Home > Tamil
National Forum > Selected
Writings - Sanmugam Sabesan > 23 ஜூலை
1983 � 23 ஜூலை 2007 � எதிர் விளைவுகள்
Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
23 ஜூலை 1983 � 23 ஜூலை 2007 � எதிர் விளைவுகள்
21 July 2007
"1983ல் ஏற்பட்ட எதிர்விளைவுகள் போல், 2007லும்
எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழீழ விடுதலைப் போராட்டம் மேலும் புதிய
பரிமாணத்தை அடையும். அது சுதந்திரத் தமிழீழமாக அமையும்!"
[see also
'83 Black July Rememberance Vigil in Melbourne, Australia - 25
July 2007 and
Indictment Against Sri Lanka: Genocide '83 ]
அன்றைய சிங்கள அரசினால் 1983ம் ஆண்டு, ஜூலை மாதத்தில்,
நன்கு திட்டமிடப்பட்டு
மேற் கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு நடாத்தப்பட்டு, இந்த 2007ம் ஆண்டு
ஜூலை மாதத்துடன் இருபத்திநான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தமிழின
அழிப்பினூடாகத் தமிழீழ மக்களின் பொருளாதாரமும், இந்தியத் தமிழர்களின்
பொருளாதாரமும், மலையகத் தமிழர்களின் பொருளாதாரமும் சேர்த்தே
அழிக்கப்பட்டன.
முதன்முறையாக உலக நாடுகளையும் உலுக்கி விட்ட இந்தத் தமிழின அழிப்பானது,
பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர்பார்க்காத விளைவுகளையும் கொண்டு
வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய ஜனாதிபதியான ஜேஆர்
ஜெயவர்த்தனாவிலிருந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய
ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச வரை, சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசுகள்
மேற்கொண்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகள், உண்மையில் எதிர்
விளைவுகளைத்தான் கொண்டு வந்துள்ளன. இந்த எதிர் விளைவுகள் குறித்துச்
சில கருத்துக்களை முன் வைப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.!
முதலில், ஜூலை 83 தமிழின அழிப்பினை ஒரு மீள் பார்வையூடாக நோக்குவது
பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றோம்.
அன்றைய ஜூலை - கறுப்பு ஜூலை 83 - தமிழின அழிப்பு, சில அடிப்படையான
விடயங்களைக் காரணத்தில் கொண்டு சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்டதாகும்.
அதில் ஒரு முக்கிய காரணம், தமிழ் மக்களின்
பொருளாதாரத் தளத்தைச் சீர்குலைப்பதாகும். அன்றைய தினங்களில் -
அதாவது 1983ம் ஆண்டு ஜூலை மாதக் கடைசி வாரத்தில் - சிங்கள அரசால்
அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்களின் மதிப்புக்கள் சுமார் 300
மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டாலும்,
உண்மையான இழப்பு இன்னும் பல மடங்காகும் என்றே கருதப்படுகிறது. ஒரு
தர்க்கத்திற்காக, 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற கணிப்பீட்டை
ஏற்றுக் கொண்டாலும் கூட, இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு
மிகப்பாரிய இழப்பு என்பதில் ஐயமில்லை.
அதைத்தவிர இலங்கை, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம்
பெற்ற தினத்திலிருந்து மிக அண்மைக்காலம் வரை, மாறி மாறி வந்த சிங்கள
அரசுகள் தமிழினத்தின் மீது மேற்கொண்ட பொருளாதாரத் தாக்குதல்கள் கொஞ்ச
நஞ்சமல்ல. இச் சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழீழ மக்கள் மீது தொடர்ந்து
மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளும், விதித்த பொருளாதாரத் தடைகளும்
தமிழீழ மக்களின் வாழ்க்கையை ஓர் இன்னல் மிக்க, துயரம் மிக்க
வாழ்க்கையாக மாற்றின.
