"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil National Forum > Selected Writings - M.Thanapalasingham > நவீன இஸ்றேலின் 60 ஆண்டுகாலச் சுதந்திரமும் ஈழத்தமிழரின் 60 ஆண்டுகளான அவலங்களும் சுதந்திரப் போராட்டமும்.
Selected Writings
M.Thanapalasingham, Australia
நவீன இஸ்றேலின் 60 ஆண்டுகாலச் சுதந்திரமும் ஈழத்தமிழரின் 60 ஆண்டுகளான
அவலங்களும் சுதந்திரப் போராட்டமும் யூதர்கள் எனப்படும் இஸ்றேலிய
மக்கள் மே மாதம் 14 ஆம் திகதி 1948 ஆண்டு இஸ்றேல் என்னும் தேசத்தைப்
பிரகடனம் செய்தனர். சூரியனே அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராச்சியத்தின்
அஸ்தமனத்தின் பல நிகழ்வுகளில் ஒன்றாகப் பிரித்தானியாவின் கடைசி இராணு
வத்தினர் பாலஸ்தீன மண்ணைவிட்டு வெளியேறினர். தம் முந்தையர் ஆயிரம்
ஆண்டுகள் வாழ்ந்த தமது தந்தையர் நாட்டின் இறைமையை மீட்டுக் கொண்டதாக
டேவிட் பென் கூறீயன்
(David
Ben-Gurion)
பிரகடனம் செய்தார்.
அந்தப் பிரகடனத்தில் இஸ்றேலிய மண் யூதமக்களின் தொட்டிலாகும்.
இங்குதான் அவர்களின் ஆன்மீக, சமய, அரசியல் அடையாளங்கள் வடிவம் பெற்றன.
அவர்களின் தேசிய, சர்வதேசிய பண்பாட்டுக் கோலங்கள் இந்தமண்ணில்தான்
விதைக்கப்பெற்று அறுவடையாகி உலகிற்கே வழங்கப்பட்டது. இந்த மண்ணில்
இருந்து அவர்கள் பல முறை துரத்தப்பட்டபோதும் என்றோ ஒரு நாள் இந்த மண்ணை
மீட்போம் அதில் எமது இழந்த இறைமையை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கையை
அவர்கள் என்றுமே கைவிடவில்லை.
1897
ஆம் ஆண்டு யூதமக்களின் தேசத்தின் ஆன்மீகத் தலைவரான தியோடோர் ஹேசல்
(Theodor
Herzl )
யூததாயக இயக்கத்தின் முதல் காங்கிரசில் தம் மண்ணில் அவர்களுக்கான
தேசியப் பிறப்பின் உரிமையைப் பிரகடனம் செய்தார். இந்த உரிமை 2 ஆம்
திகதி நவம்பர் 1917 இல் செய்யப்பட்ட பல்போர்
(
Balfour Declaration of the 2nd November 1917)
பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பிரகடனத்தின் மூலம்
இஸ்றேல்மீது யூதமக்களுக்குள்ள வரலாற்று உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது
எனக் கூறிய பென் கூறீயன் நவீன இஸ்றேலைக் கட்டி எழுப்பவும் அதனை மற்றைய
தேசங்களின் வரிசையில் வரவேற்குமாறும் ஜக்கிய நாடுகள் தாபனத்திற்கு
அழைப்பு விடுத்தார். தம்
மண்ணில் வாழும் அரேபியர்களுக்கும் அயலாரான அரேபியர்களுக்கும் நேசக்கரம்
நீட்டினார். புலம் பெயர்ந்து வாழும் யூதமக்களை தேசநிர்மாணத்திற்கு
அவர்களின் பங்கினைச் செலுத்துமாறு வேண்டி நின்றார். இன்று 60 ஆண்டுகளாக
சுதந்திரத்தை சுகித்து நிற்கும் யூததேசம் பல சோதனைகளைக் கடந்தவண்ணம்
உள்ளது. பாலஸ்தீன மக்களை அவர்கள் நடத்தும் விதம் ஏற்றுக் கொள்ள
முடியாதவை. தம் மண்ணில் இழந்த தம் இறைமையை மீட்டு எடுப்பதற்கான தமிழீழ
மக்களின் போராட்டத்திற்கு எதிராக அவர்கள் செயல்படுவதும் ஏற்க
முடியாதவை.
