Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > Remembering Mamanithar Thillainadarajah Jeyakumar

Selected Writings

M.Thanapalasingham, Australia
-
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

Remembering Mamanithar Thillainadarajah Jeyakumar

30 March 2008

மெல்பேன் அவுஸ்திரேலியாவில் மார்ச்மாதம் 30 ஆம் திகதி 2008 இல் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் தினத்தில் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் நினைவாக ஆற்றிய உரை.

[see also Mamanithar Thillainadarajah Jeyakumar  - A Good & Honest Human ]


என் இனிய நண்பன் மாமனிதன் தில்லை ஜெயக்குமார் எம்மை விட்டு பிரிந்து ஓர் ஆண்டு உருண்டோடிவிட்டது. ஆனாலும் அவன் நினைவுகளை சுமந்துநிற்கும் எமது உள்ளங்களின் வலிகளும், அழுத்தங்களும், பசுமையான நினைவுகளும் சதா காலமும் எம்முடன் வாழ்கின்றன.

 "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புண்கண்நீர் பூசல் தரும்"

என்பது தமிழ் மறை.

ஜெயக்குமாரின் அன்பை மூடிவைக்க முடியாது அவர் அன்பர்களாகிய நாம் இன்றும் கண்ணீர் சிந்துகின்றோம். அதேசமயம் இயற்கையின் மர்மங்களையும் அறியாத பேதைகள் அல்ல நாங்கள்.

இந்த வாழ்வை "நீர்க்கோல வாழ்வு" என்றான் கம்பன். பிரிவுத்துயரின் பிறவிக்கவிஞன் என ஆங்கில இலக்கிய உலகில் வாஞ்சையோடு அழைக்கப்படும் கீட்ஸ் என்னும் கவிஞன் தன்கல்லறையில்

" Here lies one whose name was writ in water "

என பொறிக்கும்படி கூறினான்.

ஆனாலும் இன்றும் அவன் புகழ் மங்கவில்லை. மறைந்தது பூதவுடலே . ஜெயக்குமாரின் பூதவுடல் எம்மைவிட்டு மறைந்தாலும் அவர் மாமனிதராக பர்ணமித்த வரலாறு எம்மோடும் எமக்குப்பின்னரும் எம் மண்ணோடும் வாழும்.

இதற்கான காரணம் என்ன என்பதை தேசியத்தலைவர் திரு வே.பிரபாகரன் வார்த்தைகளில் கேட்போமே -

"திரு தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர். பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெரும்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் அழகு. அவர் உதிரும் மந்திரப் புன்னகை அந்த அழகிய ஆளுமையை அணி செய்தது. இதுவே அனைவரையும் அவரை நோக்கி காந்தமாக கவர்ந்திழுத்தது.

கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூர தேசத்தில் ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேசவிடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் இவர் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். "

தேசியத் தலைவரால் இனம் காணப்பட்ட இந்தப் பண்புகளுக்கும் கர்மயோகத்திற்கும் நாம் சாட்டசிகளாக அவரோடு வாழ்ந்துள்ளோம். இதனையே தமிழ்நாட்டை சார்ந்த அறிவுமதி "காலம் உள்ளவரை எங்கள் களக் குறிப்பில் நீ இருப்பாய்" என கவிதைபாடுகின்றார்.

திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள் ஜெயக்குமாரின் மறைவையொட்டி கூறியபோது -

"..A struggle for freedom is no evening tea party. But, a struggle for freedom also produces its heroes and heroines � men and women who have displayed strength, ability and courage far beyond the call of duty. Thillainadarajah Jeyakumar will always remain in our memories as one of the heroes of the struggle of his people for freedom.  I respectfully salute Jeyakumar's sustained contribution to the cause of his people during these many years - sustained through many trials and tribulations..."

திரு நடேசன் சத்தியேந்திரா குறிப்பிடுவதுபோல் சாதரண மனிதனான ஜெயக்குமார் காலத்தின் அறை கூவலை ஏற்று அசாதாரணமாக ஆற்றிய பணிகளே அவரை மாமனிதர் ஆக பர்ணமிக்க வைத்தது. மாமனிதன் என்பவன் இந்த மண்ணுக்கும் அதன் உறவுகளுக்கும் அப்பாற்பட்ட விசித்திரமான பிறிவிஅல்ல. இதையே பலர் அறியாத ஜெயக்குமாரின் மீன் தொட்டிகளும், அபூர்வமான தாவர வகைகளும், உணவை ரசித்து உண்ணம் பாவனையும் இன்னபிறவும் காட்டிநிற்கின்றன.