1983ம் ஆண்டு இனக்கலவரங்களுக்குப் பிறகு நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகள்
காரணமாக இலங்கைத்தீவில் சுமார் 65,000 பேர்கள் வரை
கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 800,000 மக்கள் இடம்
பெயர்ந்துள்ளதாகவும், சுமார் 700,000 மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகவும்
உலகவங்கியின் அறிக்கை ஒன்று தெரிவித்து இருந்தது. அதுமட்டுமல்லாது
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்காக, சிங்கள அரசுகள்
ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாகவும் பொருளாதார
நிபுணர்கள் அன்று மதிப்பிட்டிருந்தார்கள்.
இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மதிப்பீடாகும். இந்த ஆண்டுக்கான
வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்புச் செலவிற்காக மட்டும், 1.4
பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சிறிலங்கா அரசு ஒதுக்கியுள்ளது. இது
139.6 பில்லியன் ரூபாய்களாகும். 1977ம் ஆண்டு 0.75 பில்லியன்
ரூபாய்களைப் பாதுகாப்புச் செலவிற்காகப் பயன்படுத்திய சிறிலங்கா அரசு,
1986ம் ஆண்டு ஆறு பில்லியன் ரூபாய்களைப் பாதுகாப்புச் செலவிற்கு
பயன்படுத்தியது. இது படிப்படியாக வளர்ந்து, இன்று, 2007ல் 139.6
பில்லியன் ரூபாய்களைச் சிறிலங்கா அரசு தனது பாதுகாப்புச் செலவிற்காகப்
பயன்படுத்தப் போகிறது. இன்றும், மேலும் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை
நிதியுதவிகளாகப் பெற்று, அவற்றினூடாக மேலும், மேலும் நவீன ஆயுதங்களை
வாங்குவதற்குச் சிறிலங்கா அரசு முயன்று வருகின்றது.
அன்புக்குரிய வாசகர்களே! இந்த வேளையில் நாம் ஒரு விடயத்தை கருத்தில்
கொள்ள விழைகின்றோம். 2003ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க அரசின் அன்றைய
உதவிச் செயலர் றிச்சட் ஆமிடேஜ் ஒரு விடயத்தைத் தெரிவித்திருந்தார். அது
ஒரு முக்கியமான விடயமாகும்.
�சிறிலங்காவிற்குச் செய்து வந்த உதவிகள் யாவற்றையும் நிறுத்தி
விடுவதற்கு அமெரிக்கா எண்ணியிருந்த வேளையில்தான் ரணில் விக்கிரமசிங்க
பதவியேற்றார்� என்றும் �அதன் காரணமாக சிறிலங்காவிற்கு உதவிகளை
நிறுத்துகின்ற தன்னுடைய எண்ணத்தை அமெரிக்கா மாற்றிக் கொண்டது.� என்றும்
அமெரிக்க அரசின் அன்றைய உதவிச் செயலர் றிச்சட் ஆமிடேஜ்
தெரிவித்திருந்தார். இதற்குரிய அடிப்படைக் காரணம் அன்றைய சிறிலங்கா
அரசு சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கும், யுத்த நிறுத்தத்திற்கும்
விருப்பம் தெரிவித்ததேயாகும்.
அன்புக்குரிய வாசகர்களே! ஜூலை 83 - தமிழின அழிப்பு - தமிழ் மக்கள் மீது
திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டதில் சில அடிப்படைக் காரணங்கள்
இருந்ததென்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
அதில் ஒன்று நாம் இப்போது குறிப்பிட்டவாறு தமிழரின்
பொருளாதாரத் தளத்தை அழிப்பதாகும். ஆனால் தன்வினை தன்னைச் சுடும் என்ற
முதுமொழிக்கிணங்க சிறிலங்கா அரசு தன்னைத்தானே பொருளாதார ரீதியில்
எரித்துக் கொண்டது. இதனை மனத்தில் நிறுத்திக் கொண்டு ஜூலை 83
இனக்கலவரத்தின் இன்னுமொரு முக்கிய காரணியைச் சற்று விரிவாகத்
தர்க்கிக்க விழைகின்றோம்.
