Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > அயோத்திய காண்டம் > 1 மந்திரப் படலம் > 2 மந்தரை சூழ்ச்சிப் படலம் >3 கைகேயி சூழ்வினைப் படலம் > 4 நகர் நீங்கு படலம் > 5 தைலம் ஆட்டு படலம் > 6 கங்கைப் படலம் > 7 குகப் படலம் > 8 வனம் புகு படலம் > 9 சித்திரகூடப் படலம் > 10 பள்ளிபடைப் படலம் > 11 ஆறு செல் படலம் > 12 கங்கை காண் படலம் > 13 திருவடி சூட்டு படலம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
அயோத்திய காண்டம் - 13. திருவடி சூட்டு படலம்


தன்னை வணங்கிய பரதனுக்கு பரத்துவாச முனிவர் ஆசி கூறி வினாவுதல்

வந்த மா தவத்தோனை, அம் மைந்தனும்
தந்தை ஆம் எனத் தாழ்ந்து, வணங்கினான்;
இந்து மோலி அன்னானும் இரங்கினான்,
அந்தம் இல் நலத்து ஆசிகள் கூறினான். 1

'எடுத்த மா முடி சூடி, நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?' என்றான். 2

பரதன் பதிலால் பரத்துவாசன் மகிழ்தல்

சினக் கொடுந் திறல் சீற்ற வெந் தீயினான்,
மனக் கடுப்பினன், மா தவத்து ஓங்கலை,
'"எனக்கு அடுத்தது இயம்பிலை நீ" என்றான்;
'உனக்கு அடுப்பது அன்றால், உரவோய்!' என்றான். 3

மறையின் கேள்வற்கு மன் இளந் தோன்றல், 'பின்,
முறையின் நீங்கி, முது நிலம் கொள்கிலேன்;
இறைவன் கொள்கிலன் ஆம் எனின், யாண்டு எலாம்
உறைவென் கானத்து ஒருங்கு உடனே' என்றான். 4

உரைத்த வாசகம் கேட்டலும், உள் எழுந்து
இரைத்த காதல் இருந் தவத்தோர்க்கு எலாம்,
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்ததால்-
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே. 5

பரதன் உடன்வந்தோர்க்கும் சேனைக்கும் பரத்துவாசன் விருந்து அளித்தல்

ஆய காதலோடு ஐயனைக் கொண்டு, தன்
தூய சாலை உறைவிடம் துன்னினான்;
'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து' எனா,
தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான். 6

துறந்த செல்வன் நினைய, துறக்கம்தான்
பறந்து வந்து படிந்தது; பல் சனம்,
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றாரென,
மறந்து வைகினர், முன்னைத் தம் வாழ்வு எலாம். 7

நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என,
அந்தரத்தின் அரம்பையர், அன்பினர்,
வந்து உவந்து எதிர் ஏத்தினர்; மைந்தரை,
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார். 8

நானம் நன்கு உரைத்தார்; நளிர் வானிடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்;
தான மாமணிக் கற்பகம் தாங்கிய
ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார். 9

கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்,
செம்பொனின் கல ராசி திருத்தினார்;
அம்பரத்தின் அரம்பையர், அன்பொடும்,
உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினார். 10

அஞ்சு அடுத்த அமளி, அலத்தகப்
பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவ
நஞ்சு அடுத்த நயனியர், நவ்வியின்
துஞ்ச, அத்தனை மைந்தரும் துஞ்சினார். 11

ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என,
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார்-
வேந்தர் ஆதி, சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர்காறும், வரிசை வழாமலே. 12

மாதர் யாவரும், வானவர் தேவியர்
கோது இல் செல்வத்து வைகினர்-கொவ்வை வாய்த்
தீது இல் தெய்வ மடந்தையர், சேடியர்,
தாதிமார் எனத் தம் பணி கேட்பவே. 13

நந்து அம் நந்தவனங்களில், நாள் மலர்க்
கந்தம் உந்திய கற்பகக் காவினின்று,
அந்தர் வந்தென, அந்தி தன் கை தர,
மந்த மந்த நடந்தது வாடையே. 14

மான்று, அளிக் குலம் மா மதம் வந்து உண,-
தேன் தளிர்த்த கவளமும், செங் கதிர்
கான்ற நெல் தழைக் கற்றையும், கற்பகம்
ஈன்று அளிக்க, நுகர்ந்தன-யானையே. 15

நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்;
கர கதக் கரி கால் நிமிர்ந்து உண்டன்
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல்
குரகதத்தின் குழாங்களும் கொண்டவே. 16

