Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > அயோத்திய காண்டம் > 1 மந்திரப் படலம் > 2 மந்தரை சூழ்ச்சிப் படலம் >3 கைகேயி சூழ்வினைப் படலம் > 4 நகர் நீங்கு படலம் > 5 தைலம் ஆட்டு படலம் > 6 கங்கைப் படலம் > 7 குகப் படலம் > 8 வனம் புகு படலம் > 9 சித்திரகூடப் படலம் > 10 பள்ளிபடைப் படலம் > 11 ஆறு செல் படலம் > 12 கங்கை காண் படலம் > 13 திருவடி சூட்டு படலம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
அயோத்திய காண்டம் - 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்



இராமன் முடிசூடப்படுவதை கோசலையிடம் அறிவிக்க மங்கையர் நால்வர் மகிழ்வுடன் செல்லுதல்

ஆண்ட அந்நிலை ஆக - அறிந்தவர்
பூண்ட காதலர், பூட்டு அவிழ் கொங்கையர்,
நீண்ட கூந்தலர், நீள் கலை தாங்கலர்,
ஈண்ட ஓடினர், இட்டு இடை உற்றிலர். 1

ஆடுகின்றனர்; பண் அடைவு இன்றியே
பாடுகின்றனர்; பார்த்தவர்க்கே கரம்
சூடுகின்றனர்; சொல்லுவது ஓர்கிலர்;
மாடு சென்றனர்; - மங்கையர் நால்வரே. 2

மங்கையரிடம் மகிழ்வுக்கான காரணத்தை கோசலை வினாவுதல்

கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள்,
கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை;
'உண்டு பேருவ கைப்பொருள் அன்னது
தொண்டை வாயினிர்! சொல்லுமின் ஈண்டு!' என்றாள். 3

மங்கையர் கோசலைக்கு செய்தி அறிவித்தல்

'மன் நெடுங் கழல் வந்து வணங்கிட,
பல் நெடும் பகல் பார் அளிப்பாய்!' என,
நின் நெடும் புதல்வன் தனை, நேமியான்,
தொல் நெடும் முடி சூட்டுகின்றான்' என்றார். 4

கோசலையின் மன நிலை

'சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில்
பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,
வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால் -
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே. 5

செய்தி சொன்னவர்க்கு பரிசு வழங்கி கோசலை சுமித்திரையுடன் கோயிலுக்குப் போதல்

அன்னவளாயும், அரும்பெறல் ஆரமும்,
நல் நிதிக்குவையும், நனி நல்கித்தன்
துன்னு காதல் சுமித்திரை யோடும் போய்,
மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள். 6

கோசலை திருமாலின் திருவடிகளை வணங்குதல்

மேவி, மென் மலராள், நிலமாது எனும்
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும்
ஆவியும், அறிவும், முதல் ஆயவன்
வாவி மா மலர்ப் பாதம் வணங்கினாள். 7

கோசலை திருமாலை வணங்கி இராமனுக்கு அருள் புரிய வேண்டுதல்

'என்வயின் தரும் மைந்தற்கு, இனி, அருள்
உன்வயத்தது' என்றாள் - உலகு யாவையும்
மன்வயிற்றின் அடக்கிய மாயனைத்
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள். 8

கோசலை கோதானம் புரிதல்

என்று இறைஞ்சி, அவ் இந்திரை கேள்வனுக்கு
ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை
நன்று இழைத்து, அவண், நல்ல தவர்க்கு எலாம்
கன்றுடைப் பசுவின் கடல் நல்கினாள். 9

தயரதன் வசிட்டனை வரவழைத்தல்

'பொருந்து நாள் நாளை, நின் புதல்வற்கு' என்றனர்,
திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெருந் திண் மால் யானையான், 'பிழைப்பு இல் செய் தவம்
வருந்தினான் வருக' என, வசிட்டன் எய்தினான். 10

இராமனுக்கு உறுதிமொழிகளை கூறும்படி வசிட்டனை தயரதன் வேண்டுதல்

'நல்லியல் மங்கல நாளும் நாளை; அவ்
வில்லியல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது' எனத் தொழுது சொல்லினான். 11

தம் மனைக்கு வந்த வசிட்டனை இராமன் வரவேற்றல்

முனிவனும், உவகையும் தானும் முந்துவான்,
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு, அலங்கல் வீரனும்,
இனிது எதிர்கொண்டு, தன் இருக்கை எய்தினான். 12

இராமனிடம் 'நாளை உனக்கு முடிசூட்டு விழா' என வசிட்டன் கூறுதல்

ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல்
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
'புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
நல்கும் நானிலம் நாளை நினக்கு' என்றான். 13