ஜூலை 83 இனக்கலவரத்தின் மூலம் தமிழ் மக்களின் மன
வலிமையை அழித்து அவர்களுக்குக் கடுமையான, கொடுமையான வன்முறை ஊடாக ஒரு
பாடத்தைப் புகட்டுகின்ற முயற்சியை அன்றைய சிறிலங்கா அரசு - ஜனாதிபதி
ஜேஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு - மேற்கொண்டது.
அதாவது உளவியல் ரீதியாக �தமிழர்கள் தாங்கள் ஒரு நிர்க்கதியான இனம்,
தங்களைக் காப்பாற்றுவதற்கு எவரும் இல்லை, தாங்கள் எந்நேரமும்
சிங்களவர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்படலாம், தாங்கள் எப்போதும்
�சிங்கள-பௌத்த ஆட்சியின் கருணையின்(?)� கீழ், தயவின் கீழ் வாழ வேண்டிய
இரண்டாம் தரக் குடி மக்கள்� - என்கின்ற ஏக்கமான எண்ணத்தைத் தமிழ்
மக்களின் நெஞ்சங்களுக்குள் ஆழமாகப் புதைக்கும் நோக்கோடும், இந்த ஜூலை
83 இனக்கலவரம் நடாத்தப்பட்டது.
அன்றைய சிறிலங்கா அமைச்சரான காமினி திசநாயக்காவின் உரையை நாம்
எடுத்துக் காட்டாக கொள்ளலாம். 1983ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம்
திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான காமினி திசநாயக்கா
பின்வருமாறு கொக்கரித்தார். ஆமாம் கூறவில்லை -கொக்கரித்தார்- என்பதே
சரியான சொல்லாகும். தமிழ் மக்களைப் பார்த்து
காமினி திசநாயக்கா இவ்வாறுதான் கொக்கரித்தார்.:-
�உங்களைத் தாக்கியது
யார்?- சிங்களவர்கள்! உங்களைக் காப்பாற்றியது யார்?-
சிங்களவர்கள்! ஆமாம்! எங்களால் தான் உங்களைத் தாக்கவும்,
காப்பாற்றவும் முடியும்! உங்களைக் காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே
வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை! ஆனால் 14
நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின்
இரத்தத்தையும், இந்த நாட்டிற்காக நாம் அர்ப்பணிப்போம். உங்களுடைய
நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ, மட்டக்களப்புத்
தமிழன் என்றோ, மலையகத் தமிழன் என்றோ, இந்துத் தமிழன் என்றோ,
கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை! எல்லோருமே
தமிழர்கள்தான்!�
- இவ்வாறு
அமைச்சர் காமினி திசநாயக்கா 1983ல் கொக்கரித்தார்.
ஆனால் பின்னாளில் தமிழீழ மக்களின் அமைதி கொல்லும் படையாக வந்திறங்கிய
இந்திய இராணுவத்தையும், சிறிலங்கா இராணுவத்தையும் தமிழீழ விடுதலைப்
புலிகள் தோற்கடித்து துரத்தியதை வரலாறுகூட வியந்துதான் கூறும்.
1983ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 4ம் திகதியன்று �வோசிங்டன்
போஸ்ட்� பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில்
தீர்க்கதரிசனமான கருத்தொன்றைக் கீழ்வரும் பொருட்பட எழுதியது.:-
�சேர்ந்து வாழ்வது
இவ்வளவு கடினமென்றால் ஏன் பிரிந்து வாழ முடியாது? தமிழ் மக்களுக்கு
தனி ஆட்சி கொடுத்தால் என்ன? ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பல
நாடுகள் போல் தமிழ் மக்களும் தாங்கள் ஒரு தனித்துவமான தேசம்
என்பதற்குரிய சரியான சான்றுகளை வைத்திருக்கிறார்கள். இந்த
ஒருங்கிணைந்த இலங்கைத்தீவில் சிங்களவர்கள் மட்டுமே அதிகாரங்களை
வைத்திருக்கின்றார்கள். இந்த அதிகாரங்களை கொண்டுள்ள
சிங்களவர்களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங்கையில்
வாழமுடியாத அளவில் நடத்தப் பட்டிருக்கின்றார்கள் என்ற அறிவாவது
உள்ளதா?�
-என்று �வோசிங்டன்
போஸ்ட்� பத்திரிகை 1983ம் ஆண்டிலேயே எழுதியிருந்தது.
