவர்பாண் மகனேயன் பினர்நின்பா லெனநீ
பூணரிய பொய்பூண்டு வீணையிசைத் திடுதல்
      போதுமிவ ணின்றகறி நின்றனையே லெறியுங்
கோணரிய கற்களினின் கருந்தலையுஞ் சுவற்பாற்
      கொண்டிடுபத் தருந்தகரு மண்டிடுமான் முடிவே.
(74)

1023 வஞ்சித்துறை.
முடித்தழும்பர்சீர்
படித்தவன்பர்பூ
வடித்தொழும்பரே
தடித்தவின்பரே.
(75)

1024 வஞ்சிவிருத்தம்.
இன்ப ராயொன் றிரண்டெனும்
வன்ப ராய்வழி மாற்றுவார்
முன்ப ராய்முடிக் கீற்றுளா
ரன்ப ராயமர் வார்களே.
(76)

1025 கட்டளைக்கலிப்பா.
ஆரவாவு படைநெடுங் கண்ணுமை
      யாள வாவொரு பாலளித் தாரந்தச்
சீரவாவு மெனக்கொரு பாலருள்
      செய்த வாவிக் கொடாதமர் வாரமென்
பாரவாவு குளிர்புனல் வெங்கொடும்
      பால வாவழ லேந்திப் பொதுநின்று
நாரவாவு முடித்தழும் பாளர்தா
      நடுவி லாதவ ரென்னினென் னாவரே.
(77)

1026 நேரிசைவெண்பா.
ஆவா வடியே னலந்தே னருள்வேத
மாவா வடியேன் மழுப்படக்கைத் - தேவா
வரும்பாச மைந்துமற மாற்றார்வாட் போக்கி
யரும்பாச மைந்து மற.
(78)

1027 இடைச்சியார்.- அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
அறவிடையார் வாட்போக்கி யண்ணலார்       நகரிடைச்சி யாரேயுங்க,
ளுறவிடையார் வெறுப்புறுவா ராடைநீக்       குபுபணப்பா லுறவெற்கீயுந்,
தெறவிடையா ரஞருழவா திரண்டுபாற்       குடங்களு மென் செங்கைக் கொள்வேன்,
பெறவிடையா ரருள்புரியு நயமோ ரோ       மோரெனுஞ்சொற் பேசி டீரே.
(79)

1028 இதுவமது. - நேரிசைவெண்பா.
பேசுமா ணிக்கமலைப் பெம்மா னணிநகரத்
தேசுமாண் வீதியுலாஞ் சிற்றிடைச்சி - மூசுபூ
வண்டரே யாவார் வனமுலைசேர் வார்யாரு
மண்டரே யாவார்மெய் யாம்,
(80)

1029 வலைச்சியார் - கட்டளைக்கலித்துறை.
ஆவேறு மையர்செம் மாணிக்க மாமலை யாளர்மலர்
மேவேறு கூந்தல் வலைச்சியர் போகம் விரும்பியன்றோ
நாவேறு நால்வர்தம் பாவேறு மாலை நலமணக்குந்
தூவேறு தோளிற் புலவார் வலைமுன் சுமந்ததுவே.
(81)

1030 கலிவிருத்தம்.
வேலைவாய் விடமுணும் விருப்ப ரென்கனி
மாலைவா யமுதுணும் வாஞ்சை வைத்திலார்
கோலவாய் மணிவரைக் குழகர் மற்றவர்க்
காலவாய் விருப்பமே யளிக்கு மாலையே.
(82)

1031 வலைச்சியார். - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
மாலைமுடித் தழும்பரருள் போலெனக்கு       வெளிப்பட்ட வலைச்சி யீர்நுஞ்,
சேலையணைத் திடச்சிலர்வா யூறுவரால்       கெளிறு செறி திருக்கை கோப்ப,
வாலையடு கரும்பினுடைந் துளமலங்கு       வார் சிலர்செல் லயிரை யேற்க,
வேலையொழி வார்சிலர்யா னாரான்மன்       னச்சுறவு மேவி னேனே,
(83)

1032 எழுசீர்க்கழிநெடிலடி இரட்டைஆசிரியவிருத்தம்.
மேவார் புரஞ்செற்ற வாட்போக்கி யார்தில்லை மேவிநாங் கண்ட தில்லை
      மேவால வாயால வாய்மனண் ணாமலைவிராவியக னண்ணாமலை
மாவார் கழுக்குன்றம் வன்கழுக் குன்றமேர் மலியொற்றி யூரொற்றியூர்
      வாஞ்சியம் வாஞ்சிய மிபக்கா டிபக்காடு மறைவனம் மறைவனநலத்
தாவார் விரும்பிமரு வாரூர் திருக்காழி யம்மமரு வாரூர்திருக்
      காழியா வடுதுறை யடுக்குமா வடுதுறைந லவிநாசி யவிநாசிவண்
காவார் பெருந்திருக் காளத்தி யுரைதிருக் காளத்தி யென்று கருதிக்
      கழித்தென வொழித்திடி னழித்தல்செய் பழித்தளை கழன்றுய்வ தென்றுமனமே.
(84)