இராமனுக்கு வசிட்டன் கூறிய அறிவுரை

என்று, பின்னும் இராமனை, நோக்கி, "நான்
ஒன்று கூறுவ துண்டு, உறுதிப் பொருள்;
நன்று கேட்டுக் கடைப்பிடி நன்கு' என
துன்று தார் அவற்கு சொல்லுதல் மேயினான். 14

'கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உறைவானினும்,
விரியும் பூதம் ஒர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால். 15

'அந்தணாளர் முனியவும், ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும், தேவருள்
நொந்து உளாரையும், நொய்து உயர்ந்தாரையும்,
மைந்த! எண்ண, வரம்பும் உண்டாம்கொலோ? 16

'அனையர் ஆதலின், ஐய! இவ் வெய்ய தீ-
வினையின் நீங்கிய மேலவர் தாளிணை
புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி;
இனிய கூறிநின்று ஏயின செய்தியால். 17

'ஆவதற்கும், அழிவதற்கும், அவர்
ஏவ, நிற்கும் விதியும் என்றால், இனி
ஆவது எப்பொருள், இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்தே? 18

'உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,
மருள் இல் வாணியும், வல்லவர் மூவர்க்கும்;
தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,
அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ? 19

'சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்,
நீதி மைந்த! நினைக்கிலை; ஆயினும்,
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவையென ஓர்தியே? 20

'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? 21

'கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள்
நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு; அன்னது,
வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே! 22

'உமைக்கு நாதற்கும், ஓங்கு புள் ஊர்திக்கும்,
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்,
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும்,
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே. 23

'என்பு தோலுடையார்க்கும் இலார்க்கும், தம்
வன்பகைப்புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு நின்றுயர் மூன்று உலகத்தினும்
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ? 24

'வையம் மன்னுயிர் ஆக அம் மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு,
ஐயம் இன்றி, அறங்கடவாது, அருள்
மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? 25

'இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி நெறிகட வான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாங்கொலோ? 26

'சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத்
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ? 27

"ஓர்வு இல் நல் வினை ஊற்றத்தினார் உரை,
பேர்வு இல் தொல் விதி பெற்றுளது" என்றரோ,
தீர்வு இல் அன்பு செலுத்தலில், செவ்வியோர்
ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே. 28

'தூம கேது புவிக்கெனத் தோன்றிய
வாம மேகலை மங்கைய ரால்வரும்
காமம் இல்லை எனில், கடுங் கேடெனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே. 29

இராமனை வசிட்டன் திருமால் கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல்

ஏனை நீதி இனையவும் வையகப்
போன கற்கு விளம்பி, புலன்கொளீஇ
ஆன வன்னொடும் ஆயிரம் மௌலியான்
தானம் நண்ணினன், தத்துவம் நண்ணினான். 30

வசிட்ட முனிவன் இராமனுக்கு உரிய சடங்குகளை இயற்றுதல்

நண்ணி, நாகணை வள்ளலை நான்மறைப்
புண்ணி யப்புயல் ஆட்டிப், புலமையோர்
எண்ணும் நல்வினை முற்றுவித்து, ஏற்றினான்,
வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ. 31

நகரை அழகு செய்ய தயரதன் ஆணையிடல்

ஏற்றிட, ஆண்தகை இனிது இருந்துழி,
நூல் தட மார்பனும் நொய்தின் எய்தப் போய்,
ஆற்றல்சால், அரசனுக்கு அறிவித்தான்; அவன்
'சாற்றுக, நகர் அணி சமைக்க' என்றனன். 32

வள்ளுவன் பறை அறிவித்து செய்தி தெரிவித்தல்

ஏவினன் வள்ளுவர், 'இராமன், நாளையே
பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக்
கோ நகர் அணிக!' என, கொட்டும் பேரி அத்
தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார். 33

வள்ளுவன் சொல் கேட்ட மக்களின் மகிழ்ச்சி

'கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே
புவி அமை மணிமுடி புனையும்' என்ற சொல்,
செவி அமை நுகர்ச்சியது எனினும், தேவர்தம்
அவி அமுது ஆனது; அந் நகர் உளார்க்கெலாம். 34

அயோத்தி மக்கள் மகிழ்ந்து நகரை அலங்கரித்தல்

ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்;
தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம். 35

திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல்,
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
மணியினை வேகடம் வகுக்குமாறு போல்,
அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே. 36