அவைபற்றிய உரத்த சிந்தனைகள்
,உரையாடல்கள் இடம் பெற வேண்டும். இங்கு அவற்றைத் தவிர்த்து
யூதமக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றிய ஒரு
அகலப்பார்வையே இக் கட்டுரையாகும்.இஸ்றேலிய மக்கள் ஒருவனே தேவன் என்ற
நம்பிக்கையை ஏற்படுத்திய ஏப்பிரகாம் என்பவரின் வழித்தோன்றலாகத் தம்மைக்
கூறிக்கொள்கின்றனர். ஏபிரகாமும்
(Abraham
)
அவரின் மகனான ஜசாக்
(Isaac)
மற்றும் பேரனான இஸ்றேல்
;(Israel
)
ஆகியோரின் உடல்வழிப் பூந்துகளே தாம் எனக் கூறிக்கொள்கின்றனர்.
இவை பற்றிய செய்திகளை பழைய
ஏற்பாட்டில் காணலாம். ஆனால் ஏபிரகாமின் வழித்தோன்றல்களான இஸ்றேலியர்
யூதர்கள் என்ற இன அடையாளத்தை கி.மு 1300 இல் எகிப்தில் இருந்து
துரத்தப்பட்டபின்னரே பெறுகின்றனர். நாடற்று நின்றவரை அவர்களுக்கென
உறுதிசெய்யப்பட்ட வரலாற்றுத் தாயகத்திற்கு இட்டுச் சென்றவரே மோசஸ்
(ஹீபுவிவில் மோசி என்பர்) ஆனாலும் கடவுளின் வழிகாட்டலில் ஆணைகளை
ஏற்றுச் செயல்பட்ட இவரால் அந்த உறுதியளிக்கப்பட்ட மண்ணை
அடையமுடியவில்லை. கடவுளின் சொல்லைத் தட்டியதே இதற்குக் காரணம் என பழைய
ஏற்பாடு கூறுகிறது.
இப்போது தம் மண்ணை மீட்டெடுக்க
யூதமக்களுக்கு வல்லமையும் சாணுக்கியமும் வாய்ந்த ஒரு இராணுவத் தளபதி
தேவைப்பட்டான். அந்த வீரனாக மனித ஆற்றலால் கடவுட்தன்மையைப் பெற்ற
யொசுவா
(Joshua )
பல யுத்தங்களின் பின்னர் எதிரிகளைத் தோற்கடித்து
யூதமக்களை அவர்களது மண்ணில் சேர்த்தான். இது அவர்களின் கதை.
புராணக்கதையாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அதில் இருந்து அவர்கள் வலுப்
பெறுகின்றார்கள்.
இதன் பின்னரும் அவர்கள் பல முறை நாடு
இழந்தார்கள் ,தம் மண்ணைவிகட்டு துரத்தப்பட்டார்கள்க, புலம் பெயர்ந்த
பரதேசிகளானார்கள். ஆனாலும் அதே பிடிவாதம் மண்ணை மறக்கவில்லை
,மீட்டெடுக்கும் இலட்சியத்தை கைவிடவில்லை. கி.மு 587 இல் பபிலோனிய
நாட்டு மன்னன் நெபுக்காட்நெசார்
(Nebuchadnezzar)
ஜெருசலத்தை கைப்பற்றி யூதமக்களின் கோவிலை நிர்மூலமாக்கி அவர்களை
பபிலோனியாவிற்கு (இன்றைய ஈராக்) அடிமைகளாக இட்டுச் சென்றான்.
