Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Struggle for Tamil Eelam > International Frame of  Struggle for Tamil Eelam  > India & the Struggle for Tamil Eelam > Tamil Nadu & the Struggle for Tamil Eelam > தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு "தமிழக"த்தில்தான் உள்ளது

India & the Struggle for Tamil Eelam
 
தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு "தமிழக"த்தில்தான் உள்ளது

தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

in Jaffna Daily, Uthayan, 18 November 2007

"...தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் ஒத்துழைக்கும். ... மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்... தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும். "

Comment by tamilnation.org We find ourselves in agreement with much of Mr.Thirunavaukarasu's well thought out and perceptive analysis. We entirely agree with his conclusion that the road to international recognition of Tamil Eelam starts in Tamil Nadu - the road is from Chennai to New Delhi to the World. That Mr.Thirunavaukarasu writes from Jaffna in Tamil Eelam reflects the depth of understanding that those on the ground in Tamil Eelam have of the international frame of the struggle for Tamil Eelam - ironically, an understanding which sometimes escapes those outside. And it is entirely appropriate that Mr.Thirunavaukarasu's analysis was written in Tamil - because it is in Tamil that we will reach those who form the bed rock of  the democratic struggle of the people of Tamil Eelam to be free from alien Sinhala rule.  Mr.Thirunavaukarasu is right to speak in Tamil to Tamil hearts and minds in many lands and across distant seas. Those (and we count ourselves as one of them) who write in English about the struggle of the people of Tamil Eelam are at best translators. It is not that translators are not needed but we need to recognise that often much may be lost in translation. To use a felicitous metaphor coined by Roger Fisher, to understand a beetle, it is not enough to think like a beetle – you must also begin  to feel like one - and that you can do only in the language of the beetle. Perhaps, it was Lord Macaulay's awareness of the power of language to influence, that led him, in his infamous Education Minute  of 1835,  to prescribe for India, an education in the English language so that the British may "form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect."



C.N.Annadurai"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார்.  மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.

அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.

மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது ஜனநாயகம் ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இது தான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் "சாமானியர்களின் தசாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்றதன் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.

இலங்கைத்தீவின் அரசியலும் அரசியல் தீர்மானங்களிலும் தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது, தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது
சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது
ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டது தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும்.

அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போது உலகிலுள்ள அரசுகள் அரசு என்ற ரீதியில் சிங்கள இனவான அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் பொதுப் போக்காய் அமைந்தது.

பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தம் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப்போக்கை நடைமுறையிற் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் ஒத்துழைக்கும்.

இந்த அடிப்டையில் இலங்கை அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் "அரசு", "அரசாங்கம்" என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடை போட வேண்டும்.

அதாவது உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கை அரசு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அவைக்கு இலங்கை அரசு அவசியம் என்றதன் அடிப்படையில் தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.

இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பத்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும் தான்.

முழு இந்தியாவிலுமே அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழக மக்கள் உள்ளனர். இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும். இத்தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு.  சிங்கள உயர் குழாத்தின் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் அவர்கள் உள்ளனர்.

அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்டெழும் போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.
புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாயும்.
இது தான் எளிமையான சூத்திரம். முதலில் இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக ஒரு கணம் விளக்குவோம்.

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு ஓர் அரசாக இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும்.

அது ஒரு புறமாக இருக்கட்டும்.

புதுடில்லி மேற்படி தவறாக புரிந்து கொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதலாவதாக ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகம் எழுச்சி பெறும் போது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது.

இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக்கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

 

இரண்டாவது அம்சம் மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள் இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்டரசாங்கங்களே இனிமேல் பதவிக்கு வரலாம்.

இந்த வகையில் கூட்டரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.

ஆதலால் தமிழக மக்கள் தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி. அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது.

இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இதனைத்தெளிவாகக் காணலாம்.

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசம் தமிழ் மக்களின் கையில் இல்லை என்றாலும் சிங்கள உயர்குழாத்து இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும்.

இதன் படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால் தமிழக மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன் அதன் வழி முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும். ஆதலால் தமிழீழ மக்களின் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத் தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு.

தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுற்கு ஆதரவு இல்லை என்பது வெளிப்படையானது.

ஆனால் தமிழகத்தின் ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசுடனும் தலைசாய்க்க தொடங்கும். அதனைத் தொடர்ந்து உலகில் ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும் இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம்.

ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான திறவுகோல் சென்னையில்தான் உள்ளது. அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட..

தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும்.

சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை.

அவர்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டு வர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு. பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக அனைத்துக் கட்சிகளையும் கோரி நிற்பதையுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

மக்கள் அலை எழும் போது கட்சிகள் மக்கள் அலைக்கு செவிசாய்க்கும்.

ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்கு அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே அவசியமான மூலோபாயமாகும்.

தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத்தொடங்கியுள்ளது. அதனைப்பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

முதலமைச்சர் தொடக்கம் இடதுசாரியக் கட்சிகள் உள்ளடக்கலாக சிறிய கட்சிகள் வரை இந்த ஆதரவு அலை எழுந்திருக்கின்றது. இது முழுத்தமிழக மக்கள் தழுவியதாக கட்சி பேதங்களுக்கும் அப்பால் பற்றிப் பரவக்கூடிய தொடக்கத்தை கொண்டுள்ளது.

இதனைத் தக்க வகையில் பயன்படுத்தவேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

உலக அரசியல் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப்பொருளாதார ஒழுங்கு தான்.

உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமிர்த்தம் சந்தைகளாக பங்கு போட்டுள்ளன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடைய உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது.

ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை சந்தையிற் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.

இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய அரசுகளும் இலங்கை அரசுடன் அரசென்ற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை.

கொடியின் நிறம்தான் வேறு கொடித்துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம்.

மேற்படி பெரிய அரசுகளின் உலகலாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம் தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.

உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும்.

தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றிவளைத்தே ஒடுக்குகின்றது.

அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது.

இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.

ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும்.

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home