ரவீந்திரநாத் தாகூரின்

" ....ஜம்புலன் அடக்கியே சும்மா இருக்கின்ற
ஆகாத துறவு வேண்டேன்
அத்துறவினால் வரும் விடுதலை எனக்கென்றும்
அற்பமும் வேண்டுகில்லேன்
எம்பிரான் என்னை இங்கே ஆனந்த பந்தங்கள்
ஆயிரம் சூழ்ந்து தழுவ
எங்கணும் விடுதலை பரிசம் உண்டாகுமே "

ஜெயக்குமாரை சூழ்ந்து தழுவிய ஆயிரம் பந்தங்கள் அந்த விடுதலை வெறியரே என்பதை நாம் அறிவோம். இந்த விடுதலை வேட்கையே எம்மையும் அவருடன் இணைத்தது என்பதையும் நான் கூறத்தேவையில்லை.

தமிழீழ தேசவிடுதலைப் போராட்டம் எத்தனையோ சாதாரண மனிதர்களை வீரர்களாகவும் வீராங்கனைகளாவும் ஆக்கியுள்ளதற்கு நாம் சாட்சிகளாக உள்ளோம். ஒரு சாதாரண குடும்பத்தின் அன்னை ஒரு தேசத்தின் அன்னையாக அம்மாவாக எழுச்சிபெற்ற அற்புதத்தை பூபதி அம்மாவில் தரிசிக்கின்றோம். ஆக்கிரமிப்பாளரின் ஆயுத தளபாடங்களின் எண்ணிக்கைகளும் அவனது கனமான பாதணிகளும் இந்த சாதாரண அன்னையின் அடிமனத்தில் புதைந்து கிடந்த விடுதலை நெருப்புக்கு இணையாகுமா. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது எம்முன்னோர் பட்டறிந்து எமக்கு விட்டுச் சென்ற பாடங்கள்.

இங்குதான் விடுதலைக்காகப் போராடும் ஒரு மக்களின் புத்திஜீவிகள் அந்த மக்களிடையே இருந்துதான் உருவாகவேண்டும் அவர்களை வெளியில் இருந்து உள்ளே திணிக்கக்கூடாது என்ற

" ...revolutionary intellectuals should originate from within the working class rather than being imposed from outside or above it." 

Gramsci  என்னும் அறிஞனின் வார்த்தைகள் அர்த்தம் பெறுகின்றன. ஏனெனில் Gramsci கூறுவதுபோல்

" Man can affect his own development and that of his surroundings only so far as he has a clear view of what the possibilities of action open to him are. To do this he has to understand the historical situation in which he finds himself, and once he does this, then he can play an active part in modifying that situation .The man of action is the true philosopher, and the philosopher must be of necessity be a man of action."

பூபதி அம்மா ஜெயக்குமார் போன்ற சாதாதண மனிதர்கள் காலத்தின் அறைகூவலை ஏற்று திரு நடேசன் சத்தியேந்திரா கூறியதுபோல், far beyond the call of duty இனை இவர்கள் ஆற்றியுள்ளனர்.

இப் பணிகளை ஆற்றும்போது துணிவோடு இவர்கள் செயல்பட்டு எமக்கும் ஆதர்சமாக, வழிகாட்டியாக வாழ்ந்துள்ளனர்.

இன்று என்றுமே இல்லாத அளவு துணிவோடு செயல்படவேண்டிய பொறுப்பு எமக்குண்டு. எமது விடுதலைப் போராட்டம் நியாயமானது .தர்மத்தின்பாற்பட்டது. சர்வதேச சட்டங்களுக்கு முரணானது அல்ல. சதந்திர தமிழீழமே தமிழ் மக்களின் வாழ்வாதரத்திற்கான ஒரே வழி என்பதை தந்தை செல்வா சனநாயக வழியில் நின்று எடுத்துச் சென்றார். அவர் இறந்தபோது

" He died like Moses himself, without reaching the promised land, but the vision he saw, he leaves behind as the heritage and challenge to his people "

யூதமக்களின் மோசசைப்போல் இவர் மரணம் அவரால் உறுதிமொழி செய்யப்பட்ட தேசத்தை அடைய முன்பே நிகழ்ந்துவிட்டது. ஆனாலும் இவர் கண்ட காட்சி தன் மக்களுக்காக இவரால் விட்டுச் செல்லப்பட்ட பாரம்பரியமும் சவாலுமாகும் " என வண அம்பலவாணர் கூறியதை மனம் கொள்கின்றேன்.

இந்தப் பாரம்பரியத்தையும் சவாலையும் சுமந்து அந்த மண்ணை நோக்கி எம்மக்களை இட்டுச் செல்பவரே திரு வே.பிரபாகரன் என்னும் வரலாற்று நாயகன். சைக்கிளில் இருந்து வான்படைவரை வளர்ந்து செல்லும் விடுதலைப் போராட்டத்தில் பலனை எதிர்பாராது பணி செய்யவேண்டியதற்கு எமக்கு ஜெயக்குமார் ஒரு வழிகாட்டி.

இன்று எம்மில் பலர் நிகழ்கால சம்பவங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்காததால் சோர்வடைந்து போவதைக் காண்கின்றோம். இந்த இடத்தில் சீனத்து மாவோ 1938 இல் கூறியதை நினைவு கொள்கிறேன்.