வெள்ளிய, கரியன, செய்ய, வேறுள
கொள்ளைவான் கொடிநிரைக் குழாங்கள் தோன்றுவ-
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே. 37

மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்;-
அங்கவர் கழுத்தெனக் கமுகம் ஆர்ந்தன்
தங்குஒளி முறுவலின் தாமம் நான்றன்
கொங்கையின் நிரைத்தன, கனக கும்பமே. 38

முதிர் ஒளி உயிர்த்தன, முடுகிக் காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என-
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம்
புதியன அலர்ந்தன புதவ ராசியே. 39

துனி அறு செம்மணித் தூணம் நீல் நிறம்
வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின்
புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின,
பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே. 40

முத்தினின் முழு நிலவு எறிப்ப, மொய்ம் மணிப்
பத்தியின் இள வெயில் பரப்ப, நீலத்தின்
தொத்து இனம் இருள் வரத் தூண்ட, சோதிட
வித்தகர் விரித்த நாள் ஒத்த, வீதியே. 41

ஆடல் மான் தேர்க்குழாம் அவனி காணிய
வீடெனும் உலகின் வீழ் விமானம் போன்றன்
ஓடைமாக் கடகளிறு உதய மால் வரை
தேடருங் கதிரொடும் திரிவ போன்றவே. 42

வளங்கெழு திருநகர் வைகும் வைகலும்
பளிங்குடை நெடுஞ்சுவர் அடுத்த பத்தியில்
கிளர்ந்துஎரி சுடர்மணி இருளைக் கீறலால்-
வளர்ந்தில, பிறந்தில, செக்கர் வானமே. 43

பூமழை, புனல்மழை, புது மென் சுண்ணத்தின்
தூமழை, தரளத்தின் தோம் இல் வெண் மழை,
தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை,
மா மழை நிகர்த்தன - மாட வீதியே. 44

காரொடு தொடர் மதக் களிறு சென்றன,
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என்
தாரொடு நடந்தன பிடிகள், தாழ் கலைத்
தேரொடு நடக்கும் அத் தெரிவைமாரினே. 45

ஏய்ந்து எழு செல்வமும், அழகும், இன்பமும்,
தேய்ந்தில் அனையது தெரிந்திலாமையால்,
ஆய்ந்தனர் பெருகவும் - அமரர், இம்பரில்
போந்தவர், 'போந்திலம்' என்னும் புந்தியால். 46

அயோத்தி அலங்கரிக்கப்படுவதை கூனி காணுதல்

அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள். 47

கூனி கோபம் கொண்டு கைகேயின் அரண்மனை அடைதல்

தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்;
ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;
கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள். 48

தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள்-வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள். 49

நாற் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்
பாற்கடல் படு திரைப் பவள வல்லியே-
போல், கடைக் கண் அளி பொழிய, பொங்கு அணை-
மேல் கிடந்தாள் தனை, விரைவின் எய்தினாள். 50

கைகேயியை கூனி எழுப்புதல்

எய்தி, அக் கேகயன் மடந்தை, ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமைசால் செம் பொன், சீறடி
கைகளின் தீண்டினள் - காலக் கோள் அனாள். 51

கூனியின் உரை

தீண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள்,
நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்;
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வௌ; வினை
தூண்டிட, கட்டுரை சொல்லல் மேயினாள்; 52

'அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணங்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல்,
பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லை; நீ உறங்கு வாய்' என்றாள். 53

கைகேயின் மறுமொழி

வௌ;விடம் அனையவள், விளம்ப வேற்கணாள்,
'தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர்;
அவ்வவர் துறைதொறும் அறம் திறம்பவர்;
எவ்விடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு?' எனா, 54

'பராவரும் புதல்வரைப் பயக்க, யாவரும்
உராவருந் துயரைவிட்டு, உறுதி காண்பரால்;
விராவரும் புவிக்கெலாம் வேத மேயன
இராமனைப் பயத்த எற்கு இடர் உண்டோ ?' என்றாள். 55

'கோசலை வாழ்ந்தனள்' என கூனி கூறலும், கைகேயின் வினாவும்

ஆழ்ந்த பேரன்பினாள் அனைய கூறலும்,
சூழ்ந்த தீ வினைநிகர் கூனி சொல்லுவாள்,
'வீழ்ந்தது நின்னிலம்; திருவும் வீழ்ந்தது;
வாழ்ந்தனள் கோசலை, மதியினால்' என்றாள். 56

அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை
'மன்னவர் மன்னனேல், கணவன், மைந்தனேல்
பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன்; பார்தனில்
என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு?' என்றாள். 57

