Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > இங்கிருந்து எங்கே?

Selected Writings
M.Thanapalasingham, Australia

-
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

இங்கிருந்து எங்கே?

2 December 2007

பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் நினைவாக - டிசம்பர் 2 ஆம் திகதி சிட்னியில் இடம்பெற்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் சாரம்.

"..மக்கள் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதே சனநாயகம் என்றால் ஒரு மக்கள் இன்னொரு மக்களை ஆள்வது சனநாயகமாகாது. அந்த நிலை மாற்றி அமைக்கப்படும்வரை வரலாற்றின் அசைவியக்கத்திற்கு முடிவில்லை. இந்த வகையில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வரலாற்றின் அசைவியக்கத்தின்பாற்பட்டது எனலாம். "


அமெரிக்க வரலாற்று அறிஞரான பிரான்சிஸ் புக்குயாமா (Francis Fukuyama) என்பவரால் 1992 இல் வெளியிடப்பட்ட வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும் (The End of History and the Last Man )  என்னும் நூல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்ததை நாம் அறிவோம். இங்கு வரலாறு என்பது அதன் அசைவியக்கத்தை குறிக்கின்றது (Directional History ).

இவரது நூல் 1989 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இவர் ஆற்றிய உரையின் விரிவாகும். தொழில் நுட்பத்துடனான முதலாளித்துவத்தின் வெற்றியுடனும் , தாராண்மை சனநாயகத்தின் (Liberal Democracy) வரவுடனும் வரலாற்றின் புறநிலை சார்ந்த அசைவியக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது இவரது வாதம்.

 எல்லாமக்களதும் எல்லாக் காலத்தினதும் அனுபவத்தை வைத்தே தான் இக் கருத்தை முன்வைப்பதாகவும் , வரலாறு பற்றிய இந்த விளக்கத்தை புகழ் பெற்ற யேர்மன் தத்துவஞானியான ஹேகல் (G.H.F Hegel) கொண்டிருந்தார் எனவும், இவரால் ஆகர்சிக்கப்பட்ட கால் மாக்ஸ் (Karl Marx) வரலாறு பற்றிய கருத்துப்படிவத்தை ஹேகலிடம் இருந்தே கடன் வாங்கியிருந்தார் எனவும் தன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவர்.

அடிமைகளாக, ஆண்டான் அடிமைகளாக மன்னர்களால், மதத்தலைவர்களால், ஆளப்பட்டவர்களான மனிதசமுதாயத்தில் ஒரு ஒத்திசைவான முன்னேற்றம் இருந்து வந்தது என்றும் அந்த முன்னேற்றம் முதலாளித்துவத்தினதும், சனநாயகத்தினதும் வெற்றியுடன் முடிவிற்கு வந்துவிட்டது என்பது இவர் வாதம். இதுவே இவர் காணும் வரலாற்றின் முடிவு. இந்த முடிவு ஹேகலுக்கு தேசிய அரசாகவும் கால் மாக்சிற்கு கம்யூனிஸ் சமூகமாகவும் அமைகின்றது. (1)

1917 இல் வெடித்த மகத்தான அக்ரோபர் புரட்சியை வரவேற்ற முதல் தமிழ் கவிஞன் மட்டுமல்ல முதல் இந்தியக் கவிஞனுமான பாரதி அதனை கிருதயுகமாக வரவேற்றான்.

" இடியுண்ட சுவர்போல கலி விழுந்தான், கிருதயுகம் எழுக மாதோ " எனப் பாடிப் பரவசப்பட்டான் அவன்.

ஆயின் அதன் பின் நடந்த கதை வேறு. இன்று பனிப் போரும் முடிந்து சோவியத்தும் உடைந்து, பேர்லின் சுவரும் விழுந்து விட்ட நிலையில் புக்குயாமா அவசரப்பட்டுவிட்டார். புதிய பனிப்போருடன் புறப்பட்டு நிற்கும் இன்றைய உலகில் நவீன தேசிய அரசுகளிடையே சிக்கித் திணறும் பல தேசிய இனங்களின் போராட்டங்கள் வரலாற்றை நகர்த்தும் அசைவியக்கமாக மாறியுள்ளது.

மக்கள் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதே சனநாயகம் என்றால் ஒரு மக்கள் இன்னொரு மக்களை ஆள்வது சனநாயகமாகாது. அந்த நிலை மாற்றி அமைக்கப்படும்வரை வரலாற்றின் அசைவியக்கத்திற்கு முடிவில்லை. இந்த வகையில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வரலாற்றின் அசைவியக்கத்தின்பாற்பட்டது எனலாம்.

" இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும்வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவர்க்க முடியாத வரலாற்று நியதி "

தமிழீழத் தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன்.

தேசியவிடுதலைப் போராட்டங்களில் காணப்படும் விழுமியங்கள் மானிடத்தின் உன்னதங்களை தொட்டு நிற்க வழி சமைக்கின்றன.