வளமான பபிலோனியாவின் ஆற்றங்கரைகளிலே
அழுது பாடமறுத்த யூதர்கள் தம் பாலைவன நாட்டை மறக்கவில்லை. அதன் பின்னர்
அப்பிராந்தியத்தில் பல சாம்ராச்சியங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும்
பெற்றன. இவர்களால் யூதமக்கள் ஆளப்பட்டனர். பபிலோனியர், பேசியர்,
கிரேக்கர், றோமன், பைசான்ரியன், இஸ்லாமியர் ,ஒட்டாமன்
சாம்ராச்சியத்தினர், முடிவாகப் பிரித்தானிய சாம்ராச்சியத்தினர் எனப்
பலராலும் ஆளப்பட்டு ,புலம்பெயர்ந்தபோதும் இவர்கள் தம் மண்ணில் தம்
இழந்த இறைமையை மீட்கும் இலட்சியத்தை என்றுமே கைவிடாது தமது
சந்ததியினர்க்கு அந்த சுதந்திர தாகத்தை ஊட்டி வந்தனர்.
இங்குதான்
தமிழீழ மக்களின் இழந்த இறைமையை அவர்தம் மண்ணில் மீட்டெடுப்பதற்கான 60
ஆண்டுகாலப் போராட்டம் ஒப்பிட்டுப் பார்க்கப் படுகிறது. பிரித்தானியர்
இஸ்றேலிய மண்ணைவிட்டு அகன்ற அதே 1948 இல் இலங்கையையும் விட்டு
அகன்றனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திரத்தில் தமிழ்
மக்களின் இறைமை அவர்கள் சம்மதம் இன்றிக் கரைக்கப்பட்டது. இழந்த இறைமையை
மீட்டு எடுப்பதற்கான
தமிழ்மக்களின் பிரகடனம் 1977 இல் இடம்பெற்றது. இந்தப்
பிரகடனத்துடன் புறப்பட்ட
தந்தை
செல்வா அந்த உறுதியை நிறைவு செய்ய முன்பே இறந்து விகட்டார். அவரால்
உறுதியழிக்கப்பட்ட மண்ணுக்கு தன் மக்களை இட்டுச் செல்ல முடியாமல் போனதை
யாழ் ஆயர் அம்பலவாணர் குறிப்பிடும்போது
யூதர்களின் மோசசைப் போல் இவர் மரணம் இவரால் உறுதியழிக்கப்பட்ட தனிநாட்டை அடையமுன்பே நிகழ்ந்துவிட்டது. ஆனாலும் இவர் கண்ட காட்சி தன் மக்களுக்கு இவரால் விட்டுச்செல்லப்பட்ட பாரம்பரியமும் சவாலுமாகும்.இந்தப் பாரம்பரியத்தை சுமந்தவண்ணம் இதற்காக உயிரையே அர்பணிக்கும் தொன்மமாக நச்சுக் குப்பியை கழுத்தில் கட்டிய தலைமுறையொன்று தமிழ் மண்ணில் வேர்விட்டு எழுந்தது. இந்த எழுச்சியின் நாயகனே மனித ஆற்றலில் அபார நம்பிக்கை கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன்.தமிழ் மக்களின் புதிய ஏற்பாட்டை எழுதவந்த யொசொவா.