பரதன் காய் கிழங்கு போன்றவை உண்டு, புழுதியில் தங்குதல்

இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான்,
அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல்
பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான். 17

சூரியன் தோன்றுதல்

நீல வல் இருள் நீங்கலும், நீங்குறும்
மூலம் இல் கனவின் திரு முற்றுற,
ஏலும் நல் வினை துய்ப்பவர்க்கு ஈறு செல்
காலம் என்னக் கதிரவன் தோன்றினான். 18

பரதனின் படைகள் தம் நிலையை அடைதல்

ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என
பாறி வீந்தது செல்வம்; பரிந்திலர்,
தேறி முந்தைத் தம் சிந்தையர் ஆயினார்,
மாறி வந்து பிறந்தன்ன மாட்சியார். 19

பரதன் சேனையுடன் பாலை நிலத்தை கடத்தல்

காலை என்று எழுந்தது கண்டு, வானவர்,
'வேலை அன்று; அனிகமே' என்று விம்முற,
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ,
பாலை சென்று அடைந்தது - பரதன் சேனையே. 20

எழுந்தது துகள்; அதின், எரியும் வெய்யவன்
அழுந்தினன்; அவிப்ப அரும் வெம்மை ஆறினான்;
பொழிந்தன கரி மதம், பொடி வெங் கானகம்
இழிந்தன, வழி நடந்து ஏற ஒணாமையே. 21

வடியுடை அயிற் படை மன்னர் வெண்குடை,
செடியுடை நெடு நிழல் செய்ய, தீப் பொதி
படியுடைப் பரல் உடைப் பாலை, மேல் உயர்
கொடியுடைப் பந்தரின், குளிர்ந்தது எங்குமே. 22

'பெருகிய செல்வம் நீ பிடி' என்றாள்வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான், நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு, காதலின்
உருகிய தளிர்த்தன-உலவை ஈட்டமே. 23

பரதன் படைகள் சித்திரகூடத்தை அடைதல்

வன் நெறு பாலையை மருதம் ஆம் எனச்
சென்றது; சித்திரகூடம் சேர்ந்ததால்-
ஒன்று உரைத்து, 'உயிரினும் ஒழுக்கம் நன்று' எனப்
பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே. 24

தூளியின் படலையும், துரகம், தேரொடு,
மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும்,
ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும்,
'கோள் இரும் படை இது' என்று, உணரக் கூறவே. 25

பரதன் சேனையின் எழுச்சி கண்ட இலக்குவனின் சீற்றம்

எழுந்தனன், இளையவன்; ஏறினான், நிலம்
கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடிய குன்றின் மேல்;
செழுந் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்
கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான். 26

'பரதன், இப் படைகொடு, பார்கொண்டவன், மறம்
கருதி, உள் கிடந்தது ஓர் கறுவு காதலால்,
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான்; இது
சரதம்; மற்று இலது' எனத் தழங்கு சீற்றத்தான். 27

இராமனை அடைந்து இலக்குவன் சீற்றத்துடன் உரைத்தல்

குதித்தனன்; பாரிடை; குவடு நீறு எழ
மிதித்தனன்; இராமனை விரைவின் எய்தினான்;
'மதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்' என்றான். 28

போர்க் கோலம் பூண்டு இலக்குவன் வீர உரை

கட்டினன் சுரிகையும் கழலும்; பல் கணைப்
புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டு அமைத்து
இட்டனன்; எடுத்தனன் வரி வில்; ஏந்தலைத்
தொட்டு, அடி வணங்கி நின்று, இனைய சொல்லினான்: 29

'இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்
பருமையும், அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும், நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும், கண்டு, இனி உவத்தி, உள்ளம் நீ. 30

'படர் எலாம் படப் படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின, தேரும் ஈர்த்தன,
குடர் எலாம் திரைத்தன, குருதி ஆறுகள்
கடர் எலாம் மடுப்பன, பலவும் காண்டியால். 31

'கருவியும், கைகளும், கவச மார்பமும்,
உருவின் உயிரினோடு உதிரம் தோய்வு இல
திரிவன-சுடர்க் கணை-திசைக் கை யானைகள்
வெருவரச் செய்வன் காண்டி, வீர! நீ. 32

'கோடகத் தேர், படு குதிரை தாவிய,
ஆடகத் தட்டிடை, அலகை அற்று உகு
கேடகத் தடக் கைகள் கவ்வி, கீதத்தின்
நாடகம் நடிப்பன-காண்டி; நாத! நீ'. 33

'பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து, நான் இமைப்பின் நீக்கலால்,
விண் முதுகு உளுக்கவும், வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி-வள்ளல்! நீ. 34

'நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்,
கவந்தமும், "உலகம் நின் கையது ஆயது" என்று
உவந்தன குனிப்பன காண்டி, உம்பர்போல். 35

'சூழி வெங் கட கரி, துரக ராசிகள்,
பாழி வன் புயத்து இகல் வயவர், பட்டு அற,
வீழி வெங் குருதியால் அலைந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால். 36

'ஆள் அற் அலங்கு தேர் அழிய் ஆடவர்
வாள் அற் வரி சிலை துணிய் மாக் கரி
தாள் அற, தலை அற் புரவி தாளொடும்
தோள் அற-வடிக் கணை தொடுப்ப-காண்டியால். 37

'தழைத்த வான் சிறையன, தசையும் கவ்வின,
அழைத்த வான் பறவைகள், அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப்
புழைத்த வான் பெரு வழி போக-காண்டியால். 38

'ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்
இரு நிலம் ஆள்கை விட்டு, இன்று, என் ஏவலால்
அரு நரகு ஆள்வது காண்டி-ஆழியாய்! 39

'"வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கு" என, நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள், நவையின் ஓங்கிய
கைகயன் மகள், விழுந்து அரற்றக் காண்டியால். 40

'அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்!
விரைஞ்சு ஒரு நொடியில், இவ் அனிக வேலையை
உரம் சுடு வடிக் கணை ஒன்றில் வென்று, முப்
புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான்' என்றான். 41

இலக்குவனுக்கு பரதனைப் பற்றி இராமன் தெளிவுறுத்தல்

'இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ,
"கலக்குவென்" என்பது கருதினால் அது,
விலக்குவது அரிது; அது விளம்பல் வேண்டுமோ?-
புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால்: 42

'நம் குலத்து உதித்தவர், நவையின் நீங்கினர்
எங்கு உலப்புறுவர்கள்? எண்ணின், யாவரே
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்?-
பொங்கு உலத் திரளொடும் பொருத தோளினாய்! 43

'எனைத்து உள மறை அவை இயம்பற்பாலன,
பனைத் திரள் கரக் கரிப் பரதன் செய்கையே;
அனைத் திறம் அல்லன அல்ல் அன்னது
நினைத்திலை, என் வயின் நேய நெஞ்சினால். 44

'"பெருமகன் என்வயின் பிறந்த காதலின்
வரும் என நினைகையும், மண்ணை என்வயின்
தரும் என நினைகையும்" தவிர, "தானையால்
பொரும்" என நினைகையும் புலமைப்பாலதோ? 45

'பொன்னொடும், பொரு கழல் பரதன் போந்தனன்,
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே,
என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ?-
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்! 46

'சேண் உயர் தருமத்தின் தேவை, செம்மையின்
ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ?
பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டு, எனைக்
காணிய் நீ இது பின்னும் காண்டியால்'. 47

சேனையைத் தவிர்த்து சத்துருக்கனனுடன் பரதன் இராமனை நெருங்குதல்

என்றனன், இளவலை நோக்கி, ஏந்தலும்
நின்றனன்; பரதனும், நிமிர்ந்த சேனையை,
'பின் தருக' என்று, தன் பிரிவு இல் காதலின்,
தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான். 48

பரதன் நிலையைக் கண்ட இராமன், இலக்குவனனிடம் கூறுதல்

தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன்; 'அவலம் ஈது' என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான். 49

கார்ப் பொரு மேனி அக் கண்ணன் காட்டினான்,
'ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய! நீ,
தேர்ப் பெருந் தானையால் பரதன் சீறிய
போர்ப் பெருங் கோலத்தைப் பொருந்த நோக்கு' எனா. 50

இலக்குவன் நெஞ்சழிந்து நிற்றல்

எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் -
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர,
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே. 51

பரதன் இராமனின் திருவடி வணங்குதல்

கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனன், நலத்தின் நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். 52

'அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை' என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர் அடி வந்து வீழ்ந்தனன் -
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னரே. 53

இராமன் உள்ளம் கலங்கி பரதனை தழுவுதல்

'உண்டுகொல் உயிர்?' என ஒடுங்கினான் உருக்
கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண் எனும்
புண்டரீகம் பொழி புனல், அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே. 54

அயாவுயிர்த்து, அழு கணீர் அருவி மார்பிடை,
உயாவுற, திரு உளம் உருக, புல்லினான் -
நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் -
தயா முதல் அறத்தினைத் தழீஇயது என்னவே. 55