1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளின் மூலம் உலக
நாடுகள் யாவும் முதன் முறையாக விழித்தெழுந்தன. ஆனால் ஒரே ஒரு நாடு
மட்டும் விழித்தெழவேயில்லை. விழித்தெழாத அந்த நாடு வேறெந்த நாடும்
அல்ல, சிங்களப் பௌத்த சிறிலங்காவேதான்!. அதன் அன்றைய ஜனாதிபதியான ஜேஆர்
ஜெயவர்த்தனா அன்று நடந்து கொண்ட விதமும், பேசிய பேச்சுக்களும் ஒரு
சிங்கள பௌத்தப் பேரினவாதியின் சிந்தனைகளை அப்படியே பிரதிபலித்தன.
தமிழினப் படுகொலைகள் நடைபெற்று தமிழர்களின் சொத்துக்களும்
நாசமாக்கப்பட்ட, நாசமாக்கப்படுகின்ற அந்தவேளையில் அன்றைய ஐக்கிய
தேசியக்கட்சியின் அரசு நடந்து கொண்ட விதங்கள் ஏற்கனவே ஆவணப்
படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் சிலவற்றை வாசகர்களுக்கு இங்கே தருவதற்கு
விழைகின்றோம்.
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இரவிலிருந்து தொடந்து இலங்கைத்தீவே
எரிந்து கொண்டிருந்த போதும் அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா
மௌனமாகவே இருந்தார். ஐந்து கோரமான நாட்களுக்குப் பின்னர்தான் - அதாவது
ஜூலை 28ம் திகதி வியாழக்கிழமை இரவுதான் - ஜனாதிபதி ஜெயவர்த்தனா
முதன்முதலாக இனக்கலவரம் குறித்து நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சியில்
உரையாற்றினார். அப்போது கூட தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்டு
வருகின்ற இந்த இன படுகொலைகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தோ, கவலை
தெரிவித்தோ, அனுதாபம் தெரிவித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக
இந்தக் கோரமான இனப்படுகொலைகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜனாதிபதி
ஜேஆரின் உரை அமைந்திருந்தது.
�1956 ம்
ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட
நம்பிக்கையின்மை வளர்ந்து வந்ததன் வெளிப்பாடே இந்த இனக்கலவரங்கள்�
என்றும், �இவ்வாறான மனக்குறைகள் சிங்கள மக்களுக்கு இருக்கும்
பட்சத்தில் அவர்கள் (அதாவது சிங்களவர்கள்) வன்முறையில் ஈடுபடுவது
எளிதான செயலாகும்� என்றும் 77வயது நிரம்பிய சிறிலங்கா ஜனாதிபதியான
ஜேஆர் ஜெயவர்த்தனா அன்று தெரிவித்தார்.
அத்தோடு மட்டும் அவர்
நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் மேலும் இவ்வாறு கூறினார்.
�சிங்கள மக்களை
அமைதிப்படுத்துவதற்காகவும், அவர்களுடைய இயல்பான வேட்கையைப்
பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு புதிய சட்டத்தை நான் அமலாக்க
இருக்கிறேன். இப் புதிய சட்டத்தின் பிரகாரம் நாட்டுப் பிரிவினை
கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்கள் ஆகமுடியாது.