" The enemy is strong and we are weak and the danger of subjugation is there. But in other respects the enemy has shortcomings and we have advantages....China's war is progressive, hence its just character. Because it is a just war, it is capable of arousing the nation to unity. Not that we would not like a quick victory: everybody would be in favour of driving the devils out overnight. But we point out that in the absence of certain definite condition, quick victory is something that exit only in one's mind and not in objective reality and that it is a mere illusion, a false theory "

"எங்கள் எதிரி பலமாக உள்ளான். நாம் பலவீனமாக உள்ளோம். அடக்குமுறையின் ஆபத்தும் அங்கே உள்ளது. ஆயினும் மற்றைய வழிகளில் எதிரிக்கு கஸ்டங்களும் எமக்கு அனுகூலங்களும் உள. சீனாவின் யுத்தம் முற்போக்கானது. இதனால் இதன் குணாம்சம் தர்மத்தின்பாற்பட்டது. ஏனெனில் இது ஒரு தர்மயுத்தம். தேச மக்களின் ஒற்றுமையை எழுச்சிபெற வைக்கும் சக்தி இதற்குண்டு. ஆயினும் சடுதியான வெற்றியை நாம் விரும்பவில்லை என்பதல்ல. பேய்களை இரவோடு இரவாக விரட்டியடிப்பதில் எல்லோருக்கும் உடன்பாடு உண்டு. ஆயினும் நாம் குறிப்பிட்டுக் காட்டுவது என்னவென்றால் நிச்சியமான சில சூழ்நிலைகள் இல்லாத இடத்து திடீர் வெற்றி என்பது ஒருவரின் மனத்தில் மட்டுமேயொழிய யதார்த்த பூர்வமானதல்ல. அது வெறும் மாயை. ஒரு தவறான பார்வை "

என கூறியுள்ளமை மனம் கொள்ளத்தக்கது.

சீனத்து மாவோவின் காலத்து உலகை விட இன்றைய பதிய உலக ஒழுங்கு மிகவும் சிக்கலானது. மாவோவின் சீனா உட்பட பல சக்திகள் எமது விடுதலைப் போராட்டத்தின் வெளிச் சக்திகளாக உள்ளன. இச் சக்திகள் பலவிதமான வீயூகங்களுடனும் உத்திகளுடனும் எமது போராட்டத்தை சுற்றி வலம் வருகின்றன.

சீனத்து மாவோவின் காலத்தில் விடுதலைப் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு வழங்கும் முற்போக்குச் சக்திகளாக இடதுசாரிகள் இருந்தனர்.

இன்றைய உலக ஒழுங்கில் இவைகள் மங்கலாகிவிட்டன. கொசோவாவின் சுதந்திரப் பிரகடனம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு அதுமட்டுமல்ல சீனத்து மாவோ குறிப்பிடும் நிச்சயமான சில சூழ்நிலைகள் இல்லாத இடத்து என்ற களநிலையும் எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் பொருந்துமா என்பது கேள்வி.

இவற்றை எல்லாம் தெளிவாக உள்வாங்கிச் செயல்படும் பாரிய பொறுப்பு எமக்குண்டு. நாம் சோரம்போய்விடக்கூடாது. எந்தவிதமான அழுத்தங்களும் தடைகளும் வந்தாலும் எம் குரலைக் கொடுத்திட வேண்டும்.

இதுவே மாமனிதர் தில்லை ஜெயக்குமாரின் நினைவுகளை சுமப்பதற்கும் அவர் காட்டிய பாதையில் பயணிப்பதற்கும் வழி சமைக்கும்.

Voltire  என்னும் பிரான்சு நாட்டின் புகழ்பூத்த சிந்தனையாளர் கூறியதுபோல் "மக்கள் நியாயம் தேட ஆரம்பித்தால் மற்றைய அனைத்தும் தோற்றுவிடும்."

தேசியத்தலைவர் திரு வே.பிரபாகரனின் வார்த்தையில் கூறுவதனால்

" தேசாபிமான உணர்வானது மக்களை ஆழமாகப் பற்றிக்கொள்ளும் பொழுதுதான் ஒரு தேசம் தனக்கே உரித்தான தனித்துவமான ஆளுமையைப் பெறுகின்றது. இந்த தேசிய ஆளுமையைக் கொண்ட மக்கள் இனம்தான் ஒரு அரசை அமைத்துக்கொள்ளும் தகுதியைப் பெற்றிருக்கின்றது"

மாமனிதர் தில்லை ஜெயக்குமார் தலைவரையும், இயக்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் பாசத்தோடும் மரியாதையுடனும் போற்றியவர். அவர்கள் இட்ட பணிகளை சளைக்காது ஆற்றியவர். அவர் வழியில் நின்று அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதே நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய அஞ்சலியாகும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home