ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம்
முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம்
EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam
Introduction by mu. Ponnambalam & cu. Vilvarathinam
[ Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N.
Kannan, Kiel, Germany (input); Mr. Ramanitharan Kandiah, New
Orleans, USA (Proof-reading)Web version: K. Kalyanasundaram,
Lausanne, Switzerland � Project Madurai 1999 Project Madurai
is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them
free on the Internet. Details of Project Madurai are available at
the website
http://www.tamil.net/projectmadurai You are welcome to
freely distribute this file, provided this header page is kept
intact.
To view the Tamil text
correctly you need to set up the following: i). You need to have
Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS,
TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or
Windows XP). and ii) Use a browser that is capable of handling
UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode
Tamil font chosen as the default font for the UTF-8
char-set/encoding view. The Latha font may be downloaded from
here]
0. முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம்
1. அரசியல், சமூக,
பொருளாதாரப் பின்னணி
2. பொதுப் பின்னணியைப்
பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்'
3. சோஷலிச
யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்
4. 'நற்போக்கும்'
'முற்போக்கும்'
5. 'முற்போக்கு'
எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்
6. சர்வாதிகாரத்தைக்
கண்டு தப்பி ஓடியவர்
7. சர்வாதிகாரத்தை
தனித்து நின்று எதிர்த்தவர்
8. பொதுப் பின்னணி
கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
0. முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம்
தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர்
மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு
அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள
குறுகிய கால எல்லையுள் இயங்கிய ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குகளை
ஆய்வதுபோல அது தோற்றினும், முன்னுக்கும் பின்னுக்குமாக அது இலக்கியத்தை
ஒட்டிய சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றுப் பார்வையில் எடுக்கும்
பாய்ச்சல்கள் மிகப் பெரிதாய் விரிகின்றன. ஆட்களை வைத்துக்கொண்டு
போக்குகளைக் காட்டியும் போக்குகளில் இருந்து ஆட்களைத் தேர்ந்தும்
ஒன்றோடொன்று பின்னியும் பிரித்தும் ஆக்க ரீதியான இலக்கிய
விமர்சனமாகவும் இலக்கியமாகவும் ஓர் சமூகத்தின் மனோ அலசலாகவும் மாறி
மாறித் தன்னைக் காட்டும் இவ்வாக்கம் தமிழில் தோன்றிய இவ்வகை
இலக்கியங்களுள் தனியானது.
விமர்சக விக்கிரகங்கள் என்ற கட்டுரைத் தொடர் மூலம் ஈழத்து இலக்கிய
விமர்சகர்களையே ஆக்க ரீதியில் விமர்சித்த எழுத்தாளனாய்
விமர்சனத்துறையில் இறங்கிய மு.த. மூன்றாம் பக்கம், முற்போக்கு
இலக்கியம் ஆகிய விமர்சனங்கள் மூலம் தனக்கெனத் தனி முத்திரை பதித்து
தனக்கே உரிய நடுநிலை நோக்கில் எல்லாப் போக்குகளுக்குமுரிய நல்லதைக்
கறந்தும் கெட்டதைக் கண்டித்தும் ஒரு மூன்றாம் பக்கப் போக்கை உருவாக்கி,
'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் அதன் உச்சத்தையே தொட்டுவிடுகிறார்.
சுருங்கச் சொன்னால் ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குகளை தர்க்க ரீதியாக
வளர்த்துக் காட்டுபவர் வராகவே உள்ளார்.
இவர் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி'யை எழுதிக்கொண்டிருக்கும் காலத்தில்
கூட இலக்கிய உலகின் விமர்சகர்கள் என்று பெயர் எடுத்துக்கொண்டவர்கள்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் எழுதவில்லை என்றே சொல்ல
வேண்டும். அதோடு மார்க்சீய விமர்சகர்களாய் இவர்கள் இருந்தபோதும் சமூக,
பொருளாதார, அரசியல், வரலாற்றுக் கண்கொண்டு இலக்கிய ஆய்வுகள் செய்வதும்
இவர்களுக்கு அந்நியமானதாகவே இருந்தது. 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி'யின்
வெளிப்பாடு. இத்தகைய பார்வைக் குறைவுகளுக்கும் நொண்டித்தனங்களுக்கும்
முற்றுப்புள்ளி வைப்பதாகவே அமைந்தது.
'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' மூலம் மு.த. மிக ஆழமான சில விஷயங்களைத்
தனக்கே உ��ய தெளிவோடு மிக எளிதாக விளக்கிக் காட்டுகிறார்.