 அடிமைப்பட்ட தேசிய இனம் ஒன்றின் விடிவில் அவர்களை அடிமைப்படுத்தும் இனத்தின் விடியலும் தங்கியுள்ளது என்பது இவற்றில் ஒன்று. தேசியவிடுதலை சனநாயகத்தை அதன் உச்சத்திற்கு கொண்டு சென்று சர்வதேசியப் பண்பிற்கான சாளரங்களைத் திறந்து விடுகின்றது என்பது இன்னொன்று.

 இங்குதான் மனித ஆற்றல்கள் ஆக்கபூர்வமான வீரியங்களுக்கு வழிசமைக்கின்றன. இதனையே பிரான்ஸ் பனன் (Frantz Fanon ) 1959  இல் கறுப்பின ஆபிரிக்க எழுத்தாளர் மாநாட்டில் அழகாகக் குறிப்பிட்டுள்ளார். மனிதன் அவன் செய்யும் வினைகளால் இனம் காணப்படுவான் என்றால் அறிவுலகம் தேசியவிடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு தன் தேசத்தை கட்டி எழுப்ப முன்வரவேண்டும் என்கிறார்.(3)

இவரது சம காலத்தவரான பிரஞ்சு தத்துவஞானியான மிசேல் பூக்கோ (Michel Foucault 1926-1980) " அறிவுலகமானது தனியுலகமாக நின்று மனித விமோசனத்திற்கு வெளஹச்சம் காட்டவில்லை . மாறாக அது அதிகார உலகத்துடன் கைகோர்த்து நின்று மனிதர்களை விலங்கிட்டு வைத்திருக்கிறது என்ற கசப்பான உண்மையை " எடுத்து காட்டுகின்றார். (2)

தமிழீழ மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு புலம் பெயர்ந்து வாழும் அறிவுலகம் குறிப்பாக இளைய தலைமுறையினரை உள்வாங்கிய அறிவுலகம் முன்வரவேண்டும் . இவர்களுக்கு இதற்கான வாய்ப்பினை மொழி, கலை சார்ந்த அறிவுலகோடு சம்பந்தப் பட்டவர்களும் ஏனைய துறைசார் அறிவுலகமும் ஒன்றுபட்டு வழங்குவதன் மு~லமே பிரான்ஸ் பனன் கூறும் தேச நிர்மாணத்தில் ஈடுபட முடியும்.

தேசியத்தில் மொழியின் அதன் ஆக்கசக்தியின், அதன் வீரியத்தின் முக்கியத்துவத்தை எத்தனை முறை அழுத்திச் சொன்னாலும் தகும். தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீரத்தையும் அதில் உள்ள ஈரத்தையும் , மக்கள் அன்பையும் அண்மையில் தமிழ்செல்வனில் கண்டோம். பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனை இழந்தபோது தமிழ்கூறும் நல்உலகமே கதறியது. அந்த வீரனைப் பெற்றெடுத்த தாய் 17 வயதுவரை அவன் என்மகன் அதன்பின் அவன் தேசத்தின் செல்வன் எனக்கூறியுள்ளமை புதிய புறநானூற்றுத் தாயாக அவரை தமிழ்தேசியம் தரிசிக்கின்றது.

உன்மகன் எங்கே என ஒரு புறநானூற்றுத் தாயிடம் கேட்டபோது புலி படுத்துப்போன குகைபோல அவனைப் பெற்ற வயிறு இது. அவனை போர்களத்தில் போய் பார் என்றாள்.

" புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே " இந்தத் தாயையும் விஞ்சிய தாய்மார்களை தமிழீழத் தேசியம் உருவாக்கியுள்ளதை நாம் அறிவோம்.

இந்தப் பண்பாட்டு வளர்ச்சி தேசியத்தின்பாற் பட்டதெனின் அதில் எம்மை ஈடுபடுத்தும்போதே எமது பயணமும் வரலாற்றின் அசைவியக்கத்துடன் இணைகின்றது எனலாம். தேசியவிடுதலைப் போராட்டமானது மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியை தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழீழத் தேசியவிடுதலைப் போராட்டத்தின் அகநிலை, புறநிலைச் சுஸ்ரீழல்களால் ஆகர்சிக்கப்பட்டு புதுமையான ஆக்கங்களை படைத்துவரும் படைப்பாளிகளில் ஒருவரான நிலாந்தன் யாழ்பாண மனிதனைப்பற்றி

முன்னாளில் அவன் "தின்னாமல், உண்ணாமல் அண்ணாமலைக்குக் கொடுப்பவனாய் " வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சேமிப்பவனாய் , சுயநலமியாய் , விச்சுழியனாய் காணப்பட்டான். பின்னாளில் நம்ப முடியாத அளவிற்கு வீரனாய் , தியாகியாய் யுத்தகளத்தில் சித்துக்கள் செய்பவனாய் மாறினான்" எனக் கூறுகின்றார். இந்தப் பண்பாட்டு மாற்றம் தேசியவிடுதலைப் போராட்டத்தின் விளைவே. இதனால் உருவாவதே தேசியம் என்னும் உடன்பிறப்பு சார்ந்த இறுக்கம் எனலாம்.

" மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமுக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது. " தமிழீழத் தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன்.

தேசியவிடுதலைப் போராட்டத்தின் வெற்றி எமது வினைகளில் தங்கியுள்ளது.

எமது நீண்ட வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போமாயின் " வெளஹநாட்டார் வணக்கம் செய்யும் " உன்னதங்களை நாம் எம்மை ஆண்டபோதே சாதித்துள்ளோம். அன்று அலைகடலை தம்வசப்படுத்தியிருந்தபோது எமது துறைமுகங்களில் ஏற்றுமதியும் இறக்குமதியும் நடந்தன. அவற்றைச் சுங்கப் பகுதியினர் புலிச்சின்ன முத்திரை குத்தி புறம்போக்கினர். இந்து சமுத்திரத்தின் வர்த்தக மொழிகளாக அரேபியமும் சீனமும் தமிழும் அரசோச்சின. பின்னாளில் நாம் தாழ்ந்துவிட்டநிலையில் பழம் பெருமை பேசிவந்தோம்.

" பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்ந்தபோதும் எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு , இந்த மோசமான நிலைக்கு காரணம். எனவே எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்கான உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன் "
தமிழீழத் தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன். மாவீரர்தின உரை 27 நவம்பர் 2007

உலகத்தமிழர்களை கிளர்ந்தெழுமாறு மாவீர்நாளில் அறைகூவல் இட்டது ஏன்?

" உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கின்றது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியிருக்கின்றது " தமிழீழத் தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன்.

இந்த வரலாற்றுப் புறநிலையை வரலாற்றின்  அசைவியக்கமாக்கியவர்கள் மாவீர்களே. உலகெங்கும் வாழும் தமிழர் தமிழர்களாக எல்லைகளைக் கடந்து வாழவேண்டின் எல்லைகளைக்கொண்ட தமிழீழத் தனியரசு அவசியமாகும். இதனால் தான் உலகத்தமிழர்கள் தமிழீழத் தனியரசை அமைத்திட கிளர்ந்து எழவேண்டும்.

இதுபோன்ற ஒரு அழைப்பை 144 ஆண்டுகளுக்கு முன்னர் இன்று உலகின் பெரும் வல்லரசாக வலம் வரும் நாட்டின் உன்னதமான ஒரு தலைவனிடம் இருந்து கேட்கின்றோம். " மக்கள் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதே " சனநாயக அரசாங்கம் என்ற மந்திரச் சொற்களை முதன் முதலாக ஆபிராகம் லிங்கன் என்னும் ஒப்பற்ற தலைவனிடம் இருந்தே உலகம் கேட்டது. அதுவும் ஒரு நவவெம்பர் மாதம்தான் . அது நடந்த இடமும் மாவீரர் துயிலும் இடம் ஒன்றுதான். அந்த மாவீரர்கள் விட்டுச் சென்ற முடிவுறாத பணியை முடித்திட அவர் விட்ட அழைப்பு ஒரு தார்மீக அழைப்பு.

" ----It is for us the living, rather to be dedicated here to the unfinished work which they who fought here have thus far so nobly advanced. It is rather for us to be here dedicated to the great task remaining before us � that from these honoured dead we take increased devotion -  to that cause for which they gave the last full measure of devotion � that we here highly resolve that these dead shall not have died in vain � that this nation, under God, shall have a new birth of freedom � and that government of the people, by the people, for the people, shall not perish from the earth " Abraham Lincoln �The Gettysburg Address 19 November 1863  (4)

ஏந்த ஒரு நாட்டினதோ, அமைப்பினதோ ஆதரவும் இன்றி விடுதலையின் வாசலுக்கு எமது போராட்டத்தை இட்டு வந்த எமது மாவீரர்களுக்கு நாம் செய்யக்கூடியது அவர்கள் பணியை அவர்கள் வழியில் முன்னைடுத்துச் செல்லும் எம் உடன்பிறப்புக்களுக்குப் பின்னால் கிளர்ந்தெழுவதேயாகும். இங்கிருந்து எங்கே என்றும், பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனின் பின்னே என்றும் உரக்கச் சிந்திக்க கூடியிருக்கும் நாம் இந்தக்கிளர்ச்சியில் பங்கு கொள்வதன் மூலமே வரலாற்றின் அசைவியக்கத்தில் பங்கு கொண்டவர்களாவோம்.

இன்று எமது வினையால் தமிழன் படையும் கொடியும் கொண்டு உலகநாடுகளுடன் சரியாசனம் பெறும் நிலைக்கு வந்துவிட்டோம். இதனை விரைவுபடுத்த எம்மை எம் உடன்பிப்புக்கள் நடத்தும் தேசியவிடுதலை என்னும் யாகத்தில் இணைத்துக் கொள்வோமாக.
 


Footnotes

(1) The End of History and the Last Man (1992) Francis Fukuyama
(2) விடுதலை � அன்ரன் பாலசிங்கம்.
(3) www.tamilnation.org
(4) The New Rights of Man �Jon E.Lewis


 


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home