1033 கூத்தராற்றுப்படை. - நேரிசை ஆசிரியப்பா.
மனனமர் பவுரி மலைப்புப் பித்தங்
கடகமுள் ளாளனங் கரணங் குனிப்பு
வீரட் டானம் விரும்பும் பிரமரி
பரத மிலயம் புரிய முப்பித
மாமுதற் பலவு மரிறப நடிக்குங்       (5)
கூத்தன் மகனே கூத்தன் மகனே
கடற்புவி யாளுங் காவலன் மகனல
னின்போல் யானு நிகழொரு கூத்தன்
மகனே யென்வாய் மாற்றங் கேண்மதி
வலம்பா டொழிக்கு மிலம்பா டெய்தி       (10)
மெய்நவின் றறியா வீணர்வாய் பொருவத்
கொடிறுவீங் காது குதட்டலு மொழிந்த
வாயிடை நீர்நசை வந்த காலை
யுறுமறு சுவையுளொன் றுள்ள வூறலா
னறுதி செய்தாங் கரும்பசி மேவின்       (15)
மற்றதை யொழிக்கும் வகையறி யாது
முற்ற வருந்தி மூர்ச்சித் துடைந்து
சாந்திரா யணங்கிரிச் சரமுதற் கொடிய
விரதங் கொண்டோர் மேனியே பொருவ
வென்பு நரம்பு மெண்ண வெளிப்பட்       (20)
டூதிற் பறக்க வுடம்படு மேனியிற்
போர்த்த போர்வை புன்மயி ருருவிப்
படிந்துதன் காரணம் பரப்பிக் காட்டச்
சிலம்பிநூல் கீழுஞ் சிதன்மண் மேலும்
பொதியவுட் பட்ட புற்செறி குரம்பை       (25)
யுள்வாய்ப் ப�றுளை யொருபட லடைத்தாங்
கீந்திலை வெளிப்பட் டெங்கு முறுத்தப்
படுமொரு பழம்பாய் விடுதலை யணையொடு
நாணிலாத் தனுவென நகத்தனு முடக்கி
வாடைவந் துடற்ற மலிகுளிர்க் குடைந்து       (30)
சானு விரண்டுந் தாடி தகர்க்க
வோட்டமு மதரமு மொழிவின்றி நடுங்கத்
தருமிரு நிரைப்பலுந் தாளந் தாக்க
வுலங்கு மசகமும் விலங்காது கறிக்கப்
பசித்தழல் வெதுப்பப் பழவினை நினைந்து       (35)
முடக்கொழி யாது கிடக்குங் காலைப்
பல்லியு மரணையும் பாங்குற முட்டையிட்
டெல்லியும் பகலு மிரியாது கிடக்கும்
பவுத்த ரமணர் பாழ்நுதல் பொருவ
வடலைகண் டறியா வடுப்பக மருவிப்       (40)
பெரிது நோக்கிப் பெருமூச் செறிந்து
மாலைத் தாமரை மலர்புரை முகத்தொடு
மதுவந் துளிக்கு மழலைவாய்ச் சிறாஅர்
பொதிசித ருடைக்குங் கதியில் லாது
கையே கொண்டு மெய்யினை மூடிய       (45)
வேயடு மென்றோட் டாய்முக நோக்க
மற்றவள் வருந்தி வறுங்கை நீட்டி
மார்பிடை யணைப்பச் சோர்தரு கண்ணீர்
சிறிதிடை யின்றியச் சிறாருட னனைப்ப
மற்றவ் வீர மொற்றிடக் கருதி       (50)
யொருகை நீட்டி யொருவருக் கொருவர்
கோவணம் பறிக்கக் கூகூ வென்றாங்
கழுகுர லென்செவி யுழுகுர லாக
வென்செய் வாமென் றிறப்பதற் கெண்ணி
யொருப்படு காலைநல் லூழ்பிடித் துந்த       (55)
மடிசற் றின்றிக் கடிதவ ணின்று
வெளிவந் தம்ம விரைந்து நடந்து
மாணா டென்னுஞ் சோணா டடைந்து
பூவிரி பொழிற்குலைக் காவிரி மூழ்கித்
திருத்தகு மந்நதித் தென்பா லுற்றேன்       (60)
பாயிருள் பருகும் பகற்கதி ரநேக
மோருழித் திரண்டாங் குதித்துநின் றென்னச்
சேயொளி விரிக்குஞ் செம்மலை யொன்று
கண்டன னாங்குக் கைகுவித தேத்திப்
பெயரரு மிம்மலைப் பெயர்யா தென்று       (65)
வினவினன் கேட்ட மேதகு பெரியோ
ரரதநா சலமீ தலங்குற விதன்மேற்
றழைதர வமர்சிந் தாமணி யொன்றுண்
டன்னது காண்போ ரரும்பெறல் வளங்க
ளெல்லா முடையா ரென்றினி திசைப்ப       (70)
வொருங்கெழு மகிழ்வி னூக்கமிக் கடைந்து
படித்தல நின்றுவிண் படர்வதற் கிட்ட
வேணியிற் பொலிசோ பானவழி யேறிப்
பிறங்குறும் வயிரப் பெருமாள் காவலி
னறங்குல வம்மலை யணிமுடி யடைந்து       (75)
செயிரறு பொன்செய் சினகரம் புக்காங்
கெய்ப்பிடை வைப்பொன் றெதிருறக் கண்டெனச்
செந்தா மரைக்கட் டிருமறு மார்பனு
மந்தா மரைவா ழண்ணலு மின்னுங்
காணாப் பொருளைக் கண்டனன் மாதோ       (80)
தனிப்பெருந் திருமுன் றண்டனிட் டெழுந்தே
னடங்கா வுவகை மடங்காது பொங்கக்
கூடினன் றழைந்துசற் றாடின னப்பொழு
தெண்டோ ளப்பொரு ளின்னருள் சுரப்ப
வடதிசை நிதிக்கோன மனமழுக் கறுப்பப்       (85)
பெறலரு வளங்கள் பெரிதும் பெற்றன
னன்றே யுவகை யார்கலி மூழ்கின
னின்னே விரைந்தவ ணேகுதி
யென்னே பெறலரி தெல்லா முறுமே.
(85)

