Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > அயோத்திய காண்டம் > 1 மந்திரப் படலம் > 2 மந்தரை சூழ்ச்சிப் படலம் >3 கைகேயி சூழ்வினைப் படலம் > 4 நகர் நீங்கு படலம் > 5 தைலம் ஆட்டு படலம் > 6 கங்கைப் படலம் > 7 குகப் படலம் > 8 வனம் புகு படலம் > 9 சித்திரகூடப் படலம் > 10 பள்ளிபடைப் படலம் > 11 ஆறு செல் படலம் > 12 கங்கை காண் படலம் > 13 திருவடி சூட்டு படலம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
அயோத்திய காண்டம் - 9. சித்திரகூடப் படலம்



இராமன் சித்திரகூட மலையின் அழகை சீதைக்குக் காட்டி மகிழ்தல்

நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து, ஒரு நெறி நின்ற
அனகன், அம் கனன், ஆயிரம் பெயருடை அமலன்,
சனகன் மா மடமயிற்கு அந்தச் சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுறக் காட்டும். 1

'வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே!
தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல்,
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமஞ் சூல்
காளமேகமும் நாகமும் தெரிகில-காணாய்! 2

'குருதி வாள் எனச் செவ் அரி பரந்த கண் குயிலே!
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை,
சுருதிபோல் தெளி மரகதக் கொழுஞ் சுடர் சுற்ற,
பருதி வானவன் பசும் பரி புரைவன-பாராய்! 3

'வடம் கொள் பூண் முலை மட மயிலே! மதக் கதமா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமைதொறும் தொடக்கி,
தடங்கள் தோறும் நின்று ஆடுவ, தண்டலை அயோத்தி
நுடங்கு மாளிகைத் துகிற்கொடி நிகர்ப்பன-நோக்காய்! 4

'உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே!
துவரின் நீள் மணித் தடம்தொறும் இடம்தொறும் துவன்றி,
கவரி மால் நிற வால் புடை பெயர்வன, கடிதின்
பவள மால் வரை அருவியைப் பொருவிய-பாராய்! 5

'சலம் தலைக்கொண்ட சீயத்தால், தனி மதக் கத மா
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில், மடவார்
புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில்
கலந்த முத்து என, வேழ முத்து இமைப்பன-காணாய்! 6

'நீண்ட மால் வரை மதி உற, நெடு முடி நிவந்த
தூண்டு மா மணிச் சுடர் சடைக் கற்றையின் தோன்ற,
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடைப் பாகன்
காண் தகும் சடைக் கங்கையை நிகர்ப்பன-காணாய்! 7

'தொட்ட வார் சுனை, சுடர் ஒளி மணியொடும் தூவி
விட்ட சென்றன, விடா மத மழை அன வேழம்
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன, வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன-பாராய்! 8

'இழைந்த நூல் இணை மணிக் குடம் சுமக்கின்றது என்னக்
குழைந்த நுண் இடைக் குவி இள வன முலைக் கொம்பே!
தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப,
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்! 9

'உருகு காதலின் தழைகொண்டு மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந் தேனினை முழைநின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை,
பருக, வாயினில், கையின்நின்று அளிப்பது-பாராய்! 10

'அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்,
களிப்பு இல் இந்தியத்து யோகியைக் கரக்கிலன்; அதுபோல்,
ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக மாக்களைப்-பாராய்! 11

'ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!
கூடுகின்றிலர், கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன, கின்னர மிதுனங்கள்-பாராய்! 12

'வில்லி வாங்கிய சிலை எனப் பொலி நுதல் விளக்கே!
வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம்,
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடுங் கவலை
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன-காணாய். 13

'ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி
அருவி நீர்கொடு வீச, தான் அப் புறத்து ஏறி,
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனைக்-காணாய்! 14

'வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே!
சீறு வெங் கதிர் செறிந்தன, பேர்கல, திரியா
மாறு இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணிக்கல்-
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது-பாராய்! 15

'சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே!
நீல வண்டினம் படிந்து எழ, வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள், பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன-காணாய்! 16

'வில் கொள் வாள் நுதல், விளங்கு இழை, இளந் தளிர்க் கொழுந்தே!
எல் கொள் மால் வரை உம்பரின், இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்தக்
கற்கள், வானிடை மீன் என வீழ்வன-காணாய்! 17

'வரி கொள் ஒண் சிலை வயவர்தம் கணிச்சியின் மறித்த
பரிய கால் அகில் சுட, நிமிர் பசும் புகைப் படலம்,
அரிய வேதியர், ஆகுதிப் புகையொடும் அளவி,
கரிய மால் வரைக் கொழுந்து எனப் படர்வன-காணாய்! 18

'நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும்
சோனை வார் குழற் சுமை பொறாது இறும் இடைத் தோகாய்!
வான யாறு மீன் மலர்ந்தன எனப் புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன-காணாய்! 19

'மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ,
செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ,
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமலப்
பஞ்சு அளாவிய சீறடிச் சுவடிகள்-பாராய்! 20

'சுழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே!
கொழித்த மா மணி அருவியொடு இழிவன, கோலம்
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர்-காணாய்! 21

'அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து, ஒரு கடுவன் நின்று அடிப்பது-பாராய்!
பிறையை எட்டினள் பிடித்து, "இதற்கு இது பிழை" என்னா,
கறை துடைக்குறும் பேதை ஓர் கொடிச்சியைக்-காணாய்! 22

'அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது
எடுத்து நம்தமக்கு இயம்புவ எனக், கரிந்து இருண்ட
தொடுத்த மாதவிச் சூழலில், சூர் அரமகளிர்
படுத்து வைகிய பல்லவ சயனங்கள்-பாராய்! 23

'நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேரிழை! நிறை தேன்
வனைந்த வேங்கையில், கோங்கினில், வயிந்தொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில், கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு, அசுணமா வருவன-காணாய்! 24

'இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்!
அலவும் நுண் துளி அருவி நீர், அரம்பையர் ஆட,
கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன-பாராய்! 25

'செம் பொனால் செய்து, குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி வன முலைக் கொடியே!
அம் பொன் மால் வரை, அலர் கதிர் உச்சி சென்று அணுகப்
பைம் பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது-பாராய்! 26

'மடந்தைமார்களில் திலதமே! மணி நிறத் திணி கல்
தொடர்ந்த பாறையில், வேயினம் சொரி கதிர் முத்தம்
இடம்தொறும் கிடந்து இமைப்பன, எக்கு இளஞ் செக்கர்
படர்ந்த வானிடை, தாரகை நிகர்ப்பன-பாராய்! 27

'குழுவு நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெங் கனல் கதுவியது ஒப்பன-பாராய்! 28

'வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே!
தொளை கொள் தாழ் தடக் கைந் நெடுந் துருத்தியில் தூக்கி,
அளவு இல் மூப்பினர் அருந் தவர்க்கு, அருவி நீர் கொணர்ந்து,
களப மால் கரி குண்டிகைச் சொரிவன-காணாய்! 29

'வடுவின் மா வகிர் இவை எனப் பொலிந்த கண் மயிலே!
இடுகு கண்ணினர், இடர் உறு மூப்பினர் ஏக,
நெடுகு கூனல் வால் நீட்டின, உருகுறு நெஞ்சக்
கடுவன், மா தவர்க்கு அரு நெறி காட்டுவ-காணாய்! 30

'பாந்தள், தேர், இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்!
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயையக்
கூந்தல் மென் மயில் குறுகின நெடுஞ் சிறை கோலி,
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ-காணாய்! 31

'அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அருங்கலமே!
நலம்பெய் வேதியர் மார்பினுக்கு இயைவுற நாடி,
சிலம்பி, பஞ்சினில், சிக்கு அறத் தெரிந்த நூல், தே மாம்-
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன-பாராய்! 32

'தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே!
பெரிய மாக் கனி, பலாக் கனி, பிறங்கிய வாழை
அரிய மாக் கனி, கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப,
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன-காணாய்! 33

'ஐவனக் குரல், ஏனலின் கதிர், இறுங்கு, அவரை,
மெய் வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி,
பொய் வணக்கிய மா தவர் புரைதொறும் புகுந்து, உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன-காணாய்! 34

'இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன-பாராய்! 35

'அசும்பு பாய் வரை அருந் தவம் முடித்தவர், துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு, விண் தருவான்
விசும்பு தூர்ப்பன ஆம் என, வெயில் உக விளங்கும்
பசும்பொன் மானங்கள் போவன வருவன-பாராய்!' 36

இராமன் அந்தணரின் விருந்தினனாதல்

இனைய யாவையும் ஏந்திழைக்கு இயம்பினன் காட்டி,
அனைய மால் வரை அருந் தவர் எதிர்வர, வணங்கி,
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான்-
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன். 37

கதிரவன் மறைய மாலைப் பொழுது வருதல்

மா இயல் உதயம் ஆம் துளப வானவன்,
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக
கா இயல் குட வரை, கால நேமிமேல்,
ஏவிய திகிர்போல், இரவி ஏகினான். 38

சக்கரம் தானவன் உடலில் தாக்குற,
எக்கிய சோரியின் பரந்தது, எங்கணும்
செக்கர்; அத் தீயவன் வாயின் தீர்ந்து, வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது, இந்துவே! 39

ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ நனி முகிழ்த்தன, புலரி போன பின்;
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ,
வான் எனும் மணித் தடம், மலர்ந்த எங்குமே! 40

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின்
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின்
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின்
அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான். 41

மூவரும் மலை வழிபாடு செய்தல்

மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில்
மை அறு நறு மலர் மலர்ந்தவாம் சில்
ஐயனோடு, இளவற்கும் அமுதனாளுக்கும்
கைகளும், கண்களும், கமலம் போன்றவே. 42

இலக்குவன் குடில் அமைக்க, இராமனும் சீதையும் குடிபுகல்

மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும்,
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என,
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான். 43

இலக்குவன் அமைத்த சாலை

நெடுங் கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி, ஊழுற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே. 44

தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின்,
பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்றுறப்
போக்கி, மண் எறிந்து, அவை புனலின் தீற்றியே. 45

வேறு இடம், இயற்றினன் மிதிலை நாடிக்கும்,
கூறின நெறி முறை குயிற்றி, குங்குமச்
சேறு கொண்டு அழகுறத் திருத்தி, திண் சுவர்
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே. 46

மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து,
அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து,
எயில் இளங் கழைகளால் இயற்றி, ஆறு இடு
செயலுடைப் புது மலர் பொற்பச் சிந்தியே. 47

சீதையோடு இராமன் சாலையில் குடி புகுதல்

இன்னணம் இளையவன் இழைத்த சாலையில்,
பொன் நிறத் திருவொடும் குடி புக்கான் அரோ!-
நல் நெடுந் திசைமுகன் அகத்தும், நம்மனோர்க்கு
உன்ன அரும் உயிருளும், ஒக்க வைகுவான். 48

சாலையில் இராமன் மகிழ்ந்திருத்தல்

மாயம் நீங்கிய சிந்தனை, மா மறை,
தூய பாற்கடல், வைகுந்தம், சொல்லல் ஆம்
ஆய சாலை, அரும் பெறல் அன்பினன்,
நேய நெஞ்சின் விரும்பி, நிரம்பினான். 49

சாலை அமைத்த இலக்குவனை நினைத்து இராமன் நெகிழ்தல்

மேவு கானம், மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன்
தா இல் எம்பி கை சாலை சமைத்தன-
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே? 50

என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, 'இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இது போல்?' என்றான்-
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான். 51

'அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்,
படரும் நல் அறம் பாலித்து, இரவியின்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் என்பது என்?
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள்' என்றான். 52

இலக்குவனின் பதில் உரை

அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்,
'எந்தை! காண்டி, இடரினுக்கு அங்குரம்
முந்து வந்து முளைத்தது அன்றோ' என்றான். 53

இலக்குவனுக்கு இராமன் கூறிய ஆறுதல்

'ஆக, செய்தக்கது இல்லை; அறத்தினின்று
ஏகல் என்பது அரிது' என்றும் எண்ணினான்
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
'சோக பங்கம் துடைப்பு அரிதால்' எனா. 54

பின்னும், தம்பியை நோக்கி, பெரியவன்,
'மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு; இதற்கு
என்ன கேடு உண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு, மேல் வரும் ஊதியத்தோடு' என்றான். 55

நோன்பு இருந்து இராமன் மகிழ்ந்திருத்தல்

தேற்றித் தம்பியை, தேவரும் கைதொழ,
நோற்று இருந்தனன், நோன் சிலையோன்; இப்பால்,
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர்
கூற்றின் உற்றது கூறலுற்றாம் அரோ. 56

மிகைப் பாடல்கள்

'நெய் கொள் நீர் உண்டு, நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த
வை கொள் வேல் எனக் காலனும் மறுகுறும் கண்ணாய்!
மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய்!' 36-1

'விடம் கொள் நோக்கி! நின் இடையினை மின் என வெருவி,
படம் கொள் நாகங்கள் முழை புகப் பதைப்பன பாராய்!
மடங்கல் ஆளிகள் எனக் கொடு மழை இனம் முழங்க,
கடம் கொள் கார் மதக் கைம்மலை இரிவன காணாய்! 36-2

'எய்த இன்னல் வந்த போது யாவரேனும் யாவையும்
செய்ய வல்லர் என்று கொள்க் சேண் நெறிக்கண் நீங்கிட,
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய் எம்பிதன்
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே.' 50-1

'தினைத் துணை வயிறு அலாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளை வருத்தி வாழ்வன்
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே;
மனத்து இடர் நீங்கினார் இல்லை, மன்னனே!' 55-1



 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home