அதுமட்டுமல்ல, நாட்டுப் பிரிவினை கோரும் எந்த ஒரு கட்சியும் தடை
செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது குறித்து எவரும் சட்ட
ரீதியாகச் செயல்படமுடியாது.�
அன்புக்குரிய வாசகர்களே! இருபத்திநான்கு
ஆண்டுகளுக்கு முன்பு சிங்களபௌத்த பேரினவாதிகளின் வன்முறைச்
செயல்களால் தமிழினம் எரிந்து கொண்டிருந்த நிலையில் சிங்கள ஜனாதிபதி
கூறிய வார்த்தைகள் தாம் இவை. இது குறித்து
tamilnation.org
இணையத்தளம் பின்வருமாறு குறிப்பிட்டது.
�சிங்கள ஜனாதிபதி தமிழர்களின் நிலை குறித்துக் கவலை தெரிவிக்க
வில்லை. - ஏனென்றால் தமிழர்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை.
சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்களுக்கு நேர்ந்தததையிட்டு அனுதாபம்
தெரிவிக்கவில்லை. ஏனென்றால் சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்கள் மீது
அனுதாபம் கொண்டிருக்கவில்லை. சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்களுக்கு
நேர்ந்த கதி குறித்து பேரதிர்ச்சி தெரிவிக்க வில்லை. ஏனென்றால்,
அன்று தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி ஜனாதிபதிக்குப் பேரதிர்ச்சி
தரக்கூடியதாக இருக்கவில்லை.�
சிறிலங்கா ஜனாதிபதி ஜேஆர்
ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து அதிர்ச்சியோ,
அனுதாபமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு
International Commission of Jurists 83ல் ஓர் அறிக்கையில்
தெரிவித்திருந்தது.
1983ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வெளிவந்த �Economist� சஞ்சிகையும்
இதே கருத்தைத்தான் பிரதிபலித்தது. உலகளாவிய வகையில் சிறிலங்கா அரசிற்கு
எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. சிறிலங்காவின் சிங்கள பௌத்த மேலாண்மையை
மட்டும் உறுதி செய்கின்ற சிறிலங்காவின் அரசியல் யாப்புக் குறித்துக்
கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
ஜூலை 83 இனக்கலவரத்தில் கோரமும், அழிவும் முழுமையாக ஆவணப்
படுத்தப்பட்டு மக்கள் முன் வைக்கப்படவில்லை. இதைப்பற்றி
சிந்திக்கும்போது முன்பு உலகநாடுகளால் �பயங்கரவாதி� என்று
அழைக்கப்பட்டுப் பின்னாளில் உலகத் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்ட
திரு நெல்சன் மண்டெலா அவர்களின் கூற்று ஒன்று எமது ஞாபகத்திற்கு
வருகிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் திரு நெல்சன் மண்டெலா அவர்கள்
கூறியது ஜூலை 83 இனக்கலவரத்திற்கு பொருத்தமாகவே அமைந்துள்ளது.
திரு நெல்சன் மண்டெலா கூறியது இதுதான்!
�மன்னிக்கவும்,
மறக்கவும் வேண்டுமானால் என்ன நடந்ததென்ற முழு உண்மையும் எமக்கு
தெரிய வேண்டும்.!�
இதுவரை நாம் தர்க்கித்த
கருத்துக்கள் ஊடாக, 1983 ஜூலை � தமிழின அழிப்பு கொண்டுவந்த எதிர்
விளைவுகளைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். சிங்களப் பௌத்தப் பேரினவாதம்
எதிர்பார்த்திராத விளைவாகத் தமிழர்கள் உலக நாடுகளுக்குப் புலம்
பெயர்ந்தார்கள். இந்தியா வெளிப்படையாக, இலங்கைப் பிரச்சனையில் தலையிட
நேர்ந்தது. சர்வதேச மயப்படுத்தப் பட்டிராத, தமிழீழ விடுதலைப் போராட்டம்
பின்னாளில் சர்வதேச மயப்படுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டம்,
புதிய பரிமாணத்தின் ஊடாக கூர்மையடைந்தது. இவை ஜூலை 83 கொண்டு வந்த
எதிர் விளைவுகளாகும்.!