1034 நேரிசைவெண்பா.
உறவே தவித்தா யொளியிழைவாட் போக்கித்
திறவே தவித்தாய்ச் சிறந்தார் - நறவே
தருங்கொன்றை யம்பார் சடையதளித் தார்நம்
மருங்கொன்றை யம்பார் வரார்.
(86)

1035 கட்டளைக்கலித்துறை.
வரந்தரு மாணிக்க மாமலை யீசர்தம் வாம்பரியோ
திரந்தரு பாதுகை யோசிலம் போதிருக் கோவணமோ
வுரந்தரு மாதன மோகோயி லோநன் கொளிருருவோ
பரந்தரு வந்திய ரோமொழி யோமெய் பகர்மறையே.
(87)

1036 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
மறைபுகலும் வாட்போக்கி வள்ளலுக்கு
      விடையுருவாய் மாலே செங்கை
யுறையொருகோ டொழித்திருகோ டுற்றோசை
      யிலாமணிநீத் தோசை மேய
வறைமணிபூண் டடர்விடமாற் றிடுவானீத்
      த�தணுகா தமர்வா லுற்றாய்
நிறைபயனோர்ந் தனையேமா வாம்பொழுது
      மவற்சுமக்க நினைத னன்றே.
(88)

1037 குறளடிவஞ்சிப்பா.
நன்றென்பதுந் தீதென்பது
மொன்றும்பவ மென்றுங்கொடு
கொதியாமஞர் பதியாவொரு
சிறுநாயினேன் மறுகாவகை
யருள்புரிமதி கருமுகிலுகைத்
தெழுபுனிதனுங்குழுவமரரு
நறையிதழ்மல ருறைமுனிவனும்
வனமாலிகை புனைதோளனும்
பொறிவலியொருங் கெறியுறுவருஞ்
சூழ்பாரகம் வாழ்வாரொடு
முடிவறவடைந் தடிதொழுதெழ
நெடுமறைகனி வொடுதுதிசெயச்
சுரும்பார்குழ லரும்பார்முலை
தொடைமார்பகத் திடைமூழ்குற, நாளும்
புண்ணியம் பொலிவாட் போக்கி
விண்ணியன் முடிமேல் வீற்றிருப் போயே.
(89)

1038 கொற்றியார். --அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
இருப்பொலிநீர் வைப்பானா ரேங்கிடச்சக்
      கரஞ்சுழற்ற லென்னை மால்சேர்
தருப்பொலியும் வடமலைதென் மலைகாட்டி
      யுடனனந்த சயனங் காட்டிற்
றிருப்பொலிமா லடிமையெனு நுமக்கடிமை
      யாவறுழாய் செறிம ணித்தார்
குருப்பொலியப் பூண்டுமுடித் தழும்பர்விழாக்
      கண்டுவக்குங் கொற்றி யாரே.
(90)