யூதமக்களைப்போல் தமிழீழ மக்கள் நாடு கடத்தப்படவில்லை. யூதமக்களைப்போல் அவர்கள் நச்சுவாய்ப் கிடங்குகளுள் தள்ளப்படவில்லை. ஆனால் ஈழத்தமிழ் மக்களும் சிங்கள இனவாதிகளால் பெரும் அழிவுகளை எதிர்கொண்டனர். எரிக்கப்பட்டனர், புதைகுழிகளில் யிற்றுக்கணக்கில் தாழ்க்கப்பட்டனர், அவர்கள் வதிவிடங்களில் இருந்து துரத்தப்பட்டனர், சொந்தமண்ணில் ஏதிலிகளாகவும், அன்னிய மண்ணில் பரதேசிகளாகவும் ஆக்கப்பட்டனர். ஆனாலும் யூதமக்களைப்போல் ஈழத்தமிழரும் அடங்கிவாழ மறுத்து போராடுகின்றனர். சிங்களதேசத்திற்கு இஸ்றேல் உட்பட சகல வல்லரசுகளும் இராணுவ பொருளாதார அரசியல் ஆதரவினை வழங்கி வருகின்றனர். தமிழ் மக்களோ எந்த நாட்டினதும் ஆதரவோ உதவியோ இன்றி தம் சொந்தக் காலில் நின்று போராடுகின்றனர். எமது ஓர்மமும் யூதமக்களின் ஓர்மத்திற்குக் குறைந்ததல்ல. வரலாற்றில் யார் முந்திவந்தார்கள் எப்போ தம்மை ஒரு இனமாகக் கண்டார்கள் என்ற ஆய்விலும் ஒப்பு நோக்கிலும் தமிழீழ மக்கள் ஈடுபடவில்லை. ஆனாலும் தம் மண்ணில் அவர்கள் தம்மை ஆண்டவரலாறு அவர்களுக்கு உண்டு. எம்மை சேர்த்து வாழ முடியாமல் போன நிலையில் சேர்ந்து வாழ முடியாததால் 60 ஆண்டுகளாகத் தொடர்கிறது எமது போராட்டம். வரலாற்றின் ஆரம்பகாலத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கைத்தீவில் சிங்களவரும் தமிழரும் பொதுவான ஒரு வழித்தோன்றலில் இருந்து காலகதியில் இரு இனக் குழுமங்களாகப் பரிணாம வளர்ச்சியைப் பெற்றனர் என்பதை கலாநிதி கே.இந்திரபாலா உட்பட பலர் நிறுவியுள்ளபோதும் சிங்களவர் தம்மை ஆரம்பத்தில் இருந்தே வேறான வழித்தோன்றலாக இனம் காண்கின்றனர். அவர்கள் இனம் காணலில் புராணக்கதைகளும், மிருகங்களும், இன்னும் பல அதீத நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன. அது அவர்கள் இஸ்டம். தமிழ் மக்கள் அதற்குள் தமது தேடலை தேடவில்லை. தமிழ் மக்களின் தொன்மத்தை சிந்துவெளி நாகரிகத்தில் தேடுவாரும் உண்டு. வேதங்களில் மூத்தது ரிக்வேதம் .அந்த ரிக் வேதத்தில் தஸ்யுக்கள் (தாசர்கள்) என்று குறிப்பிடப்படும் மக்கள்
எழுந்த புதிய தஸ்யுக்களே ஈழத் தமிழர் என கந்தரோடை, ஆனைக்கோட்டை அகழ்வாராய்சியின் விளைவுகளையும் பாலியாறு மற்றும் வவனிக்குழத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டவற்றையும் இவைபற்றிய வராற்று ஆசிரியர் ரகுபதியின் கருத்துக்களையும் மேற் கூறியவாறு நிலாந்தன் தன் சோர்விலாச் சொற்களால் வடிக்கும்போது அதில் யூதமக்களுக்கு இஸ்றேலின் மண்மீதுள்ள உறவைக் குறிப்பிடும். Charles Krauthammer (The Weekly Standard, May 11 1998 )
