Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > அயோத்திய காண்டம் > 1 மந்திரப் படலம் > 2 மந்தரை சூழ்ச்சிப் படலம் >3 கைகேயி சூழ்வினைப் படலம் > 4 நகர் நீங்கு படலம் > 5 தைலம் ஆட்டு படலம் > 6 கங்கைப் படலம் > 7 குகப் படலம் > 8 வனம் புகு படலம் > 9 சித்திரகூடப் படலம் > 10 பள்ளிபடைப் படலம் > 11 ஆறு செல் படலம் > 12 கங்கை காண் படலம் > 13 திருவடி சூட்டு படலம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
அயோத்திய காண்டம் - 10. பள்ளிபடைப் படலம்பரதனிடம் தூதுவர் தம் வருகையை தெரிவித்தல்

பொரு இல் தூதுவர் போயினர், பொய் இலார்;
இரவும் நன் பகலும் கடிது ஏகினர்;
பரதன் கோயில் உற்றார், 'படிகாரிர்! எம்
வரவு சொல்லுதிர் மன்னவற்கே!' என்றார். 1

பரதன் தூதுவரிடம் நலம் விசாரித்தல்

'தூதர் வந்தனர், உந்தை சொல்லோடு' என,
காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்,
'போதுக ஈங்கு' என, புக்கு, அவர் கைதொழ,
'தீது இலன்கொல் திரு முடியோன்' என்றான். 2

தூதுவர் பதிலும், பரதனின் விசாரிப்பும்

'வலியன்' என்று அவர் கூற மகிழ்ந்தனன்;
'இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்
உலைவு இல் செல்வத்தனோ?' என, 'உண்டு' என,
தலையின் ஏந்தினன், தாழ் தடக் கைகளே. 3

தூதுவர் திருமுகம் கொடுத்தல்

மற்றும் சுற்றத் துளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்தபின்,
'இற்றது ஆகும், எழுது அரு மேனியாய்!
கொற்றவன் தன் திருமுகம் கொள்க' என்றார். 4

திருமுகம் பெற்ற பரதனின் மகிழ்ச்சி

என்று கூறலும், ஏத்தி இறைஞ்சினான்,
பொன் திணிந்த பொரு இல் தடக் கையால்,
நின்று வாங்கி, உருகிய நெஞ்சினான்
துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான். 5

தூதருக்கு பரதன் பரிசளித்தல்

சூடி, சந்தனம் தோய்த்துடைச் சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன்;
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்குக்
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன். 6

சத்துருக்கனனுடன் பரதன் அயோத்திக்கு புறப்படுதல்

வாள் நிலா நகை தோன்ற, மயிர் புறம்
பூண, வான் உயர் காதலின் பொங்கினான்,
தாள் நிலாம் மலர் தூவினன் - தம்முனைக்
காணலாம் எனும் ஆசை கடாவவே. 7

'எழுக சேனை' என்று ஏவினன்; எய்தினன்
தொழுது, கேகயர் கோமகன் சொல்லொடும்,
தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான். 8

பரத சேனையின் எழுச்சி

யானை சுற்றின் தேர் இரைத்து ஈண்டின்
மான வேந்தர் குழுவினர்; வாளுடைத்
தானை சூழ்ந்தன் சங்கம் முரன்றன்
மீன வேலையின் விம்மின, பேரியே. 9

கொடி நெருங்கின் தொங்கல் குழீஇயின்
வடி நெடுங் கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின் பூண் ஒளி பேர்ந்தன,
இடி துவன்றின மின் என, எங்குமே. 10

பண்டி எங்கும் பரந்தன் பல் இயம்
கொண்டு இயம்பின கொண்டலின்; கோதையில்
வண்டு இயம்பின் வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே. 11

துளை முகத்தின் சுருதி விளம்பின்
உளை முகத்தின் உம்பரின் ஏகிட,
விளை முகத்தன வேலையின் மீது செல்
வளை முகத்தன வாசியும் வந்தவே. 12

வில்லின் வேதியர், வாள் செறி வித்தகர்,
மல்லின் வல்லர், சுரிகையின் வல்லவர்,
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்,
தொல்லை வாரணப் பாகரும், சுற்றினார். 13

எறி பகட்டினம், ஆடுகள், ஏற்றை மா,
குறி கொள் கோழி, சிவல், குறும்பூழ், நெடும்
பொறி மயிர்க் கவுதாரிகள், போற்றுறு
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார். 14

நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில்,
'பறந்து போதும்கொல்' என்று, பதைக்கின்றார்,
பிறந்து, தேவர், உணர்ந்து, பெயர்ந்து முன்
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார். 15

ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத்
தான் அளைந்து தழுவின, தண்ணுமை;
தேன் அளைந்து செவி உற வார்த்தென,
வான் அளைந்தது, மாகதர் பாடலே. 16

ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை
வீறு கொண்டன, வேதியர் வாழ்த்து ஒலி;
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன, வந்திகர் வாழ்த்து அரோ! 17

பரதன் தன் படையுடன் கோசல நாடு சேர்தல்

ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி, ஏழ் பகல் நீந்தி, பின், எந்திரத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான். 18

கோசல நாட்டின் அலங்கோல நிலை

ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோள்
தார் துறந்தன் தண் தலை நெல்லினும்,
நீர் துறந்தன் தாமரை நீத்தெனப்
பார் துறந்தனள், பங்கயச் செல்வியே. 19

பிதிர்ந்து சாறு பெருந் துறை மண்டிடச்
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி;
முதிர்ந்து, கொய்யுநர் இன்மையின், மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன, ஒண் மலர் ஈட்டமே. 20

'ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம்' என
ஆய்ந்து, மள்ளர் அரிகுநர் இன்மையால்
பாய்ந்த சூதப் பசு நறுந் தேறலால்
சாய்ந்து, ஒசிந்து, முளைத்தன சாலியே. 21

எள் குலா மலர் ஏசிய நாசியர்,
புள் குலா வயல் பூசல் கடைசியர்,
கட்கிலார் களை; காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின், உயங்கினார். 22

ஓதுகின்றில கிள்ளையும்; ஓதியர்
தூது சென்றில, வந்தில, தோழர்பால்;
மோதுகின்றில பேரி, முழர் விழாப்
போதுகின்றில, பொன் அணி வீதியே. 23

பாடல் நீத்தன, பண்தொடர் பாண் குழல்;
ஆடல் நீத்த, அரங்கொடு அகன் புனல்;
சூடல் நீத்தன, சூடிகை; சூளிகை
மாடம் நீத்தன, மங்கல வள்ளையே. 24

நகை இழந்தன, வாள் முகம்; நாறு அகிற்
புகை இழந்தன, மாளிகை; பொங்கு அழல்
சிகை இழந்தன, தீவிகை; தே மலர்த்
தொகை இழந்தன, தோகையர் ஓதியே. 25

அலர்ந்த பைங் கூழ், அகன் குளக் கீழன,
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்,
உலர்ந்த-வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே. 26

நாவின் நீத்து அரு நல் வளம் துன்னிய,
பூவின் நீத்தென, நாடு, பொலிவு ஒரீஇ,
தேவி நீத்து அருஞ் சேண் நெறி சென்றிட,
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே. 27

நாட்டின் நிலை கண்ட பரதனின் துயரம்

என்ற நாட்டினை நோக்கி, இடர் உழந்து,
ஒன்றும் உற்றது உணர்ந்திலன், உன்னுவான்,
'சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம்' எனா
நின்று நின்று, நெடிது உயிர்த்தான் அரோ! 28

பொலிவிழந்த நகரை பரதன் பார்த்தல்

மீண்டும் ஏகி, அம் மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திருமுகன், புந்திதான்
தூண்டு தேரினும் முந்துறத் தூண்டுவான்,
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான். 29

பரதன் கொடி இழந்த நகரை காணுதல்

'அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய்; அமுது
உண்டு போதி' என்று, ஒண் கதிர்ச் செல்வனை,
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன,
கண்டிலன், கொடியின் நெடுங் கானமே. 30

பரதன் கொடை முரசு ஒலி இல்லாத நகரை காணுதல்

'ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும்,
வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து' எனக்
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன,
கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே. 31

பரதன் பரிசிலர் பரிசு பெறாத நகரைக் காணுதல்

கள்ளை, மா, கவர் கண்ணியன் கண்டிலன் -
பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும்,
வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர்,
கொள்ளை மாக்களின் கொண்டனர் ஏகவே. 32

அந்தணர் பரிசில் பெறாமை கண்டு பரதன் இரங்குதல்

காவல் மன்னவன் கான்முனை கண்டிலன்-
ஆவும், மாவும், அழி கவுள் வேழமும்,
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்,
பூவின் வானவர் கொண்டனர் போகவே. 33

இனிய இசை ஒலி இல்லாத அயோத்தி நகர்

சூழ் அமைந்த சுரும்பும், நரம்பும், தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால்,
மாழை உண் கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற, பொருநர் குழாங்களே. 34

மக்கள் இயக்கம் இல்லாமையால் பொலிவு இழந்த நகர வீதிகள்

தேரும், மாவும், களிறும், சிவிகையும்,
ஊரும் பண்டியும், ஊருநர் இன்மையால்,
யாரும் இன்றி, எழில் இல் வீதிகள்,
வாரி இன்றிய வாலுக ஆற்றினே. 35