மந்தரை இராமன் முடிசூடுவதால் கோசலைக்கு வரும் வாழ்வை எடுத்து இயம்புதல்

'ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற,
தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,
கோடிய வரி சிலை இராமன் கோமுடி,
சூடுவன் நாளை; வாழ்வு இது' எனச் சொல்லினாள். 58

இராமன் முடிசூடப்போவதை அறிந்த கைகேயி மனம் மகிழ்தல்

மாற்றம் அஃது உரைசெய, மங்கை உள்ளமும்
ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால்;
வேற்றுமை உற்றிலள், வீரன் தாதை புக்கு
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே கொலாம்? 59

கைகேயி மந்தரைக்கு மணிமாலை பரிசளித்தல்

ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள். 60

கோபம்கொண்ட மந்தரை மாலையை எறிந்து கூறுதல்

தெழித்தனள்; உரப்பினள்; சிறுகண் தீயுக
விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;
அழித்தனள்; அழுதனள்; அம்பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை-அக் கொடிய கூனியே. 61

வேதனைக் கூனி, பின் வெகுண்டு நோக்கியே,
'பேதை நீ பித்தி; நிற் - பிறந்த சேயொடும்
நீ துயர் படுக் நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்' என்றாள். 62

'சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப, நின் மகன்,
அவந்தனாய், வெறு நிலத்து இருக்கல் ஆன போது,
உவந்தவாறு என்? இதற்கு உறுதி யாது?' என்றான். 63

'மறந்திலள் கோசலை, உறுதி மைந்தனும்,
சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான்,
இறந்திலன் இருந்தனன்; என் செய்து ஆற்றுவான்?
பிறந்திலன் பரதன், நீ பெற்றதால்' என்றாள். 64

'சரதம் இப் புவியெலாம், தம்பியோடும் இவ்
வரதனே காக்குமேல், வரம்பில் காலமும்
பரதனும் இளவலும், பதியின் நீங்கிப்போய்,
விரதமாம் தவம்செய விடுதல் நன்றுஎன்றாள். 65

'பண்ணுறு கடகரிப் பரதன், பார்மகள்
கண்ணுறு கவினராய் இனிது காத்த அம்
மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில்
எண்ணுறப் பிறந்திலன்; இறத்தல் நன்று' என்றாள். 66

'பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப்பண்டு
ஆக்கிய பொலங்கழல் அரசன், ஆணையால்
தேக்குயர் கல்லதர், கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்.' 67

மந்தரை, பின்னரும் வகைந்து கூறுவாள்;
'அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்
தந்தையும் கொடியன்; நல் தாயும் தீயளால்;
எந்தையே! பரதனே! என்செய் வாய்?' என்றாள். 68

'அரசரில் பிறந்து, பின் அரசரில் வளர்ந்து,
அரசரில் புகுந்து, பேர் அரசி யான நீ
கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்;
உரைசெயக் கேட்கிலை; உணர்தியோ?' என்றாள். 69

'கல்வியும், இளமையும், கணக்கில் ஆற்றலும்,
வில்வினை உரிமையும், அழகும், வீரமும்,
எல்லையில் குணங்களும், பரதற்கு எய்திய்
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல்' என்றாள். 70

மந்தரையின் கோப உரையால் கைகேயி சினந்து உரைத்தல்

வாய் கயப்புற மாந்தரை வழங்கிய வெஞ் சொல்,
காய் தனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற,
கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள்
தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்; 71

வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? - தீயோய்! 72

'எனக்கு நல்லையும் அல்லை நீ; என் மகன் பரதன் -
தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்,
உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட,
மனக்கு நல்லன சொல்லினை - மதி இலா மனத்தோய்! 73

'பிறந்து இறந்துபோய்ப் பெறுவதும், இழப்பதும், புகழே;
நிறம் திறம்பினும், நியாயமே திறம்பினும், நெறியின்
திறம் திறம்பினும், செய்தவம் திறம்பினும், செயிர்தீர்
மறம் திறம்பினும், வரன்முறை திறம்புதல் வழக்கோ? 74

'போதி, என் எதிர்நின்று; நின் புன் பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனன்; புறம் சிலர் அறியின்,
நீதி அல்லவும், நெறி முறை அல்லவும், நினைந்தாய்
ஆதி; ஆதலின், அறிவு இலி! அடங்குதி' என்றாள். 75