சாள்ஸ் குறோத்தமரின் குரலைக் கேட்கிறோம். தமிழ் மண்ணைக் கிண்டும்போதும் அவர்கள் இன்றும் வழிபடும் அதே கடவுளர்களை இன்றும் பேசும் அதே மொழித் தடங்களைக் காண்கிறோம். இவைபற்றி ஆராயவும் தேடவும் வழியற்றவர்களாக உள்ளோம். இருந்தபோதும் அவர்கள் காலம் காலமாக இன்றைய வடகிழக்கில் தம்மைத் தாமே ஆண்டவரலாறும், அவர்களைப் பல முறை சோழ, பாண்டிய மன்னரும் சிங்கள மன்னரும் அதன் பின் போர்த்துக்கேயர் டச்சுக்காரர், பிரித்தானியர் எனப் பலர் ஆண்டவரலாறும் , யூதர் முதல் பலரது வரலாற்றுடன் ஒப்பு நோக்கத்தக்கதே. யூதர்களுக்கு ஓரு டேவிட்டைப் போல் ஒரு சொலமன் போல் எமக்கும் ஒரு எல்லாளன் ஒரு பண்டாரவன்னியன் ஒரு சங்கிலி மன்னன் . முடிவில் 60 ஆண்டுகாலத்தின் பின்னர் நாமும் எமது தேசத்தைக் கட்டி எழுப்பவும் மற்றைய தேசங்களோடு எம்மையும் அணைத்துக் கொள்ளுங்கள் என ஜக்கிய நாடுகள் தாபனத்தை வேண்டுகிறோம். இஸ்றேல் உட்பட்ட உலக நாடுகளை வேண்டுகிறோம். எம்மிடையே வாழும் சிங்கள மக்களுக்கும் எமது அருகே வாழும் சிங்கள தேசத்திற்கும் நேசக்கரம் நீட்டுகின்றோம். நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் இழந்த எமது இறைமையை மீட்பதற்கே போராடுகிறோம். இந்த இலட்சியத்தில் நாம் உறுதியாக உள்ளோம். இதன் சாட்சியாக எம் மண்ணில் விதைக்கப்பட்ட மாவீர்களும் அவர்கள் துயிலும் இல்லங்களும் உள்ளன. யூதமக்கள் தம் சுதந்திரத்திற்கு முதல் நாளை அந்த மண்ணின் விடுதலைக்காக தம்மை ஈய்ந்தவர்களின் நினைவாக அர்பணிப்பதுபோல்
நாமும் போராட்ட காலத்திலேயே அவர்களை எம் நினைவில் சுமந்து மாவீரர் நாளாக வழிபடுகின்றோம். இப்போது இது மாவீர் வாழும் மண்.
யூதமக்களுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டுவோர் கடின உழைப்பை, சிக்கனத்தை, எதிலும் ஒரு வகையான இறுக்கத்தை , அடிபணிய மறுக்கும் பிடிவாத குணத்தை ஒப்பிட்டுப் பார்ப்பர். இவற்றை விட மொழிப் பற்றே முக்கிய ஒற்றுமை எனலாம். இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேச்சு வழக்கில் இருந்து அருகிப்போன ஹீபுவி மொழியை இஸ்றேல் தேசத்தின் பேச்சு மொழியாக மீட்டெடுத்த பெருமை யூதமக்களின் ஒரு தனித்துவம். பேச்சு வுழக்கற்றுப் போன ஜறிஸ், பாஸ்க், ஸ்கொட்டிஸ் போன்ற மொழிகளை மீட்டெடுக்கும் முயற்சிகள் பெரும் வெற்றியை அளிக்கவில்லை. அயர்லாந்து தேசத்தின் உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் 2003 இல் வந்தபோதும் அந்த மொழியின் பாவனை கல்வி, அரசகருமம், ஊடகம் ஆகியவற்றில் மட்டுமே ஓரளவு தேசியத்தை கொண்டுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் தம் மொழியை காத்து வளப்படுத்தி வருவதில் யூதமக்களின் ஓர்மத்தை ஒத்தவர்கள். மொழியும் அந்த மொழிதாங்கி நிற்கும் பண்பாட்டு விழுமியங்களும் அவர்களது இரத்தத்தில் கலந்துவிட்டது. இன்று அவர்களின் போராட்டத்தினால் தமிழ் மொழி புதிய ஓடுபாதைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தோடு பொதுவாகத் தமிழ் மக்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் ஒன்றிப்போய்விட்ட உலகளாவிய நோக்கும் பார்வையும் அவர்களால் உலகிற்கு தொடர்ந்தும் வழங்கப்படுவதற்கு, எம் மண்ணில் எமது இழந்த இறைமையை மீட்டெடுப்பது அவசியமாகும். தேசியத்தின் பரிணாம வளர்ச்சியிலும் முதிர்ச்சியிலும்தான் சர்வதேசியம் சுகிக்க முடியம். தனி மனித சுதந்திரத்திற்கு அவன் சார்ந்துள்ள மக்கள் குழுமத்தின் சுதந்திரமும் அடிப்படையாகும்.
|