Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டதின் சமகால நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளல்

Selected Writings
M.Thanapalasingham, Australia
-
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டதின்
சமகால நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளல்

(யூன் மாதம் சிட்னியில் நடந்த யாழ் நூலக கொடிவார தின நிகழ்விலும் யூலை 7 இல் இடம் பெற்ற ஜுலை எழுச்சி விழாவிலும் ஆற்றிய உரைகளின் சாரம் )

"...அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது.  இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் எமக்கு இவைபற்றிய வாசிப்புக்களும் கருத்துப்பரிமாற்றங்களும் அவசியமாகும். .."

8  July 2007


வாழ்வுக்கான காரணம் என்னும் (The Life of Reason)  நூலில் அதன் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா (George Santayana ) என்னும் தத்துவஞானி " தங்கள் கடந்த காலத்தை ஞாபகத்தில் கொள்ளாதோர் அதனை மீண்டும் அனுபவிக்குமாறு சபிக்கப்படுவர் " - "Those who cannot remember the past are condemned to repeat it ”
 எனக் கூறுகின்றார்.

பொதுஅறிவில், சமூகத்தில், சமயத்தில், கலையில், விஞ்ஞானத்தில் வாழ்வுக்கான காரணங்களைத் தேடும் இந்நூலில் பலராலும் எடுத்தாளப்படும் மேற்குறிப்பிட்ட வாசகம் பொது அறிவின் கீழ் இடம் பெற்றுள்ளது. தனிமனிதர்களுக்கும், சமூகத்திற்கும், நாடுகளுக்கும் இது பொருந்தும்.

எமது வசதிக்காக வரலாற்று ஞானம் எனக் கூறிக்கொள்வோம். அறிவு வேறு , ஞானம் வேறு. முன்னது புறம் சார்ந்தது பின்னது அகம் சார்ந்தது. ஞானம் பட்டுத்தெளிவதால், அழுந்தி அறிவதால் பெறப்படுவதெனின் சாதாரண மக்களிடம் அதனை நிறையக் காண்கின்றோம். இது அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.

ஆயின் கடந்தகாலம் பற்றிய அறிவு ,ஞானம் என்பன எம்மைச்சுற்றி அவிழ்ந்து கொண்டிருக்கும்
(unfolding ) சமகால நிகழ்வுகளை உரிய முறையில் புரிந்து கொள்ள உதவாதுவிடின் அந்த அறிவு வெறும் உபதேசமாகவே முடியும் . எமது கவனக் குவிப்பு எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளின் மீது குவிக்கப்படும்போது அவற்றை நாம் வாசிக்கும் விதத்தில் தெளிவு ஏற்படுவதை அவதானிக்கின்றோம்.

இப்படியான வாசிப்பை வசப்படுத்தியவர்களில் ஒருவரான மாமனிதர் தராக்கி எனப்படும் சிவராம்
"States  that want to oppress a people do so by breaking their political will to resist injustice---It is easier to enslave a people who have lost their ability to understand the nature of their oppression "  எனக் கூறியதை எத்தனை தரம் அழுத்திச் சொன்னாலும் தகும்.

கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியற்றவர்களாக எம்மக்களை ஆளாக்கிய அடுக்குமுறைகளுக்கு துணைபோகும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை அறியும் ஆற்றல் அற்றவர்களாக எம்மக்களை ஆளாக்குவதற்கும் துணைபோவது ஏன் என்பதை நாம் விழங்காதுவிடின் அவர்களது நிகழ்ச்சி நிரலின்கீழ் நாமும் ஒரு நிகழ்வாக இடம்பெறுவோம்.

அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது.  இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் எமக்கு இவைபற்றிய வாசிப்புக்களும் கருத்துப்பரிமாற்றங்களும் அவசியமாகும்.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் , பிரிவினைவாதம், ஆயுதக்குழு,  இனக்குழுமம்,  தமிழ் சமூகம், சிறுபான்மையினத்தவர் என்ற பதங்களால் இவர்கள் அழைப்பதன் காரணங்கள் என்ன என்பவற்றை நாம் விளங்கிக்கொள்வதன் மூலமே மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

தேசியம் என்றால் அரசாகும் தகுதியுண்டு. சிறுபான்மையினருக்கு., இனக்குழுமத்திற்கு அவை இல்லை. மக்கள் என்றால் அவர்களுக்கு தம் அரசியல் தலைவிதியை, தமது தற்பாதுகாப்பை தாமே தேடிக்கொள்ளும் உரிமை உண்டு. சிறுபான்மையினர்க்கு, இனக்குழுவிற்கு இது இல்லை. இதனால் தானா எம்மீது இவ்வார்த்தைப் பிரயோகங்கள்?.  அதிஸ்டவசமாக tamilnation.org  இணையத்தளம் சலிக்காது இதற்கான வாசிப்பிலும் தேடலிலும் எமக்கு வழிகாட்டியாக உள்ளது.