1039 பிச்சியார்.- எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஆர்கொண்ட முடித்தழும்ப ரருட்பவனி நோக்கி
      யணிமறுகிற் சுழன்றாடி யடைபிச்சி யாரே
கூர்கொண்ட விழிநெடுவே லிருக்கவொரு சூலங்
      கோடன்மிகை வெண்ணீறுங் கண்மணிமா லிகையும்
வார்கொண்ட செஞ்சடையும் பூங்காவி யுடையு
      மயக்கமறுப் பதுமறந்து மயக்கிடுமா னுமைச்சார்ந்
தேர்கொண்ட விக்கோலங் கொண்டதுமா முனிவ
      ரியல்பனைத்துங் கவர்வதற்கோ வியம்புவிமற் றெனக்கே.
(91)

1040 விறலி. - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்..
என்னை மேவுறு மிறையவன் றலையளி யென்னிடம் புக ழாயேன்,
முன்னை யாலவா யிடத்துவாட் போக்கியார் முதிரரு ளால் வென்ற,
பொன்னை நேரென வுள்ளுவல் விறலிநீ புகழ்வையே லிசை தோற்றுப்,
பின்னை மற்றவட் சுமந்தவ ணேரெனப் பெரிதுமெள்ளுவலோரே.
(92)

1041 நாரைவிடுதூது. - கொச்சகக்கலிப்பா.
ஓராய் கடுமொழியு மோரா யநங்கர்முனிந்
தாரா யெழவுறுநோ யாராயாய் திங்கள்சுடல்
பாராயா னந்தமுவப் பாராய் முடித்தழும்பர்
தாராய் மடநாராய் தாராயுண் ணாராயே.
(93)

1042 நேரிசைவெண்பா.
ஆயும்வாட் போக்கி யரன்முடிமே லாரியன்கூர்
தோயும்வாட் போக்கியநாட் டோன்றும்வடு - வாயிடைவாழ்
மங்கையடை யாணீர் வடிவமொழித் தாலடையுஞ்
சங்கையடை யாவாறு தான்.
(94)

1043 கட்டளைக்கலித்துறை.
தானே தனக்கொத்த வாட்போக்கி நாத சடாமுடிமேன்
மீனேய வெள்ளல யோடுவைத் தாய்மன வெண்கலையை
யூனேய பல்லுயிர் சூழடிக் காரல ரோடுநறுங்
கானே யுறவைத்தி யென்றீ யமனக் கருங்கலையே.
(95)

1044 கலிநிலைத்துறை.
கலந்த காதவென் பாக்கிவாட் போக்கியைக் கரும்பு
கலந்த காமர்சொல் லோடுகண் டினிதுப கரும்பு
கலந்த காரமே வாதுதீ வினைகட கரும்பு
கலந்த காவென லாமன மாமயற் கரும்பு.
(96)

1045 கட்டளைக்கலித்துறை.
புரிதரு மாணிக்க வெற்பார் வதனம் பொலிவிழியுட்
பரிதரு மொன்று மறைந்து சுடும்வெளிப் பட்டுச்சுடும்
விரிதரு மொன்றிவை தீர்சுடு கண்ணொடு வேற்றுமையென்
னெரிதரு செந்தழ லேமேனி யார்கண் ணியல்புமதே.
(97)

1046 நேரிசைவெண்பா.
அதரஞ் சிவந்தா ளயலான்பின் சென்றா
ளதரஞ் சிவந்தா ளலளா - லுதர
மடித்தழும்பா விக்கா மனன்மீட் டருள்வாய்
முடித்தழும்பா விக்கா முனம்.
(98)

1047 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
முன்னியயா வுந்தருவாட் போக்கிநா
      யகவடியேன் மொழிந்த பாடன்
மன்னியகுற் றமுங்குணமாக் கொண்டுமகிழ்ந்
      தருள்புரிதி மறுப்பா யென்னிற்
றுன்னியவூ ரினும்விரைசார்ந் தறியாத
      புல்லெருக்குஞ் சூடிக் கொண்டாய்
மன்னியமற் றதன்குணமென் னெனின்விடைநீ
      கொடுக்குமா வருங்கண் டாயே.
(99)

1048 நேரிசைவெண்பா.
ஏற்றர்வாட் போக்கி யிராசலிங்கர் கூற்றினுக்கோர்
கூற்றர் சுரும்பார் குழல்பாகர் - நீற்றரெமை
நன்றாடல் கண்டோ நயவாமை வேண்டியவர்
மன்றாடல் கண்டோமம் மா.
(100)

வாட்போக்கிக்கலம்பகம் முற்றிற்று.


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home