நகரின் நிலை கண்ட பரதனின் கேள்வி

அன்ன தன்மை அக நகர் நோக்கினான்,
பின்னை, அப் பெரியோர் தம் பெருந்தகை,
'மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?
என்ன தன்மை? இளையவனே!' என்றான். 36

நகரின் நிலை அழிவைக் குறித்தல்

'வேற்று அடங்கலர் ஊர் என மெல்லிதால்;
சூல் தடங் கருங்கார் புரை தோற்றத்தான்
சேல் தடங் கண் திருவொடும் நீங்கிய
பால் தடங் கடல் ஒத்தது, பார்' என்றான். 37

சத்துருக்கனனின் உரை

குரு மணிப் பூண் அரசிளங் கோளரி
இரு கை கூப்பி இறைஞ்சினன், 'எய்தியது
ஒரு வகைத்து அன்று உறு துயர்; ஊழி வாழ்
திரு நகர்த் திரு தீர்ந்தனன் ஆம்' என்றான். 38

தயரதன் வாழுமிடத்தை பரதன் அடைதல்

அனைய வேலையில், அக் கடைத் தோரண
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள்
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும், தந்தை சார்விடம் மேவியான். 39

பரதன் தந்தையை மாளிகையில் காணாது துயருறுதல்

விருப்பின், எய்தினன், வெந் திறல் வேந்தனை,
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்;
'அருப்பம் அன்று இது' என்று, ஐயுறவு எய்தினான்-
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான். 40

கைகேயி பரதனை அழைத்தல்

ஆய காலையில், ஐயனை நாடித் தன்
தூய கையின் தொழல் உறுவான் தனை,
'கூயள் அன்னை; குறுகுதிர் ஈண்டு' என,
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள். 41

கைகேயியை பரதன் வணங்க அவள் விசாரித்தல்

வந்து, தாயை அடியில் வணங்கலும்,
சிந்தை ஆரத் தழுவினள், 'தீது இலர்
எந்தை, என்னையர், எங்கையர்?' என்றனள்;
அந்தம் இல் குணத்தானும், 'அது ஆம்' என்றான். 42

தந்தை எங்கு உளார் என பரதன் வினாவுதல்

'மூண்டு எழு காதலால், முளரித் தாள் தொழ
வேண்டினென், எய்தினென், உள்ளம் விம்முமால்;
ஆண் தகை நெடு முடி அரசர் கோமகன்
யாண்டையான்? பணித்திர்' என்று, இரு கை கூப்பினான். 43

கைகேயியின் பதில்

ஆனவன் உரை செய, அழிவு இல் சிந்தையாள்,
'தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தெரியலான், தேவர் கைதொழ,
வானகம் எய்தினான்; வருந்தல் நீ' என்றாள். 44

தயரதன் இறந்த செய்தி கேட்டு பரதன் மூர்ச்சித்தல்

எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும்,
நெறிந்து அலர் குஞ்சியான், நெடிது வீழ்ந்தனன்;
அறிந்திலன்; உயிர்த்திலன்;-அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே. 45

பரதன் கைகேயியை கடிந்துரைத்தல்

வாய் ஒளி மழுங்க, தன் மலர்ந்த தாமரை
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர,
'தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல்,
நீ அலது உரைசெய நினைப்பார்களோ?' என்றான். 46

பரதனின் புலம்பல்

எழுந்தனன்; ஏங்கினன்; இரங்கிப் பின்னரும்
விழுந்தனன்; விம்மினன்; வெய்து உயிர்த்தனன்;
அழிந்தனன்; அரற்றினன்; அரற்றி, இன்னன
மொழிந்தனன், பின்னரும்-முருகன் செவ்வியான். 47

'அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறந்தனை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ ? 48

'சினக் குறும்பு எறிந்து, எழு காமத் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய்! மறந்து,
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்பாலதோ? 49

'முதலவன் முதலிய முந்தையோர் பழங்
கதையையும் புதுக்கிய தலைவன்! கண்ணுடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை, எங்ஙனம் பிரிந்து போயினாய்? 50

'செவ் வழி உருட்டிய திகிரி மன்னவ!-
எவ் வழி மருங்கினும் இரவலாளர் தாம்,
இவ் வழி உலகின் இல்; இன்மை நண்பினோர்
அவ் வழி உலகினும் உளர்கொலோ?-ஐயா! 51

'பல் பகல் நிழற்றும் நின் கவிகைப் பாய் நிழல்
நிற்பன பல் உயிர் உணங்க, நீ நெடுங்
கற்பக நறு நிழல் காதலித்தியோ?-
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே! 52

'இம்பர் நின்று ஏகினை; இருக்கும் சார்பு இழந்து,
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ?
சம்பரன் அனைய அத் தானைத் தானவர்,
அம்பரத்து இன்னமும் உளர்கொலாம்?-ஐயா! 53

'இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை,
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி, உம்பரின்,
அயம் கெழு வேள்வியோடு, அமரர்க்கு ஆக்கிய,
வயங்கு எரி வளர்க்கலை, வைக வல்லையோ? 54

'ஏழ் உயர் மத களிற்று இறைவ! ஏகினை-
வாழிய கரியவன், வறியன் கை என,
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை, இனி, அவற்கு அளிக்க எண்ணியோ? 55

'பற்று இலை, தவத்தினின் பயந்த மைந்தற்கு
முற்று உலகு அளித்து, அது முறையின் எய்திய
கொற்றவன் முடி மணக் கோலம் காணவும்
பெற்றிலை போலும், நின் பெரிய கண்களால்?' 56

பரதன் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளல்

ஆற்றலன், இன்னன பன்னி ஆவலித்து,
ஊற்று உறு கண்ணினன், உருகுவான்; தனைத்
தேற்றினன் ஒரு வகை; சிறிது தேறிய,
கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான். 57

இராமனை வணங்கிலாலன்றித் துயர் போகாது என பரதன் இயம்பல்

'எந்தையும், யாயும், எம் பிரானும், எம் முனும்,
அந்தம் இல் பெருங் குணத்து இராமன்; ஆதலால்,
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்,
சிந்தை வெங் கொடுந் துயர் தீர்கலாது' என்றான். 58

கைகேயி இராமன் கானகம் சென்றதைக் கூறல்

அவ் உரை கேட்டலும், அசனிஏறு என,
வௌ; உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்;
'தெவ் அடு சிலையினாய்! தேவி, தம்பி, என்று
இவ் இருவோரொடும் கானத்தான்' என்றான். 59

பரதன் துயருறுதல்

'வனத்தினன்' என்று, அவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன்; இருந்தனன், நெருப்புண்டான் என்
'வினைத் திறம் யாது இனி விளைப்பது? இன்னமும்
எனைத்து உள கேட்பன துன்பம், யான்?' என்றான். 60

இராமன் வனம் சென்ற காரணத்தை பரதன் வினாவுதல்

ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல், 'அப்
பூங் கழல் காலவன் வனத்துப் போயது,
தீங்கு இழைத்த - அதனினோ? தெய்வம் சீறியோ?
ஓங்கிய விதியினோ? யாதினோ?' எனா. 61

'தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்' என்றான். 62

கைகேயின் பதில் உரை

'குருக்களை இகழ்தலின் அன்று; கூறிய
செருக்கினால் அன்று; ஒரு தெய்வத்தாலும் அன்று;
அருக்கனே அனைய அவ் அரசர் கோமகன்
இருக்கவே, வனத்து அவன் ஏகினான்' என்றாள். 63

பரதன் மீண்டும் வினாவுதல்

'குற்றம் ஒன்று இல்லையேல், கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல், தெய்வத்தால் அன்றேல்,
பெற்றவன் இருக்கவே, பிள்ளை கான் புக
உற்றது என்? தெரிதர உரைசெய்வீர்?' என்றான். 64

கைகேயி தான் பெற்ற வரம் பற்றி கூறல்

'வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து' என்றான். 65

பரதனின் சீற்றம்

சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி
கூடின் புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின் உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள்
ஓடின் உமிழ்ந்தன, உதிரம் கண்களே! 66

துடித்தன கபோலங்கள்; சுற்றும் தீச் சுடர்
பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது;
மடித்தது வாய்; நெடு மழைக் கை, மண் பக
அடித்தன, ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே. 67

பாதங்கள் பெயர்தொறும், பாரும் மேருவும்,
போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. 68

அஞ்சினர் வானவர்; அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனைப் பலர்; சொரி மதத் தொளை
எஞ்சின, திசைக் கரி; இரவி மீண்டனன்;
வெஞ் சினக் கூற்றும், தன் விழி புதைத்தே! 69

இராமனுக்கு அஞ்சி பரதன் தன் தாயைக் கொல்லாது விடுதல்

கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
'நெடியவன் முனியும்' என்று அஞ்சி நின்றனன்;
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான்: 70

பரதன் கைகேயியை பழித்துரைத்தல்

'மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்? 71

'நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
"ஏ" எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
"தாய்" எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ? 72

'மாளவும் உளன், ஒரு மன்னன் வன் சொலால்;
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால்,
கோள் இல அறநெறி! குறை உண்டாகுமோ? 73

'"சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு" எனும்,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ ? 74

'கவ்வு அரவு இது என இருந்திர்; கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து, உமை அகத்துளே வைத்த
வௌ; அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து,
இவ் வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ? 75 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home