தந்தை இறந்தது கேட்டு இராமன் கலங்குதல்

புல்லினன் நின்று, அவன் புனைந்த வேடத்தைப்
பல் முறை நோக்கினான்; பலவும் உன்னினான்;
'அல்லலின் அழுங்கினை; ஐய! ஆளுடை
மல் உயர் தோளினான் வலியனோ?' என்றான். 56

அரியவன் உரைசெய, பரதன், 'ஐய! நின்
பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக்
கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு
உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்' என்றான். 57

'விண்ணிடை அடைந்தனன்' என்ற வெய்ய சொல்,
புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம்,
கண்ணொடு மனம், சுழல் கறங்கு போல ஆய்,
மண்ணிடை விழுந்தனன் - வானின் உம்பரான். 58

இரு நிலம் சேர்ந்தனன்; இறை உயிர்த்திலன்;
'உரும் இனை அரவு' என, உணர்வு நீங்கினான்;
அருமையின் உயிர் வர, அயாவுயிர்த்து, அகம்
பொருமினன்; பல் முறைப் புலம்பினான் அரோ: 59

தந்தையை நினைத்து இராமன் புலம்புதல்

'நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!
எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று?' என்றான். 60

'சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி,
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி,
எற் பெற்று, நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ?-
கொல் பெற்ற வெற்றிக் கொலை பெற்ற கூர் வேலோய்! 61

'மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க,
பொன் உயிர்க்கு தாரோய்!- பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்குக் கூற்றாய் உலகு ஆள உற்றேனோ?-
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்! 62

'எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை, இந்தியர்கள்
வெம் பவத்தின் வீய, தவம் இழைத்தவாறு ஈதோ?-
சம்பரப் பேர்த் தானவனைத் தள்ளி, சதமகற்கு, அன்று,
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய்! 63

'வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி
பூண்டு, இவ் உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன்,
மாண்டு முடிவது அல்லால், மாயா உடம்பு இது கொண்டு
ஆண்டு வருவது, இனி, யார் முகத்தே நோக்கவோ? 64

'தேன் அடைந்த சோலைத் திரு நாடு கைவிட்டுக்
கான் அடைந்தேன் என்னத் தரியாது, காவல! நீ
வான் அடைந்தாய்; இன்னம் இருந்தேன் நான், வாழ்வு உகந்தே!-
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய்! 65

'வண்மை இயும், மானமும், மேல் வானவர்க்கும் பேர்க்கிலாத்
திண்மை இயும், செங்கோல் நெறியும், திறம்பாத
உண்மை இயும், எல்லாம் உடனே கொண்டு ஏகினையே!-
தண்மை இ தகை மதிக்கும் ஈந்த தனிக் குடையோய்!' 66

பலரும் இராமனை பரிகரித்தல்

என்று எடுத்துப் பற்பலவும் பன்னி, இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும் குலவுத் தோள் கோளரியை,
வன் தடக் கைத் தம்பியரும், வந்து அடைந்த மன்னவரும்,
சென்று எடுத்துத் தாங்கினார்; மா வதிட்டன் தேற்றினான். 67

முனிவர்கள் இராமனை நெருங்குதல்

பன்ன அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம்
பின்னு சடையோரும், பேர் உலகம் ஓர் ஏழின்
மன்னவரும், மந்திரியர் எல்லாரும், வந்து அடைந்தார்;
தன் உரிமைச் சேனைத் தலைவோரும்தாம் அடைந்தார். 68

வசிட்டனின் உரை

மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து,
சுற்றும் இருந்த அமைதியினில், துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கி, கோ மலரோன்
பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான்: 69

துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை, பொருந்தும் மன்னுயிர்க்கு;
"இறத்தலும் பிறத்தலும் இயற்கை" என்பதே
மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ? 70

'"உண்மை இல் பிறவிகள், உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில் தழுவின" எனும்
வண்மையை நோக்கிய, அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ? 71

'பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்?
மறு அது கற்பினில் வையம் யாவையும்
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு அவற்கு, இரங்கல் வேண்டுமோ? 72

சீலமும், தருமமும், சிதைவு இல் செய்கையாய்!
சூலமும், திகிரியும், சொல்லும், தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? 73

'கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த,
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன,
மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது,
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ? 74

'புண்ணிய நறு நெயில், பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில், விதி என் தீயினில்,
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்,
அண்ணலே! அவிவதற்கு, ஐயம் யாவதோ? 75




 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home