முதலாவதாக, சரித்திர ஓட்டம் பற்றிய விஞ்ஞான ரீதியான விளக்கங்களுக்கு
எதிராக, சந்தர்ப்ப விபத்தும் சா�த்திரம் செய்கிறது என்பதை
நிரூபிக்கிறார்.
இரண்டாவதாக, முன்னதன் பெறுபேறாய் ஈழத் தமிழர்களின் அரசியல், சமூக,
பொருளாதாரப் பின்னணி வேறாக இருக்க, அக்கால இலக்கிய உலகு பிரதிபலிக்கத்
தொடங்கிய 'முற்போக்கு வாதம்' வேறானதாக அமையும் பிறழ்வுபற்றி
விளக்குகிறார். அதாவது அரசியலில் ஈழத் தமிழர்கள் அனைவரும் தமக்கு
சமஷ்டி ஆட்சிமுறையே தேவையென்று ஓரணியில் நின்று முன்வைக்கும்
கோரிக்கைக்கு எதிராக, 'முற்போக்கு இலக்கியம்' பிரதிபலித்த ஒன்றையாட்சி
முறையும் அதற்குரிய தேசிய வாதமும் நிற்கின்றன என்ற விளக்கம். அதோடு
மான்ய முறையை விட்டகலாத விவசாயப் பொதுப் பின்னணியில் ஆலை - தொழிலாளி -
முதலாளி போராட்டம் என்னும் கற்பனைகள். அதனால் அளவுகெட்டுப்
பிரதிபலிக்கத் தொடங்கிய பொதுப் பின்னணி.
இவற்றை மு.த. மிக அழகாக விளக்கிச் செல்கிறார். இவற்றின் விளக்கங்கள்
அவர் காட்டும் ஈழத்தின் பொருளாதார, சமூக, அரசியல் பின்னணி ஆய்வில்
தானாகவே வந்து விழுகின்றன.
ஆனால் ஈழத்து அரசியல்பற்றி அதிகம் தெரியாதவர்கள் இதைச் சுவைக்கவோ தன்
முக்கியத்துவத்தை உணரவோ முடியாமல் போகும் என்பதும் உண்மையே. அதனால்
அதுபற்றியும் சுருக்கமாக சில விளக்கங்களை தருவது அவசியமே. முக்கியமாக
ஈழத்து அரசியல்பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்காத தமிழ்நாட்டு
எழுத்தாளர்களுக்கு இது உதவும் என்பதால். (ஈழத்து அரசியபற்றி எதுவும்
தெரியாமலேயே அநேக தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை
இங்கு வந்த தமிழ்நாட்டெழுத்தாளர் மூலமே அறிந்துள்ளோம்.)
இலங்கை 1948ல் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி
(U.N.P.)யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (S.L.F.P.)யுமே, இது காலவரை
மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. U.N.P. முதலாளித்துவ, அமெரிக்கச்
சார்புடையதாகவும் S.L.F.P. அதற்கு எதிரானதாகவும் காட்டிக் கொண்டுள்ளன.
ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவும் காட்டிக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ்
மக்களுக்கு எதிரான இனத்துவேஷம் மேலோங்கலுக்கு, பின்னதே அதிக காரணமாய்
இருந்துள்ளது.
1956ல் முதல்முதலாக S.L.F.P. பண்டாரநாயக்காவின் தலைமையில் ஆட்சிக்கு
வந்தபோது 24 மணித்தியாலத்துக்குள் ஆங்கிலத்துக்குப் பதில் சிங்களத்தை
அரசகரும மொழியாக்கும் வாக்குறுதியோடுதான் வந்தது.
தெற்கில் தன் எழுச்சி, வடக்கில் அதன் எதிர்விளைவாக தமிழ் மக்களிடையே
இதுகாலவரை ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் U.N.P. யை அடிவருடிய தமிழ்க்
காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் இயங்கிய
தமிழரசு கட்சி என்றழைக்கப்படும் சமஷ்டிக் கட்சியை பெரும் வெற்றிபெறச்
செய்தது. தெற்கில் தனிச்சிங்களம் என்றால் வடக்கில் எல்லாம் தமிழ்
இயக்கம் என்ற எதிர்க்கோஷம்.
இச்சந்தர்ப்பத்தில் இடதுசாரிக் கட்சிகள் பொருளாதார நோக்கிலிருந்து
முன்வைத்த தீர்வுகள் வடக்கிலும் தெற்கிலும் செல்லுபடியாகவில்லை.