உதாரணத்திற்கு இறைமை (sovereignty)  ஆட்புல ஓருமைப்பாடு (Territorial integrity) இவற்றால் சிறிலங்கா ஒரு நாடு என வாய்ப்பாடாக சர்வதேச சமூகம் கூறுவது ஏன்?  இதில் எமக்கொரு ஞாயம் கொசொவாவற்கு ஒரு ஞாயம் ஏன்? உண்மை என்ன .

1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலி குமாரனை போர்த்துக்கேய தளபதி பிலிப் டீ. ஒலிவேரா தரைப்படை கடல்படை கொண்டு தோற்கடிக்கின்றான். பின்னர் கோவாவில் தூக்கில் இடப்படுகின்றான். எதிர்மனசிங்கனின் மூன்று புதல்விகளும் கோவாவிலும் லிஸ்பனிலும் மதமாற்றம் செய்யப்பட்டு அவர்கள் ஆவணம் ஒன்றின் மூலம் யாழ்பாண இராச்சியத்திற்கான உரிமையை போர்த்துக்கேயருக்கு கையளிப்பு .

 பின்னர் டச்சுக்காரர் பிரித்தானியர் சிங்களவர். இழந்த இந்த இறைமையை மீட்டு எடுக்கும் மகத்தான மக்கள் பிரகடனமே 1977 வட்டுக்கோட்டைப் பிரகடனம். யாரின் இறைமை. யாரின் ஆட்புலம். எங்கே பிரிவினைவாதம். இதனை நவீன கற்கையில் Reversion of Sovereignty என்பர். இதனை இவர்கள் ஏன் மறுக்கின்றார்கள்?

இவைபற்றிய தெளிவின் மூலமே சமகால நிகழ்வுகளை எம்வசப்படுத்தி சர்வதேச சமூகத்துடன் நாம் உறவாடமுடியும். சமகாலம் பற்றிய விழிப்புணர்ச்சி இருட்டிலும் விழிப்புடன் இருத்தலாகும்.

இந்தச் சமயத்தில் தாந்தே
(Dante)  என்னும் புகழ்பெற்ற 13 ஆம் நூற்றாண்டை சார்ந்த கவிஞனின் " தெய்வீக நகச்சுவை இன்பியல் " ( Divine comedy) என்னும் காவியத்தை ஒருமுறை நோட்டம் விடுவோம். இதில் மூன்று உலகங்கள் சித்திரிக்கப்படுகின்றன. நரகம் (Inferno)  பாவம் போக்கும் இடம் (Purgatory )  சுவர்க்கம் (Paradise)  என்பவையே அவை.

கவிஞனே இந்த மூன்று உலகத்திலும் பிரவேசம் செய்கின்றான். எங்கள் பாரதியின் ஞானரதம் போல. அங்கு நரகலோகத்தின் வாசலில் ஒரு பலகை தொங்குகின்றது. இங்கு நுழைவதற்கு முன்னர் எல்லா நம்பிக்கைகளையும் துறப்பீராக (Abandon all hope before enter ) என்பதே அந்த வாசகம். நரகத்துள் வீழ்வதற்கு முன்பும் மனிதனுக்கு ஒரு சந்தர்பம். அவனது சுயமுயற்சியால் (Free will ) தன்னைக் கட்டிய தளைகளை அறுக்கும் வாய்ப்பு. இதற்கு சமகாலம் பற்றிய அறிவு அவசியம். நரகத்தில் வீழ்ந்தவர்களுக்கு கடந்தகாலம் பற்றிய அறிவும் எதிர்காலம் பற்றிய அறிவும் உண்டாம்.

ஆனால் சமகாலம் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. இது அவர்கள்மேல் தாந்தேயின் கேலி. ஏனெனில் இறுதித் தீர்ப்பின் பின்னர் காலம் முடிகின்றது. அதனால் நரகத்தில் உள்ளோர்க்கு ஒரு அறிவும் இல்லை என்கிறார். அவர்கள் மீளா அடிமைக்குள் ஆளாவர். சிவராமின் வார்த்தையில் " ...It is easier to enslave a people who have lost their ability to understand the nature of their oppression "

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பபிலோன் ஆற்றம் கரையில் அழுது பாடமறுத்த யூத மக்களைப்போல் நாமும் எம் இலட்சியத்தை சுமக்கும் அதேசமயம் சமகால நிகழ்வுகள் பற்றிய தெளிவிற்கான வாசிப்புக்களிலும் கருத்துப்பரிமாற்றலிலும் ஈடுபடுவோமாகாக.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home