மந்தரை மீண்டும் பேசுதல்

அஞ்சி மந்தரை அகன்றிலள், அம் மொழி கேட்டும்,
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்தென்ன,
'தஞ்சமே! உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்;
வஞ்சி போலி!' என்று, அடிமிசை வீழ்ந்து, உரைவழங்கும். 76

'மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்வண்ணன்?
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால்,
மீத் தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ? 77

'அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்,
பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்;
மறம் நினைந்து உமை வலிகிலராயினும், மனத்தால்
இறலுறும்படி இயற்றுவர், இடையறா இன்னல். 78

'புரியும் தன்மகன் அரசு எனில், பூதலம் எல்லாம்
எரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமையாம்; என்றால்,
பரியும் நின்குலப் புதல்வற்கும், நினக்கும் இப் பார்மேல்
உரியது என், அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்! 79

'தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை
வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி? 80

'சிந்தை என் செயத் திகைத்தனை, இனி, சில நாளில்,
தம்தம் இன்மையும், எளிமையும், நிற்கொண்டு தவிர்க்க,
உந்தை, உன் ஐ, உன் கிளைஞர், மற்ற உன் குலத்து உள்ளோர்,
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்! 81

'காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத் தெறுகிலன்; இராமன்
மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ ?
பேதை! உன் துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்? 82

'மற்றும் நுந்தைக்கு வான்பகை பெரிதுள மறத்தார்
செற்ற போது, இவர் சென்று உதவார் எனில், செருவில்
கொற்றம் என்பது ஒன்று, எவ்வழி உண்டு? அது கூறாய்?
சுற்றமும் கெடச் சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்! 83

'கெடுத்து ஒழிந்தனை உனக்கரும் புதல்வனைக் கிளர்நீர்
உடுத்த பாரக முடையவன், ஒருமகற்கு எனவே
கொடுத்த பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும்,
அடுத்த தம்பிக்குமாம்; பிறர்க்கும் ஆகுமோ?' என்றாள். 84

கைகேயி உள்ளம் திரிதல்

தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும். 85

அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும்,
துரக்க, நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ, இன்று இவ் உலகங்கள் இராமன்
பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே.? 86

உள்ளம் திரிந்த கைகேயி பரதன் முடிசூட உபாயம் கேட்டல்

அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்,
வினை நிரம்பிய கூனியை, விரும்பினள், நோக்கி,
'எனை உவந்தனை; இனியை என் மகனுக்கும்; அனையான்
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி' என்றாள். 87

மந்தரை உரைத்த உபாயம்

மாழை ஒண் கணி உரைசெய, கேட்ட மந்தரை, 'என்
தோழி வல்லள்; என் துணை வல்லள்' என்று, அடி தொழுதாள்;
'தாழும் மன் நிலை; என் உரை தலைநிற்பின், உலகம்
ஏழும் ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென்' என்றாள். 88

'நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்; நளிர் மணி நகையாய்!
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை,
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்
கோடி' என்றனள், உள்ளமும் கோடிய கொடியாள். 89

'இரு வரத்தினில், ஒன்றினால் அரசு கொண்டு, இராமன்
பெரு வனத்திடை ஏழ் - இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி, ஒன்றினால்; செழு நிலம் எல்லாம்
ஒருவழிப்படும் உன் மகற்கு; உபாயம் ஈது' என்றாள். 90

கூனியைக் கைகேயி புகழ்ந்துரைத்தல்

உரைத்த கூனியை உவந்தனள், உயிர் உறத் தழுவி,
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி,
'இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்;
தரைக்கு நாயகன் தாய் இனி நீ' எனத் தணியா. 91

கைகேயின் உறுதிமொழி

"நன்று சொல்லினை; நம்பியை நளிர்முடி சூட்டல்;
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல்; இவ் இரண்டும்
அன்றது ஆம்எனில், அரசன்முன் ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென்யான்; போதிநீ" என்றாள். 92

மிகைப் பாடல்கள்

பொன்னும் மா மணியும், புனை சாந்தமும்,
கன்னி மாரொடு காசினி ஈட்டமும்,
இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு;
அன்ன முந்தளிர் ஆடையும் நல்கினாள் 9-1

நல்கி, நாயகன் நாள்மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி, வணங்கி, புரையிலா
மல்லல் மாளிகைக் கோயில் வலங்கொளா
தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள் 9-2

கடி கமழ் தாரினான், கணித மாக்களை
முடிவு உற நோக்கி, ஓர் முகமன் கூறிப்பின்
'வடி மழுவாளவற் கடந்த மைந்தற்கு
முடிபுனை முதன்மை நாள் மொழிமின்' என்றனன். 9-3

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home