(இன்றும் அதுவே உண்மை.) கூடவே சமஷ்டி ஆட்சியின் தேவையை இடதுசா��கள்
உணர்ந்தபோதும், பலவித அரசியல் காரணங்களுக்காக அவர்கள் அதைப்
புறக்கணித்து ஒற்றை ஆட்சி தேசியம் பேசி, தமிழ் மக்களின் ஏகோபித்த குரலை
நசுக்கினர். இதுவே பொதுப் பின்னணி.
இந்தப் பின்னணியில் ஏதோ சோசலிசத்தை நோக்கிய நாடுகளில் நடைபெறுவதுபோல்,
எப்படி ஆலைகளும், முதலாளி தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும்
சுலோகங்களும் எழுந்தன? பொதுப் பின்னணி வேறாக இருக்க, எப்படி ஒற்றை
ஆட்சியையும் தேசிய வாதத்தையும் அழுத்தும் 'முற்போக்கு இலக்கியம்'
முன்னுக்கு வந்தது?
இதைத்தான் மு.த. சந்தர்ப்ப விபத்து சரித்திரம் செய்கிறது என்கிறார்.
அதாவது க. கைலாசபதி, தினகரன் ஆசிரியராக வந்த சந்தர்ப்ப விபத்தால் வந்த
விளைவு என்பதை விளக்குகிறார். அதிலிருந்து பொதுப் பின்னணி அளவுகெடத்
தொடங்கியதோடு அதன் தொடர் விளைவாக பல அளவுகள் கெடத் தொடங்கின.
வெளியிலிருந்து பார்ப்போருக்கு இது பெரும் மாறுபட்டவிளக்கத்தையே தரும்
என்பதை மு.த. விளக்கிச் செல்கிறார்.
மு.த.வின் நோக்கம் தோற்றங்களைக் கிழித்து உண்மையைக் காட்டுவதே. அது
விமர்சனமாய் இருந்தாலும் சரி, ஆக்க இலக்கியமாக இருந்தாலும் சரி,
அவற்றின் மூலம் உண்மை நிலைநாட்டப்படலே மு.த.வின் நோக்கம். அது 'ஏழாண்டு
இலக்கிய வளர்ச்சி'யிலும் செவ்வனவே நடைபெறுகிறது. தனக்கு மாறான
இலக்கியப் போக்கைக் கொண்டெழுந்த பொதுப் பின்னணி எப்படி ஈற்றில்
தனக்குரிய ஒன்றைக் கண்டடைகிறது என்பதை விமர்சனப் போக்கில் கதை போலவும்
சுவைபட மு.த. விளக்கிச் செல்கிறார். இந்த விளக்கத்தில் மாறுபட்டுக்
கிடந்த ஒவ்வொன்றும் தமக்குரிய இடத்தில் வந்து நின்று உண்மைக்கு
வழிவிடுகின்றன.
இக்கட்டுரைத் தொடர், திரு ஆர்.எம். நாகலிங்கம் என்பவரை ஆசிரியராகக்
கொண்டு, இலங்கை கண்டியிலிருந்து சில ஆண்டுகள் வெளிவந்த 'செய்தி' என்ற
பத்திரிகையில் 26.1.64 முதல் 17.1.65 வரையிலான ஓராண்டு காலம் வாரா
வாரம் (அநேகமாக) 33 பகுதிகளாகப் பிரசுரமானது.
கட்டுரைத் தொடர் வெளிவந்த செய்தி இதழ்கள் சில கைவசம் இல்லாத நிலையில்,
இலங்கை தேசியக் சுவடிகள் திணைக்களத்திலிருந்து அவற்றினை பிரதி
எடுத்துத் தந்த நீர்கொழும்பு செல்வன் ப. விக்னேஸ்வரனுக்கும் தேசிய
சுவடிகள் திணைக்களத்தில் நாலுநாட்கள் செலவிட்டு மூலப்பிரதிகளுடன்
ஒப்பிட்டு, தேவைப்பட்டதிருத்தங்களைச் செய்ததோடு செம்மையான கையெழுத்துப்
பிரதியைத் தயாரித்துதவிய நண்பர் ஜீவகாருண்ணியத்திற்கும் நன்றி கூறக்
கடமைப்பட்டுள்ளோம்.
மு.பொன்னம்பலம்
சு. வில்வரத்தினம்
|