தமிழ் மக்களை நசுக்கி அழித்து விடுவதற்கு எண்ணியிருந்த சிங்கள-பௌத்தப்
பேரினவாதம், இத்தகைய எதிர் விளைவுகளை எதிர் பார்க்கவில்லை. ஆனாலும்,
இன்றும், இருபத்திநான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், சிங்களப் பௌத்தப்
பேரினவாதம், 1983 போன்ற சம்பவங்களை நோக்கித்தான் நகர்ந்து கொண்டு
போகின்றது. அன்றைய சூழலைத் தாம் கையாண்டது போல், இன்றைய சூழலையும் தாம்
கையாளலாம் என்று சிங்களப் பௌத்த பேரினவாதம் சிந்திக்கின்றது. அன்றைய
சூழல்போல் இன்றைய சூழல் இல்லை என்பதும், அன்றைய சூழலைக் கையாண்டதுபோல்,
இன்று கையாள முடியாது என்றும், மகிந்த ராஜபக்சவிற்கு இன்னும்
புரியவில்லை.
அன்று சர்வதேசத்திற்கு இலங்கையில் என்ன நடக்கின்றது என்ற விபரம்
சரியாகத் தெரிந்திருக்கவில்லை. இன்று சர்வதேசத்திற்கு விபரங்கள் நன்கு
தெரியும். அன்று இந்தியா தடுமாறியதைப் போன்று, இன்று சர்வதேசமும்
தடுமாறிக் கொண்டு நிற்கின்றதே தவிர, சிங்கள தேசத்தின் உண்மை நிலையைச்
சர்வதேசம் புரிந்து கொண்டுதான் உள்ளது. சர்வதேசம், தன்னுடைய முடிவு
நிலையில் குழப்பமாக இருக்கிறதே தவிர, நிலவரத்தைச் சரியாக அறிந்து
வைத்துத்தான் உள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காகத் தன்னால்
அழைத்து வரப்பட்ட அனைத்துலக வல்லுநர்கள் குழுவோடும் சிpறிலங்கா அரசு
முரண்பட்டு நிற்கின்றது. சிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணை
ஆணையத்தின் செயலற்ற தன்மையைச் சுட்டிக்காட்டிக் குற்றம் சாட்டிய,
அனைத்துலக வல்லுநர்கள் குழுவின் தலைவர் பி.என் பகவதியோடும், சிறிலங்கா
அரசு பிரச்சனைப்பட்டு நிற்கின்றது. தங்களால் அழைத்து
வரப்பட்டவர்களோடும் முரண்படுகின்ற சிங்கள அரசு, தமிழர்களின் பிரச்சனையை
எவ்வாறு தீர்க்கும்?
இன்று - இந்த 2007ம் ஆண்டு - சிறிலங்காவின் அரச அதிபராக விளங்குகின்ற
மகிந்த ராஜபக்சவின் �சிந்தனைகளும்� அவருடைய முன்னோடிகளின் சிங்கள
பௌத்தப் பேரினவாத சிந்தனைகளையே பிரதிபலிக்கின்றன. மகிந்த ராஜபக்சவின்
முப்படைகள் இன்று வெளிப்படையாகவே
தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஈழத் தமிழினத்தின் மீது
வலிந்து ஒரு பாரிய போரைத் திணிப்பதற்காக இன்று சிறிலங்கா அரசு,
தமிழினத்தின் மீதான தனது படுகொலைகளை முடுக்கி விட்டிருக்கின்றது.
தற்போதைய காலச் சூழ்நிலை மாற்றத்தையும் விளங்கிக் கொள்ளாமல், தமிழீழ
விடுதலைப் புலிகளையும் புரிந்து கொள்ளாமல், பழைய நிலைக்கே போவதற்கு,
மகிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றார். 1983ல் ஏற்பட்ட எதிர்விளைவுகள்
போல், 2007லும் எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழீழ விடுதலைப் போராட்டம்
மேலும் புதிய பரிமாணத்தை அடையும். அது சுதந்திரத் தமிழீழமாக அமையும்! |